இலக்கணச் செம்மை மிக்க மொழியாகத் தமிழ் விளங்குகின்றது. இதன் மரபிலக்கணங்கள் செய்யுளாக்கம் குறித்துத் தனிச்சிறப்பாகப் பேசியுள்ளன. குறிப்பாகத் தொல்காப்பியத்தில் செய்யுளியல் என்பதே அளவில் பெரிய பிரிவாகும். இவ்வியலுள் பாடுபொருளும் யாப்பும் இயைபுடன் விளக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர்  எழுந்த இலக்கண நூல்கள், பாடுபொருளிலிருந்து யாப்பிலக்கணத்தை மட்டும் பிரித்துத் தனியாக இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விரு நிலைகளிலும் யாப்புறுப்புகளைத் தொகைவகை செய்தும் உறழ்ந்தும் காட்டும் முறைமைகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றுள் கணக்கியல் எவ்வாறு பயன்பட்டுள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

பொதுவாக, மொழியை (அ) செய்யுளை ஆராயப் புகும் இலக்கணம் என்பது ஓர் அறிவியல் துறையாகும். அதன் அடிப்படையில் பிற அறிவியல் துறைகளைப் போல யாப்பியலிலும் கணக்கியல் பயன்படுத்தப்பட்டிருப்பது தவிர்க்க இயலாதது.

தமிழில் நவீன உரைநடை பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே வளரத் தொடங்கியது. அதுவரை அனைத்துத் துறைசார்ந்த கருத்துகளும் செய்யுள் வடிவத்தில் தாம் எழுதப்பட்டு வந்தன. அப்பொழுது தமிழர்கள் உரைநடையைவிடச் செய்யுட்களைக் குறுகிய நேரத்திற்குள் பாடி முடித்துவிடும் பழக்கத்தில் இருந்துள்ளனர். தமிழில் கணக்கினை அடிப்படையாகக் கொண்டு கணக்கதிகாரம், வானியல் நூல்கள் முதலானவை எழுதப்பட்டுள்ளன. இங்கு அவை குறித்துப் பேசாமல் யாப்பிலக்கணத்தில் கணக்கியலின் பயன்பாடு குறித்து மட்டும் சுருக்கமாகச் சுட்டப்படுகின்றது.

யாப்பியல் : இயற்கைக் கணக்கும் செயற்கைக் கணக்கும்

பொதுவாக எல்லா மொழிகளிலும் எழுத்துவடிவம், இலக்கண நூல்கள் ஆகியவை உருவாவதற்கு முன்னரே வாய்மொழிப் பாடல்கள் சிறந்தோங்கி இருக்கும். அவற்றிலிருந்துதான் தொழில்முறைப் பாணர்கள் (அ) புலவர்கள் யாப்புவடிவங்களை உருவாக்கிக் கொள்வார்கள். அவ்வகையில் மக்களின் இயல்பான பாடல்களே யாப்பியலிற்குத் தோற்றுவாயாக அமையத் தக்கன.

பழங்கால மக்களின் பாடல்கள் தொழில்பிரிவினைகளின் அடிப்படையிலும் பிற வாழ்வியல் செயல்களின் ஊடும் முகிழ்ந்து பரவியவை. அவற்றுள் அந்தந்தத் தொழில்களுக்குரிய கால இசைவுகள் பொதிந்திருக்கும். எடுத்துக்காட்டாக, படகினை வலிக்கும் மீனவர்கள் ஒத்திசைவாகத் துடுப்பினை நீரில் இடுவதற்கும் எடுப்பதற்கும் ஆகும் கால ஒழுங்கின் அடிப்படையில் தொழில்முனைப் பாடலைக் கட்டி இருப்பர். வள்ளைப்பாட்டு (அ) உலக்கைப்பாட்டு பாடுவோர் இரு பிரிவாக எதிரெதிரே நின்றுகொண்டு உலக்கை குற்றும் ஒழுங்கிற்குத்தக பாடுவர். தாலாட்டை எடுத்துக்கொண்டால், குழந்தை ஆடுகின்ற தூளி (அ) தொட்டில் போய்வருகின்ற அசைவு வேகத்திற்குத்தக அதன் மெட்டு அமைந்துள்ளது. அதாவது, தூளியை அதன் இயல்பான மையத்திலிருந்து ஆட்டி விடுகின்றபோது, அது விலகிச்செல்லும் வேகத்தைவிட மீண்டுவருகின்ற வேகம் விரைவாக இருக்கும். அதனால்தான் தாலாட்டு மெட்டில் ‘ஆராரோ ஆரிரரோ’ என்பதில் முன்னதைவிடப் பின்னது விரைவாகப் பாடப்படுகின்றது. இப்படி ஏற்றப்பாட்டு, வண்டிக்காரன்பாட்டு, நடவுப்பாட்டு முதலான பலவகைப் பாடல்களிலும் அவ்வவற்றுக்கு உரிய கால அளவும் கூட்டிசைவும் உட்பொதிந்திருக்கும்.

மக்களின் மனம் கவர்ந்த இப்பாடல்கள் நாளடைவில் தொழில்முனைக் களத்தில் மட்டுமின்றி ஓய்வுநேரங்களிலும் பாடப்பட்டுள்ளன. இவற்றோடு சடங்கியல், கேளிக்கைப் பாடல்களும் உருவாக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் இருந்துதான் தொழில்முறைப் பாணர்கள் (அ) புலவர்கள் தங்களுக்கான பா வடிவங்களை உண்டாக்கிக் கொண்டனர்.

பழந்தமிழில் வெறிக்கூத்து (அ) வெறிப்பாடல் என்பதிலிருந்து அகவற்பாவும், துணங்கைக் கூத்து (இருசீர்ப்பாணி) என்பதிலிருந்து வஞ்சிப்பாவும், குரவைக்கூத்து (கொண்டுநிலைப்பாட்டு) என்பதிலிருந்து கலிப்பாவும் தோற்றம்பெற்ற பின்னணியை அ.பிச்சை (2011: 287) விளக்குகின்றார். இப்படிப் பாவகைகள் உருவான பின்னர் ஏடறி புலவர்கள் அவற்றை வகைதொகை செய்து இலக்கணமயப்படுத்தி வரம்பிட்டுள்ளனர். யாப்பியல் ஆராய்ச்சிகளும் நிகழத் தொடங்கின.

யாப்பு வகைகளும் தமிழும்

மரபு மற்றும் நவீன யாப்பியல் வல்லுநர்கள் பலவாறாக யாப்பினை வகைசெய்கின்றனர். பொதுவாக, ஒரு மொழியின் ஒலிக்கூறுகள் (அ) ஒலியன்களே யாப்பியல் வகைபாட்டிற்கு அடிப்படையாகின்றன. ஜான் லோட்ஸ் (John Lotz) என்பவர் யாப்பினைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றார் (அ. பிச்சை, 2011: 20-23).

 

மேற்கண்டவற்றுள் மாத்திரை யாப்பினை உடையதாகத் தமிழ் விளங்குகின்றது. தொல்காப்பியரும் செய்யுளின் அடிப்படை (அ) முதல் உறுப்பாக மாத்திரையைக் கூறுதல் இங்கு நினையத்தக்கது. மாத்திரை என்பது எழுத்தினை ஒலிப்பதற்குத் தேவைப்படும் கால அளவைக் குறிப்பதாகும். இது பல செய்யுள் உறுப்புகளை வரையறை செய்வதற்குக் கருவியாகத் திகழ்கின்றது. இதனை,

மாத்திரை எழுத்தினது குணம் ஆதலானும் அசையும் சீரும் அடியும் தூக்கும் பாவும்வண்ணங்களும் என்று இன்னோரன்ன எல்லாம் மாத்திரை நிமித்தமாகத் தோன்றுவன ஆதலானும்அது முன் வைத்தான் (தொல்.பொருள். 313, பேரா.)

எனப் பேராசிரியர் விளக்கம் அளிக்கின்றார். தொல்காப்பியருக்குப் பின்வந்த யாப்பிலக்கணிகள் மாத்திரையையும் எழுத்தையும் தனித்தனிச் செய்யுள் உறுப்புகளாகக் கணக்கிடாமல் ஒன்றாகவே சேர்த்துப் பார்க்கின்றனர்.

யாப்புறுப்புகள் ஒவ்வொன்றிலும் கணக்கியலின் பயன்பாடு மிகுந்திருக்கின்றது. கட்டுரையின் எல்லை கருதிச் சீர், அடி, தொடை ஆகியவற்றுள் இடம்பெறும் கணக்கியல் பயன்பாடு மட்டும் இங்குச் சுருக்கமாக உரைக்கப்படுகின்றது.

சீர் பற்றிய கணக்கீடுகள்

தொல்காப்பிய நூற்பாக்களின்வழி ஓரசைச்சீர்கள் நான்கு, ஈரசைச்சீர்கள் பதினாறு, மூவசைச்சீர்கள் அறுபத்துநான்கு எனச் சீர்கள் கணக்கிடப்படுகின்றன. இதற்கு இளம்பூரணர் முதலான உரையாசிரியர்கள் பல்வேறு வாய்பாட்டு உதாரணங்களைத் தருகின்றனர். இடைக்காலத்தில் தோன்றிய யாப்பருங்கலக்காரிகையில் ஓரசைச்சீர்கள் இரண்டு, ஈரசைச்சீர்கள் நான்கு, மூவசைச்சீர்கள் எட்டு, நாலசைச்சீர்கள் பதினாறு எனச் சீர்கள் உரைக்கப்படுகின்றன. அதற்குக் குணசாகரர் வாய்பாட்டு உதாரணங்களையும் தருகின்றார். இந்த மாற்றத்திற்கு எது காரணம்? பாடல்களின் (அ) செய்யுட்களின் ஓசை மாற்றத்திற்கும் இந்த சீர்களின் எண்ணிக்கை மாற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? என்று ஆராய்ந்தால் நிச்சயம் இல்லை. இஃது ஓசை சார்ந்த மாறுபாடு அன்று. கணக்கீடுகள் சார்ந்த மாறுபாடு தான்.

அசைகளை முதலாகக்கொண்டு சீர்கள் கணக்கிடப்படுகின்றன. தொல்காப்பியர் காலத்தில் நேர், நிரை, நேர்பு, நிரைபு என்ற நான்கு வகையான அசைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முன்னிரண்டும் இயலசை எனவும், பின்னிரண்டும் உரியசை எனவும் குறிக்கப்பட்டன (தொல்.பொருள்.314). இவை ஓரசைச்சீர்களாகவும் எண்ணப்பட்டன. இவற்றை அடிப்படையாகக்கொண்டு ஈரசை மற்றும் மூவசைச்சீர்கள் கணக்கீடு செய்யப்பட்டன. சான்றாக,

 

நேர் நேர்

நேர் நிரை

நேர் நேர்பு

நேர் நிரைபு

நிரை நேர்

நிரை நிரை

நிரை நேர்பு

நிரை நிரைபு

நேர்பு நேர்

நேர்பு நிரை

நேர்பு நேர்பு

நேர்பு நிரைபு

நிரைபு நேர்

நிரைபு நிரை

நிரைபு நேர்பு

நிரைபு நிரைபு

 

என்னும் வகையில் அமைகின்றன. அதாவது, ஈரசைச்சீருக்குரிய இரண்டு இடங்களில் (தானங்களில்) நான்கு அசைகளும் மாறிமாறி வரும் வாய்ப்பினைப் பெறுகின்றன. எடுத்துகாட்டாக, ஈரசைச்சீரில் முதலசையாக நேர் நிற்க, இரண்டாம் அசையாக நான்கு அசைகளும் (நேர், நிரை, நேர்பு, நிரைபு) வரக் கூடும். இப்படியே ஒவ்வொன்றும் அமையும். ஆக, நிகழ்தகவு (Probability) அடைப்படையில் 4 × 4 = 16 என ஈரசைச்சீர்கள் அமைகின்றன. இவ்வாறு 4 × 4 × 4 = 64 என மூவசைச்சீர்கள் கணக்கிடப்படுகின்றன. தொல்காப்பியத்தில் நாலசைச்சீர்கள் குறிப்பிடப்படவில்லை.