New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியம் காட்டும் கற்பு வாழ்வு - பேரா.ஹரிபாண்டிராஜன்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
சங்க இலக்கியம் காட்டும் கற்பு வாழ்வு - பேரா.ஹரிபாண்டிராஜன்
Permalink  
 


சங்க இலக்கியம் காட்டும் கற்பு வாழ்வு

E-mailPrintPDF

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது  நாம் வாழும் சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். சங்க இலக்கியத்தின் மூலம் சங்க காலமக்களின் வாழ்வியல், சமூகம், பண்பாடு, கலாச்சாரம், முதலானவற்றை அறியலாம். சங்க காலமக்கள் வாழ்வு அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்தனர். அகவாழ்வு களவு, கற்பு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தன. திருமணத்திற்கு முந்தைய வாழ்வினை களவு என்றும், திருமணத்திற்கு பின் அமையும் வாழ்வினை கற்பு வாழ்வு என காரணத்தின் பெயர்கொண்டு பிரித்திருந்தனர். ஒழுக்க நெறி என்பது சங்க கால மக்களின் வாழ்வில் இரண்டரக் கலந்து விட்ட நிலையினை சங்க இலக்கியம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இல்லறம்
இல் + அறம் = இல்லறம். இல்லத்தில் இருந்து கொண்டு அறச் செயல்கலைச் செய்வது இல்லறம் எனப்பட்டது. திருமணவாழ்விற்கு பின் வாழும் கற்பு வாழ்வினை இல்லற வாழ்வு என அழைத்தனர். தொல்காப்பியர் இல்லறம் பற்றி

“ மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது
மலிவும் புலவியும் ஊலலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே” (செய்யுளியல் 179)

என்று குறிப்பிடுகின்றார். களவு வெளிப்பட்ட பின் தமர் கொடுப்பக் கொள்ளும் மணவினை நிறைவேறிய பின் மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு ஆகிய ஐந்து கூறுகளும் அடங்கிய பகுதியே கற்பென வழங்கப் பெறும். கற்பு என்ற ஒன்றையே இல்லற ஒழுக்கமாக கொண்டு இருந்தனர். வள்ளுவரும் அறம் பற்றி கூறுகையில் 

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற” (குறள் 34)

உள்ளத்தின் கண் குற்றமின்றி ஒருவன் வாழ்வதே அறம் என்கிறார். அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதே இல்வாழ்க்கை அதுவும் பிறரால் பழிக்கப்படாமல் இருப்பது மிகச் சிறப்புடையதாகும் என்பதனை

“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. (குறள் 49)

என்றும், மேலும் பிறரால் பழிக்கப்படாத அறத்தோடு கூடிய வாழ்வினை ஒருவன் வழுவாமல் வாழ்வான் என்றால் அவன் மேலுலகத் தெய்வமாக மதிக்கப்படுகின்ற மிகவும் உன்னத நிலையை அடைவான் என்பதை,

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் 50)

என்ற குறள் மூலம் வள்ளுவர் சங்ககால இல்லறவாழ்வினை தெளிவாக புலப்படுத்துகின்றார்.

இல்லறச் சிறப்பு
சங்க காலத்தில் வீட்டின் கண் மனையறம் புரிதலை பெண்களும், வினையறம் புரிதலை ஆடவரும் மேற்கொண்டதால் இல்லறம் சிறந்து விழங்கியது என்பதனை,
“மனையுறை வாழ்க்கை வல்லியாங்கு
மருவி னினியபு முளவோ” (குறுந் 322)

என்று குறுந்தொகை குறிப்பிடுகின்றது. 

தலைவன் என்பவன் இல்லற வாழ்வில் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவருக்கும் நல்ல துனையாக இருக்க வேண்டும் என்பதனை 
“இல்வாழ்வான் என்பவன் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” (குறள் 41)

வினையே ஆடவருக்கு உயிர் என்பதனால் தலைவன் எவ்வித இடர் நேரிடினும் தான் மேற்கொண்ட வினையை செவ்வனே முடித்து பொருளீட்டிக் கொண்டுவர வேண்டும். அவ்வில்லறத்தில் அன்பு, விருந்தோம்பல், ஈகை முதலானவை சிறந்து விழங்கின.

அன்பு
இல்லறத்தில் அன்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அன்புடையோரே பண்புடையவராக மதிக்கப்பட்டனர் என்பதனை 

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாக்கை
பண்பும் பயனும் அது” (குறள் 45)

வள்ளுவர் தெளிவாக எடுத்துரைக்கிறார். தலைவன், தலைவி யிடையேன் உள்ள அன்பினை 

“செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே” (குறுந் 49)

செம்மண் நிலத்தில் பெய்த நீரானது மண்ணுடன் கலந்தபின் அதை பிரிப்பது என்பது சாத்தியம் இல்லையோ அதுபோல தலைவனும், தலைவியும் தம்முள் மாறாத அன்பு பூண்டு ஒன்றினைந்து வாழ்ந்தால் இல்லறமானது நல்லறமாகும் இப் பாடலடிகள் விளக்குகின்றன. மேலும்,

“இம்மை மாறி மறுமை ஆகினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” 

என்ற பாடல் வரிகள் மூலம் இந்தப் பிறவி மட்டுமில்லாமல், மறுபிறப்பு உண்டாயினும் என்னுடைய தலைவன் நீயே ஆக வேண்டும், நின்னுடைய மனம் ஒத்த மனைவியாக நானே இருக்க வேண்டும் என்று தலைவி கூறுவதில் இருந்து இல்லறத்தில் அன்பு ஒன்ரே உயிர் மூச்சாக இருந்த்து என்பதை நம்மால் அறிய முடிகிறது.

விருந்தோம்பல்
அன்பு நெறி கொண்டு வாழும் இல்லற்த்தின் முக்கிய கடமையாக விருந்தோம்புதல்  இருந்தது. அனிச்சப்பூ மோந்து பார்த்தால் வாடிவிடும் ஆனால் முகம் மாறுபட்டுப் பார்த்த அளவிலேயே விருந்தினர்கள் வாடிவிடுவர் என்பதனை

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (குறள் 90)

குறள் வழி வள்ளுவர் விளக்குகிறார்.

தம் இல்லம் நாடி வரும் விருந்தினரை இன் முகத்துடன் வரவேற்று இனிய மொழிகள் பேசி கனிவுடன் உபசரிக்க வேண்டும் அப்போதுதான் விருந்தோம்பல் சிறக்கும். 

“பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினர்” (புறம் 101)

என்ற பாடல் எத்தனை முறை விருந்திற்கு வந்தாலும் முதல் நாள் உபசரித்ததைப் போன்றே விருப்பத்துடன் உபசரிக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. மேலும் இரவில் விருந்தினர்கள் வந்தாலும் மனைவி கணவனுடன் இனைந்து மனமகிழ்ச்சியுடன் விருந்து படைக்கும் செய்தியினை

“அல்இல் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே” (நற் 142)

என்ற நற்றிணைப் பாடல் வரிகள் சுட்டுகின்றன. கணவனுடன் கூடிவாழும் மங்கல மகளிர்க்குரிய தனி உரிமையாக விருந்தோம்பல் விளங்கியது. கணவனை இழந்தவர்களும், பிரிந்து வாழ்பவர்களும் விருந்தை எதிர்கொள்ளுதல் கூடாது என்பதனை

“அற்வோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை “ (சிலம்பு கொலை 71-73)

கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி தனக்கு நேர்ந்த இழப்புகளை நிரல்படுத்தும் போது தன்னால் விருந்தெதிர் கொள்ள முடியாத நிலையைக் கூறுவதில் இருந்து விருந்தோம்பலின் உயரிய நிலையை அறிய முடிகிறது.

முடிவு
சங்க கால மக்கள் தம் அகவாழ்வை களவு, கற்பு என் இரண்டாகப் பிரித்திருந்தனர்.
தலைவனும், தலைவியும் கூடி வாழும் இல்லற வாழ்வே கற்பு வாழ்வு எனப்பட்டது.
இல்லறத்தில் தலைவன் வினை மேற்கொள்ளுதல், பெற்றோர், மனைவி, மக்கள் ஆகியோரைக் காதலையே தனது தலையாய கடமையாகக் கொண்டிருந்தான்.
அன்பு ஒன்றே இல்லறத்தை பண்புடையதாக மாற்றியது.
அன்பு நெறி கொண்டு வாழும் இல்லற்த்தின் முக்கிய கடமையாக விருந்தோம்புதல்  இருந்தது.
கணவனுடன் கூடிவாழும் மங்கல மகளிர்க்குரிய தனி உரிமையாக விருந்தோம்பல் விளங்கியது. கணவனை இழந்தவர்களும், பிரிந்து வாழ்பவர்களும் விருந்தை எதிர்கொள்ளுதல் மறுக்கப்பட்டது.
சங்ககால மக்கள் கற்பு வாழ்வினை பெரிதும் போற்றினர் என்பதை சங்க இலக்கியப்பாடல் மூலம் நம்மால் அறிய மிடிகிறது.

உசாத்துணை நூல்கள்:

1,தொல்காப்பியம்
2.சிலப்பதிகாரம்
3,.நற்றிணை
4. திருக்குறள்
5. புறநானூறு

 

* கட்டுரையாளர்: - பேரா.ஹரிபாண்டிராஜன், உதவிப்பேராசிரியர்முதுகலைத்தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர். -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard