கடந்த பங்குனி திங்களில் கூகிள் தலைமையகத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா அவர்கள் பங்கு கொண்டார். இயேசு மரணித்து உயிர்தெழுந்ததாக கூறப்படும் நிகழ்வின் நம்பகத்தன்மை பற்றி பல கேள்விகள் வலைத்தளங்களில் உள்ளது என்றும் அது நடந்ததோ இல்லையோ இரமண மகரிஷியின் மரண அனுபவம் நிச்சயம் அதிகம் நம்பக்கூடியதாக உள்ளது என்றும் கூறினார்
அவர் கூறியதின் சாராம்சம், ‘இயேசு உயிர்த்து எழுந்தார் என்று கூறப்படுகிறது, கிறித்துவ மதத்தின் அடித்தளமே இந்த நம்பிக்கை தான். ஆனால் பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வு நடக்கவேயில்லை என்று கூறுகிறார்கள், அதை நான் யூடியூபில் (youtube) உள்ள பல ஆவணப்படங்கள் மூலம் அறிந்தேன். அது நடந்ததோ இல்லையோ, ஒரு உண்மையான உயிர்தெழுந்தல் நடந்தது திரு இரமண மகரிஷிக்கே. அவரின் பதினாறு வயதில் மரண அனுபவம் கொண்டு, அதை கடந்தால் ஆன்மஞானம் பெற்றார். அவருக்கு ஒப்பு யாருமில்லை’
இதனை எதிர்த்து பல கிறித்துவ அமைப்புகள் இசைஞானி அவர்கள் ஈஸ்டர் என்னும் உயிர்த்தெழுந்த நாளை ஒட்டி இயேசுவை அவமதித்துவிட்டதாக ஆரவாரம் செய்தனர். ஊடகங்களும் ஏதோ இசைஞானி மதவெறித்தனமாக கூறிவிட்டார் என்பது போல திரித்து எழுதின. அவ்வாறு எதிர்த்த கும்பல் பொய்யும் புரட்டும் கொண்டு மதம் பரப்பும் கூட்டம். இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று நிந்திக்கும் கூட்டம். அவர்களின் கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் நடுநிலை நக்கிகள் வழக்கம் போல இளையராஜாவின் கருத்து சுதந்திரத்திற்கு எதிர்ப்பு வந்த போது மெளனமாக மதச்சார்பின்மை சாதித்தனர்.
இதை பற்றி நாமும் ஒரு அலசல் செய்யலாமே என்று யோசித்ததில், சில ஒப்பீடுகள் தெரிந்தன. நான் உயிர்த்தெழுதல் சாத்தியமா என்பதை பற்றி ஆராயப்போவதில்லை. அதற்கான திறனோ ஆளுமையோ எனக்கில்லை. ஆனால் அஃது சாத்தியமாயின், இவ்விரண்டு நிகழ்வுகளில் எதில் நம்பகத்தன்மை அதிகம் என்பதை சரித்திரம், தர்க்கம் கொண்டு ஆராய இயலும்.
இயேசு:
யூதர்களின் மதத்தில் பூசல் விளைவித்ததால் ரோமர்களால் கொல்லப்பட்டார், இதனை கிறித்துவர்கள் மனித குலத்தின் பாவங்களுக்காக தானே பலி கொடுத்தார் என்று சொல்லுகிறார்கள். (ஆனால் நாம் அறியாத, செய்யாத பாவத்திற்கு நம்மை கேட்காமல் அவரே கொடுத்ததாய் சொல்லபடும் பலியைப் பழியாய்க் கொண்டு குற்ற உணர்ச்சி பச்சாதாபம் மூலம் மத மாற்றம் செய்வது என்ன அறிவோ)
இரமணர்:
தானாக மரணம் என்னும் அனுபவத்தை நாடி ஏற்றார். ஆன்மாவைப் பற்றி அறிந்து தெளிவுற அம்முயற்சி. யாரின் குற்றமோ பாவமோ உந்தவில்லை. பூசலோ சட்டமோ கொலை செய்யவில்லை.
இயேசு:
உடலை பலவாறு துன்புறுத்தி ரத்தக்களறியாக்கி காயங்கள் பல பெற்று மரணித்தார். அத்தனை அடிபட்டு உயிரை தக்க வைக்க வலுவற்ற உடலுக்குள் மீண்டும் உயிர்தெழுந்ததாக கிறித்துவ கூற்று.
இரமணர்:
எவ்வகையிலும் சேதம் அடையாது தானே மூச்சினை நிறுத்தி புலன்களை அடக்கி மரண அனுபவம் கண்டு, காயமுறாத தேகத்திற்கு திரும்பினார்.
இயேசு:
உயிர்தெழுந்தபின் முற்றிலுமாக மறைந்துவிட்டார். உடல் எதுவும் கிடைக்கவில்லை, இத்தனைக்கும் யூதராயினும் சரி கிறித்துவராயினும் சரி உடலை எரிக்காமல் பெட்டியில் பத்திரப்படுத்தும் மரபு கொண்டவர். அக்காலத்தில் கல்பெட்டிகொண்டும் பாதுகாப்பர்.
இரமணர்:
மரணஅனுபவத்தின் பின் பல காலம் உடலுடன் வாழ்ந்து நேர்பட பலருக்கும் ஆன்மிகம் தெளிவித்து பின் உடல் நீத்தார்.
இயேசு:
அவர் மரணித்து உயிர்த்தெழுந்த சம்பவம் அது நடந்ததாக சொல்லப்படும் காலத்திற்கு ஒரு நூறு ஆண்டுகளுக்கு பின் தான் கூறப்பட்டு எழுதப்பட்டது, அதுவும் ரோமானிய சாம்ராஜ்யம் கிறித்துவத்தை ஏற்ற பின் மத தலைவர்கள் நீசியா (Nicea) போன்ற இடங்களில் மாநாடு நடத்தி கிறித்துவ மதநம்பிக்கைகளை தொகுத்தார்கள். அதில் பல பூசலும் வேறு. விவிலியத்தின் புதிய ஏற்பாடு பல முறை மாற்றி அமைக்க பட்டு, இயேசு மற்றும் அவரின் சீடர்கள் பேசிய ஆரமாய்க், கிரேக்கம் போன்ற மொழிகளிலிருந்து தப்பும் தவறுமாக ஒட்டி வெட்டி செய்த ஒன்று. பல வாய்ப்பட்டு வந்த கதை.
இரமணர்:
அவர் அவரின் மரண அனுபவத்தை அவரே நேர்பட சிலருக்கு சொல்ல, அவர்கள் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள்.
இயேசு:
இயேசுவின் கதையை ஏற்பாடு செய்தவர்கள் ஒரு சாம்ராஜயத்தின் மதமாக அதை நிறுவ நினைத்தவர்கள், அச்சாம்ராஜ்யத்தின் பிற மதங்களையும் முன்னேயே இருந்த வழிபாடுகளையும் அழிக்க நாட்டம் கொண்டவர்கள். இன்றும் அந்த உந்துதல்களாலேயே பணமும் உதவியும் கொடுத்தாவது பிறரை மதம் மாற்றம் செய்ய நினைப்பவர்கள். இன்றும் இந்தியாவின் மிகப் பெரிய நிலமுடைய நிறுவனம் கத்தோலிக்க சர்ச்சுத்தான். இந்த கதையினால் அவர்களுக்கு லாபம் உண்டு.
இரமணர்:
அவரின் அனுபவத்திற்கு பின் எந்த மதமும் ஸ்தாபிக்கவில்லை, அதற்க்கு பின் பல ஆண்டுகள் திருவண்ணாமலை கோவிலில் பாதாளத்தில் பின் மலை குகையிலும் ஒரு கோவணத்தோடு வாழ்ந்தார். மௌனத்தாலேயே குருவானவர். உலகளாவிய எந்த ஒரு பெரும் கும்பினியோ, சாம்ராஜ்யங்களை ஆட்டிப்படைக்கும் சக்தியோ அவரோ, அவரின் வழி செல்வோரோ நாடவில்லை. இக்கதையை சொல்லி மத மாற கேட்கவில்லை. லாப நாட்டம் இல்லை.
மீண்டும் மரணித்து உயிர்த்தெழுதல் சாத்தியமா என்பதில்லை என் ஆராய்தல். ஒரு வேளை சாத்தியமாயின் இந்த இரு நிகழ்வுகளில் எது நம்பக்கூடியது என்று எனக்கு தெளிவாக தெரிகிறது.
மாண்டு உயிர்திரும்புதல் பல மரபுகளில் உள்ளதுதான். நம் தேவார மூவர் இறைவன் அருளோடு செய்ததை ஒப்பிடுதல் மிகச்சுவையானது
- அப்பூதியடிகளின் குமாரனை சாவிலிருந்து மீட்டார் திருநாவுக்கரசர், ஆங்கு உடல் இருந்தது.
- திருமயிலையில் பூம்பாவையை மீட்டார் திருஞானசம்பந்தர், அங்கு இருந்தது பூம்பாவையின் சாம்பல் மட்டுமே.
- சுந்தரமூர்த்தி நாயனாரோ பலகாலம்முன் முதலை விழுங்கிய மகவை பொருத்தமான அளவு வளர்ந்த வயதினனாகவே மீட்டார், ஆங்கோ வெறும் நினைவுகள் மட்டுமே இருந்தது
இதுவெல்லாமே அறிவியல் நோக்கிற்கு சோதனை தான், நம்பிக்கை மட்டுமே சார்ந்தவை. அப்படி இருக்க இயேசுவின் உயிர்த்தெழுதல் மட்டுமே உண்மை, இரமணரின் அனுபவம் பொய் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.
அவரவர் நம்பிகை அவரவர்க்கு என்றிருந்து பிறர் நம்பிக்கை பற்றி பேசாமல் இருக்கலாம்தான். ஆனால் அப்படியா இருக்கிறார்கள் கிறித்துவர்கள்? பின் இளையராஜாவை சாடுவானேன்?
அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
ஒருவேளை நாயன்மார்களின் அல்லது இரமணரின் சரித்திரத்தில் உள்ள சம்பவங்கள் நிகழவேயில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படி கொள்வதால் எந்த ஊறும் நேர்ந்துவிடாது, ஏனென்றால் அந்த உயிர்த்தெழுதலை விடவும் அற்புதமானது அவர்களது பக்தியும். தமிழும், தத்துவங்களுமே. அவைகள் தான் பிறப்பு, மரணம்,மீளுதல் இவையெல்லாம் தாண்டி நிற்கும். இந்துக்களுக்கு தத்துவார்த்தமாக சாவின் மீது என்ன பயம்? ஒன்று மீண்டும் பிறப்போம் அல்லது வீடு பெறுவோம். ஆனால் கிறித்துவர்களுக்கோ ஒரே வாய்ப்பு தான் , செத்தபின் என்றோ வரும் நீதிநாள் வரை ஒரு தொங்கலாட்டம் தான் – அழுகும் உடலில் அன்று மீண்டு இயேசு மற்றும் தந்தையின் நீதிக்கு ஆளாகும்வரை.
ஒருவேளை இயேசுவின் உயிர்தெழுதல் நிகழவேயில்லை என்று வைத்துக்கொண்டால், கிறித்தவத்தின் ஆணிவேரே ஆட்டம்கண்டுவிடும். கன்னிக்கு பிறந்ததும் மறித்து உயிர்தெழுந்ததும் தவிர்த்து, கிறித்துவத்திற்கு என்று சொந்தமாக எந்த தத்துவமோ, கிரியை, சரியை, யோகம் சார்ந்த கலைகள் என்றோ எதுவும் கிடையாது. எல்லாமே பிறரிடம் சுரண்டிய சரக்கு தான். ஏன் கிறிஸ்துமஸ் கூட திருடிய கொண்டாட்டம் தான். ‘பாவிகளே’ என்று எல்லோரையும் கூறுவது மட்டுமே சொந்த சரக்கு. ஆக, முழுதும் இயேசுவின் அதிசய பிறப்பு இறப்பு மீட்பு என்பதை மட்டுமே சார்ந்த மதம். அது அவருக்கு மட்டுமே உரித்தான தனிப்பட்ட அதிசயம் இல்லை என்றானால் ‘டப்பா டான்ஸ் ஆடிவிடும்’,
ஆகவே தான் இளையராஜாவின் அந்த பதிலுக்கு இத்தனை எதிர்ப்பு.
சுருங்க சொன்னால்,
- இரமணரின் அனுபவம் பொய் என்றால், அவரின் ஞானவழிக்கோ, இந்து சமயத்திற்க்கோ எந்த சேதமும் இல்லை.
- இயேசுவின் உயிர்த்தெழுதல் பொய் என்றால், கிறித்தவத்தில் திருடிய தத்துவ கலாச்சார முறைகள் தவிர எதுவும் இல்லை.
- இரண்டுமே பொய் என்றால், முதலில் சொன்னது போல இரமணரின் வழிக்கு சேதமில்லை, கிறித்துவம் குப்பையில் சேரும்
- இரண்டுமே உண்மை என்றால், இந்த அற்புதம் கிறித்துவத்துக்கு மட்டுமே உரித்தது அல்ல, ஆக கிறித்துவின் வழி மட்டுமே வீடு பெற வழி என்னும் கிறித்துவ வாதம் பெரும் பொய் என்று ஆகும்.
ஆக கிறித்து என்பவர் – வரலாற்றில் வந்த பல மகான்களில் இன்னொருவர் அல்லது ஒரு உலகளாவிய சூதுக்கூட்டம் ஏற்படுத்திய கற்பனை கதாபாத்திரம். இந்த இரண்டில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.
எவ்வகையில் பார்த்தாலும் இப்படி வரலாறு மெய்ப்பிக்காத ஒரு கதையை நம்பி மத வியாபாரம் செய்யும் கிறித்துவம் புதைகுழியில் கட்டிய வீடு.
இயேசுவை மற்ற ஒரு மனிதரோடு ஒப்பிடுவதாலேயே ஆட்டம் கண்டிடும் ஒரு ஓட்டை வீடு.
அபிப்பிராயங்கள் எப்படி ஆயினும், ஒரு ஆன்மீக நோக்கு உடைய இசைஞானி இவ்விஷயங்களை ஒப்பிட்டு தன் தேடலுக்கு தெளிவுபெறவும் இக்கருத்துக்களை பொது மன்றத்தில் யாரையும் நிந்திக்காது கூறவும் உரிமை உள்ளது.
தொடரட்டும் அவரது இரமண அனுபவங்கள்.