New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழந்தமிழரின் வானியல் அறிவுநுட்பம் - பா. பிரபு


Guru

Status: Offline
Posts: 23904
Date:
பழந்தமிழரின் வானியல் அறிவுநுட்பம் - பா. பிரபு
Permalink  
 


 

பழந்தமிழரின் வானியல் அறிவுநுட்பம்

E-mailPrintPDF

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இன்றைய அறிவியல் உலகில் அண்டவெளி பிரபஞ்சத்தை பற்றி (Universal) நொடியொரு பொழுதும் ஆராய்ந்து கொண்டே வருகின்றனர்.  நீண்ட மனித வாழ்வின் அறிவியல் தேடலும், நவீன அறிவியல் கருவிகளின் வரவுமே இவ்வுலகை இன்று ‘அறிவியல் யுகமாய்’ மாற்றியிருக்கின்றது.  ஆனால் பண்டைய காலம் அப்படி இல்லை.  ஊழி காலத்துள் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்வதற்கான போராட்டம் மிகப்பெரும் சவாலாக விளங்கியது.  பின்னர் தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றி ஆய்வினில் இறங்கினர்.  அதனால் இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வினை அதனோடு இயற்கைப் புறவெளியையும் ஆய்ந்தனர்.  அறிவியலுள் ‘வானியல் அறிவும் பண்டைத் தமிழகத்துள் மிகுந்திருந்தது.  வான்வெளியில் நிகழும் மாற்றங்கள், கோள்களின் இயக்கப் போக்குகள் அதனால் புவியில் ஏற்படும் மாற்றங்கள், பருவ மாற்றங்கள் என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்தனர்.

பண்டைய இந்தியாவிலும், ‘வானியல் அறிவு’ சிறப்பாக இருந்தது என்பர்.  “ரிக் வேதத்தின் மூலம் வேதகாலத்து இந்தியர்கள் வானியல் சிந்தனைகள், சூரியனின் பாதை சந்திரனின் பருவங்கள், கோள்களின் இயக்கம் போன்றவற்றைப் பற்றிய தேவையான அறிவைப் பெற்றிருந்தனர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.  சந்திரனை அடிப்படையாக வைத்து மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.  சந்திரனுக்கு ‘மாச கிருத்தா அல்லது மாதத்தை உருவாக்குபவர்’ என்ற பெயரும் உண்டு.  சந்திர மாதங்களின் பெயர்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி ஏற்படுகிறதோ அந்தந்த நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.  ‘சந்திரனின் வீடுகள்’ (Iunarmansions) என்றழைக்கப்படும் நட்சத்திர இராசி முறை இந்தியாவிற்கே உரித்தான ஒன்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
(பக். 67 கு.வி. கிருட்டிணமூர்த்தி, அறிவியலின் வரலாறு)

தமிழ் மாநிலத்துள் ஐநில மக்களின் வாழ்வும் இயற்கைச் சூழலுக்கேற்ப அமைந்திருந்தது.  கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய 6 - வகை பருவங்களை வகுத்து, அப்பருவங்களுக்கு ஏற்ப வாழ்வு அமைத்து இயற்கை வாழ்வு வாழ்ந்தனர்.  ஞாயிறு, திங்கள் பிற கோள்கள், நட்சத்திரங்களின் இயல்புகள் சிலவற்றை கண்டறிந்தனர்.  அதன் அடிப்படையில் கால கணிதம் தோற்றுவித்தே ஒவ்வொரு நிகழ்வினையும் செய்தனர்.  பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள் வரையும் வானின் செயல்களை வைத்தே நிகழ்வினை செய்தனர். வானியல் அறிவியலில் இந்தியர் தேர்ச்சியடைந்திருந்தனர் என்பதை பல இலக்கியங்களின் வழியும் அறியலாம்.  18 - சித்தாந்த நூல்கள் தோன்றி இருந்தமையே இதற்கான சான்று என்பர்.  வராகமிரா (Varahamithra) எழுதிய பஞ்ச சித்தாந்திகாவில் உள்ள ‘சூரிய சித்தாந்தா’ மிகச் சிறந்த வானியல் நூல் என்பர்.  இக்காலத்தில் தான் ஆர்யபட்டா (Aryabhata) ஆர்யபாட்டியா என்ற நூலைப் படைத்துள்ளார்.  அந்நூலில் ‘புவி தன்னைத் தானே அதன் நீள் அச்சில் சுழல்கிறது’ என்ற கருத்தை ஆர்யபட்டர் கூறியிருப்பதாக திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

விண்மீன்கள் பற்றியும், அசுவினி முதலான இருபத்தேழு நாள்மீன்களைப் பற்றியும், ஞாயிறு முதலான ஒன்பது கோள்கள் பற்றியும் சங்க இலக்கியங்களில் காண முடியும்.  (தற்காலத்தில் விஞ்ஞான ஆய்வுப்படி ‘புளுட்டோ’ எனும் கோள் சூரிய குடும்பத்தில் தனித்த தன்மையுடைய கோள் இல்லை என்றும், அது தாறுமாறாக இயங்கி வருகிறது என்றும் ஆராய்ந்து, நம் சூரிய குடும்பத்தின் மொத்தக் கோள்கள் 8 - என்கின்றனர்)

“கதிரவனின் போக்கையும், காற்றின் நிலையையும் கூர்ந்து நோக்கி அறிந்து மக்களுக்கு சொல்லும் விஞ்ஞானிகள் தமிழகத்தில் இருந்தனர்.  அவர்கள் உணவைக் கூட மறந்து காற்று மண்டிலத்தைத் தொடர்ந்து சென்று கவனித்து வந்தனர்” (பக். 27 இலக்கியத்தில் வானியல்) எனும் நூலில் ஆசிரியர் தமிழரின் அறிவு உச்சத்ததைப் பற்றி குறிப்பிடுகின்றார்.

இயற்கையின் பருப்பொருட்களை வணங்கும் முறை
காற்று மண்டலத்தில் ஒளிச்சேர்க்கைக்கும், மனித உடலுக்குத் தேவையான உணவான ‘ஸ்டார்ச்’ (Starch) தருவதே ஞாயிறு.  இதனால் தான் ஒட்டுமொத்த உயிரினங்களும், தாவரங்களும் நிலைத்து நன்கு வாழ்கின்றன.  இதனை கருத்திற் கொண்டே தமிழர்கள் தம் வழிபாட்டில் முதன்மைப் பொருளாக ‘ஞாயிறை’ வணங்கினர்.  இலக்கியத்தை படைக்க முற்படும் போது கூட,

ஞாயிறு போற்றுதூவும், ஞாயிறு போற்றூதும்
திங்களை போற்றுதூவும், திங்களை போற்றுதூவும்

என இயற்கைப் பொருட்களுள் ஞாயிறு, திங்கள் ஆகியவற்றையே முதன்மையாகப் போற்றினர்.  ஞாயிற்றை வணங்குவது போல திங்களை வணங்குவதையும் மரபாகக் கொண்டனர்.  குறிப்பாக வளர்பிறையை வணங்கினர்.  இதனை,

“தொழுகாண் பிறையிற் றோன்றி” என்று குறுந்தொகை 178-ஆம் பாடலும், ‘செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி, இன்னம் பிறந்தன்று பிறையே’ என்று குறுந்தொகையின் 307 - ஆம் பாடலும், ‘ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழுஉம் புல்லென் மாலை” என அகநானூற்றில் 239-ஆம் பாடலும், பண்டைய மக்கள் பிறையை வழிபட்டதை உறுதி செய்கின்றது.

உருவம், அருவம், அருஉருவம் என்பது தற்கால நாகரீகக் காலக் கட்டத்தில் எகிப்திய மன்னனான ‘அக்நெடான்’ என்பவன் சூரியன் மட்டுமே தெய்வமென எண்ணி, சுமார் 2000-த்திற்கும் மேற்பட்ட கோயில்களை இடித்ததாக குறிப்பிடுகின்றனர்.  ஆக இயற்கை இயல்போடு ஞாயிற்றையே தெய்வமென மக்கள் எண்ணி வணங்கி மகிழ்ந்தனர்.  அத்தகு சிறந்த இயற்கை புரிதலோடு வாழ்வை அமைத்திருந்தனர்.

“சங்க காலத்தே கணியன் பூங்குன்றனார் போன்ற புலவர்களும் இத்தயை வானியல் அறிஞர்களாகத் திகழ்ந்தனர்.  உறையூர் முதுகண்ணன் சாத்தனார், சோழன் நலங்கிள்ளியைப் பாடிய பாடலொன்றில் (புறம். 30)அக்காலத்து வானியல் கல்வியாளரின் நுண்மான் நுழைப்புலத்தை வியப்போடு விரிக்கின்றார்.  கதிரவனின் வீதியும் அவ்வீதி வழி அவன் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் மண்டிலமும் காற்று இயங்கும் திக்கும் ஓர் ஆதாரமுமின்றி தானே நிகழ்கின்ற ஆகாயமென்பது இவற்றின் அளவுகளை ஆங்காங்கே சென்று அளந்தறிந்து வந்தவர் போல்...... கதிரவனின் இயக்கம், குறித்தப் பாதை வழியே நிகழ்கின்ற தென்பதையும், அவன் இயக்க வேகம் இன்னதென்பதையும் அவ்வேகத்தால் பார்வட்டம் சூழப்படுகின்றதென்பதையும்...... அக்காலத்து தமிழகத்து வானியலாளர் நேரில் கண்டவர் போல கணித்துக் கூறினர்” (வளர்தமிழில் அறிவியல், பக். 123) என்று வளர்தமிழில் அறிவியல் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மன்னரின் பிறப்பு, இறப்பு இன்ன பிற குடும்ப நிகழ்வுகள், போர் நிகழ்வுகள் என யாவற்றையும் கோள்களின் இயக்கத்திற்கு ஏற்பவே ஆராய்ந்து முடிவு செய்தனர்.  போர் காலத்தில் நாள் மீன் கோள் மீன் பற்றியும், மன்னர் அரியணை ஏறுவதும், வெற்றி பெற்ற நாளை குடைநாட் கோள் எனவும் கூறினர்.  கோள்களை வைத்தே காலங்களை பகுத்தாய்ந்து அதற்கேற்ப தமது செயலனைத்தையும் செய்தனர்.

கோள்களைப் பற்றிய பார்வை பக்தி இலக்கிய காலத்தில் (கி.பி. 7) சிறப்புற விளக்கப்பட்டிருக்கிறது.

“ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசு ஆறும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே” என்று தேவாரத்துள் கோளறு பதிகம் பாடல் - 2 குறிப்பிடுகின்றது.    (தேவாரம், கோளறு பதிகம் பா.2:85:1)

குறிப்பாக நவக்கோள்களைப் பற்றிய பார்வை ஐரோப்பிய தொழிற்புரட்சிக்குப் பின்னரே ஐரோப்பாவெங்கும் தோன்றியது.  எனின் நம் பகுதியில் அத்தகைய ஆய்வு சிறப்புற விளங்கியிருந்தது.  பதிற்றுப்பத்தின் (கி.பி. தொடக்கம்) 14-ஆம் பாடலுள்,

“நாள் கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அணைய”    (பதிற்றுப்பத்து: 14:13-14)

என்று சனி, இராகு, கேது என்னும் மூன்று கோள்களையும் தவிர ஏனைய கோள்கள் ஒளி படைத்தவை என்றும், நாள்மீனும் ஒளி படைத்ததுதான் என்றும் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.  இதன் கோள்களை ஒளி உமிழ்பவை, ஒளி உமிழாதவை என இருவேறுபட்ட தன்மையில் ஆய்ந்தறிந்தனர் என்பது புலனாகிறது.

கோள்களில் சிலவற்றை மழைக்கோள்கள் என்றே அழைத்தனர் (பரிபாடல்: 11:4-10–ம் பாடலில், ‘படிமகன்’ என்ற சொல்லாட்சிக் காணப்படுகிறது.  இதனை, ‘செவ்வாய்’ கோள் என்று கூறுவர்.  பங்கு, இறையமன் என்பது பாம்புக் கோள்களெனக் குறிப்பிடுகின்றனர்.  இராகு, மதியம் ஆகிய சந்திரன் என கோள்களை நன்கு ஆய்ந்தறிந்தனர்.

வானவீதியில் நட்சத்திரங்கள் செல்லும் வீதிகளை குறித்தும் பரிபாடல் விளக்குகின்றது.  குறிப்பாக 27 நாள்களும் கோள்களுடன் கூட வானவீதியில் உலாவரும் வீதிகள் மூன்ற என்பர்.  அவை ஆடு (மேடராசி) ஏறு (இடபராசி) நுனம் (மிதுனராசி) என்பனவாகும்.  இவற்றுள், மேட இராசியை முதலாகக் கொண்டு ஏனைய இராசிகளிலும் ஞாயிறு, திங்கள் முதலிய கோள்களும் நட்சத்திரங்களும் இயங்கும், மேற்குறிப்பிட்ட மூன்று இராசிகளும் ஒவ்வொன்று நட்சத்திரங்களைக் கொண்டது என்பர்.  இதனை,

“விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில் வேழம் தலையெனக் கீழிலிருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கொறல்”(பரிபாடல் : 1-3)

என்று பரிபாடல் 1 -ஆம் பாடல் விளக்குகிறது.  மணிமேகலை காப்பியத்தில்,

“இருது இளவேனில் எரிகதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் 
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து”
(மணிமேகலை, பாத். பிச்சைபுக்கக்காதை : 23-26)

என்று குறிப்பிடுகின்றது.  இதில் 27 நட்சத்திரங்களுள் நடுவில் நிற்றலை உடைய விசாகம், கார்த்திகையை முதலாகக் கொண்டு எண்ணும் பழைய முறைப்படி விசாகம் என்கிற நட்சத்திரம் 27 நட்சத்திரங்களுள் நடுவில் நிற்றலை பெற்றதாகவும் பதினான்காவதாய் நடுவில் நிற்றலையும் காணலாம் என்பர்.

மேலும், பல நட்சத்திரங்களைப் பற்றி இலக்கியம் பதிவு செய்திருக்கிறது.
“குறுமுயல் மறுநிறம் கிரை மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்” என்று    (பட்டினப்பாலை : 34-35)

அகநானூறு 141 -ஆம் பாடல், ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்த ஓர் இருள் நிறைந்த நடுநாள் என்றுரைக்கிறது.

“மழை நீங்கிய மாக விசும்பில்
கைதொழு மரபின் எழுமீன் போல”

என்று நற்றிணை 231-ஆம் பாடல் எழுமீன் என்றும், கைதொழும் மீன் என்றும் வடமீன் (அருந்ததி) ஒரு மீன் தகையாளை (சிலப்பதிகாரம் மங். 57) தீதிலா வட மீனின் திறம் இவள்திறம் (சிலம்பு. மங். பா. 27) வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலி. 2:21) விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் (பதிற். 31:27-28) என்று குறிப்பிடுவதைக் காணலாம்.  மேலும், சீர்சால் வெள்ளி (பதிற். 24:24) பயங்கெழு வெள்ளி (பதிற்: 69:14) வசையில் புகழ் வயங்கு வெண்மீன் (பரிபாடல்: 1) அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது (பதிற். 131:25) வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்றும், விரிகதிர் வெள்ளி முளைத்த நன்இருள் விடியல் (பொருநர். 71-72) இலங்கு கதிர் வெள்ளி (புறம். 35:7) வைகுறு மீன் (அகம். 17, பா.21, பெரும் : 318) என்று வெள்ளிக்கோளினைப் பற்றியும் பிற கோள்களைப் பற்றியும் இலக்கியத்துள்ளேயே இயற்கையை வருணனை செய்கின்ற போதும், உவமை தருகின்ற போதுங் கூட வானியல் சிந்தனையோடு இலக்கியம் படைத்த புலமை சிறப்பிற்குரியது.  இஃது பண்டையோரின் வானியல் அறிவே ஆகும்.

துணை நூல்கள்
1.    அறிவியலின் வரலாறு, கு.வி. கிருட்டிணமூர்த்தி, பாரதிதாசன் பல்    கலைக்கழகம், பல்கலைப் பேரூர், திருச்சி.
2.    வளர்தமிழில் அறிவியல், இராம. சுந்தரம் (ப.ஆ) அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர். மு.ப. 1993
3.    குறுந்தொகை, உ.வே. சாமிநாதர் உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, சிதம்பரம். மு.ப. 1983
4.    அகநானூறு, ந.மு. வேங்கடசாமி, சை.சி. நூற்பதிப்பு, சென்னை - 18. இ.ப. 1957
5.    பதிற்றுப்பத்து, உ.வே. சாமிநாதர் உரை, சென்னை. ஏ.ப. 1958
6.    பரிபாடல், பொ.வே. சோமசுந்தரம், சை.சி. நூற்பதிப்பு, உ.வே.சா. நிலையம், சென்னை, ஏ.ப. 1971.
7.    நற்றிணை, ஒளவை துரைசாமி, அருணா பப்ளிகேசன்ஸ், சென்னை -17, மு.ப. 1968.
8.    புறநானூறு, உ.வே.சா. பதிப்பு, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 1971.
9.    பத்துப்பாட்டு (இரு பகுதிகள்), பொ.வே. சோமசுந்தரனார் உரை, சை.சி. நூற்பதிப்பு கழகம், சென்னை. 1966.
10.    தேவாரம், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை - 18.
11.    சிலப்பதிகாரம், உ.வே.சா. பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்க கழகம், தஞ்சாவூர் - 10 ம் பதிப்பு, 1985.
12.    மணிமேகலை, உ.வே. சாமிநாதர், உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, ஏ.ப. 1981.
13.    இலக்கியத்தில் வானியல். அ.வ. இராசகோபாலன், வெங்கடேசா பதிப்பகம், புத்தனாம்பட்டி, திருச்சி (மா) மு.பதிப்பு. 1990.

baluprabhu777@gmail.com

* கட்டுரையாளர் - - முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் -__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard