New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதி இலக்கியங்களில் ஒளவையார் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்!-- சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24788
Date:
நீதி இலக்கியங்களில் ஒளவையார் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்!-- சு.ஜெனிபர்
Permalink  
 


நீதி இலக்கியங்களில் ஒளவையார் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்!

E-mailPrintPDF

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6 நூற்றாண்டு வரை இருந்து  பதினெட்டு நூல்களைத் தோற்றுவித்தது.கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர். இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் காணப்படும் கல்விப் பற்றிய சிந்தனைகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்விக்கு அகராதி தரும் விளக்கங்கள்
கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான என்பதற்குத்   EDUCATION தேர்ச்சி,படிப்பு,கல்விப்பயிற்சி, வித்தை,சிட்சை,பழக்கம் என வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி’ விளக்கமளிக்கிறது.(ப.420)

தமிழ் - தமிழ் அகரமுதலி கல்வி என்பதற்கு  அறிவு,வித்தை,கற்கை, கற்கும் நூல்,பயிற்சி என்று பொருள் உரைக்கிறது.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கல்வி என்பதற்கு படித்துப் பெறும் அறிவு,முறைப்படுத்தப்பட்ட அறிவு, நுனரஉயவழைn  என்று பொருள் கூறுகிறது.(ப.266) கௌராத மிழ்அகராதி அறிவு, கற்றல், நூல், வித்தை, கல்வியறிவு, கற்கை, பயிற்சி, உறுதி, ஊதியம்.  ஓதி,கரணம்,கலை,கேள்வி,சால்பு,தேர்ச்சி,விஞ்சை என்று கல்விக்கு பொருள் கூறுகிறது.(ப.233)

கல்வியின் சிறப்புகள்
தனிமனித வாழ்வையும்,நாட்டின் முன்னேற்றத்தையும் உயர்த்துவது கல்வி.அத்தகைய கல்வி மனிதனின் உள்ளத்தில் மறைந்து கிடக்கும் அறியாமை இருளை அகற்றுகிறது.

 

விவேகானந்தர் கல்வி என்பது வெறும் செய்திகளை மூளையில் திணிப்பது அல்ல. திணிக்கப் பெற்ற செய்திகள் செரிக்கப்பெற்ற செய்திகள் செரிக்கப்பெறாமல் தேங்கி நிற்பதும் அல்ல.நமக்கு வேண்டுவது வாழ்கைக்கான கல்வி,நல்ல பண்பினை வளர்க்கும் கல்வி,கற்ற கருத்தினைப் புரிந்து கொள்ள வைக்கும் கருவி.சாதாரண மக்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்குத் துணை போகாத கல்வி,சோதனைகள் தொடர்ந்த போதும் உறுதி குறையாத பண்புகளை வளர்க்காத கல்வி, மனுக்குலத்திற்கு உழைக்கத் தூண்டாத கல்வி கல்வியல்ல என்று குறிப்பிடுகிறார்.

அரவிந்தர் கல்வி என்று சொல்லப்படுவது வாழ்க்கையோடு தொடர்புடையதாகவும்,நாட்டுக்கும் ஆன்மாவுக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும் கல்வி மாணவரின் மனத்தில் ஆன்மீகப் பண்புகளையும்,சமூக அறநெறிப் பண்புகளையும் வளர்பதாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

ப்ராய்டு கல்வித்தத்துவம் என்ற நூலில் கல்வியை பற்றி கூறும் போது கல்விச்செல்வம் மனித மனத்தை வளரச்செய்கிறது.கல்வி தன்னை உயர்த்துவதைக் காட்டிலும் தான் சார்ந்த சமூகத்தையும் நாட்டையும் பெருமையடையச் செய்கிறது என்பார். இத்தகைய கல்வியை எத்தகு நிலையிலும் கற்க வேண்டும் என்பதை,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே                  (புறம்.18:1-2)

கூறுகிறது.கல்விச் செல்வத்தின் மேன்மையைப் பற்றி வள்ளுவரும் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை                              (400)

என்ற குறளின் வழி அறியலாம்.பிற்கால நீதி இலக்கியமும் கல்வியைப் பிச்சையெடுத்தாவது கற்க வேண்டும் என்ற செய்தியைக் கூறுகிறது.இதனை,

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே                         (வெற்.பா.35)

என்ற பாடலின் மூலம் அறியலாம்.

ஆத்திசூடி என்னும் நீதி இலக்கியம்  கடவுள் வாழ்த்து நீங்கலாக 108 ஒரடிப்பாக்களை கொண்டு அமைந்துள்ளது.இதில் கல்விப் பற்றிய செய்திகள் ஒன்பது இடங்களில் (7,11,22,29,44,70,80,92,100) இடம் பெற்றுள்ளது.

ஒருவர் இளமைப் பருவத்திலே கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.. அவ்வாறு கல்வி கற்காமல் இருப்பது குற்றமாகும்.இதனை,

இளமைப் பருவத்து கல்லாமை குற்றம்  (நான்.94:1)

என்ற பாடலடி உணர்த்துகிறது.இக்கருத்தையே ஆத்திசூடியும்,

இளமையில் கல்      (ஆத்தி.24)

என்ற பாடலடி மேற்குறிப்பிட்ட கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ள செய்தியை அறியமுடிகிறது.நாட்கள் தோறும் நன்மை தரும் நூல்களைப் படிக்க வேண்டும்,என்பதை இனியவை நாற்பது கூறுகிறது.இதனை,

பற்பல நாளும் பழுதின்றி பாங்குடைய
கற்றலில் காழினியது இல்     (இனி.நாற்.பா.41.41:3-4)

என்ற பாடலடியின் மூலம் அறியமுடிகிறது.இக்கருத்தை ஆத்திசூடியும்,

என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.
எண் எழுத்து இகழேல்   (ஆத்தி.77)
ஓதுவது இகழேல்       (ஆத்தி.11)
பருவத்தே பயிர்செய்     (ஆத்தி.22)
சான்றோர் இனத்திரு     (ஆத்தி.44)
பெரியோரைத் துணைகொள் (ஆத்தி .82)
மூர்க்கரோடு இனங்கேல்    (ஆத்தி.92)
வித்தை விரும்பு         (ஆத்தி100)

என்ற பாடல் வரிகள் மூலம் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் கணிதத்தையும்,இலக்கியத்தையும் இகழக் கூடாது,கல்வி கற்காமல் இருந்து விடக்கூடாது.காலத்தால் கல்வி கற்க வேண்டும்,கல்வி அறிவு பெற்ற அறிவாளிகளுடன் சேர வேண்டும்,கல்வி அறிவற்ற மூடர்களோடு சேரக்கூடாது,,கல்வி முதலான கலைகளை விரும்பிக் கற்க தூண்டுகோலான கருத்துக்களை எடுத்துக்கூறி கல்வி கற்க தூண்டுகோலான கருத்துக்களை எடுத்தோம்பியுள்ளன.

கொன்றை வேந்தனில் கல்விச் சிந்தனைகள்
கொன்றை வேந்தன் என்ற நீதி இலக்கியம் கடவுள் வாழ்த்து நீங்கலாக 91 பாடல்களைக் கொண்டு விளங்குகிறது. இதில் கல்வித் தொடர்பான கருத்துக்கள் ஏழு இடங்களில்  (7,22,27,50,53,75) கூறப்படுகின்றன.

கல்வி கற்றவர்களையே கண் உடையவர்களாக கருத வேண்டும் என்பதை வள்ளுவர்,

எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு       (குறள் .392)

என்ற குறளின் வழி தெளிவுபடுத்தியுள்ளார்.இக்கருத்தை ஒளவையார்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்  (கொ.வே.7)

என்ற  பாடலடி மேற்கூறப்பட்ட கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அமைத்துள்ளார் என்பதை அறியமுடிகிறது. மேலும் கல்வியாகிய செல்வம் என்றும் நிலையானது,உண்மையானது என்பதை,

கைப்பொருளின் தன்னின் மெய்ப்பொருள் கல்வி   (கொ.வே.22)

என்ற பாடலடியால் அறியலாம்.இக்கருத்தை விவேகசிந்தாமணி,

வெள்ளத்தே போகாது,வெந்தனில் வேகாது
கொள்ளளத்தான் போகாது,கொடுத்தாலும் குறையாது
கள்ளருக்கும் எட்டாது:காவலுக்குள் அமையாது
உள்ளத்தே பொருள் இருக்க ஊரில் உழைத்து உழல்வானேன்                (விவேக.பா.69)    

என்ற பாடல் கல்விப் பற்றிச் சிந்தனையை எடுத்ததோம்புகிறது.

சான்றோன் என்கை ஈன்றோட் அழகு          (கொ.வே.27)
நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை            (கொ.வே.50)
நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு           (கொ.வே.53)
மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்        (கொ.வே.75)
ஒதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்      (கொ.வே.91)

என்ற பாடல் வரிகள் மூலம் தான் பெற்ற பிள்ளைக்கு கல்வி அறிவு தந்து, உலகோர் சான்றோர் எனப் புகழ வேண்டும் என்றும்,நிலையான கல்வியைக் கற்றவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தன்மை பெற்றவர் என்றும்,அற நூல்களில் கூறப்பட்ட அறிவுரைகளை உணர்ந்து வாழ வேண்டும் என்றும்,அறிவும் அனுபவமும் நிறைந்த பெரியோர் கூறப்பட்ட அறிவுரைகள் அமிர்தம் போன்றவை என்றும்,அறிவு நூல்களைப் படிக்காதவர்களுக்கு,நல்ல உணர்வும் ஒழுக்கமும் இல்லை என்ற கல்வித் தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுகிறது.

மூதுரையில் கல்விச் சிந்தனைகள்
மூதுரை என்னும் நீதி இலக்கியம் கடவுள்  வாழ்த்து  நீங்கலாக  30 பாடல்களை கொண்டு அமைந்துள்ளது. இந்நூலில் கல்வித் தொடர்பான கருத்துக்கள் எட்டு இடங்களில் (7,13,14,16,24,27,30) இடம்பெறுகிறது.

கற்றவரின் சிறப்பு
கல்வி கற்றவர்கள் சென்ற இடமெல்லாம் சிறப்படைவார்கள். கற்றவர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் சிறப்பு பெறுவார்கள் என்பதை மூன்றுறை அரையனார்,

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்             (பழ.40)    

என்ற பாடலின் வழி அறியலாம்.இக்கருத்தை மூதுரை,

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்த்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்  - மன்னற்குட்
தன்தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு               (மூதுரை.26)

என்ற மேற்கூறப்பட்ட பாடல் இக்கருத்திற்கு அரண்சேர்ப்பதாக உள்ளது.

கற்றவரைப் போல் நடிக்க கூடாது
ஒருவன் கல்வி கற்றவனைப் போல் நடிக்கக் கூடாது என்பதற்கு மயிலுடன் வான்கோழியை ஒப்பிட்டுக் காட்டுகிறார் ஒளவையார் இதனை,

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாக பாவித்துத்  -  தானுந்தன் 
பொல்லாச் சிறகை விரித்தாடினாhற் போலுமே
கல்லாதான் கற்ற கவி  (மூதுரை.14)    

என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

கல்வியறிவு உடையவரை கற்றவர் விரும்புவர்
கல்வியாளரைக் கல்வியாளரே தேடிச் செல்வர் என்பதை,
நற்றா மரைக்கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்  (மூதுரை.27.1-2)

என்ற பாடலடிகள் மூலம் கல்வியில் வல்லவர் ஒருவரையே மற்றொரு கல்வி அறிவு பெற்றவர் நாடிச் சென்று விரும்பும் இயல்புடையவர் என்பதை உணர்த்துகிறார்.இதன் மூலம் சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரும் கல்வி அறிவு பெற்ற ஒருவரையே நாட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.மேலும் ஒருவர் கற்ற நூல்களின் அளவைப் பொறுத்தே அவரின் அறிவு அமைகிறது.இதனை,

நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு   (மூதுரை.27.1-2)    

என்ற பாடலடிகள் மூலம் அறியலாம்.இதன் மூலம் நூல்களைக் கற்று அறிவு பெற வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.மேலும் கல்லாதவனைப் பற்றி எடுத்துரைக்கிறார். கல்வியறிவில்லாதவனும் பிறரின் கருத்தின் குறிப்பை  உணரமுடியாதவனும் மரங்களுக்கு சமமானவன் என்பதை,

……………………………………சபை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவனன் மரம்                     (மூதுரை.13:2-4)

என்ற பாடலடிகள் மூலம் குறிப்பிட்டுள்ள செய்தியை அறியமுடிகிறது.மேலும் இவர்களுக்கு கற்று உணர்ந்தவர் சொல் எமனாகும் என்பதை,

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்குற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் குற்றம்               (மூதுரை.27:1-2)

என்ற பாடலடிகளில் கல்வி கற்காமல் இருந்தால் தான்  ஒருவனுக்கு, கற்றவன் சொல் எமன், கற்றவன் எமன் இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார்.

நல்வழியில் கல்விச் சிந்தனைகள்
நல்வழி என்ற நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளன.இதில் கல்வி தொடர்பான கருத்துக்கள் ஏழு இடங்களில் (கடவுள் வாழ்த்து பாடல்,26,34,36,37,39,40) இடம்பெற்றுள்ளன.

நல்வழி கடவுள் வாழ்த்தில் கல்வியில் முத்தமிழும் வேண்டும் விதமாக அமைந்துள்ளது.இதனை ஒளவையார்,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாளும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா                  (நல்.கட.பா.)

என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.மேலும் கல்வி ஆனது பசி வந்தால் பறந்து விடும் தன்மை உடையது என்கிறது இருபத்தாறாம் பாடல். பிற பெண்களின் மீது ஆசை கொள்வதால் கல்வி கெடுதற்கு அறிகுறியாக அமையும் என்பதை,

போதம் தனம் கல்வி பொன்றவருங் காலம் அயல்
மாதர் மேல் வைப்பார் மனம்                (நல்.36:3-4)

என்ற பாடலடியின் மூலம் பிற பெண்டிரை நோக்கினால் கல்வியாகிய செல்வத்தை இழந்துவிடுவாய் என்று அறிவுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.மேலும் முற்பிறவியில் உள்ள வினையை அறிவதற்கு வேதம் முதலான நூல்களைக் கற்பதனால் எந்த விதமான பயனும் இல்லை என்பதை,

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
எனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை       (நல்.37.1-2)

என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.மேலும் நல்வழி முப்பதாம் பாடல் ஆனது உண்மைப் பொருளான இறைவனை அடைய வேண்டும் என்றால் கல்வி கற்க வேண்டும் என்றுரைக்கிறது.

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒரு பொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு            (நல்.39)

என்ற இப்பாடலின் வழி கல்விக் கற்காமல் இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது.மேலும் பல கருத்துக்களைக் கொண்ட நூல்களைக் கற்க வேண்டும் என்று இயம்புகிறது. இதனை,

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்   -  கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும் 
ஒருவா சகமென் றுணர்                  (நல்.40)

என்ற பாடலின் வழி திருக்குறள்,தேவாரம்,திருவாசகம்,திருக்கோவையார்,திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்து பொருள் உணர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

முடிவுரை
சமுதாயம் நிலைத்து நீடித்து வாழ்வதற்குக் கல்வி மிகவும் இன்றியமையாதது.எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித் தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளைத் தன்னுள்ளே கொண்டு வருவது ஒருவனது கல்வி சார்ந்த நீதியாகும். கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற வாய்மொழிக்கு ஏற்ப நூல்கள் பல இளமையில் கற்க வேண்டும்,,நூல்களை விரும்பி படிக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் ஒளவையார் இயற்றிய இந்நீதி நூல்களில் முப்பத்தொருப் பாடல்களில் கல்விப் பற்றியச் சிந்தனைகளை இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.மெய்யப்பன்  .ச     நீதிநூல் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம்  சென்னை  600108  முதற் பதிப்பு 2006
2.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)                  நீதி நூல் களஞ்சியம்  கொற்றவை வெளியீடு  சென்னை -600017
முதற்பதிப்பு -2014

* கட்டுரையாளர்: - சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி – 24 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard