New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் நெறிகள் - சு.ஜெனிபர்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் நெறிகள் - சு.ஜெனிபர்
Permalink  
 


இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் நெறிகள்

E-mailPrintPDF

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. சங்க காலத்தில் போட்டி, பூசல், மது அருந்துதல் ஆகிய நிலைபாடுகளை ஒழிப்பதற்காக சங்க மருவிய காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இனியவை நாற்பதில் இடம்பெறும் மனித வாழ்க்கைக்கு உகந்த வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் இனியவை நாற்பது
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இவர் சிவன, திருமால், பிரம்மன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் ஆவார். இந்நூல் நான்கு இனிய பொருட்களை எடுத்துக்கூறும் பாடல்கள் நான்கு மட்டுமே (ஒன்று, மூன்று, நான்கு, ஐந்து ) எஞ்சியவை மும்மூன்று இனிய பொருட்களையே சுட்டியுள்ளன. கடவுள் வாழ்த்து உட்பட நாற்பத்தொரு பாடல்களை கொண்டுள்ளன. மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களை தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது. இல்லறம்
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதே இல்லறம் ஆகும்.வள்ளுவர் இல்லறத்தை அறத்துப்பாலில் தனி ஓர் அதிகாரமாக வைத்துள்ளார். இல்லறம் என்பதற்கு செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி இல்லத்திலிருந்து செய்யும் அறம் என்று விளக்கம் அளிக்கிறது. இனியவை நாற்பதில் இல்லறம் பற்றிய செய்திகள் இரண்டு பாடல்களில் அமைந்துள்ளன.கணவனும் மனைவியும் ஒத்து வாழ்வது இல்லறத்தின் தலையானது.இதிலிருந்து மாறுப்பட்டு வாழக்கூடாது என்பதை,

ஓப்ப முடித்தால் மனைவாழ்கை முன் இனிது     (பா.3:2)

என்ற பாடல் வரியில் அறியலாம்.இக்கருத்தையே நன்னெறியும்,

காதல் மனையாளும் காதலனும் மாறுஇன்றி
தீதில் ஒருகருமம் செய்பவே                (பா.6;1 -2)


என்று கூறுகிறது.  பெண்கள் கற்புடன் வாழ்வதே சிறந்தது.இல்லறத்தில் வாழும் பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லை என்றால் நீங்கி வாழ்வது நல்லது என்பதை,

நிறை மாண்டில் பெண்டிரை நீக்கல் இனிது (இனி.நாற்.பா.11:2)

என்ற பாடல் வரியால் மணவிலக்கு வழக்காறு இல்லாத  அக்காலத்தில் கற்பு இல்லாத பெண்ணை நீக்கி வாழ்ந்த செய்தியையும் அறியமுடிகிறது.

பெற்றோரை மதித்தல்
தாய் தந்தையரைப் போற்றி வாழ வேண்டும் என்பதே சிறந்த அறப்பண்பு ஆகும். பெற்றோரைப் போற்றி வணங்க வேண்டும் என்பதை,

எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது (இனி.நாற்.பா.19:3-4)


என்ற பாடலடியால் அறியமுடிகிறது. இக்கருத்தையே ஆத்திசூடியும்

தந்தை தாய்ப் பேண் (ஆத்தி.பா.20)

கூறுகிறது.அத்தகைய தந்தை தீய வழியில் செல்லுபவனாக இருந்தால் அவனுக்கு கட்டுப்படத் தேவையில்லை என்பதை 

தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையானாகல்இனிது(இனி.நாற்.பா.8:34) 


என்ற பாடலடி உணர்த்துகிறது.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை (கொன்.பா.37)

என்னும் பிடிப்புள்ள மண்ணில் பூதஞ்சேந்தனார் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கல்வி
தனி மனித வாழ்வையும் நாட்டின் முன்னேற்றத்தையும் உயர்த்துவது கல்வி. அத்தகைய கல்வி மனிதனின் உள்ளத்தில் மறைந்து கிடக்கும் அறியாமை இருளை அகற்றுகிறது. கல்வி பற்றி அமுதன் அவர்கள் கூறும் போது கல்வி என்ற சொல்லுக்கு மனத்தைப் பண்படுத்தல் என்பதே பொருள். கல் என்னும் அடிச்சொல்லிலிருந்தே கல்வி, கலை, கலாச்சாரம் முதலிய பண்பாடுகள் விளங்குகின்றன என்பார்.

ப்ராய்டு கல்வித்தத்துவம் என்ற நூலில் கல்வியை பற்றி கூறும் போது கல்விச்செல்வம் மனித மனத்தை வளரச்செய்கிறது. கல்வி தன்னை உயர்த்துவதைக் காட்டிலும் தான் சார்ந்த சமூகத்தையும் நாட்டையும் பெருமையடையச் செய்கிறது என்பார்.சமுதாயத்தினரால் இழிவாக கருதப்படுவது பிச்சையெடுத்தல் ஆகும். இந்த நிலையை அடைந்தாவது கல்வியை கற்க வேண்டும் என்ற செய்தியை இனியவை நாற்பதும் கூறுகிறது. இதனை,

பிச்சைபுக் காயினும் கற்றல் மிக இனிதே(இனி.நாற்.ப.2:1)

என்ற பாடலடியால் அறியமுடிகிறது. இக்கருத்தையே வெற்றிவேற்கையும்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே(வெற்.பா.35)


கூறுகிறது.

கல்வியைப் பற்றிய கருத்துக்கள் இனியவை நாற்பதில் இரண்டு, நான்கு, பதின்மூன்று, இருபத்திஒன்று, பதினேழு, முப்பதுமூன்று, நாற்பத்தொன்று ஆகிய பாடல்களில் இடம்பெற்றுள்ளன. குற்றம் இல்லாமல் கல்வியை கற்க வேண்டும் என்றும் அச்சம் இல்லாமல் தான் கற்ற கல்வியை அறிஞர் சபையில் அரங்கேற்ற வேண்டும் என்றும் கற்றறிந்த பெரியோர்களின் உரைகளைப் போற்றி வாழ வேண்டும் என்றும் நூல்களின் பயனை உணர வேண்டும் என்றும் நாட்கள் தோறும் நன்மை தரும் நூல்களைப் படிக்க வேண்டும் என்ற கல்வித் தொடர்பான கருத்துக்களை எடுத்தியம்பியுள்ளன.

விருந்தோம்பல் 
தமிழரின் தலைச்சிறந்ந பண்பாடு விருந்தோம்பல் ஆகும். இல்லத்திற்கு புதிதாக வருபவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கே விருந்தோம்பல் ஆகும். சென்னைப் பல்கலைக்கழகத் தமி;ழ்ப் பேரகராதி விருந்தோம்பல் என்பதற்கு புதிதாக வருபரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை என்று பொருள் கூறுகிறது.

விருந்தோம்பல் பற்றிய செய்தியை ஒரு பாடலில் பூதஞ்சேந்தனார் கூறியுள்ளார். பொதுவாக எல்லா இலக்கியங்களும் விருந்தோம்பல் பற்றிய செய்திகளை கூறியுள்ளன. ஆனால் இனியவை நாற்பதில் விருந்தோம்பலில் யார் இல்லத்து விருந்து சிறந்தது என்பதை பதிவுச்செய்துள்ளது. இதனை

எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படும்
கற்றா உடையான் விருந்து (இனி.நாற்.பா.39:3-4)


என்ற பாடலடிகள் பாலை மிகுதியாகக் கறக்கும் ஆவுடையான் அளிக்கும் விருந்து மிகவும் இனிது என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

பெரியோரைத் துணைக்கொள்ளல் 
பெரியோர்களைப் போற்றி ஒழுகுவதும் வழி நின்று வாழ்வதுமே நல்ல அறச்செயலாகும்;. இனியவை நாற்பதில் ஒரு பாடலில் பெரியோரைத் துணைகொள்ள வேண்டும் என்கிறது. இதனை,

தெற்றவும் மேலாயார்ச் சோர்வு  (இனி.நாற்.பா.2:4)


என்ற பாடலடிகள் தெளிந்த அறிவுடைய பெரியோர்களோடு கூடி வாழ்வது நல்லது என்ற கருத்தை எடுத்தியம்பியுள்ளது. இதன் மூலம் பெரியோர்களைப் பின்பற்றி ஒழுக வேண்டும் என்ற செய்தியை அறியமுடிகிறது.

பிறர் மனை நோக்காமை
பிறரின் மனைவியை விரும்பாமல் இருப்பதே ஒழுக்கங்களுள் மிகவும் தலையானதாகும்.அறத்தையே இலட்சியமாக கொண்டவர்கள் பிறரின் மனைவியை விரும்பும் இழிவான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்;. பிறர் மனைவியை விரும்பி நோக்காத ஆடவரின் சிறப்பு பற்றி திருவள்ளுவர்,
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள்.148)

குறிப்பிட்டுள்ளார்.

இக்கருத்தே இனியவை நாற்பதிலும் இடம்பெறுகிறது. இதனை,

பிறன் மனை பின்னோக்காப் பீடினி(து)
ஆற்ற                    (இனி.நாற்.பா.16:1) 


என்ற பாடல்வரியால் பிறன்மனைநோக்காமையை அறியமுடிகிறது.

விலைமகளிரை நாடாமை
உள்ளத்து அன்பு இன்றி பொருள் ஒன்றேயே கருதும் பெண்கள் விலைமகளிர் ஆவார்கள். இளம்பூரணர் விலைமகளிர் பற்றி கூறும் போது ஆடலும் பாடலும் வல்லாராகி அழகுமிளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டு தங்காதார். (தொல்.பொருள்.பக்.53)
காண்பதற்கு தகுந்தவளாகவும், மெல்லிய தோள்களையும் உடைய விலைமகளிரின் வாயில் பிறக்கும் இன்சொல்லானது நரகத்தை அடைய வழிவகுக்கும் என்பதை,

காண்தகு மென்தோள் கணிகைவாய் இன்சொல்லும்
…………………………………………………….
……………………………………………………..
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு (திரி.பா.24:1-4)

என்ற பாடலடியின் மூலம் விலைமகளிரை நாடாமை அறியமுடிகிறது. இக்கருத்தே இனியவை நாற்பதிலும் ஒரு பாடலில் இடம்பெறுகிறது. இதனை,
தடமென் பணைத்தோள் தளரிய லாரை

விடமென் றுணர்தல் இனிது (இனி.நாற்.பா.38:3-4)


என்ற பாடலடிகள் விலைமகளிரை நஞ்சு என நினைக்க வேண்டும் என்ற செய்தியை அறியமுடிகிறது.

புலால் உண்ணாமை
உயிருள்ள உடலை கொன்று தம்முடைய ஊனைப் பெருக்கிக் கொள்வது அறச்செயல் அன்று. எல்லா உயிரையும் கொள்ளாமல் அன்பு செய்வதே சிறந்த பண்பாகும். இதனை பற்றி வள்ளுவர்,

தன்ஊண் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்(குறள்.251)


குறிப்பிட்டுள்ளார்.

இனியவை நாற்பதில் புலால் உண்ணாமை பற்றிய கருத்துக்கள் இரண்டு இடங்களில் கூறப்பட்டுள்ளன. ஓர் உயிரை கொல்லக் கூடாது என்பதை

கொல்லாமை முன் இனிது (இனி.நாற்.பா.6:1)

என்ற பாடலடியால் அறியலாம்.மேலும் உயிரைத் தின்று தனது ஊனை பெருக்கிக் கொள்ளக் கூடாது என்பதை

ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் ;இனிதே (இனி.நாற்.பா.5:2)

என்ற பாடலடி மூலம் புலால் உண்ணாமை செய்தியை அறியமுடிகிறது.

சோம்பல் இன்மை
சோம்பல் தன்மை ஒருவனுக்கு உள்ளச்சோர்வையும் உடற்சோர்வையும் உண்டாக்கும் தன்மை உடையது. வள்ளுவர் கெட்டுப் போபவர் அணியும் அணிகலனில் ஒன்று என்று சோம்பலைக் குறிப்பிட்டுள்ளார். இதனை,

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள்.605) 


என்ற குறளின் வழி அறியலாம்.பால்ஸ் அகராதி சோம்பல் என்பதற்கு முயற்சியின்மை ,சுறுசுறுப்பின்மை, வீண்பொழுது போக்குவது, உற்சாகமின்மை என பல்வேறு பொருள் கூறுகிறது.சோம்பல் பற்றிய கருத்து இனியவை நாற்பதில் ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை,

தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே (இனி.நாற்.பா.34:2)

என்ற பாடலடிகள் மூலம் சோம்பல் இல்லாமல் இருப்பது நல்லது என்ற செய்தியை அறியமுடிகிறது.

சினமின்மை
தன்னையும் தன்னைச் சார்ந்தவரையும் அழிப்பது சினம் கொள்ளாமையின் நன்மையைப் பற்றித் திருவள்ளுவர்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (குறள்.305)        

இனியவை நாற்பதில் சினமின்மை பற்றிய செய்திகள் மூன்று இடங்களில் கூறப்பட்டுள்ளது. இதனை,

வெல்லுவது வேண்டி வெகுளாதான் நோன்பினிதே (இனி.நாற்.பா.25:1)
செவ்வினாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே (இனி.நாற்.பா.37:2)
பிச்சைபுக்கு உண்பான் பிளிறாமை முன் இனிதே (இனி.நாற்.பா.40:1)

என்ற பாடல் வரிகள் ஒன்றை வெல்ல வேண்டும் என்றால் சினத்தை அடக்க வேண்டும் மனத்தில் உள்ள கோபத்தை அடக்க வேண்டும் என்றும் யாசித்து உண்பவன் கோபம் படாமல்; இருப்பது நல்லது என்றும் கூறுவதன் மூலம் சினமின்மையை பின்பற்றி ஒழுக வேண்டும் என்ற செய்தியை அறிய முடிகிறது.

பொறாமையின்மை:
பொறாமை என்பதற்கு அழுக்காறு என்பது பொருள்.ஒவ்வொரு மக்களும் பொறாமை இல்லாமல் வாழ்வதே சிறந்தது. மனத்தினால் பொறாமை கொள்ளக்கூடாது என்று வள்ளுவர் 

அழுக்கொறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்காறி லாத இயல்பு (குறள்.161)


என்ற குறள் வழி குறிப்பிட்டுள்ளார்.

இக்கருத்தையே பூதஞ்சேந்தனாரும் குறிப்பிட்டுள்ளார்.பொறாமையின்மை பற்றிய கருத்து ஒரு பாடலில் இடம்பெறுகின்றது. இதனை

அவ்விடத்து அழுக்கா(று) உரையாமை முன் இனிதே (இனி.நாற்.பா.37:1)

என்ற பாடல் வரிகள்;மூலம் மனத்தினால் பொறாமைக் கொண்டு சொற்களைப் பேசாமல் இருப்பது நல்லது என்ற செய்தியையும் அறிய முடிகிறது.

அன்புடைமை :
நாம் வாழும் காலம் சிறிது என்றாலும் அக்காலம் வரையிலும் பிறருக்கு அன்பு செய்து வாழ்வதே சிறந்த ஒழுக்கம் ஆகும்.
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரகராதி அன்பு என்பதற்கு தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று, நேசம், கருணை, பக்தி, எனப் பொருள் கூறுகிறது. 

இனியவை நாற்பதில் அன்பு பற்றிய கருத்து ஒரு இடத்தில் கூறப்பட்டுள்ளது.இதனை

பங்கமில் செய்கையை ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது (இனி.நாற்.பா.10:3-4)


என்ற பாடல் வரியில் குற்றமில்லாத ஒழுக்கமுடையவராய், யாவர்க்கும் அன்புடையவராயிருத்தலே நல்லது என்ற கருத்தை வலியுறுத்தி கூறியிருப்பதை அறிய முடிகிறது.

சூதாடிகளை நீக்கல்
சூதாடுதல் அறம் அல்லாத செயல் ஆகும். சூதாடும் நிகழ்வை மகாபாரதம் எடுத்தியம்பியுள்ளது. இந்நிகழ்வால் பல உயிர்கள் அழிந்து போயின என்பதை இந்நூலின் மூலம் அறியலாம்.

சூதாடிக்கு நல்வாழ்வு கிடையாது என்பதை வள்ளுவர்,

ஒன்றுஎய்தி நூறுஇழக்குஞ் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு.(குறள்.932) 


என்ற குறளின் வழி புலப்படுத்தியுள்ளார்.

சூதாட்டம் என்பதற்கு சென்னைப் பல்கலைக் கழக பேரகராதி சூதாடுகை,தந்திரம் எனப்   பொருள் உரைக்கிறது.
பழிபாவங்களுக்கு அஞ்சாதவராய், பற்றுகின்ற தொழிலையும் சொல்லையுமுடைய சூதாடிகளை நீக்குதல் நல்லது என்பது பின்வரும் பாடலடியின் மூலம் அறியலாம்.

பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந்தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது(இனி.நாற்.பா.24:3-4) 


நன்றி உணர்வு

ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பதே சிறந்த பண்பு ஆகும். இக்கருத்தையே வள்ளுவர்,

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று (குறள்.108)


என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கருத்தையே இனியவை நாற்பதும் கூறியுள்ளது. இதனை,

நன்றிப்பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே  (இனி.நாற்.பா.31:1)

என்ற பாடலடி ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பதே நல்லது என்ற நன்றி  உணர்வு செய்தியை வெளிப்படுத்தியுள்ள பாங்கை அறியமுடிகிறது.

நடு நிலைமை 
ஒவ்வொருவரும் நடுநிலையுடன் வாழ்வது என்பது சிறந்த பண்பாகும். ஒவ்வொருவரும் நிறைக்கோல்; போல் நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர். 

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தெரருபால் 
கோடாமை சான்றோர்க் கனி          (குறள்.118)


என்ற குறளின் வழி குறிப்பிட்டுள்ளார். இனியவை நாற்பதில் ஆறு, முப்பதொன்று, இருபத்து மூன்று ஆகிய பாடல்களில் நடுநிலையுடன் வாழ வேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்தியுள்ளது. இதன். மூலம நடு நிலையிடன் வாழும் ;பண்பே சிறந்தது என்பதையும் அறிய முடிகிறது.

முப்பத்தொன்றாம் பாடலில் நடுநிலை தவறாமல், ஒரு பக்கம் சார்பாக சோமல் இருப்பது நல்லது என்பதை,

மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பினிதே    (இனி.நாற்.பா.31:2)

என்ற பாடலடியின் மூலம் அறியமுடிகிறது.

இக்கருத்தையே வள்ளுவரும்,
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின்           (குறள். 116)

குறிப்பிட்டுள்ளர்.

அரசனின் பண்புகள் 
அரசன் தான் கற்றர்க்குரிய நூல்களைக் கற்று அறிவுடையவனாய் இருந்து, தன் உயிர்க்கே அன்றி தக்கள் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பயடுவதே அரசனின் கடமை ஆகும். முறைசெய்து காப்பற்றும் மன்னவனை பற்றி திருக்குறள் 

முறைசெய்து காப்பற்றும் மன்னவன் மக்கட்கு 
இறையென்று வைக்கப் படும்   (குறள்.388)


கூறுகிறது.

இனியவை நாற்பதில் அரசன், அவனது படை, ஒற்றர், அரசனுக்கு ஒற்று ஆசாயும் பண்பு, முறைச்செய்து தண்டனை இளிக்கும் பண்புஃஇ விருப்பு வெறுப்பின்றி எல்லா உயிர்களையும் சீர் தூக்கிப் பண்பு ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பதை,

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன்இனிதே
முற்றான் தெரிந்து முறை செய்தல் முன்இனிதே
பற்றிலனாயல் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் 
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது   (இனி.நாற்.பா.36)


என்ற பாடலால் அறியமுடிகிறது.

நாட்டை காக்கும் மன்னவனுக்கு படை இன்றியமையாதது அரசனின் உறுப்புகளுள் ஒன்று படை. பண்டைய காலத்தில் யானை, குதிரை, தேர், காலாள் என்ற நான்கு வகைப் படைகள் அரசனுக்கு இருந்தமையை நூல்களின் வழி அறிய முடிகறது. திருக்குறள் அரசனுக்கு படை முக்கியம் என்பதை,

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு   (குறள். 381)


கூறுகிறது.

படைகளில் ஒன்றான யானை பளை குறித்த செய்தியையும் கூறுகிறது. இதனை,

யானையுடைய படைகாண்டல் மிக இனிதே    (இனி.நாற்.பா.5:1)

என்ற பாடலடிகள் யானை படை வைத்து இருப்பது நல்லது என்ற கருத்தை கூறியுள்ளது. இதன் மூலம் யானை படை இருந்த செய்தியையும் அறியமுடிகிறது.

ஈகை 
பிறருக்கு கொடுத்து உதவும் தன்மையே ஈகை எனப்படுகிறது பிறக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டவுடன் மனம் இரங்கி ஈயும் தன்னையுடையவர்கள் உண்மையில் பெரிதும் போற்றதலுக்கு உரியவராவர்கள். ஈகையை பற்றி வள்ளுவர்,

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து  (குறள்.221)

என்ற குறளின் வழி அறியலாம்.

ஈகை பற்றிய கருத்துக்கள் இனியவை நாற்பதில் மூன்று, ஏழு, இருபத்தி மூன்று, பதினேழு, இருபது. இருபத்தேழு ஆகிய ஆறு பாடல்களில் கூறப்படுகிறது. இக்கருத்துகள் பெரும்பாலும் ஈகை செய்வது நல்லது என்ற கருத்தையே வலியுறுத்தி கூறியுள்ளது.

இகழாமை 
ஒருவரை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ பேசுவது என்பது அறச்செயல் அன்று. இக்கருத்து இனியவை நாற்பதில் இடம்பெறுகிறது. இதனை,

எளியர் இவர்என்று இகழ்துரையாராகி 
ஒளிபட வாழ்தல் இனிது  (இனி.நாற். பா.30:3-4)


என்ற பாடலடிகள் ஒருவரை இகழாமல் இருப்பது நல்லது என்ற கருத்தையே வலியுறுத்தி கூறியுள்ள செய்தியை அறிய முடிகிறது.

பயனில சொல்லாமை
பிறருக்குப் பயளிக்காத எந்தச் சொற்களையும் எந்த நிலையிலும் கூறக்கூடாது என்பது இதன் பொருளாகும். வள்ளுவர் இதனை, 

பயன்இன்சொல் பாராட்டு வாநை மகன்எனல் 
மக்கட் பதடி எனல்   (குறள்.196)


என்ற குறளின் வழி அறியலாம். 

பூதஞ்சேந்தனார் செல்வம் அழிதலுற்றாலும் தீயசொற்களான பயனில சொற்களை சொல்லாமல் வாழ்வது நல்லது என்பதை,

ஆக்கம் அழியீனும் அல்லவை கூறாத 
தேர்ச்சியின் தேர்வினியது இல்  (இனி.நாற்.பா.28:3-4)


என்ற பாடலடிகள் மூலம்  கூறியுள்ளார்.   

உதவி செய்தல் 
பிறருக்கு உதவி செய்தல் என்பது மனிதனுக்கு இருக்க வேண்டிய பண்புகளுல் ஒன்று ஆகும். இனியவை நாற்பது தன்னை அடைந்தவரது விருப்பம் அழியாமல் உதவி செய்வது நல்லது என்று கூறுகிறது. இதனை,

நச்கித்தற் சென்றார் நசை சொல்லா மாண்பினிதே   (இனி.நாற்.பா.27:1)

என்ற பாடலடி மூலம் அறியலாம்.

மானம்
ஒருவன் தன்னிலையில் தாழாமல் இருப்பது மானம் ஆகும். மானம் பற்றிய கருத்து இனியவை நாற்பதில் இரு இடங்களில் கூறப்படுகிறது. தன் மானத்தை இழக்க நேரும் போது உயிரைப் போக்கி கொள்வது நல்லது. இதனை,

மானம் படவரின் வாழாமை முன் இனிதே (இனி.நாற்.பா.27:2)
மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே  (இனி.நாற்.பா.13:1)


என்ற பாடலடிகள் மானம் அழிந்த பின் வாழ்வது நல்லது அல்ல என்ற செய்தியை வலியுறுத்தி கூறியுள்ளதை அறிய முடிகிறது.

வேளாண்மை
இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார வாழ்க்கையின் அடிப்படையாக ஆணி வேராக விளங்குவது உழவு தொழிலே. இவ்வுழவர்களே சமுதாயத்தில் வாழும் மனிதர்கள் எல்லாரையும் தாங்குபவர்களாகவும் விளங்குகின்றனர். இவ்வுழவர்கள் செய்யும் வேளாண்மை பற்றிய கருத்துக்கள் இரண்டு இடங்களில் கூறப்படுகிறது. ஏறுடையவன் வேளாண்மை செய்தல் நல்லது என்பதை,

ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே   (இனி.நாற்.பா.4:3)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.

வேளாண்மைக்கு என உள்ள விதைகளை குற்றி உண்ணாமல் இருப்பது நல்லது என்பதை, 

வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிக இனிதே   (இனி.நாற்.பா.41:1)

என்ற பாடல் வரியால் அறியமுடிகிறது.

முடிவுரை
வாழும் காலம் சிலகாலம் என்றாலும் அக்காலங்களில் நெறிமுறைகளுடன் வாழ்வது நல்லது என்பதை இனியவை நாற்பதின் வழி அறியமுடிகிறது.

சமுதாயத்தில்  ஒவ்வொரு மனிதனும் நல்ல பண்புகளுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளன.
இல்லறம் நடத்தும் விதம்,விருந்தோம்பும் முறை, பெற்றோரை மதிக்கும் பாங்கு,பெரியோரைத் துணைகn;காள்ளும் விதம்,கல்வியின் சிறப்பு,நட்புடன் பழகல்,புலால் உண்ணாதிருத்தல்,சோம்பல் இன்மை,அரசனுக்கு இருக்க வேண்டியபண்புகள்,சினம்இல்லாதிருத்தல்,பொறாமையின்மை,அன்புடன் பிறருடன் பழகல்,நன்றியுணர்வுடன் இருத்தல்,சொற்களை சொல்லும் முறைமை,பிறன்மனை நோக்காமை,விலைமகளிரை நாடாமை,பிறருக்கு உதவிச் செய்தல்,என்ற பாங்கில் சமுதாயத்திற்கு வேண்டிய நெறிகளை கூறி வழிநடத்தும் பாங்கு போற்றதலுக்கு உரிய ஒன்றாகும்.

துணைநூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)      பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1  செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)      பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)      பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3  செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)  நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017  முதற்பதிப்பு -2014
5.அகராதி    தமிழ் - தமிழ் அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழக அகராதி
6.  கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ) இனியவை நாற்பது மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு -2014    7.இராசாராம்.துரை பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) மூன்றாம் பகுதி முல்லை நிலையம் சென்னை 17 முதற்பதிப்பு - 1995
8 நாமக்கல் கவிஞர்  திருக்குறள்    சாரதா பதிப்பகம் சென்னை-600014 முதற்பதிப்பு -2002
9 மாணிக்கம் .அ திருக்குறள் தெளிவுரை தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
10 நாராயணசாமி .இரா     திருக்குறள் இனிய உரை நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை -600098   முதற்பதிப்பு -1997

jenifersundararajan@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard