New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விழுமியத்தை தொலைத்த தமிழர்களைத் தேடி - - பெ.இசக்கிராசா


Guru

Status: Offline
Posts: 24625
Date:
விழுமியத்தை தொலைத்த தமிழர்களைத் தேடி - - பெ.இசக்கிராசா
Permalink  
 


விழுமியத்தை தொலைத்த தமிழர்களைத் தேடி

E-mailPrintPDF

- பெ.இசக்கிராசா, முனைவர்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்தொடக்கமாக
பண்டைய தமிழனின் முற்போக்குத் தனமான தரத்தினை நாம் கண்டு கொள்ள வேண்டிய அல்லது பயணிக்கும் பாதையாக தமிழ் இலக்கியத்தினைக் காணலாம். வழக்கமாக சொல்லப்படுகின்ற மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இலக்கியங்கள் இன்றளவும் இருந்து வருகின்றன. மொழியின் இலக்கண ஒழுக்கத்தை போதித்த தொல்காப்பியம் தொடர்ந்து சங்க இலக்கிய நூல்களும், தனிப்பாடல் நூல்களும், காப்பியமான சிலம்பும், உலகம் போற்றும் வள்ளுவமும் அவை வழங்கிய வாழ்வியல் விழுமியமும் இன்னும் உயிர் கொண்டுதானிருக்கின்றன. குழந்தைப் பருவத்திலேயே ஞானத்தினை வளர்க்கும் விதமாக ஆத்திசூடி முதலான எண்ணிலடங்க அறநெறி இலக்கியங்கள் அதிகமே. அதனை எடுத்தியம்பும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது. 

விழுமியம் 
தனக்கு எது தேவையோ அதுவே தர்மம் என்று சொல்லப்படுகின்ற மனோபாவத்திற்கு வந்து விட்ட இன்றைய தமிழ் தலைமுறையினர் தங்களது மூதாதையர்களின் முற்போக்கான பாங்கினை மறந்து விட்டனர். காரணமின்றி முந்தையோர் அறக் கருத்துக்களை வழங்கியதன் தேவையை இன்றைய சூழலில் வாழ்கின்றவர்கள் தங்களது தனிமனித உள்ளத்தின் வழியாக நின்று சிந்திக்கும் பொழுது தமது முன்னோர்களின் ஒவ்வொரு பதிவும் முக்கியமான விழுமியங்கள் என்பது புலப்படவே செய்யும்.

அறத்தினூ உங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறந்தனன் ஊங்கில்லை கேடு 

என வள்ளுவம் வழங்கும் அறம் எப்பொழுதும் எல்லாத் தலைமுறைக்கும் புரிந்து கொள்ளும் விதமாகவே படைக்கப்பட்டிருக்கிறது. அறங்கள் பற்றி நாம் சிந்தனை செய்கின்ற தருணங்களில் உள்மனக்கிடக்கையில் புதைந்திருக்கும் சுயநல தர்மங்கள் உடைந்தே போகும். உள்ளமே கோயில் என்ற சொற்பதத்திற்கு மூலவிதையான ஆரம்பத் தமிழனின் இன்றைய வாரிசுகளின் பாதைகளும் பயணிக்கும் தடங்களும் எவ்வழியான அறத்தினைச் செய்து கொண்டிருக்கின்றன. இன்று கௌரமாக வாழ்ந்து  கொணடிருக்கின்றவர்கள் அறமற்ற விழுமியங்களைச் சுமந்து செல்கின்ற தோடு மட்டுமின்றி அது தான் சரியென தவறான வழித்தடங்களை பின்வருகின்ற தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாதிகள் மண்ணுயிர் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில

என நவில்கின்ற மணிமேகலையின் வரிகளை உற்று நோக்கின் மண்ணுயிர்க் கெல்லாம் உணவு, உடை, இருப்பிடம் மிகவும் அடிப்படையான ஒன்றாகும். கற்பனையாகத் தோன்றிய காரணிகளுக்குள்ளும் அர்த்தம் இல்லாமல் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளவே தோன்றுகின்றன.

சங்க இலக்கிய காலமும் அதற்கு முந்தைய இனக்குழச் சிதைவான காலமும் எவ்விதத்தில் பொற்காலத் தன்மையுடன் இருந்திருப்பின் எதற்காக இத்துணை அறச்நெறிச் சாரங்கள் என்ற அவா தோன்றாமலில்லை. நமது இலக்கியத்தின் யதார்த்தத் தன்மையையும் நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். காலப் படிநிலையில் சமயச்சிந்தனைகள் தொடங்கிய காலகட்டத்தில் அதற்கு எதிரான முற்போக்கு சிந்தனைகளும் தோன்றிவிட்டன. இன்று முற்போக்குத்தனம் என்று சொல்லக்கூடியவை யெல்லாம் அன்றைய அறவிழுமியங்கள் அன்றி வேறென்னவாக இருக்க முடியும். 

ஈதலறம் தீவினைவிட் டிட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம் பரனை நினைத்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு 

என்று ஒளவையின் பா போதிக்கும் ஈதல், தீவினை அகற்றல், காதலுக்கு முக்கியத்துவம் இவையெல்லாம் தான் உண்மையான மகிழ்வைத் தர முடியும். ஆனால் இன்று மானுடம் தேடிச் செல்லும் பாதை எதை நோக்கிச் செல்கின்றது என்று ஒவ்வொரு தனிமனித உள்ளுணர்வு கொடுக்கும் விளக்கங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் குறைந்தபட்ச இடைவெளியாவது இருக்கவே செய்யும். 

இன்றைய சூழலுக்கு அறவிழுமியங்கள் தேவை
இன்றைய மானுடத்திற்கு முந்தைய அறவியல் விழுமியங்களின் தேவைகளை உணர்த்த வேண்டிய சூழல் அவசியமாகின்றது. இந்தியப் புவிச் சூழலில் இன்று நடைபெறுகின்ற மதத்தால், இனத்தால், சாதியால் இவ்வாறாக உள்ள ஒவ்வொன்றும் மனுதர்மத்தினை மீட்டுருவாக்கம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன. 
மனுதர்மம் மானுடத்திற்காக எழுதப்படவில்லை என்று பிராமணியம் தவிர்த்து எல்லோராலும் ஏற்று கொள்ளவே ஏதுவாக இருக்கின்றது. அதற்குச் சான்றுதான் அமனுதர்மம் - தர்மத்திற்கு எதிராக செயல்படுவதை அமனுதர்மம் என்று ஒற்றைச் சொல்லிலாவது திட்டி விடுவது நலமே. குறிப்பாக சில நிழ்வுகளை விவரிப்பது நலமென்றே தோன்றுகின்றன. 

ஈர்பாலின ஈர்ப்பு
இயற்கையாகவே எதிரெதிர் பாலின கவர்ச்சி என்பது செல்களின் தூண்டலில் ஏற்படும் யதார்த்தத்தை வன்முறையினால் அழித்துச் சுகம் காண்கின்ற தருணங்களில் காதல் மலட்டுத் தன்மையை நோக்கியே பின்னுந்தல் செய்யப்படுகின்றது. சங்கம் போற்றிய காதலும் வீரமும் இன்று சாதியச் சுத்தியல் கொண்டு மனிதம் மறந்து மிருகத்தன்மை வெளிப்படுகின்ற இந்த கிறுக்குத் தனத்தை எதைக் கொண்டு அடித்து விரட்ட என்றெண்ணம் எழாமில்லை மனிதம் போற்றும் மாமேதைகளுக்கு.
மேலும் அன்பிற்கான விளக்கத்தினை இன்றைய தலைமுறையினருக்கு நாம் கற்பித்திருக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் பட்டியலிட்டுப் பாருங்கள். அன்பு என்றால் எதிர் பாலினத்தின் மீது மட்டும் தான் உண்மை என்று நினைத்து முழுவதுமாக மனதினைத் தொலைத்து விட்டு இச்சமூத்தின் ஏற்காத தன்மையின் பிரிவால் தற்கொலை செய்து கொள்ளும் எவ்வளவோ? இள உயிர்கள். மற்ற நாடுகள் எல்லாம் இந்தியாவின் இளைஞர்களைப் பார்த்து அஞ்சுகின்ற தருணங்களில், தாமே தமக்கு நஞ்சு வைத்து கொலை செய்யும் நமது சூழ்நிலை மாற்ற இங்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

இச்சமயத்தில் பாரதியின் வரிகள் எனக்கு உதவவே செய்கின்றன.

காதல் காதல் காதல்
காதல் போயின் 
சாதல் சாதல் சாதல் 

இயற்கையாக நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் எதிராக மானுடம் எப்போதோ வினையாற்ற ஆரம்பித்து விட்டது. மானுடத்திற்கு எதிராக இயற்கை திரும்புகையில் தானா தவறினைத் திருத்துகின்ற அளவிற்கு முட்டாள் தனமாய் இருப்பது. நட்புகளில் மட்டுமே தான் விழுமியங்கள் உயிர் பிழிய வேண்டுமா? ஏன் காதலிலும் உயிர் கொடுக்கலாமே அப்போது தானே அதுவும் நேர்கோட்டு விழுமியமாக இருக்க முடியும். விதைகளை கருக்கி விட்டு விருட்சத்தை எதிர்பார்த்தால் கிடைக்குமா?

கருணை
கருணை அது எந்த கடையில் கிடைக்கும் என்று எப்போதோ சிரிக்க ஆரம்பித்துவிட்டது. வழிப்போக்கர்களுக்கு திண்ணை வைத்து கட்டிய தமிழனின் தலைமுறை நாமா? இல்லை. இன்று நாய்கள் ஜாக்கிரதை என்று அச்சகத்தினை வீட்டின் ஓரத்தில் வைக்கப்படுகின்ற அளவிற்குத் தான் நம்மிடம் கருணை கடுகளவு தான் இருக்கின்றதா?
எரும்புகளுக்கும் பறவைகளுக்கும் வீட்டின் முன்னால் அரிசிக் கோலம் போட்ட தமிழன் எங்கே? எங்கே எப்போது இந்த அற விழுமியங்கள் எல்லாம் கரைந்து போயின வெறும் காகிதத்தில் மட்டுமே வைத்துக் கொண்டு என்ன செய்ய என்று தோன்றவில்லையா? 

மணிமேலை பெற்ற அட்சப் பாத்திரத்தை யார் இங்கே களவாடியது. தமிழனையும் தமிழின் அறத்தினையும் யார் வந்து பிடிங்கிப் போனார்கள்?
பிறர் உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று மழலையிடம் போதித்த வாய்கள் சாலையோரத்தில் கஞ்சியற்று கிடக்கும் மனிதர்களை கடந்து செல்கையில் வாய்பொத்திப் போகும் உண்மைகளை எங்கே போய்ச் சொல்ல?

கருணை பற்றி போதனை செய்யும் போதிகர்களே, மதத்தை காப்பாற்றும் மதிவாணர்களே கல்வியை காக்கப் புறப்பட்ட கல்வியாளர்களே, கொஞ்சம் நின்று நிதானமாக சிந்தியுங்கள் நீங்கள் இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தான் பாடுபடுகிறீர்களா என்று உங்களால் உண்மைக்கப் புறம்பாகத் தான் பதில் கூறு முடியுமே தவிர ஒரு போதும் உங்களால் உண்மைகளைச் சொல்ல முடியாது. அப்படி நீங்கள் சொல்வது எப்படி இருக்கமெனின் இதோ சான்று, பள்ளியில் மாணவர்களிடம் தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று போதித்து விட்டு வீடுகளில் அண்டையாரிடம் தீண்டாமையைக் கடைபிடிக்கத் தான் செய்வீர்கள் உங்களால் இந்த சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை நான் கூறுவது. மேற்சொன்ன கூற்றுகளின் கீழ்பால் வருபவர்களுக்கு மட்டுமே. கிட்டத்தட்ட அனைவருமே வந்துவிடுவோம் என்று தான் நினைக்கின்றேன். 

நேர்மை

நேர்மைக்கு என்ன விளக்கம் சொல்லுங்கள் என்று உங்களிடம் வெற்றுக் காகிதத்தினை நீட்டினால் உங்களது சிந்தனைகளும் பேனாவின் முனையும் என்ன யோசிக்கும். அனைவரும் நிர்வாணமாகத் திரிகின்ற போது தமிழ் இலக்கிய அறங்கள் மட்டும் ஏன் கோமணம் கட்டிக் கொண்டு வீதிகளில் தைரியமாய் வலம் வருவதை ஆமோதிக்க முடியுமா?

வருமையிலும் நேர்மை கடைபிடித்து வாழ்க்கையில் கரை சேர்ந்து கரைந்து போன எத்தனையோ முந்தையை தமிழனை மறந்துவிட்டு செழுமையிலும் நேர்மையில்லாமல் நடப்பது தான் இன்றைய ஏட்டில்லாத சட்டம் அதைத் தான் அரசியல் இன்று போதிக்கின்றது. சரி நேர்மை தேடி யாரையாவது பார்த்து விடலாமல் என்ற பயணத்தில் ஒரு தனிமனித விழுமியம் தென்பட்டது. ஆகா வென்ற மனவுந்தல் அளவற்ற மகிழ்ச்சி! இறுதியில் இவரைச் சந்திக்க அவரது உதவியாளரிடம் கையூட்டாம்? சுருங்கிச் செத்தது மனது மட்டுமல்ல? மானமாய் வாழ்ந்து போன எனது முந்தையரின் நினைவும் தான். 

முடிவாக 
விசச் செடிகளை விதைத்துக் கொண்டிருக்கிறோம் என்று அறியாமையில் இருக்கும் சமூகம் எப்போது விழித்துக் கொள்ள போகிறதோ? உலகத்திற்கு அறத்தினைப் போதித்த மாமேதைகள் தோன்றிய மண்ணில் அவர்களது எண்ணங்களை நாம் போகிற போக்கில் வெற்றுக் காகிதத்தில் மட்டுமே மதிப்பெண்களுக்காகவும், தனித மனித பாராட்டுதலுக்கும் மட்டுமே நாம் தவறாக நடந்து வழிநடப்பதோடு மட்டுமின்றி அதனை மாற்றாமல் வருகின்ற தலைமுறையினருக்கு போதித்துக் கொண்டிருக்கின்றோம். விதைப்பது விதையாக இருப்பின் அறுப்பது என்னவோ மலட்டு தனத்தை மட்டுமே. எல்லாவற்றையும் தொலைத்து நிற்கும் தமிழா உனது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல உள் மனத்தினைப் படித்தவர்கள்.  

அடிக்குறிப்புக்கள்
1.    குறள் 32.
2.    மணிமேகலை 228 – 231.
3.    ஒளவை- தனிப்பாடல் – 62.
4.    பாரதி கவிதைகள்.

esakkirasu@gmail.com

 

* கட்டுரையாளர் - - பெ.இசக்கிராசா, முனைவர்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard