'பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஒளவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்து போகவில்லை' - என்று மகாகவி பாரதி 'பஞ்சமர்' என்ற கட்டுரையில் தெரிவிக்கிறார்.
ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அற ஆழி அந்தணன் ஆகிய எட்டு பண்புகளையே எண்குணத்தான் என்கிற ஒன்பதாம் குறட்பாவினில் குறிப்பிடுவதாகவும் கருதுவர்.
இத்தகைய சொல்லாட்சிகள் 'வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலிமையான சான்றுகள்' (திருவள்ளுவர் திருமேனி தாங்கிய தங்கக் காசு, Iravati , பக்கம் 498) என்று உரைக்கிறார் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.
இந்த எட்டுப் பண்புகளையும் சட்டை முனிவாத காவியம் (பாடல் 13) புருவ மத்தியாகிய ஆக்ஞேயம் அல்லது வெளிப்பாழ், ஒளியின் பாழ், வெளி ஒளிப்பாழ், நிர்க்குணத்தின் பாழ், அனமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம் என்று எடுத்துக் கூறுகிறது.
'பகவன்' என்ற சொல்லுக்கு 'பகவு+அன்', அதாவது பகுத்தறிவு மிக்கவன் என்றும், வேறு சிலர் 'பகலன்' என்ற சொல்லாட்சி ஓலைச்சுவடியில் எழுத்தாணி இயல்பால் திரிந்து வழங்கிற்று என்றும் எல்லாம் கருதுகின்றனர்.
'ஞாயிறு போற்றுதும்' என வணங்கப்படும் ஆதவனே ஆதி பகவன். இது தமிழர் மரபு. வேளாண் மக்களுக்கு அறுவடைத் திருநாள் பொங்கல் விழா - சூரிய வழிபாட்டுத் தினம் - எல்லாம் சூரிய பகவானைப் போற்றும் மங்கல வழக்காகும்.
இவ்வுலக இயக்கத்திற்கு வேண்டிய ஆற்றலை வரையறாது வாரி வழங்குகிற அமுத சுரபி சூரியன். விலங்குகள், தாவரங்கள், உயிரினங்கள் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் சூரிய வெளிச்சம் இயற்கையானதோர் வரப்பிரசாதம். ஏனெனில் சூரிய ஒளி மட்டும்தான் பூமிக்கு அப்பால் வெளியிலிருந்து நமக்கு வந்து சேரும் ஆற்றல் மூலம். ஏனைய கருவறைகள் பூமிக்குள் அல்லது புவி சார்ந்த வளிமண்டலத்தில் அடங்கி இருப்பனவே... நம் முழு முதற்கடவுள் ஞாயிறு. இவனே ஆதிபகவன். ஆதித்த பகவன்' என்று நான் 'வள்ளுவர் கண்ட அறிவியல்' என்ற நூலில் நிறுவியுள்ளேன்.
சூரிய தேவன் கோலோச்சாத இதிகாசங்கள், புராண காவியங்கள் எம்மொழியிலும் எம்மதத்திலும் இல்லை. வடமொழி வேதத்தில் அருணம் என்பது ஞாயிறு- வழிபாட்டுக்குரியது. இராமபிரானுக்கு அகத்தியர் உபதேசித்தது 'ஆதித்ய ஹிருதயம்' அல்லவா?
கிறித்தவ விவிலியமும் 'கடவுள் ஒளி உண்டாவதாக' என்றபடி பகலவனை சிருஷ்டித்த விதத்தினை ஓதுகின்றது.
கிரேக்கத்தில் சூரியக் கடவுளை 'ஹீலியோஸ்' என்கிறார்கள். 'úஸால்' என்று அழைக்கப்பட்ட ரோமானிய சூரியனும் பண்டைய யவனர் தம் முதல் தெய்வம்தானே!
தமது 90-ஆம் வயதில் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்த முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருக்குறளைப் பற்றிப் பேசும்பொழுது, 'கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தில் பத்துக் குறள்களில் ஏழிலும் இறைவனது திருவடித் தாளினையே வள்ளுவர் வாழ்த்துகின்றார். ஏனெனில் இறைவனது வேறெந்த உறுப்பினை எடுத்துக் கூறினாலும் அது கடவுளை உருவம் காட்டிவிடும்! உடலுறுப்புகளில் பாதம் மட்டுமே ஆண், பெண் என்று இனங்காட்ட இயலாத அங்கமாகும். அதனாலேயே இன்ன தெய்வம் என்றில்லாமல், எல்லா மதங்களுக்கும் ஏற்புடைய கடவுளை வாழ்த்தும் உலகப் பொதுமறையாகத் திருக்குறள் திகழ்கிறது' என்று கூறினார்.
மிக அண்மையில் 2017 டிசம்பரில் 'திருக்குறள் - சாஸ்திரங்களின் சுருக்கக் கோவை' (Thirukkural - An Abridgement of Sasthras) எனும் ஆங்கில நூலில் ஆய்வறிஞரும் சம்ஸ்கிருத நிபுணரும் ஆன டாக்டர் இரா. நாகசாமி முப்பாலின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார். சம்ஸ்கிருதம் இடையிட்ட ஆங்கில உரைநூல். தர்மசாஸ்திர(ம்), அர்த்த சாஸ்திர(ம்) காம சாஸ்திர(ம்) மற்றும் நாட்டிய சாஸ்திர(ம்) ஆகிய இந்து வேத மரபிலான சாஸ்திரங்களின் மேற்கோள்களுடன் ஒரு புதிய பார்வையில் திருக்குறள் ஆராயப்பட்டு இருக்கிறது.
இந்துச் சிந்தனைகளின்படி தர்ம, அர்த்த, காம, மோட்ச நிலை ஆகிய புருஷார்த்தங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் என்று டாக்டர் நாகசாமி வள்ளுவரை மத வரையறைக்குள் குறுக்குவது மட்டும் ஏனோ தெரியவில்லை.
திருக்குறளின் உரையாசிரியரான பரிமேலழகரை காஞ்சி விஷ்ணு கோயில் பூசாரி என்றும் குறிக்கின்றார் (பக். 22). 'சில கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவை ஆண்ட ஐரோப்பியர்களின் துணையோடு இங்கே ஜனங்களை மதம் மாற்றுவதற்காகவே ஊதியம் பெற்று வந்தனர். 'இந்தப் பெரும்பணியில் உள்ளூர் மக்களின் மொழியே உன்னதம் என்றும், புகழ் மிக்கது என்றும் பரப்பினர். வட மொழிகள் பிராந்திய மொழிகளைக் கீழடக்க வந்த அன்னிய பாஷைகள் என்பதையும் பரப்பினர்' (பக். 24) என்றும் எழுதுகிறார்.
அதிலும் திருவள்ளுவர் மனுதர்ம சாஸ்திர(ம்) கூறுகிற பிரம்மச்சர்ய, வனப்பிரஸ்த, சன்னியாச வாழ்வியல் கட்டங்களோடு ஒத்துப்போகிறார். இது முழுக்க முழுக்க இந்து (இந்திய) வாழ்க்கை நெறி. ஜி.யு.போப்பும் மற்றவர்களும் போல வள்ளுவரைச் சித்திரிப்பவர்கள் திருக்குறளின் மொத்த வடிவமைப்பும் அறியாத அற்பர்களாமே. (பக்.14-15).
'வள்ளுவர் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர் ஆகிய நால்வர்ண முறையினை ஏற்றுக்கொண்டு எழுதுகிறார். இன்றைய நவீன சுயநல அரசியல்வாதிகள் வெளிக்காட்டுவது போன்று அவற்றைக் கருதவில்லை' (பக். 26) என்று எந்த அடிப்படையில் ஆராய்ச்சி செய்கிறாரோ? 'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருக்குறள் எதை வற்புறுத்துகிறதோ?
'சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு' என்ற குறளில் வரும் பூசனை என்பது வானோர்க்குச் செய்யப்படும் மதச்சடங்கு ஆகிய பூஜை என்பதாகக் கருதி, 'வள்ளுவர் மதங்களுக்கு எதிரானவர் அல்லர்' (Valluvar was not anti-religious - பக்.70) என்று முடிவும் செய்கிறார். 4000 ஆண்டுகளுக்கு முன்னம் தமிழ்நாடு என்பது ஆரிய தேசம் என்றே வழங்கிற்று என்று அறுதியிட்டுக் கூறுகிறார். (பக்.35).
அறத்துப்பாலில் பிரம்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகிய நான்கு ஆசிரம வாழ்வு நிலைகளும் தொகுக்கப்பட்டு உள்ளன என்கிறார். அதில் பாயிரம் காட்டும் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்களை பிரம்மச்சரியத்தின் அடிப்படைகளாகவே வகுக்கின்றார்.
பாயிரத்திற்குப் பிரம்மச்சர்ய விரதம் என்றும் தலைப்பு இட்டு, கடவுள் வாழ்த்து அதிகாரத்தினை அக்ஷர அப்பியாச(ம்) என்று விளக்குகிறார். வான்சிறப்பு என்பதனைப் பிரம்மச்சரிய சீடர்கள் அண்டை அயலாரிடம் போய் பிச்சை வாங்கி வந்து குருவிடம் காட்டி, அவர் சம்மதித்த பின்னேயே அன்னம் உண்ண வேண்டுமாம். இது 'பிக்ஷô வந்தனம்' என்க. மூன்றாவது அதிகாரத்திற்கு ஒழுக்கத்து நீத்தார் பெருமை என்கிற விளக்கம் தரப்படுகிறது.
பூனை வேடத்தில் வந்து அகலிகையுடன் கூடல் புரிந்த இந்திரனை 'ஐந்து புலன்களையும் அவித்த ஆற்றல் உடையவனுக்கு உரிய எடுத்துகாட்டு' என்பது தெரிந்தே இழைக்கப்படும் தவறு அல்லவா?
அதிலும் அறன் வலியுறுத்தலில் மெளரியப் பேரரசர் அசோகர் தமது அதிகாரிகளையும், ஆசான்களையும் தமது கொள்கை பரப்ப அனுப்பினார் என்று எழுதுகிறார். அசோகர், பிராந்திய மொழிகளின் முன்னேற்றம் கருதி அவரவர் தாய்மொழியில் பாலி மொழியின் புத்தக் கருத்துகளைப் பரப்பினார் என்கிற வரலாற்றினை இயல்பாகவே சீரிய ஆய்வாளர்கள் மறைப்பது கூடாதுதானே?
ஏதாயினும் டாக்டர் நாகசாமியின் கருத்துப்படி வேத தர்ம மார்க்கத்தினை தமிழர்கள் எளிதில் புரியும்படி வழங்கியதே திருக்குறள். (முகவுரை, பக். 12). இறுதியில் திருக்குறள், சம்ஸ்கிருத சாஸ்திரங்களின் சுருக்கக் கோவை அல்லது தழுவல் என்ற நிரூபணத்தை மறுத்து உரைக்க இயலாது என்றே பறைசாற்றுகின்றார்(பக்.38).
'பிராகிருதம் என்னும் வழக்கு மொழியில் இருந்து தோன்றிய பைசாசம், செளரசேனி, மஹாராஷ்ட்ரம், மாகதி, அர்த்தமாகதி (பாலி) போன்ற மொழிகளின் இலக்கியங்களையும் அவற்றில் இருந்து பிறந்த சிந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பிகாரி, ஒரியா, வங்காளி, அசாமி, லந்தா, காஷ்மீரி, கீழை இந்தி, மேலை இந்தி பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகள் அனைத்தும் பேச்சு வழக்கு மொழிகள். பிராகிருதத்தின் செம்மைப்படுத்தப்பட்ட இலக்கிய வழக்கு மொழியே சம்ஸ்கிருதம். ஆயின், ஆரியம் அல்லாத திராவிட மொழிக் குடும்பங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் தென்னிந்தியாவில் புழங்கியவை. ஆயினும் ஆரியத்தை அகற்றிவிட்டு தென் பிராந்தியத்தில் இந்த வழக்கு மொழிகள் முன்னிலை பெறத் தொடங்கியதற்கு எந்த ஆதாரமும் இந்திய வரலாறு முழுவதிலும் கிடைக்கவில்லை' என்று 'சம்ஸ்கிருத இலக்கியத்தின் சிறு வரலாறு' (A Short History of Sanskrit Literature, முன்ஷிராம் மனோஹர்லால் வெளியீடு, புதுதில்லி, திருத்திய விரிவான இரண்டாம் பதிப்பு, 1963. பக். 11) நூலில் ஹன்ஸ்ராஜ் அகர்வால் ஆராய்ந்து உரைக்கிறாரே.
ஏதானாலும், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சியால் சீனமொழியில் அண்மையில் மொழிபெயர்க்கப்பட்டது உள்பட, இதுவரை நாற்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் அரங்கேறிய உலகப் பொது மறையாம் திருக்குறளை எந்த மதக் குடத்தினுள்ளும் அடக்கிவிட முடியாது என்பதே உண்மை!