New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாலடியார் உணர்த்தும் ஈகைநெறிகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
நாலடியார் உணர்த்தும் ஈகைநெறிகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


நாலடியார் உணர்த்தும் ஈகைநெறிகள்

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. சங்க மருவிய காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் இடம்பெறும் ஈகை நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் நாலடியார்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் சமணமுனிவர்கள்.திருக்குறளுக்கு அடுத்த பெருமை வாய்ந்த நீதி நூல் “நாலடியார்” ஆகும் நான்கு அடிகளைப் பெற்று ‘ஆர்’எனும் சிறப்பு விகுதி பெற்றதால் நாலடியார் என்று அழைக்கப்படுகிறது.இந்நூல் கூறும் கருத்துக்கள் பொருட் செறிவுடையனவாகவும் அறிவிற்கு இன்பம் பயப்பனவாகவும் அமைகின்றன.40 அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப் 10 பாடல்கள்; வீதம் நானூறு பாடல்களையும் திருக்குறளைப் போலவே அறம்,பொருள்,இன்பம் எனும் உறுதிப்பொருள்களையும்  கொண்டுள்ளது.அறத்துப்பால் 13 அதிகாரங்களையும், பொருட்பால் 24 அதிகாரங்களையும் காமத்துப்பால் 3 மூன்று அதிகாரங்களையும் கொண்டு அமைந்துள்ளது.மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களை தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல்அமைந்துள்ளது.

ஈகை என்பதன் பொருள்
ஈகை என்பதற்கு இண்டங்கொடி,கற்பக மரம்,காடை,கொடை,பொன்,முகில்,வண்மை என்று பொருள் விளக்கம் அளிக்கிறது கௌரா தமிழ் அகராதி. (ப.112)
மேலும் கொடுத்து உதவும் தன்மையே ஈகை என்கிறார் வள்ளுவர் இதனை,

வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து   (221)


என்ற குறளின் வழி அறியமுடிகிறது.

ஈகை செய்ய மனம்
செல்வம் வளம் இல்லாத போதும் இயன்றவரை மற்றவர்க்குத் தந்துதவுபவர்கள் செல்வம் நிறைய இருந்த போது வாரி வழங்குவார்கள்.தாம் தருவது மிகவும் சிறியது என்று கருதாது, இல்லை என்று சொல்லாது,எப்போதும் பயனுடைய அறத்தை அனைவரிடத்தும் செய்ய வேண்டும்.இப்படிச் செய்வதினால் புண்ணியப் பயனை அடைவதோடு மறுமை இன்பத்தையும் பெறுவர் என்று நாலடியார் பாடல்கள் (91,99) தெளிவுறுத்துகின்றன.

“ இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு”    (91)

“ இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது
அறப்பயன் யார்மாட்டும் செய்க –முறைப்புதவின்
துயம் புகூஉந் தவசி கடிஞைபோல்

பைய நிறைத்து விடும”       (99)

என்ற பாடல்கள் சான்று ஆகும்.இக்கருத்திற்கு ஏற்ப வள்ளுவர் கடமைகளை அறிந்த நல்லறிவுடையவர்,செல்வம் சுருங்கிய காலத்திலும் பிறர்க்கு உதவி செய்வதற்குத் தளரமாட்டார் என்று சுட்டுவதை,

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் 
கடனறி காட்சி யவர்           (218)


என்ற குறட்பா வழி அறியலாம்.

செல்வம் நிலையாமையினால் ஈகை செய்க 
பொருள் இருக்கும் போதே மேலும் பொருளைச் சேர்க்க முற்படாமல் தன்னிடம் உள்ள பொருளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறப்பான முறையில் வாழ்வை நடத்த வேண்டும்.நிறைந்த செல்வம் கொண்டவர் எவ்வளவு தான் இறுக்கப்பிடித்து வைத்தாலும் பிறர் துன்பத்திற்கு உதவாமல் வாழ்வதால் செல்வம் என்றும் நிலைத்திருக்காது செல்வ நிலையில்லாதது ஆகும்.இதனை நாலடியாரில்  92, 93 பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது.

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்
கொடுத்துத்தான் துயிப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுயர்ந்தக் கால்    (நாலடி.98)


என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.இக்கருத்திற்கு ஏற்ப வள்ளுவர்,தம்முடையதல்லாத பொருளை வருந்திக் காப்பாற்றினாலும் ஊழால் நில்லாமற் போய்விடும்.தம்முடைய பொருளை வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் ஊழால் போகாது என்று குறிப்பிடுவதை,

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம        (குறள்.376)


என்ற குறட்பாவழி அறியலாம்.சிறுபஞ்சமூலமும் தன்னிடம் பொருள் உள்ளவன் வள்ளல் போலும்,வாணிகம் செய்பவன் போலும் பிறர்க்கு வழங்க வேண்டும் என்கிறது இதனை,

வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிதும் (சிறுபஞ்.34)

என்ற பாடல் வரி மூலம் அறியலாம்.

ஈகை செய்வோர் பயன்மரம் போன்றோர்
ஊருக்குள்ளே ஓர் உயர்ந்த இடத்தில் ,எல்லோரும் வந்து பயன் பெற்றுச் செல்லுமாறு காய்த்துக் குலுங்கும் பயனுடைய பனைமரம் போன்றவர்கள் பலரும் விரும்பி வந்து பயன் பெறும்படி பிறர்க்குதவி வாழ்கின்ற பெரியோர்கள் ஆவர்.அப்படி இல்லாது,மிகப் பெரிய அளவு செல்வச் சிறப்பிருந்தும், பிறருக்கு உதவி வாழாதவர்கள்,ஒருவருக்கும் பயன்படாது ஊருக்கு வெளியே சுடுகாட்டில் இருக்கும் வெற்றுப் பனைமரம் போன்றவர்களாவர்.எனவே செல்வம் இருக்கும் போது பலருக்கும் பயன்படும்படி இருக்க வேண்டும் என்பதை,

நடுவூருள் வேதிகை சுற்றக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுன் ஒற்றைப் பனை  (நாலடி.96)


என்ற நாலடியார் பாடல் மூலம் அறியலாம்.இக்கருத்திற்கு ஏற்ப வள்ளுவர், பிறர்க்கு உதவி செய்வனிடத்தில் செல்வம் உண்டாகுமானால்,அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிக்க மரத்தால் பழம் பழுத்தது போன்றதாகும் என்று

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்  (216) 


என்ற குறள் வழி அறிவுறுத்துகிறார்.

வறியவர்க்கு ஈவதே ஈகை
பெய்ய வேண்டிய காலத்தில் மழை பெய்யாது போனாலும்,செய்ய வேண்டிய நற்செயல்களை உலக மக்கள் செய்யாது விட்டாலும்,கடற்கரையின் மீன் நாற்றத்தைப் போக்கப்,பூமணம் தருகின்ற புன்னை மரங்களுடைய நெய்தல் நிலத்தலைவனே,உலகம் எப்படிப் பிழைக்கும் உயிர் வாழும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்பது நாலடியார் சுட்டும் கருத்து ஆகும்.

பெய்ற்பால் மறைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் -கயற்புலால்
புன்னை கடியும் பொடுகடல் தண்சேர்ப்ப
என்னை உலகுய்யு மாறு    (நாலடி-97)


மேற்கூறப்பட்ட பாடலால் அறியலாம்.

கைம்மாறு கருதாத ஈகை
பயன் கருதாது,தன்னை நாடி வந்தவர்களுக்குத் தந்துதவுதே நல்ல ஆண்மகனுக்குரிய இலக்கணமாகும்.குளிர்ந்த கடல் சூழ்ந்த நிலத்துக்குரியவனே,இன்ன உதவியை இவர்க்குச் செய்தால்,நாம் இவ்வளவு பயன் பெறலாம்.என்றெண்ணிப் பலனை எதிர்பார்த்துச் செய்கின்ற உதவி ஈகையாகாது.அது கொடுக்கல் வாங்கல் போன்றதே ஆகும்.எனவே தம்மால் முடிந்தவரை பிறர்க்கு உதவி செய்ய வேண்டும் என்பதை,

ஏற்றகைம் மாற்றாமை என்னானுந்த தாம்வரையா
நாற்றாதார்க் தீவதாம் ஆண்கடன் ஆற்றின் 
மலிகடல் தண்சேர்ப்ப மாற்வார்க் கீதப்
பொலிகடன் என்னும் பெயர்த்து  (நாலடி.98)

ஈகை புகழைத் தரும்என்ற பாடலால் சமணமுனிவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஈகை புகழைத் தரும்
அறையும் முரசின் ஒலி ஒரு காத தூரம் தான் கேட்கும்.முழங்கும் இடி ஓசை பல மைல் தூரம் கேட்கும்,ஆனால் அடுத்தடுத்து இருக்கின்ற மூன்று உலகங்களிலும் கேட்கும்,ஏழைக்கு உதவிய சான்றோரின் புகழ் பிறர்க்கு உதவி வாழும் பெருங்குணத்தினால் வருகின்ற புகழ் அளவிடற்கரியது என்பதை,

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையார் கேட்பா 
அடுக்கிய மூவுலகில் கேட்குமே சான்றோர் 
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்     (நாலடி.100)


என்ற நாலடியார் பாடல் வழி மூலம் அறியலாம்.இக்கருத்திற்கு ஏற்ப வள்ளுவர்,தனக்கு ஒப்பில்லாது உயர்ந்த புகழைத் தவிர,இவ்வுலக்கத்தில் அழியாமல் இருப்பது வேறொன்றில்லை என்ற கருத்தினைப் பேசுகிறார்.இதனை,

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்   (233)


என்ற குறட்பா மூலம் அறியலாம்.

ஏழைக்கு உதவி செய்
மறுபிறப்பிலும் இப்பிறப்பிலும் இல்லாதவர்க்கு உதவி வாழ்வதன் பெருமை உணர்ந்து, இயன்றவரை ஏழைக்கு உதவி வாழ வேண்டும்.கொடுத்துதவி வாழ வேண்டும்.எனவே தானம் தருவதைவிடப் பிச்சை எடுக்காமலாவது இருக்க வேண்டும். எனவே தானம் தருவதைவிட பிச்சை பெறாமல் இருப்பது இரு மடங்கு சிறப்பானதாகும் என்று கூறுகிறது.இதனை,

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் -வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்  (நாலடி.95)


என்ற பாடல் சுட்டுகிறது.இக்கருத்திற்கு ஏற்ப வள்ளுவர், தம்மிடத்தில் உள்ளதை மறைக்காமல்மகிழ்ந்து கொடுக்கும்படியான கண் போன்ற சிறந்தவரிடத்திலும் இரவாமல் இருத்தலே கோடி மடங்கு நல்லது என்ற கருத்தினை,

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரமை கோடி யுறும்   (1061)


என்ற குறட்பா வழி எடுத்துரைக்கிறார்.

ஈகை செய்யாமல் இருந்தால் வறியவராவர்
ஒரு சிறிய அரிசியின் அளவாவது நாள்தோறும் பிறர்க்கு கொடுத்தபின் உண்ண வேண்டும்.ஏனென்றால் இவ்வுலகில் உணவுக்கு வழி இல்லாத வறியவர்கள் தாம் முற்பிறவியில் பிறருக்கு ஒன்றும் உதவாமல் இருந்தவர்களாவர் என்ற கருத்தை,

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின உம்மை
கெடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்    (நாலடி.94)


என்று நாலடி சுட்டுகிறது.

முடிவுரை
ஈகை என்பதன் பொருள் பற்றியும், ஈகை செய்ய மனம் வேண்டும் என்றும், ஈகை புகழைத் தரும் என்றும் ஏழைக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், கைம்மாறு கருதாமல் ஈகை செய்ய வேண்டும், செல்வம் நிலையாமையினால் ஈகை செய்க என்றும், ஈகை செய்யாமல் இருந்தால் வறியவராவர் என்று ஈகை தொடர்பான கருத்துக்களை இயம்பியுள்ளன.இதன் மூலம் சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஈகை செய்ய வேண்டும் என்று இந்நூலாசிரியர்  எடுத்துரைக்கின்ற செய்தியை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)          பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)          பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2  செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)          பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)             நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
5.அகராதி                         கௌரா தமிழ் அகராதி
6.கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ)                 ஆசாரக்கோவை மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு -2014   
7.இராசாராம் .துரை                    பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை)   மூன்றாம் பகுதி முல்லை நிலையம்  சென்னை 17 முதற்பதிப்பு - 1995

jenifersundararajan@gmail.com

#கட்டுரையாளர்: - சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி -24 -  முன்னுரை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard