New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!- சு.விமல்ராஜ்


Guru

Status: Offline
Posts: 24788
Date:
தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!- சு.விமல்ராஜ்
Permalink  
 


தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!

E-mailPrintPDF

தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!  - சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை -தமிழர்கள் செவ்விய வாழ்வியலை உடையவர்கள். அவர்களின் செம்மார்ந்த வாழ்வுக்கு சான்றுகள் பல உண்டு. சங்கத்தமிழர் வாழ்க்கை முறையும் கடவுட் கோட்பாட்டு  கட்டமைப்பும்  இயல்புநிலைச் சார்ந்த வழிமுறையின் பின்னணியை உணர்த்தி நிற்கிறது.  வழிபாட்டு அமைப்பு முறை உலகளாவிய தன்மையில்  எந்தத் தடத்தில் தொடங்குகிறதோ  அவ்வழி இங்கும் உள்ளதென்பது புலப்படுகிறது.  வைதீக அமைப்பு முறையும் தொல் தமிழர் கடவுட்கொட்பாட்டு வழித்தடமும் எந்த நிலையில் ஒத்துப் போகிறதென்றும் எங்கு வேறுபடுகிறது என்றும் மானிட வளர்நிலை அமைப்பில் பார்க்கிறபோது தமிழர்க் கடவுட்கோட்பாட்டு  அமைப்பின் அடித்தளத்தை உணரமுடியும். 

வழிபடுதல்:
வழிபாடு என்பது ஒன்றின் மையப்பொருளில் ஒன்றித்து பயணப்படுதல். இலக்கை மையமாகக் கொண்ட தமிழர் வாழ்வில் கடவுள் என்னும் கோட்பாடு இழைந்து காணப்படுகிறது. பதுக்கையும் நடுகல்லும் சான்றாய் நின்று விளங்கும்.

“விழுத்தொடை மறவர; வில்லிடத் தொலைந்தோர் 
எழுத்துஉடை நடுகல் அன்ன’’ 1 

தொல்லியலார் கல்திட்டைகளையும் பதுக்கைகளையும் பல இடங்களில் கண்டுபிடித்துள்ளனர். சங்க காலத்தில் இத்தகைய கல் பதுக்கைகள் இருந்தன. தரையைத் தோண்டிச் சிறிது நிலத்திற்கடியில் இருக்குமாறோ அல்லது முழுவதும் அடியிலிருக்குமாறோ பிணக் குழியை அமைப்பர். நன்கு செதுக்கப்பட்ட கருங்கற் பட்டைகளை இதற்குப் பயன்படுத்தனர். இக்குழியைச் சுற்றிலும் ஒன்றிரண்டு வரிரசைகளில் கல்சுவர்கள் எடுப்பர். ஈமப் பொருளைக் குழியிற் போட்டபின் ஒரு கல்லால் மூடிவிடுவர். அதற்குப் பிறகு மேலே கூழாங்கற்கள் பரப்பப்பட்டன. இது புதைபொருள் ஆய்வாளர் கண்டுள்ள பதுக்கைகளின் அமைப்பாகும். 

‘‘நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை’’2 நடுகல் வழிபாடு- போரில் இறந்துபட்ட வீரர்கட்குக் கல் நட்டு அவர்களைக் கடவுளாக வழிபட்ட மரபினை இலக்கியம் பலபடப் பேசுகிறது. வேட்சித் திணையின் பகுதியில் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை வாழ்த்து என்றும் நடுகல் வணக்கத்தின் ஆறு படிநிலைகளைத் தொல்காப்பியர் கூறியுள்ளது. நோக்க இம்மரபு அவர் காலமாகிய கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனத் தெரிகின்றது. மாடுகளே பண்டு செல்வமாகக் கருதப்பட்டன. எனவே, பகைவரிடமிருந்து மாடுகளைக் காக்கும் முயற்சியிலீடுபட்டு உயிர் நீத்த கரந்தை வீரர்கட்கே பெரும்பான்மையான கற்கள் நடப்பட்ன என்று அறிய வேண்டியுள்ளது.நடுகற்கள் ஊருக்குப் புறத்தே தொலைவில் இருந்த திடல்களில் நடப்பட்டன. ஒரு வீரனுக்குக் கல் நட்டதைப் புறநானூற்றுப் பாடலொன்று கூறுகின்றது.

‘‘ஊர்நனி யிறந்த பார்மூதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை ஔ்ளிரன் நறுவீப்
போந்தையந் தோட்டில் புனைந்தனர்
மல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லா யினையே கடுமான் தோன்றல்’’3

இக்கற்களில் வீரனுடைய பெயரும்பீடும் எழுதப்பட்டன. அணிமயிற் பீலியும் மலர; மாலைகளும் சூட்டப்பட்டன.

‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதன்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்’’4

பழந்தமிழர்களுக் கென்ற தனித்துவமான வழிபாட்டு மரபுகள், நம்பிக்கைகள் என்பவை பண்டைய தமிழர் தொன்மையை நிலை நிறுத்துகிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் பெயர் கி.பி. பதினோறாம் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் வந்ததாகக் குறிப்பர். இதில் மாறுபாடு உண்டு. பன்னிருபாட்டியலும் பின்னால் கி.பி.பதிமூன்றாம், பதினான்காம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கொள்ளப்படும் மயிலைநாதர் உரைகளிலும் காணப்படுகிறது. தொல்தமிழர் வழிபட்ட கடவுள் மரபை நுண்ணித்து பார்த்தால் இயற்கையின் மீது பிடிப்போடு இருந்து ஒழுகியதை உணரமுடியும்.

தொல்காப்பியத்தில் கடவுள்:
தொல்காப்பியனார் திணைகள் ஒவ்வொன்றுக்குமான கடவுளரின் பெயர்களை விவரித்துக் கூறியிருப்பார். 

“மாயோன்மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”5

"மாயோன் மேய காடுறை உலகமும்  சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே''என்பது தொல்காப்பியம். தொல்காப்பியர், - மாயோன் - சேயோன் - வேந்தன் - வருணன்; என்று நான்கு கடவுளரைப் பற்றி முதலில் கூறி, அக்கடவுளர் நெறியைப் போற்றி வணங்கிய நிலங்களைக் குறிப்பிடுகிறார்.

இந்த நூற்பாவின் படி, காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் கடவுளாக மாயோனாகிய திருமாலும், மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சேயோனாகிய    முருகப்பெருமானும், வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் கடவுளாக "வேந்தன்" ஆகிய இந்திரனும், கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கடவுளாக வருண பகவானும் குறிக்கப்பட்டுள்ளனர். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து காணப்பெற்ற பாலைப் பகுதியில் "கொற்றவை" வழிபாடு நிகழ்ந்ததாக சங்க நூல் வழியும்,  “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து” என்று சங்கம் சார்ந்த சிலப்பதிகாரம் போன்ற நூல் வழியும் அறிய முடிகிறது.

முருகு-முருகன்:
முருகு+அன்=முருகன். முருகு என்னும் சொல்லுக்கு சதுரகராதி அகில்,அழகு, இளமை, எழுச்சி, கள், திருவிழா, முருகன், வாசனை என்று பலபொருளைச் சுட்டுகிறது.6முருகன் பெயருக்கு இளையோன், குமரன், வெறியாட்டாளன் என்கிறது.7 குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். மக்கள் தோன்றிய இடமும் வாழ்வு தொடங்கிய இடமுமாகக் கருதப்பெறும் மலையை முருகன் இடமாகக் கொண்டான். 

முருகன் வேலை போர்க்கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டான். இந்திரன் பணியாளரான  நெருப்பையும், காற்றையும் சுப்பிரமணியர் என்று அழைக்கப்பட்டனர் என்று தைத்ரீய ஆரணியகம் கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் முருகனைத் தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் முருக வழிபாடு முறையாகிய வெறியாட்டு மிகப் பழைமையானது என்பதும், சமுதாயக் கூட்டு வாழ்க்கையின் அடிப்படையில் தோன்றியது என்பதும் அறியப்படுகின்றன. 

கடவுட் கோட்பாட்டில் முதலில் தோன்றியது முருக வழிபாடு குறித்த கோட்பாடே. தமிழ் நாட்டில் முருக வழிபாட்டிற்குத் தோற்றமாயிருந்தது. வேலன் வெறியாடல். இஃது ஓர் இனக்குழு வழிபாட்டு முறை என்பர். கடவுள் வழிபாட்டிற்குத் தொடக்க நிலையில் உருவங்கள் வைத்து வணங்கப்படவில்லை. குறிப்பிட்ட அடையாளங்களை வைத்தே வழிபட்டனர். அதுபோல முருகனுக்கு அடையாளமாக வேலாயுதம் வைத்து வணங்கப்பட்டது. 

வேலாயுதம் என்னும் கருவியின் மீதான ஆய்வும் வைக்கத்தக்கது. கிரேக்க தேசத்தில் பொசைடன் என்னும் கடல் கடவுளின் குறியீடாய் மூன்று முனைகளை உடைய ஒன்று காட்டப்படுகிறது. சிவனின் சூலாயுதம் மூன்று குறியீடுகள் உடையதாய் காட்டப்படுகிறது. இஃது  தனித்து ஆய்வு நிகழ்த்துவதற்கு  உரியது. 

மேலை ஆரிய கீழை ஆரிய வகைப்பாட்டு பார்வை வரலாற்றின் மீது இருக்கும் காரணத்தினால் திருசூலம்-சூலம் எவ்வகை வேறுபாடு என்பதை ஆழப்பார்க்க வேண்டும். யூத வேரின் மீதான மேலை ஆரியப்பார்வை இந்திய வேதங்களின் மீது வைத்துப்பார்க்கப்படுகிறது. பிரஜாபதி எனும் சொல் குறித்து சில கூற்றுகள் இருக்கின்றது.(ஆதி வேத ஆகமத்தில் சொல்லப்பட்ட பிரஜாபதி – இந்திய ஆதிவேத பிரஜாபதி இரண்டும் ஒன்று என்பது [In Hinduism, Prajapati (Sanskrit: प्रजापति (IAST: prajā-pati)) "lord of people" is a group of Hindu deity presiding over procreation and protection of life, and thereby a King of Kings (Rajanya or Rajan). Vedic commentators also identify him with the creator referred to in the NasadiyaSukta.]8 இந்த திரிசுலம் எதன் குறியீடு என்பதை வேர்வரையில் சென்று பார்த்தால் விளங்கும்.

சங்க இலக்கியம் முழுவதும்ஒன்பது இடங்களில் முருகன் பெயர்வருகிறது.

“உருவப்பல்தேர்இளையோன்சிறுவன்
முருகற்சீற்றத்துஉருகெழு குருசில்”9
“முருகன்தாள்தொழு தன்பரங்குன்று”10
“முருகன்நற்போர்நெடுவேள் ஆவி”11
“சினம்மிகுமுருகன்தன்பரங் குன்றத்து”12
“முருகன்ஆர்அணங்கு என்றலின்”13
“முருகன் அன்ன”14
“முருகற் சீற்றத்து உருகெழு குருசில்”15
“முருகன் சுற்றத்து அன்ன”16
“அணங்குடை முருகன் கோட்டத்து”17
முருகு என்னும் சொல் முருகன் என்னும் பொருளில் இடம்பெற்றுள்ளது. முருகு, முருகநழகு என்னும் பொருளைச் சுட்டி நிற்கும்.
“முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க
முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்”18
“முருகு அயர”19
“அருங்கடி வேலன் முருகொடு வளைஇ”20

முருகு, முருகன் கடவுள் அல்லது நிலத்தலைவனின் பெயர் உணர்த்தி செவ்விய முருகியற்பொருந்திய இடத்தை எடுத்துக்காட்டுகிறது.
வேலன்/வேலான்/வேல்வல்லான்/செவ்வேலான்: 

வேலன் பெயர்  சங்க இலக்கியத்தில் முப்பத்து ஓரிடங்களில் இடம்பெற்று வந்துள்ளது. வேல் என்னும் கருவியினை உடையவன் என்னும் பொருளில் வேலுடையான் பொருளுணர்த்தி நிற்கிறது. கருவியை உடையவனாதலால் வேலின் பெயர் ஆளுக்காகி வேலன் என்றானது. வேல்+அன்= வேலன். வெறியாட்டு நிகழ்த்துதல் நிகழிடத்தில் கருவியானது முதன்மை. வழிபடு  முறைகளுள் ஆள் ஒருவன் தன்மேல் முருகன் வருவதாய் ஆடி நிகழ்த்துவது சங்கப்பாடல்கள் பலவற்றில் பயின்று வந்துள்ளது.

வேல்+ஆன்=வேலான் என்று  பரிபாடலின் ஈரிடங்களில் வருகிறது.21 வேற்சொல்லுடன் ஆன் விகுதிப்பெற்று வேலான் என்று வழங்கியுள்ளது.  முருகனை வேலுடையவன் என்னும் பொருளில் வேலன், வேலான் என்றவாரு வழங்கிவந்துள்ளது.

வேல்வல்லான் – வேலில் வல்லான். குறிஞ்சி நிலத்தவனை/ தலைவனை/ முதன்மையுடையவனை முருகு, முருகன், வேலன், வேலான் என்று உணர்த்தி நின்று வேலில் வல்லானாய் முருகனைக் காட்டி வந்துள்ளது. செவ்விய வேலையுடையவன் என்னும் பொருளில் செவ்வேலான் என்றது.22

முருகன் கோயில்:
சங்க காலத்தில் முருகன் கோயில் கொண்டிருந்த இடங்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கடம்ப மரத்தடியில் முருகன் வீற்றிருந்ததை,

‘‘….. . ..புகழ் பூத்தகடம்ப மர்ந்து
அருமுளி மரபின் ஆன்றவர் நுகர்ச்சியின்
இந்நிலத்தோடும் இயைகெனக் கீத்தநின்
தண்பரங்குன்றத்து’’23

என்ற பரிபாடல் அடிகளிலிருந்தும் உணரலாம். குறிஞ்சி நில மக்கள் தம் பண்டைய மரபு முறையிலேயே வழிபாடுசெய்து வந்தனர் இலக்கியங்களில் முருகக் கடவுளைப் பற்றி எழுந்த பழைமையான நீண்ட முதல் தனிப்பாட்டு திருமுருகாற்றுப்படையாகும். 

முருகன் வழிபாடு பற்றி அகநானூறு :
முருகன் வழிபாடு பற்றி அகநானூறு குறிப்பிடும்போது,
‘‘சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து’’24

என்ற வரிகளில், முருகன் தெய்வப் பண்புகளையன்றி, வீரப்பண்பு உடையவனாகத் திகழ்ந்திருக்கிறான். தமது பகைவனாகிய சூரபன்மாவினைச் சுற்றத்தோடு அழித்துச் சுடரும் முனையினையுடைய நெடுவேலினையுடையவன் சினம் மிகுந்த முருகன்; அச்சினம் தணிந்து அவன் அருளுடையவனாகக் கோயில் கொண்டிருக்கும் தட்பம் வாய்ந்த அறுபடைவீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் பற்றியதில் தெரியவருகிறது.

‘‘புரிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு
முருகன் அன்ன சீற்றத்துக் கருந்திறல்’’25

என்ற அகநானூற்று வரிகளில் ஒலியையொத்தக் கடுஞ்சீற்றத்துடனும் பகைவரை எதிர்க்கக் கூடியவனாகிய முருகனின் வலிமையை இவ்வடிகள் தெளிவுறுத்துகின்றன.

முருக வழிபாடும் வைதீகமும்:
முருகன் குறித்து வரும் பல்வேறு பெயர்கள் மலை நிலக் கடவுளாக முருகனைக் கொள்வதற்கு துணை நிற்கிறது. முருகனின் பல்வேறு பெயர்களும் வணக்கமுறைகளும் அவரை வீரவணக்கப் பின்புலம் உடையவராகக் காட்டுகிறது. சிவனுக்கும் முருகனுக்குமான வைதீகச் சார்பு டையக்கருத்துகள் ஆய்வுக்கு உரியதாக உள்ளது.

தொல்தமிழரின் மூத்தோர் வணக்கம் வீரர்கள், தலைமைப் பண்புடையவர்கள், உறவுகளில் முதிர்ந்தவர்கள் ஆகியோரை வணங்கும் முறை பழக்கத்தில் இருந்ததைக் காட்டுகிறது. வழிபாட்டு வரலாறு ஆதிமனிதன் இயற்கையைக் கண்டு நடுங்கி கதிரோனையும், திங்களையும் மதித்து வழிபடுவது என்ற வழித்தடத்தில் மரத்தைத் தான் முதன்முதலாக வழிபட்டான். "நாகரிகம் தோன்றிய காலம் முதலாகக் கொண்டு உலகமெங்கும் மனிதன் மரங்களை வழிபடத் தொடங்கினான் என்பதே ஆய்வாளர்களின் கருத்து "26

மரவழிபாட்டிற்கு அடுத்த நிலையில் விலங்கு வழிபாட்டில் நாகம் தொன்மையானது. இந்தியாவில் நாகர்கள் பழமையான குடிகள். நாகர் என்பதற்கு ஒரு பழைய சாதியர்27, நாகநாடு என்பதற்கு நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு28 என்றும் பொருள் கொள்வர்

இவ்வழிபாட்டு அமைப்பில் தமிழர்களின் தொன்மையான முறைகளுள் ஒன்றான நடுகல் வழிபாடு உள்ளது. இவற்றுள் இரண்டுள்ளது. ஒன்று பெருங்கற்படை என்னும் பதுக்கைகள் இரண்டாவது அதன் நீட்சியான நடுகல் என்பதுமாகும். பதுக்கை (Cist) என்னும் பெயர் சங்க இலக்கியத்தில் பதினான்கு இடங்களில் வருகிறது.29

"அம்பின் விசை இடை வீழ்ந்தோர் 
எண்ணு வரம்பு அறியா உவல்இரு பதுக்கி  "30

நடுகல் என்னும் பெயர் சங்க இலக்கித்தில் பதினெட்டு இடங்களில் வருகிறது.

"நடுகல் பீலி சூட்டி "31
"நடுகல்லின் அரண் போல "32

என்றுவரும் இவற்றிலிருந்து பதுக்கை, நடுகல் வழிபாடிருந்ததை உணரமுடியும்.இறந்தவர்களை புதைப்பதும் எரிப்பதுமான பழக்கம் இருந்தது. வீரர்களை, உயர்குடியில் பிறந்தவர்களில்தான் பதுக்கை, நடுகல்லும் கொண்டு வழிபடும் முறை இருந்தது. (தொல்லியல் நோக்கில் சங்க காலம்.கே.ராஜன்.)

புதைப்பதையும் எரிப்பதையும்,
"இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ 
படு வழிப்பாடுக "33

என்னும் பேரெயில் முறுவலார் பாடல் எடுத்துக் காட்டுகிறது. இதற்கு சான்றாக மணிமேகலை,

"சுடுவேள் இடுவேள் தொடு குழிப் படுவேள்
தாழ் வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் "34 

என சுடுபவர்களையும்(Cremation), இறந்தவர்களை ஓரிடத்தில் வைப்பதை(Post Excarnation burial), குழியில் இடுவதை(Pit burial), நிலத்திற்கு அடியில் கல்லறை வைப்பதை(Rock chamber or Cist burial), தாழிகள் இட்டு அதன் மேல் மூடிகள் கொண்டு மூடுவதை(Urn burial encapped with lid), ["தாழி இடுவதை மாயிருந்  தாழி கவிப்ப "35 என்பர் பரணர்]  விளக்கி நிற்கிறது.

இறந்தவர்களை மதிப்போடு இடுவதும், சுடுவதும், பதுக்கை, நடுகல் அமைத்து அவர்களை வழிபடுவதும் தமிழர்களின் வீரவனக்கச் செயற்பாடுகளுள் ஒன்றாக விளங்கியது. முருகு வழிபாடும் அத்தகு வீரவனக்கச் செயற்பாடுகளின் தலைமுறை கடந்த மாற்றுருவே ஆகும். குறிஞ்சி நிலத்தலைவன் மதிப்பு மிகு நிலையில் வீரவணக்கம் செய்யப்பெற்று அதுவே கடவுள் நிலைக்கு உயர்த்தப் பெற்றிருக்கிறது.

வைதீகக் கோட்பாடுகள் முருகனை சிவனின் பிள்ளை, நெற்றிக்கண்ணில் உதித்தவர் என்கிறது. இந்நிகழ்வும் பரிபாடலில் சுட்டப்பெறுகிறது36 பூர்வகுடி வழிபாட்டு அமைப்புக்கும் இவ்வைதீகம் சுட்டும் புராண நிகழ்வியல் கோட்பாட்டுக்கும்  முரண்பாடு உடையதாய் உள்ளது. ஸ்கந்தன் என்னும் வடமொழிப் பெயர் கந்தன் என தமிழில் வழங்குவதாய் ஒரு கூற்றுண்டு. கந்தழி என்றால் பரம்பொருள் மற்றொன்று மதிலழித்தல் என்னும் பொருளுண்டு37) கந்து எனின் தெய்வம் உறையும் தூண்.38 எதிர் நாட்டினரை, வீரரை அழிப்பவர் என்னும் பொருளில் அவ்வாறான வீரருக்கு வணங்கும் மதிப்பு உருவாகி பின்னர் நிலம் சார்ந்த கடவுளாக மாற்றம்பெற்றது.

சான்றெண்விளக்கம்:

1. ஐங்குநுறூறு.352 
2. அகம். 231)
3.புறம். 265.1 – 5
4. அகம். 67
5.தொல்.அகத்.5
6.சதுரகராதி.ப.158.
7.மேலது.ப.188
8 விக்கிபீடியா -பிரஜாபதி
9.பொருணர்.131-132
10.பரிபாடல்.8-81
11.அக.1.3
12.மேலது.59.11
13.மேலது.98.10
14.மேலது.158.16
15.புறம்.16.2
16.மேலது.23.4
17.மேலது.299.6
18.திருமுரு.243-244
19.மது.38
20.மேலது.611
21.பரிபாடல்.9.68, கலி.27.16
22.கலி.93.26
23.பரிபாடல்.19
24.அகம். 59
25. மேலது.68
26.கு.சேது.சுப்பிரமணியன்.திருமுறைத் திருத்தலத் தெய்வீக மரங்கள். முன்னுரை 
27. ச.வே.சுப்பிரமணியன்.மாணவர் தமிழ் அகராதி.ப.310
28.மேலது .310
29.ச.இ.சொல்.அடைவு.த.பல்கலை.ப.448
30.அக.109.7-8
31.அக.35-8
32.பட்டிணப்.79
33.புறம்.239.20-21
34.மணிமேகலை.6.111.66-67
35.நற்.271.11
36.பரி.5.21-54
37. ச.வே.சுப்பிரமணியன்.மாணவர் தமிழ் அகராதி.ப.127
38.மேலது.ப.127

thamizhvimal@gmail.com



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
RE: தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!- சு.விமல்ராஜ்
Permalink  
 


திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..

திருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை.

உலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம்.

பாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் என கூறி வரும் தற்குறிகளுக்காகவே இந்த பதிவு.

திருக்குறள் பல குறள்களில் இந்து மத நம்பிக்கையை பற்றி பேசுகின்றன.

இந்துக்கள் ஒன்றும் சுயநலவாதிகள் அல்ல. அவர்கள் தங்கள் மதத்தின் மூலமாக இந்த உலகிற்கு பல நற்வழிகளையும், மாபெரும் நூல்களையும் வாழும் கலைகளையும் வாரி வழங்கியுள்ளார்கள்.

அவர்கள் அந்த நூல்களையும் மறைகளையும் இந்த உலக நலன் கருதி பொதுவாக தான் படைத்தார்கள். அதே சமயம், அது பொது என்பதால் அது இந்து மத நூல் இல்லை என்றும் இந்து மத நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் ஏதும் கூறவில்லை என்றும் கூறினால் உங்கள் அறிவாற்றலை எண்ணி நகைக்காமல் இருக்க இயலவில்லை.

பல ஆண்டுகளாக திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தையும் இல்லை, எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டு வள்ளுவர் குறள் இயற்றவில்லை என்ற ஓர் பொய் பிரச்சாரம் நடந்த வண்ணமே உள்ளது. அதை சரி பார்க்க கூட திறன் இன்றி பல ஞான கொழுந்துகள் சமூக வலை தடங்களில் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

இன்னும் நடுநிலை நாயகன் என்ற போர்வையில் நீங்கள் இதை ஆமோதித்தால் கீழே உள்ள குறள்களை படித்து தெளிவு பெறவும்.

இந்த உவமைகளும் குறிப்புகளும் நான் உருவாக்கினவை என்று மார் தட்டி கொள்ள இங்கே பதிவிடவில்லை. இந்த பதிவில் வரும் அனைத்தும் பல சான்றோர்களால் பல வருடங்களாக கூறப்பட்டு வந்தவையே. ராமருக்கு அணில் உதவியது போன்றே, நானும் அவைகளை ஒன்று திரட்டி ஓர் இடத்தில் தொகுத்து வைக்கும் சிறிய செயலையே செய்கிறேன்.

சரி, இனி விளக்கங்களுக்கு செல்வோம்.

முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்தில் தான் துவக்கம்.

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

அய்யன் வள்ளுவர் தன் முதல் குறளை துவக்கும் போதே எங்கள் இறைவனை முன்னிறுத்தியே துவங்குகிறார்.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

ஒருவர் இறைவனை நாடி அவரது அடி சேராமல் இருப்பாராயின், அவர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதே வள்ளுவனின் கருத்து. முற்பிறவியிலும் மறு பிறவியிலும் நம்பிக்கை கொண்ட மதம் இந்து மதம். இக்குறள் மூலம், வள்ளுவர் இந்து மத நம்பிக்கையான மறுபிறவியை பற்றி எழுதியுள்ளார்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு

இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் இந்து மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா?

25. ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்

இந்திரனே சாலும் கரி

தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா?

55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்எனப் பெய்யும் மழை

எல்லோரும் போற்றும் அந்த கடவுளை வழிபடவில்லையென்றாலும் தன் கணவனை உண்மையாய் போற்றி வரும் பெண்களின் பெருமையை உணர்த்தும் குறள் இந்த குறள். இது எப்படி “திருமணம் சில கால நிகழ்வு” என்றும், அது “இன்னும் 50 – 100 வருடத்தில் மறைந்துவிடும்” என்றும் கூறிவரும் தகரமுத்துவிற்கு தெரியாமல் போனது?

ஆயிரம் ஆயிரம் வருடங்களாக நமது தமிழ் சமுதாயம் இந்த திருமணம் என்ற ஓர் சமூக நிகழ்வை தாங்கி பாதுகாத்து வந்துள்ளது என்பதையே இக்குறள் நினைவூட்டுகிறது. அது இறக்க நாம் ஒரு காரணம் என்று கூறும் போது ஓர் குற்ற உணர்வுகூட இல்லையா? அதை பாதுகாத்து எவ்வாறு நமது முன்னோர்கள் நம்மிடம் வழங்கினார்களோ அதே போன்று நாமும் நம் அடுத்த சங்கதியினருக்கு வழங்கி செல்லவில்லை என்றால் நாம் இந்த பிறவியில் பிறந்து தான் என்ன பயன்?

62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கள் பெறின்

ஒருவன் நற்பண்புகள் கொண்ட மக்களை பெற்றிருந்தால் அவருக்கு இந்த பிறப்பில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் எந்த துன்பமும் தோன்றாது என்ற இந்த குறள் மூலம் இந்து மதத்தின் நம்பிக்கையை எடுத்துரைக்கவில்லையா? மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள மதம் இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா?

167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்

இந்த குறளின் மூலம், பொறாமை பிடித்த ஒருவனிடமிருந்து ஸ்ரீதேவி விலகுவது மட்டுமல்ல, அவளது சகோதரியான மூதேவியை விட்டு செல்வாள் என்று நமக்கு கூற வருகிறார் வள்ளுவர். ஸ்ரீதேவியும் மூதேவியும் எந்த மத நம்பிக்கை உள்ள மக்கள் வழிபடுவார்கள்? அதை நான் கூறி தான் உங்களறிவுக்கு எட்ட வேண்டுமா?

260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்

ஒருவன் புலால் உண்பதை தவிர்த்தால், அனைத்து உயிரினங்களும் அவனை வணங்கும் என்பதே இந்த குறளின் பொருள். புலால் உணவை வேண்டாம் என்று வலியுறுத்த புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தையே இயற்றியுள்ளார் வள்ளுவர். இதை எந்த மதம் வலிறுத்துகிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை

அஃதிலார் மேற்கோள் வது

தவம் செய்வது கூட முற்பிறவியில் நல்வினை கொண்ட மக்களாலேயே செய்யவல்லது என்பதே என் வள்ளுவனின் கருத்து. தவத்தில் சிறந்த பல முனிவர்களையும் ரிஷிகளையும் கொண்ட மதம் இந்து மதம். அப்படியிருக்க இந்த குறளில் வரும் தவம் என்ற சொல் வேறெந்த மதத்தினை குறிக்க முடியும்? அதுமட்டுமின்றி இந்த குறளின் மூலமாக இந்து மக்களின் நம்பிக்கையான முற்பிறவியின் பலனை பற்றியும் கூறுகிறார் அல்லவா?

380. ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்

நீ விதியை வெல்ல எது செய்தாலும் விதியே வந்து உன் முன் நிற்கும் என்று கூறும் வள்ளுவரின் குறள். விதி வலியது என்று நம்பும் மக்கள் இந்து மத வழி வந்தவர்கள். இங்கு ஊழி என்பது விதியையே குறிக்கும். இந்த குறளில் இந்து மத நம்பிக்கைகளை கூறவில்லை என்றால், வேறு எதை பற்றி கூறுகிறார்?

617. மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்

தாள்உளாள் தாமரையி னாள்

இந்த குறளின் மூலமாக சோம்பேறியாக சுற்றி திரிபவனிடம் மூதேவியும், உடல் உழைப்பு கொண்டவனிடம் ஸ்ரீதேவியும் குடியிருப்பாள் என்பதை எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.

இந்த குரலில் தாமரையிலாள் என்று போற்றப்படுவது யார் என்று தெரிகிறதா? தாமரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவியையே இந்த குறள் குறிக்கிறது. ஸ்ரீதேவி எந்த மத கடவுள் என்று அறிவோம் அல்லவா?

இது போன்று பல திருக்குறளில் இந்து மத நம்பிக்கையை வலியுறுத்தியுள்ள நூல் தான் திருக்குறள்.

நான் ஒருபோதும் திருக்குறள் இந்து மதத்திற்கே சொந்தம் என்று கூறவில்லை. ஆனால், என்று ஒருவர் தீய நோக்கதோடு திருக்குறள் இந்து சமயம் சார்ந்ததில்லை என்று பொய் கூற்றை பரப்ப முயலுகிறார்களோ அப்போது அதை பொய் என்று நிரூபிப்பது நம் கடமையல்லவா?

எனவே தான் எந்த பதிவு.

இனியும் திருக்குறள் இந்து மத நம்பிக்கையை பற்றி கூறவில்லை என்று யாரும் கூறினால், மேலே கூறியவற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கவும்.

உரைப்பீர்கள் என்ற நம்பிக்கையில்

மகேஷ்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard