பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம்.
தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதையும் அது சங்க காலத்திற்கு முற்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். என்றாலும் தொல்காப்பியத்தில் சிவன் பற்றி வெளிப்படையாக எந்தச் செய்தியும் இல்லை. பொதுவாக உள்ள சில கருத்துகள் சைவத்தைக் குறிப்பதாகக் கொள்ள இடம் இருப்பதால் அதனைப்பற்றி இந்தப் பகுதியிலேயே காண இருக்கிறோம்.
1.2.1 தொல்காப்பியக் குறிப்பு
'மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.
மாயோன் மேய காடு உறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
(பொருள். அகத்திணையியல் - 5)
(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்), சேயோன் = முருகன்,மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்), வேந்தன் = இந்திரன், தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்), பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)
இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும், எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.
''வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்'' என்பது மற்றொரு நூற்பா. ‘வினையின் நீங்கிய முனைவன்’ என்பதாலேயே, அவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ''கடந்து நிற்பது'' என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார்.
காமப்பகுதி கடவுளும், வரையார், ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்
(பொருள், புறத்திணையியல்: 81)
இங்கே 'கடவுள்' என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன், சேயோன், வருணன், இந்திரன் முதலியோர் திணைநிலைக் கடவுளர்.
திருவள்ளுவர் ஆண்ட 'இறை' (388) என்னும் சொல், இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும்.
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
(பொருள், புறத்திணையியல் : 85)
''இறைவன்'' முழுமுதற் கடவுள், சுதந்திரமுடையவன், கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.
1.2.2 எட்டுத்தொகை
அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்துப் போன்ற எட்டு நூல்களையும் எட்டுத்தொகை எனக் குறிப்பிடுவார்கள். இந்த நூல்கள் அகம், புறம் என்னும் இருவகை வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் சிவன் பற்றிய குறிப்புகளை இந்தப் பகுதியில் காணலாம்.
காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய பெருநகரங்களில் இக்கடவுளர்க்குரிய கோயில்கள் இருந்தன. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன. ஆயின் இப்பாடல்கள் பிற்காலத்தைச் சார்ந்தவை.
சங்க நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள் விரிவாக வந்துள்ளன. ஆனால் சிவன் என்ற பெயர் அங்கே வழங்கப்படவில்லை. சிவனை அடையாளங் காட்டும் வகையில் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும் ஆகிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....
இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி - 38)
கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடலைக் கீழே பார்க்கலாமா?
இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.
• புறநானூறு
உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே.....
(புறம் :91)
(மிடறு - கழுத்து)
என்கிறார்.
பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.
இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.
மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.
நன்றாய்ந்த நீணிமிர்சடை முது முதல்வன்
(புறம் :166)
புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும், ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது... ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)
ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்
என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.
(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி, மிடறு = கழுத்து)
அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.
சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’ என்று சிவனைக் குறிப்பிடுகிறது.
இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய - புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ..... நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகை, கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் - குறிப்பாக, காத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து - சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.
1.2.3 பத்துப்பாட்டு
சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும்,நிலையாமையைக் கூறும் மதுரைக்காஞ்சியும் பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும், தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும் இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.
இது, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.
மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை.
இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு .... என்று கொள்ளலாம்.
இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன.
சைவத்தின் தோற்றம்-டாக்டர்.பத்மாவதி (தமிழ்நாடு தொல்லியல் துறை)
இந்திய சமூக வரலாற்றில் சைவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. இதே முக்கியப் பங்கினை சைவம் தமிழக வரலாற்றிலும் ஆற்றியுள்ளது. ஒரு சமூகத்தில் சமூகத் தேவைகளின் அடிப்படையில் எந்த ஒரு தத்துவமும் தோன்றுகிறது. சமூக வரலாற்றில் சமூகத் தேவைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தத்துவமும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ந்து வருகிறது. இம்மாற்றங்களின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் ஒரு தத்துவம் வழக்கொழிந்து போவதும் பின்னர் கால ஓட்டத்தின் வேறொரு புதிய சமூகத் தேவைகளின் அடிப்படையில் புதுப்பிக்கப்படுவதும் இம்மாற்றங்களில் அடங்கும். இந்தியாவில் சைவத் தத்துவமானது இத்தகைய வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டே வளர்ந்திருக்கிறது. இன்று சைவ சமயம் என்று அழைக்கப்படுகின்ற தத்துவம் கி.பி, இரண்டாம் நூற்றாண்டில் பாசுபதம் என்ற பெயரில் முதன் முதலில் நிறுவனப்படுத்தப்பட்ட சமயமாக உருவானது. பாசுபதம் என்ற பெயரில் சைவ சமயத்தை நிர்மாணித்தவர் லகுளீசர் என்பவர் ஆவார். அவரது மாணவர்கள் காளாமுகம், காபாலிகம் என்ற பெயர்களில் உட்பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு சமயத் தத்துவங்களை பரப்பி வளர்த்தனர். அதன் தொடர்ச்சியே அப்பர், ஞானசம்பந்தர்ம் பின்னர் சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் ஏற்படுத்திய சமய மறுமலர்ச்சியாகும்.
லகுளீசர் சைவ சமயமாகிய பாசுபத மதத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் உள்ள சான்றுகளைக் காண்பது முக்கியமானது. இன்று சிவன் என்றும் ருத்ரன் என்றும் கூறப்படுகின்ற கடவுளின் தொன்மைச் சான்றுகளாக கொஹஞ்சதாரோ ஹரப்பாவில் கிடைத்த சான்றுகளும், வேத இலக்கியங்களில் கிடைத்த சான்றுகளும் முக்கியமானவை. அச்சான்றுகளை உள்ளடக்கிக் கிரகித்துக் கொண்டு வளர்ந்த மதமே பாசுபதம் என்பதால் அச்சான்றுகளைச் சுருக்கமாக காண்பது அவசியமானதாகிறது.
தொல்காப்பியத்தில் ருத்ர - சிவன் காணப்படவில்லை.
தொல்காப்பியர் கூறுகின்ற நானிலத்திற்குரிய கடவுள்களில் சிவன் பெயர் காணப்படவில்லை.
மாயோன் மேய காடுறை உலகம் சேயோன் மேய மைவரை உலகம் வேந்தன் மேய தீம்புனல் உலகம் வருணன் மேய பெருமணல் உலகம்
எனக் கூறும் நால்வரில் ஏன் சிவன் இல்லை. வேந்தன் எனக் கூறியிருப்பது இந்திரனையே குறிக்கும்.
சிவ - ருத்ரன் ஆரியரல்லாத இனக்குழு மக்களின் கடவுள் ஆதலால், வேத கருத்துக்களின், செயல்பாட்டின் தாக்கம் சங்க இலக்கியங்களில் காணப்பட்ட போதும், ருத்ரன் காணப்படவில்லை. காரணம் சில ருத்ரன் உபநிஷத காலங்களிலேயே ஆரியர்களால் தங்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறான். அதனால்தான் அதற்குப் பின்னர் எழுந்த கலித்தொகை, பரிபாடல்களிலும் ஓரிரு புறப்பாடல்களிலும் காணப்படுகிறான்.
அதுபோல சங்க இலக்கியங்கள் குறிக்கும் கந்து வழிபாட்டையும் லிங்க வழிபாட்டோடு தொடர்புபடுத்துகின்றனர். கந்து ஊரின் நடுவே அமைந்திருந்த மன்றில் காணப்பட்டது. இந்த கந்தைத்தான் அப்பர் கன்றாப்பூர் பதிகத்தில் நடுதறி என்றார். நடுதறியாகிய கந்து அப்பர் காலத்தில் சிவனாக மாற்றப்பட்டதேயன்றி, சங்க காலத்தில் கந்தாக வழிபடப்பட்டபோது சிவ வழிபாட்டைக் குறிக்கவில்லை.
சங்க இலக்கியங்களில்...
சங்க காலம் என்பது புத்தர் தோன்றிய காலமாகிய கி.மு.7ம் நூற்றாண்டுக்கு முன்னர் தொடங்கி பின்னர் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து கி.பி. 3ம் நூற்றாண்டு வரை நீடித்த நெடிய கால கட்டமாகும். இக்கால இலக்கியங்களுள் சிவபெருமானைப் பற்றிக் குறிக்கும் பாடல்கள் புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.
சங்க இலக்கியங்களில் சிவனைப் பற்றிக் கூறும் செய்திகளாக திரு. அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் கூறும் செய்திகளில் ஓரிண்டைத் தவிர பிற குறிப்புகள் எல்லாம் சிவனைக் குறிப்பவை அல்ல. அவரே மிகவும் வலிந்துதான் அக்கருத்துக்கு வந்துள்ளார். சங்க காலத்தில் சமணமும் பெளத்தமும் ஆசீவகமும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அக்காலத்தில் நிலப்பரப்பின் அடிப்படையில் அமைந்த தெய்வங்களே மக்கள் வழிபாட்டில் நிலவின. சிவன், ருத்ரன், சைவம் என்பதெல்லாம் சங்க இலக்கியங்களில் இல்லாத செய்தியாகும். அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூலுலும் பேராசிரியர் கு.சுந்தர்மூர்த்தி அவர்கள், ‘சிவபெருமான் என்னும் தெய்வம் இன்றைக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களில் காணப்பட்டிலது” என்று கூறியிருக்கிரா. ஆனால் அவரும் ஆலமரச் செல்வன், மழுவாள் நெடியோன், நீலமணி மிடந்றொருவன் என்றெல்லாம் குறிக்கப்பட்டிருக்கும் கடவுள் சிவபெருமானே என்ற கருத்துக்கு வந்திருக்கிறார். அவர் மேலே கூறுகின்ற பெயர்கள் எல்லாம் பிற்காலத்தில் அதாவது புராண காலங்களில் சிவனுக்கு ஒன்றிய பெயர்களாகும். சிவனுக்குரிய பிற்காலப் பெயர்கள், சங்க காலத்தில் வேறு ஒரு கடவுளுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
சங்க இலக்கியத் தொகுதிகளுள் பரிபாடலும், கலித்தொகையும் பிற்காலத்தவை என்பதை யாவரும் அறிவர். இவை தவிர புறப்பாடல்கள் சிலவற்றில் சிவன் பற்றிக் கூறும் பாடல்களும், பிற்காலத்தைவயே. குறிப்பாக புறநானூற்றுப் பாடல்கள் 55, 56, 166 ஆகியவற்றைக் கூறலாம்.
அரக்கர்கள் மூவர் இரும்பு. பொன், வெள்ளி ஆகிய உலோகங்களால் கோட்டை கட்டிக்கொண்டு தேவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தினராம். சிவன் ஒரு வில்லைகொண்டு மூன்று எயில்களையும் அழித்தானாம். இக்கதைய புறநானூரு பாடல் 55 கூறுகிறது. இக்கதை இப்பாடல் தவிர வேறெங்கும் கூறப்படவில்லை. இக்கதை முதன் முதலாக மகாபாரதத்தில் பகுதி 33 - 35ல் கர்ணபர்வதத்தில் கூறப்பட்டுள்ளது. பிராம்மண நூல்களின் காலம் வரை கூட இக்கதை காணப்படவில்லை. எனவே இக்கதையைக் கூறும் புறம் 55 மகாபாரதத்திற்கு பிந்தைய காலத்தைச் சேந்த பாடலேயாகும். அதுபோல சிவனும் உமையும் அமர்ந்துள்ள கயிலையை தன் தோளால் அசைக்க முயன்ற இராவணனின் தோள் நெரிய சிவபெருமான் இறுக்கியதாகக் கூறப்படும் கதை குறிஞ்சிக் கலியில்(2) கூறப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புறப்பாடல் 378- இராமன், அவன் மனைவி சீதை, அவளை கவர்ந்து சென்ற அரக்கன், குரங்கு கூட்டம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இராமாயணக் கதை நன்று வளர்ந்து பரவலாக பேசப்பட்ட பின்னர் எழுதப்பட்ட பாடலே இது எனக் கொள்ளலாம். வால்மீகி இராமாயணம் எழுதப் பெற்ற காலத்திற்குப் பிற் காலத்தைச் சேர்ந்ததாகவே இப்பாடல் இருத்தல் வேண்டும்.
--Ksubashini (பேச்சு) 08:33, 2 ஆகஸ்ட் 2013 (CDT) சைவ சித்தாந்தம்