சங்ககால மக்களின் வணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கைநிலை எப்படி இருந்தது என்பதையும் அறியவேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலப்பிரிவில் இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. பண்டைத் தமிழ்நாட்டின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்திருந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளின் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாக அமைந்திருந்தன. தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாக இடம்பெற்றுள்ளன. நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன இன்றியமையாக் கைத்தொழில்களாக இருந்தன.
அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பண்டமாற்று முறையில் நிகழ்ந்திருக்கிறது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற சந்தைகள் இருந்துள்ளன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி (சிலம்பு.இந்திரவிழாவூரெடுத்த காதை.59) என்றும், இரவு நேரத்தில் செயல்படும் கடைகளை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற செய்தியும் காணக்கிடைக்கின்றன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டுள்ளனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணமிக்க வாசனைப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதி பொருட்களில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று பண்டைத்தமிழர்களின் பல்வேறு வணிகத்தகவல்கள் குறித்து சங்கஇலக்கியம் நமக்கு சான்றுரைக்கின்றன. இத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பண்டைத்தமிழர் வணிகத்தில் இடம்பெற்ற பண்டமாற்று முறையினையும், அவற்றில் இடம்பெற்றுள்ள பண்டமாற்றுப் பொருட்களையும் குறித்து ஆய்கிறது இக்கட்டுரை.
பண்டமாற்று முறை
சங்ககாலத் தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பல்வேறு பொருட்களைக் பணம் கொடுத்து வாங்காமல் பண்டமாற்று முறையிலேயே பெற்றுக்கொண்டனர். ஏனெனில், பண்டாற்று முறையென்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக தனக்குத் தேவையான பிறிதொரு பொருளைப் பெற்றுக்கொள்வதாகும். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் பணம் கொடுத்து பொருட்களை வாங்கும் முறை இருந்தபோதிலும், ஊர்களிலும், கிராமங்களிலும் பண்டமாற்று முறையே பொது வழக்காக இருந்துள்ளது. பண்டைத்தமிழகத்தில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்ததை அறியமுடிகிறது.
பாலைக் கொடுத்து இடையன் அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக்கொண்டதை ‘பாலொடு வந்த கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று முதுகூத்தனார் குறுந்தொகை 221 ஆவது பாடலில் குறிப்பிட்டுள்ளார். ஆயர் மகளிர் தயிரையும் மோரையும் கொடுத்து உணவுக்கான தானியத்தைப் பெற்றுக்கொண்டனர் என்பதை,
“நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
ஊறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருந்தி”
என்ற பெரும்பாணாற்றுப்படை (155-163) பாடலில் உருத்திரங் கண்ணனார் பதிவிட்டுள்ளார். ஆனால், இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று முறையில் பயன்படுத்தாமல் காசுக்கு விற்று அதனைச் சேகரித்து பின்னர் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்று,
“நெய்விலைக் கட்டிப் பசுப்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலர்”
என்ற பெரும்பாணாற்றுப்படை (164-166) பாடலின் வழி அறியமுடிகிறது. மேலும், வேட்டுவன் தான் வேட்டையாடிக் கொணர்ந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லைப் பெற்றுக்கொண்டனர் என்ற செய்தியை,
“கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உவந்தனர் பெயரும்
தேன்னம் பொருப்பன் நன்னாடு”
என்ற புறநானூற்று (33:1-8) பாடலில், கோவூர் கிழார் பண்டைத்தமிழரின் வணிகநிலைப்பாடுகளை குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்நாட்டு நீர்நிலைகளில் வலைவீசியும், தூண்டில் இட்டும் மீன் பிடித்து, அதனை பாண்மகளிரிடம் கொடுத்தனிப்பி பயிற்றுக்கும் தானியத்துக்கும் பண்டமாற்றி வரச்செய்தனர் என்ற செய்தியை,
“முள் எயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும்பயறு நிறைக்கும்” (ஐங்குறுநூறு மருதத்திணை புலவிப்பத்து.47)
என்ற பாடலில் ஓரம்போகியர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்கரை உப்பளங்களில் நெய்தல் நிலமக்கள் விளைவித்த உப்பினை உமணப்பெண் மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர்ஊராகச் சென்று உப்பைக் கொடுத்து நெல்லை மாற்றிக்கொண்டதனை,
“கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலை மாறு கூறலின்”
என்று அம்மூவனார் அகநானூற்றில் (140.5-8) குறிப்பிட்டுள்ளார். மேலும், கடலில் கிடைத்த மீனைக் கொடுத்து நெல்லை பண்டமாற்றும் முறை இருந்ததனை,
“மீன்நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனைமறுக்குந்து”
என்ற பாடலில் புறநானூறு (343.1-2) குறிப்பிடுகிறது. இதனைப்போன்று பரதவ மகளிர் சுறா, இறால் போன்ற கடல்மீனைத் திருவிழா நடக்கிற ஊர்களில் கொண்டுசென்று விரைவில் விற்றுச் சென்றதனைச் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் பதிவிட்டுள்ளார். ‘இனிது பெறு பெருமீன் எளிதினிற் மாறி’ (239.3) என நற்றிணையும், ‘பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாஅத், தயிர்மிதி மிதவை யார்த்துவம்’ (340.14-14) என அகநானூறும், ‘உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு’ (60.4) எனக் குடவாயில் கீரத்தனார் அகநானூற்றிலும் மீனையும், உப்பையும் கொடுத்து நெல்லை பரிமாற்றம் செய்ததனையும், அந்நெல்லைப் பெற்றவர்கள் சிறுபடகுகளில் (அம்பி) கழிகளின் வழியே வந்ததனை குன்றியனார், பரணர் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் பாடியுள்ளனர் என்பதனை சங்கஇலக்கியத்தில் காணமுடிகிறது.
“துய்த்தலை இதம்பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவுமலர் கொள்ளிரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை யுழவர் தனிமடமகள்”
என்ற நற்றிணைப் (97.6-9) பாடலில், தெருக்களில் பூ விற்கும் பெண்ணானவள் பூவை நெல்லுக்குப் பண்டமாற்ற செய்ததனை குறிப்பிடுகிறது.
“துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி
வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொறும் நுவலும்
நொதுமலாட்டி”
என்ற நற்றிணைப் (118.8-11) பாடலில், மகளிர் தெருக்களில் பூ விற்றதைப் பாலை பாடிய பெருங்கடுக்கோவும் பதிவுசெய்துள்ளார். எனவே சங்ககாலத்தில் பூக்களும் பண்டமாற்றுப் பொருளாக இருந்துள்ளதை அறியமுடிகிறது.
வேடர்கள் ஒன்றுகூடிக் காட்டில் வேட்டையாடிக் கொன்ற யானையின் தந்தங்களை மதுபானக் கடையில் கொடுத்து நெல்லரிசியால் உருவாக்கப்பட்ட மதுவினை வாங்கி அருந்திய செய்தியினை,
“வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளிஇ
அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவு நொடை நெல்லின் நாண் மகிழ் அயரும்”
என்று அகநானூற்றுப் (61.8-10) பாடல் குறிப்பிடுகிறது.
வேடர் தேனையும் கிழங்கையும் கொண்டுவந்து மதுபானக் கடையில் கொடுத்து அதற்கு மாறாக வறுத்த மீனையும் மதுவையும் வாங்கி உண்டனர் என்றும், இதனைப் போன்று உழவர்கள் கரும்பையும் அவலையும் கொடுத்து அதற்குப் பதிலாக மதுவையும் வறுத்தமீன் இறைச்சியையும் பெற்று உண்டனர் என,
“தேனெய்யொடு கிழங்கு மாறியோர்
மீனெய்யொடு நறவு மறுகவும்
தீங்கரும்பொடு அவல் வகுத்தோர்
மான் குறையோடு மது மறுகவும்”
என்ற பொருநராற்றுப்படை (214-271) பாடலில் முடத்தாமக் கண்ணியார் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
மேலும், கொற்கைக் குடாக்கடலின் கரையோரங்களில் வாழ்ந்த பரதவர்கள் கடலில் கிடைத்த மீன் மற்றும் முத்துச் சிப்பிகளைக் கள்ளுக்கடையில் கொடுத்து மது அருந்தியதனை,
‘பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி
நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேரிசை கொற்கை’
என்னும் அகநானூற்றுப் (296.8-10) பாடல் வழி அறியமுடிகிறது. பாண்டி நாட்டிலிருந்த பெயர் பெற்ற கொற்கைக் குடாக்கடலானது பிற்காலத்தில் மணலால் மூடப்பட்டு மறைந்து போயின என்பர்.
எயினர் மது அருந்துவதற்காக மது விற்கும் இடத்திற்குச் சென்று பண்டமாற்றம் செய்து மது அருந்த எப்பொருளும் இல்லாததால் ‘காட்டில் வேட்டையாடி யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறோம். அதற்குப் பதிலாக இப்போது கள்ளைக் கடனாகக் கொடு’ என்று கேட்ட செய்தியை,
“வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் 10
கான யானை வெண் கோடு சுட்டி,
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து...”
என்ற அகநானூற்றுப் (245.8-13) பாடலில் மருதன் இளநாகனார் பதிவுசெய்துள்ளார். இவையனைத்தும் பண்டைத்தமிழர்கள் மது அருந்தும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்பதனை தெளிவாக குறிப்பிடுகிறது. மேலும், கொல்லி மலைமேல் வாழ்ந்த சிறுகுடி மக்கள், தம் சுற்றம் பசித்திருப்பதனால் தங்களிடமிருந்த யானைத் தந்தங்களை கொடுத்து அதற்குப் பதிலாக உணவிற்கான தானியத்தைப் பெற்று உணவு சமைத்துண்டனர் என,
“காந்தனஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக்
கடுங்கண் வேழத்துக் கோடு கொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரை”
என்ற குறுந்தொகைப் (100.8-13) பாடல் குறிப்பிடுகிறது. சங்கஇலக்கியம் குறிப்பிடுகின்ற பண்டமாற்று முறையின் வழி மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், அக்காலத்தில் நிலஅமைப்பு யாவும் பொதுவுடமையாக இருந்ததால் அந்தந்த நிலத்தின் தன்மையறிந்த அல்லது கைத்தேர்ந்த மனிதர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பொருளைக்கொண்டும், கூடுதல் தேவைக்காகப் பிறிதொரு குழுவைச் சார்ந்தும் வாழ்ந்துள்ளனர். ஏனெனில், அவரவர் நிலத்தில் விளையும் பொருட்களில் மிகுந்தும் சமயத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.