New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்- பா.சிவக்குமார்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்- பா.சிவக்குமார்
Permalink  
 


 சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்

E-mailPrintPDF

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்சங்க இலக்கியம் அச்சமூக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. மடலேறுதல், என்பது அக்காலச் சமூக நடைமுறை வழக்காறுகளுள் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இம்மடலேற்றத்தில் மடல், மடல் ஏறுபவன் தோற்றம், மடல் ஏறுபவரின் நோக்கம் மற்றும் அதன் சூழல் ஆகியவை முதன்மை இடம்பெறுகின்றன. அவ்வகையில் மடலேறுதல், எவ்வகையில் வன்முறையாகக் காட்சியளிக்கிறது என்பது குறித்துச் சங்கப் பாடல்களை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மடலேற்றம் - பெயர்க்காரணம்
பனங்கருக்குப் ‘பனைமடல்’ என்றும் ‘பனை மட்டை’ என்றும் இன்று பெயர் வழங்கப்பெறுகிறது. இப்பனை மடலால் மா செய்ததால் அதாவது குதிரை, யானை போன்ற விலங்கு உருவங்கள் செய்ததால் இதற்கு ‘மடல்மா’ என்றும், இம்மடல்மா மேல் ஏறி வருவதால் ‘மடலேறுதல்’ என்றும் பெயர்பெறுவதாயிற்று. இது மடலூர்தல் என்றும் பெயர்பெறும். இம்மடலேற்றம் காமத்தின் எல்லை தாண்டும்போது நிகழ்கிறது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து அகத்துறைகளுள் ஒன்றாக வைத்துக் கருதப்படுவதாகும். தொல்காப்பியர் ஏறிய மடல் திறத்தை பொருந்தா காமத்தின் பாற்படும் பெருந்தினணயுள் அடக்குவர்.(தொல்.997,ப.273)இத்துறையில் அமைந்த கலித்தொகைப் பாடல் பின்வருமாறு.

             “ஒறுப்பின்யான் ஒறுப்பது நுமரையான் மற்றிந்நோய்
  பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் பொலங்குழாய்
  மறுத்திவ்வூர்  மன்றத்து மடலேறி
  நிறுக்குவென் போல்வல்யான் நீபடு பழியே”   (கலி.58:;20-24,ப-170)

இப்பாடலடியில் காமநோய் பொறுக்கும் எல்லை கடந்து பெரிதாகும் பொழுது தலைவன் ஊர் மன்றத்திற்கு மடலேறிவந்து, தலைவி விளைவித்தப் பழியைக்கூறுவதாக மடலேற்றம் அமைகிறது.

சங்க இலக்கியப் பாடல்களும் மடலேறுதலும்
சங்க இலக்கியத்தில் மடல் ஏறுதல் குறித்து பதினாறு பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால், பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் தமது ‘தமிழ்க்காதல்’ நூலுள் மடல்மாப் பொருள் குறித்துப் பதின்மூன்று பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். அவை “நற்றிணை பா.எண்கள் 143, 152, 342, 377 மற்றும் குறுந்தொகை பா.எண்கள் 14, 17, 32, 173, 182 ஆகிய ஒன்பதும் ஐந்திணைக்குரியவை, கலித்தொகை பா.எண்கள் 138,139,140,141 ஆகிய நான்கும் பெருந்திணைக்கு உரியன.” (தமிழ்க்காதல்-வ.சுப.மாணிக்கனார், ப-44) என்பதாகும். இதில் நற்றிணை ‘143’ என்ற பாடல் எண் தவறுதலாக குறிக்கப்பட்டுள்ளது. பாடல் எண் - 146 தான் மடல்ஏறுதல் பற்றிய செய்திகளைத்  தாங்கி நிற்கின்றது. மேலும் நற்றிணையில் பாடல் எண் 220, கலித்தொகையில் பாடல் எண் 58, 61 ஆகியவையும் மடல்மா பற்றிப் பேசுகின்றன. எனவே, சங்க இலக்கியத்தில் மடலேறுதல் குறித்து 16 பாடல்கள் உள்ளமையைக் காணமுடிகின்றது. 

