New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒளவையாரின் அகமும் புறமும் -- பா.இரேவதி


Guru

Status: Offline
Posts: 24625
Date:
ஒளவையாரின் அகமும் புறமும் -- பா.இரேவதி
Permalink  
 


ஒளவையாரின் அகமும் புறமும்

E-mailPrintPDF

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒளவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். சங்க காலம், நாயன்மார்காலம், கம்பர்காலம், இக்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. சங்க கால ஒளவையார் இலக்கியப் புலமை, சமயோகித அறிவுமிக்கவர்களுள் அதியமான் அவைக்களப் புலவர்களுள் நட்பாற்றலும், தன்முனைப்பும், பேரன்பும் கொண்டவர். இவர் இன்தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமது பாடல்கள் மூலம் அருந்தொண்டாற்றியவர். பெண்பாற் புலவர்களுள் முதன்மையானவர். தமிழகத்தின் முதல் பெண் தூதுவர் - கிரேக்கப் பெண்பாற்புலவர் சாப்போவுடன் ஒப்பிடத்தக்கவர்.

ஒளவையார் சங்க இலக்கியத்துள் 59 பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் அகப்பாடல்கள் 26. புறப்பாடல்கள் 33. அகப்பாடல்களுள் குறுந்தொகை 15. நற்றிணை 7. அகநானூறு 4. இவற்றுள் 'நல்ல குறுந்தொகை' என்று போற்றப்படும் குறுந்தொகைப் பாடல்களுள் ஒளவையாரின் பாடல்கள் தலைவிக் கூற்றுப் பாடல்களாகவே அமைந்துள்ளன. புறப்பாடல்களுள் அதியமான் மகன் பொகுட்டெழினி குறித்தும் நாஞ்சில் வள்ளுவனைப்; பற்றி ஒரு பாடலும் மூவேந்தர்கள் பற்றி ஒரு பாடலும் பிற பாடல்கள் ஆறு என அப்பாடல்கள் அமைந்துள்ளன.

அகப்பாடல்களில்...
அகமாந்தர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தருணத்தில் உரையாடுகின்றனர். அந்த உரையாடல் தனித்தோ மற்றவர்களுடனோ அமைகிறது. இதனைத் தொல்காப்பியர் களவியலிலும் கற்பியலிலும் பொருளியலிலும் விளக்குகின்றார். அந்தவகையில் தலைவிக் கூற்று நிகழும் சூழல்கள் பலவாகும். குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல்களில் தலைவிக் கூற்றுப் பாடல்கள் இங்குக் களமாக்கப்படுகிறது. குறுந்தொகையின் 15 பாடல்களை 4 வகைப்படுத்தலாம். அவை,

* பிரிவுத் துயரால் வருந்தும் தலைவிக் கூற்று
* தலைவி தன் நெஞ்சுக்கு உரைத்தல்
* தலைவியின் இரங்கல் கூற்று
* ஆற்றியிருக்கும் தலைவியின் கூற்று

சான்றாக...
பிரிவுத் துயரால் வருந்தும் தலைவிக் கூற்றாக மூன்று பாடல்கள் (28,39,43) உள்ளன. தலைவனைப் பிரிந்த தலைவி 'தன் துன்பம் அறியாமல் ஊரார் உறங்குகின்றனரே' என்று வருந்துகின்றாள். தன் துயர நிலையை அறிவிப்பதற்காக 'முட்டுவேனோ? தாக்குவேனோ? ஆ, ஒல் என ஒலியெழுப்பிக் கூப்பிடுவேனோ? எதைச் செய்வேன் என்று அறியேன்’ என்று கூறுகிறாள். இவ்வாறு தலைவி பிரிவாற்றாமையால் புலம்புவதைத் தொல்காப்பியர்,

'கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் ஊர்க்கே
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்'   (தொல்.கற்பு-145)

என்ற கூற்று முறையில் அடக்குவார். தலைவனைப் பிரிந்த தலைவி பிரிவாற்றாமல் புலம்புவதாய் அமைந்த பாடல், 

'முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன், யானும்ளூ ஓர் பெற்றி மேலிட்டு
ஆ அ! ஒல், எனக் கூவுவேன் கொல்? 
அலமரல் அசைவளீ அவைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே' (குறுந்.பா-28)

இப்பாடலில் தலைவி தலைவனைப் பிரிந்த துயரின் எல்லை உணர்ந்தவளாய், பிரிவுத் துயர் நீக்கும் வழி அறியாதவளாய்த் தவித்துப் புலம்புகிறாள். தலைவியின் இரங்கல் கூற்றில் தலைவனைப் பிரிந்த தலைவி கார்கால வரவினைக் கண்டு வருந்துபவளாய்க் காட்சியளிக்கிறாள். 'தலைவன் தன்னை மறந்தவன் ஆயினான்' என்று கருதுகிறாள்.

'உள்ளீன் உள்ளம் வேமே உள்ளா 
திருப்பினெம் அளவைத்தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே' (குறுந்.பா-102)

காதலரை நினைத்தால், அவர் பிரிவு என்னும் தீயினால் நினைக்கின்ற என் மனம் வேகா நிற்கும். காமநோய் எம்மைச் சாகும்படி வருந்தச் செய்து, அது வானத்திலும் வந்து வருத்தத்தக்கது என்கிறாள். மேலும், இத்தகு வேதனையைத் தந்த தலைவன் சான்றோன் அல்லர் என்று பழிக்கிறாள்.

புறப்பாடல்களில்...
ஒளவையார் தனது அகப்பாடலில் தலைவியின் உள்ளப்போக்கைப் பறைசாற்றுவது போல, தனது புறப்பாடலில் அறக்கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். 'அறம'; என்பதற்குப் பல நூல்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தாலும் கூட, ஒளவையாரின் பாடல்கள் சில கருத்துக்களைப் பகர்கின்றது. ஒளவையாரின் அறக்கருத்துக்களை 6 பிரிவுக்குள் அடக்கலாம். அவை,

* ஒழுக்கம் விழுப்பம் தரும்                 
* நட்பறம்
* உயிர்க்கொடை
* ஈகையறம்
* நாஞ்சில் வள்ளுவனின் கொடையறம்
* பகுத்துண்ணல் 

சான்றாக...
ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பதற்கு ஒளவையாரின் 

'நாடா கொன்றோ காடா கொன்றோ! அவலா கொன்றோ
மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர்! அவ்வழி 
நல்லை வாழிய நிலனே'   (புறம்.187)

என்னும் பாடலைக் கூறலாம். 'நிலம்' என்பது மக்கள் இணைந்து வாழும் இடமாகும். நிலத்தின் தன்மை அதில் வாழக்கூடிய மக்களின் நிலையைப் பொறுத்தே அமையும். ஆடவரது ஒழுக்கமே அனைத்திற்கும் அடிப்படை என்கிறார். 'இயற்கையாலும் பெண்ணாலும் சமூகத்திற்கு நன்மையே கிடைக்கும் ஒரு சமூகம் கெடுவது ஆணாலேயே என ஆடவரையே ஒளவையார் நயமாக இடித்துப் பேசுவதாகத் தமிழண்ணல் புதுவிளக்கம் தந்துள்ளார்' (இரா.காஞ்சனா, பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண்ணிய மொழியும். ப.136)

ஈகையறம் என்பது 'செல்வத்துப் பயனே ஈதல்' ( புறம்.189) 'ஈதல் இசைப்பட வாழ்தல்' (குறள்.231) என்று பேசப்படுகிறது. இரவலர்கள், புலவர்கள் மட்டுமின்றிப் பாணர், கூத்தர், பொருநர், விறலியர் போன்ற ஏனைய கலைஞர்களுக்கும் அவர்களது வரிசையறிந்து பொன், பொருள், குதிரைகள், யானைகள் மட்டுமின்றித் தனது ஆட்சிக்குட்பட்ட ஊர்களையும் பரிசாகக் கொடுத்தனர். சங்க கால மன்னர்கள் தன்னை நாடி வந்தோர்க்கு இல்லையெனக் கூறாது அள்ளித்தரும் வள்ளலாம் அதியமானை,

'அலத்தற் காலையாயினும்
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தானே'   (புறம்.103:10-11) எனவும் 

'பரிசிலர்க்கு அடையா வாயிலோனே' (புறம்.206-5) எனவும் சுட்டுகிறார். 

பரிசில்க்கு எப்போதும் உதவும் ஏழைப் பங்காளன் என்பதை  அவனது அரண்மனை வாயில் எப்போதும் திறந்தே திறக்கும் என்பதன் மூலம் குறிப்பாகயச் சுட்டியுள்ளார். பரிசில்க்கு இனியவனாகவும் அறிவற்றோர்க்கும் மகிழ்வதற்குத் துணையாகவும் அதியமான் விளங்குவதை,

'உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
கடவர் மீதும் இரப்போர்க்கீயும்
மடவர் மகிழ்துணை, நெடுமான் அஞ்சு'     (புறம்.315:1-3)

எனக் கூறியுள்ளார். 

பகுத்துண்ணல் என்பதை ஒளவையார் அதியமான் பாடல்களிலேயே பெரும்பாலும் பாடியுள்ளார். 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்' பண்பாளன் அதியமான் என்பதை,
'சிறியகட் பெறினே, எமக்கு ஈயும் மன்னே! பெரியகட் பெறினே
யாம்பாட தான் மகிழ்ந்துண்;ணும் மன்னே!     (புறம்.235:1-3) 

எனப் பாராட்டியுள்ளார். தம்மிடம் உள்ளதைப் பிறருக்குப் பகிர்ந்தளித்து வாழத் தயங்கும் மனிதர்கள் மத்தியில் அதியமான் உணவின் அளவு எப்படி இருப்பினும் அதைப் பகுத்துண்டு வாழ்ந்து வந்தான். மேலும், பிறருக்கு உதவாத செல்வம் பகன்றை மலர் சூடப்பெறாது இருத்தல் போலப் பயனற்றதாகும் என்பதை,

'பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர்தவப் பலவே' (புறம்.235)

என்னும் வரிகளில் சுட்டுகிறார்.

நிறைவாக...
ஒளவையாரின் அகப்பாடல்களில் தலைவிக் கூற்றுப் பாடல்கள் தலைவியின் பிரிவாற்றாமையையே பெரிதும் விளக்கி நிற்கின்றன. தலைவிக் கூற்றுப் பாடலாகத் திகழ்ந்த 8 பாடல்களும் தலைவனைப் பிரிந்து வருந்துவதாயும் புலம்புவதாயும் ஆற்றியிருப்பதாகவும் செய்வதறியாது வருந்துவதாயும் அமைகின்றன.

தலைவியின் கூற்றுகள் மூலம் தலைவன் மீது தலைவி கொண்டுள்ள மாறாக் காதலை ஒளவையார் தலைவியாகவே நின்று பதிவு செய்துள்ளார். புறப்பாடல்களில் ஒளவையார் 'வாழ்வியல் அறம்' முதல் 'விழுப்புண்படுதல்' ஈறாகப் பல்வேறு அறங்களைக் காணமுடிகிறது. அறங்கூறும் போக்கில் புலவரின் தன்முனைப்பு, தன்மானம், தன்னம்பிக்கை முதலாயின புலப்படுகின்றன. நட்பை எண்ணி தூதுவராய் சென்று அதியமான், தொண்டைமான் இளந்திரையன் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற இருந்த போரைத்; தடுத்து நிறுத்திய அருளுள்ளம் ஆகியன தெளிவாகின்றன. மன்னர்களின் மாண்பினை எடுத்துரைக்கும்போது, ஒளவையார் ஓர் அரசியல் அறிவுமிக்க அமைச்சராகவே திகழ்கிறார். 

sarathi.brev@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard