New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சித்தர் பாடல்களில் பழமொழிகள் -ச.பிரியா


Guru

Status: Offline
Posts: 24625
Date:
சித்தர் பாடல்களில் பழமொழிகள் -ச.பிரியா
Permalink  
 


சித்தர் பாடல்களில் பழமொழிகள்

E-mailPrintPDF

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்!அனுபவம் வாய்ந்தவர்களின் அனுபவ மொழிகளாக வெளிவருபவை பழமொழிகள் ஆகும். முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையின்வழி கிடைத்த அனுபவத்தின் வெளிப்பாடே பழமொழிகள் என்னும் அறிவுச்சுரங்கம் ஆகும். பழமொழிக்கு சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் உண்டு. இவை மக்கள் மனதிலே ஆழமாகப் பதிந்து நற்செயலைத் தூண்டச் செய்கின்றன. பழமொழிகள் அனைத்தும் பழமையான நம்பிக்கைகளையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் மனித உணர்வுகளையும் வெளிக்காட்டும் கருவியாகும். இத்தகு பழமொழிகள் சித்தர்களின் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. சித்தர்கள் தமிழ்சமூகத்தின் அறிவாளிகளாகக் கருதப்பட்டனர். இத்தகு அறிவாளிகளின் பாடல்களில் வெளிப்பட்டுள்ள பழமொழிகளை எடுத்துரைப்பதாகவே இக்கட்டுரை அமைகிறது.

பழமொழி
தினந்தோறும் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களின் திரட்டே பழமொழியாகும். இவை அனுபவத்தின் அடிப்படையில் வெளிவருவனவாகும். தமிழ்மொழியில் பழமொழியை முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், சொலவடை, சொலவாந்திரம், ஒவகதை போன்ற பல சொற்களில் குறிக்கப்படுகின்றன. பழமொழிகுறித்து,

“ நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றும்
குறித்த பொருளை முடித்தற்கு வருஉம்
ஏது நுதலிய முதுமொழி   ” 
( தொல்.பொரு.செய். 166)

என்று தொல்காப்பிய நூற்பாவில் நுண்மை முதலான பண்புகளைக் கொண்டு சூழ்நிலைக்கேற்ப குறிப்பாகச் சொல்லி கருத்தை விளக்குவன எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

தமிழ்ப்பழமொழிகளின் சிறப்பையுணர்ந்த முன்றுரை அறையனார் நானூறு பழமொழிகளைத் தொகுத்து பழமொழி நானூறு என்ற தனி நூலையே படைத்துள்ளார்.  கிரேக்கநாட்டு அறிஞர் அரிட்டாட்டில் “ பழமொழிகள் அறிவின் வளர்ச்சியிலே பிறந்தவை சுருக்கம், தெளிவு, பொருத்தம், ஆகிய சிறப்புகளால் நாள்தோறும் இறந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் என்றும் இறவாமல் வாழ்கின்றன” என்று கூறுவதை தமிழர் நாகரிகமும் பண்பாடும்(ப.595) என்ற நூலில் அ.தட்சிணாமுர்த்தி குறிப்பிடுகிறார். மேலும் ஆக்சுபோர்டு அகராதி “வாழ்வை ஊன்றிக் கவனித்து உணர்ந்த உண்மைகளின் துணுக்குகளே பழமொழி என்று கருத்துரைக்கிறது (தமிழர் நாகரிகமும் பண்பாடும்ப.596)

கடவுளும் விதியும்
வாழ்க்கையில் நிகழ்கின்ற எல்லா நிகழ்வுகளும் விதிப்படியே நடக்கும் என்பது காலங்காலமாக வழங்கிவரும் விதிக்கொள்கையாகும். இதனையே   

“ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்”(ப.2) என்கிறது சிலப்பதிகாரம். நாம் செய்த வினைகள் நம்மை வந்துசேரும் என்பதை,
“காய்த்தமரம் அது மிக்க கல்லடிப்படும்
கன்மவினை கொண்டகாயம் தண்டனைபெறும்”( பாம்.சித்.பா. 66)


என்ற அடிகளின்வழி பாம்பாட்டிச்சித்தர் பதிவு செய்கிறார். நன்கு காய்த்தமரத்தில் இருக்கின்ற காய்கனிகளைப்பெறுவதற்கு மக்கள் அதனை பலமுறை கல்லால் அடிப்பர். இதுபோல முன்பிறவியில் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை நிச்சயம் இவ்வுடல் பெறும் என்பது பாடலின் கருத்தாகும்.

நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப,

“ தாமொன்று நினைக்கையிலே தெய்வமொன்று
தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே”   (உரோம.பா.13)

என்ற வரிகளில் நாம் ஒரு கணக்கு போடுவோம், ஆனால் அது நடக்கையில் வேறொரு கணக்காக இருக்கும். அறியாமையின் காரணமாக மனிதன் அனைத்தும் தனதாக எண்ணுகிறான். ஆனால் இறப்பு வந்தபோது எதுவும் தனதில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது. இதனால் விதி வலிது என்ற எண்ணம் தோன்றுகிறது. என்றும் நாம் நினைப்பதே நடப்பதில்லை என்ற உண்மையை பழமொழியின் வாயிலாக உரோமரிஷி உணர்த்துகிறார்.

நிலையாமை
நிலையாமையை உணர்த்தும் வகையில்,

“ பிறந்து இறக்கும் இறந்து பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”       (பட்டி.பா. 6,7)


என்று பட்டினத்தார் பாடுகின்றார். உலகம் நிலையில்லாதது நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கும். உலகில் வாழும் உயிர்கள் பரிணாம மாற்றத்திற்கு உட்பட்டு இறந்தும் பிறந்தும் சமநிலையை உண்டாக்குகின்றன. பிறந்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும் அதுவே விதி ஆகும். காலையில் தோன்றிய சூரியன் மாலையில் மறைவதும் பின் காலையில் தோன்றுவதும் உலக இயக்கமாகும். 

“ செத்துக்கிடக்கும் பிணத்தருகே இனி
சாம்பிணங்கள் கத்துங் கணக்கென்னே”          (பட்டி.பா16.)


என்ற பாடலில்  பட்டினத்தார் செத்துகிடக்கும் பிணத்தின் அருகே நாளை பிணங்களாகப்போகும் மனிதர்கள் நிலையாமையை உணராமல் அழுது ஒப்பாரி வைக்கின்றான் என எள்ளி நகையாடுகின்றார்.

பொறுப்பு
இன்று பலர் செய்கின்ற செயலில் பொறுப்பின்மையால் பல தீமைகள் நடந்தேறுகின்றன. பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்டும் நாம் தம்மிடம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யாமல் மறைத்துக் கொள்கிறோம். எனவே ஒவ்வொருவரும் தம் செயல்களில் பொறுப்புடன் திகழ வேண்டும் என்பதைப் பழமொழி வாயிலாகப் புரிய வைக்கின்றனர் சித்தர்கள்.

“ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு” என்ற பழமொழி எந்தத் தொழில் செய்தாலும் செய்யும் தொழிலில் நாம் கண்ணாயிருக்க வலியுறுத்துகிறது. இதனையே “ கருமமே கண்ணாயினார்” என்பர்.

எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் எங்கு இருந்தாலும் நம் கடமையை நாம் மறக்காமல் இருக்க வேண்டும், மோட்சத்தை விரும்புவர் அதனை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை, 

“ எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர்மனம் இருக்கும் மோனத்தே – வித்தகமாய்க்
காதி விளையாடி யிருகைவீசி வந்தாலும்
தாதி மனம் நீர்க்குடத்தே தான்”                      (பட்டி.பா. 18)


என்ற பாடலில் பெண் தலையில் நீர்க்குடத்தை சுமந்துக்கொண்டு இலாவகமாக காதி விளையாடி வந்தாலும் இருகை வீசி வந்தாலும் எண்ணம் முழுவதும் நீர்க்குடத்தின் மீது மட்டுமே இருக்கும். அதுபோல மனிதன் எதைச் செய்தாலும் வீடுபேற்றை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் பட்டினத்தார்.

மூடநம்பிக்கையைச் சாடுதல்
“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது?” என்பது பழமொழி. மக்கள் பல நதி, பதி தலங்களுக்குச் சென்று வந்தாலும் பாவம் போகாது என்பதை,

“ ஏட்டுச்சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாதுபோல்
எண்திசை திரிந்துங் கதிஎய்தல் இலையே”   (பாம்.சித்.பா.94)


என்கிறார் பாம்பாட்டிச்சித்தர். ஏட்டில் இருக்கும் சுரைக்காய் கறிக்கு உதவாதது போல காசி, இராமேஸ்வரம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்று சிலர் எழுதிய வார்த்தைகளை நம்பி காசி, இராமேஸ்வரம் திரிவதால் எந்தப் பலனும் புண்ணியமும் கிட்டாது என்கிறார்.

“கழுவி கழுவி ஊற்றினாலும் கவிச்சு நாற்றம் போகாது” என்பது தற்காலப் பழமொழி . இதனைப் பாம்பாட்டிச்சித்தர்,
“நாறுமீனைப் பலமுறை கழுவினும் நாற்றம் போகாது ”  (பாம்.சித்.பா.65)


என்கிறார். நாறுகின்ற மீனைப் பலமுறை நல்லநீரில் விட்டுக் கழுவினாலும் அதனுடைய நாற்றம் போகாது. அதுபோல மும்மலங்களினால் ஆன உடல் பல நதிகளில் மூழ்கினாலும் நீங்காது. நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்ற நினைப்புடன் புண்ணிய நதிகள் இருக்கும் இடங்களுக்கெல்லாம்  சென்று நீராடுகின்றனர். இதனை நாறுகின்ற மீனை(உடல்) பலமுறை கழுவினாலும்(நீராடினாலும்) நாற்றம்(பாவம்) போகாது என்று பழமொழியின் வாயிலாக விளக்குகின்றார்.

தத்துவம்
வாழ்க்கைத் தத்துவத்தை கூற சித்தர்கள் பழமொழியைப் பயன்படுத்தியுள்ளனர். காகபுசண்டர்,

“ வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகாசிக்கும்
வெளியேறினாற் தீபம் விழலாய்ப் போமே”     (காக.பா.63)


என்பதில் நான்கு சுவர்களால் கட்டப்பட்டவீட்டில் தீபம் ஏற்றி வைத்தால் தீபவொளி அவ்வீட்டினுள் நிறைந்திருக்கும் இருளைப் போக்கும் , ஆனால் அந்த தீபத்தையே நடுவீதியில் வைத்தால் அத்தீபத்தின் ஒளி வீணாகப்போகும் எனக்கூறுகின்றார்.

மேலும் “ தண்ணீர் தண்ணீர் யென்றலைந்தால் தாகம் போமோ”   (காக.காவி.பா.1)

என்ற தத்துவப்பழமொழியை காகபுசண்டர் எடுத்து மொழிகிறார். தாகத்தால் தணணீர் தண்ணீர் என்று அழுவதால் மட்டும் தாகம் தணியாது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டால்தான் தண்ணீர் பெற்று தாகம் தீரும், அதுபோல இறைவன் என்று சொல்லிவிட்டு இருப்பதால் எந்த பலனும் இல்லை. உள்மனத்தால் உணர்ந்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்கிறார் சித்தர்.

அறியாமையால் அழிவு
“ கைவிளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல”      (இடை.சித்.பா.74)

இரவில் வழிகாட்டுவதற்காக கையில் விளக்கு வைத்திருப்பர். ஆனால் கையில் விளக்கு இருந்தும் கடலில் சென்று விழுந்தால் அதற்கு எவரும் பொறுப்பாக முடியாது. அதுபோல தன்னுள்ளே இறைவன் இருப்பதை அறிந்தும் அறியாமையில் மக்கள் உழல்கின்றனர் என்று இடைக்காட்டுச்சித்தர் மொழிகின்றார்.

அறிவால் உயர்வு
“அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்டாற் போல”     (இடை.சித்.பா.92)

பெரிய பஞ்சுப்பொதியானது சிறிய தீப்பொறிப்பட்டதும் முழுவதுமாக எரிந்து அழிந்துபோவது போல ,பக்குவப்பட்ட மனித அறிவால் பாவங்கள் அழிந்து போகும் என்கிறார் இடைக்காட்டுச்சித்தர்.

வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளையும் சித்தர்கள் அனுபவமுதிர்ச்சியின் காரணமாக பழமொழிகளாகப் பாடல்களில் கூறியதை காணஇயலுகிறது.  பழமொழி குறித்து சு.சக்திவேல் “ சமுதாயத்தில் அறக்கோட்பாடுகளை வலியுறுத்தவும் ,தவறுசெய்யும்போது இடித்துரைக்கவும் சமுதாயத்தில் இதைச் செய், இதைச் செய்யாதே எனக்கட்டளையிடவும் பழமொழிகள் பயன்படுகின்றன” என்ற கருத்திற்கு ஏற்ப சமூகத்திற்கு நற்கருத்தினைக் கூற அனுபவமுதிர்ச்சி, அறிவு கொண்ட சித்தர்கள்  பழமொழியின் வாயிலாகப் பாடல்களில் கூறியுள்ளனர்.

முடிவுரை
1.கடவுள், மற்றும் விதி குறித்த நம்பிக்கைகள் மக்களிடையே காலங்காலமாக வழங்கிவரும் நீதிமுறைகளை (Morals) பழமொழியின் வாயிலாக சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
2.வாழ்வியல் தத்துவங்களைப் பழமொழிகளாகப் பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.
3.மனித சமுதாயத்தில் உள்ள மூடநம்பிக்கைகளைச் சாடுவதாக சித்தர்களின் பழமொழிகள் அமைந்துள்ளன.
4.சித்தர்கள் எதுவும் நிலையில்லாதது என்ற உண்மையை அறிந்ததால், மக்களுக்கு பற்றில்லா வாழ்வினை வாழ நிலையாமை குறித்த பழமொழியை கூறியுள்ளனர்.
5.பொறுப்புணர்வு, அறியாமையால் அழிவு, அறிவால் உயர்வு போன்ற சார்புடைய பழமொழிகளை சித்தர் பாடல்களில் காணஇயலுகிறது.

துணைநின்ற நூல்கள்
1.சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
2. இளம்பூரணர்(உ.ஆ) தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.  
3.ஞா.மாணிக்கவாசகன்(உ.ஆ),சிலப்பதிகாரம், ,உமா பதிப்பகம், சென்னை-1,2007.
4.சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை- 108. 11ம்- பதிப்பு- 2011.
5.அ.தட்சிணாமுர்த்தி , தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ்வெளியீடு, சென்னை- 40, 1994.

rathanpriya86@gmail.com

 

* கட்டுரையாளர்:   ச.பிரியா, முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி,  பெரம்பலூர்-621107.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard