New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 27. மணிமேகலை காலத்தின் சமய நிலை முனைவர் சொ. சேதுபதி


Guru

Status: Offline
Posts: 24769
Date:
27. மணிமேகலை காலத்தின் சமய நிலை முனைவர் சொ. சேதுபதி
Permalink  
 


27. மணிமேகலை காலத்தின் சமய நிலை

 

முனைவர் சொ. சேதுபதி

 

மணிமேகலையில் சைவம், வைணவம் ஆகிய சமயத்தவரோடு மீமாம்சைப் பிரிவைச் சார்ந்த அளவைவாதிகள் இருந்திருக்கின்றனர். ஆசீவக மதத்தார், சாங்கியமதத்தார், வேடிகத்தார், பூதவாதத்தார் இவர்களோடு சமணத்தவர்கள், பௌத்தவர்கள் இருந்திருக்கின்றனர். ‘இவர்கள் ஒருங்கு கூடித் தத்தமது சமயக் கருத்துக்களே சிறந்தவை என்று வாதிட்டிருக்கின்றனர். அதையொட்டிக் கலகம் செய்வோரும் இருந்திருக்கின்றனர்’ என்பதை,

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் (மணி 1: 60-63)

என்ற அடிகளால் அறியலாம்.

ஆக, சமயநெறி பற்றியவர்களும் பற்றாதவர்களும் அக்காலச் சமுதாயத்தில் இருந்திருக்கின்றனர். யார் எந்தச் சமயத்தையும் பின்பற்றலாம்; பின்பற்றாதிருக்கலாம் என்கிற நிலைப்பாடு இருந்திருக்கிறது. ஆனால், சாதியம் இறுக்கமாக இருந்திருக்கிறது. சாதியத்தை, வருணாசிரமத்தை மீறியவர்கள் தனித்துவிடப்பட்டவர்களாக ஆகியிருக்கிறார்கள். வைதிக சமயத்தில் அவர்களுக்கு இடமில்லை. மிகு காமத்துய்ப்பில் பேருருக்கொண்ட பரத்தையர் ஒழுக்கத்தால் துன்பநிலை எய்திய கோவலன் கொல்லப்பட்ட சோகத்தோடு துன்பியல் காப்பியமாக முடிந்து விடுகிறது சிலம்பு. அதற்குப்பின் பிறக்கும் மணிமேகலையின் நிலைப்பாடு என்ன என்கிற இடத்தில் இருந்து தொடங்குகிறது மணிமேகலை. ஆசிவகமதத்தைத் தழுவியவர்களாகக் கோவலன்- கண்ணகி குடும்பத்தார் ஆகிவிடுகிறார்கள். மீதமிருக்கிற பேர்களில் ஒருத்தி மாதவி. அவள் குல வழக்கப்படி, ‘பொருள்விளையாட்டி’. அவளது மகளான மணிமேகலைக்கும் அதுதான்கதி! அப்படித்தான் சித்திராபதி செயல்படுகிறாள். மாதவி வேறு முடிவெடுக்கிறாள். மணிமேகலை கண்ணகியின் மகள் என்கிறாள். இங்கே ஒரு சிக்கல் எழுகிறது. சாதிய மறுப்பில் நின்று கடைத்தேறச் சமயமே கைகொடுக்கிறது. அவ்வாறாயின் சமயஒழுங்கில் செயல்பட அவள் பிறிதொரு சமயத்தைத் தழுவவேண்டியிருக்கிறது.



இங்கே சமயம் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலத்தளமாகவும், அடைக்கலமற்றவர்களுக்குப் புகலிடமாகவும் சமயஅமைப்பே இருக்கிறது. வைதிக சமய மறுப்பில் எழுச்சிபெற்ற சமணம் அக்காலத்தில் பால் வேறுபாடு கடந்து பலரை ஈர்த்திருக்கிறது. அதன் நீட்சியாய்ச் சிலம்பில் கௌந்தியடிகளாகிய பெண் துறவி உலவுகிறார். அவருக்குப் பின் தோன்றிய மணிமேகலை அவ்வழியிலேயே சமணத் துறவியாக ஆகியிருக்கலாமே; அதைவிடுத்து அவள் பௌத்த சமயம் ஏற்றது ஏன்? இந்தக் கேள்விக்கு விடைதேடும் காப்பிய ஆசிரியர் தன் காலச் சமுதாயச் சூழலில் சமயங்கள் பெறும் இடத்தைப் பதிவு செய்யத் தொடங்குகிறார்.

 

சமுதாயத்தில் இருந்து சமயத்தை நோக்கி...

 

சமணம் நிறுவனமயமாக்கப்பட்டதோடு பலரும் சமணநெறி நின்று வாழ்கிறவர்களும் இருக்கிற காலகட்டம் அது. எனினும் மக்கள் மத்தியில் அது தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டிருக்கிறது என்பதற்கு இரு காட்சிகளை முன்வைக்கிறார் சாத்தனார். ஒன்று, கள்ளுண்ட களிமகன் ‘காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி, உண்ணாநோன்போடு உயவல் யானையின் மண்ணா மேனியனாக’ வருகிற சமணத் துறவியைப் பகடி செய்கிறான்.

சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் 
தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன் 
நாணமும் உடையும் நன்கணம் நீத்து 
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி 
உண்ணா நோன்போடு உயவல் யானையின்
மண்ணா மேனியன் வருவோன் தன்னை 
'வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன் 
எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ 
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் 
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது 
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும் 
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது 
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் 
விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே! 
உண்டு தெளிந்து இவ் யோகத்து உறு பயன்
கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என 
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று 
'உண்ம்' என இரக்கும் ஓர் களிமகன் (மணி 1 : 60-63)

இருக்கும் காட்சியைக் கண்ட பின்னரும் யாரும் அதனைக் கடிந்ததாகவோ, விலக்கியதாகவோ இல்லை.



ஆகப்பெரிய சமயவாதிகளோடு வாதிட்டு வென்று நிலைபெற்ற சமணத்தை, ஒரு களிமகன் புல்லிய நிலையில் போதையில் உரையாடி துறவியை வாய்பேசாது வைத்த அவலம், இக்காட்சியில் சித்திரமாகிறது. காரணம், இச்சமயம் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து வந்தமையைச் சுட்டுவதாக அமைகிறது.

அதற்கான காரணத்தைச் சுதமதியின் வரலாற்றில் வைத்துக் காட்டுகிறார் சாத்தனார்.

பிறப்பால் பார்ப்பணக் குடும்பத்தைச் சார்ந்தவள் சுதமதி. காப்பியப்போக்கில் மணிமேகலையின் தோழி. இளம் வயதிலேயே தாயை இழந்தவள். பழவினை காரணமாக, பிழைமணம் எய்தியவள். அதாவது மாருத வேகன் என்கிற விஞ்சையனுடன் சிலநாள் கலந்து வாழ்ந்து அவனால் கைவிடப்பட்ட பெண்மகள்) அந்தப்போதில் தன் மகளைக் காணாது தேடியலைந்த அம்முதுபார்ப்பணனாகிய தந்தை காவிரி முதலான புண்ணியத்துறைகளில் ஆடிக் காவிரிநதி வந்து கடலில் கலக்கும் புகாரிலும் வந்து நீராட வந்தபோது மகளைக் கண்டான்.

கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய 
வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு
"யாங்கனம் வந்தனை என் மகள்?" என்றே 
தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு 
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் 
காதலன் ஆதலின் கைவிடலீயான் 
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில் 
பரந்து படு மனைதொறும் திரிவோன் (மணி 5: 39-46)

என்பதாக, புகார் நகரிலேயே உஞ்சவிருத்திப் பிராமணனாக வாழத்தொடங்குகிறான். இந்த இடத்தில் சுதமதியால் சொல்லப்படும், ‘பிழைமணம் எய்திய என்’ என்ற தொடரையும், ‘ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன்’ என்று அவளது தந்தை கூறிய தொடரையும் கருதிப் பார்த்தால், வைதிக சமய மற்றும் பிராமண சாதி இறுக்கம் புலப்படும்.



இவ்வாறு சொந்த சாதியும் சமயமும் கைவிட்டார்க்குப் புகலிடமாக, சமண சமயம் இருந்திருப்பதால் சுதமதி சமணப்பள்ளியில் இருக்கிறாள். அவள் தந்தை அதே ஊரில் இரந்துண்டு வாழ்கிறான். அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தேறியது.

... ... ... ... ... ... ... ... ... ...ஒரு நாள் 
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன் 
கணவிர மாலை கைக்கொண்டென்ன 
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி 
"என் மகள் இருந்த இடம்" என்று எண்ணி
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து 
"சமணீர்காள்! நும் சரண்" என்றோனை 
"இவன் நீர் அல்ல" என்று என்னொடும் வெகுண்டு 
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக் 
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம் 
"அறவோர் உளீரோ? ஆரும் இலோம்!" எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற (மணி 5: 46-57 )

அதாவது, இரந்துண்டு வாழும் அம்முதிய பார்ப்பணனை வழியில் கன்று ஈன்ற பசுவொன்று முட்டித்தள்ளியது. குடல் சரிந்துவிழத் தன் மகள் இருந்த இடம் என்று எண்ணி, ‘சமணீர்கள் நும் சரண்’ என்று தஞ்சம் வந்தடைந்தான். அதைக் கண்ட அந்த மையறு படிவத்து மாதவர் - குற்றமற்ற தவக்கோலம் கொண்ட அந்தத் தவமுனி, சுதமதியையும் வெகுண்டு, வெளியே செல்லுமாறு கையசைத்துக் குறிப்புக் காட்டிவிடுகின்றனர். வேறுவழியின்றி, அறம் செய்யும் மக்கள் உள்ளீரோ? என்று புறத்துறை மக்கள் வாழும் வீதியில் அவர்கள் அலைகிறபோதுதான் பௌத்தம் வந்து அவர்களைத் தாங்கிக் கொள்கிறது.

சங்க தருமன் என்ற பௌத்தத் துறவி எதிர் வருகிறான்.

மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம் 
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் 
கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்
பொன்னின் திகழும் பொலம் பூஆடையன் (மணி 5: 58-61)

என வருகிறான். வந்து,

"என் உற்றனிரோ?" என்று எமை நோக்கி 
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால் 
அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து 
தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு 
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க 
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி 
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் 
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
சங்கதருமன் தான் எமக்கு அருளிய
எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள் 
உலக நோன்பின் பல கதி உணர்ந்து 
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த 
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின் 
அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி 
காமற் கடந்த வாமன் பாதம் 
தகைபாராட்டுதல் அல்லது யாவதும் 
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க!' (மணி 5: 62-79)

என்று உதயகுமாரனிடம் தான் பௌத்தப்பள்ளி சார்ந்த வரலாற்றைச் சொல்கிறாள் சுதமதி.


இதன்வழி, திக்கற்றவர்களுக்கு உற்ற புகலிடமாகவும், இதயமற்றவர்களுக்கு இதயமாகவும், ஆதரவற்றவர்களுக்கு உரிய அடைக்கலத் தளமாகவும் பௌத்த சமயம் திகழ்ந்ததைச் சாத்தனார் நிலை நிறுத்திக் காட்டுகிறார்.

இந்த இடத்தில் இன்னொரு தளத்திற்கும் இக்காப்பியம் மணிமேகலையை எடுத்துக் கொண்டு போகிறது.

அதாவது உயிர்கள் விரும்பித் துய்க்கும் காம இன்பம் கூட நிலையற்றது என்று புறந்தள்ளித் தொண்டு செய்யும் நிலைநோக்கிப் பெண்ணையும் தள்ளுகிறது. இயல்பாய்த் தோன்றும் காம இன்பத்தையும் துய்க்கவிடாது சமயநெறியின்பால் வேகமாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் மணிமேகலா தெய்வம் உள்ளிட்ட தெய்வங்கள் முனைப்புக் காட்டுகின்றன. இங்கே, சமயம் சமுதாய வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதாக அமைந்து விடுகிறது. வஞ்சி மாநகர் சென்று சமயக் கணக்கரிடம் பல்வேறு உண்மைகளைக் கற்றறியச் செல்கிறாள் மணிமேகலை. அதிலும் சுயவடிவில் அன்று. ஆண் வேடத்தில். காரணம்,

இளையோள் வளையோள் என்று உனக்கு யாரும்
விளைபொருள் உரையார் வேற்று உருக் கொள்க (மணி 26: 68-69)

என்று கண்ணகியால் மாதவிக்கு உணர்த்தப்படுகிறது.

எனவே, பெண்ணுக்கு, அதிலும் இளம்பெண்ணுக்குச் சமய உண்மை தெரிவித்தலிலும் அக்காலச் சமுதாயத்தில் சில தடைகள் இருந்திருக்கின்றன என்பது புலனாகிறது.

பின்னர் ஆண்வேடம் பூண்டு தவமுனியாக வஞ்சிநகரம் புகுந்து சமயக்கணக்கர்தம் திறம் கேட்கிறாள். சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி,சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி எனப்பல்வேறு சமயத்தாரிடமும் பாடம் கேட்கிறாள். (மணிமேகலை, சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை) பின்னர், கச்சிமாநகரம் புகுந்து, தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு, பவத்திறம் அறுகென, அப்பாவை நோன்பு நோற்பதாகக் காப்பியம் நிறைவுறுகிறது.

இவ்வாறு, பலப்பல சமயங்கள் அக்காலத்தில் நிலவிய போதிலும் ஏனைய சமயவாதிகளோடு இருந்து உரையாடித் தமது சமயக் கருத்தை நிலைநிறுத்த மணிமேகலை முயன்ற வரலாறு இக்காப்பியத்துள் அழுத்தமாகப் பதிவு செய்யப்படுகிற போது, மணிமேகலை பௌத்தக் காப்பியமாகவே நிலைபெறுகிறது. ஆனபோதிலும், தத்துவ விளக்கத்தினால் மட்டுமன்றி, மக்கட்கு ஆற்றும் அருந்தொண்டினால்தான் சமயங்கள் சமுதாய வாழ்வில் நிலைபெற முடியும் என்பதை மிக அழுத்தமாகவே மணிமேகலைக் காப்பியம் பதிவு செய்துவிடுகிறது எனல் தகும்.

 

 

மணிமேகலை - பௌத்தக்காப்பிய நாயகியான காரணம்

 

சமுதாயத்தில் பல்வேறு காரணங்களினாலும், சூழல்களாலும், நிகழும் சமூக மாற்றங்களுக்கும் (Social Changes) சமூகத்தின் நிலைத்த தன்மைக்கும் சிறந்ததொரு சக்தியாகச் சமயம் விளங்குகின்றது. மக்கள் சமுதாயத்தில் சமூக மாற்றங்களைக் கொண்டுவரவும், சமுதாயத்தில் நிகழும் சமூக மாற்றங்களை அவர்கள் ஏற்கவும் சமயம் ஊக்கம் கொடுக்கிறது. (முனைவர் தா. ஈசுவரப்பிள்ளை, பக்தி இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, ப.14)

இதுதான் உண்மை. இந்த உண்மையின் வேர் சிலம்பில் முளைவிட்டது. மணிமேகலையில் கிளைவிரித்தது. பின்னர் ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்விலும் தொண்டிலும் பல்கிப் பெருகியது. சமுதாயம் முழுமையை நோக்கி வளருதற்கு இடையூறாக வரும் தடைகளை அறிவாலும் தொண்டாலுமே வெல்ல முடியும். அதனை முன்னெடுத்துச் செல்கிற மார்க்கங்களாக, சமயங்கள் திகழ்ந்தமையால் சமுதாயத்தளத்தில் சமயத்தின் பிணைப்பு தடுக்க, தவிர்க்க இயலாத இடத்தை வகிக்கவே செய்யும் என்பது வரலாற்று உண்மை.

அந்த அடிப்படையில், மணிமேகலை பௌத்த சமயக் காப்பியம் என்றாலும் அதில் எல்லாச் சமயக்கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சமயத்தவரும் தத்தமது சமயக் கருத்துக்களை மக்கள் முன் எடுத்துரைக்கும் முறை அக்காலத்தில் இருந்துள்ளது. மக்களும் தாம் விரும்புகிற சமயநெறியில் வாழுகிற வாய்ப்பு பெற்றிருந்தனர். சைவம், வைணவம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட எல்லாச் சமய வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் நிலவிய முறைகளை அழகாகப் பதிவு செய்துள்ளது. மணிமேகலை பக்தி, வழிபாடு இவற்றையெல்லாம் விடத் தொண்டு செய்யும் சமயம்தான் நின்றுநிலைக்கும் என்பதைச் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பசிப்பிணி போக்க உணவும், அறியாமையைப் போக்க ஞானமும் வழங்கியக் காப்பியநாயகி மணிமேகலை. தொண்டும் துறவும் தூய ஒழுக்கமும் கொண்டு சிறந்த மாந்தர் குல விளக்கு. எல்லாச் சமயக் கருத்துகளையும் கற்றுச் சிறந்த ஞானச்செல்வி. உலகப் பெண்குலத்துக்குத் தமிழகம் தந்த ஞான முன்னோடி என்பதாகவே மணிமேகலையைத் தம் காலச் சமுதாயத்தினின்று சமயஒழுங்கில் நிலைநிறுத்தச் சீத்தலைச் சாத்தனார் காப்பியம் பாடியுள்ளார் என்று தெளியவேண்டியது இலக்கியக் கடமையாகிறது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard