அண்மையில் கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ்.அருண் அவர்களின் கிறிஸ்தவ இசைக்கச்சேரி குறித்த அறிவிப்பு வெளியானதும், சமூக வலைத்தளங்களில் அது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அருண் கலந்து கொள்ளக்கூடாது என்று பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப் பட்டன. பிறகு, ஓ.எஸ்.அருண் ‘தனிப்பட்ட காரணங்களால்’ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் அது ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து நித்யாஸ்ரீ உட்பட இன்னும் சில கலைஞர்கள் கிறிஸ்தவப் பாடல்கள் பாடி இசை ஆல்பங்கள் வெளியிட்ட பழைய செய்திகளும் வெளிக்கொணரப் பட்டன. இப்போது இந்தப் பிரசினை ஒரு முக்கியமான விவாதப் பொருளாக ஆகியுள்ளது.
தமிழும் கவியும் எல்லோர்க்கும் பொது தான். யாரும் அவர் விருப்பப்படி அவரவர் தெய்வங்களைப் பற்றியோ பிடித்த விஷயங்கள் பற்றியோ கவி வடிக்கலாம். ஆனால் எது கலாச்சார ஏற்பு, எது திருட்டு, எது திரிப்பு என்ற தெளிவு வேண்டும்
திருவள்ளுவரை தாமஸின் சீடர், அவர் கற்றுக்கொடுத்ததை தான் வள்ளுவர் திருக்குறளாக வடித்தார் என்று புரட்டு பேசுபவர்கள் இடையே போய் ஒரு தமிழ் அறிஞர்
‘சிலுவையில் ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.’
போன்று குறள் குதறி பொழிப்புரை செய்தால், தமிழ் மீது அன்புடையவர் ஆயின் கோபம், வருத்தம் வரவேண்டும்.
பைபிளை விவிலியம் என்றால் அது திருட்டு அல்ல, வேதம் என்றால் அது திருட்டுத்தான்.
அது போல் எத்தனை எத்தனை அடையாள திருட்டுக்கள்!
ஏன் ‘ஆச்சி’ என்ற அடையாளம் பெரிதும் செட்டியார் சமூகத்தை சார்ந்தது. திரையில் மனோரமா அவர்களை சார்ந்தது. ஆனால் அப்பெயரை வைத்து உணவு விற்பனை செய்வது கிறித்துவர்கள். ஏன் பொதுப்படையாக அம்மா, அன்னை, தாய் என்று வைக்கவேண்டியது தானே? செட்டிநாட்டின் தனிப்பட்ட சமையல் கலையின் அடையாளத்தை திருடத்தானே இச்செயல்?
சரி. சட்டரீதியாக திருவள்ளுவருக்கோ ஆச்சிகளுக்கோ கர்நாடக இசைக்கோ காப்புரிமை வாங்க முடியாது. பண்பாட்டு அடையாளங்களை அதன் வாரிசுகள் தான் காக்க வேண்டும். அவர்கள் ஆதரவைப் பெற்ற கலைஞர்களே போய் அதை அடமானம் வைத்தால் எவ்வாறு பொறுப்பது?
இந்தித் திணிப்பு பற்றி எச்சரிக்கை உண்டு. இந்நிலையில், ஓரு தமிழ் அறிஞர் ஒரு இந்திச் சபையில் போய் இந்தியே தலையாய மொழி, பிற மொழியெல்லாம் பொய்மொழிகள் என்று கொள்கை உடையவர்கள் இடையே நின்று தமிழிலேயே இந்தியை புகழ்ந்தாலும் வலிக்காதா என்ன? அது போல் தான், இந்து சமயம் அழியவேண்டும், அனைவரையும் மதம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படை கொள்கை கொண்டவர் சபையிலே, இந்துமதத்தின் பெரும் அடையாளச் சின்னமாகிய கர்நாடக இசையை இந்த அறிவு மழுங்கிய கலைஞர்கள் பாடுவது கேவலமான செயல். அதைக் கண்டிக்க வேண்டியதாகிறது.
ராகங்கள், தாளங்கள், பண்கள் அனைவருக்கும் பொது, மறுப்பில்லை. ஆனால் தனிப்பட்ட படைப்புகள் அவ்வகையில் சேராது. வில்லிபுத்தூர் விட்டுசித்தன் கோதை கொடுத்த உவமையை கொண்டால் – அறிவிற்சிறந்த அந்தணர் கொண்டு தெய்வங்களுக்கு என்று இட்ட படையலை, கண்ட கண்ட நரியும் நாயும் திங்க விடுவது போல ஆகும் இந்தச்செயல்.
உணவு எல்லோர்க்கு பொது தான், நாய்க்கு நரிக்கும் கூட சமைத்து ஊட்டலாம், ஆனால் படையலில் வைத்த உணவை அல்ல. அப்படிப்பட்ட செயலை பூசாரியே செய்தால் சினம் வரத்தானே செய்யும்?
நம் நாட்டில் சாராயம் பற்றி விளம்பரம் செய்ய தடை உண்டு, ஏனென்றால் அது போதையை உண்டுபண்ணி உடல்நலத்தைக் கெடுக்கும். இந்தத் தடையில் இருந்து தப்பிக்க சாராயம் காய்ச்சும் கம்பெனிகள் செய்யும் தந்திரம் அதே பெயரில் சோடா விளம்பரம் செய்வது தான்.
பிற தெய்வங்களை மறுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்ட மதங்களான கிறித்துவமும் இஸ்லாமும் செய்யும் நரித்தனமும் அதுபோல் தான். அவர்கள் விற்கும் சோடா – மத நல்லிணக்கம்.
அவர்கள் நம் பண்பாட்டின் சமயத்தின் கருக்களை மறுத்து இசை, கவிதை, வாழ்வியல் என்ற பல உறுப்புகளை மட்டும் திட்டமிட்டு களவாட முயன்று கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் கலைஞர்களும், பூசாரிகளும் அதற்கு துணை போவது கொடுமை. அதைத் தட்டிக் கேட்டால், மத நல்லிணக்க சோடா விற்கத்தான் பாடினேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல.
உண்மையில் மத நல்லிணக்கம் வேண்டுமாயின் கிறித்துவ கச்சேரியில் வழக்கம் போல் நெற்றியில் திருநீறு அணிந்து பிள்ளையாருக்கு முதல் பாடல் பாடி தாராளமாக ஏசுவை, அல்லாவை புகழட்டுமே. ஏன் அங்கு பாடும்போது சிலுவையும் மற்றபடி விபூதி குங்குமமும் அணியும் வேஷம்? பாடகரா இல்லை நடிகரா அல்லது மதசார்பற்ற அரசியல்வாதியா?
இந்த விஷயத்தை சினிமாவோடு ஓப்பிடுதல் தவறு. சினிமா இன்று நம்பிக்கை சம்பந்தப்பட்ட பண்பாட்டின் அடையாளம் அல்ல. அதில் கூட அப்பட்டமாக கதை திருடல் திரித்தல் கேலிக்கும் வழக்குக்கும் உள்ளாக்கும்.
தமிழ்நாடு பல கலைகளை இழந்து வருகிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பல மரபுக் கலைகள், அதுவும் இந்து சமய சம்பந்தப்பட்ட கலைகளை ஆதரிக்க நாதியில்லை. ஆதரித்த கோவில்களை திராவிடக் கட்சி அரசாங்கங்கள் ஆக்கிரமித்து சிலை கடத்தல், நிலப் பறிப்பு என்று அக்கிரமம் செய்கின்றன. ஓதுவார்கள், நாயனம், தவில், பறை, பல வித ஆட்டம் என்று பல கலைகள் இப்படித் தேய்ந்து அழிந்து வருகின்றன.
இந்நிலையில் வெளிநாட்டு காசில் இது போல அறிந்தோ அறியாமலோ இந்த வலையில் மாட்டிக்கொள்ளும் கலைஞர்களை விலைக்கு வாங்கி, அவர்களை முன்புறம் நிறுத்தி வைத்து, பின்புறமாக மரபின் அடையாளங்களைத் திருடி கிறித்துவ மயமாக்கும் ஒரு பெரும் இயந்திரம் இயங்குகிறது.
இந்துக்கள் யாவரும் முக்கியமாக தமிழரும் விழித்துக்கொண்டால் நலம். இல்லை, பால் என நினைத்து கள்ளுக்கு போதையாவதும், சாராயம் காய்ச்சி கம்பெனிக்கு சோடா விற்பதும் ஒன்று தான்.
அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு நம் இயற்கை வளங்களை எவ்வாறு எச்சரிக்கையோடு கொடுக்கவேண்டுமோ, அதுபோல், அந்நியப்படுத்தும் மதங்களுக்கும் நம் மரபின் வளங்களை கொடுப்பதில் எச்சரிக்கையும் வரைமுறையும் வேண்டும். அக்காலத்தில் அரசர்கள் இதை உணராது பரங்கிய கும்பினிக்கு பல உரிமைகளும் அளவு மீறி வரிவசூலிக்கக் கூட அனுமதியும் அளித்ததால் தான் சுதந்திரத்தையே இழந்து நின்றோம். அதே ரீதியில், பண்பாடு, சமயம், கலை, கலாசாரம் விஷயத்தில் அந்தப் பிழையை மீண்டும் செய்தல் கூடாது.
கிறித்துவரும் இஸ்லாமியரும் தமிழர் தானே என்று நினைத்து ஏமாறக்கூடாது ஏனென்றால் அவர்கள் கொள்கை முறையில் பரங்கியனுக்கு ஊழியம் செய்த அன்றைய இந்தியர்போல் தான். தனிமனித நேசம், பழக்கம், நட்பு வேறு. கொள்கைகளும் தர்மமும் பண்பாட்டைக் காப்பதற்கான போராட்டமும் வேறு.
சோடா விற்கலாம் தான். ஆனால் சாராய குழுமத்திற்காக செய்தால், சாராய விற்பனை என்றே கொள்ளப்படும்.