ஆன்மீக உலகிலத்தில் நான் யார் என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்;ள ஒன்றாகும். எத்தனையோ அணுகுமுறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் நான் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறியிருப்பினும் அடிப்படை உண்மை ஒன்றுதான். இவற்றை சித்தர்கள் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நான் தற்காலிகமானது
உண்மையில் அனுபவத்தையும்,அனுபவிப்பவனையும் பிரிக்க இயலாது. “கணந்தோறும் புதிது புதிதாக வரக்கூடிய அமசம் உடையது தான் சிந்தனை. ஊதுவத்தியிலிருந்து வெளிவரும் புகை புதிது புதிதாக எப்படி வந்து கொண்டிருக்கிதோ,அப்படிதான் நமது சிந்தனையும் புதிது புதிதுதாக வந்து கொண்டிருக்கிறது. சிந்தனை எப்படி ஒவ்வொரு கணந்தோறும் புதியதோ, அப்படித்தான் அதனால் உருவாக்கப்படும் அனுபவிப்பவனும் ஒவ்வொரு கணந்தோறும் புதியவன். அனுபவமும் ஒவ்வொரு கணந்தோறும் புதியது. அனுபவிப்பவனாகிய நாம் நிரந்தரமாக இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் உண்மையன்று”(ஸ்ரீ பகவத் கவலைகள் அனைத்திற்கும் தீர்வு பக் 99-100).
எனவே அனுபவிப்பவனாகிய ‘சின்ன நான்’ தற்காலிகமானதே: நிலையானதன்று: காணப்படும் ஒவ்வொரும் பேற்றோரைப் பார்க்கும் போது பிள்ளையாக, பிள்ளையைப் பார்க்கும் போது தாயாக, தந்தையாக, வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் போது கணவராக, மனைவியாக அனுபவிப்பலனாகிய ‘நான்’ தோன்றுகிறது.
நான் அற்ற நிலை
நான் அற்ற நிலை வேண்டும் என்று நாம்; கூறிக்கொள்ளலாம். அனுபவிப்பவன் இல்லாத அனுபவம் வேண்டும் என்று நாம் கூறிக்கொள்ளலாம் ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லாத வெறும் கனவே ஆகும். சிந்தனை இருக்கும் வரை காண்பவன் - கணப்படும் பொருள், அனுபவிப்பவன் - அனுபவம் என்னும் இரட்டை நிலை நிரந்தரமாகவே இருந்துகொண்டுதான் இருக்கும். இவற்றுள் எதையாவது ஒன்றை நீக்குவதற்கு சாத்தியமே இல்லை. ஆனால் இப்படி ஓர் இரட்டைநிலை இருந்தாலும்கூட, அதில் எந்த பிரச்சனையும் கிடையாது.
சிந்தனைதான் நான்!
நான் என்பது சிந்தனையும், உணர்வும் கலந்த ஓர் .அனுபவ நிலை. நமது சிந்தனை இருக்கும் நேரமெல்லாம் நான் என்னும் உணர்வும் இருந்தே தீரும். நம்முடைய நினைவு தான் நம்மை நான் என்று காட்டுகிறது. நம்மை நான் என்னும் காண்பவனாகவும், உலகத்தை நம்மால் அறியமுடிகிறது. நனவும் கனவும் நினைவின் அம்சமே. இரண்டிலுமே ‘நான்’ என்பது இடம் பெறுகின்றது.
கனவு காண்பவன் தன்னைக் ‘கனவு காண்பவனாக’ அறிவதில்லை. அதுப்போல, நனவு நிலையில் சராசரி மனிதன் தன்னை ‘சித்’ அம்சமாக உணர்வதில்லை. அந்நிலையில் அவனது வாழ்வு கனவில் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிகமான கதாபாத்திரமாகவே அமைகிறது.இதை
“நின்னளவில் ஆனந்தம் நின்கருணை சற்றேனும்
என்னளவிற் றோற்றா திருந்தக்கால்- நின்னளவிற்
பூரணம்பொய் யானந்தம் பொய்கருணை பொய்யுரைத்த
ஆரணம்பொய் சொக்கநா தா!”
(சொக்கநாத வெண்பா:பா:90:ப:635)
எனும் பாடல் மூலம் அறியமுடிகிறது.
பிரச்சனையை உருவாக்கும் நான்
நமக்கு ஏற்படும் அனுபவத்திற்கும் உணர்வுக்கும் ஏற்றவாறு ‘நான்’ என்னும் உணர்வு அமைகின்றது. “நான்;அந்த அனுபவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்ற ஓர் உணர்வு இருக்கும். இது தான் “நான்” என்னும் உணர்வு” (ஸ்ரீபகவத் தியானத்தை விடு ஞானத்தை பெறு.ப.46). ஒருவருக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஒவ்வொரு உணர்வுக்கும் ஏற்ற ஒவ்வொரு ‘நான்’ உருவாகிறது.
இவ்வாறு ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஏற்ப ஏற்படும் ஒவ்வொரு ‘நான்’ என்ற உணர்வை,மனிதன் அவரவருக்குத் தகுந்தாற்போல, மாற்றியமைக்கப் போராடுகிறான். அல்லது பிடிவாதம் கொண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கிறான். இதுவே பிரச்சனையை உருவாக்கும் நானாக அமைகிறது.
இந்த நான் என்னும் உணர்வுதான் ஒருவரது செயல்களை ஊக்குவிக்கும், ஒருவரது செயல்களை நிர்ணயிக்கும் அம்சமாகவும் உள்ளது. எண்ணங்களும், அனுபவங்களும் மாற,மாற ‘நான்’ என்பதும் மாறிக்கொண்டே இருக்கிறது.’நான்’ என்பது இப்படி மாறிக்கொண்டே இருக்கும் போது இதை மாற்றப் போராடுவதாலோ, பிடிவாதம் கொண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் போதோ, இது பிரச்சனையாக உருவாகிறது.
நான் தற்கலிகமானது என்ற புரிதலுக்கு வரும்போது, பிரச்சனை உருவாவதில்லை என்பதை உணரமுடிகிறது. இதை சித்தர்கள்
“உப்போடு புளிப்புங் கைப்பும் உணர்வினால் அறிந்து நீதான்
எப்போது முனக்குள் நாயன் இருப்பிடம் அறியா தென்னே?”
(கணபதிதாசர்,பாட:76:1,2)
எனும் பாடல் வழி விளக்குகின்றனர்.
நாக்கின் உணர்வினால் பல்வேறு சுவைகளும் அறியப்படுகின்றன. உப்பைச் சுவைக்கும் போது, உவர்ப்புச் சுவையும், இல்லாதபோது ‘நாக்கு’ தன்னுணர்வாகவே இருக்கிறன்றது. அது அனுபவமும் உணர்வும் மாற, மாற நானும் அந்த அனுபவத்திற்கேற்ப, உணர்வுக்கேற்ப மாறுகின்றது. சுவைகள் மாறுவதுபோல அனுபவம் அனுபவிப்பவனாகிய ‘சின்ன நான்’ மாறிக்கொண்டே இருக்கின்றது என்பதை உணரலாம்.
நான் எனும் போராட்டம், தீர்வு
நான் என்னுடைய உணர்வுகளை மாற்றி அமைத்துக்கொள்வேன், நான் என்னுடைய உணர்வுகளை தக்க வைத்துக்கொள்வேன் என்று நாம் முயற்சி செய்வதால் மட்டுமே இந்தப் போராட்டம் நடைnறுகிறது. நம்முடைய உணர்வுகளை நம்முடைய கட்டுப்பாடடுக்குள் கொண்டுவருவது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒரு போராட்டமே. தீர்வு கிடைக்கமுடியாத ஒரு போராட்டமே. அப்படி ஒரு போராட்டம் தேவையே கிடையாது. இதனை,
“நானும் இல்லையடி
நாதனும் இல்லையடி:
தானும் இல்லையடி:
சற்குரு இல்லையடி”
(அகப்பேய்.பா:70:ப:260).
எனும் பாடல் வழி அறியமுடிகிறது.
தன்னை இழந்த நலம்-மெய்ப்பொருள் இயக்கம்
நாம் அடைவதற்கு ஒன்றும் இல்லை என்று கண்டுபிடித்த நிலையிலேயே, நமது அனுபவங்கள் எல்லாம் பலம் இழந்து விடுகின்றன. அனுபவங்கள் பலம் இழந்த நிலையில், நான் என்னும் அனுபவிப்பவனும் பலம் இழந்துவிடுகின்றான். இதை சித்தர்கள்
“தன்னை மறைத்த பந்தமதைத் தள்ளி நீங்கிற் றான்விளங்கும்
தன்னை மறந்த தேபந்தம்: தன்னை அறிந்த தேமுத்தி:
தன்னை விடவோர் பொருளில்லை: தானே பிரம் மாயையும்பின்
தன்னை விடவே றாய்விளங்கா: தானே யாகி விளங்கிவிடும்”
(சித்தர் பாடல்:நிஜ.போதம்:ப:659)
என்று கூறுகின்றனர். இங்கு தன்னை இழந்த நலம் செயலுக்கு வருகிறது. மெய்ப்பொருள் இயக்கத்தின் பகுதியாக சித்தர்களின் இயக்கமும் கலந்து விடுகின்றது.
முடிவுரை
நான் என்பது தற்காலிகமானது, தோன்றி மறையக்கூடியது, நிழல் அல்லது மாயை போன்றது. உணர்ச்சினள் கணந்தோறும் புதிது புதிதாகத் தோன்றுவது எனும் புரிதலுக்குப் பிறகே சித்தர்கள் “சும்மா இரு” எனும் தத்துவத்தை நிலைநாட்டுகின்றனர்.
உசாத் துணை நூல்கள்
1.ஸ்ரீபகவத் - ஆன்மாவைத் துறந்து ஆன்மாவாக இரு, பிரவாகம் பப்ளிகேஷன்ஸ்,சென்னை, முதற்பதிப்பு 2013.
2.இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, (முதற்பதிப்பு: 1958)
3.ஸ்ரீபகவத் - கவலைகள் அனைத்திற்கும் தீர்வு, பிரவாகம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, முதற்பதிப்பு 2015.
4.குருஞான சம்பந்தர் - சொக்கநாத வெண்பா, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம். சென்னை.
5.சித்தர் பாடல்கள் , திருநாவுக்கரசு புத்தக நிலையம், சென்னை, முதற்பதிப்பு 2001.
6.எஸ்.ஆர். சங்கரலிங்கனார் - சித்தர்கள் கலைக் களஞ்சியம், ,சித்தாசிரமம் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு 1997
Sowriraja86@gmail.com
*கட்டுரையாளர்: இல.சவுரிராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுபேட்டை, புதுச்சேரி-08.