மடல்மா மற்றும் மடலேறுவோரின் தோற்றம்
 நன்கு விளைந்த பனைமடலால் குதிரை/ யானை செய்து, அதற்குச் சிறுசிறு மணிகளைப் பூட்டியும் பெரிய கச்சையினை அணிவித்தும், மயிற்பீலி சூட்டியும் தலைவன் தன் கழுத்தில் எலும்பு மாலையினை அணிந்தும் மடல்மா மேல் அமர்ந்திருப்பான். அம் மாவினைச் சிறிய குறிய பிள்ளைகள் தெருவில் இழுத்துவருவர். இதற்கு,

            “சிறுமணி தொடா;ந்து பெருங்கச்சு நிறீஇக்
   குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி
   உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
   மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்” (நற்.220:1-4,ப.276)
 
          “மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை” (கலி.138:8,ப.425)

           “விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
      மணிஅணி பெருந்தார் மரபிற் பூட்டி
      வெள்என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி” (குறுந்.182:1-3,ப.327)

என்ற பாடல் அடிகள் சான்று பகரும். இவ்விடங்களில் மடல்மாவின் தோற்றத்தையும், தலைவனின் தோற்றத்தையும் அறியமுடிகிறது. சிறிய குறிய பிள்ளைகள் இழுத்துச்சென்றனர். என்று குறிப்பிட்டுள்ளதால் அந்த குதிரையை இழுத்துச்செல்வதற்குக் குதிரையின் கீழ் சக்கரம் அல்லது உருளை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கலாம். மேலும், யாரும் சூடாத எருக்கம்பூ, பூளைப்பூ, ஆவிரம்பூ, உழிஞைப்பூ ஆகியவற்றை மடல் மாவிற்குச் சூட்டப்பட்டதா? அல்லது மடலேறும் தலைவன், தான் சூடிக்கொண்டானா? என்பதை ஆராயும் போது,உ.வே.சா,  பொ.வே.சோமசுந்தரனார் போன்றோர்,

  “குவிமுகிழெருக்கங் கண்ணியுஞ் சூடுப”   (குறுந்:17:2,ப.40)        (உ.வே.சா) 

என்ற அடியினைச் சான்று காட்டி, எருக்கம் பூவினைத் தலைவன் தன் தலையில் சூடியதாகக் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர்  தம் கலித்தொகை உரையில்,
       “பூவல்ல பூளை யுழிஞையோ டியாத்த
  புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி
  பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி
  அடர்பொன் அவிரேய்க்கும் ஆவிரங்கண்ணி”  (கலி.140:4-7,ப.432)

என்ற பாடல் அடிகளுக்குப் பொருள் உரைக்கின்ற பொழுது, தலைவன் தன் தலையிலும் மார்பிலும் பூளை,  உழிஞை,  ஆவிரம் பூக்களை அணிந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

       “பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
   பல்நூல் மாலை பனைபடு கலிமாப்”  (குறுந்.173:1-2, ப.309) 
 
என்ற குறுந்தொகைப் பாடலிற்கு உ.வே.சா அவர்கள் உரை எழுதுகின்ற பொழுது, “பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்கட்டிய பலவாகிய நூல்களையுடைய மாலைகளை அணிந்த பனங்கருக்கால் உண்டாக்கப்பட்ட மனச் செருக்கையுடைய குதிரை” என்று குதிரையின் கழுத்தில் ஆவிரையின் மாலை அணிந்ததாக உரைக்கிறார். மேலும்,

       “மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை 
   அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்தியாத்து
   மல்லலூர் மறுகின்கண் இவட்பாடும் இஃதொத்தன்”      (கலி.138.8-10 ப.425)

என்ற கலித்தொகைப் பாடலிற்கு உரைகூறும் நச்சினார்க்கினியர்,“இனி மடலேறுதலே கூடும் வழியென்று கருதி மடன்மாவிலே சூட்டவேண்டி நூலாலே நீலமணிபோலும் நிறத்தையுடைய பீலியையும் மற்றை அழகையுடைய பூளைப்பூவையும் எருக்கம் பூவோடே தொடுத்து, அம்மடன்மாவிலே கட்டி வளப்பத்தையுடைய ஊரின் மறுகின்கண்ணே இவனொருத்தன் இவளைப்பாடும்” என்று மடல்மாவிற்கு, பூளை,  ஆவிரம், எருக்கம்பூ சூட்டியதாகக் கூறுகின்றார்.

 மணி, பீலி, கச்சு, போன்றவற்றை மடல் மாவிற்கும் எலும்பு மாலையினை தலைவன் தன் தலையில் அணிந்துள்ளமையும், பூளை, எருக்கம், ஆவிரை, உழிஞை போன்ற மலர்களை மாலையாக தொகுத்து மடற்குதிரைக்கு அணிவித்ததையும், தலைவன் தானும் அவற்றை அணிந்துகொண்டதையும் உணரலாம். மேலும், உடல் முழுவதும் வெம்மை மிக்க சாம்பலைப் பூசிக்கொண்டு, வீதிதோறும் வந்து மடல் ஊர்வர் என்பதனை,


   “மங்கையர்தங் கண்ணான் மயங்கினார் வெள்ளெலும்பும் 
   துங்க வெருக்குந் தொடுத்தணிந் தங்கமெலாம் வெந்தாறு
   சாம்பன் மிகவணிந்து வீதிதொறும் 
        வந்தேறி யூர்வர் மடல்” (குறுந்,மூல-உரை (கிளவித்தெளிவு) - ப.345)

உ.வே.சாவின் கூற்றிலிருந்து அறியலாம். 
 “தலைவன் தன்னுடைய உருவத்தையும் தலைவியினது உருவத்தையும் எழுதி அமைத்த படத்தைக் கையில் ஏந்தி, மடன்மாவிலேறி மறுகிற் செல்வானாதலின் அந்நிலை இன்னாள் கணவன் இவன் என்று ஊரினர் அறிதற்கு ஏதுவாயிற்று” என்று உ.வே.சா அவர்கள் குறுந்தொகை பா.எண். 14-ன் உரைவிளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தினை, பொ.வே.சோமசுந்தரனார், முனைவர்.வி.நாகராசன், போன்றோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் தலைவன், தலைவி ஆகிய இருவரின் உருவப்படத்தையும் தலைவன் ஏந்தி நின்றதாக சங்கப்பாடல்களில் எவ்விதப் பதிவுகளும் காணப்படவில்லை. மேலும் தலைவனே மடலேறி வருவதால் தலைவன் தன் படத்தை ஏந்தவேண்டிய தேவையும் இல்லை. எனவே, மேற்குறிப்பிட்ட உரையாசிரியர்களின் கருத்துகள் எதனடிப்படையில் கூறப்பட்டுள்ளது என்பதற்குத் தெளிவான விளக்கங்கள்  இல்லை. மாறாக தலைவியின் பெயரைக் குறிப்பிட்டும் அவளின் அழகினை வர்ணித்தும், அவள் தந்த காமநோய் குறித்தும் தலைவி தன் காதலை ஏற்காமை குறித்தும் பழித்துப் பாடுவதாகவும், ஆடுவதாகவும் சங்கப் பனுவல்களில் காணமுடிகிறது. இதனை,

   “என்னானும் பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே
   ஆடெனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ”     (கலி.140,15-16, ப-432)
 
என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன.

மடல் மற்றும் மடல் ஏறுதலின் தோற்றப்பின்புலம்
 மடல் ஏறும் வழக்கம் எப்பொழுது தோன்றியது? எதற்காக பனை மடலைத் தலைவன் தேர்ந்தெடுத்தான்? பனைமடலில் எதற்கு ‘மா’ செய்தான்? போன்றவற்றிக்கான விடைகளைச் சங்க இலக்கியப்பதிவுகளில் காணமுடியவில்லை. மடலேறுவோர் பெண்ணை(பெண்பனை) மரத்திலிருந்து பெற்ற மடலாலே ‘மடல்மா’ செய்துள்ளதைக் குறுந்தொகை பாடல் 182, நற்றிணை பாடல் 146, கலித்தொகை பாடல் 141 வழி அறியலாம். சங்கத் தமிழரின் வாழ்வில் பனை மரம் மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. வறட்சியையும் தாங்கி வளரும் இயல்பினைக் கொண்டது. ஆண், பெண் என்னும் இருவகையினைக் கொண்டுள்ளது. ஆண் பனையினை ஏற்றை என்றும் பெண் பனையினைப் பெண்ணை என்றும் அழைத்துள்ளதை இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பனை மரத்திலிருந்து கிடைக்கக் கூடிய பனை ஓலை பனை மட்டை, பன்னாடை, நுங்கு, பனம்பழம் போன்ற பனையின் அடிமுதல் நுனி வரையுள்ள அனைத்துப் பொருட்களும் கூரை வேய்தல், எழுதுவதற்கு விறகு கள் எடுத்தல் - வடித்தல், போன்றவற்றிற்கு மிக பயனுடையதாக இருந்துள்ளது.

ஏற்றைப் பனை பூப்பதோடு நின்று விடும். பெண்ணைப் பனை பூத்துக் காய்க்கும் இயல்புடையது. எனவே சமூகத்தில் பெண்ணை மதிப்புமிக்க ஒன்றாக உள்ளது. அதனைத் தெய்வமாக வழிபட்டுள்ளதை நற்றிணை 303 ஆவது பாடல் காட்டுகின்றது. எனவே மடலேறுவதற்குப் பெண்ணை பனையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இப்பெண்ணையை ‘மா’ வாக கொண்டது போல் தான் காதலித்த பெண்ணையும் அடைவேன் என்பதை வெளிப்படுத்துவதற்காக பெண்பனையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் எனக் கருதலாம். பனங்கருக்கு முட்களால் ஆனது. முள் என்பது எதிர்ப்பை அல்லது மனவருத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகக் கருதலாம். யூதர்கள் யேசுவின் தலையில் முள் கீரீடத்தை சூட்டியதோடு இதனை ஒப்பிடலாம்.

 பனைமடலால் ‘குதிரை’ செய்ததாகப் பல உரையாசிரியர்ச்களும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மூலப் பிரதிகளில் ‘மா’ என்று மட்டுமே காணப்படுகிறது. மா என்பது விலங்கின் பொதுப்படையான பெயர் அக்காலத்தில் குதிரையின் ஆதிக்கத்தைவிட யானையின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. எனவே ‘மா’ என்பது யானையாகவும் இருந்திருக்க கூடும். குதிரை/யானையின் உருவத்தை மடலால் செய்து மடலேறி வருவதாலும் ‘அடன்மாமேல் ஆற்றுவேன்’ என்று கலித்தொகைத் தலைவன் கூற்றிலிருந்து இவ்வாறு மடலேறுபவர்கள் குதிரை/யானை மீதிருந்து போர் செய்யும் வீரர்களாக மட்டுமே இருந்திருக்கலாம் எனக் கூறலாம். முன்பு தலைவன் ஒருவனுக்கு மணக்கொடை மறுத்ததால் மனமுடைந்து பனை மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கக் கூடும். அதன் விளைவாக பனையேறி விழுவதற்கு முன்பாக மடலேறி வந்திருக்கலாம். இதற்குக் குறுந்தொகை 17 ஆம் பாடலில் வரும் ‘பிறிது மாகுப’ என்பதற்கு வரைபாய்தல் என்பதைவிட பனையிலிருந்து வீழ்ந்து மடிதல் என்றும் கருத இடமுள்ளது.  இது குறித்து மேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

சூழல்
 மடலேறுதலுக்கான சூழல் மூன்று நிலைகளில் அமைவதாக அறியமுடிகிறது. ஒன்று, தலைவியின் தமர் (சுற்றத்தார்) வரைவிற்கு (திருமணத்திற்கு) உடன்படாத நிலை ஏற்படும் பொழுது தலைவன் மடலூர்ந்து மக்களின் ஆதரவைப் பெற   நேரிடும்போது மடலேற்றம் நிகழ்கிறது. இரண்டாவது, தலைவன் தான் இயற்கைப் புணர்ச்சியில் ஈடுபட்ட தலைவியுடன் களவு வாழ்வைத் தொடர அனுமதி மறுக்கும் போது மடல் ஏறுவேன் என்று தோழி மூலம் அச்சுறுத்துவதாக அமைகிறது. மூன்றாவதாக, தான் மட்டுமே விரும்பி தன்னை விரும்பாத பெண்ணை அடைய விரும்பும் ஆடவன் மடலேறி அப்பெண்ணை அடைய நிகழ்த்தும் ஒரு வாயிலாக இம்மடலேற்றம் நிகழ்கிறது. இதனை,

   “காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
    மடலல்லாது இல்லை வலி”  (குறள்.1131, ப-492)

என்று திருக்குறள் இதற்குச் சான்று பகருவதைக் காணலாம்.

மடலேறுதலில் சுயவன்முறை
 தனிமனிதன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது அல்லது வருத்துவது சுய வன்முறையாகும். தலைவன், தான் விரும்பிய பெண்ணை அடைவதற்கு தன்னைத்தானே உடலாலும் மனதாலும் காயப்படுத்திக் கொள்ளும் விதமாக பனங்கருக்காலான மடல் குதிரையில் ஏறி ஊர்மக்களால் இகழப்படும்படியாக நடந்து கொள்கின்றான். மடல் ஏறியும் தலைவியை எய்தப்பெறாத தலைவன் மலையில் இருந்து வீழ்ந்தோ அல்லது பிறவாறோ தற்கொலை செய்து கொள்கிறான். இதனை,

   “மறுகி னார்க்கவும் படுப
   பிறிது மாகுப காமங் காழ்கொளினே”  (குறுந்-17:3-4, ப.57(×i)) 

இப்பாடலில் “பிறிதும் ஆகுப” என்பதற்கு உ.வே.சா அவர்கள் தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறுசெயலை உடையரும் ஆவர் என்று விளக்கம் தருகிறார். இவ்வாறு தலைவன் தன்னைத்தானே வருத்தியும் தற்கொலை செய்து கொள்ளும் வன்செயலிலும் ஈடுபடுவேன் என்று சொல்வதிலிருந்து அவனின் சுய வன்முறையினை அறியலாம். சங்கப்பாடல்களில் மடலேறியபின் தற்கொலை செய்ததாகப் பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், அவ்வாறு நடந்தேறியிருக்கலாம். நமக்குக்கிடைத்த பாடல்களில் வேண்டுமானால் அவை இல்லாமல் இருக்கலாம் என்பது கருதத்தக்கது.

மடலேறுதலில் தனிமனித வன்முறை
 தலைவன் தான் விரும்பிய பெண்ணை அடைய பலவகையான தனிமனித வன்முறையில் ஈடுபடுகிறான். தலைவியின் தோழியிடம் தன் காதலை தலைவி ஏற்கச்செய்யுமாறு கூறுகிறான். மேலும், தலைவி அதற்கு இசைவு தரவில்லையெனில், காமம் மிகுந்தால் ஆடவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வர். ஏன் உயிரைக்கூட விடத்துணிவர். யாரும் சூடாத பூவைச் சூடி மடலேறி தலைவி வசிக்கும் தெருவில் வந்து தலைவியைத் தூற்றுவேன், அதன்பின்பும் தன் காதலை ஏற்கவில்லையெனில் இறந்துவிடுவேன் என்று தோழியிடம் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தி தன்செயலை வெற்றிபெறச் செய்யும் சூழ்ச்சியினைக் கையாளுகின்றான். இவ்வாறு பிறரை அச்சங்கொள்ளச் செய்து தன் தேவையினை நிறைவேற்றிக் கொள்வது ஒரு வகையான தனிமனித வன்மம் ஆகும். இதனை குறுந்தொகை பாடல் எண் - 17 வெளிப்படுத்துகிறது. தோழியும் தலைவனின் இவ்வன்மைக்கு அஞ்சி தலைவியிடம் தூது சென்று உரைப்பதை,

            “மாவென மதித்து மடலூர்ந்து ஆங்கு
       மதிலென மதித்து வெண்தேர் ஏறி
       என்வாய் நின்மொழி மாட்டேன் நின்வயின் 
       சேரிசேரா வருவோர்க் கென்றும்
        அருளல் வேண்டும் அன்புடை யோயெனக்”   (நற்.342:1-5,ப.422)

என்பதிலிருந்து தலைவனின் தனிமனித வன்முறைக்குப் பயந்தே தலைவியிடம் தூதுசென்றதைக் காணமுடிகின்றது. மேலும்,

   “பல்லார்நக் கெள்ளப் படுமடன் மாவேறி
   மல்லலூ ராங்கட் படுமே நறுநுதல் 
   நல்காள்கண் மாறி விடினெச் செல்வான்நாம்”   (கலி.61:22-24,ப.179)

என்பதிலிருந்து நீ அருள்செய்யாது கைவிட்டால், பலரும் சிரித்து நகையாட, மடல் ஏறி, ஊர்அலர் ஏற்படும்படி உன்னைப் பற்றி இழிவாக பேசும் வன்செயலில் இறங்கிவிடுவான் போலிருக்கிறது என்று கூறுவதிலிருந்து தனிமனித வன்செயலினை அறியமுடிகின்றது.

வன்செயலால் மணம்புரிதல்
 காமமீதுற்ற தலைவன், தலைவி தன் காதலை ஏற்காத பொழுதும் தலைவியின் சுற்றத்தார் வரைவிற்கு உடன்படாத போதும் தலைவன் மடல்மாவில் ஏறி, தலைவியின் ஊரில் உள்ள பொதுமன்றத்திலோ, தெருவிலோ நின்று தலைவியைப்பற்றியும் அவன் தமரைப் பற்றியும் இழிவுபடுத்திப் பாடுகின்றான். இதனை,

   “மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி 
    நிறுக்குவென் போல்வல்யான் நீபடு பழியே”   (கலி.58:22-23, ப-170)
  
   “பல்லார்நக் கெள்ளப் படுமடன் மாவேறி” (கலி.61:21,ப.179)

என்ற அடிகளின் வழி அறியமுடிகிறது. இங்கு மடலேறுதல் என்பது பலரும் சிரித்து இகழப்படும் ஒரு இழிவான செயலாக கருதப்பட்டதுடன் தலைவி மற்றும் அவளின் தமர்மீது ஊரார் பழிதூற்றவும் செய்வர் என்பது பெறப்படுகிறது.

             “மல்லலூர் மறுகின்கண் இவட்பாடும் இஃதொத்தன் 
     எல்லீருங் கேட்டீமின் என்று
     படரும் பனையீன்ற மாவுந் சுடரிழை
     நல்கியாள் நல்கியவை”   (கலி.138:10-14,ப.425)

இங்குத் தன்னை விரும்பாத தலைவியைப் பெறுதல் வேண்டி, ஊர் மன்றத்தினிடையே மடல் மாவில் ஏறி தலைவியைப் பற்றிப் பாடுவதன் மூலம் தலைவியினிடத்தே தன் காதலைப் புலப்படுத்த வன்முறையினையில் ஈடுபடுகின்றான். சில நேரங்களில் தலைவி அக்காதலை ஏற்றுக் கொள்கிறாள்.

            “அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின் 
       துன்பத்திற் றுணையாய மடல்இனி இவட்பெற 
   இன்பத்துள் இடம்படலென் றிரங்கினள்”  (கலி.138:27-29,ப.426) 
 
என்பதன் மூலம் தலைவனின் வன்முறைக் காதலை தலைவி ஏற்றுக் கொள்கிறாள் என்பதை அறியமுடிகிறது. ஆனால், சில நேரங்களில் தலைவியின் விருப்பத்தைக் கேட்காமலேயே ஊரார் தூற்றும் குடிப்பழிக்கு அஞ்சி மணமுடிக்க பட்டிருப்பதை,

             “வருந்தமா ஊர்ந்து மறுகின்கண் பாடத் 
     திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே
     பொருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை
     போலக் கொடுத்தார் தமர்” (கலி.141:21-25,ப.435) 

என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன. பாண்டியனின் போர்த் தொழிலுக்கு அஞ்சி திறைகொடுத்த பகைவர்களைப் போன்று தலைவனின் மடல் ஏற்றத்தால் விளைந்த குடிப்பழிக்கு அஞ்சி, பெண்ணை மணமுடித்து தந்துள்ளனர் என்பது மேற்சுட்டப்பட்ட பாடலின் பொருளாகும். வ.சுப.மாணிக்கனார் தனது தமிழ்க்காதல் நூலுள், “ ‘திருந்திழைக்கு ஒத்த கிளவி’ என்பதனால் மகளும் இவனைக் காதலிக்கின்றாள் என்பது பெறப்படும்”. என்பார் (வ.சுப.மாணிக்கனார், தமிழ்க்காதல் ப.186) ஆனால் இப்பாடலின் முன்பகுதியில் தலைவன் மட்டுமே விரும்பி தலைவி அதை ஏற்காமல் இருப்பதை,

“ஓரொருகால் உள்வழிய ளாகி நிறைமதி
                                                      நீருள் நிழற்போல் கொளற்கரியள்……”(கலி.141:7-8,ப.435) 
 
என்பதன் மூலமும் ‘வையகமெல்லாம் வாழுமாறு செய்கின்ற உள்ளமுடைய என்னை இரந்து வேண்டித்திரியும் நிலையிலே சீரழியக், கொடிய துயரத்தினையும் விளைவித்தாளே’ (கலி.141:19-20) என்று தலைவன் தலைவியைத் தூற்றுவதன் வழியும் இங்கு தலைவன் மட்டுமே தலைவியின் அழகில் மயங்கி காதல் கொண்டமை அறியமுடிகிறது. இனி ‘திருந்திழைக் கொத்த கிளவி’ என்பதற்குத் திருந்திய இழையினை உடையவளைப் பெறுதற்குப் ‘பொருந்தின வார்த்தைகள்’ என்று நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார். பொருந்தின வார்த்தைகள் என்பதனைத் தலைவிக்கு தான் குடி, அழகு, வீரம், புகழ் போன்றவற்றினால் பொருத்தமானவன் என்று கூறிய வார்த்தையாகவே கருதலாம். இப்பாடலில் நாங்கள் இருவரும் காதலிக்கின்றோம் என்று தலைவன் குறிப்பிடவில்லை. மேலும், தலைவியின் விருப்பத்தைக் கருத்தில் கொள்ளப்பட்டதற்கான குறிப்பும் பாடலில் இல்லை எனவே தலைவி தலைவனை விரும்பாத போதும் குடிப்பழிக்கு அஞ்சி,  இசைவு தெரிவித்ததைக் காணமுடிகிறது. மேலும் அன்று இவ்வாறு தனிமனிதன் தன் தேவையையும் ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ள பிறர் மீது நிகழ்த்தும் இச்செயல்கள் வன்செயல்களேயாகும்.

மடலேறுதலில் மாற்றமும் தனிமனித வன்முறையின் உச்சமும்
 முன்பு தலைவியின் தெருவிலோ, ஊர்மன்றத்திலோ மடலேறுதலாக இருந்த பழக்கம் பின்பு பல ஊர்களிலும், நாடுகளிலும் மடல்ஏறிச்செல்வதாக மாற்றமடைந்துள்ளதை,

   “மடல்மா ஊர்ந்து மாலைசூடிக்
   கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும்
   ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப்
   பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று
   அதுபிணி ஆக விளியலங் கொல்லோ” (நற்.377:1-5,ப.464)

                  “வில்லாப் பூவின் கண்ணிசூடி
   நல்லே முறுவலெனப் பல்லூர் திரிதரும்
   நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே” (நற்.146:1-3,ப.182)

என்ற பாடல்களின் வழி அறியலாம். தலைவன் ஊர்த்தெருவில், மன்றத்தில் நடைபெற்ற மடலேற்றம் பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் மடல்ஏறிச் செல்வதாக மாற்றம் அடைவதற்குத் தலைவியின் ஊரிலுள்ளவர்கள் மடலேறி வந்த தலைவனுக்கு ஆதரவு தராமை காரணமாக இருந்திருக்கக்கூடும். இதற்கு,

   “கண்டுங்கண் ணோடாதிவ் வூர்”(கலி.140:20.ப.432)
   “உணர்ந்தும் உணராதிவ்வூர்”(கலி.:140:24,ப.432)
   “அறிந்தும் அறியாதிவ் வூர்”(கலி.140:29,ப.432)

என்ற பாடலடிகள் தலைவனின் மடலேற்றத்திற்கு ஊர்மக்கள் ஆதரவு தராமல் இருந்ததை எடுத்துரைக்கிறது. மேலும், தலைவன் மடலேறிவருவதற்குக் காரணமான பெண்ணை உள்ஊரில் உள்ள பிற ஆடவர்கள் மணம் செய்துகொள்ள மாட்டார்கள் போலும். அதன்பின் வேற்றூரிலிருந்து வேற்றுவரைவு முடிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவே தலைவன் பிற ஊர்களுக்கும், நாடுகளுக்கும் மடல்ஏறிச் சென்று தலைவி மற்றும் அவளின் தமரின் குடிப்பழிக்கு இழுக்கு ஏற்படும்படி செய்து வேற்றுவரைவும் தடைபட்டு போகச் செய்திருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. இவ்வாறு தான் விரும்பிய பெண்ணைப் பெறுதல் வேண்டி அப்பெண்ணின் சுயவிருப்பத்திற்கு மாறாக அப்பெண்ணிற்கும் அவளின் குடிக்கும் இழுக்கு ஏற்படுமாறு தலைவன் வன்முறையில் ஈடுபட்டுள்ளான் என்பதை உய்த்துணரலாம். தற்காலத்தில் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது திராவகம் வீசுதல், கொலை செய்தல் போன்ற வன்செயலில் இளைஞர்கள் ஈடுபடுவதனை இம்மடலேற்றத்தின் மீட்சியாகக் கருதலாம்.

பெண்கள் மீது திணிக்கப்பட்ட கருத்தியல் வன்முறை 
 காதல் உணர்வு என்பது ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் ஒன்றாகும். காமத்துயரம் மீதுயரம் பெற்ற நிலையில் மடலேற்றம் நிகழ்த்தப்படுகிறது. மடலேறுதல் என்பது ஆண்களுக்கு மட்டும் உரிய ஒன்றாகச் சங்கச்சமூகத்தில் நிலவியிருந்துள்ளது. காமம் காரணமாக பெண்களும் துன்பமடைவர். ஆனால், பெண்கள் மடலேறியதாக சங்கப் பனுவல்களில் சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. பெண்கள் மடலேறக் கூடாது என்பது மரபாக போற்றப்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. தொல்காப்பியமும் இதற்குச் சான்று பகர்வதை,

             “எத்தினை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
   பொற்புடைய நெறிமை இன்மையான்”   (தொல்.அகத்;-நூ-38,ப.35)

என்ற நூற்பா வழி அறியமுடிகிறது, வள்ளுவரின்

                   “கடல ன்னகாமம் உழந்தும் மடலேறாப்
   பெண்ணின் பெருந்தக்கது இல்” (குறள்.1137,ப.495)

என்பதன் வழியும் பெண்கள் மடலேறும் வழக்கம் இல்லை என்பதை அறியலாம். மேலும், இது பெண்கள் மடலேறக் கூடாது என்று பெண்கள் மீது திணிக்கப்படும் ஒரு கருத்தியல் வன்முறையாகும். இவற்றை பெண்ணின் பெருமையாக வள்ளுவர் கற்பிதம் செய்து பாடுவதையும் காணமுடிகிறது. பெண்களின் மரபு, நெறி, பெண்ணிற்குப் பெருமை, என்ற கருத்தியல் மூலமாகவும் பெண்கள் மடலேறக் கூடாது என்ற கருத்தியல் வன்முறையினை அக்கால பெண்கள் மீது திணித்துள்ளதையே இவை வெளிப்படுத்தியுள்ளன. பக்தி இலக்கிய காலகட்டத்தில் இம்மரபில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையை திருமங்கை ஆழ்வாரின் சிறியதிருமடல், பெரியதிருமடல் ஆகிய நூல்களில் தலைவனாகிய இறைவனை அடைதல் வேண்டி தலைவி மடல் ஏறுவேன் என்று கூறுகின்றதனைக் காணமுடிகிறது. இப்பாடலில் சங்ககால மானுடக் காதலில் இருந்த மரபு, பக்தி இலக்கியக்கால இறைக்காதலின் வழி மீறப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

சமூகத்தின் மீது தலைவன் திணிக்கும் கருத்தியல் வன்முறை
 தலைவன் மடல்ஏறிய பொழுது ஊரவர்கள் யாரும் அதனைக் கண்டுகொள்ளாத பொழுது மடலேறித் துன்பப்படுவோரின் துன்பத்தைக் களைவது சான்றோரின் அறமாகும் என்று தான் செய்யும் வன்செயலுக்கு சான்றோர் ஆதரவினைப் பெறுவதற்கு ‘அறம்’, ‘கடமை’ என்னும் கருத்தினைக் கையாளுவதை,

   “உயர்நிலை யுலகம் உறீஇ யாங்கென்
    துயர்நிலை தீர்த்தல் நுந்தலைக் கடனே”  (கலி.139:36-37,ப.429)

   “இருளுறு கூந்தலாள் என்னை
   அருளுறச் செயின்நுமக் கறனுமா ரதுவே” (கலி.140:33-34,ப.432)
 
என்பதன் மூலம் தான் செய்யும் வன்செயலுக்கு அறத்தின் சாயம் பூசப்படுவதினை உணரலாம். மேலும், தான் மடலேறுவதற்குச் சான்றோர்கள் எழுதிவைத்துள்ள அறநூல்கள் காரணமாகின்றது என்பதை,

   “அரும்பொரு ளின்பமென் றம்மூன்றி னொன்றன்
    திறஞ்சேரார் செய்யுந் தொழில்க ளறைந்தன்
    றணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி
    அணிநலம் பாடி வரற்கு” (கலி.141:3-6,ப.435)

என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன. இங்கு அறநூல்கள் சாற்றியுள்ளதின் படி நானும் மடலேறத் துணிந்தேன் என்று தன் வன்செயலுக்கு அறம், கடமை, பெண்ணிற்கு பெருமை போன்ற கருத்துகளின் வழியும் வன்செயல்களைச் செய்துள்ளனர்  என்பதை அறியமுடிகின்றது.

நிறைவாக, மடலேறுவதன் மூலம் தலைவன் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் சுய வன்முறையிலும் தன் தேவையினை நிறைவேற்றும் பொருட்டு பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் தனிமனித வன்முறையிலும் ஈடுபட்டுள்ளான். மேலும் தான் செய்கின்ற வன்செயலுக்குச் சமூகத்தில் மதிப்பைப் பெற அறம், கடமை, நெறி என்ற கருத்துக்களின் வாயிலாக வன்முறையினைத் திணித்துள்ளதையும் அறியமுடிகிறது. சங்கச் சமூகத்தில் ஆண் அதிகாரமையமிட்ட சமூகமாக நிலவியிருந்தது என்பதற்கு பெண்கள் மடலேறக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இவ்வாறு மடலேறுதல் பலவகையான வன்செயல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமையைச் சங்க இலக்கியத்தின் வழி அறியமுடிகிறது.

துணைநின்ற நூல்கள்
1. நச்சினார்க்கினியர் கலித்தொகை உரை, கழக வெளியீடு ,சென்னை, 2007
2. முனைவர் அ. விஸ்வநாதன் கலித்தொகை , நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2011
3. பொ.வே. சோமசுந்தரனார் குறுந்தொகை கழக வெளியீடு, சென்னை, 2007
4. உ.வே.சா குறுந்தொகை மூலமும் உரையும் டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம்,
  சென்னை, 2009
5. முனைவர் வி.நாகராசன், குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2011 
6. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்,  நற்றிணை உரை கழக வெளியீடு, சென்னை,2007
7. இளம்பூரணனார் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, 2008
8. பரிமேலழகர் உரை, திருக்குறள்,  திருமகள் நிலையம், சென்னை, 1998 
9. வ.சுப. மாணிக்கனார், தமிழ்க்காதல், சாரதா பதிப்பகம், சென்னை, 2010 
10. வ.சுப. மாணிக்கனார், தமிழ்க்காதல், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2009

sivasivatamil@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard