New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழமொழிநானூறு உணர்த்தும் சமுதாய நெறிகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பழமொழிநானூறு உணர்த்தும் சமுதாய நெறிகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


பழமொழிநானூறு உணர்த்தும் சமுதாய நெறிகள்

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுகின்றன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு
பழமொழி நூல் நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு காணப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.இந்நூல் பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்துள்ளனர்.இந்நூல் பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது.இந்நூலகத்துப் பண்டைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து ஆசிரியர் அமைத்துள்ளார் என்பதை,

பிண்டியின் நிழல் பெருமான் அடிவணங்கி
பண்டைப் பழமொழி நானூறும் -கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்து அமைத்தான்
இன்றுறை வெண்பா இவை (பழ.பாயி.1)

என்ற பாடலடி மூலம் அறியலாம்.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
சென்னை பல்கலைக்கழக ஆங்கில  அகராதி  சொசைட்டி என்பது மன்னாயம், சமுதாயம்,கூட்டுவாழ்க்குழு என்பனவற்றைக் குறிப்பிடுவதுடன் நட்புக்குழு,உயர்க்குழு என்பனவற்றையும் குறிப்பிடுவதாகும் என்று பொருள் கூறுகிறது.(பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமுதாய மாற்றங்களும் தமிழ் இலக்கியப் போக்குகளும்,ப.2)
பழமொழியும் அறமும்

பழமொழிகள் நன்னெறிக்கு மக்களைச் செலுத்தும் ஆன்றோரின்   அனுபவ மொழிகள்.
அறிகர் பொய்த்த வான்றோர்க் கில்லை (குறுந் .184:1)
…………………………இம்மை
நன்றுசெய் மருங்கில் தீதில்     (அகம்.101:1-2)

என்பன போலப் பாடல்களின் இடையே பழமொழிகளை அமைத்து அறநெறிக் கருத்துக்களைச் சங்க புலவர்கள் உணர்த்தியுள்ளனர்.

இல்லறம் குறித்த நெறிகள்
இல்லறம் என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி இல்வாழ்க்கை எனப்பொருள் கூறுகிறது.இல்லறம் என்ற அதிகாரத்தில் 25 பாடல்கள் உள்ளன.பழமொழி நானூறு நாணத்தைப் பற்றி சொல்லும் போது நாணம் என்ற குணம் அமையாது போனால் அவளிடம் பெண்மை என்ற பண்பும் உண்டாகாது.எனவே நன்மங்கையின் நாணமானது பொதுவாக அனைவராலும் விரும்பப்படுவதாகவும் மதிக்கப்படுவதாகவும் இருக்கும்.பெண்மைக்கு அணி நாணமாகும் என்பதை,

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு   (பழ.328:1)

என்ற பாடலடியின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.இதன் மூலம் பெண்ணுக்கு அழகு சேர்ப்பது நாணம் என்ற கருத்து பெறப்படுகிறது.மேலும் இல்லறப் பெண் தீங்கு செய்யும் பெண்ணாக இருக்கக் கூடாது என்பதனை,

விழுமிழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம் (பழ.335:1)

என்ற பாடல் வரியில் இல்லறம் பாழாதற்குக் காரணம் நல்ல மனைவி வாய்க்காமையே என்றும் பெண்கள் இவ்வாறு இருத்தல் கூடாது என்ற செய்தியை கூறுகிறது.
பிறர் மனையில் புகாமை

கணவன் இல்லாத வீட்டில் ஒரு பெண் தனித்திருக்கும் நிலையில் பிற ஆடவன் வீட்டின் உள்ளே செல்லக் கூடாது என்பதை,

……………………….தோழர் மனையகத்தும்
தாமே தமியர் புகல் வேண்டா தீமையோன்     (பழ.336:1 -2 )

கணவன் பிற பெண்டிரை நாடக் கூடாது

குடும்பத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தலைவனானவன் தன் மனைவியை விட்டு பிற பெண்டிரை நாடுதல் தன் மனைவிக்கு செய்யக் கூடிய துரோகம் ஆகும்.இதனை,

தொடித்தோள் மடவார் பருமந்தன் ஆகும் (பழ.334:1)

என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.

விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பதற்கு க்ரியா அகராதி விருந்து தந்து உபசரித்தல் என்று பொருள் விளக்கமளிக்கிறது.வறியவர் அளிக்கும் விருந்தில் செல்வந்தர் பங்கேற்கக் கூடாது.                                 
……………………..நனிபெரிய ராயினார்
செல்விந் தாகிச் செலவேண்டா ஒல்லா (பழ.338:1-2)

என்ற பாடல்  வரிகள் மூலம் அறியலாம்.அவ்வாறு பங்கேற்க நேரிட்டால் இருவருக்கும் மனநிறைவு இருக்காது என்று ஆசிரியர் கூறியுள்ளார்.இதனை,

செய்ந்நன்றி உணர்வு

ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது.ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு அப்பாவத்திலிருந்து நீங்க வழியில்லை என்பதை வள்ளுவர்,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு    (குறள்.110)

என்ற குறளின் வழி தெளிவுபடுத்தியுள்ளார்.மேலும் பழமொழி நானூற்றில் செய்ந்நன்றி மறத்தல் மூன்று பாடல்களில்(346,347,348,) சொல்லப்பட்டுள்ளன.இதனை,

தமனென் றிருநாழி ஈத்துவ னல்லால்       (பழ.346.1)
………………புரந்தாரைக் 
கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி           (பழ.347:1-2)
………………..தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்   (பழ.348:1-2)

என்ற பாடல் வரிகளால் அறியலாம்.

இன்சொல்
தமிழ் மொழி அகராதி இன்சொல் என்பதற்கு இனிய சொல் என்று பொருள் விளக்கமளிக்கிறது.பிறரிடம் இனிமையாகப் பேசுதலே ஒருவர்க்கு சிறந்த பண்பாகும்.பிற மக்களுக்கு நன்மை தரும் சொற்களைச் சொல்லானாயின் தீமைகள் மறைந்து அறம் வரும் என்பதனை,

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்   ( 96 )

மேலும் பழமொழி நானூற்றில் உடுத்த உடையும்,நோய்க்கு மருந்தும்,தங்குவதற்கு இருப்பிடமும்,உண்ண உணவும், இவற்றோடு இன்ன பிறவும் பிறருக்குக் கொடுத்து இனியசொல்லோடு அறம் செய்தல் கடமை என்று கூறுகிறது.இதனை,

உடுக்கை மருந்து உறையுள் வண்டியோக இன்ன
கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி விருந்தின்சொல்
ஈமாமை என்ப எருமை எறிந்தொருவர்
காய்க்கு லோபிக்கு ஆறு   (பழ.339:1-4)

என்ற பாடலின் மூலம் அறியலாம்.மேலும்  மற்றொரு பாடலில் மற்றவருடன் பேசி இன்சொல்லானது பேசி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதனை,

……………………….ஒருவனை
இன்சொல் இடப்பப்படுப்ப தில் (பழ.192.2-3)

என்ற பாடலடியின் மூலம் புலப்படுகிறது.

கல்வி
கல்வி என்பதற்குக்கழகத்தமிழ் அகராதி அறிவுகற்றல், நூல், வித்தை,கல்விறிவு,கற்கை,பயிற்சி கற்கப்படும்நூல், கற்றற்குரிய நூல்களைக்கற்றல், கற்கும்நூல், உறுதி, ஊதியம், ஓதி, கரணம், கலை கேள்விசால்பு, தேர்ச்சி என்று பல்வேறு விளக்கமளிக்கிறது.

……………………………………அஃதுடையார்
நாற்றிசையும் சொல்லாத நாடில்லை அந்நாடு   (பழ.5:1-2)
……………………..சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி     (பழ.3:1-2)
……………………….இனிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று                 (பழ.6:3-4)

என்ற பழமொழி நானூறு பாடலடிகள் நாற்றிசையும் கற்றவரை புகழ் பாடும்,சோர்வின்றி கற்க வேண்டும் என்றும்,கற்றலே விட கேட்டலே நன்று என்றும் கூறுகிறது.மேற்கூறப்பட்ட பாடலடிகளின் வழி கல்வி கற்றலே சிறந்தது என்பது புலப்படுகிறது.

கல்வி கற்றவர் அறநெறியில் தவறக் கூடாது
கல்வி கற்ற ஒருவர் நல்ல அறநூல்களைக் கற்று உணர்ந்து அவற்றின் நெறிகளுக்கு மாறாக நடப்பானாகில் பழிச்சொல்லுக்கு ஆளாவான் என்று 11 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,

…………………….பழியாய செய்தல்
மதிப்புறுத்துப் பட்ட மறு  (பழ.11:3-4)

என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.

ஈகை
அறம் என்பதற்கு ஈகை என்று பொருள் கொள்ளுமாறு ஈகையறத்தினைச் சங்க இலக்கியங்கள் போற்றியுரைக்கின்றன.எவ்வித பயனும் கருதாது ஒருவர்க்கு ஒரு பொருளை ஈதலே ஈகையறமாகும் இதனை,

ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்  (கலி.133:6)

என்று கலித்தொகை கூறுகிறது.ஈகை பயன் நோக்கி செய்வது,பொருளை புதைத்தலின்றி வறியவர்க்கு ஈதல் வேண்டும்,ஈகை ஆனது செல்வம் நிறைந்த இடத்தில் தோன்றும்,வறுமை நிலை வந்தாலும் மற்றவர்க்கு கொடுப்பதினால் பொருள் குறையாது என்பதனை,

……………………செய்த வினையில்
பெரிய பொருள்கருது வாரே –விரி  (பழ.373:1-2)
……………..கடையும் உதவி 
துப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால் (பழ.374:1-2)
………………………..பழுதாய்க் கிடந்து
வல்லான் தெரிந்து வழங்குங்கால்     (பழ.375:1-2)
……………..சார்ந்தார்க்குத்
தூயஉய்ப் பயின்றாரே துன்பந் துடைக்கிற்பார் (பழ.377:1-2)
…………….கொண்டார் 
படுந்தேழை யாமென்று போகிறும் போக (பழ.378:1-2)

என்ற பாடலடிகளின் மூலம் ஈகை செய்திகளை அறியமுடிகிறது.

சினம்
சினம் என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி கோபம், நெருப்பு, வெயில், வெம்மை, போர் எனப் பொருள் கூறுகிறது.(ப.34 )
சினம் கொள்ளக் கூடாது,சினம் கொண்டால் அது அவரையே அழித்துவிடும் என்பதை,

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்  (குறள்.305)

வள்ளுவர் சுட்டியுள்ளார்.சினம் கொண்டவரிடம் நட்புக் கொள்ளக் கூடாது என்றும்,கற்றறிந்தவன் சினம் கொள்ளக் கூடாது என்றும்,சினத்தை நீக்க வேண்டும் என்று பழமொழி நானூறு எடுத்துரைக்கிறது.இதனை,

……………………..மற்றவனை
மாறி ஒழுகல் தலையென்ப –ஏறி   (பழ.53:1-2)

……………வேண்டமோ
கற்று அறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும் (பழ.54:1-2)

என்ற பாடலடிகள் சுட்டுகிறது.

தீங்கு செய்தவர்க்கு நன்மையே செய்தல்    

ஒருவர் தமக்கு தீங்கு செய்தாலும் நன்மையே செய்ய வேண்டும்.
…………………..கடிசெய் தாரைப்
பொறுத்து ஆற்றிச் சேறல் புகழால் ஒறுத்து ஆற்றின் (பழ.40:1-2)

என்ற பாடல் அடியில் விளக்கியுள்ளார்.

முயற்சி 
வள்ளுவர் பெருந்தகை ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில் முயற்சியைப் பற்றி இயம்பியுள்ளார்.இவ்வதிகாரம் 62 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளன.ஒருவனது முயற்சி செல்வத்தைப் பெருக்கும் முயற்சி இல்லாமை வறுமையை உண்டாக்கும்.இதனை,

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை  புகுத்தி விடும்  (616)

என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.

முயற்சியின்றி செய்யும் செயல் இறுதியில் துன்பத்தையே தரும் என்பதை,

………………….அது பெரிது
உக்கோடிக் காட்டி விடும்    (பழ.15:3-4)

என்ற பாடலடிகள் முயற்சியுடன் ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என்பதனை விளக்குகிறது.

நடுநிலை
நடுநிலை என்பதற்கு கௌரா தமிழ் அகராதி நீதி என்று பொருள் கூறுகிறது.மக்களாக பிறந்த ஒவ்வொருவரும் நடுநிலைமையிலிருந்து வழுவாமல் இருப்பதே சிறந்தது.

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்    (711)

என்ற குறளின் வழி பகைவர்,அயலார்,நண்பர் என்று பார்க்காமல் நடுநிலையிலிருந்து வழுவாமல் நடப்பதே அறசெயலாருக்குத் தகுதியாகும் என்கிறார் மேலும் இக்கருத்தையே தம்முடைய நண்பர்களே ஆயினும் அவர்கள் தகுதியில்லாத செயல்களைச் செய்தலைக் கண்டால் நண்பர் எனக் கருதி விட்டுவிடக்கூடாது.அவை அரசநெறிக்கு குற்றம் தருவதாகும் என்பதனை 342 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,

…………………….ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரது   (பழ.   )

என்ற பாடலடிகளின் மூலம் தமக்கு வேண்டியவராக இருந்தாலும் நடுநிலை தவறாது இருக்க வேண்டும்.

இகழாமை
பிறரை இகழ்ந்து பேசக் கூடிய சொல் புன்சொல் ஆகும்.இதனை,
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை   (189)

என்ற குறளில் இகழாமைப் பற்றி தெளிவுப்படுத்தியுள்ளார்.அறிவற்றவர்கள் தான் ஒருவரை இகழ்ந்து பேசுவார்கள் இதனை,

நாவின் ஒருவரை வைதால் வயவுரை  (பழ.54:2)

என்ற பாடலடியின் மூலம் ஆசிரியர் எடுத்துள்ளப் பாங்கை அறியமுடிகிறது.

பிறர் பொருளை விரும்பாதிருத்தல்
பிறருக்கு உரிமையான பொருளை விரும்பாமல் இருப்பதே அறநெறி ஆகும்.கடலோடு துரும்பு ஒட்டுதல் இல்லை.அதுபோல தமது உடம்பு ஒடுங்கும்படி பசித்தாலும் மாட்சிமை உடையார் பிறர் பொருளை விரும்ப மாட்டார்கள் என்பதனை பழமொழி நானூறு விளக்குகிறது.

………………………………..மாண்புடையாளர்
தொடங்கிப் பிறருடைமை மேலார் குடம்பை   (பழ.79:1-2)

என்ற பாடலடி விளக்குகிறது.

புறங்கூறுதல்
ஒருவரை பற்றி இன்னொருவரிடம் குறைக்கூறுதலே புறங்கூறுதல் ஆகும்.புறம் கூறும் பண்பு ஒரு இழிவான செயல் ஆகும். புறங்கூறுதல் பிறரைக் கொலை செய்தலை ஒக்கும்.இதனைக் குறித்த செய்திகள் ஒரு பாடலில் கூறப்பட்டுள்ளது.இதனை,

……………………..நன்குரைத்து
போக்குள்ள போழ்தில் புறனீஇ மேன்மைக்கண்  (பழ.116:1-2)

என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.

மானம்
மானம்     என்ற         சொல்லிற்கு     கௌரா    தமிழ்     அகராதி    தன்மதிப்பு,    அளவு,    உவம,    கணிதம்,    குற்றம்,    நேசம்
பெருந்தன்மை,மரியாதை,வலி,வெட்கம்,கத்தூரி,கௌரவம்,கற்பு,பிராமணம் ஆகிய பொருள்களைத் தருகிறது.(ப.560)
……………………………உள்ளம்
படர்ந்ததே கூறும் முகம்  (பழ.145:3-4)

என்னும் பாடலின் வழி உயிரினுக்கு மேலாக மானத்தை எண்ணினர் என்பது புலப்படுகிறது.

அரசனின் துணை அமைச்சர்
அமைச்சர் இன்றி ஒரு காரியத்தை அரசன் செய்ய துணிந்தால், அத்துணிவால் பயனுண்டாதல் இல்லை என்பதனை 261 ஆம் பாடல் கூறுகிறது.இதனை,

கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்றுஇடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்  (பழ.261:1-2)

என்ற பாடல் வரிகள்  மூலம் அரசருக்கு அமைச்சரின் துணை தேவை என்ற கருத்து புலப்படுகிறது.

அரசரின் இகழாமை பண்பு
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழமொழி காரணம் மன்னது ஆட்சிச் சிறப்பில் தான் மக்களது நல்வாழ்க்கை அடங்கியுள்ளது.அரசர் பிறரை இகழ்ந்து பேசுதல் துன்பத்தை விளைவிக்கும்.இதனை,

…………………………….மலைத்தால்
இழைத்த திகவா தரைக் கன்றிப்      (பழ.296:2-3)

என்ற பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

படைவலிமை
அரசர் போர் புரியும் போது தன்னை கொல்ல வருகின்ற படையினரிடம் தனி ஒருவனாக போர் புரிந்து வெற்றி பெறுதல் கடினமான செயலாகும்.வீரமுடையவனாக இருந்தாலும் படை வலிமை அவசியமானதாகும் என்பதனை,

ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன்
தன்னை எனைத்தும் வியலற்க துன்னினார்
நன்மை யிலராய் விடிறும் நனிமலராம்
பன்மையிற் பாடுடை தில்      (பழ.304:1-4)

என்ற பாடலின் மூலம் அரசனுக்கு படை இன்றியமையாத ஒன்றாக இருந்தது என்பதை அறியமுடிகிறது.

முடிவுரை
பதினெண்கீழ்க் கணக்கில் பழமொழி நானூற்றின் வரலாற்றைப் பற்றியும், சமுதாயம் என்பதன் பொருள் பற்றியும், பழமொழியும் அறம் பற்றியும், இல்லறம் குறித்த பழமொழிகள் பற்றியும்,ஒருவன் பிறர் மனையில் புகா கூடாது என்பது பற்றியும்,கணவன் பிற மகளிரை நாடக் கூடாது என்பது பற்றியும்,செய்நன்றி அறிதல் பற்றியும், விருந்தோம்பல் பற்றியும்,இன்சொல்  பேசுவது சிறந்தது என்பது பற்றியும்,செய்நன்றி உணர்வு வேண்டும் என்பது பற்றியும்,தீங்கு செய்தவர்க்கு நன்மையே நன்மையே செய்ய வேண்டும் என்பது பற்றியும்,பிறரை இகழ்வது தவறு என்பது பற்றியும்,நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் அரசனின் இகழாமைப் பண்பு பற்றியும்,பிறர் பொருளை விரும்பாத தன்மையும்,போன்ற சமுதாய நெறிகளைக் இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009.
3.மணிக்கவாசகன், ஞா                   சிறுபஞ்சமூலம் உமா பதிப்பகம் சென்னை -600017 முதற்பதிப்பு -2009
4.மாணிக்கம், அ                திருக்குறள் தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
5.நாராயண வேலுப்பிள்ளை,எம்               முதுமொழிக்காஞ்சி கலைஞன் பதிப்பகம் சென்னை -600017  பதிப்பு -1989
6.மாணிக்க வாசகன,; ஞா                  நாலடியார் உமா பதிப்பகம் சென்னை -600001 முதற்பதிப்பு -1993
7.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)           நீதி நூல் களஞ்சியம்  கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
8.முத்துராமன், ஆ                          வாழ்வியல் சிந்தனைகள் மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2006
9.அகராதிகள்                      கழக அகராதி  தமிழ் -தமிழ் அகர முதலி மதுரை தமிழ் அகராதி

jenifersundararajan@gmail.com

 

* கட்டுரையாளர் - சு.ஜெனிபர்  , முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழியல் துறை ,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,   திருச்சி -24 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard