New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான்மணிக்கடிகை உணர்த்தும் பெண் நெறிகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24721
Date:
நான்மணிக்கடிகை உணர்த்தும் பெண் நெறிகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


நான்மணிக்கடிகை உணர்த்தும் பெண் நெறிகள்

E-mailPrintPDF

முன்னுரை 
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள்; அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் உள்ள அறநூல்களில் ஒன்றாக நான்மணிக்கடிகை அமைந்துள்ளது.இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களிலும் நான்கு விதமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.இந்நூலை இயற்றியவர் விளம்பிநாகனார்.இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட 106 பாடல்களைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெறும் பெண்ணுக்கான வரையறுக்கப்பட்ட நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண் இயற்கையின் ஆற்றல்மிகு படைப்பாக விளங்குகிறாள்.அவளால் தான் அன்பையும் இனிமையையும் பெற முடியும்.மாதர் என்ற சொல்லிற்குக் காதல் என்ற பொருள் உண்டு.மாதர் முகமே எனது புத்தகம் என்று ரூசோ கூறியுள்ளது நோக்கத்தக்கது.பெண்ணைவிட பெருமையுடையது யாதொன்றுமில்லை எனவே தான் வள்ளுவரும் ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’என்று போற்றியுள்ளார்.

பெண் என்னும் தமிழ் சொல்லுக்கு அழகு என்பது பொருள். அது பெண்ணை உணர்த்தும் மாதர் என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள் என்று திரு.வி.க அவர்கள் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை என்ற நூலில் கூறியிருக்கிறார்.(ப.3) நான்மணிக்கடிகையில் பெண்கள் குறித்த செய்திகள் 34 பாடல்களில்  (11, 14, 15, 20 ,22, 24 ,26 ,34 ,35, 38 ,39 ,43, 45, 47 ,55, 56 ,57 ,65 ,67 ,73 ,81, 85 ,87, 90, 91 ,92 ,93 ,95 ,97, 99, 101, 102, 105 );நாற்பது கருத்துக்களாக இடம்பெறுகின்றன. நாணம் இருக்க வேண்டும்
பெண்களுக்கு இருக்க வேண்டிய இயல்புகளில் ஒன்று நாணம் ஆகும்.இதனை தொல்காப்பியர்,

அச்சமும் நாணம் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப     (தொல்.1045)

என்ற நூற்பாவின் வழி தெளிவுபடுத்தியுள்ளார்.

நான்மணிக்கடிகையில் நாணம் பற்றிய செய்திகள் (11,56,90,95) நான்கு பாடல்களில் அமைந்துள்ளன.பெண்ணுக்கு அணி நாணம்,ஆடவர் நன்மங்கையின் நாணத்தை மகிழ்வர்,நல்லியல்பு  உடைய பெண்டிர் நாணம் உடையவராக இருப்பர்,நாணமில்லாத பெண்டிரின் அழகு தீது நாணம் தொடர்பானக் கருத்துக்களை எடுத்தியம்பியுள்ளார்.இதனை,

நலத்துக்கு அணியென்ப நாணம்    (நான்.11:3)
நல்லாரை நல்லவர் நாணுவப்பர்    (நான்.56:2-3)
…………………………பேணிய
நாணின் வரை நிற்பர் நற்பெண்டிர்      (நான்.90:2-3)
…………………………..நல்லார்
நலம் தீது நாணற்று நிற்பின்          (நான்.95:2-3)


என்ற பாடலடிகளின் மூலம் அறிய முடிகிறது.

இல்லற கடமையை செய்ய வேண்டும்
இல்லறம் என்பது அறத்திற்கு அடிப்படையாக விளங்குவதாகும்.இல்வாழ்க்கை என்பது ஆணுக்கு மட்டுமோ அல்லது பெண்ணுக்கு மட்டுமோ உரியது அல்ல.இல்லறம் இருபாலருக்கும் அறம் வளர்க்கும் களமாகும்.

இல்லறம் என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கணவன்,மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை, LIFE OF A HOUSE HOLDER என்று பொருள் விளக்கம் தருகிறது.(ப.108)

பெண் இல்வாழ்க்கையில் இவ்வாறு இருத்தல் வேண்டும்,இவ்வாறு இருத்தல் கூடாது என்ற கருத்துக்களை 9 பாடல்களில் (20,21,22,39,47,73,85,87,101) எடுத்தியம்பியுள்ளார்.
மாட்சிமையுடைய மனைவியால் இல்வாழ்கை வளம் பெறும்,கணவன் மனம் வருந்தினால் அன்பின் மிகுதியால் அவளும் வருந்த வேண்டும்,வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்ய வேண்டும்,கணவரோடு ஒருமித்து வாழ வேண்டும் என்ற கருத்துக்களை புலப்படுத்துகிறது.இதனை,

மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்                  (நான்.20:1)
பெற்றான் அதிர்ப்பில் பினையன்னாhள் தான் அதிர்க்கும்   (நான்:21:1)
……………………………….தகையுடைய
பெண் இனிது பேணி வழிபடின்                     (நான்.39:2-3)
தார் முன்னர் ஊடல் சாம்
ஊடல் உணரார் அகத்து                         (நான்.47:3-4)
………………………தத்தம்
வளத்தனைய வாழ்வார் வழக்கு                     (நான்.73:3-4)
ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம்                  (நான்.87:1)

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.மேலும் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் இல்லறநெறியில் மனைவியாக விளங்கும் பெண் தீங்கு செய்யும் பெண்ணாக இருக்கக் கூடாது என்ற கருத்தை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.

மனைக்குப் பாழ் வாள் நுதல் இன்மை  (நான்.22:1)
…………………..கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுவாள்          (நான்.85:3-4)
………….பாழ் ஒக்கும்
பண்புடையாள் இல்லா மனை        (நான்.101:3-4)

என்ற பாடலடிகள் இல்லறம் பாழாவதற்குக் காரணம் நல்ல மனைவி வாய்க்காமையே என்றும் இல்லறத்தில் இருந்து கொண்டு தீங்கு செய்யும் மனைவி கணவனுக்கு எமன் என்றும் பண்புடைய மனைவி இல்லாத வீடு பாழ் மனையை ஒக்கும் என்றும் இல்லறப் பெண்ணின் செயல்களை எடுத்துரைத்துள்ளார்.இப்பாடல் வரிகளின் மூலம் இல்லறத்தில் உள்ள பெண்கள் இவ்வாறு இருத்தல் கூடாது என்ற செய்தியை அறியமுடிகிறது.

தாய்மை
தாய்மை என்பதற்கு அருகுபோல் தழைத்து ஆல்போல் வேரூன்றி,பல்கி வளவாழ்வு வாழ்வதற்கு மூலமாயுள்ள முதல் நிதி என்று சொற்ப்பிறப்பியல் பேரகரகமுதலி விளக்கமளிக்கிறது.(ப.396)
தாய்மையின் உயர்வை வால்ட்விட்டன்,
The female equally with the man lsing
I am the poet of the same as the man
And I say it is a great to be a women as to be amen
And I say there is nothing greater than the mother of men

கூறியுள்ள செய்தியை எது புதுக்கவிதை என்ற நூலில் சுபாசு சந்திரபோசு கூறியுள்ளார்.(ப.123)

மக்கட்பேறு என்பது பெண்ணுக்கான கடமைளுள் ஒன்றாகும். குழந்தை செல்வத்தால் பெண்ணின் வாழ்வு சிறப்பு பெறுகிறது.  குழந்தையை பெற்றெடுத்த பெண்ணைப் பற்றிய செய்திகளை ஐந்து பாடல்களில் (25,26,35,45,57) விளம்பிநாகனார் கூறியுள்ளார்.இதனை

……….குழவி அலைப்பினும்
அன்னே என்றோடும்       (நான்.25:1-2)
………….தாய்முலைப்
பால்நோக்கி வாழும் குழவிகள் (நான்.26:1-2)
………..என் செயினும்
தாயின் சிறந்த தமரில்லை    (நான்.35:1-2)
………….தாயென்பாள்
முந்துதான் செய்த வினை           (நான்.45:3-4)
எண்ணக் கடவுளும் இல்
………….மக்களின்                (நான்.57:3-4)
ஒன்மையவாய் சான்ற பொருளில்லை    (நான்.87:2-3)

என்ற பாடல் வரிகளைக்கொண்டு,அடித்தாலும் குழந்தை தாயை நாடிச் செல்லும்இயல்புடையது,குழந்தைகள் தாய்ப்பாலால் வளரும்,தாயை விடச் சிறந்த உறவு இல்லை,தாய் முன் செய்த நல்வினையின் பயன்,தாயைப் போன்ற தெய்வம் ஒருவருக்கு வேறு எதுவும் இல்லை,தாய்க்கு குழந்தைகளை விட உயர்ந்த பொருள் வேறு இல்லை என்று நான்மணிக்கடிகை கூறியுள்ள செய்தியை அறியமுடிகிறது.

பின்விளைவை அறியும் பெண்
பெண் என்பவள் புத்தி கூர்மையுடன் இருப்பதே சிறந்தது.பின்னால் நடைபெற இருப்பதே முன்கூட்டியே ஆராயும் திறன் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை ஒரு பாடலில் விளம்பிநாகனார் கூறியுள்ளார்.இதனை,

பிணியன்னார் பின் நோக்காப் பெண்டீர் உலகிற்கு  (நான்.34:1)

என்ற பாடல் வரியின் மூலம் அறியமுடிகிறது.

கணவனே கண்கண்ட தெய்வம்
கணவனை தெய்வமாக வணங்கும் பெண்ணைப் பற்றி வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை             (55)

என்ற குறளின் வழி அறிய முடிகிறது.இக்கருத்தையே நான்மணிக்கடிகையும் கூறுகிறது.இதனை,

……………அஃது அன்றி
அணங்கல் வணங்கின்று பெண்         (நான்.91:3-4)

என்ற பாடலடியின் மூலம்,பெண் என்பவள்,பிற தெய்வங்களை வணங்காது தன் கணவனையே தெய்வமாக வணங்கியதை அறியமுடிகிறது.
பெண்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது    

பெண்களுக்கு உணர்வுகள் உண்டு.அவர்களைக் கட்டாயப்படுத்துவது தவறான செயல் ஆகும்.இதனை,
………………பேதை
விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின்  (நான்.81:1-2)

என்ற பாடல் வரியின் மூலம்,பெண்களை ஒரு செயலை செய்யக் கைவிட்டுவிடுவார்கள் என்று விளம்பிநாகனார் எடுத்துரைத்துள்ள செய்தியை அறியமுடிகிறது.

கற்பு
கற்பு என்பதற்கு  கல்வி,   கற்பனை   ,நீதிநெறி,   மகளிர்நிறை,  மதில்,  முல்லைக்கொடி,முறைமை,விதி,களவுக்கூட்டத்துக்குப் பின் தலைவன்,தலைவியை முறைப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம், மகளிர் கற்பு என்று கௌரா தமிழ் அகராதி விளக்கமளிக்கிறது.(ப.244)   கற்பு, காமம், நல்லொழுக்கம், பொறை, நிறை, விருந்து புறந்தருதல், சுற்றம் ஓம்பல் ஆகிய பண்புகளை மகளிர்க்குரிய மாண்புளாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.(தொல்.பொருள்.கற்பியல்,இளம்,நூ.150) இவற்றுள் முதன்மையாக இடம்பெறுவது கற்பென்னும் பண்பே.மேலும் மகளிர்க்கு உயிரினும் சிறந்ததாக நாணத்தையும்,நாணத்திலும் சிறந்ததாகக் கற்பையும் தொல்காப்பியர் வலியுறுத்தியுள்ளார்.(தொல்,பொருள்,கற்பு,இளம்,நூற்.1)

 

இந்நூலிலும் கற்பு குறித்த செய்திகள் இரண்டு இடங்களில் காணப்படுகின்றன.கற்பு என்பது இல்லறத்தாருக்குரிய கட்டுப்பாடு ஆகும்.இந்தக் கட்டுப்பாடே கற்பெனும் அறமாகும்.இதனை விளம்பிநாகனார்,

……………நிறைநின்ற
பெண்நன்று பீடிலா மாந்தரின்           (நான்:15:1-2)
பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள்   (நான்.92:1)

என்ற பாடலடிகள் மூலம்,கற்பின் மிக்க பெண் மேன்மையுடையவள் என்றும் கற்புடைய பெண்ணே நல்ல மனைவியாக இருந்து ஒழுக்க நெறியில் தவறாதவளாக இருப்பவள் என்றும் புலப்படுத்தியுள்ளன.

கட்டுப்படாத பெண்
தான் விரும்பியவாறு நடந்து கொள்ளும் பெண்ணே கட்டுப்படாத பெண் என்று நான்மணிக்கடிகை கூறுகிறது.இதனை,
………………காப்பினும்
பெட்டாங்கு ஒழுகும் பிணையிலி    (நான்.92:1-2)

என்ற பாடலடிகளின் மூலம் உணரமுடிகிறது.இதன் மூலம் பெண் கட்டுப்பாடமல் இருந்த பாங்கை அறியமுடிகிறது.

வரம்பு கடந்து பேசும் பெண்
மனைவி என்பவள் தன் கணவனுடைய வருவாய்க்கு ஏற்ப செலவு செய்யக்கூடியவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளர்த்தக்காள் வாழ்க்கைத் துணை     (51)

என்ற குறளின் வழி உணர்த்துகின்றார்.ஆனால் நான்மணிக்கடிகை கணவனுடைய வருவாய் குறைவாக இருந்தால் மனைவியானவள் வரம்பு கடந்து பேசுவாள் என்று குறிப்பிடுகிறது.இதனை, 

…………….இல்லத்து 
வாரி சிறிதாயின் பெண்ணூரும்    (நான்.102:1-2)

என்ற பாடலடியின் மூலம் அறியலாம்.

தீய பெண்டீர்
பெண்ணின் பண்புகள், சிறப்புகள் போன்றவற்றை குறிப்பிட்டுள்ள இந்நூல் தவறான நெறியில் ஒழுகும் பெண்டிரை தீய பெண்டீர் என்று குறிப்பிடுவதை அறியமுடிகிறது.இத்தகைய தீய குணங்களைக் கொண்டிருப்பர்.இப்பெண்டிரைத் தீய குணமுடைய ஆடவர் விரும்புவர் என்ற கருத்தை விளம்பிநாகனார் பதிவுசெய்துள்ளார்.

……………அல்லாரை
அல்லார் உவப்பது கேடு   (நான்.56:3-4)

என்ற பாடல் வரியின் மூலம் அறியலாம்.

முடிவுரை
நான்மணிக்கடிகையில் கற்பு, நாணம் போன்ற குணங்களே பெண்ணிற்கு சிறப்பு சேர்ப்பவை என்ற கருத்து காணப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. மேலும் தாய்மையின் சிறப்பை பற்றியும்,இல்லறப் பெண்ணின் குண நலன்கள் பற்றியும்,தீய பெண்டிரின் இயல்பைப் பற்றியும்,அறியமுடிகிறது. பெண்களைக் கட்டாயப்படுத்துவது தவறு என்று ஆசிரியர் கூறியுள்ள செய்தியையும் அறிய முடிகிறது.பெண்கள் கணவனே தெய்வமாகவும், துணையாகவும் கொண்டனர் என்ற செய்தியையும் அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009.
3.மணிக்கவாசகன், ஞா                சிறுபஞ்சமூலம் உமா பதிப்பகம் சென்னை -600017 முதற்பதிப்பு -2009
4.மாணிக்கம், அ                திருக்குறள் தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
5.நாராயண வேலுப்பிள்ளை,எம்            முதுமொழிக்காஞ்சி கலைஞன் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -1989
6.மாணிக்க வாசகன,; ஞா                  நாலடியார்  உமா பதிப்பகம் சென்னை -600001 முதற்பதிப்பு -1993
7.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)           நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
8.முத்துராமன், ஆ                          வாழ்வியல் சிந்தனைகள் மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2006
9.அகராதிகள்                      கழக அகராதி தமிழ் -தமிழ் அகர முதலி மதுரை தமிழ் அகராதி

10.திரு.வி.க                           பெண்ணின் பெருமை புனித நிலையம் சென்னை -600017 பதிப்பு - 1973


 

கட்டுரையாளர்: -  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 -

jenifersundararajan@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard