New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அற இலக்கியம் நாற்பது உணர்த்தும் தனிமனித நட்பு நெறிகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24459
Date:
அற இலக்கியம் நாற்பது உணர்த்தும் தனிமனித நட்பு நெறிகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


அற இலக்கியம் நாற்பது உணர்த்தும் தனிமனித நட்பு நெறிகள்

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை 
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அறநூல் பதினொன்று, அகநூல் ஆறு, புறநூல் ஒன்று என்ற முறையில்அமைந்துள்ளன.இந்நூல்கள் பதினொன்றில் நாற்பது என்று முடியும் இரண்டு நூல்களாக இனியவை நாற்பதும், இன்னா நாற்பதும் விளங்குகின்றன.இந்நூல்களின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார், கபிலர் ஆவார். இவர்களின் கடவுள் வாழ்த்து செய்யுள் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரைப் பாடியிருப்பதால் சமயப்பொது நோக்குடையவர் என்பதை அறியமுடிகிறது.இந்நூல்களில் காணப்படும் தனிமனித நட்பு நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தனிமனிதன் என்பதன் விளக்கம்
சென்னைப் பல்கலை ஆங்கில அகராதி தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொது நோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு,உயர் நிலையாளரின் பின்னணிக்குழு,வழித்துணைக்குழு,மெய்க்காவலர்,பீடிகைநீங்கியபத்திரம்,பெரும்பான்மையளவு, உருவம்அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தனிமனிதன் என்பதற்கு one among the person> மக்களில் ஒருவர், தனியன், தனியொருவன், துணையிலி, ஆதரவற்றவன் என்று பொருள் விளக்கம் தருகிறது.

நட்பு என்பதன் விளக்கம்
நட்பு என்பதற்கு அகராதிகள் பல சொற்களை வகைப்படுத்திக் கூறியுள்ளன. நண்பன்-தோழன்,கணவன் என்று கழகத் தமிழ் அகராதி (ப.592) சுட்டுகின்றது.இதன் மூலம் கணவனும் தன் மனைவியிடம் நண்பனாக இருக்கிறான் என்பது தெளிவாகிறது.

தமிழ் - தமிழ் அகர முதலி நட்பு என்பதற்கு சிநேகம் உறவு, சுற்றம்,நண்பன், யாழின் நாலாம் நரம்பு, காதல், அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர், கையூட்டு, மாற்றரசரோடு நட்புச்செய்கை என்று விளக்கம் அளிக்கிறது.

நட்பு என்னும் சொல்லிற்கு உறவு,சிநேகம், சுற்றம், நேசம் என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகிறது.

நட்பின் சிறப்புகளும், அறிஞர் தம் கருத்துக்களும்
மனிதனுக்கு நட்பு என்பது ஒரு வலிமையாகவும்,உற்ற துணையாகவும் அமைந்து வாழ்வினைச் சிறக்க செய்யும். இத்தகைய நட்பினை வள்ளுவர் நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு, கூடாநட்பு என்ற நான்கு அதிகாரங்களில் கூறியிருக்கிறார்.நட்புக்கொள்ளுவது ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டன்று நெறிகடந்து செல்லும் போது இடித்துரைப்பது நட்பு என்று குறிப்பிடுகிறார்.இதனை

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு                   (784)

என்ற குறளின் வழி அறியமுடிகிறது.

நட்பைப் பற்றி புத்தர் அவர்கள் அறிவாளியாகவும், ஒத்துப்பழகக் கூடியவனாகவும்,அடக்கத்தோடு நல்லொழுக்கமுடையவனாயும் ஒரு தோழன் கிடைப்பானாகில் எல்லா இடையூகளையும் கடந்து,அவனுடன் கருத்தோடும் மகிழ்ச்சியோடும் நட்புக் கொள் என்கிறார். (வாழ்வியல் சிந்தனைகள்,ப.27)
மேலும் நட்பைப் பற்றி ஷெல்லி அவர்கள் நமக்குத் தாய்தந்தையர் வாய்ப்பது விதி. நண்பர்கள் வாய்ப்பதோ மதி என்கிறார். (வாழ்வியல் சிந்தனைகள்,ப.28)

மேலும் திருவள்ளுவருக்கு இணையாகப் போற்றப்படும் கன்னட இலக்கியக் கவிஞர் சர்வக்ஞர் கீழோருடன் நட்புக் கொள்ளக் கூடாது என்கிறார். இதனை,

ஆட்டருகே இருப்பதும் கேடு கிறுக்கனின் நட்பும் கேடு
ஓட்டியுறவாடும் காதலர்க்கு சினமழுகைக்கேடு
மூடரின் நட்பும் கேடு


என்ற கவிதை வரிகளால் அறியமுடிகிறது.

இனியவை நாற்பதில் நட்பு
இனியவை நாற்பதில் நட்புப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.நட்பு பற்றி ஐந்து பாடல்களில் (3,16,17,19,34) ஆறு கருத்துக்களாக சொல்லப்பட்டுள்ளன.

நல்லவர்களுடன் நட்புக் கொள்
தனிமனித உறவில் ஒரு கூறாக விளங்குவது நட்பு. ஒருவன் நட்பு கொள்ளும் பொழுது நல்லவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டும் என்று இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன. இக்கருத்தையே இனியவை நாற்பதும் கூறுகிறது. இதனை,

…….……………………இனிதே
தேரின் கோள் நட்புத் திசைக்கு              (இனி.பா.3;;:3-4)


என்ற பாடலடிகள் உணர்த்துகிறது.

அறிவுடையாருடன் நட்பு கொள்
அறிவுடையோருடன் கொள்ளும் நட்பு தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும். இவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவு எப்படி வளர்ந்து கொண்டே செல்கின்றதோ அதனைப் போன்று நாள்தோறும் வளரக்கூடியது.முழு நிலவு எவ்வாறு தேய்ந்து கொண்டே செல்கின்றதோ அதனைப் போன்றது அறிவில்லாதவருடன் கொள்ளும் நட்பு பற்றி திருக்குறளும் (782) நாலடியாரும் (125) (138) கூறியுள்ளன. இனியவை நாற்பதும் அறிவுடையாருடன் நட்பு கொள் என்கிறது.இதனை,

மிக்காரைச் சேர்தல் மிக மாணமுன் இனிதே       (இனி.பா.16;:2)

என்ற பாடலடி குறிப்பிடுகிறது.

நண்பர்களுக்கு நற்செயல் செய்
வள்ளுவர் நண்பர்களுக்கு சலிப்பின்ற நற்செயலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்கிறார்.இதனை

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை            (789)


என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.

பகைவருடன் நட்புக் கொள்ளாமை

பகைவருடன் அச்சமின்றி நட்பு கொள்ளாமல் இருப்பது சிறந்தது ஆகும்.இதனை

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்                (824)


என்ற குறளின் வழி வள்ளுவர் விளக்கியுள்ளார்.

மேலும் முதுமொழிக்காஞ்சி என்ற நூலும் பகைவருடன் மீறி நட்புக் கொண்டால் வறுமையை உண்டாக்கும் என்கிறது இதனை,

செற்று உடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்தன்று   
(முது.கா..83)


என்ற பாடலடி மூலம் புலப்படுகிறது.    

இக்கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பூதஞ்சேந்தனார் குறிப்பிட்டுள்ளது இங்கு நோக்கதக்கது.

ஓட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே   
(இனி.பா.17:2) 


என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

பிற்கால நீதி இலக்கியங்களில் ஒன்றான ஆத்திசூடியும் பகைவரை நம்பக்கூடாது என்ற  கருத்தை கூறுகின்றன. இதனை,

ஓன்னாரைத் தேறல்                         (ஆத்தி;.108)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

நண்பர்களிடம் புறங்கூறாமை
புறங்கூறுதல் என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசுதல் back of the palm என்று பொருள் விளக்கம் தருகிறது. (ப.753)

நண்பராக இருக்கும் ஒருவரைப் பற்றி பிறரிடம் புறங்கூறாமல் இருப்பது சிறந்தது ஆகும். இதனை,

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ    
மன்றில் பழிப்பார் தொடர்பு                    (820)


என்ற குறளின் வழி விளக்கியுள்ளார். இக்கருத்தையே திரிகடுகமும் குறிப்பிடுகிறது.இதனை,

குறளையும் நட்பு அளவு தோன்றும்             (திரி.37:1)

என்ற பாடலடி மூலம் அறியலாம். இக்கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக பூதஞ்சேந்தனாரும் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே        (இனி.பா.19;:1) 

என்ற பாடலடி மூலம் உணரமுடிகிறது.

கீழ்மக்களுடன் நட்புக் கொள்ளாமை
கீழான குணநலன் உடையவருடன் நட்பு கொள்ளுவது சிறந்த நெறி ஆகாது. கீழோர் நட்பு நிறைமதி பின் குறைவது போல நாள்தோறும் குறையுந் தன்மையுடையது என்கிறாh வள்ளுவர் இதனை,

நிரைந்த நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு                         (குறள்.782)

என்ற குறளின் வழி புலப்படுகிறது.

இக்கருத்திற்கு ஏற்ப சமணமுனிவர்கள் கீழோர் நட்பு வானத்தில் தவழும் முழுமதி போல நாள்தோறும் சிறிது சிறிதாகத் தானே தேய்ந்து குறைந்து ஒழிந்து விடும் எனவே கீழ்மக்களின் நட்பை எல்லோரும் விரும்ப மாட்டார்கள் என்பதை,

...……………………………வரிசையால்
வானூர் மதி யம் போல வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு                        (125)

என்ற நாலடியார் பாடலடிகளில் குறிப்பிட்டுள்ளனர்.மேலே கூறப்பட்ட இரண்டு கருத்துக்களும் கீழ்மக்களுடன் நட்பு கொள்ளாமல் இருப்பது சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது. இக்கருத்தையே இனியவை நாற்பதும் கூறுகிறது.இதனை,

புல்லிக் கொளினும் பொருளல்லார் தம்கேண்மை
கொள்ளா விடுதல் இனிது                    (இனி.பா.34:3-4)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றது.

இன்னா நாற்பதில் நட்பு
இன்னா நாற்பதில் நட்புக்குறித்த செய்திகள் ஆறு பாடல்களில் (8,11,18,24,25,36) ஏழுக் கருத்துக்களாக சொல்லப்பட்டுள்ளன.

 

அகம் மலரும் படி நட்பு செய்
முகம் மலரும் படியாக நட்புச் செய்வது நட்பு அன்று: நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.இதனை வள்ளுவர்,

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு                       (786)


என்ற குறளின் வழி குறிப்பிட்டுள்ளார்.இக்கருத்தையே இன்னா நாற்பதும் கூறுகிறது.இதனை,

நகையாய நண்பினார் நாரின்மை இன்னா        (இன்.பா.8:2)

என்ற பாடலடி மூலம் புலப்படுகிறது.

இரக்கம் இல்லாதவருடன் நட்புக் கொள்ளாமை
சான்றாண்மை பண்பை வளர்க்கும் குணங்களில் ஒன்று இரக்கம் ஆகும். (குறள்.983) இத்தகைய பண்பு நட்பில் இருப்பது சிறந்தது என்பதை மதுரைக் கூடலூர் கிழார்,

கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது       
(முது.கா.47)


என்ற பாடலடியில் விளக்கியுள்ளார்..இக்கருத்தையே இன்னா நாற்பதும் கூறுகிறது.இதனை,

………………………………….இன்னா
நயமில் மனத்தவர் நட்பு                     (இன்.பா.8;:2)


என்ற பாடலடிகள் சுட்டியுள்ளன.

சிற்றினத்தாருடன் நட்புக் கொள்ளாமை
அறிவில்லாத சிற்றினத்தாருடன் கொள்ளும் உறவு தீது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.இதனை,

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
எதின்மை கோடி உறும்                     (818)


என்ற குறளின் மூலம் அறியமுடிகிறது.இக்கருத்தையே இன்னா நாற்பதும் குறிப்பிடுகிறது.இதனை,

…………………………இன்னா
கடனுடையார் காணப் புகல்              (இன்.பா.11 :3-4)


என்ற பாடலடிகள் புலப்படுகிறது.

மனநிறைவு இல்லாதருடன் நட்புக் கொள்ளாமை
நட்பினை ஆராய்ந்து பார்த்து குற்றமற்றவர்களுடைய நட்பை விட்டுவிடாமல் அணைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மனநிறைவு ஏற்படும் என்கிறார் வள்ளுவர் இதனை,

மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈந்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு                 (800)

என்ற குறளின் மூலம் விளக்கியுள்ளார்.

இக்கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக கபிலர் மனநிறைவு இல்லாதவருடன் தொடர் துன்பத்தைத் தரும் என்பதை,

…………………………….ஆங்கின்னா
மனம் வறியாளர் தொடர்பு                  (இன்.பா.18:3-4)


என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

செருக்குடையாருடன் நட்பு கொள்ளாமை
தான் என்னும் அகந்தையுடையனோடு நட்புக் கொண்டிருப்பது துன்பம் ஆகும்.இதனை,

……………………………….ஆங்கின்னா
யாமென் பவரொடு நட்பு                   (இன்.பா.24:3-4)


என்ற பாடலடிகளால் அறியலாம்.

கற்றறிந்த சான்றோர்களிடம் நட்புக்கொள்
கல்வியறிவு உடையோரிடம் நட்புக் கொள்ள வேண்டும். மேலும் கற்றறிந்த பெரியோர்களைக் கைவிட்டு வாழ்பவன் நல்லுலகம் சேரமாட்டான் என்று நல்லாதனார் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும்………..
………………………………………..
……………………………இம்மூவர்
நல்லுகம் சேரா தவர்                      (திரி.99:1:4)என்ற பாடலடிகளால் உணரமுடிகிறது. இக்கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக கபிலர்,

பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னா      (இன்.பா.26:1)

என்ற பாடலடிகள் மூலம் கல்வி கேள்விகளில் மிக்க சான்றோர்களிடம் கொண்ட நட்பினைக் கைவிடுதல் துன்பத்தை தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களின் துன்பத்தை போக்குதல்
ஒருவருக்கு ஏற்படும் துன்பத்தில் உடனிருந்து அத்துன்பத்தைப் போக்குவதுப் போக்குவது நட்பு என்கிறார் வள்ளுவர்.இதனை,

அழிவின் அவந்தி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு                    (787)


என்ற குறளின் வழி குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தையே இன்னா நாற்பதும் குறிப்பிடுகிறது.இதனை,

நட்டார் இடுக்கண் காண்டல் நனியின்னா          
(இன்.பா.25:1)


என்ற பாடலடி உணர்த்துகின்றது.

வறுமை காலத்தில் நீங்காமலிருப்பதே நட்பு
துன்பக் காலத்தில் உதவாது போனவர்களுடைய நட்பை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது ஆகும். இதனை

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்கண் ஆற்றறுப்பார் நட்பு              (789)

என்ற குறளின் மூலம் விளக்கியுள்ளார்.இதனையே இன்னா நாற்பதும் கூறுகிறது. இதனை,

………………………………இன்னா
கெடும் இடம் கைவிடுவார் நட்பு            (இன்.பா.36:3-4
)

என்ற பாடலடிகள் உணர்த்துகிறது. இக்கருத்துக்களின் மூலம் துன்ப காலத்தில் நட்பை நீங்காமல் இருப்பது சிறந்தது என்பது புலப்படுகிறது.

முடிவுரை
தனிமனித உறவில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பது நட்பு. இத்தகைய நட்பு கொள்ளும் பாங்கு நல்லவர்களுடன்,அறிவுடையோருடன், கற்றறிந்த சான்றோர்களுடன், இருக்க வேண்டும் என்றும் மனநிறைவு இல்லாதவர், செருக்குடையவர்,கீழ்மக்கள்,பகைவர் ஆகியோருடன் நட்புக் கொள்ளக் கூடாது என்றும் நட்பில் புறங்கூறும் செயல் இருக்க கூடாது என்றும் இந்நூல்கள் தெளிவுப்படுத்தியுள்ள செய்தியை அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)- பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1
செல்லப்பா பதிப்பகம், 
மதுரை -625001
முதற்பதிப்பு -2009

2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) - பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3
செல்லப்பா பதிப்பகம், 
மதுரை -625001
முதற்பதிப்பு -2009.

3.மணிக்கவாசகன், ஞா    சிறுபஞ்சமூலம்
உமா பதிப்பகம்
சென்னை -600017
முதற்பதிப்பு -2009

4.மாணிக்கம், அ   திருக்குறள்
தென்றல் நிலையம்
சிதம்பரம் -608001
முதற்பதிப்பு -1999

5.நாராயண வேலுப்பிள்ளை,எம்    முதுமொழிக்காஞ்சி
கலைஞன் பதிப்பகம்
சென்னை -600017
பதிப்பு -1989

6 மாணிக்க வாசகன. ஞா  நாலடியார் 
உமா பதிப்பகம்
சென்னை -600001
முதற்பதிப்பு -1993

7.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)      நீதி நூல் களஞ்சியம்
கொற்றவை வெளியீடு
சென்னை -600017
முதற்பதிப்பு -2014

8.முத்துராமன், ஆ    வாழ்வியல் சிந்தனைகள்
மணிவாசகர் பதிப்பகம்
சென்னை -600017                                             
பதிப்பு -2006

9.அகராதிகள்  கழக அகராதி
தமிழ் -தமிழ் அகர முதலி
மதுரை தமிழ் அகராதி

jenifersundararajan@gmail.com__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard