பா.அருண் பிரியா
முனைவர் பட்ட ஆய்வாளர்
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்,
மதுரை.
குறுந்தொகை குறிஞ்சி மாந்தரின் மனம்சார் பதிவுகள்
முகவுரை
ஒரு மனிதனின் இன்ப துன்பங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மனம். இது உணர்ச்சிகளின் பிறப்பிடமாகத் திகழ்வதுடன் அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டியாகவும் திகழ்கிறது. இம்மனம் உள்ள இனத்தையே மனித இனம் என்கிறோம். மனம் வலிமையுடையதாக இருக்கும் தன்மையைப் பொருத்தே மனித வாழ்க்கை அமையும். மனம் உணர்ச்சிகளாலானது. அதற்கு வடிவம் கிடையாது. வடிவமற்ற இம்மனமே ஆசை, சீற்றம், அன்பு, காமம், அருள் இவையன்ன அகவயம், புறவயப்பட்ட உணர்வுகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது. இவ்வுணர்ச்சிக்கு அப்பாற்பட்டதும் அதைவிட மேம்பட்டதுமான அறிவின் உறைவிடமும் மனமே. சமூக ஆதிக்கம், மரபு, சூழ்நிலை பண்பாட்டு உணர்வு ஆகியவற்றின் காரணமாக நம்மால் அமிழ்த்தப்பட்டும் பாலியல் வேட்கைசார் உணர்ச்சிகள் அழுந்திக்கிடப்பதும் இம்மனத்துள்ளேதான் இத்தகைய மனத்தின் முரண்பட்ட சில உணர்வுகளை எட்டுத் தொகையின் அகக்கிளைகளுள் ஒன்றான‘குறுந்தொகை’ என்னும் களத்தில் ஐந்திணை பகுப்புகளுள் ஒன்றான‘குறிஞ்சியின் அகமாந்தர் வழி’ ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
குறிஞ்சி கட்டமைப்பு
ஒழுக்கம், குடி, கருமம் என்பன போன்ற பொருண்மைகளை விளக்குவது திணை. அதில் முதன்மையானது குறிஞ்சி. குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும் எனக் கூறினாலும், மனத்திற்கு முற்பட்ட நிலையைக் கூறுவதே ஆகும். எனவே திருமணத்திற்கு முன்னைய களவு ஒழுக்கத்தைக் குறிஞ்சி என்றும் திருமணத்திற்குப் பின்னைய பிரிவு (பாலை) இருத்தல் (முல்லை), இரங்கல் (நெய்தல்), ஊடல் (மருதம்) ஆகிய இவற்றை கற்பு என்று கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் முல்லைத்திணைப் பாடல்களிலும் நெய்தல் திணைப்பாடல்களில் களவு ஒழுக்கம் பேசப்படினும் குறிஞ்சித்திணைப் பாடல்ளில் களவு ஒழுக்கம் அருகிய நிலையிலேயே பேசப்படுகிறது. உரிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இக்குறிஞ்சியின் கூற்றுகளாக “இயற்கைப் புணர்ச்சி, வரைவுகடாதல், அறத்தொடு நிற்றல், மடலேறுவேன் எனல், கையுறை மறுத்தல், இடந்தலைப்பாடு, இரவுக்குறி, பகற்குறி நேர்தல் (ம) மறுத்தல், செறிப்பறிவுறுத்தல், வெறிவிலக்குதல் என்ற பொருண்மை பற்றிய கூற்றுகளே இடம் பெற்றுள்ளன” (அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும் ப.எண் - 86) என்பதாக பெ.மாதையன் சான்று உரைக்கிறார். இந்த திணைக்கட்டமைப்பின் பின்னணியிலேயே இக்கட்டுரை அமைகிறது.
மனித மனம்
மனித மனம் மிகவும் விசித்திரமான போக்கை உடையது. அதனால் தான் மனிதன் ஏனைய விலங்குகளிலின்றும் மாறுபட்டுப் பகுத்தறிவுச் சிந்தனையோடு செயலாற்றுகின்றான். நினைவாற்றல் மனிதனுக்குக் கிடைத்த பெரும் பேறாகும் நினைவாற்றலின் துணை கொண்டே மனம் செயல்படுகிறது. ‘மனம்’ பற்றி அறிஞர்களிடம் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுகின்றன. மனித மனத்தை ‘நனவு மனம், நனவிலி மனம்’ என இரண்டு வகைப்படுத்தலாம். மனிதனுடைய செயற்பாடுகள் பெரும்பான்மையும் நனவிலி மனத்தால் இயக்கப்படுகின்றன. குறுந்தொகை குறிஞ்சிப்பாக்களில் மனத்தைக் குறிக்க ‘நெஞ்சம்’, ‘உள்ளம்’ ஆகிய சொற்கள் பயின்று வருகின்றன. மேலும் இக்குறிஞ்சி அடிகளில் “தேவை, வேண்டல், உணர்வெழுச்சி, துடிப்பு, செயல், இன்பம், வேட்கை, விசை, உந்தல், விழைவு, முனைப்பு” என்பதாக சிக்மண்ட் ஃபிராய்டு கூறும் துய்ப்பு மனத்தின் கூறுகளே அதிகமாக காணக்கிடைக்கின்றன.
மடல் குறித்து இரு வேறு மனநிலைகள்
தலைவன் பலகாலும் தோழியையும், தலைவியையும், குறிப்பால் நயந்தும் அவன் விரும்பிய காமம் கிடைக்கப் பெறதாலின் அவன் ‘மடல்’ ஏறத் துணிகிறான். “மடன்மா கூறும் இடனுமார் உண்டே” என்பதன் வழி தலைவன் காம வேட்கையின் மிகுதியினால் மடலேறும் வழக்கம் உண்டு என்பதாம். ஆயினும் தொல்காப்பியர் “ஏறிய மடற்றிறம் என்று மடல் ஏறுதலை பெருந்திணையில் குறிக்கிறார்” குறுந்தொகையில் ஒரு தலைவியின் விருப்பமின்மையால் தலைவன் மடல் ஏறத் துணியுங்கால் இங்ஙனம் உரைக்கிறார். ஆவாரம் பூக்களைச் சேர்த்துக் கட்டிய மாலையணிந்த பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையின் மேல் ஏறி, என் காமம் மிகுதியை ஊராருக்கு உரைக்க விழைகிறேன் எனது அச்செய்கை கண்டு ஊரார் தலைவியை பழி தூற்றட்டும் என்பதை,
“பல்நூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
பழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப,
இன்னாள் செய்தது இது என முன்நின்று
அவள் பழி நுவலும், இவ்வூர்”
என்கின்ற இத்தலைவன் கூற்று புலப்படுத்துகிறது. இதே அக உணர்வால் பிடிக்கப்பட்ட இன்னொரு தலைவன் மடலேறும் போது அமிழ்தினும் இனிய சொற்களை உடைய தலைவியை யான் பெறுவேன். இந்த நல்ல பெண்ணின் கணவன் ‘இவன்’ என்று பலரும் கூறக் கேட்டு, “நான் வெட்கப்படுவேன்” என்ற பொருள்பட,
“பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்ஊரே! மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூறயா அம் நாணுகம் சிறிதே” (குறு – 14)
என்கிறது. இன்னொரு தலைவனின் கூற்று இவ்விரண்டையும் ஒருங்கே எண்ணி நோக்கும் கால் தலைவியை ஊர் பழிதூற்றினும் மிகையில்லை. தலைவியின்பால் தனக்கு உள்ள காமவேட்கையைத் தீர்த்துக் கொள்ளுதலே இன்பம் என்கிறது. ஒரு தலைவனின் மடற்கூற்று மிக நல்ல தலைவியைப் பெற்ற எம்மையும், அவளையும் வாழ்த்தட்டும் ஊர் என்று கிழத்திக்கும் புகழ் சேர்ப்பதாக அமைகிறது என்கிறது. இன்னொரு மடற்கூற்று அகம் என்ற ஒரே உணர்வும் மடல் என்ற ஒரே துறையும் புலப்படுத்தும் இவ்விருவேறு மன உணர்வும் முறையே சிக்மெண்ட் ஃபிராய்டு அவர்கள் உரைத்த வேட்கை, வேண்டுதல் இவ்விரண்டு நிலைகளோடும் ஒருங்கெண்ணத் துணியும் தன்மையது.
காமம் குறித்த இருவேறு மனநிலைகள்
குறுந்தொகை குறிஞ்சிப்பாக்களின் காதல் உணர்வை குறிக்க பெரும்பான்மையாக ‘காமம்’ என்ற சொல்லே பயின்று வருகிறது. இச்சொல் பெரும்பான்மையும் காதல் அன்பைக் காட்டிலும் காம உணர்வையே சுட்டி நிற்கிறது. இதன் காரணம் குறிஞ்சியின் உரிப்பொருளான புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பதாகவும் இருக்கலாம் குறிஞ்சிப்பாக்களில் காமம் மேல் இட்ட இரு தலைவியரின் உணர்வுகள் தட்டப்படுகின்றன.
இன்ப உணர்வு
உலக உயிர்கள் அனைத்திற்கும் உரிமையுடையது இந்த இன்ப உணர்வு. இது மிகுதியான மன நிறைவின் வழி வெளிப்படுவது. இதனைத் தொல்காப்பியர்,
“எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது
தாமைர்ந்து வரூஉ மேவற் றாகும்” (தொல் பொருள் - 1167)
என்பதாக சான்று பகர்கிறார். தலைவி விரும்பிய தலைவன் அவளை மனம் பேச வருகின்றான் என்பதைத் தாய்க்கூறக் கேட்ட தலைவி இன்பத்தில் ஆழ்ந்து நம் அன்னை பெறுதற்கரிய தேவலோக அமிழ்தந்தை உணவாகப் பெறுவாளாக புகழுடைய துறக்க உலக இன்பத்தையும் பெறுவாளாக என்று வாய்மடுப்பதை,
“அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை” (குறு – 83)
என்று குறிஞ்சி அடி கூற நிற்கிறது. இஃது தலைவி பெற்ற அதீ இன்ப உணர்வினால் தன் அன்னையை இயன்றவாதெல்லாம் வாழ்த்துகிறான். இஃது சிக்மண்ட் ஃபிராய்டின் இன்பம் விளைதல் என்ற துய்க்கும் மனநிலையோடு ஒருங்கு வைத்து எண்ணலாம்.
துன்ப உணர்வு
தமிழர் எஞ்ஞான்றும் இன்பம் அன்றி வேறு துய்க்கக் கூடாது என்று தொல்காப்பியர் கருத்தினாற்போலும் இன்பத்திற்கு என்று தனியே விதிவகுத்தவர் துன்பத்தைச் சுட்டவில்லை ஆயினும் மெய்ப்பாட்டில் வரும் ஆளுமை, இளிவரல் ஆகிய இரண்டும் துன்பத்தின் சில நிலைகளை விளக்க நிற்கிறது துன்ப உணர்வு பற்றி உளவியலார் மனிதன் தன் ஆசை கொண்டது நிறைவேறாத போது ஏற்படுகின்றன நிலை என்று விளக்கமறிக்கின்றன. ஒரு தலைவன்பால் காம வேட்கை மிகுந்த தலைவி தாயினால் அவ்வேட்கை தடைப்பட்ட ஞான்று தலைவி இங்ஙனம் கூறுகிறால் காவல் மரத்தின்று உதிர்ந்து ஆற்றில் அடித்து வந்த அலகு ஒரு மாங்காயை சுவைத்த குற்றத்திற்காக அப்பெண்ணை நன்னன் என்ற குறுநில மன்னன் கொன்றான் அச்செயலால் அவன் நாகம் அடைவான் அத்தகைய நரகத்தை என் அன்னையும் அடைவாளாக என்பதை விளக்க,
“பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செல்இயரோ அன்னன்” (குறு – 292)
என்று புனையப்பட்ட இக்கூற்றின் வழி பெண்கொலை புரிந்த நன்னன் அடையக் கூடிய அத்தகையக் கொடிய நரகத்தை என் வேட்கையை தடை செய்த அன்னையும் அடைக என்ற தலைவியின் ஏமாற்றமும் அவலமும் கலந்த துன்ப உணர்வு மேலோங்கி நிற்கிறது.
பொய்யும் மெய்யும்
பழந்தமிழர் மரபு வலுவாத வாழ்க்கையினர் என்ற கூற்று முற்றிலும் மெய்யாய் இருப்பின் தொல்காப்பியர்,
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்த காரண மென்ப” (தொல்பொருள் - 1089)
என்பதான ஒரு நாற்பாலை யாத்திரார் ஆகையால் பழந்தமியுர்களவு வாழ்வில் பொய்த்தாலும் உண்டு என்பது மெய். தலைவனால் களவு மணம் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு தலைவி, தலைவன் நீண்ட நாள் வாராமைக் கண்டு இங்ஙனம் புலம்புகிறார்.
“யாரும் இல்லை தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான்வென் செய்கோ” (குறு – 25)
இப்பாவில் பொய் என்கின்ற வார்த்தைக்கு நிகரான பொருள் தலைவன் தன் செயலின்று பிழைத்தால் என்பதாகும். மனிதன் தான் பிழைப்பட்ட செயலுக்கு காரணம் கற்ப்பிக்கவே பொய் கூறுகிறான் என்று பொய் குறித்து உளவியல் அறிஞர்கள் கருத்துரைக்கின்றன. ஐய்யப்பட்ட தலைவி பொய் என்ற வார்த்தை வழி தம் மன உணர்வை வெளிப்படுத்துகிறார். முன் குறித்த தலைவியை விட சற்று மிகுதியான காம நோய் கொண்ட தலைவி, தலைவன் பிரிவால் (வரைவிடை வைத்த பிரிவு) பசலை கண்டு உடல் மெலிவுற்று வருந்துகிறார். அஞ்ஞான்றும் கூட தலைவனைக் குறித்து தலைவி,
“குன்ற நாடன்கேண்மை
மென்தோர் சாய்த்தும் சால்புஈன் என்றே” (குறு – 90)
என்பதாக உரைக்கிறார். அஃதாவது அற்தோயுற்றே மெலிந்து போதும் தலைவனின் சால்பின் மேல் கொண்ட உறுதி நங்கப் பெறவில்லை என்ற கூற்றின் வழி தலைவனின் பிரிவைக் கூட பொய் என்பதான பிழையாக கருதமால் மெய் என்பதான நிறைவுடைமையாக கருதுகிறார். இவ்விரண்டு ஃபிராய்டின் மன எழுச்சி என்பதான துய்ப்பு மனநிலைக்குள் பொருந்துகிறது.
குணங்களை துறந்த மனம்
பெண்ணிற்கே உரியதான சில குணங்களை தொல்காப்பியர்,
“அச்சமு நாணு மடணுமுள் துறந்த
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப” (தொல் பொருள் - 1043)
என்பதாக பட்டியலிடுகிறார். ஆனால் குறுந்தொகை ஒரு குறிஞ்சித் தலைவி, தலைவன்பால் கொண்ட மிகுதியான காம வேட்கையால் தன் ஞானத்தை இழந்ததாக வாயுறுரைக்கிறாள்.
“நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி! நாமே” (குறு – 88)
தலைவன்பால் தலைவி கொண்ட அன்பினைப் பற்றி ஊரார் பழி தூற்றினும் அதற்கு நான் நானேன் (நாணலயே) என்று உரைக்கும் தலைவின் கூற்று வழி தலைவனைக் கண்ட போதே அச்சம் தொலைந்தது என்று வெளிப்படும் அவளது மன உணர்வின் வழி ‘அகம்’ என்ற நிலையில் பெண்களுக்கான குணங்கள் சிறிது மரபில் இருந்து வலுவயுள்ளது என்பது புலனாகிறது.
பெண்டியர் தமக்கே உரிய குணங்களான அச்சம், மடம், நாணம் ஆகியவற்றை இழக்கத் துணிந்தார் எணின் அஃது ‘களவில் தன்னை மறந்த நிலை’ என்பதான மிகப் பொருத்தமான களவின் இலக்கணத்தைத் திருநாவுக்கரசர் இப்படி உரைக்கிறார்.
“அகன்றால் அகல்இடத்தார் ஆசா ரத்தை
தன்மை மறந்தால் தன் நாமம் கெட்டால்”(திருநாவுக்கரசர் தேவாரம்)
இக்கூற்று சங்க அகக்கூற்றுக்களை விட காலத்தால் பிற்பட்டது எனினும் அகக் கூற்றுக்களோடு ஒருங்கு வைத்து எண்ணத் தகுந்தது. அங்ஙனமே குறுந்தொகைத் தலைவியின் மன உணர்வுகளோடு மிக நெருங்கியே தொடர்புடையது.
முடிவுரை
குறுந்தொகை குறிஞ்சி அகமாந்தர்களின் மனத்தை தொல்காப்பிய அக மரபுகள், ப்ஃராய்டிய திறவுகோல் கொண்டு திறக்கத் துணிந்தால் ஒன்றுக்கொண்டு முரண்பட்ட எண்ண அலைகளையும் (ஒரே உணர்வின் கீழ் பிணைக்கப்பட்டது) தமிழ் அகரமரபிலிருந்து சற்று மீறிய நிலைப்பாட்டையும் பெரும்பான்மையாக காண முடிகிறது என்பதே இக்கட்டு ஆய்ந்து கண்ட முடிவு.