New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்து மன்னர்களே சமண பௌத்த ஆலயங்களை இந்து மன்னர்களே பெரும்பாலும் கட்டியிருக்கிறார்கள்.


Guru

Status: Offline
Posts: 24625
Date:
இந்து மன்னர்களே சமண பௌத்த ஆலயங்களை இந்து மன்னர்களே பெரும்பாலும் கட்டியிருக்கிறார்கள்.
Permalink  
 


எகிப்தின் குடைவரை கோயில்

அன்புள்ள விஸ்வேஷ்,

சமண ஆலயங்களை இந்து மன்னர்களே பெரும்பாலும் கட்டியிருக்கிறார்கள். இந்து ஆலயங்களைக் கட்டிய அதே சிற்பிகள்தான் கட்டியிருப்பார்கள். பெரும்பாலும் ஒரு காலகட்டத்தின் சமணர் கோயில்களும் இந்து ஆலயங்களும் ஒரே சிற்பக்கலை மரபைச் சேர்ந்தவையாகவே எங்கும் உள்ளன.

மேலும் சமண ஆலயங்களில் உள்ள சிற்பங்களில் வித்யாதேவிகள், யட்சிகள் போன்ற சில சமண தேவதைகளைத் தவிர்த்தால் பெரும்பாலானவை இந்து தொன்மங்களைச் சேர்ந்தவையே. மும்மூர்த்திகளும் தேவியரும் அதிகமாகக் காணப்படுகின்றன. கணபதி, விஸ்வகர்மா, காலபைரவன் போன்ற மூர்த்திகளையும் அதிகமாகக் காணமுடிந்தது. அவற்றைக் கட்டுவித்த மன்னர்களின் நம்பிக்கையும் அவற்றில் பிரதிபலித்திருக்கலாம்.

பௌத்தம்தான் இந்தியாவில் ஆலயக் கட்டிடக்கலைக்கு அடிப்படைகளை அளித்தது என்று ஒரு கருத்து நவீனப் பண்பாட்டாய்வாளர்களால் கூறப்படுகிறது. இன்றைய கல் கட்டுமானங்களில் மிகப்பழையது எகிப்திய கட்டிடக்கலையே. அது மத்திய ஆசியாவின் கட்டுமானமுறையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. அந்தக் கட்டிடக்கலை காந்தாரக்கலை வழியாக பௌத்தத்துக்கு வந்தது. பௌத்தம் உருவாக்கிய பெரும் குடைவரை விகாரங்கள் அந்தக் கலைப்பாணியையும் தொழில்நுட்பத்தையும் கொண்டவை.

இதை அஜந்தா எல்லோரா குகைக் குடைவுகளில் காணலாம். கார்லே குகைவிகாரம் மத்திய ஆசிய அல்லது ஐரோப்பிய சிற்பிகளாலேயே செதுக்கப்பட்டிருக்கலாம். ஐரோப்பிய [யவன] பண்பாட்டுத்தாக்கம் அவற்றில் அதிகம். அவற்றில் உள்ள சிற்பங்களின் முகங்களே கூட ஐரோப்பியச் சாயல் கொண்டவை. கார்லே குகைவிகாரம் கட்ட யவன வணிகர்கள் நன்கொடை அளித்திருக்கிறார்கள் என்பதற்கான கல்வெட்டாதாரங்கள் உள்ளன.

இந்தியாவில் அதற்கு முன்பிருந்த ஆலயங்கள் மரத்தாலும் செங்கல்லாலும் ஆனவை. பௌத்தக் கட்டிடக்கலை வழியாக முதலில் குடைவரைக்கோயில்களும் பின்னர் ஒற்றைக்கல் செதுக்குக்கோயில்களும் வந்தன. பின்னர் கல்லடுக்கிக் கட்டப்பட்ட கோயில்கள் உருவாயின. இக்கோயில்களின் உறுப்புகள் பற்றிய கலைச்சொற்கள் எல்லாமே பௌத்தக் குடைவரை சிற்பக்கலையில் இருந்து பெறப்பட்டவை என்கிறார்கள். கோயில்களின் அமைப்பு பழைய மரக்கட்டிடங்களின் பாணியையும் குடைவரை விகாரங்களின் பாணியையும் கலந்து உருவாக்கப்பட்டது. இதுவே பௌத்தர்கள் நம் சிற்பக்கலைக்கு அளித்த முக்கியமான கொடை.

கார்லே மாபெரும் குடைவரை

பௌத்த சிற்பக்கலை இந்தியாவின் பிற சிற்பக்கலை மரபில் இருந்து நிறைய வேறுபாடுகள் கொண்டது. அஜந்தா, எல்லோரா குடைவரைகளிலும் சாஞ்சி, அமராவதி தூபிகளிலும் உள்ள சிற்பங்களில் பௌத்த தொன்மங்களை ஒட்டிய சிற்பங்களின் அளவுக்கே சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிக்கும் சிற்பங்களும் நிறைய உள்ளன. இந்த அம்சம் பௌத்த சிற்பக்கலையின் தனித்தன்மை என்று சொல்லப்படுகிறது.

பௌத்த சிற்பங்களில் புத்தரின் நின்ற,இருந்த,கிடந்த தோற்றங்கள் முக்கியமானவை. பலவகையான யட்சிகள், கின்னரர்களின் சிற்பங்கள் உண்டென்றாலும் தாராதேவியின் சிற்பமே பௌத்த சிற்பங்களில் தனித்துவமும் அழகும் கொண்டது.

ஆனால் சமணச் சிற்பக்கலையும் இந்து சிற்பக்கலையும் பின்னாளில் வளர்ச்சி அடைந்த அளவுக்கு பௌத்த சிற்பக்கலை வளர்ச்சி அடையவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் பௌத்த சிற்பக்கலை பதினொன்றாம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பின்னால் அமைக்கப்பட்ட பௌத்த விகாரங்களும் சைத்யங்களும் இந்தியாவில் இல்லை. பக்தி இயக்கத்தை ஒட்டி பௌத்தம் இந்தியாவில் மெல்லமெல்ல மக்களாதரவை இழந்து பின்வாங்கியது. மன்னர்கள், மற்றும் வணிகர்களின் ஆதரவால் சில இடங்களில் மட்டும் எஞ்சியிருந்தது.

சாஞ்சி,சாமானியர் சித்தரிப்பு [ஐரோப்பியச்சாயல்]

1193இல் பக்தியார் கில்ஜி நாலந்தா பல்கலையை அழித்துப் பல்லாயிரம் பிக்குகளைக் கொன்றது இந்தியாவில் பௌத்தம் கிட்டத்தட்ட முழுமையாகவே அழியக் காரணமாக அமைந்தது. மாறாக, சமணம் இஸ்லாமிய ஆதிக்கம் உருவானபின்னரும் தொடர்ந்து பெருவணிகர்களால் ஆதரிக்கப்பட்டது. விஜயநகர சிற்றரசர்களாலும், பேஷ்வாக்களாலும் வணிகர்களாலும் சமண ஆலயங்கள் மீண்டும் உருவாக்கப்பட்டன. அது பௌத்ததுக்கு நிகழவில்லை. பௌத்தக்கலை இந்தியாவுக்கு வெளியே அடைந்த மலர்ச்சியை இந்தியாவில் பெறவில்லை.

தமிழகத்தில் தொன்மையான பல பௌத்த விகாரங்களும் சைத்யங்களும் இருந்திருக்கின்றன. அவை எல்லாம் செங்கல்லாலும் மரத்தாலும் ஆனவை. இங்கே குடைவரை சைத்யங்களும் விகாரங்களும் உருவாகவில்லை. அதற்கான சில காரணங்களை ஊகிக்கலாம். பௌத்தர்கள் ஆலயங்களைக் கட்டுவதில்லை, துறவிகள் தங்கும் விகாரங்களையும் வழிபடும் சைத்யங்களையுமே அமைப்பார்கள். பௌத்தர்களில் தேரவாதிகள் பொதுவாகப் பெரிய கட்டுமானங்களை அமைப்பதில்லை [ஆனால் இந்தியாவிலேயே பெரிய குடைவரை சைத்யமான கார்லே குகை தேரவாதிகளால் உருவாக்கப்பட்டதே]. தேரவாதிகள் சிலைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள். தமிழகத்தில் ஆரம்பத்தில் செல்வாக்குடன் இருந்தது தேரவாதமே. ஆகவே சாதாரணமான கட்டிடங்களே உருவாக்கப்பட்டிருக்கக்கூடும்.

சோழர் காலத்தில் புகழுடன் இருந்த நாகை சூடாமணி விகாரம் ஸ்ரீவிஜய நாட்டின் மன்னரான சைலேந்திர வம்சத்தினைச் சேர்ந்த திருமாற விஜயோத்துங்கவர்மனால் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் அதற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் என்ற ஊரை அளித்தான். அதை அவன் மகன் ராஜேந்திரனும் உறுதிப்படுத்தினான். இத்தகவல்களைத் தாங்கிய செப்பேடுகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைத்த புத்தரின் செப்புத்திருமேனிகள் முந்நூறுக்கும் மேல். அவை நாகை புத்தர் சிலைகள் என அழைக்கப்படுகின்றன.

பராக்கிரம பாகு என்னும் இலங்கை மன்னன், கி.பி 1256 இல் சோழ நாட்டில் இருந்து பௌத்த பிக்குகளை இலங்கைக்குக் கொண்டு சென்று அங்கே பௌத்த மரபை வளர்த்தான் என இலங்கை வரலாறு சொல்கிறது. ஆகவே சோழர்காலத்தின் கடைசி வரைக்கும் சோழநாட்டில் பௌத்தம் வலுவாக இருந்திருக்கிறது. 1311இல் மாலிக் காபூர் படையெடுப்பில் நாகை சூடாமணி விகாரம் அழிக்கப்பட்டது என அமிர் குஸுரு குறிப்புகள் காட்டுகின்றன. அதன் பின் தமிழகத்தில் பௌத்தக் கட்டுமானங்களாக எதுவும் எஞ்சவில்லை.

ஆனால் பௌத்தர்கள் பதினாறாம் நூற்றாண்டு வரைக்கும்கூட தமிழகத்தில் ஆங்காங்கே இருந்தார்கள். கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்தின் உட்பிரகார நிலைக்காலில் உள்ள ஒரு கல்வெட்டை முனைவர் ஜம்புலிங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

1580இல் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு செவ்வப்ப நாயக்கன் தஞ்சையை ஆண்டபோது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. இங்குள்ள திருமலைராஜபுரம் அந்தணர் கிராமம். அருகே உள்ள எலந்துறை அல்லது திருவிளந்துறை பௌத்தர்களின் கிராமம். திருமலைராஜபுரத்துக்கு ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டது. அதனால் எலந்துறைக்காரர்களின் கொஞ்சம் நிலம் பறிபோயிற்று. இதை ஈடுசெய்ய செவ்வப்ப நாயக்கரின் ஆணைப்படி திருமலைராஜபுரம் மக்கள் தங்கள் ஊரில் அதே அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்கு அளித்தார்கள். அந்நிகழ்ச்சியை இக்கல்வெட்டு சுட்டுகிறது.

இதை ஏன் கவனிக்கவேண்டும் என்றால், தமிழகத்தில் சமண, பௌத்த ஆலயங்களை இந்து மன்னர்கள் இடித்தார்கள், சமண பௌத்த மதங்களை அழித்தார்கள் என ஒரு பொய் கடந்த சில ஆண்டுகளாக இடதுசாரி வரலாற்றுத் திரிபாளர்களால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு நிலைநாட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஆதாரமாகக் காட்டுவது சைவ வைணவ நூல்களில் உள்ள பௌத்த, சமண மதக் கண்டனங்களையும் சில தொன்மக்கதைகளையும் மட்டுமே.

தமிழகத்தில் கடுமையான மதப்பூசல் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தப்பூசல் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடுவேயும் இருந்தது. பக்திமரபினருக்கும் தாந்த்ரீகர்களுக்கும் நடுவேயும் இருந்தது. அதற்கு அப்பால் மக்கள் மதப்பூசலிட்டதற்கோ மன்னர்கள் மதநிலையங்களை அழித்தமைக்கோ ஒரு சான்றுகூட இல்லை என்பதே உண்மை. நேர் மாறாக மன்னர்கள் எல்லா மதங்களையும் சமமாக ஆதரித்தமைக்கு ஏராளமான திட்டவட்டமான கல்வெட்டாதாரங்கள், செப்பேட்டுச்சான்றுகள் உள்ளன.

தமிழகத்தில் கடைசியாக ஆண்ட இந்து மன்னர்கள் நாயக்கர்கள். அவர்கள் பெரும்பாலும் வைணவர்களாக இருந்தாலும் சைவத்தை ஆதரித்தனர். சமண, பௌத்த ஆலயங்களையும் ஆதரித்தனர். பதினாறாம் நூற்றாண்டுவரைக்கும்கூட பௌத்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மன்னர்கள் கவனம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத ஒற்றுமையுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு சமணரேனும் எஞ்சும் ஊர்களில் இன்றும்கூட சமண ஆலயங்கள் அப்படியே நீடிப்பதை வடதமிழகத்தில் காணலாம். தென் தமிழகத்தில் முழுமையாகவே மக்கள் சமணத்தை விட்டுவிட்டு, சமணத்தின் பண்பாட்டுத்தடங்கள் கூட மக்கள் வாழ்க்கையில் இல்லாமலான பிற்பாடு, கைவிடப்பட்டுக் கிடந்த சமண ஆலயங்கள்தான் சைவ, வைணவ மதங்களுக்குரியவை ஆயின. அதுவும் அந்த மக்களாலேயே வழிபாட்டிடங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

ஆகவே தமிழகத்தில் எந்த சமண பௌத்த ஆலயங்களும் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. சமண ஆலயங்கள் பல நிலைகளில் இன்றும் உள்ளபோது பௌத்த சிலைகள் மட்டுமே எஞ்சுகின்றன என்பதை வைத்துப்பார்த்தால் தமிழக பௌத்த மடாலயங்கள் மரத்தாலும் செங்கல்லாலும் ஆனவையாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கலாம். அவை காலப்போக்கில் கைவிடப்பட்டு அழிந்திருக்கலாம். தமிழகத்தின் பல பகுதிகளில் புத்தர்சிலைகள் உள்ளன. சில ஊர்களில் புத்தர்சிலைகள் நாட்டார் தெய்வங்களின் பெயர்களில் வழிபடப்படுகின்றன.

தமிழக புத்தர் சிலைகளில் நாகப்பட்டினம் சிலைகள் மட்டுமே கலைரீதியாக முக்கியமானவை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவை சென்னை, தஞ்சை அருங்காட்சியகங்களில் உள்ளன. பிறசிலைகள் வெறும் வழிபாட்டுச் சின்னங்கள் மட்டுமே. தமிழகத்தில் மற்றபடி முக்கியமான பௌத்த தலங்கள் ஏதும் இல்லை என்பதே என் எண்ணம்.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: இந்து மன்னர்களே சமண பௌத்த ஆலயங்களை இந்து மன்னர்களே பெரும்பாலும் கட்டியிருக்கிறார்கள்.
Permalink  
 


பௌத்தமும் தமிழும்  - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980)
 
பின்னிணைப்பு2. சாத்தனார் - ஐயனார்

 

 
    'சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது  'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அஃதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்'  என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிகின்றது. பௌத்த நூலாகிய 'மணிமேகலை' யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் 'சாத்தனார்' என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. மற்றும், 'பெருந்தலைச் சாத்தனார்', 'மோசி சாத்தனார்' , 'வடவண்ணக்கன் பெருஞ் சாத்தனார்', 'ஒக்கூர்மாசாத்தனார்', 'கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்' முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக் கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த 'சாத்தன்' என்னும் பெயரைக் கொண்டு கருதலாம். 
 
    கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் 'சாஸ்தாவு குடி' என்றும், 'சாஸ்தா வேஸுவரம்'  என்றும், 'சாஸ்த்தாவுகள' என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்தமதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுவது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் 'சாத்தன் காவுகள்' என்று பெயர். (காவு-கா- தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்.) பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு 'ஆராமம்' (பூந்தோட்டம்) என்று  பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள  சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தவை, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு 'ஐயப்பன்' என்னும் பெயரும் மாலையாள தேசத்தில் வழங்கிவருகின்றது. காவிரிப்பூம் பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. 'சாஸ்தா' அல்லது ;சாத்தன்' என்னும் வடசொல்லிற்கு நேரான தமிழ்சொல் 'ஐயன்' அல்லது 'ஐயனார்' என்பது. 'ஐயன்' என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம் மதக்கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்துமதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனராரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகக் சேர்த்துக்கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.
 
    'பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
    சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
    கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதய நல்ல 
    தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்ரனாரே.'
 
என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.
 
    பிற்காலத்தில், 'சாத்தனார்','ஐயனார்','அரிஹரபுத்திரர்' என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாய்ச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.
 
    'சாத்தன்' அல்லது 'சாஸ்தா' என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப்பற்றியதாகும். சிலப்பதிகாரம், கனாத்திறமுரைத்த காதையில், 'பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு' என வரும் அடியில், 'பாசண்டச் சாத்தன்' என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு: "பாசண்டம் தொண்ணூற் றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை; இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின், 'மகாசாத்திர' னென்பது அவனுக்குப் பெயராயிற்று." இவர் கூறும் உரைக் கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, 'சூடாமணி நிகண்டும்,'
 
    'அண்ணலே மாயா தேவி சுதன்அக ளங்க மூர்த்தி
    தண்ணிய கலைகட் கெல்லாம் நாதன்முக் குற்ற மில்லோன்'
 
என்று கூறுகின்றது. 'அருங்கலை நாயகன்' என்று திவாகரம் கூறுகின்றது. நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், 'ஸ்வஸ்தீ ஸ்ரீஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்', என்று எழுதியிருப்பது காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் 'சாஸ்தா' அல்லது 'மகா சாஸ்தா' என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். 'லலிதாவிஸ்தார' என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண்கூடான சான்று யாதெனில், காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் இருந்த புத்தர் உருவச்சிலைக்குச் 'சாஸ்தா' என்னும் பெயர் உள்ளதுதான். இச்சாஸ்தாவைப்பற்றிக் 'காமாட்சி லீலாப்பிரபாவம்' என்னும் காமாக்ஷி விலாசத்தில், 'காமக் கோட்டப்பிரபாவத்தில்,' 'தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து(முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம், காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. 'சாஸ்தா' என்பவரும் 'புத்தர்' என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.
 
    காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில்  இருந்த சாத்தன் (புத்தன்) உருவத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கோபி நாதராயர் அவர்கள் கண்டுபிடித்து அதைப் படம்பிடித்து வெளியிட்டார்கள். (Indian Antiquary Vol. XLIV) அந்த உருவத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சிக்காம கோட்டத்தில் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அது சுமார் ஐந்தடி உயரமுள்ள கருங்கற் சிலையுருவம். புத்தர் பெருமான் நின்ற வண்ணம் உபதேசம் செய்வதுபோல அமைந்துள்ளது. இந்தச் சாஸ்தாவின் (புத்தரின்) கையிலிருந்து பெற்ற செண்டு என்னும் ஆயுதத்தினால் கரிகாலன் என்னும் சோழ அரசன் மேருமலையை அடித்தான் என்று ஒரு கதையுண்டு.  
 
    "கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
    மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
    கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
    செம்பொற் கிரிதிரித்த செண்டு"
 
என்னும் பழைய செய்யுள் இதனைக் கூறுகிறது. இச்செய்யுள் அடியார்க்கு நல்லாரால் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டப்பட்டது. இவ்வளவு புகழ்வாய்ந்த காமகோட்டத்துப் புத்தர் உருவச்சிலையை, இப்போது சென்னை அரசாங்க பொருட்காட்சிச் சாலையில் கொண்டுபோய்  வைத்துவிட்டு, அஃது இருந்த இடத்தில் ஐயப்பன் உருவத்தைப் புத்தம்புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த உருவம், இரண்டு கைகளையும் கால் முட்டியின் மேல் தாங்கி உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது. மலையாளத்திலுள்ள சாத்தன் காவுகளிலிருந்து புத்த விக்கிரங்களும் எடுக்கப்பட்டு இது போன்ற ஐயனார் உருவங்களை வைத்தார்கள் போலும்.
 
    'சாஸ்தா' என்னும் புத்தருடைய கோயில்களை 'ஐயனார் கோயில்கள்' என்றும், 'சாதவாகனன் கோயில்கள்' என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச்செய்துவிட்டது போலவே ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாக தெரிகிறது, சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், 'தலைவெட்டிய முனீஸ்வரன்' கோயில் என ஒன்று உண்டென்றும், அக் கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்போது காணப்படும் 'தருமராஜா கோயில்கள்' என்பனவும் பண்டொரு காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. 'தருமன்' அல்லது 'தருமராசன்' என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று. பிங்கல நிகண்டில் 'தருமன்' என்றும் திவாகரத்திலும் நாமலிங்கானு சாசனத்திலும் 'தர்மராஜன்' என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்த கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில் பௌத்தர் போற்றும் 'போதி' என்னும் அரசமரங்கள் இன்றைக்கும் காணப்படுவது தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் 'தரும ராஜா', அல்லது 'தருமதாகூர்' என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே. தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று கருதப்படும். 
 
    இவ்வாறே, தாராதேவி, மங்கலதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும்,பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது, 'தருமராஜா' என்னும்  பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, 'தாராதேவி' என்னும் பௌத்த அம்மன் கொயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதியின் கோயிலாக்கப்பட்டது,
 

 

    சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் 'வரதராசர் கோயில்;. 'திருவரங்கர் கோயில்','வேங்கடேசர் கோயில்' முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் 'கபாலீஸ்வரர் கோயில்', 'தியாகராசர் கோயில்','சொக்கலிங்கர் கோயில்'  முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் 'தருமராஜா கோயில்', 'சாத்தனார் கோயில்','முனீஸ்வரர் கோயில்' என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டு வந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது அதை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராமதேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பௌத்தமும் தமிழும்  - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980)

7. பௌத்த திருப்பதிகள் 


    தமிழ்நாட்டிலே பண்டைக்காலத்திலே பௌத்த மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது என்பதை அறிந்தோம். பொதுவாகத் தமிழ்நாட்டிலே சிறப்புப் பெற்றிருந்ததென்றாலும், சிறப்பாக எந்தெந்த நகரங்களிலும் ஊர்களிலும் செல்வாக்குற்றிருந்தது என்பதை ஈண்டு ஆராய்வோம். முதலில் சோழநாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகளைக் கூறுவோம். 

    காவிரிப்பூம்பட்டினம்: சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப்பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக் கால முதல் பௌத்தர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அவ்வாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப்பட்டினம் புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. பாலிமொழியில் உள்ள பௌத்த நூல்களில் இப்பட்டினம் 'கவீரபட்டினம்' என்று கூறப்பட்டுள்ளது. மிகப் பழமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்த நகரம் டமிள (தமிழ) தேசத்தில் உள்ளதென்றும், அகத்தி அல்லது அகித்தி என்னும் முனிவர் தமது பெருஞ் செல்வத்தைத் தானஞ் செய்துவிட்டுத் துறவு பூண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கித் தவம் செய்தாரென்றும், அப்பெரியாரைக் கண்டு வணங்கப் பெருந்திரளான மக்கள் அங்குச் சென்று வந்ததால் அவரது தவத்துக்கு இடையூறாயிருந்தது பற்றி அவர் அவ்விடத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கருகில் உள்ள காரைத் தீவிற்குச் சென்று தவம் புரிந்தாரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அகத்தி, அல்லது அகித்தி என்பவர் பௌத்த முனிவர்களில் ஒருவர். 

    கி.மு மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியின் உறவினரான மகிந்தர், (மகேந்திரர்) என்பவர் இலங்கைக்குச் சென்று அங்கு பௌத்தமதத்தைப் பரப்புவதற்கு முன், சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி அங்கு ஏழு விகாரைகளைக் கட்டினாரென்றும், மணிமேகலை சிலப்பதிகார நூல்களில் கூறப்படுகின்ற இந்திரவிகாரை என்பவை இவர் கட்டியவைகளேயென்றும், மகேந்திரர் கட்டிய அந்த விகாரைகளை இந்திரன் கட்டியதாக அந்த நூல்களில் கூறபட்டுள்ளதென்றும் சரித்திர ஆராய்ச்சியிற் சிறந்த அறிஞர்கள் கருதுகின்றனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இந்த விகாரைகளின் தலைவராக அறவண அடிகள் என்னும் தேரர் இருந்தார் எனத் தெரிகின்றது. இந்த ஏழு இந்திர விகாரைகளையன்றி, 'உவவனம்' என்றும் பூஞ்சோலையின் நடுவில், பளிங்கினால் அமைக்கப்பட்ட சிறு கோயில் ஒன்றில் புத்தரது பாதபீடிகை இருந்தது. இந்தப் பாத பீடிகையை அப்பட்டினத்தில் இருந்த பௌத்தர்கள் வணங்கி வந்தார்கள். 

    அன்றியும், இப்பட்டினத்தின் முதுகாட்டினை அடுத்துச் 'சுடுகாட்டுக் கோட்டம்' என்று ஏனைய மதத்தோரால் கூறப்பட்டதும், 'சக்கரவாளக் கோட்டம்' என்று பௌத்தரால் போற்றப்பட்டதுமான ஒரு கோட்டம் இருந்தது. இக் கோட்டத்தினுள் 'சம்பாபதி' என்னும் பௌத்த தெய்வம் கோயில் கொண்டிருந்ததென்பதையும், அக்கோயிலின் தூணொன்றில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவம் அமைந்திருந்ததென்பதையும், 'சக்கரவாளம்' என்னும் பௌத்தரது அண்டகோளத்தின் உருவம் இக்கோட்டத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தென்பதையும் மணிமேகலை என்னும் நூலினால் அறிகின்றோம். சம்பாபதி கோயிலுக்குக் 'குச்சரக் குடிகை' என்றும், 'முதியாள் கோட்டம்' என்றும் வேறு பெயர்கள் வழங்கப்பட்டன. 

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டினை அரசாண்ட மாவண் கிள்ளி என்னும் அரசன், பௌத்த மதத்தைச் சேர்ந்து துறவு பூண்ட மணிமேகலையின் வேண்டுகோளின்படி, சிறைச்சாலையை அறச்சாலையாக்கிக் கொள்ளும்படி அதனைப் பௌத்தர்களுக்குக் கொடுத்தான் என்றும், அச்சிறைச்சாலைக் கட்டடத்தைப் பௌத்தர்கள் அறச்சாலையாகவும் பௌத்தப் பள்ளியாகவும் அமைத்துக் கொண்டனர் என்றும் மணிமேகலை நூலினால் அறிகின்றோம், அறவண அடிகள், மணிமேகலை முதலிய பௌத்தர்கள் இவ்வூரில் இருந்தனர். 

    'இரசவாகினி' என்னும் பாலிமொழியில் உள்ள பௌத்த நூலில் சோழ அரசன் ஒருவன் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவபெருமானுக்குக் கோயில் ஒன்று நிறுவினான் என்றும், அக்கோயிற்பணி நடைபெறும்போது சில பௌத்த துறவிகள் வந்து சில அதிசயங்களைச் செய்து அரசனுக்குக் காட்டி, அச்சிவன் கோயிலைப் பௌத்தக் கோயிலாக்கினார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. 

    கி.பி. நாலாம் நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்னும் களபர அரசனால் ஆதரிக்கப்பட்டவரும், தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்களில் பேர் பெற்றவருமான புத்ததத்த தேரர் என்னும் பௌத்த ஆசிரியர், சோழநாட்டையும் காவிரிப்பூம் பட்டினத்தையும் சிறப்பித்துக் கூறியிருக்கிறார். காவிரிப்பூம்பட்டினம் செல்வத் தொகுதியும் மக்கட்கூட்டமும் நெருங்கிய இடம் என்றும், அப்பட்டினத்தில் இவர் தங்கி இருந்த பௌத்தப் பள்ளி கணதாஸர் என்பவரால் காணப்பட்டதென்றும், அப் பள்ளி நெடுஞ்சுவர்களால் சூழப்பெற்றுப் பெரிய வாயில்களையுடைய தென்றும், பள்ளிக் கட்டடங்கள் பெரியனவாய் வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம்போல வெண்ணிறமாக விளங்கும் என்றும் தாம் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் பாலி நூலில் இவர் எழுதியிருக்கிறார். இவ்வாறு இவர் சிறப்பித்துக் கூறுகிற செய்யுட்பகுதி சொற்சுவையும் பொருளழகும் ஓசையின்பமும் சிறந்துள்ளது என்று பாலி மொழியறிந்த பண்டிதர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். அப்பகுதி வருமாறு: 

"நரநாரீ கணாகிண்ணே அஸங்கிண்ணே குலாகுலே 
பீதே ஸப்பங்க ஸம்பன்னே பஸன்னே ஸரிதோதகே 
நானாரதன ஸம்பன்னே விவிதாபன ஸங்கதே 
காவேரிபட்டணே ரம்மே நானாராமோ பஸோபிதே 
கேலாஸ ஸிகராகார பாஸாத பதிமண்டிதே 
காரிதே கணதாஸேன தஸ்ஸனீய மனோரமே 
விஹாரே விவிதாகார சாருபாகார கோபுரே 
தத்தா பாசீன பஸ்ஸே மயா நிவஸதாஸதா 
ரம்மஸல்லேக ஸாகல்ய ஸீலாதிகுண ஸோபினா 
அயம் ஸுமதீனா ஸாது யாசிதேன கதோகதோ." 

 

    அன்றியும், புத்தவம்சம் என்னும் நூலுக்கு இவர் எழுதிய மதுரத்தவிலாஸினீ என்னும் உரையின் இறுதியிலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசர் கட்டிய பௌத்த விகாரையைக் கீழ்வருமாறு கூறியிருக்கிறார்: 

"காவீர ஜல ஸம்பாத பரிபூத மஹீதலே 
காவேரி பட்டணே ரம்மே நானா நாரீ நராகுலே 
காரிதே கணதாஸேன ஸணவாசேன ஸாதுனா 
விஹாரே விவிதாகார சாரு பாகார கோபுரே" 
    பூதமங்கலம்: இதுவும் சோழ நாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று; இவ்வூரில் வேணுதாசர் என்பவர் கட்டிய பௌத்தவிகாரையில் ஆசாரிய புத்ததத்ததேரர் தங்கியிருந்தபோது விநயவிநிச்சயம் என்னும் நூலைப் பாலிமொழியில் இயற்றினார். இந்த ஆசாரிய புத்ததத்ததேரர் சோழ நாட்டுத் தமிழர். தம் நூல்களில் சோழ நாட்டினையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் சிறப்பித்துக் கூறியது போன்று, இந்தப் பூதமங்கலம் என்னும் ஊரையும் சிறப்பாகக் கூறியுள்ளார். 

    சோழநாட்டிற்குக் கொப்பூழ் (நாபி) போன்றிருந்த பூதமங்கலம் வாழை, தென்னை, பனைமரங்கள் அடர்ந்த சோலைகளாலும், அல்லி, ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களால் நிரம்பப்பெற்ற குளங்களாலும் சூழப்பெற்றதென்றும், செழிப்பும் செல்வமும் பெருகிய இடம் என்றும், காவிரியாற்றின் நீர் பாயப்பெற்ற சோலைகளையுடையதென்றும் அங்கு, அகழியால் சூழப்பெற்ற நெடுஞ்சுவர்களையுடைய வேணுதாசர் என்பவரால் அமைக்கப்பட்ட விகாரையில் தங்கியிருந்தபோது தாம் விநயவிநிச்சயம் என்னும் நூலை எழுதியதாகவும் அழகுபடக் கூறுகிறார்: 

"ஸெட்டஸ்ஸ சோளரட்டஸ்ஸ நாபிபூதே நிராகுலே 
ஸப்பஸ்ஸ பன லோகஸ்ஸ காமே ஸம்பிண்டிதே விய 
கதலீ ஸாலா தாலுச்சு நாளிசேர வனாகுலே 
கமலுப்பல ஸஞ்சன்ன ஸலிலாஸய ஸோபிதே 
காவேரி ஜலஸம்பாத பரிபூத மஹீதலே 
இத்தே ஸப்பங்க ஸம்பன்னே மங்கலே பூதமங்கலே 
பவராகார பாகார பரிஃகா பரிவாரிதே 
விஹாரே வேணுதாஸஸ்ஸ தஸ்ஸனீய மனோரமே" 
என்று அவர் கூறியிருப்பது காண்க. 

    ஆசாரிய புத்ததத்தர் கூறுகிற பூதமங்கலம் என்பது எந்த ஊர்? தஞ்சாவூர் ஜில்லாவில்லுள்ள பூதலூர் என்று சிலர் கருதுவர். இது தவறு. நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றத்து நகரம் வெண்ணி. இந்த வெண்ணி நகரத்துக்கு அடுத்துப் பூதமங்கலம் என்னும் ஊர் ஒன்று சோழநாட்டில் இருந்த செய்தி சாசனங்களால் தெரியவருகிறது.  ( S.I.I No. 5 Inscriptions of the Tanjore Temple Vol II. Part 1)

    தஞ்சை ஜில்லா மன்னார்குடி தாலுகா திருவிராமேச்சரம் என்னும் பாடல்பெற்ற கோயிலில் உள்ள ஒரு சாசனம், தென்மலிநாட்டு மேற் பூதமங்கலம் என்னும் நாட்டையும் அங்கிருந்த ஊர்க்காட்டுப் பகவதேவர் கோயிலையும் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து பூதமங்கலம், மேற் பூதமங்கலம் கீழ்ப்பூதமங்கலம் என்று இருகூறாகப் பிரிக்கப்பட்டிருந்த செய்தி தெரிகிறது. அன்றியும் பகவதேவர் கோயில் என்பது புத்தர் கோயிலாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. புத்தருக்குப் பகவன் என்னும் பெயரும் உண்டு. மேற்கூரிய இரண்டு சாசனங்களிலும் காணப்படுகிற ஊர்தான் புத்ததத்தர் இருந்த பூதமங்கலம் ஆகும். 

    திரு மீனாட்சியம்மையாரும், இந்த ஊரைத்தான் புத்த தத்தர் குறிப்பிடுகிற பூதமங்கலம் என்று கூறுகிறார். 

    இவர் தாம் நேரில் அவ்வூருக்குச் சென்று தாம் கண்ட செய்திகளைக் கூறுகிறார். இவர் கூறுவதாவது: ஆசாரிய புத்ததத்தர் இருந்த பூதமங்கலம் வெண்ணிக் கூற்றத்து வெண்ணி நகரைச் சேர்ந்த பூதமங்கலம் ஆகும். தஞ்சாவூருக்குக் கிழக்கே 20 மைலுக்கப்பால் உள்ளதும், இப்போது கோயில் வெண்ணி என்று வழங்கப்படுகிறதும் ஆன இடம் தான் அது. இது மன்னார்குடி தாலுகாவில் இருக்கிறது. இப்போது, பூதமங்கலம் சிறு கிராமமாக இருக்கிறது. இதற்கடுத்துள்ள கிராமம் பள்ளிவிருத்தி என்று வழங்கப்படுகிறது. பள்ளிவிருத்தி என்பது பௌத்தப்பள்ளிக்காக விடப்பட்ட மானியம் என்று பொருள்படும். இப்போதுள்ள பூதமங்கலம், பள்ளிவிருத்தி என்னும் கிராமங்கள் பண்டைக்காலத்தில் பெரிய பட்டணமாக இருந்திருக்க வேண்டும். பூதமங்கலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டு அழிந்துபட்டுள்ள இரண்டு மேடுகளும், பள்ளிவிருத்தி கிராமத்தில் அவ்வாறே அழிந்து காணப்படுகிற மூன்று மேடுகளும் காணப்படுகின்றன. இந்த மேடுகளைத் தோண்டிப் பார்த்தால், இவற்றில் பௌத்த சின்னங்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும். இங்கு ஒரு புத்த உருவச்சிலையிருந்த தென்றும், அதைத் தஞ்சாவூருக்குக் கொண்டுபோய் விட்டதாகவும் கூறுகிறார்கள். இவ்வூருக்கு அருகில் உள்ள மன்னார்குடியில் இருக்கிற ஜைனக்கோயிலில் புத்தர் உருவச்சிலையொன்று காணப்படுகிறது. 

    இந்தச் சான்றுகளினாலே, ஆசாரிய புத்தத்தத்தர் வசித்திருந்ததும் வேணுதாசர் கட்டிய விகாரை இருந்ததுமான பூதமங்கலம் இந்த இடமாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. 

    புத்தமங்கலம்: கேய மாணிக்க வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துப் புத்தமங்கலம் என்னும் ஊர், பேராவூர் ஆதித்தியேசுவரர் கோயில் சாசனத்தில் கூறப்படுகிறது. 

    இது பௌத்தர் இருந்த ஊர் என்பது இப் பெயரே விளக்குகிறது. 

    சங்கமங்கலம்: ஜயசிம்ம குலகால வளநாட்டுத் தானவநாட்டுச் சோழசிகாமணி புரத்துக் கண்டியூரின் மேற்குப் பகுதியில் சங்கமங்கலம் என்னும் ஊர் இருந்ததாக ஒரு சாசனம் கூறுகிறது. இப்பெயரே இது பௌத்தர்கள் ஊரென்று தெரிவிக்கிறது (சங்கம் - பௌத்த பிக்குகள் சங்கம்). பௌத்தராக இருந்து சைவராகிச் சிவபெருமானைக் கல்லால் எறிந்து முத்தி பெற்ற சாக்கிய நாயனார் பிறந்த ஊர் திருச்சங்கமங்கை என்று பெரியபுராணம் கூறுகிறது, இந்தச் சங்கமங்கலமும் சங்கமங்கையும் ஒரே ஊராக இருக்குமோ என்று ஐயம் உண்டாகிறது. 

    போதிமங்கலம்: திருவிடைக்கழி என்னும் ஊரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் சாசனம் ஒன்று இவ்வூரைக் குறிப்பிடுகிறது. பெரியபுராணத்தில், "சாக்கியர்தம் போதிமங்கை" என்று கூறப்படுவது இவ்வூராக இருக்கலாம். இப்பெயரே, இது பௌத்தர்களுடைய ஊர் என்பதைத் தெரிவிக்கிறது. இவ்வூரில் திருஞானசம்பந்தரும் பௌத்தர்களும் சமயவாதம் செய்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது. திரிபுவன சக்கரவர்த்தி ராஜேந்திர சோழனுடைய 13ஆவது ஆண்டில், குன்றத்து நாராயணன் என்பவர், இவ்வூரில் ஐந்து வேலி நிலம் வாங்கி, திருவிடைக்கழி சுப்பிரமணியர் கோவிலுக்குத் தானம் செய்தார்." 

    திருவிளந்துறைக் கோயில்: இவ்வூர் கும்பகோணம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில், கி.பி. 1580 இல், தீத்தமாயிருந்த நாயகர் கோயில் என்னும் புத்தக் கோயில் இருந்ததாகச் சேவப்ப நாயகர் காலத்தில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று கூறுகிறது. 

    கும்பகோணம்: நாகேசுவர சுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள ஒரு புத்தர் உருவம் இருக்கிறது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல, பிற்காலத்தில் விநாயகர் (பிள்ளையார்) கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமமும் இதற்குச் சான்றாகும். 

    திருவலஞ்சுழி: தஞ்சை ஜில்லாவில் உள்ள இவ்வூர்ச் சிவன் கோயிலுக்கு வெளியே பெரியதோர் புத்தர் உருவம் அமைந்த கற்சிலை இருக்கிறது. 

    பட்டீச்சரம்: தஞ்சை ஜில்லாவில் உள்ள இவ்வூர்க் கிராமதேவதை ஆலயத்தில் புத்தர் உருவச்சிலை யொன்று இருக்கிறது. 

    எலயனூர்: தஞ்சை ஜில்லாவில் நன்னிலம் தாலுகாவில் உள்ள இவ்வூரில் ஒரு புத்தர் உருவச்சிலை இருந்தது. அவ்வுருவம், இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கிறது. 

    பொன்பற்றி: வீரசோழியம் என்னும் இல்க்கண நூலை எழுதிய புத்திமித்திரர் என்னும் பௌத்தர் வாழ்ந்திருந்த ஊர் இது. சோழநாட்டு மிழலைக் கூற்றத்தைச் சேர்ந்திருந்த ஊர் என்று கூறப்படுகிறது. இப்போது இது பொன்பேத்தி என்று வழங்கப்படுகிறது. தஞ்சை ஜில்லா அறந்தாங்கி தாலுகாவில் உள்ளது. இப்போது புதுக்கோட்டை மாவட்டம். 

    புத்தகுடி: சோழநாட்டில் நாகைப்பட்டினத்துக்கு அருகில் இருந்த ஊர். செயங்கோண்ட சோழவளநாட்டுக் குறும்பூர் நாட்டில் இவ்வூர் இருந்ததாகக் குலோத்துங்கச் சோழனது செப்புப் பட்டயம் கூறுகின்றது. ( Leiden grant) 
    இவ்வூரின் பெயரே, இது பௌத்தர்கள் குடியிருந்த ஊர் என்பதைத் தெரிவிக்கின்றது. 

    உறையூர்: பாலிமொழியிலும் வடமொழியிலும் இவ்வூர் உரகபுரம் என்று கூறப்படுகிறது. இவ்வூரில் இருந்தபோது ஆசாரிய புத்ததத்த தேரர் அபிதம்மாவதாரம் என்னும் நூலை இயற்றினார் என அறிகிறோம். "உரகபுர நிவாஸிகேன ஆசாரியேன பத்தந்த புத்தத்தேன கதோ அபிதம்மாவதாரோ நாமாயன," என்று அந்நூல் இறுதியில் எழுதியிருப்பதனால் இதையறிகிறோம். பண்டைக் காலத்தில் இங்குப் பௌத்தர்கள் இருந்தார்களெனத் தெரிகிறது. 

    பெருஞ்சேரி: மாயவரம் - திருவாரூர் இரயில்வேயில் உள்ள மங்கநல்லூர் நிலையத்திற்கு வடகிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது இவ்வூர். இங்கு 5'3'' உயரமுள்ள, உட்கார்ந்திருப்பது போன்ற புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது. இச்சிலையின் பீடத்தில் தமிழ் எழுத்துச் சாசனம் அழிந்துபோய்க் காணப்படுகிறது. இப்போது இது இருக்கும் இடத்திற்கு ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள ஒரு தோப்பில் இவ்வுருவம் முன்பு இருந்தது. 

    கோட்டப்பாடி: நன்னிலம் தாலுகாவில் அம்பகரத்தூர் இரயில் நிலையத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ளது இவ்வூர். இங்கும் புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது. 

    மயூரபட்டணம்: சூத்திரபிடகத்தின் ஒரு பகுதியாகிய மஜ்ஜிம நிகாய என்னும் பகுதிக்கு ஆசாரிய புத்த தத்த தேரர் (கி.பி 5ஆம் நூற்றாண்டின் தொடக்கம்) தாம் எழுதிய பபஞ்சசூடானீ என்னும் உரையின் இறுதியில், மயூரபட்டணத்தில் இருந்த புத்தமித்தர் என்னும் தேரரின் வேண்டுகோளின்படி இந் நூலை எழுதியதாகக் கூறுகிறார். மயூரபட்டணம் சில பிரதிகளில் மயூரரூபப் பட்டணம் என்றும் எழுதப்பட்டுள்ளது. இது மாயவரம் ஆக இருக்கலாம். மாயவரத்தை வடமொழியில் மயூரபுரி என்று கூறப்படுவது காண்க. இவ்வூரில் கி.பி 5ஆம் நூற்றாண்டில் பௌத்தவிகாரையும் பௌத்தர்களும் இருந்தனர் என்று அறிகிறோம். 

    நாகைப்பட்டினம்: இது சோழநாட்டைச் சேர்ந்த துறைமுகப்பட்டினம். இது தொன்றுதொட்டு பௌத்தர்களின் புண்ணிய நகரமாக இருந்துவந்தது. 

"உற்றவர்க் குறுப்பறுத் தெரியின்க ணுய்த்தலை யன்ன 
தீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய், 
நற்றவர்க் கிடமாகின்றது நாகையே" 
என்று பௌத்தர்கள் இந்நகரைப் புகழ்ந்து கூறுவர். 

    இங்கு அசோக சக்கரவர்த்தியார் கட்டிய பதரதிட்ட விகாரையென்று ஒரு விகாரை இருந்தது. இந்த விகாரையில் கி.பி 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசாரிய தர்மபாலர் தங்குயிருந்து நெட்டிபகரணட்டகதா என்னும் உரைநூலைப் பாலிமொழியில் எழுதினார். நாகைப்பட்டினம் நாகைநகரம் என்றும் கூறப்படுகிறது. இங்கிருந்த நாகாநன விகாரையில் மகா காசபதேரர் தங்கியிருந்தார். 

    கி.பி 720 ஆம் ஆண்டில் நரசிம்ம போத்த வர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில், இந்தப் பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகைக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசன் விருப்பப்படி அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் அக்கோயிலைச் 'சீனா கோயில்' என்று வழங்கியதாகத் தெரிகின்றது. வெனிஸ் தேசத்திலிருந்து சீனாவுக்கு யாத்திரை சென்ற மாக்கோ போலோ என்பவர் நாகைப்பட்டினத்தில் 'சீனா கோயில்' என்னும் பெயருள்ள ஒரு கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். 

     கி.பி எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கை யாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த விகாரையொன்றில் முழுதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்துகொண்டு போய், அப் பொன்னைக் கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது குருபரம்பரப் பிரபாவம் முதலிய வைணவ நூல்களினால் தெரியவருகின்றது. 

    கி.பி 985 முதல் 1014 வரையில் சோழ நாட்டை அரசாண்ட புகழ்பெற்ற இராசஇராச சோழன் காலத்தில் நாகையில் 'ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை' என்னும் பௌத்தப் பள்ளி கட்டப்பட்டது. சுமாத்திரா தீவில் ஸ்ரீ விஜய என்னும் இராச்சியத்தையும், பர்மா தேசத்தில் கடாரம் என்னும் இராச்சியத்தையும் அரசாண்ட ஸ்ரீமால் விஜய கோத்துங்கவர்மன் என்னும் அரசன் வேண்டுகோளின் படி, இந்த விகாரையை நாகைப்பட்டினத்தில் கட்டுவதற்கு இராச இராச சோழன் உத்தரவு கொடுத்தான். இந்த விகாரை ஸ்ரீமாற விஜயகோத்துங்கனின் தந்தையான சூடாமணிவர்மன் என்பவன் பெயரால் கட்டப்பட்டதாதலின், இதற்குச் 'சூடாமணி விகாரை' என்று பெயராயிற்று. 

    இந்தச் சூடாமணி விகாரைக்கு ராஜராஜப் பெரும்பள்ளி என்றும் பெயர் உண்டு. கடாரத்தரசன் இவ்விடத்திலேயே கட்டிய மற்றொரு விகாரைக்கு ராஜேந்திர சோழன் பெரும் பள்ளி என்று பெயர். யானைமங்கலம் முதலான ஊர்களை இவ்விகாரைக்குப் பள்ளிச்சந்தமாக இராச இராசன் அளித்தான். ஆயினும், சாசனம் எழுதுவதற்கு முன்னமே அவன் இறந்துவிட, அவனுக்குப் பின் அரசாண்ட இராசேந்திர சோழன், செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதித் தந்தான். அவன் எழுதிக்கொடுத்த சாசனங்கள் லீடன் நகரத்துப் பொருட்காட்சிச் சாலையில் இப்போது இருக்கின்றன. இப்பொழுது இச் சாசனங்களுக்கு 'லீடன் சாசனம்' (Leiden Grant) என்று பெயர் வழங்கப்படுகின்றது. Epigraphica India, Vol XXIII என்னும் நூலில் இந்தச் சாசனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    கி.பி 14ஆம் நூற்றாண்டில், இவ்வூரில் சீனர்கள் வியாபாரத்தின் பொருட்டு வந்திருந்தார்கள். இவ்வூர் புத்தப்பள்ளியில் சீனர்கள் ஒரு கல்வெட்டு எழுதிவைத்தார்கள். "14ஆம் நூற்றண்டின் இடைப் பகுதியில், எழுதப்பட்ட 'தாவோ - யி -சிலியோ' என்ற சீனநூல், சீன மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று நாகைப்பட்டினத்துப் பௌத்தப் பள்ளியில் இருந்ததாகக் கூறுகிறது" என்பர் திரு S.K. கோவிந்தசாமி பிள்ளையவர்கள். (தென் இந்திய வணிகம், கரந்தைக் கட்டுரை.) 

    பர்மா தேசத்தில் ஹம்சவதி நாட்டைப் (Pegu) பதினைந்தாம் பௌத்த பிக்ஷுக்களும், சித்திர தூதன் என்னும் தூதனும் இலங்கை சென்று தங்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் கப்பலேறிச் செல்லும் வழியில், கப்பல் புயலில் அகப்பட்டு உடைந்துபோக நற்காலமாக உயிர் பிழைத்துக் கரையேறினார்கள் என்றும், நாகைப்பட்டினத்தை அடைந்து அங்கிருந்த 'பதரிகாராமம் என்னும் பௌத்தப்பள்ளியில் தங்கியிருந்தார்கள் என்றும், அப் பள்ளிக்கருகில் சீன தேசத்து அரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த பௌத்தப்பள்ளியில் புத்த தேவரை வணங்கினார்கள் என்றும் பர்மா தேசத்துக் கலியாணி நகரத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இது நிகழ்ந்தது கி.பி. 1477 ஆம் ஆண்டில். 

    கி.பி. 1725 ஆம் ஆண்டில், 'சீனாக்கோயில்' என்னும் பெயருள்ள ஒரு கோயில் நாகைப்பட்டினத்தில் இருந்ததென்று வாலெண்டின் (Valentyn) என்பவர் எழுதியிருக்கிறார். 

    நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல் தொலைவில், 'புது வெளிக்கோபுரம்' என்றும், 'சீனாக்கோயில்' என்றும், 'கறுப்புக்கோயில்' என்றும், பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம், தாம் நேரில் 1849 ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர் வால்டர் எலியட் (Sir Walter Elliot) எழுதியிருக்கின்றார். (படம் 1 காண்க). 

    இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபை பாதிரிமார் இப்போது கட்டடம் கட்டியிருக்கிறார்கள். 1867 இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டடம் கட்டிக்கொள்ள ஆங்கில அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள். (க 224 Indian Antiquary Vol Vii) 

    இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 இல் வெட்டிய போது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிரிய பௌத்த உருவங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை. ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது பாதிரிமர் இதை அவருக்குக் கொடுத்தார்கள். இந்த உருவத்தின் பீடத்தில், பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் எழுத்தில், 'ஸ்வஸ்திஸ்ரீ ஆகமபண்டிதர் உய்யக் கொண்ட நாயகர்' என்று எழுதப்பட்டிருக்கிறது; இன்னொரு உருவம், புத்தர் போதியின் கீழ் அமர்ந்து தியானத்தில் இருக்கும் பாவனையாக அமைந்துள்ளது. (படம் 2 காண்க). இன்னொன்று, புத்தர் இரு கைகளையும் உயர்த்தி அபயம் அளிப்பதுபோல் அமைக்கப்பட்ட உருவம். இன்னொன்று சீன முறைப்படி செய்யப்பட்ட புத்தர் உருவம். 

    நாகைப்பட்டினத்தில் இப்பொழுதும் 'புத்தன் கோட்டம்' என்னும் பெயருள்ள அக்கிரகாரம் இருக்கிறதென்றும், பண்டைக் காலத்தில் இந்த இடத்தில் பௌத்தக்கோயில் இருந்திருக்க வேண்டுமென்றும், பௌத்தக்கோயில் அழிந்த பிறகு அந்த இடத்தில் இந்த அக்கிரகாரம் ஏற்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறுவர் டாக்டர் கு கிருஷ்னசாமி அய்யங்கார் அவர்கள். 

    நாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பௌத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் உள்ளன. 

  


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

  வெள்ளனூர்: இவ்வூர் புதுக்கோட்டையில் உள்ளது. இவ்வூர் கச்சேரியின் தென்புறத்தில் புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது. 

    செட்டிபட்டி: புதுக்கோட்டை குளத்தூர் தாலுகாவில் உள்ள இவ்வூரில், 3 அடி 9 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது. 

    ஆலங்குடிபட்டி: இதுவும் குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கும் 3 அடி 6 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது. 


இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பௌத்த ஊர்களைப்பற்றி ஆராய்வோம். 


    காஞ்சிபுரம்: இந்த ஊர் தொன்றுதொட்டுச் சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைகாலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாகக் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திகர் எழுதியிருக்கின்றார். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில், 'பைம்பூம் போதிப் பகவற்கு' ஒரு தேசியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். இளங்கிள்ளி அரசாண்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், 'தருமத வனம்' என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம். 

    காவிரிப்பூம் பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள், பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டு. அது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ. அறவண அடிகள் தங்கியிருந்த சேரி (சேரி = தெரு) ஆதலின், அத் தெரு இப்பெயர் பெற்றது. இப்போது அப்பெயர் அறப்பெருஞ்செல்வி தெரு எனமாற்றப்பட்டிருக்கிறது. அன்றியும், 'புத்தேரித் தெரு' என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அது 'புத்தர் தெரு' என்பதன் மரூஉ. மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங் கேட்டுத் துறவு பூண்டபின் காஞ்சிபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. 

    கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த புத்தகோஷ ஆசாரியர், பிடகநூல்களுக்கு உரைகளை எழுதியவர். இவர், தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலர் என்னும் பௌத்த பிக்ஷுக்களுடன் காஞ்சிபுரத்தில் வசித்திருந்ததாகவும், அவர்கள் வேண்டுகோளின்படி, இலங்கைக்குச் சென்றதாகவும் தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார். புத்தகோஷர் காஞ்சியில் இருந்த போது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்ததாகவும், அந்நூல் தாம் திரிபிடகங்களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும் சாமந்தபாசாதிகா என்னும் உரையில் இவர் கூறுகிறார். 

    நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்த ஆசாரிய தர்மபாலரும், அபிதம்மாத்த சங்கிரகம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில் பிறந்தவர்கள். அநுருத்தர் காஞ்சியில் இருந்த மூல சோம விகாரையில் இருந்தவர். 

    கி.பி 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திகர், காஞ்சிபுரத்தில் நூறு பௌத்தப்பள்ளிகளும் ஆயிரம் பிக்ஷுக்களும் இருந்ததாகக் கூறுகிறார். ஆசாரிய திக்நாகர், காஞ்சிக்கு அருகில் சிம்மவக்த்ரம் என்னும் இடத்தில் பிறந்தவர் என்று இந்த யாத்திரிகர் கூறுகிறார். இவர் கூறுகிற சிம்மவக்த்ரம் என்னும் ஊர் காஞ்சிக்கு அருகில் உள்ள சீயமங்கலமாக இருக்க வேண்டும். 

    காஞ்சிபுரத்தை அரசாண்ட மகேந்திர விக்கிரமன் என்னும் பல்லவ அரசன் (அப்பர் சுவாமிகள் காலத்தவன்), தான் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலில், காஞ்சியில் பல பௌத்தவிகாரைகள் இருந்தன என்றும், அவ்விகாரைகளுக்கெல்லாம் தலைமையாக இருந்த பெரிய விகாரைக்கு இராஜ விகாரை என்று பெயர் இருந்ததென்றும் கூறுகிறார். 

    காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறான். இவன் பௌத்தர்களுக்காகப் பள்ளிகளைக்கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும். கி.பி எட்டாம் நூற்றாண்டில், ஹிமசீதளன் என்னும் அரசன் பௌத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சிபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பௌத்தர்களை இலங்கைக்கு அனுப்பிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. 

    "இன்னும் காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோயிலெனத் தெரிகிறது. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன. கோயில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த உருவங்கள் இப்போதுமிருக்கின்றன. இது புத்தர் கோயில் என்பதற்கு மற்றோர் ஆதாரமிருக்கிறது. அதாவது இக்கோயில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு 'புத்தேரி' என்றும், வீதிக்கு 'புத்தேரித்தெரு' என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கிவருகின்றன." (பக்கம் 126. திருக்குறள் ஆராய்ச்சியும், ஜைனசமய சித்தாந்தமும், தி.அ.அநந்தநாத நயினார் எழுதியது. 1932) 

    கச்சீஸ்வரர் கோயிலுக்கு நான் சென்று பார்த்தபோது, தூண்களில் மட்டும் புத்த உருவங்களைக் கண்டேன். கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த உருவங்கள் காணப்படவில்லை. புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன. புத்தேரித்தெருவின் மேற்குக் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோயில் என்னும் இராஜ சிம்மேச்சரம் ஆதியில் புத்தர் கோயிலாக இருக்க வேண்டும் என்பதற்கு அக் கோயிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது. 

    காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த உருவங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த உருவம் இருக்கிறது. 

    இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் நிர்வாணம் அடையும் நிலையில் கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. படம் காண்க. 

    காஞ்சிபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோயில் என்னும் புத்தர்கோயில் இருந்தது. அதற்கு மானியமாகச் செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. (S.I.Epi. Rep. 1934 – 35 P. 76) இந்தக் கோயில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் உள்ளன. அவை, முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தனவாம். காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்றவண்ணமாக அமைக்கப்பட்ட "சாஸ்தா" (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்பொது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த உருவங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை. காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த உருவம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் இப்போது உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த உருவங்களைப் புதைத்துவிட்டார்களாம். 

    கி.பி. 14ஆம் நூற்றாண்டில், இருந்த ஜாவா தேசத்துக் கவிவாணர் ஒருவர், காஞ்சிபுரத்தில் 14 பௌத்தப் பள்ளிகள் இருந்தன என்று கூறியுள்ளார். அந் நூற்றாண்டில், காஞ்சியில், பௌத்தமதத்தையும் வைணவ மதத்தையும் பிரித்தறிய முடியாதபடி இரண்டறக் கலந்திருந்தன என்று தெரிகிறது. (P. 36 Chengleput Dt. Manual. 1879) 

    அறவண அடிகள், மணிமேகலை, ஆசாரிய புத்த கோஷர், சுமதி, ஜோதிபாலர், திக்நாத ஆசாரியார், போதி தரும ஆசாரியார், ஆசாரிய தருமபாலர், ஆநந்ததேரர், அநுருத்தர், புத்தாதிக்யர் முதலிய பேர் பெற்ற தேரர்கள் இவ்வூரில் வசித்தவர்கள். 

    இவர்கள் அன்றியும்,காஞ்சிபுரத்தில், கி.பி 9முதல் 11ஆவது நூற்றாண்டு வரையில் இருந்த சில பௌத்தப் பெரியார்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்பெயர்கள், பாடலிபுரத்தில் உள்ள பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பௌத்த உருவங்களின் பீடத்தில் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தப் பௌத்த உருவங்கள், கயா ஜில்லாவில் உள்ள குர்கிஹார் என்னும் இடத்தில் இருந்து கிடைத்தன. குர்கிஹார், பண்டைக் காலத்தில் குக்குட பாதகிரி என்னும் பௌத்த இடமாக இருந்தது. இங்கிருந்து கிடைத்த, உலோகங்களால் செய்யப்பட்ட பௌத்த உருவங்களில் 17 உருவங்கள் காஞ்சிபுரத்திலிருந்த பௌத்தப் பெரியவர்களால் அளிக்கப்பட்டவை. (Ninety Three Inscriptions on the Kurkihar bronzes. Patna Museum. by A. Banerji Sastri. The journal of the Bihar andOrissa Research Society Vol. xxvi. 1940 ). அவர்கள் பெயர் வருமாறு: 

    அம்ருதவர்மன், புத்தவர்மன், தர்மவர்மன், தூதசிம்மன், பிரபாகரசிம்மன், மஞ்சுஸ்ரீ, வீரியவர்மன், புத்தவர்மன், (இவர் காஞ்சியில் இருந்த கந்தகுடியில் இருந்தவர். புத்தர் கோயிலுக்குக் கந்தகுடி என்பது பெயர்.) புத்த ஞானர், சுகசுகர், விரோசன சிம்ம ஸ்தவிரர் (இவர் காஞ்சிக்கு அருகில் உள்ள நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் பிராமண குடும்பத்தில், பிறந்து, வேத வேதாந்தங்களைக் கற்றுணர்ந்து, பின்னர் பிரஞ்ஞசிம்மர் அன்னும் பௌத்தகுருவின் சீடராகி விரோசன சிம்ம ஸ்தவிரர் என்னும் துறவுபெயர் கொண்டவர்.) ரகுலவர்மர், சந்திரவர்மர், நாகேந்திரவர்மர், வீரவர்மர், அவலோகித சிம்மர் (இவர் கேரள தேசத்திலிருந்து வந்து காஞ்சியில் தங்கியவர்.) இவர்கள் எல்லோரும் பௌத்த பிக்ஷுக்கள் என்று தெரிகின்றனர். இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இவர்கள் கி.பி 9 முதல் 11ஆம் நூற்றண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்தவர்கள். 

    திருப்பாதிரிப்புலியூர்: இப்பொழுது கூடலூருக்கு அருகில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் முற்காலத்தில் பௌத்தர் இருந்தனரென்றும், அங்குப் பௌத்தப் பல்கலைக்கழகம் ஒன்றிருந்ததென்றும் கூறுவர். ஆயினும், அவற்றைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. 

    சங்கமங்கை: இதுவும் தொண்டை நாட்டிலிருந்ததாகத் தெரிகிறது. பௌத்தராயிருந்து, பின்னர் காஞ்சிபுரஞ் சென்று பௌத்த தருமத்தை நன்கு கற்று, பின்னர் சைவசமயத்தைச் சேர்ந்த சாக்கிய நாயனார் இவ்வூரில் பிறந்தவர். இந்த ஊரின் பெயரே, இது பௌத்தரது ஊர் என்பதை தெரிவிக்கும். சங்கம் என்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. அதாவது, பௌத்த பிக்ஷுக்களுக்குச் சங்கம் என்பது பெயர். எனவே, சங்கமங்கை என்கிற பெயர் பௌத்தச் சார்பான தென்பதைத் தெரிவிக்கின்றது. 

    ஆவுர்: வட ஆர்க்காடு ஜில்லா திருவண்ணாமலை தாலுகாவில் உள்ளது இவ்வூர். இவ்வூரில் இடிந்து போன சிவன்கோயில் சாசனம், கோப்பெருஞ்சிங்க தேவர் II உடைய 30 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், இவ்வூர் "பெண்ணை வடகரை சேதிமண்டலத்து ஆவுர்" என்றும், இக்கோயில் திருவகத்தீஸ்வரம் உடைய நாயனார் என்றும் கூறப்படுகிறது. இச்சாசனத்தில் ஸ்ரீமற்சேன மஹாபோதி என்னும் பெயரும், "சா(க்)கியர்" என்னும் பெயரும் காணப்படுகின்றன. ஆகவே இவ்வூரில் கி.பி 1272 இல் பௌத்த வணிகர் இருந்த செய்தி அறியப்படுகிறது. திரு அகத்தீஸ்வரம் உடைய நாயனார் என்பது அகத்தி அல்லது அகஸ்தி என்னும் பௌத்த முனிவரைக் குறிக்கிறது போலும். 

    கூவம்: செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. இவ்வூருக்க்குத் திருவிற்கோலம் என்னும் பெயர் உண்டு. இவ்வூரில் பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள். இவ்வூரில் இருந்த பெரிய புத்தச்சிலை, இப்போது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரில் இன்றும் சில பௌத்த உருவச்சிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தர்மச்சக்கரம். அதைப் படத்தில் காண்க. 

    ஞாயர்: செங்கற்பட்டு ஜில்லா, புழற்கோட்டத்து ஞாயர் நாட்டு ஞாயர் என்று சாசனங்களில் இவ்வூர் கூறப்படும். இவ்வூரில் புத்தேரில் உடையார் கோயில் என்னும் பௌத்தக் கோயில் ஒன்று இருந்தது. 

    நாவலூர்: செங்கற்பட்டு ஜில்லா, பொன்னேரி தல்லுக்காவில் உள்ள ஊர். (இப்போது திருவள்ளூர் மாவட்டம்) பௌத்தக் காஞ்சியில் (காஞ்சிபுரத்தில்) இருந்த கச்சிக்குநாயகர் கோயில் என்னும் புத்த கோயிலின் பள்ளிச்சந்தம் (மானியம்) ஆக இருந்தது இவ்வூர் என்று இங்குள்ள ஒரு சாசனம் கூறுகிறது. இச்சாசனத்தின் பின்புறத்தில் தர்ம சக்கரம் (பௌத்த சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. (S.I. Ep. Rep. 1934 – 35 Page 76, 13 of 1934 – 35) 

    திருச்சோபுரம்: தென் ஆர்க்காடு ஜில்லா, கூடலூர் தாலுகாவில் உள்ள இவ்வூர் மங்களபுரீசுவரர் கோயில் முன்மண்டபத்து மேல்தளத்தில் உள்ள ஒரு கல் சாசனம் சிதையுண்டிருக்கிறது. இச்சாசனத்தில் சாரிபுத்திர பண்டிதர் என்பவர் தானம் செய்த செய்தி கூறப்படுகிறதோடு சங்கத்தார் குறிப்பிடுகின்றனர். சங்கம் பௌத்த பிக்குச் சங்கத்தைக் குறிக்கிறது. சாரிபுத்திர பண்டிதர் என்னும் பெயர் பௌத்தப் பெயர் ஆகும். ஆனால், இந்தச் சாரிபுத்திரரும், திருஞானசம்பந்தருடன் வாதம் செய்த சாரிபுத்தரும் வெவ்வேறு ஆட்கள். இந்தச் சாசனம், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் I காலத்தில் கி.பி 1264-65 இல் எழுதப்பட்டது. (113 of1914 Ep 1904. P. 44) 

    பல்லாவரம்: பல்லவபுரம் என்பதன் திரிபு இப்பெயர். காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்கே 3 மைலுக்கப்பால் இருக்கிறது. இவ்வூரில், காஞ்சிபுரத்தை அரசாண்ட பல்லவ அரசகுடும்பத்தார் வாழ்ந்திருந்தார்கள் ஆகையால், இவ்வூர் இப்பெயர் பெற்றது. இப்போது இது சிறு கிராமமாக இருக்கிறது. பல்லவர் காலத்தில் இவ்வூர் சிறப்புற்றிருக்க வேண்டும். இவ்வூரில், முதலாவது மகேந்திரவர்மன் கற்பாறையைக் குடைந்து அமைத்த குகைக்கோயில் ஒன்று இருக்கிறது. 15-7-46 இல் இவ்வூருக்குச் சென்றிருந்தபோது இவ்வூருக்கு அண்மையில் உள்ள கணிகிலுப்பை என்னும் ஊரில் புத்தர் உருவச்சிலையொன்றை ஏரிக்கரையில் கண்டேன். இவ்வுருவம், ஏரிக்கரைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, அவ்வூர் விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக்கிறது. அவ்வூர்த்தெருவின் எதிர்க்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது. புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். பிறகு, புத்த உருவத்தை ஏரிக்கரையில் கொண்டுப்போய்ப் போட்டுவிட்டார்கள். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பல்லவ அரச குடும்பம் இருந்த இவ்வூரில் புத்தர் ஆலயம் இருந்தது வியப்பன்று. ஏனென்றால், பல்லவ குடும்பத்தில் ஒரு பிரிவினர் பௌத்தர்களாக இருந்தனர். புத்தவர்மன் என்னும் பெயரைச் சூடிய பல்லவ அரசர்கள் சாசனங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள புத்த விக்கிரகமும், வர்மச்சக்கரக் கல்லும் இவ்வூரில் புத்த கோயில் இருந்ததை வலியுறுத்துகின்றன. 

    மாங்காடு: செங்கல்பட்டு ஜில்லா, சைதாப்பேட்டை தாலுகா பூந்தமல்லிக்கு அருகில் இருக்கிறது இக்கிராமம். இவ்வூர் வெள்ளீசுவரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனம் ஒன்று, திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சுந்தரபாண்டிய தேவர் I (1251-64) காலத்தில், அவரது 5 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், இங்கிருந்த பள்ளிக்கு (புத்தர் கோயில்) மாங்காடு கிராமம், பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று எழுதப்பட்டுள்ளது. (788, 358 0f 1908 Top. List Vol. 1.) 

    இவ்வூரில் மூன்று மகாயான பௌத்த உருவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று தலையுடைந்து கிடக்கிறது. அன்றியும், மாங்காட்டுக்கு அருகில் உள்ள பட்டு என்னும் கிராமத்தில் ஒரு விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது. இதற்கு அருகில் தர்மராஜா கோயிலும் இருக்கிறது. இங்கு ஆதியில், புத்தர் கோயிலை அழித்து விநாயகர் கோயிலையும் தர்மராஜா கோயிலையும் கட்டியிருக்க வேண்டும். புத்தர்கோயிலை, விநாயகர் கோயிலாகவும், தர்மராஜர் கோயிலாகவும் அமைப்பது பிற்காலத்து வழக்கம். பட்டுக்கிராமத்தில் இருந்த புத்தர் உருவச்சிலை இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 

    இரண்டாங்காடு: செங்கற்பட்டு ஜில்லா ஸ்ரீபெரும்புதூர் தாலுகா குன்றத்தூருக்கு அருகில் உள்ளது இரண்டாங்காடு. இங்கு புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது. இவ்வூருக்குப் புத்தவேடு என்று பெயர் கூறப்படுகிறது. 





__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 இனி, பாண்டி நாட்டில் பௌத்தர் இருந்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்: 


    மதுரை: இந்த நகரத்தில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன வென்பதை மதுரைக் காஞ்சி என்னும் நூலினால் அறிகிறோம். 

"திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரு மோராங்கு விளங்கக்
காமா கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளி" 
    இதன் உரை: திண்ணிய ஒளியினையுடைய பேரணி கலசங்களையுடையவராய் விருப்பம் அழகு பெற்ற பெரிய இளமையினையுடைய பெண்டிர், தாம் முயங்குதலைச் செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையுங் கூட்டிக்கொண்டு, தாது சேர்ந்த செவ்வித்தாமரைப் பூவைப் பிடித்தாற்போல ஒள்ளிய சிறு பிள்ளைகளையும் எடுத்துக் கொண்டு, தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாகப் பூசைக்கு வேண்டும் பூவினையுடையவராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்துப் பாதுகாத்தலை நடத்தும் பௌத்த பள்ளி. இவ்வுரை நச்சினார்க்கினியர் எழுதியது ஆகும். 

    அசோக சக்கரவர்த்தி மதுரைக்குக் கீழ்த்திசையில் கட்டிய ஒரு பௌத்த விகாரை இடிந்து பழுதுபட்ட நிலையில் இருந்ததென்றும், அதற்குச் சற்றுச் சேய்மையில் மகேந்திரர் கட்டிய பௌத்த பள்ளியொன்றும் அழிந்து போகும் நிலையில் இருந்ததென்றும் கி.பி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் பிரயாணம் செய்த யுவாங் - சுவாங் என்னும் சீனர் எழுதியிருக்கின்றார். மதுரையில், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் 'சிந்தா தேவி' என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக மணிமேகலையினால் தெரியவருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்று ஆராய்ச்சியாளரிற் சிலர் கருதுகின்றார்கள். 

    அரிட்டாபட்டி: மதுரை ஜில்லாவில் இப்போது குக்கிராமமாயுள்ள ஓர் ஊர். கி. மு மூன்றாம் நாற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்னும் ஆரசனுடைய அம்மானாராகிய அரிட்டர் என்னும் பௌத்த பிக்ஷு, மகேந்திரருடன் சேர்ந்து பாண்டி நாட்டில் பௌத்த மதத்தைப் பரவச் செய்தாரென்றும் அந்த அரிட்டர் என்பவர் இந்த ஊருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் வாழ்ந்து வந்தார் என்றும், ஆகவே இவ்வூருக்கு அவர் பெயர் வழங்கலாயிற்று என்றும் ஆராய்ச்சிவல்ல அறிஞர் கருதுகின்றனர். இந்த அரிட்டாபட்டிக் கருகில் உள்ள பௌத்தக் குகைகளில் அசோக மன்னர் காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது பண்டைக் காலத்தில் பௌத்தக் கிராமமாயிருந்தது. பிற்காலத்தில் அழிந்து இப்போது குக்கிராமமாக இருக்கிறது. 

    பொதிகை: பொதிகை மலையும் பௌத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகப் பிற்காலத்தில் கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதிசத்தர் வீற்றிருக்கிறார் என்பதும், அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் பௌத்தர்களின் கொள்கை. இந்த மலையை அடுத்து 'மலைய நாடு' என்னும் பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பௌத்த மதத்தவராகிய வச்சிரபோதி (கி.பி 661-730) என்பவர் பிறந்தார். சீன தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் சென் பௌத்த (Zen Buddism) மதத்தைப் பரப்பியவர் இவரே. 

    தஞ்சை: பாண்டிநாட்டில் இருந்த தஞ்சாவூர். இந்த ஊரில் வாணன் என்னும் சிற்றரசன் ஒருவன்மீது இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்னும் ஒரு நூல் தமிழில் உண்டு. பாலி மொழியில் பதினான்கு நூல்களை இயற்றிய பேர்பெற்ற பௌத்த பிக்ஷுவாகிய ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தார். இந்த ஊரிலும் பௌத்தர்கள் இருந்தனர். 

    திருமாலிருஞ்சோலை: 'அழகர்மலை' என்று வேறு பெயருள்ள இந்த இடம் இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரில் உள்ள குளம் ஆராமத்துக் குளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆராமம் என்பது சங்கராமாமம். அதாவது பௌத்த பிக்ஷுக்கள் வசிக்கும் இடம். அன்றியும், இக்கோயிலின் பழைய ஸ்தல விருக்ஷம் போதி (அரச) மரம் என்று கூறப்படுகிறது. இக்குறிப்புகள் யாவும் இது பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததென்பதைக் காட்டுகின்றன. 

    தென்கரை: திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு புத்தர் உருவச்சிலை யொன்று இருக்கிறது. (P.I.M.A.R. 1916 – 17.) 

ஆசாரிய தம்மபாலர், வச்சிரபோதி, தம்மகீர்த்தி முதலிய பௌத்தப் பெரியார்கள் பாண்டிய தேசத்தில் இருந்தவர் ஆவர். பாண்டியதேசம், பாலி மொழியில் தம்பராட்டா (தாம்பிரபரணி தேசம்) என்று கூறப்படுகிறது. பாண்டியநாட்டில், பாண்டவ மலைகளும் அவற்றில் பிராமி எழுத்துக்களும் அதிகமாகக்காணப்படுகின்றன. ஜைனமதத்திற்கு முன்பு, பௌத்தமதம் பாண்டியநாட்டில் சிறப்புற்றிருந்தது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள. 


இனி, சேரநாட்டில் இருந்த பௌத்த ஊர்களை ஆராய்வோம்: 

    வஞ்சிமாநகர்: இப்போது மலையாள தேசமாக மாறிவிட்ட கேரள தேசம் பண்டைக்காலத்தில் தமிழ் நாடாக இருந்தது. அப்போது அதற்குச் சேரநாடு என்று பெயர். அதன் தலைநகராக இருந்தது வஞ்சிமாநகர். கி. பி இரண்டாம் நாற்றாண்டில் வாழ்ந்திருந்த சிலப்பதிகாரக் கதைத் தலைவனாகிய கோவலன் என்பவனுடைய மூதாதை, கோவலன் என்னும் பெயருடையவன், இந்த நகரத்தில் சிறந்ததொரு புத்தசேதியம் கட்டினான் என்று மணிமேகலையினால் தெரிகின்றது. சிலப்பதிகாரக் தலைவனாகிய கோவலனது ஒன்பது தலைமுறைக்கு முற்பட்ட பாட்டனான இந்தக் கோவலன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற நண்பன் என்பதும், பாதபங்கய மலையிலிருந்து வந்த ஒரு பௌத்த பிக்ஷுவின் உபதேசங்களைக் கேட்டு இவன் துறவு பூண்டு சேதியம் அமைத்ததோடு, தன் பொருள் முழுதும் தானம் செய்தான் என்பதும் தெரிகின்றன. இவன் கி. மு முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவனாகலின், இந்தச் சேதியம் கட்டப்பட்டதும் அக்காலமாகும். கி. பி இரண்டாம் நாற்றாண்டில், இந்தச் சேதியமும் இன்னும் பல பௌத்தப் பள்ளிகளும் இருந்ததாகவும், கோவலன் தந்தை மாசாத்துவானும் மணிமேகலையும், அறவண அடிகளும் இந்த நகரத்திற்சென்று இங்கிருந்த பௌத்த விகாரைகளைத் தொழுதனரென்பதாகவும் மணிமெகலை கூறுகிறது. 

    பாண்டவமலைகளும் கழுகுமலைகளும்: தமிழ்நாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகள் சிலவற்றை மேலே கூறினோம். பண்டைக்காலத்திலே தமிழ்நாடு முழுவதும் பௌத்த, ஜைன சமயங்கள் பரவியிருந்தன என்பதைச் சாசனங்களும் நூல்களும் சான்று பகர்கின்றன. கி.பி 7ஆம் நூற்றாண்டிலே, சைவசமயம் குன்றி பௌத்த மதமும், சமண சமயமும் பரவியிருந்ததென்றும், இதனைக் கண்டசிவபாத இருதயர் மனம் வருந்திச் சிவபெருமானிடம் முறையிட்டார் என்றும், பௌத்த சமண மதங்களை அழித்துச் சைவசமயத்தைப் பரவச் செய்வதற்காகத் திருஞான சம்பந்தர் பிறந்தார் என்றும் பெரியபுராணம் கூறுகிறது. 

மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்மிகுந்தே 
ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால் 
பூதிசா தளவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண் 
டேதமில்சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்." 
            (பெரிய புராணம் திருஞான சம்பந்தர் - 18) 
    இவ்வாறு அக்காலத்திலே, தமிழ்நாடு முழுவதும், பௌத்தமும் சமணமும் பரவிப் பெருகியிருந்ததாகச் சேக்கிழார் கூறுவது வெற்றுரையன்று: உண்மையே. மூவர் தேவாரத்தையும் தேவாரம் பெற்ற திருப்பதிகளின் வரலாற்றையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், பௌத்தமும் சமணமும் ஒவ்வொரு ஊரிலும் பரவியிருந்த செய்தியை யறியலாம். இந்த முறையில், நான் ஆராய்ந்து பார்த்த வரையில், தேவாரம் பெற்ற திருப்பதிகளிலெல்லாம் மூவர் காலத்திலும், அதற்குப் பிற்பட்டகாலத்திலும் பௌத்த சமயமும் சமன சமயமும் சிறப்புற்றிருந்த செய்தியைக் கண்டேன். ஆராய்ச்சி மனப்பான்மையுடையோர், தேவாரம் பெற்ற திருப்பதிகளின் சமய வரலாற்றை இக்கண்கொண்டு ஆராய்ந்து உண்மை காண்பாராக. 

    இனி, தமிழ்நாட்டிலே ஆங்காங்குக் காணப்படுகிற பஞ்ச பாண்டவ மலை அல்லது பாண்டவக் குன்று என்பனவற்றில் பெரும்பாலானவை, பண்டைக்காலத்திலே பௌத்த பிக்குகள் வசித்துவந்த மலைகள் என்பதை விளக்குவாம். தமிழ்நாட்டில் மட்டுமன்று, ஆந்திரநாட்டிலும் இத்தகைய பாண்டவர் குன்றுகள் உள்ளன. ஆதியில், பௌத்த பிக்குகள் வசித்துவந்த இக் குகைகள், பௌத்தமதம் செல்வாக்கிழந்த பிறகு ஜைனர்களால் கைப்பற்றப்பட்டு, இவைகளில் சமணத்துறவிகள் வசித்து வந்தார்கள். பிற்காலத்திலே, சமணசமயமும் வீழ்ச்சியடைந்த பிறகு இக்குகைகள் 'இந்து' சமயத்தவரால் கைப்பற்றப்பட்டு இந்துக்கோயில்களாக மாற்றப்பட்டன. இந்துக்கள் இக் குகைகளைக் கைப்பற்றிய பிறகு, இக்குகைகளில் பாரதக் கதையில் கூறப்படுகிற பஞ்சபாண்டவர் வனவாசம் செய்த காலத்தில் தங்கி வசித்தாகக் கதைகள் கற்பிக்கப்பட்டு, இன்றளவும் பாமரர்களால் நம்பப்பட்டு வருகின்றன. பண்டவமலை அல்லது பண்டவ குன்று என்பது பழைய பெயர். பிற்காலத்தில், இப் பெயருடன் பஞ்சம் என்னும் அடைமொழி சேர்த்துப் பஞ்சபாண்டவமலை என்று வழங்கப்படுகின்றன. உண்மையில் பஞ்ச பாண்டவர் களுக்கும் இக்குகைகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பௌத்த பிக்குகள் வசித்துத் தவம் செய்த குகைகளாகும் இவை. பௌத்தர்கள் ஏன் இக் குகைகளுக்குப் பண்டவமலை என்று பெயரிட்டார்கள் என்பதன் காரணத்தைக் கூறுவாம். 

    பிற்காலத்திலே, புத்தர் பெருமானாகத் திகழ்ந்த சித்தார்த்த குமரன், அரசையும், அரசபோகத்தையும் துறந்து துறவுபூண்ட உடனே, மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருகம் என்னும் நகரத்திற்கு வந்து, நகரத்தில் பிச்சை ஏற்றார். அக்காலத்தில் அந்நாட்டையாண்ட அரசன் பிம்பிசாரன் என்பவன். அவ்வரசனிடம் ஒற்றர்கள் சென்று, கண்ணைக் கவரும் உருவமைந்த ஒரு பிக்கு நகரத்தில் பிச்சை ஏற்பதை அறிவித்தார்கள். அரசன் அவர்களை அனுப்பி அவர் எங்கே செல்கிறார்; என்ன செய்கிறார் என்பதைக் கண்டறியும்படி ஏவினான். பிச்சை ஏற்ற சித்தார்த்தர், அந்நகரத்தைச் சுற்றிலுமிருந்த ஐந்து மலைகளில் ஒன்றாகிய பண்டவமலை அல்லது பண்டவப் பதம் என்னும் குன்றின் அடிவாரத்தில் சென்று தாம் பிச்சை ஏற்ற உணவை உட்கொள்ளத் தொடங்கினார். அரண்மனையிலே இனிய உணவுகளை உண்டு பழகிய அவருக்கு, பிச்சையால் கிடைத்த உணவை உண்பதற்கு மனம் இடந்தரவில்லை. வாய் குமட்டியது. ஆனாலும், தாம் துறவு பூண்டபடியால் இத்தகைய உணவைத்தான் உண்ணவேண்டும் என்று உறுதிகொண்டு, மனம் பொறுத்துக்கொண்டு அதனை உண்டார். இவற்றையெல்லாம் ஒற்றரால் அறிந்த பிம்பிசார அரசன் அவர் இன்னார் என்பதையறிந்து அவரை யழைத்துத் தமது அரசாட்சியில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுப்பதாகவும், துறவறத்தை விட்டு விடும்படியும் கூறினான். அதற்குச் சித்தார்த்தர் இணங்காமல் காட்டிற்குச் சென்றுவிட்டார். 

    இந்தச் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை தான் நமது நாட்டில் உள்ள பண்டவமலைகள். சித்தார்த்தராகிய புத்தர் பெருமான், தமது துறவற வாழ்க்கையில் முதல் முதல் தங்கிய மலை பண்டவமலை (பண்டு - வெண்மை). ஆகவே, அவரைப் பின்பற்றி வந்த பௌத்த பிக்குகள் தாம் வசித்த மலைகளுக்கும் மலைக்குன்றுகளுக்கும் பண்டவமலை அல்லது பண்டவகுன்று என்று பெயர் சூட்டியதில் வியப்பொன்றுமில்லை. என்னை? அந்தந்தச் சமயத்தவர் தத்தம் சமயச் சார்பான பெயர்களைத் தத்தம் இடங்களுக்குச் சூட்டுவது வழக்கமாதலால் என்க. பௌத்த பிக்குகள், புத்தர் பெருமானுடைய மரபைப் பினபற்றிவருவது இன்றும் காணலாம். உதாரணமாக, பௌத்தர் துறவு பூண்பதற்கு முன்னாள், தம்தம் அரசகுமாரனைப் போன்று போக போக்கியமான உடைகளை அணிந்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணம் யாதெனின், சித்தார்த்த குமாரன் துறவுபூண்பதற்கு முன்நாள், இந்திரன் ஏவலால் விசுவகர்மன் வந்து அவருக்கு ஆடை அணிகளை அழகாக உடுத்தி அலங்காரம் செய்து சென்றான் என்பது புத்தர் வரலாறு. அம்முறைப்படி இக்காலத்துப் பௌத்தர்களும், துறவு பூண்பதற்கு முன்நாள் தம்மை அரச குமாரனைப் போன்று அலங்காரம் செய்து கொள்கிறார்கள். எனவே, பண்டவமலை என்பது சித்தார்த்தர் துறவுபூண்டு முதல் முதல் தங்கி வசித்த மலை என்பதும், அதனை நினைவுகூர்தற்பொருட்டுப் பௌத்த பிக்குகள் தாம் வசித்த குன்றுகளுக்குப் பண்டவமலை என்று பெயரிட்டனர் என்பதும் கருதத்தக்கது. பிறகாலத்திலெ, பௌத்த மதம் மறைந்தபின்னர் பண்டவமலை என்பது பாண்டவமலை என்றாகி, பிறகு பஞ்சபாண்டவ மலையாகிவிட்டது. நமது நாட்டில் உள்ள பாண்டவ மலைகளில் சிலவற்றைக் கூறுவாம். 

    அழகர் மலை: மதுரை ஜில்லா மேலூர் தாலுகாவில் உள்ளது. அதாவது மதுரைக்கு வடமேற்கே 12 மைலில் உள்ள அழகர் மலைத்தொடர். இங்கு, கிடாரிபட்டி அழகர்மலை என்னும் இடங்களுக்கு இடையிலே, லோகல் போர்டு ரோடுக்கு வடக்கே 2 பர்லாங்கு தூரத்தில், பஞ்ச பாண்டவ படுக்கை என்னும் குகையுண்டு. இது 50 கெஜம் அகலமும் 150 கெஜம் நீளமும் உடையது. தெற்குப் பார்த்த இக்குகை, கிழக்கு மேற்காக நீண்டிருக்கிறது. இக்குகையிலே, கற்பாறையில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. அசோக சக்கரவர்த்தி காலத்துப் பிராமி எழுத்துக்கள் இங்கு பாறையில் செதுக்கப்பட்டுள்ளன இவ்வெழுத்துக்கள் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. அழகர்கோயிலில் ஆராமத்துக்கரை, ஆராமத்துக்குளம் என்னும் பெயர்கள், ஆதியில் அங்குப் பௌத்தர்கள் இருந்தனர் என்பதைக் குறிக்கின்றன. 

    கொங்கர் புளியங்குளம்: மதுரை ஜில்லா, திருமங்கலம் தாலுகாவில் உள்ள இவ்வூர்க் குன்றில் ஒரு குகையுள்ளது. அதாவது மதுரைக்குத் தென்மேற்கு 9 மைலில் உள்ளது. இதற்குப் பஞ்சபாண்டவர் குகை என்று பெயர் வழங்குகிறது. இக்குகைகளில் பிக்ஷுக்கள் படுத்துறங்குவதற்குக் கற்பாறையில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கி.மு 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்களும் இதில் காணப்படுகின்றன. 

    கீழைவளவு: மதுரை ஜில்லா மேலூர் தாலுகா மேலூரில் இருந்து 6 மைலுக்குப்பால் உள்ளது. இங்குள்ள பஞ்சபாண்டவக் குன்றில் அசோக அரசர் காலத்துப் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. (55 – 57 of 1910 Ep. Rep 1910. Page 76 Top Vol. II P.1038) 

    முத்துப்பட்டி: மதுரை ஜில்லா மதுரை தாலுகா வடபழங்கியைச் சேர்ந்த கிராமம். இங்குள்ள மலையில் பஞ்சபாண்டவர் படுக்கைகள் சுமர் 30 உள்ளன. பிராமி எழுத்துக்களும் சிதைந்து காணப்படுகின்றன. (Ep. Rep 1910. Page 76-135 of 1903-4. Ep.Rep. 1910) 

    நாகமலை: மதுரை ஜில்லாவில் விக்கிரமமங்கலம் என்னும் ஊரில் உள்ளது. இங்கும் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. (Ep. 1926-27. 4. Ep.Rp. 1908 P.52 and 59, 45 of 1908) 

    திருப்பரங்குன்றம்: மதுரை ஜில்லா திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கும் காலடி என்னும் கிராமத்துக்கும் இடையில் உள்ள பேர்போன சுப்பிரமணியர் மலை. இக்குன்றின் மேற்குப் பக்கத்தில், செங்குத்தான பாறையில் குகையும் அதற்குள் ஆறு கற்படுக்கைகளும் உள்ளன. இக்குகைக்கு ஏறிச்செல்வது கடினம். இக்குகையில் பல ஆட்கள் தங்க இடம் உண்டு. கி.மு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துச் சாசனம் உண்டு. (383 of 1908) 

    இம்மைலையுச்சியில் உள்ள சிக்கந்தர் தர்க்காவுக்கு மேற்கே நூறு கெஜத்துக்கப்பால் இன்னொரு சிறு குகையுண்டு. இக்குகையிலும் கிழக்கு மேற்காகக் குறுகிய 5 படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. (Ep.Rep.1909 P.68,69) 

    இங்குள்ள குகையொன்றில், 999 பேருடன் நக்கீரரை ஒரு பூதம் சிறைபிடித்து வைத்திருந்ததாகக் கதை வழங்குகிறது. 

    சித்தர்மலை: மதுரை ஜில்லா மேட்டுப்பட்டியில் உள்ளது. வைகையாற்றுக்கு அருகில் உள்ள அழகான இடம். மலைமேல் இப்போது ஒரு சிவன் கோயில் உண்டு. இக்கோயிலிலிருந்து தெற்குப் பக்கமாகக் கீழே இறங்கும் பாதை வழியாகச் சென்றால் மலையின் மத்தியில் ஒரு குகை காணப்படுகிறது. இக்குகையின் முன்புறம் இப்போது சுவர் வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது. சிறு வழியே உள்புகுந்து சென்றால், குகைக்குள் 5 கற்படுக்கைகளைக் காணலாம். பிராமி எழுத்துச் சாசனங்களும் உள்ளன. (Ep.Rp.1908 P52 and 59, 45 of 1908) 

    விருச்சியூர்: மதுரை ஜில்லா விளக்கத்தூருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது. இவ்வூர்க் குன்றுகள் ஒன்றில் இரண்டு குகைகள் உள்ளன. மற்றொரு நீண்டபாறையில் இயற்கையாயமைந்த குகையொன்றுண்டு. இங்குக் கற்படுக்கைகள் பல அமைக்கப் பட்டுள்ளன. பாறையில் 30 அடி உயரத்தில் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. (38 of 1907. Ep. Rep. 1908 p. 58) 

    குன்னக்குடி: மதுரை ஜில்லா திருப்பத்தூர் தாலுகா. இங்குள்ள குன்றின்மேல் சுப்பிரமணியர் கோயிலும், மேற்குப் பக்கத்தில் பஞ்சபாண்டவர் குகையும் உள்ளன. குகையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துகளும் உள்ளன. (44 of 1909 P.70.Ep.Rep.1910 P.80) 

    ஆனைமலை: மதுரை ஜில்லா. இம்மலைமேல் பஞ்சபாண்டவர் குகையும் கற்படுக்கைகளும் உள்ளன. பிராமி எழுத்துகளும் எழுதப்பட்டுள்ளன. (Ep. Rep.1907. P.60 and 61) 

    கி.பி 7 ஆம் நூற்றாண்டிலே திருஞானசம்பந்தர் காலத்தில் இம்மலையில் சமணர் இருந்தார்கள் என்று தேவாரத்தினால் அறிகிறோம். 

    வீரசிகாமணி: திருநெல்வேலி ஜில்லா சங்கரநயினார் கோயிலுக்கு 8 மைலுக்கப்பால் உள்ளது. இவ்வூர்ப் பாறையில் பஞ்சபாண்டவர் குகையுண்டு. கற்படுக்கைகள் உள்ளன. (Ep. Rep. 1908 P. 91) 

    மருகால்தலை: திருநெல்வேலி ஜில்லா பாளையங்கோட்டைக்கு 10 மைல் தூரத்தில் உள்ளது. இவ்வூரில் உள்ள பூவில் உடையார் மலையில் உள்ள குகையில் கற்படுக்கைகளும் அசோகர் காலத்துப் பிராமி எழுத்துக்களும் செதுக்கப்பட்டுள்ளன. (Ep. Rep. 1909 P. 60) 

    ஆறுநாட்டார் மலை: திருச்சி ஜில்லா கரூர் தாலுகா கரூருக்குச் சில மைல் தூரத்தில் உள்ள பூகழூரில் இருக்கிறது. அம்மலைமேல் சுப்பிரமணியர் கோயில் இருக்கிறது. இங்கு இயற்கையாமைந்த குகையில் கற்படுக்கைகளும் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்களும் உள்ளன. (Ep. Rep. 1927 P. 50) 

    திருச்சிராப்பள்ளி: இம்மலைமேல் பேர்பெற்ற தாயுமானவர் கோயிலும் உச்சிப்பிள்ளையார் கோயிலும் சில குகைகளும் உள்ளன. இக்குகைகளுள் ஒன்றில் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    இன்னும் பல பாண்டவ மலைகளைக் கூறலாம். விரிவஞ்சி விடுகின்றோம். தமிழ்நாட்டில் மட்டுமன்று; ஆந்திரநாட்டிலும் பாண்டவ மலைகள் சில உள்ளன. அவற்றில் ஒன்று ராஜமந்திரிக்கு 25 மைல் வடக்கில் உள்ள ரம்ப எர்ரபாலம் என்னும் கிராமத்தில் உள்ள குன்றுகளில் பாண்டவுல மெத்த என்னும் பெயரோடு ஒரு குன்று உள்ளது. இதற்கடுத்து குன்றுகளிற் பௌத்த விகாரைகளும், பள்ளிகளும் இடிந்து அழிந்து காணப்படுகின்றன. எனவே, இப்போது பஞ்சபாண்டவ மலை என்று வழங்கும் மலைகளில் பண்டைக் காலத்தில் பௌத்த பிக்குகள் வசித்து வந்தனர் என்பதும் ,அவற்றின் பழைய பெயர் பண்டவமலை என்பதும், பாரதக் கதையின் பஞ்சபாண்டவருக்கும் இம்மலைகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதும் விளங்குகிறது. 

    இதுபோலவே, கழுகுமலை அல்லது கழுகுகுன்றம் என்னும் பெயருள்ள மலைகளும் ஆதியில் பௌத்த பிக்குக்கள் தங்கியிருந்த இடங்களாகும். புத்தபகவான் தங்கியிருந்த ஒரு மலையின் பெயர் கிஜ்ஜகூடம் என்பது. இதுவும் மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருத நகரத்தைச் சூழ்ந்திருந்த ஐந்து மலைகளில் ஒன்று. இந்த கிஜ்ஜகூடமலையில் கழுகுகள் வசித்துவந்தன. ஆகவே, கிஜ்ஜகூடம் அதாவது கழுகுமலை என்று இம்மலைக்குப் பெயர் வந்தது. பண்டவமலையில் புத்தர் தங்கியது போலவே கிஜ்ஜகூட மலையிலும் அவர் அடிக்கடி சென்று தங்கியிருந்தார். இம்மலைக்குகையில் தங்கியிருந்தபோது புத்தரை மாரன் என்னும் தேவன் அச்சுருத்தினான்; புத்தர் அஞ்சாமல் வீற்றிருந்தார். மாரன் வெட்கி ஓடினான். புத்தர் இந்த மலையடி வாரத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, அவரைக் கொல்லுவதற்காகத் தேவதத்தன் என்பவன் இம்மலையுச்சியிலிருந்து பெரும்பாறையை யுருட்டி வீழ்த்தினான். அப்பாறை இவர்மேல் படவில்லை. ஆனால், சிறு கல் சிதறி வந்து இவரைக் காயப்படுத்தியது. அன்றியும், இந்தக் கிஜ்ஜகூட மலையில் இருந்தபோது தான், ஜீவகன் என்னும் மருத்துவன் புத்தருக்குப் பேதி மருந்து கொடுத்து அவரது உடல் நலத்தைக் காத்தான். புத்தர் இந்த மலையில் இருந்தபோதுதான் சம்பாதி என்னும் பிரமனும், சக்கன் எனப்படும் இந்திரனும், அவன் பாணனாகிய பஞ்சசிகாவும், இந்தன் என்னும் இயக்கனும், சாதூர்மகா ராஜிகர்களும் புத்தரிடம் வந்து அவரை வணங்கிச் சென்றார்கள். 

    இந்த கிஜ்ஜகூட மலையில் புத்தர் இருந்தபோது தான் மாகன் என்பவன் பொருட்டு மாக சூத்திரத்தையும், அபய இராஜகுமாரன் பொருட்டு அபய சூத்திரம் எனப்படும் கிஜ்ஜகூட சூத்திரத்தையும், தம்மிகன் பொருட்டுத் தம்மிக சூத்திரத்தையும் அருளிச்செய்தார். புத்தருடைய முக்கிய சீடர்களாகிய சாரிபுத்தர், ஆநந்தர், மகாகஸ்ஸபர், அநுருத்தர், புன்ன, உபாலி, சந்த, சன்ன, மொக்கல்லானர் முதல்லானவர்களும் இந்தக் கிஜ்ஜிகூடம் என்னும் கழுகுமலையில் சிலகாலம் வசித்து வந்தார்கள். ஆகவே, இவ்வளவு சிறப்புடையதான கழுகுமலையின் பெயரைப் பௌத்தப் பிக்குகள் தாம் வசித்த மலைகளுக்குச் சூட்டி வழங்கியது வியப்பு அன்று. 

    செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள திருக்கழுக்குன்றம் என்னும் மலை ஆதிகாலத்தில் பௌத்தப் பிக்குகள் வசித்த இடம் என்று தோன்றுகிறது. மதுரை ஜில்லா மதுரை தாலுகாவில் மாங்குளம் என்னும் கிராமத்தில் கழுகுமலை என்னும் குன்றுகள் உள்ளன. இக்குன்றுகளில் நான்கு குகைகள் உள்ளன. குகைகளில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கழுகுமலை உண்டு. 

    கிஜ்ஜகூடம் என்னும் கழுகுமலைகள் ஆந்திரநாட்டிலும் உள்ளன. அவை முற்காலத்தில் பௌத்தர்களின் இடமாக இருந்தன என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்களில் பௌத்தச் சார்பான சான்றுகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சி மனப்பான்மை யுடையோர் அவைகளை ஆராய்ந்து காண்பார்களாக. 

    தமிழ்நாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகள் இவைமட்டும் என்று கருத வேண்டா. இன்னும் பல பௌத்த ஊர்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்தெழுத நேரம் இன்மையால் அவற்றை இங்கு கூறவில்லை. இதில் ஆசையுள்ளவர் ஆராய்ந்து காண்பாராக. 

    இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே 'சாத்தன் காவு' என்றும், 'ஐயப்பன் கோயில்' என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். 'சாத்தன்' என்பதும் 'சாஸ்தா' என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். எனவே, 'சாத்தன் காவு' என்றால், புத்தரது தோட்டம் என்பது பொருள். பண்டைகாலத்தில் பூந்தோட்டங்களுக்கிடையே புத்தக் கோயில்கள் அமைப்பது வழக்கம். பௌத்தப் பள்ளியுள்ள பூந்தோட்டத்தைப் பௌத்தர் 'ஆராமம்' என்பர். 'ஆராமம்' என்றால், தோட்டம் அல்லது கா என்பதே (தொடர்புரை 2 காண்க). 

    இவையன்றியும், தமிழ்நாட்டிலே மானாவூர், துடிதபுரம் என்னும் ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தனவாகத் தெரிகின்றன. இந்த ஊர்கள் எங்கிருந்தன என்பது விளங்கவில்லை. தக்கயாகப்பரணி உரையில் பௌத்தபுரம் என்னும் ஊர் கூறப்படுகின்றது. இதுவும் எந்த இடத்தில் இருந்ததென்று தெரியவில்லை. 

    திருச்சாணத்துமலை: திருவாங்கூர் நாட்டில் உள்ளது. இங்கு இப்போதுள்ள பகவதிகோயில், முற்காலத்தில் ஜைனக் கோயிலாகவும், அதற்கு முன்பு பௌத்தக் கோயிலாகவும் இருந்தது. 

    ஸ்ரீமூலவாசம்: திருவாங்கூர் நாட்டில் அம்பலப்புழ தாலுக்காவில் திருக்கண்ணபுழ சாஸ்தா கோவிலுக்கு தென்மேற்கில் கடற்கரையோரத்தில் இருந்தது. இது அக்காலத்தில் பேர்பெற்ற பௌத்த திருப்பதி. இங்கு மூல சோமவிகாரை என்னும் பேர்பெற்ற பௌத்தப் பள்ளி இருந்ததாக மூக்ஷிகவம்சம் என்னும் நூலும் கல்வெட்டுச் சாசனமும் கூறுகின்றன. ஸ்ரீமூலவாசம், பிற்காலத்தில் கடலினால் அழிந்துபோயிற்று. 

    ஆய்வேள் குலத்தில் பிறந்த விக்கிரமாதித்திய வரகுணன் என்னும் அரசன் கி.பி 868 இல் இந்தக் கோயிலுக்குத் தானம் வழங்கிய செய்தி அவனுடைய சாசனத்தினால் தெரிகிறது. "மற்றும் கோயிற்குரியதெல்லாம் அகப்பட திருமூலவாசத்து படாரர்க்கு அட்டிக்குடுத்தது" என்று அந்தச் சாசனம் கூறுகிறது. 

    மூல சோமவிகாரையில் இருந்து காந்தார தேசத்துக்குக் கொண்டு போகப்பட்ட லோகநாதர் (அவலோகிதர்) உருவச் சிலையின் பீடத்தில் "தக்ஷிணாபதே மூலவாச லோகநாத" என்று எழுதப்பட்டிருக்கிறது. மூலசோம விகாரையிலிருந்த வச்சிரநந்தி என்னும் பௌத்தபிக்கு தன்னுடைய சீடர்களுடன் சீன நாட்டுக்குச் சென்று பௌத்த மதத்தைப் பிரசாரம் செய்தார் என்று சொல்லுகிறார்கள். 

    திருவாங்கூரின் மத்தியபாகத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் உள்ளன. குன்னத்தூர் தாலுக்காவில் உள்ள பள்ளிக்கல் என்னும் ஊரில் ஒரு புத்த உருவச்சிலை இருந்தது. அது தலையுடைந்து கிடக்கிறது. இப்போது இது திருவாங்கூர் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 

    அம்பலப்புழ தாலுக்காவில் கருமாடித்தோடு என்னும் ஆற்றங்கரைமேல் ஒரு புத்தர் சிலை உண்டு. இதன் இடக்கை இப்போது ஒடிந்துவிட்டது. இந்தப் புத்தர் சிலையை அவ்வூரார் கருமாட்டிக்குட்டன் என்று கூறுகிறார்கள். இதனைப் பூசை செய்தால் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் உண்டாகிற நோய் நீங்கும் என்று கூறுகிறார்கள். 

    மாவேலிக்கர என்னும் இடத்திலும் ஓர் அழகிய புத்த உருவம் யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறது. 

    பரணிக்காவு என்னும் இடத்திலும் ஒரு புத்த விக்கிரம் உண்டு. மருதூர் குளக்கரையில் இருந்த புத்தர் உருவச்சிலை இப்போது கருநாகப்பள்ளி தாலுக்கா அலுவலகத்துக்கு முன்புள்ள சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard