1:0. முன்னுரை
கற்புக்கால மெய்ப்பாடுகளாவன, தெய்வமஞ்சல், புரையறந்தெளிதல், இல்லது காய்தல், உள்ளது உவத்தல், புணர்ந்துழி உண்மை, பொழுது மறுப்பாதல், அருள்மிக உடைமை, அன்புமிக நிற்றல், பிரிவாற்றாமை, மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇ ஆகியவற்றை தொல்காப்பியர் கூறியுள்ளார். (தொல்.மெய்.24) இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.
1:1 தெய்வம் அஞ்சலும் அகநானூறும்
தெய்வமஞ்சலென்பது, “தெய்வத்தினை யஞ்சுதல்” (இளம்.மெய்.24) எனவும், “தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தபாதரும் இன்னாரென்பது அவனானுணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட்டோன்றும்; அங்ஙனம் பிறந்த உள்ள நிகழ்ச்சியைத் தெய்வமஞ்சலென்றா னென்பது மற்றுத் தனக்குத் தெய்வந் தன் கணவனாகலான் அத்தெய்வத்தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின் அவனான் அஞ்சபடுந் தெய்வந் தனக்கும் அஞ்சப்படுமென்பது. அல்லதூஉந் தலைவற்கு ஏதம் வருமெனவும் அஞ்சுவளென்பது.” (பேரா.மெய்.24) எனவும், “சூள்பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற் றொழுவது நல்லில்லாட்டியர் தொல்லற மாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக்கூறிய பெற்றியும் கருதற்பாற்று.” (பாரதி.மெய்.24) எனவும், “தலைமகனா லுணர்த்தப்பட்டு அவன் தெய்வத்தை அஞ்சி வழிபடல். தெய்வமாவது-ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலாயினோரும், குல தெய்வமுமாம். குலதெய்வம் – இறந்துபோன முன்னையோர். அஞ்சி வழிபாடும் உள்ளக்குறிப்பு மெய்ப்பாடெனப்படும்.” (குழந்தை. மெய்.24) எனவும், “களவின் கண்ணும் வரைவின் கண்ணும் “பிரியேன் பிரியின் தரியேன்” எனச் சூளுரைத்த தலைவன் கற்பின்கண் பொதுவாக ஓதல் முதலியவற்றின் கண்ணும் சிறப்பாகப் பரத்தையின் கண்ணும் பிரிந்தவழி அச்சூளுரை காரணமாகத் தலைவற்கு ஊருநேருங்கொல் எனக் கருதி முழுமுதற் பொருளல்லாத பூத தத்துவ பொருளாகவும் கிளவியாகத்துள் தெய்வஞ் சுட்டுவனவாகவும் கூறப்பெற்ற தெய்வங்களைத் தலைவி அஞ்சுதலாம். பரவுதல், வேண்டல் என்றாற் போலக் கூறாமல் அஞ்சுதல் எனக் கூறியமையான் தெய்வம் என்றது சிறுதெய்வம் என்பது பெறப்படும்.” (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
தலைவனின் சூள் பொய்த்தவழி அவனுக்குத் துன்பம் நேருமோ என அஞ்சும் தலைவி தெய்வத்தைப் போற்றல் தெய்வமஞ்சலெனப்படும். இங்கு தெய்வமெனப்படுவது ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலானோரைச் சிறப்பாகக் குறிக்கும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறுந்.87, கலி.88 ஆகிய பாடல்களையும், பேராசிரியர் கலி.16, 75, தொல்.கற்.5 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.87 ஆம் பாடலையும் குழந்தை, கள.6 ஆம் நுற்பாவையும், பாலசுந்தரம் கலி.16, 75 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை. 1:2 புரையறந் தெளிதலும் அகநானூறும்
புரையறந் தெளிதலென்பது, “ ‘கடன்மிக் கனவே’ என்ற வழிப் பரத்தைமை கண்டு புலவாது இதனைப் போற்றல் இல்லுறை மகளிரிக்கியல் பென்னும் அறத்தினானே எனக்கூறியவாறு கண்டுகொள்க.” (இளம்.மெய்.24) எனவும், “தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துப்படுதல்.” (பேரா.மெய்.24) எனவும், “உயர்ந்த மனையறம் உணர்ந்தோம்புதல். ‘புரை’ ஈண்டு உயர்ச்சிப் பொருட்டு.” (பாரதி.மெய்.24) எனவும், “இல்லறவாழ்க்கை என்பது கொண்டானை உவப்பித்தலும் மக்கட்பேறெய்துதலுமாகிய இவையேயன்றி இயல்புடை மூவர்க்குத் துணைபுரிதலும் ஐம்புலத்தாறு ஒம்பலும் பிரிவிடையாற்றலும் பிறவும் உயர்ந்த அறமெனத் தெளிந்து ஒழுகுதலாம்.” (பாலசுந்.மெய்.24.) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர்.
இதுகாறும் தலைவனுடைய செயல்பாட்டிற்கு மனம் வருந்திய தலைவி, இதுதான் இல்லற இயல்பென உணர்ந்து அவனுடைய செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளுதலும், மனையறத்தின் செயல்பாடுகளை உணர்ந்து செயல்படுதலும் புரையறந் தெளிதலெனப்படும். இதனை விளக்க, பேராசிரியர் குழந்தை, தாசன் ஆகியோர், கலி.75 ஆம் பாடலையும், பாரதி, குறுந்.181 ஆம் பாடலையும், பாலசுந்தரம் கலி.75, நற்.110 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:3 இல்லது காய்தலும் அகநானூறும்
இல்லது காய்தலென்பது, “தலைமகன்கண்ணில்லாத குறிப்பினை யவன் மாட்டு உளதாகக் கொண்டு காய்தல்” (இளம்.மெய்.24) எனவும், “களவின்கட்போலாது தலைமகற்கு இல்லாததனை உண்டாக்கிக்கொண்டு காய்தல்.”(பேரா.மெய்.24) எனவும், “தன்வயின் உரிமையான் எழுங்காதல் மிகுதியான் மனையறக்கிழத்தி தலைவன் தவறு புரியாவழியும் அவன்பால் தவறு கற்பித்து ஊடல் கொண்டு சினத்தல்.”(பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தான் உரிமைப்பூண்டவழி தலைவனிடம் தோன்றாத குறிப்பினையும் தோன்றியதாய் கொண்டு அன்பால் ஊடல் கொள்ளுதலே இல்லது காய்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், இராசா, தாசன் ஆகியோர் குறள்.1314-ஐயும், பேராசிரியரும் குழந்தையும் கலி.93 ஆம் பாடலையும், பாரதி குறள்.1313 ஐயும், பாலசுந்தரம் கலி.98, குறள்.1313 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:4 உள்ளதுவத்தலும் அகநானூறும்
உள்ளதுவத்தலென்பது, “உள்ளதனை யுவர்த்துக் கூறுதல் அது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல்.” (இளம்.மெய்.24) எனவும், “தலைமனாற் பெற்ற தலையளி உள்ளதேயாயினும், அதனை உண்மையென்றே தெளியாது அருவருத்துநிற்கும் உள்ளநிகழ்ச்சி.” (பேரா.மெய்.24) எனவும். “தலைவன் மெய்யாகச் செய்யும் அன்பினை மறுத்துப் பொய்யென வெறுத்தல்.” (பாரதி.மெய்.24) எனவும், “தலைவன் தான் தண்ணளி செய்த உவப்பிங்குங்காலும் அவன்தன் பரத்தமையை எண்ணித் தலைவி அவன் செயலை மாயமென மயங்கி நீக்குதல்.” (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகன் உள்ளபடியே தலைவியை மகிழ்விக்க நினைந்து செய்யும் செயல்களைத் தலைவி தன்னை பிரிய நினைத்தே இவற்றையெல்லாம் தலைவன் செய்கிறான் என நினைத்து. வெறுத்தலே உள்ளத்துவத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.78ஆம் பாடலையும், பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர் கலி.69 ஆம் பாடலையும், மேலும், பேராசிரியர்,
“வேப்புதனை யன்ன நெடுங்கண் ணீர்ஞெண்
டிரைதேர் வெண்குரு கஞ்சி யயல
தொலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளற்
றிதலையின் வரிப்ப வோடி விரைந்துதன்
னீர்மலி மண்ணளைச் செறியு மூர.” (அகம்.176)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில் வேம்பின் அரும்பையொத்த நீண்ட கண்களையுடைய நீருவாய் ஞெண்டு இரையைத் தேடுகின்ற வெள்ளிய குருகுக் கஞ்சி அயலிலுள்ளதாகி தழைத்த பகன்றையையுடைய அரிய அள்ளலாகிய சேற்று நிலத்தின்கண் தேமலைப்போல வரிபொருந்த ஓடி விரைந்து தன்னுடைய நீர்மலிந்த மண்ணிற் கிண்டிய புற்றின்கண் அடங்கியிருக்கு மூரனே! எனத் தலைமகன் வாயில் வேண்டிச் சென்றவழிப் பிறர் கூறும் பழிக்கு வந்தாயென்று தோழி வாயின் மறுத்தது இது. இதிலுள்ள குறிப்புப் பொருளாவது பரத்தையர் சேரியில் பரத்தையொருத்தியின் அழகில் திளைத்திருத்த தலைவன் பழி ஏற்படுவதை அஞ்சி, அப்பரத்தை தனது மார்பில் செய்த குறி இருக்கத் தன் வீட்டிற்கு விரைந்து வரலானான் என்பதாகும். இது பரத்தமையைக் கூறுகிறது. உள்ளத்துவத்தல் இதில் வெளிப்படவிலை. தலைவனிடம் இருந்த குறியைக் கொண்டே தோழி அவன் வாயிலை மறுக்கிறாள். உள்ளத்துவத்தலென்பது அவனிடம் இல்லாத குறியை இருத்தலாக கொண்டு உவத்துக் கூறுதலே யாகும்.
இம்மெய்ப்பாட்டினை விளக்க பாரதியும் பாலசுந்தரமும்,
“…… ……… ………………………. ……………………………..
…………………………. ……………………………… இன்று வந்து,
ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்
மாசில் கற்பின் புதல்வன் தாயென
மாயப் பொய்ம்மொழி சாயினைப் பற்றியெம்
முதுமை எள்ளல்அஃ தமைகுந் தில்ல
……… …………………… ………………………….
இளமை சென்று தவந்தொல் லஃதே
இனிஎவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே” (அகம்.6)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், இன்று இங்கு வந்து எனது மார்பில் தோன்றிய தேமலையும், கற்பினையும் உடைய புதல்வனது தாய் என்று வஞ்சனையும் வணங்கிப் பொய்ம்மொழி கூறி என்னுடைய முதுமையை இகழாது இருக்க. தீப்போலும் தாமரை மலர்களை உடைய நீர் மிக்க வயலில் அழகிய உள்துளையுடைய வள்ளைக் கொடியினை உழக்கி வாலை மீனைத் தன் கூறிய பற்களால் தின்ற நீர்நாய் முட்கள் பொருந்திய தண்டினை உடைய பிரம்பினது பழைய தூருகளில் தங்கியிருக்கும் இடமாகிய மத்தி என்பவனது கழாஅர் என்ற ஊரினை ஒத்த எமது இளமை கழிந்து பழையதாயிற்று. நீ பொய்ம்மொழி எங்களுக்குச் சொல்லுவது எவ்வாறு இனியதாக அமையும்? எனத் தலைமகள் பரத்தையிடமிருந்து மீண்டு வந்து உண்மையாக தலைவியின் இயல்பைப் பாராட்டும் தலைமகனை நோக்கிக் கூறியது. இது உள்ளதுவத்தலின் பாற்படும்.
1:5 புணர்ந்துழி உண்மையும் அகநானூறும்
புணர்ந்துழியுண்மையென்பது, “புணர்ந்தவழி யூடலுள் வழி மறைத்துக் கூறாது அவ்வழி மனநிகழ்ச்சியுண்மை கூறுதல்.” (இளம்.மெய்.24) எனவும், “முன்கூறிய இல்லது காய்தலும் உள்ளதுவத்தலுமாகிய விகாரமின்றிப் புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சி.” (பேரா.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். புணர்ச்சிக் காலத்து உண்மையாக உள்ளம் மகிழுமாறு செய்வன செய்யும் நிகழ்ச்சி புணர்ந்துழி உண்மையாகும். இதனை விளக்க இளம்பூரணர், பேராசிரியர், குழந்தை, இராசா, தாசன் ஆகியோர், ஐந்.ஐம்.30 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:6 பொழுது மறுப்பாதலும் அகநானூறும்
பொழுது மறுப்பாதலென்பது, “தலைவன் வரும்பொழுது நியமமின்றி மறுப்பு வந்துழிப் பொழுதினைப் பற்றி நிகழும் மனநிகழ்ச்சி” (இளம்.மெய்.24) என இளம்பூரணர் உரை கூறியுள்ளார். இதனை பொழுது மறுப்பாதல் என இளம்பூரணர், இராசா, தாசன் ஆகியோர் பொருள் கொண்டுள்ளனர். பேராசிரியரும், குழந்தையும் இதனை பொழுது மறுப்பாக்கம் என பொருள் கொண்டுள்ளனர்.
“பொழுதுமறுப் பாதல் – இளம். பாடம், பதிப்பு 2, 17; பொழுதுமறுப் பாக்கம் – பேரா. பாடம், சுவடி 73, 115, பதிப்பு 16; ” (ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம், உரைவளக் கேவை, மெய்ப்பாட்டியல், ப.171) என ச.வே.சுப்பிரமணியம் தமது உரைவளக் கோவையில் குறிப்பிட்டுள்ளார். இதில் பேராசிரியர் கொண்ட பாடமே சுவடியில் காணப்படாலும். இருவர் கொண்டுள்ள பாடத்தின் பொருளும் ஒன்றாகவே இருக்கும் பொருட்டு இரண்டும் ஒன்றே எனக் கொள்க. பொழுது மறுப்பாக்கமென்பது, “களவின்கட் பகற்குறியும் இரவுக்குறியுமென வரையறுத்தாற் போல்வதோர் வரையின்மையின் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமென்றவாறு; எனவே, களவுக்காலத்துப் பொழுது வரைந்து பட்ட இடப்பாட்டினீங்கிய மனநிகழ்ச்சி ஆக்கமெனப்படும்” (பேரா.மெய்.24) எனப் பேராசிரியர் கூறியுள்ளார். களவின் கண் குறியிடத்து வரையறுத்தல் போலல்லாமல் கற்புக் காலத்து வரையறையின்மையின் அப்பொழுது மறுத்தலாகிய ஆக்கமென்பது பொழுது மறுப்பாக்கமாகும். அதாவது, இரவுக் காலத்து நிலவின் வெளிச்சம், பகற்பொழுதின் தமர் உலவல் போன்ற இடையூறுகளால் உடன் இருந்தும் புணரா தன்மையாகும். இதனை விளக்க இளம்பூரணர். கலி.144, அகத்திணை.48 ஆகியவற்றையும், பேராசிரியர், குறுந்.178 ஆம் பாடலையும், குழந்தை குறுந்.178, கற்.5 ஆகியவற்றையும், தாசன், கலி.144 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:6:1 புணர்ந்துழி யுண்மைப் பொழுது மறுப்பாக்கமும் அகநானூறும்
மேலே இளம்பூரணர், பேராசிரியர், குழந்தை, இராசா, தாசன் ஆகியோர், புணர்ந்துழியுண்மை என்பதை தனியாகவும், பொழுது மறுப்பாக்கம் என்பதை தனியாகவும் பிரித்து இரு மெய்ப்பாடுகளாகப் பாடம் கொண்டுள்ளனர். ஆனால், பாரதியும் பாலசுந்தரமும் புணர்ந்துழி யுண்மைப் பொழுது மறுப்பாக்கம் என்பதனை ஒரே மெய்ப்பாடாக பாடங்கொண்டுள்ளனர். இதனை பாரதி,
“இத்தொடரைப் ‘புணர்ந்துழியுண்மை’, ’பொழுது மறுப்பாக்கம்’ என பிரித்தெண்ணிப் பதினொன்றாக்குவர் பேராசிரியர். இது ’சிறந்தபத்தும்’ எனத் தெளித்துக்கூறிய சூத்திரச் சொற்றொடர்ச் செம்பொருளொடு முரண்படுவதால், அஃதுரையன்மை அறிக. பதினொன்றைப் பத்தென எண்ணலாமெனுந் தன் கொள்கைக்கு, “ஒன்பதும் குழவியொ டிளமைப்பெயரே” எனு மரபியற் சூத்திர அடியை மேற்கோள் காட்டினார். மரபியற் சூத்திரத்தில், “ஒன்பதும் குழவியொடு” என்பதை “குழவியொடு ஒன்பதும்” என மொழிமாற்றினும் எண், பத்தாகாமல் ஒன்பதேயாகும். இங்கு, மொழிமாற்றினும் பேராசிரியர் கொண்டபடி எண் பத்தாகாமல் பதினொன்றாகின்றதாதலின், சொல்லொடு பொருள் முரண எண்ணுதற்கு அம் மரபியற்சூத்திரம் மேற்கோளாகாமை வெளிப்படை.” (பாரதி.மெய்.24)
என பாரதி பேராசிரியர் கொண்ட பாடத்தினை மறத்துரைத்துள்ளார்.
இதில் தொல்காப்பியர் இச்சூத்திரத்து பத்து மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார் என்பதைச் ’சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே’ என்பதன் வழி தெளிவாகக் காணப்படுதலான், பேராசிரியர் இச்சூத்திரத்து கூறப்படும் மெய்ப்பாடு பதினொன்று என்பது எற்புடையதாகாது. அதேபோல் இம்மெய்ப்பாட்டுத் தொடரை ஒன்றாகக் கொள்ளும் பாரதி, பாலசுந்தரம் ஆகியோரின் கருத்தும் ஏற்புடையதாகாது. இதனை,
“ ‘புணர்ந்துழியுண்மை பொழுது மறுப்பாக்கம்’ எனவரும் இத்தொடர், பகர வொற்றின்றிக் காணப்படுதலான் புணர்ந்துழியுண்மையும் பொழுது மறுப்பாக்கமும் என இரண்டு மெய்ப்பாடுகளாகவே உரையாசிரியர் இருவரும் கொண்டனர். அன்றியும் ’பொழுது மறுப்பு ஆக்கம்’ என்பதே மெய்ப்பாடதலின் அதனைப் ’புணர்ந்துழி யுண்மைப்பொழுது’ என அடைகொடுத்தோதல் வேண்டாமையாலும், தலைவி தலைவனுடன் தடையின்றிக் கூடியிருக்கும் மகிழ்ச்சிக் காலத்தில் தலைவியது திரியற்ற உள்ளத்தின் உண்மையியல்பாகிய மெய்ப்பாடு கற்பியலுக்கு இன்றியமையாததாய்ச் சிறப்பாக எடுத்துரைக்கத்தகுவ தொன்றாதலாலும். அதற்குக் காரணமாயமைந்ததே ‘பொழுது மறுப்பாக்கம்’ என்னும் மெய்ப்பாடாதலின் முறையே காரியமும் காரணமுமாயமைந்த இவ்விரு மெய்ப்பாடுகளையும். ஒன்றென எண்ணுதல் பொருந்தாதாகலானும் முன்னையுரையாசிரியர் இருவர் கூறியவண்ணம் இவ்விரண்டினையும் தனித்தனி மெய்ப்பாடுகளாகக் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும்.” (க.வெள்ளைவாரணன், தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் உரைவளம், ப.௨௧௰)
என வெள்ளைவாரணர் கூறியுள்ளார். எனவே, புணர்ந்துழி யுண்மை பொழுது மறுப்பாக்கம் எனக்கொண்ட பாடம் பொருந்தாது. புணர்ந்துழியுண்மை என்பது தனி மெய்ப்பாடு; பொழுது மறுப்பாக்கம் என்பது தனி மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாட்டினை விளக்க பாரதி, குறுந்.32 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளார். அகநானூற்றுப் பாடல் எதுவும் எடுத்தாளப்படவில்லை.