New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவர் உணர்த்தும் கள் உண்ணாமை - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
வள்ளுவர் உணர்த்தும் கள் உண்ணாமை - சு.ஜெனிபர்
Permalink  
 


 வள்ளுவர் உணர்த்தும் கள் உண்ணாமை

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமா பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் கள்குடிப்பதால் அதாவது மதுஅருந்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கள் உண்ணாமை
கள் உண்ணாமை என்ற அதிகாரம் திருக்குறளில் 93 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.ஒழுக்கமும்,உணர்வும் அழித்தற்கண் பரத்தையர் உறவுடன் ஒத்த தீங்கினை உடையது.இப்பழக்கம்,சங்ககாலத் தமிழரிடம் மிகுதியாகப் பரவியிருந்தது.சங்க காலத்தை அடுத்துத் தமிழ் அரசரும்,மக்களும் பகைவரிடம் தோற்றுப் போனமைக்கு இப்பழக்கம் ஒரு பெரும் காரணம் ஆகும்.ஏனெனில்,மது குடிக்கும் பழக்கம் உடையவர், தம் அறிவை இழந்து விடுவர்.உடல் நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.உள்ள நலமும் கெடுகிறது.அவர்,வைத்திருக்கும் பொருள் நலனும் கெடுகிறது. அனைத்தும் கெடுவதால் அவரை நம்பி இருக்கும் குடும்பமும் கெடுகிறது.இதனைச் சமூக மேதையாகிய திருவள்ளுவரும் கண்டறிந்து தம் சமகால மக்களிடம் பரவியிருக்கும் ஒழுக்கத்தைக் கண்டித்துக் கூறியுள்ளார்.குடித்தல்,அருந்துதல் முதலாய சொற்களுக்கு மாற்றாக அளவறிந்து குடித்தலைச் சுட்டுதற்காக ‘உண்ணாமை’என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். மனிதனை மிருகமாக்கி ஏழை எளியவரைப் பெரிதும் பாதிப்பது மதுவாகும்.பழங்காலம் முதலே சமயவாதிகளும்,சான்றோர்களும் அதைக் கண்டித்தே வருகின்றனர்.இக்காலக் கவிஞர்களும் அதனைத் தொடர்கின்றனர்.மதுவிலக்கு நடைமுறையில் இருந்தால்

கூலியைத் தொலைப்பதும்,தாலியை இழப்பதும்
கூசிட ஏசில் பேசுவதும்
சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும்
சந்தி சிரிப்பதும் இனியில்லை (நாமக்கல் கவிஞர் பாடல்கள்,ப.170)

என்ற நிலை ஏற்படும்.

புகழ் கெடும்
இரவு பகல் பாராமல் எந்த நேரத்திலும் மது அருந்துபவர்கள் எக்காலத்திலும் பிறரால் மதிக்கப்படமாட்டார்கள்.இதனை,

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டு ஒழுகுவார்    (921)

என்ற குறள் சுட்டுகிறது.ஆகையால் சமுதாயத்தில் மக்கள் புகழ் பெற வாழ வேண்டி இருந்தால் கள் குடிப்பதை விட்டு விட வேண்டும் என்கிறார் வள்ளுவர் பெருந்தகை.

சான்றோரால் மதிக்கப்படமாட்டார்;
ஒருவர் சான்றோரால் மதிக்கப்பட வேண்டும் என்றால் கள் குடிக்கக் கூடாது என்பதை வள்ளுவர் பின்வரும் குறளின் வழி தெளிவுற கூறுகிறார்.இதனை,

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்      (922)

என்ற குறளின் வழி அறியமுடிகிறது.இக்கால கட்டத்திலும் மதுபானக் கடைகளில் மது அருந்தி விட்டு மயங்கிய நிலையில் சாலையோரங்களில் படுத்து இருக்கும் நிலை காணபடுகிறது.இந்நிலை சான்றோர்கள் இருக்கும் நாட்டில் வருந்த தக்க ஒன்றாகும்.

தாய் வெறுப்பாள்
தாய் என்ற சொல்லிற்கு செந்தமிழ் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி அருகு போல் தழைத்து ஆல் போல் வேரூன்றி,பல்கிப் பெருகி வளவாழ்வு வாழ்வதற்கு மூலமாயுள்ள முதல்நிதி (396)என்று பொருள் தருகிறது.

எப்பிழை செய்தாலும் மகனைப் பொறுத்துக் கொள்ளும் தாய் கூட கள் குடிப்பவனை வெறுக்கும் இயல்புடையவள் ஆகிறாள்.இதனை,

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி       (923)

என்ற குறள் உணர்த்துகிறது.

நாணம் கொண்ட பெண்  வெறுப்பாள்
நாணம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி அச்சம், அடக்கம், மதிப்பு, வெட்கம், பயப்பக்தி, மானம், தணிகை என பொருள் உரைக்கிறது.
பெண்களுக்கு இருக்க வேண்டிய இயல்புகளில் ஒன்று நாணம் ஆகும்.இதனை தொல்காப்பியர்,

அச்சமும் நாணம் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப     (தொல்.1045)

என்ற நூற்பாவின் வழி தெளிவுபடுத்தியுள்ளார்.

நாணம் கொண்ட பெண் கள் குடிப்பவனின் முகத்தை பார்க்கமாட்டாள் இதனை,

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு   (924)

என்ற குறளின் வழி வள்ளுவர் குறிப்பிடுகிறார். 

அறிவு இல்லாத மடத்தனம்
அறிவை மயக்கும் கள்ளை விலைக்கொடுத்து வாங்கும் செயல் அறிவு இல்லாத மடத்தனம் என்கிறார் இதனை,

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்        (925)

என்ற குறளின் வழி வள்ளுவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

பிணத்திற்கு சமம் 
கள் குடிப்பவர் செத்ததர்க்கு சமம் என்று கருதப்படுகின்றனர்.இதனை,

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்  எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்        (926)

என்ற குறளின் வழி அறியலாம்.ஒருவரை சாவதற்கு வழி வகுப்பது கள் என்ற செய்தி புலப்படுகிறது. 

ஊரார் நகைப்பர்
வீட்டில் அல்லது வெளியே குடிக்கும் குடியர்கள் மானம் இழந்து ஊராரின் நகைப்பிற்குஆளாகுவர் என்பதை,

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்        (927)

மேற்கூறப்பட்ட குறளின் வழி அறியமுடிகிறது.

மது அருந்துவதை கைவிடுக

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்   (928)

மேற்கூறப்பட்ட குறளில்  மறைத்து வைக்கும் செய்திகள் மது அருந்துவதன் மூலம் வெளிப்படும்.ஆகையால் மது அருந்துவதைக் கைவிடு என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.இக்கால கட்டத்தில் வாழும் மனிதர்கள் குடித்திருப்பதை பார்த்தாலே இக்கருத்து நன்கு விளங்கும். விளங்கும்.

மது அருந்துவனை திருத்த முடியாது
குடிபோதைக்கு அடிமையானவர்களை திருத்த முடியாது எப்படி என்றால் நீருள் கொளுத்திய தீப்பந்தம் செல்லாதோ அதுப்போல குடித்தவன் மனத்துள் காரணம் செல்லாது என்கிறார் வள்ளுவர் இதனை,

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று     (929)    

என்ற குறள் சுட்டுகிறது. விவிலிய நீதிமொழிகள் மதுவையும், மது அருந்துபவனையும் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

திராட்சை இரசம் ஏளனம் செய்யும் அரக்கன்
போதை தரும் குடி அமளிசெய்யும் கலகக்காரன்
அவற்றில் நாட்டங்கொள்பவன் மடையனே     (நீதி.மொ.20:1)


குடிகாரரோடு சேராதே                   (நீதி.மொ.23:20)

கள் குடிப்பவன் பேச்சை கேட்க கூடாது அப்படி கேட்டால் துன்பத்திற்கு வழிவகுக்கும் என்பதை,

கள்உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா     (இன்.33:1)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

திருந்த வேண்டும்
கள்ளுண்ணும் பழக்கமுள்ளவர்கள்,கள்ளை உண்ணாதிருக்கிற சமயத்தில் கள்ளுண்டு போதையினால் தள்ளாடுகிற வேறொருவனைப் பார்க்கிற போதாவது கள்ளுண்பதால் உண்டாகும் தடுமாற்றதை எண்ணி பார்க்க மாட்டானா என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.இதனை

கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு     (930)

என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.பழமொழி நானூறும் குடிகாரனைப் பற்றி குறிப்பிடுகிறது.இதனை,

மாணாப் பகைவரை மாறு ஒறுக்கலாதார்
பேணாது உரைக்கும் உரைகேட்டு உவந்துபோல்
ஊண் ஆர்ந்து, உதவுவது ஒன்று இல் எனினும்,கள்ளினைக்
காணாக் களிக்கும் களி   (பா.256)

என்ற பாடலால் அறியலாம்.இக்காலத்தில் இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் மது அருந்தும் நிலை பல்கி பெருகி உள்ளது.விழிப்புணர்வு மையம் அதிகமாக வைத்து இந்நிலையில் உள்ளவர்களை திருத்த வழிவகை செய்ய வேண்டும்.

முடிவுரை
1.முதல் பாட்டில் கள்ளுண்டலால் புகழ் போகும் என்பது கூறப்பட்டது.
2.அடுத்த மூன்று பாட்டில் புகழ் இழக்க காரணம் நவிலப்பட்டது.
3.கள் குடிப்பதால் தாய் வெறுப்பாள் என்பது சொல்லப்பட்டது.
4.நாணம் உடைய பெண் பார்க்க மாட்டாள் என்ற கருத்து பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
5.கள் உண்பவர் பிணத்திற்கு சமம் என்றும், ஊரார் நகைப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.
6.மது அருந்துவதை கைவிடுக என்ற கருத்து இடம்பெறுகிறது.
7.மது அருந்துபவர் திருந்த வேண்டும் என்பது சொல்லப்பட்டது.

துணை நூற்பட்டியல்
1.பாலசுந்தரம் ,ச திருக்குறள் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2000
2இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)    பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
5அகராதிகள் செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி கௌரா தமிழ் அகராதி

jenifersundararajan@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard