New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏலாதி உணர்த்தும் ஈகை - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
ஏலாதி உணர்த்தும் ஈகை - சு.ஜெனிபர்
Permalink  
 


ஏலாதி உணர்த்தும் ஈகை

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்க மருவிய கால இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.அடிநிமிர்பு இல்லாச் செய்யுட் தொகுதியால் அறம்,பொருள்,இன்பத்தைப் பாடுவது கீழ்க்கணக்கு என்று பன்னிருபாட்டியல் இலக்கணம் பகர்கிறது.பதினெட்டு நூல்கள் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் ஆனவை.அறநூல் பதினொன்றில் ஒன்றாக ஏலாதி என்ற நூல் விளங்குகிறது. மருந்தால் பெயர் பெற்ற நூல் ஆகும்.ஏலாதி என்பதற்கு ஏலத்தை முதலாக உடையது என்று பொருள். ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ (தக்கோலம், நாககேசரம்) சுக்கு,  மிளகு, திப்பிலி என்ற ஆறும் ஏலாதி எனப்படும்.மொத்தம் 80 பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் ஆவார்.இந்நூலில் இடம்பெறும் ஈகை செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஈகை என்பதன் பொருள்
தமிழ் - தமிழ்  அகர முதலி ஈகை என்பதற்கு கொடை,பொன்,இண்டு,புலி தொடக்கி,காடை,காற்று,கற்பக மரம்,இல்லாமை,ஈதல்,கொடுத்தல் என்று பல்வேறு விளக்கமளிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி ஈகை என்பதற்கு கொடை,பொன்,கற்பகம்,ஈங்கை,காடை என்று பல்வேறு பொருள் தருகிறது.

ஈகையே அழகு
ஈகை என்ற இயல்பு உயர்குடியில் பிறந்த நான்கு வேதங்களிலும் வழிநடப்பவர்களுக்கு எக்காலத்திலும் அழகைத் தரக்கூடியதாகும்.இதனை,

…………………………வள்ளன்மை – என்றும்
அளிவந்து ஆர் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு   (ஏலம்.1)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.மேலும் மற்றொரு (ஏலம்.3)பாடலில் ஈகை செய்தல் அரிது என்று  (தானம் அரிது)  எடுத்துரைக்கிறது.

ஈகை குணம் உடையவரே தாய்

………………………………….கொடையே
………………………………………………
வேய் அன்ன தோளாய் இவை உடையான் பல் உயிர்க்கும்
தாய் அன்னன் என்ன தகும்  (ஏலம்.6)

மேற்கூறப்பட்ட பாடல் வரிகளின் மூலம் வறியவர்க்கு கொடுக்கும் பண்புகளையுடையவரே எல்லாவுயிர்க்கும் தாய் போன்ற அன்புடையவர் என எல்லோராலும் போற்றப்படுகின்றார்.

ஈகை குணம் உடையவரே சான்றோர்
பொருளற்ற வறியவர்க்கும் பற்றற்ற துறவியர்க்கும் உணவு,மருந்து,இடம்,உடை ஆகியவற்றை கொடுக்கின்றவர்கள் அறிவுடைய சான்றோர்கள் என்று அனைவராலும் மதிக்கப்படுவர் இதனை,

…………………………………அற்றார்கட்கு
உண்டி உறையுள் உடுக்கை இவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று  (ஏலம்.6)

என்ற பாடலடிகளின் மூலம் அறியலாம்.

ஈகை நற்பண்பை வளர்க்கும்
தம்மிடம் சிறிதளவு பொருள் இருந்தாலும் பிறர்க்கு இல்லையெனக் கூறாது கொடுத்தல் ஒருவருக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் ஆகும்.

…………………………….பண்போலும்
சொல்லார்க்கு அருமறைசேர ராமை சிறிது எனினும்
இல்லார்க்கு இடர்தீர்த்தல் நன்று    (ஏலம்.15)

என்ற பாடல் வரியால் அறியலாம்.மேலும் மற்றொரு பாடலில் (16); துணையற்றவர்களுக்கு உதவுதலும் ஈகை ஆகும்.

உடல் உறுப்புகளை அறுத்து ஈகை செய்தல்
தனது உடல் உறுப்புக்களை அறுத்துக் கொடுப்பது போன்ற ஈகையை விரும்பும் பண்புகளை உடையவன் மிகச் சிறப்புடையவன் ஆவான்.

உறுப்பு அறுத்தன்ன கொடை உவப்பான் தன்னின்
வெறுப்பு அறுத்தான் விண்ணகத்தும் இல்   (ஏலம்.20)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. உறுப்பறுத்தன்னை கொடையுவப்பான் என்ற தொடர் தன் தொடைத்தசையினை புறாவிற்காக அறுத்து அளித்த சிபிசக்கரவர்த்தியை நினைவூட்டுகிறது.

புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக்
குறைவி லுடம்பரித்த கொற்றவன்   (சிலம்பு)(யாழ்.சு.சந்திரா,பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3,ப.155)

ஏழைகளுக்கு கொடுத்து உதவுதல்
……………….பொருளோடு வாழ்வு ஆயு –உரையானாய்
பூ ஆதி வண்டுதேர்ந்து உண்குழலாய் -ஈத்து உண்பான்
தேவாதி தேவனாத் தேறு    (ஏலம்.32)

ஒன்றுமில்லாத ஏழைகளுக்கு இல்லை என்னாது கொடுத்து தானும் உண்பவனாய் எவன் விளங்குகிறானோ அவன் தலைவனாவான் வண்டுகள் மொய்க்கின்ற மலர்களையணிந்த கூந்தலையுடைய பெண்ணே.

ஈகை செய்பவன் தேவர்களுக்கு தலைவனாவன்
……………………………..நசையவர்க்குக்
கூடுவது ஈவானை –கொவ்வை போல் செவ்வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து  (ஏலம்34)

மேற்கூறப்பட்ட பாடலடிகளில் தன்னை விரும்பி வந்தவர்களுக்குக் கொடுத்துதவுதலும் குணமாக உடையவனை மேலுலகிலுள்ள தேவர்கள் தங்களுக்குத் தலைவனாக்க கருதுவர்.

உணவுக்கொடுத்தால் மறுப்பிறவியில் அரசனாவான்
எல்லாவற்றையும் துறந்த துறவிகளுக்கும்,எதனையும் துறவாது இல்வாழ்வாராக இருந்து விருந்தினராக வருபவருக்கும்,ஒன்றுமில்லாத வறியவர்க்கும்,காணப்படாத தென் புலத்தாருக்கும்,தனக்கு ஒப்பில்லாத ஏழைகளுக்கும்,துணையற்ற சிறுவர்க்கும்,சான்றோர்களுக்கும்   நல்வழியில் தேடிய உணவைப் பகுத்துக் கொடுப்பவன்,மறுபிறவியில் அரசனாய் உலகத்தை ஆள்வான்.

துறந்தார் துறவாதார் துப்பு இலார் தோன்றாது
இறந்தார் ஈடுஅற்றார் இணையர் -சிறந்தவர்க்கும்
பண் ஆளும் சொல்லாய் - பழி இல் ஊண் பாற்படுத்தான்
மண் ஆளும் மன்னனாய் மற்று    (ஏலம்.35)

என்ற பாடலால் அறியலாம்.

விளிம்புநிலை மக்களுக்கு கொடுத்தல்
கால்இல்லார் கண்இல்லார் நாஇல்லார்  யாரையும்
பால் இல்லார் பற்றிய நூல் இல்லார் - சாலவும்
ஆழப்படும் ஊண் அமைத்தார் இமையவரால்
வீழப்படுவார்,விரைந்து   (ஏலம்.36)

என்ற மேற்கூறப்பட்ட பாடலானது கால் இல்லாதவர்களுக்கும்,பேச முடியாதவர்களுக்கும்,துணைஇல்லாதவர்களுக்கும்,நூலறிவில்லாதவர்களுக்கும், அதிகமாக உணவு தருகின்றவரை தேவர்கள் மிகுதியாக விரும்புவர்.

ஈகை அறநெறிக் கூறும் நூலுக்கு சமம்
வறுமை உடையவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவனுக்கு அறநெறிக்கு கூறும் நூல் எதுவும் தேவையில்லை என்கிறார் கணிமேதாவியார்,

ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின் நெறி நூல்கள்
பாடுஇறப்ப பன்னும் இடத்து    (ஏலம்.41)

என்ற பாடலடி உணர்த்துகிறது.

ஈகை செய்யும் அரசன் பிற அரசர்களை அடக்குவான்
குடிப்படுத்துக் கூழ்ஈந்தான் -கொல்யானை ஏறி
அடிப்படுப்பான்,மண் ஆண்டு அரசு   (ஏலம்.42)

மேற்கூறப்பட்ட பாடலானது பிறருக்கு உணவு அளிப்பவன் உலகத்தை அரசாள்வதோடு கொல்லும் தன்மையுள்ள யானையின் மேலேறி ஏனைய அரசர்களைத் தனக்கு அடங்கிச் செய்கின்ற மேன்மையையடைவான் என்ற கருத்தை தெளிவுப்படுத்துகிறது.

தவம் செய்வோர்க்கு உணவுக் கொடுத்தல்
சுறாமீன் போன்று வடிவமைக்கப்பட்ட தோரணத்தையுடைய பெரிய மாளிகையிடத்தில் இருப்பவன் தவம் செய்வோர்க்கு உணவுக் கொடுத்துள்ளான் என்பதை,

வான் மகரவார்குழையாய் - மாதவர்க்கு ஊண்ஈந்தான்
தான் மகர வாய்மாடத் தான்   (ஏலம்.43)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

உணவைப் பகுத்து கொடுப்பவன் புகழுடன் வாழ்வான்
தூய்மையான உணவைப் பகுத்துக்கொடுப்பவனும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்திற்கு அரசனாகி ஐவகைப் புலனின்பங்களையும் நுகர்ந்து புகழுடன் வாழ்வான் என்பதை,

ஈத்து உண்பான் ஆகும் - இருங்கடல் சூழ் மண் அரசாய்ப்
பாத்து உண்பான் ஏத்து உண்பான் பாடு    (ஏலம்.44)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.

விருந்தோம்பல்
தமிழரின் தலைச்சிறந்த பண்பாடு விருந்தோம்பல் ஆகும். இல்லத்திற்கு புதிதாக வருபவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கே விருந்தோம்பல் ஆகும். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி விருந்தோம்பல் என்பதற்கு புதிதாக வருபரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை என்று பொருள் கூறுகிறது.

……………………………………………..ஒழுக்கத்தால்
செல்வான் செயரில் இல்ஊண் ஈவான் - அரசுஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து   (ஏலம்.45)

என்ற பாடலில் நன்னடத்தையில் நடந்து,குற்றமற்ற உணவை விருந்தினர்க்குக் (பிறர்க்கு) கொடுத்து வாழ்பவன்,பகைவரை வென்று அரசாள்வான் என்று எடுத்துரைக்கிறது.

வறியவர்களை இகழக்கூடாது
வறியவர்களை இகழாமல் பிறர்க்கு கொடுத்துண்டானாயின் குறையில்லாத வளமிக்க நாட்டைப் பெற்று ஆட்சி செய்வான்.இதனை,

…………………………………….எளியாரை
எள்ளான் ஈத்து உண்பானேல் எளியாரை ஏதம் இல் மண் ஆண்டு
கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து  (ஏலம்.46)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.

வாழ்க்கையின் பயனை ஆராய்ந்து விருந்தினர்க்கு உணவு அளிப்பவன் நிச்சயமாக அரசாள்வான் இதனை,

தேறான் இடையான் தெளிந்து அடிசில் ஈத்து உண்பான்
மாறான் மண் ஆளுமாம் மற்று  (ஏலம்.47)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

உணவைப் பிறருக்கு கொடுத்து உண்ண வேண்டும்
விருந்தினர்க்குப் பொருளை மறைக்காமலும் தன் வீட்டில் இனிய சொற்களைப் பேசி உணவினையளித்தும்,அவர்களுக்கு அளித்துத் தானும் உண்ணலும் இவற்றையெல்லாம் செய்பவன் அழிவில்லாத நிலையான அரசுரிமையைப் பெறுவான்.என்பதை,

“தன் இல்லுள்
சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின் - சொல்லிஅரவம்
கேளான் கிளைஓம்பிற்,கேடுஇல் அரசனாய்
வாளான்மண் ஆண்கு வரும்”   (ஏலம்.48)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

வேண்டியதை வேண்டியவர்க்கு கொடுக்க வேண்டும்
யானை,குதிரை,பொன்,பெண்,பசுவின் கூட்டம் ஏனைய ஈகைப் பொருட்களை அறிவு ஆராய்ச்சியோடு வகை செய்து,வேண்டியதை வேண்டியவர்க்கு கொடுத்தவன் தவம் செய்பவர்களுக்கு பசு நெய்யுடன் உணவளித்து உபசரித்தவன். குபேரனைக் போல் தன் மதிப்புடையவனாய் வாழ்வாங்கு வாழ்வான்.ஈகையின் பெரும் சிறப்பை கூறுகிறது.இவற்றுள் துறவிகளுக்கு உணவு வேண்டற்பாலது.ஏனை ஒழிந்த இவையெல்லாம் என தனித்துச் சுட்டுகிறது.

ஈகை செய்தால் இன்ப வாழ்வு
எள்,பஞ்சினால் ஆகிய அரைஞாண்,எண்ணெய்,ஆடை,பணம்,போர்வை முதலியவற்றோடு உணவும் அளித்து ஏற்றுக் கொள்வீராக என அன்புடன் வேண்டிக் கொடுப்பவன் தன் மனைவி முதலிய சுற்றத்தாரோடு இன்பமாக வாழ்வான் என்று இந்நூல் இயம்புகிறது.இதனை,

எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை
வள்ளே துணியே இவற்றொடு கொள் என
அன்புற்று அசனம் கொடுத்தான் -துணையினோடு
இன்புற்று வாழ்வான் இயைந்து  (ஏலம்.53)

என்ற  பாடல்  தெளிவுப்படுத்துகிறது. மற்றொரு  பாடலில்  கடன்பட்டவர்களும் ,தம்மை காப்பவர் எவரும் 

இல்லாதவர்களுக்கும்,பொருளற்றவர்களுக்கும்,தம் கை,கால் இழந்து முடம்பட்டவர்களுக்கும் உள்ளமத்த    அன்புடையவராய், உணவளித்து தம் வீட்டில் வாழ வைப்பவர் இப்பூவுலகின் மேல் நால்வகைப் படைகளையும் உடையவராகச்       சுற்றத்தினரோடு   மகிழ்ச்சியுடன் வாழ்வர்.இதனை,

கடம்பட்டார் காப்பு இல்லார் கைத்துஇல்லார் தம்கால்
முடம்பட்டார் மூத்தோர் மூப்பு இல்லார்க்கு –உடம்பட்டு
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து உண்பார் - மண்மேல்
படையராய் வாழ்வார் பயின்று    (ஏலம்.53)

என்ற பாடலில் உணரமுடிகிறது.மேலும் 54 ஆம் பாடலில் பசித்தவர்கள்,தம்மைக் காத்துக் கொள்ளுதற்கு சிறிதளவு ஆதரவு அற்றவர்கள் ஆகியவர்களுடைய துன்பங்களைப் பயன்கருதாமல் தீர்த்து வைத்தவர்கள் இவ்வுலகத்தைச் செல்வச் செழிப்போடு சிறப்பாக ஆள்வார்கள் என்று கூறியுள்ளார்.

ஈன்றார் ஈன் கால்தளர்வார் சூலார் குழவிகள்
மான்றார் வளியான் மயங்கினார்க்கு ஆனார் என்று
ஊண் ஈய்த்து உறுநோய் களைந்தார் - பெருஞ்செல்வம்
காண் ஈய்த்து வாழ்வார் கலந்து (ஏலம்.55)

என்ற   பாடலில்   குழந்தைகளைப்  பெற்றவர்க்கும் ,குழந்தைகளைப்  பெறுகின்ற     காலத்தில் வேதனைப் படுபவர்க்கும் கருவுற்றிருக்கின்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவு மயங்கியவர்களுக்கும்,வாத நோயால் துன்புறுகிறவர்களுக்கும் அவர்களை எல்லாம் காப்பவர் என்று பிறர் போற்றும்படியாக உணவு முதலியவற்றைக் கொடுத்து,அவர்களுக்குண்டான நோய் முதலியவைகளை நீக்கியவர்கள் மிகுதியான பொருள்களை வறியவர்களுக்குக் கொடுத்து தம் உறவினர்களுடன் கூடி செல்வ சிறப்புடன் வாழ்வார்கள் என்ற கருத்து புலப்படுகிறது.

உறவினராக இருந்து ஈகை செய்
ஏலாதியில் இடம்பெறும் 56 ஆவது பாடல் உறவினராக இருந்து ஈகை செய்ய வேண்டும் என்கிறது இதனை,

தளையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டீர்
உளையார் ஊண் ஒன்றும் இல்லார் -கிளைஞராய்
மா அலந்த நோக்கினாய் ஊண் ஈயந்தார் மாக்கடல் சூழ்
நாவலம் தீவு ஆள்வாரே நன்கு  (ஏலம்.56)

என்ற பாடலில் பிளந்த மாவடுவைப் போன்ற கண்களையுடையவளே தான் செய்த குற்றத்திற்காகக் கைகளிலும்,கால்களிலும் தளையிடப்பட்டவர்கள்,பிறரால் தாக்கப்பட்டவர்கள் முன்வினையினால் மேல்நிலையிலிருந்து தாழ்ந்தவர்கள் பெண்கள் நோயால் வருந்துகிறவர்கள்,வறியவர்கள் ஆகியவர்களுக்கு உறவினராக இருந்து உணவு முதலியவற்றைக் கொடுத்து உதவுகின்றவர்கள் கடல் சூழ்ந்த இப்பாரத நாட்டை சிறப்புடன் ஆள்வார்கள் என்ற கருத்தைக் கூறுகிறது.

நோயாளிகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்
கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல் வளி காயும்
பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க்கு – அருஞ்சிரமம்
ஆற்றி ஊண்  ஈத்து அவை தீர்ந்தார் அரசராய்
போற்றி ஊண் உண்பார் புரந்து   (ஏலம் .57)

என்ற பாடல் ஆனது கொடிய சிரங்கு நோய்,வெள்ளைத் தொழு நோய்,கல்லடைப்பு நோய்,வாத நோய்,வருத்துகின்ற பெருஞ்சிரங்கு நோய்,பெரிய வயிற்றுத் தீ நோய்,ஆகியவற்றை உடையவர்களுக்கு அவர்களது பொறுத்தற்குரிய துன்பத்தைத் தணித்து,அவர்களுக்கு உணவிட்டுக் காப்பவர்கள் அரசர்களாகப் போற்றப்படுவார்கள் என்பதை அறியமுடிகிறது.

ஈகை செய்பவர்கள் பகைவர்களை வெல்லுவார்கள்
காமாடார் காமியார் கல்லார் இனம் சேரார்
ஆம் ஆபார் ஆயந்தார் நெறிநின்று தாம் ஆடாது
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார் முன் இம்மையான்
மாற்றாரை மாற்றிவாழ் வார்    (ஏலம்.58)

என்ற பாடலானது முற்பிறவியில் காமத்தை நுகராமலும்,பிறர் பொருளுக்கு ஆசைப்படாமலும்,படிக்காதவர் கூட்டத்தைச் சேராமலும்,நீரில் விளையாடாமலும், பெரியோர்களின் நெறிநின்று மாறாமல் ஒழுகி,தம்மை வேண்டி இரப்பவர்களுக்கு அவர்கள் மகிழ்ச்சியடையும் படி வேண்டியவற்றைக் கொடுப்பவர்கள்.இப்பிறப்பில் பகைவர்களை வென்று அரசர்களாய் வாழ்வார்கள் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.

மாணவர்களுக்கு ஈகை செய்தல்
நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஈகை செய்ய வேண்டும் என்கிறது ஏலாதி.
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்து இவை –மாணொடு
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் - இம்மையான்
வேட்டு எழுத வாழ்வார் விரிந்து   (ஏலம்.63)

என்ற பாடலானது நற்குண நற்செயல்களோடும் எண்ணும்,எழுத்துமாகிய கல்வியை ஆசிரியர்கள் இருக்கும் இடத்தில் பாடம் கேட்டு ஏட்டில் எழுதிப் படிக்கக் கூடிய மாணவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவர்.தலைசிறந்த மாணவர்களுக்கு உணவு,உடை,எழுத்தாணி,புத்தகம் (சுவடி) முதலியவற்றை கொடுத்துதவியவர்கள் இப்பிறப்பில் அறிஞர்களாய் தனது வரலாற்றை விரும்பி எழுதுமளவிற்கு பெருகிய வாழ்வினை வாழ்வார்கள் என்று மேதாவியார் எடுத்துரைத்துள்ளார்

நண்பர்களுக்கு உதவி செய்தல்
சாதல் பொருள் கொடுத்தல்
…………………………………………………………
…………………………………….ஆறுகுணம் ஆக
மென்புடையார் வைத்தார் விரித்து    (ஏலம்.68);

என்ற பாடலடிகள் நண்பர்கள் வறுமையுற்ற காலத்தில்,பொருள் கொடுத்து உதவிசெய்தலும் உண்மையான நண்பர்களுக்குரிய பண்புகளாகச் சான்றோர்கள் தமது நூல்களில் கூறுகின்றார்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.

மண்ணும் விண்ணும் ஆள்பவன்
ஐயமே பிச்சை அருந்தவர்க்கு ஊண் ஆடை
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான் -  வையகமும்
வானும் வரிசையால் தான் ஆளும் - நாளுமே
ஈனமே இன்றி இனிது   (ஏலம்.70)

வறியவர்க்குக் கொடுத்தல் துறவோர்க்குப்பிச்சையிடுதல்,தவமுடையவர்களுக்கு உணவளித்தல்,உடையில்லாதவர்களுக்கு உடை கொடுத்தல் ஆகிய செயல்களைச் செய்பவன் இம்மண்ணுலத்தோடு,விண்ணுலகத்தையும் எந்நாளும் குறைவில்லாமல் முறையோடு அரசாள்வான் என்ற கருத்து புலப்படுகிறது.

இல்லாளோடு செம்மையுறுவான்
யார் யார்க்கு உணவு அளிக்க வேண்டும் என்று ஏலாதி 71 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.

நடப்பார்க்கு ஊண் நல்பொறை தாங்கினார்க்கு ஊண்
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று –உடல்சார்ந்த
வானகத்தார்க்கு ஊணே மறுதலையார்க்கு ஊண் அமைந்தான்
தான் அகத்தே வாழ்வான் தக   (ஏலம்.71)

என்ற பாடல் ஆனது வழி நடப்பார்க்கு நல்ல உணவும்,மிக்க சுமையை எடுத்து வருபவர்க்கும் நல்ல உணவும்,நோயாளிகளுக்கு உரிய உணவும்,உறவினர்க்கு உணவும்,நோயாளிகளிக்கு உரிய உணவும்,தமது உறவினர்களுக்கு இறந்த பொழுது நீர்க்கடன் ஆற்றுதலும்,வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு உணவும் என அளித்து மகிழ்பவன் தனது இல்லாளோடும் செம்மையாக வாழ்வான் என்பதை புலப்படுத்துகிறது.

ஈகை செய்தால் செல்வத்துடன் வாழலாம்
ஈகை செய்தால் செல்வத்துடன் வாழலாம் என்ற கருத்தை ஏலாதி 78 ஆம் பாடல் பதிவுச்செய்துள்ளது.
தாய் இழந்த பிள்ளை தலை இழந்த பெண்டாட்டி
வாய் இழந்த வாழ்வினார் வாணிகம் - போய்இழந்தார்
கைத்து ஊண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கு ஈய்ந்தார்
வைத்து வழங்கி வாழ்வார்  (ஏலம்.78)

தாயை இழந்த பிள்ளைக்கும்,தலைவனை இழந்த மனைவிக்கும் பேசும் திறனற்ற ஊமைகளுக்கும்,வணிகத்தில் முதற்பொருளை இழந்தவர்களுக்கும்,செல்வத்தை இழந்து உணவிற்குக் கூட வழியின்றி இருப்பவர்களுக்கும் பார்வைப் புலம் இழந்த குருடர்களுக்கும் வேண்டுவனக் கொடுத்து ஆதரித்தால் பொருள் பெருகிச் செல்வநிலை அடைவர் பிறருக்கும் அளித்து தாமும் அனுபவிக்கும் இன்ப வாழ்வு வாழ்வர் என்று இந்நூல் விளம்புகிறது.

முடிவுரை
ஈகையில் ஒன்றான உணவு கொடுத்து வழங்கிய செய்திகள் 21 பாடல்களில் கணிமேதாவியார் விளக்கியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.

ஈகை என்பதன் பொருளை உணரமுடிகிறது.எல்லா அழகை விட ஈகை அழகே சிறந்தது என்றும், ஈகை குணம் உடையவனே தாய் போன்றவர் என்றும் ஈகை குணம் உடையவரே சான்றோர் என்றும்  ஈகையே நற்பண்பை வளர்க்கும் என்றும்  ஈகை அறநெறிக் கூறும் நூலுக்கு சமம் என்றும் வறியவர்களை இகழக்கூடாது என்றும்  உறவினராக இருந்து ஈகை செய்ய வேண்டும் என்றும்  நோயாளிகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றும் ஈகை செய்பவர்கள் பகைவர்களை வெல்லுவார்கள் என்றும்  மாணவர்களுக்கு ஈகை செய்தல் வேண்டும் என்றும்  ஈகை செய்பவர்கள் பகைவர்களை வெல்லுவார்கள் என்றும் ஈகையினால் ஒருவன் மண்ணும் விண்ணும் ஆள்பவன் என்ற கருத்து புலப்படுகிறது.

துணைநூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001  முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017  முதற்பதிப்பு -2014
5.அகராதி    தமிழ் - தமிழ் அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழக அகராதி
6.  கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ) ஏலாதி மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு -2007  
7.இராசாராம் .துரை பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) மூன்றாம் பகுதி முல்லை நிலையம் சென்னை 17 முதற்பதிப்பு - 1995

jenifersundararajan@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard