New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 23. சமணம் - முனைவர் யாழ். சு. சந்திரா


Guru

Status: Offline
Posts: 24791
Date:
23. சமணம் - முனைவர் யாழ். சு. சந்திரா
Permalink  
 


23. சமணம்

முனைவர் யாழ். சு. சந்திரா

ஜைனசமயம், ஆருகதசமயம், நிகண்டவாதம் அநேகாந்தவாதம், ஸியாத்வாதமதம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமணம் பற்றிய செய்திகளைக் காண்போம். இம்மதம் - சமயம் பற்றிய சொற்களே அந்தச் சமயம் பற்றிய விளக்கமாக அமைந்து விடுகின்றன எனலாம்.

‘ஸ்மரணர்’ என்றால் துறவியர் என்று பொருள். இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல் சமணம். அதாவது துறவு பூண்டவரே வீடடைவர் என்பது சமண சமய நம்பிக்கை ஆகும். ஆக, சமணம் துறவை வலியுறுத்தி வீடுபேறு அடைய வழிவகுக்கிறது.

ஐம்புலன்களை வென்றவர்கள் ஜினர்கள் எனப்படும் தீர்த்தங்கரர்கள் ஆவர். அந்த ஜினர்களைக் கடவுளாகக் கொண்டு விளங்குவதால் ஜைனம் என்ற பெயர் பெற்றது.

சமணத்தின் முதன்மைக் கடவுள் அருகர். அருகரை வணங்குபவர் ஆருகதர். அவர்களது சமயம் ஆருகதம்.

சமணர்களது கடவுள் பற்றற்றவர் என்பதால் நிகண்டர் எனப்படுகின்றார். ஆகவே, அச்சமயம் நிகண்டவாத சமயம் எனப்படும்.

ஒரு பொருளுக்கு அநேகத் தன்மைகள் பற்றிக் கூறுவதால், அநேகாந்தவாதம்; அதே பொருளையே ஸியாத்வாதம் என்பதும் தரும். இவ்வாறு சமணத்தைக் குறிக்கும் சொற்கள் பலவும் அச்சமயத்தின் அடிப்படையை விளக்குகின்றன.

சமணத்தின் பிரிவுகள்

சமண சமயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அவை வருமாறு;

1. சுவேதாம்பர சமணம்

சுவேதம் எனில் வெண்மை; வெண்ணிற ஆடை உடுத்தும் சமணர்கள் இச்சமணப் பிரிவைச் சார்ந்தவர்கள்.

2. திகம்பர சமணம்

திக் + அம்பரம் - திசையை ஆடையாக அணிபவர்கள் என்று பொருள். அதாவது ஆடையின்றி இருப்பவர்கள். இக்காலத்தும் இத்தகு நிலையினர் உள்ளனர். தமிழகததில் இவர்கள் வாழ்ந்தனர்.

3. ஸ்தானசுவாசி சமணம்

இவர்கள் உருவங்களை வணங்க மாட்டார்கள்; கோவில்களில் ஆகமங்களையும், தீர்த்தங்கரர்களையும் அருகக் கடவுளாக வணங்குவர். இவர்கள் வட இந்தியாவில் உள்ளனர்.



தீர்த்தங்கரர்கள்

சமண சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரர் ஆவார். தீர்த்தம் என்பது ஆறு - குளம. அவற்றின் துறையில் இருப்பவர்கள் தீர்த்தங்கரர். அதாவது, பிறவியாகிய குளத்தின் துறையில் ஏறியவர்கள், தீர்த்தங்கரர்கள்! மகாவீரருக்கு முன்னர் இருபத்திமூன்று தீர்த்தங்கரர்கள் இருந்தனர் என்றும் அவர்களுக்கென்று தனித்த சின்னங்களையும் சமணர்கள் அளித்திருந்தனர்.

இரிபநாதர், அஜிதநாதர், சம்பவநாதர், அபிநந்தனர், சுமதிநாதர், பத்மபிரபர், சுபார்சுவநாதர், சந்திரபிரபர், புரபதந்தர், சீதளநாதர், சிரயோம்ஸநாதர், வாசுபூஜ்யர், விமலநாதர், அனந்தநாதர், தர்மநாதர், சாந்திநாதர், குத்துநாதர், அரஹநாதர், மல்லிநாதர், முனிசுவநாதர், நமிநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், மகாவீரர்.

சமண தத்துவங்கள்

சமணத்தின் இன்றியமையாத தத்துவம் அஹிம்சையாகும். அஹிம்சையைவிடச் சிறந்த தர்மம் வேறில்லை. சமணமதத்தில் அஹிம்சைக்கு அனைத்திலும் உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அது மிகவும் நுணுக்கமாய் ஆராய்ந்து விளக்கப்பட்டிருப்பதால் அதை முழுவதும் கடைப்பிடித்தல் எல்லோருக்கும் இயலாது. மிகப்பெரிய துறவிகளுக்கும் முனிவர்களுக்கும் கூட சிரமந்தான்.

மனிதனுக்க இம்சை புரியக்கூடாது என்பது மட்டுமல்ல, வேறு உயிருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது. நாம் எழுகையிலும் அமருகையிலும் நடமாடுகையிலும், உறங்குகையிலும், விழித்திருக்கையிலும், உணவு கொள்ளுகையிலும், நீஇ அருந்துகையிலும், உரையாடுகையிலும் எண்ணிலடங்காத உயிர்களுக்கு இம்சை செய்துகொண்டே இருக்கிறோம். நாம் இந்த இம்சைகளிலிருந்து இயன்ற வரையில் விலக வேண்டும். முனிவர்கள் விடயத்தில் அஹிம்சைக்கு மிகவும் கடுமையான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இல்வாழ்வோர் விடயத்தில் அதன் கடுமை சிறிது தளர்த்தப்பட்டிருக்கிறது.



தவம்

சமணசமயத்தில் தவத்திற்கு மிகவும் உயர்ந்த இடம் உண்டு. புறத்தவத்தில் சமண முனிவர்களை வேறு எவருடனும் ஒப்பிட்டுப் பேசமுடியாது. அகத்தவமும் பெரிதும் வற்புறுத்தப்படுகிறது. முனிவர்கள் இயற்ற வேண்டிய தவம் பன்னிரெண்டு வகையானது.

கிருகஸ்த தர்மம் அல்லது இல்வாழ்க்கையிலோ ஐந்து அநுவிரதங்களும், மூன்று குணவிரதங்களும் நான்கு சிறிய விரதங்களும் உண்டு. இவை அனைத்திலுமே மனம், மொழி, மெய் ஆகியவற்றின் தவம் உண்டென்று சொல்லத் தேவையில்லை. 

நன்னடத்தை

தவத்தின் அடிப்படை நன்னடத்தையே. சமண சமயத்தில் ஐந்து விரதங்கள், ஐந்து சமிதிகள், மூன்று குப்திகள், நான்கு பாவனைகள் ஆகியவை பெரிதும் வற்புறுத்தப்பட்டிருக்கின்றன.

விரதம் 

விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவை மகாவிரதம், அநுவிரதம் என்று இருவகைப்படும். இல்வாழ்வோர்க்கு உரியது அநுவிரதங்கள். அவற்றைச் சரியாகக் கடைப்பிடித்தால் சமுதாயம் ஒரு குறைவுமின்றி இருந்துவரும் என்பதில் சந்தேகமில்லை.

விரதங்கள் ஐந்து. அவை; 

1. அஹிம்சை

2. சத்தியம் 

3. அஸ்தேயம் அல்லது கள்ளாமை 

4. பிரம்மச்சரியம் 

5. அபரிக்கிரகம் அல்லது வௌவாமை.

சமிதி

சமிதி என்றால் அடக்கமாக நடந்து கொள்ளுதலும் விழிப்புடன் இருந்து காரியங்களைச் செய்தலுமாகும். 

சமிதிகள் ஐந்து, அவை; 

1. ஈர்யை 

2. மொழிதல் 

3. ஏ‘ணை 

4. ஆதான நிகே‘பணம்

5. உத்சர்கம்.

1. உயிர்களைக் காலால் மிதியாதிருப்தற்காக இரவில் வெளியே நடவாதிருத்தலும் பகலில் நடக்கையிலும் கவனமாகச் சிற்றுயிர்கள் மீதும் அடிவைக்காமல் நடத்தலும் ஈர்யாசமிதி ஆகும்.

2. மிருதுவாகவும், இனிமையாகவும், பிறருக்கு நன்மை பயக்கும் வகையிலும், உண்மையாகவும், நியாயமாகவும் பேசுதலும், பொய், கோபம், தற்பெருமை, கபடம் ஆகியவை கலந்து பேசாமையும் பா‘ர்(மொழி) சமிதி எனப்படும்.

3. யாருக்கும் எத்தகைய தீங்கும் நேராத வகையில் பிச்சையெடுத்தல் ஏ‘ணா சமிதி ஆகும்.

4. முறைப்படி பொருள்களையும், துணிமணிகளையும் எடுத்தலும், வைத்தலும் ஆதான நிகே‘பண சமிதி எனப்படும்.

5. மலஜலம், ஷகபம் முதலிய அழுக்குகளை எவருக்கும் அதனால் தீங்கு நேராத இடத்தில் இடுதலும், அழுக்கு வெளியே பரவாமல் பார்த்துக் கொள்ளுதலும் உத்சர்க சமிதியாகும்.



குப்தி

குப்தி என்றால் மறைத்து வைத்துப் பாதுகாத்தல். மனத்தையும், மெய்யையும் மொழியையும் அவைகளைத் தீங்கு சாராத, பாவம் பற்றாதவாறு பாதுகாப்பது குப்தி எனப்படும். குப்தி மூன்று, அவை;

1. மனோ குப்தி 

2. வாக்கு குப்தி 

3. காய குப்தி. 

மனத்தில் இம்சையோ கபடம் முதலியவையோ இருக்கக் கூடாது; கோபமாகவும் தற்பெருமையாகவும் பேசக்கூடாது; பொய் பேசுவதோ பிறரை அடிக்க ஓடுவதோ கூடாது; திருடவோ வேறு பாவம் எதுவும் புரியவோ கூடாது.

பாவனை

பாவனை என்பது மனத்தில் கொள்ளப்படுவது. அது நான்கு வகைப்படும். அவை; 

1. மைத்ரி அல்லது நட்பு 

2. பிரமோதம் அல்லது களிப்பு 

3. காருண்யம் அல்லது அருள் 

4. மாத்யஸ்தம் அல்லது நடுவு நிலையில் நிற்றல்.

மைத்ரி 

எல்லா உயிர்களிடத்தும் நட்பும் அன்பும் கொள்ளுதல், பிறர் குற்றங்களை மன்னித்தல், எவரிடமும் விரோதம் பாராட்டாமை.

பிரமோதம் 

தன்னைவிடப் பெரியவராய், உயர்ந்தவராய் இருப்பவரிடம் பணிவுடன் நடந்து கொள்ளுதல், அவருக்குப் பணி செய்வதிலும் அவரைப் புகழ்வதிலும் இன்பம் காணுதல்.

காருண்யம் 

ஏழை எளியோரிடம் கருணை காட்டுதல், அருள் புரிதல், அவர்கள் இன்பம் பெற வகை செய்தல்.

மாத்தியஸ்தம் 

தனக்கு முற்றிலும் மாறாய், விரோதமாய் இருப்பவனிடம் கோபம் கொள்ளாது, அசட்டையாய் இருத்தல்.

மூன்று இரத்தினங்கள்

சமண சமயத்தில் இரத்தினங்கள் மூன்று என்று கருதப்படுகிறது. அவை; 

1. சம்யக் தரிசனம் 

2. சம்யக் ஞானம் 

3. சம்யக் சாரித்திரம் என்பன.

1. சம்யக் தரிசனம் 

சம்யக் தரிசனம் என்பது உண்மையான சித்தாந்தத்தைக் கண்டு கொள்ளலும், ஜினர் போதித்துள்ள சித்தாந்தத்தை ஏற்று அதில் சிரத்தையோடு இருத்தலும், உண்மையான தேவன், சாத்திபம், குரு ஆகியோரிடம் சிரத்தை அல்லது ஏழு தத்துவங்களில் நம்பிக்கையுமாகும்.

2. சம்யக் ஞானம் 

முழுமையான ஞானமே சம்யக் ஞானம் எனப்படுகிறது. அது இருந்தால் பொருள்களை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

3. சம்யக் சாரித்திரம் 

நல்ல முறையில் நடந்து கொள்ளுதல். சம்யக் அடிப்படை. அவை மூன்றும் ஒன்றாகத்தான் இருக்கும். மூன்றும் சேர்ந்து அமைவதே மோட்சத்திற்கு வழி எனப்படுகிறது.

 

 

ஏழு தத்துவங்கள்

 

1. ஜீவன் 

2. அஜீவன் 

3. ஆஸ்வரம் 

4. பந்தம் 

5. சம்வரம் 

6 நிர்ஜரை

7. மோட்சம் 

என்பன.

ஜீவன்

உயிர் உணர்வுள்ளவை. (உதாரணம் : மரம், செடிகள், மிருகங்கள், பறவைகள், மனிதர்கள்)

அஜீவன் 

உயிரற்றவை. (உதாரணம்: மரத்துண்டு, கல் முதலியவை)

ஆஸ்ரவம் 

கட்டுறுவதற்குக் காரணமாக இருப்பவை. ஆ+ ஸ்ரவம் ஸ்ரீ ஆஸ்ரவம். ஆன்மாவை நோக்கிக் கர்மங்களின் பெருக்கு. இன்ப நுகர்ச்சி, இந்திரியங்களின் வழியாக ஆன்மாவில் புகுந்து அதைக் கெடுக்கின்றன. இவற்றுள் ஆன்மாவைப் பிணித்துத் துன்புறுத்தி மாசுபடுத்துவது கரியம் எனப்படும். இந்தக்கரியங்கள் நான்கு. அவை;

1. கோபம் 

2. மானம், அபிமானம் 

3. மாயை, கபடம் 

4. லோபம் அல்லது பேராசை 

என்பன.

பந்தம் 

ஜீவனுடன். கர்மம் பிணிப்புண்டு இருத்தல். (உதாரணம்: பாலும் நீரும் கலக்கையில் இரண்டின் தன்மைகளும் மாறிவிடுதல்)

சம்வரம் 

ஆஸ்ரவத்தைத் தடுத்து கர்மங்களை வராமல் செய்தல். 

நிர்ஜரை 

கட்டுண்ட கர்மங்கள் ஜீவனிலிருந்து பிரிதல், நிர்ஜரை இரண்டு வகைப்படும். அவை; 

1. ஆவி பாகம் 

2. சவி பாகம் 

என்பவை. 

மோட்சம் 

எல்லாவகை கர்மத்தின் கட்டுக்களிலிருந்தும் விடுபடுதல். சம்யக் தரிசனம், சம்யக் ஞானம், சம்யக் சாரொத்திரம் ஆகியவைகளினால் கர்மங்களின் கட்டு தளர்ந்து ஜீவனுக்கு விடுதலை கிடைக்கிறது.

சிலர் பாவம், புண்ணியம் ஆகியவற்றிலிருந்து ஒன்பது பொருள்கள் தோன்றுவதாக நினைக்கிறார்கள். 

புண்ணியத்தில் அன்னதானம், ஜலதானம், இடதானம், படுக்கை தானம், ஆடை தானம், நல்லெண்ண தானம், நல்வாக்கு அருளுதல், நற்செயல் புரிந்து உதவுதல், நம்பகமாக நடந்து கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.

பாபம் 18 வகை இம்சை, பொய், திருட்டு, நடத்தைக் கேடு, பிறர் பொருளை எடுத்தல், கோபம், தற்பெருமை, மாயை, பேராசை, விருப்பு, வெறுப்பு, கலகம், கோள் சொல்லுதல், பிறரை தூர்த்தல், ரதித்தலும் விரும்பாமையும் (ரதி - அரதி), இல்லாததை இருப்பதாகச் சொல்லுதல், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் ஆகியவை.

 

 

கர்ம சித்தாந்தம்

 

சமண சமயத்தில் கர்ம சித்தாந்தம் என்பது பெரிதும் வற்புறுத்தப்படுகிறது. ஆன்மாவின் உண்மைத் தன்மை வெளிப்படாது செய்து எது மறைந்து விடுகிறதோ அதுவே கர்மம் என்பது.

சமண சமயத்தில் உலகிலுள்ள பிராணிகள் அனுபவிக்கும் துயரங்களுக்கெல்லாம் காரணம் அவைகளின் கர்மமே என்று நம்பப்படுகிறது. இந்தக் கர்மத்தின் கட்டிலிருந்து விடுபடுதலே மோட்சம். சமண தத்துவத்தின்படி கர்மம் என்பதற்குக் கடமை என்பது பொருளல்ல. கர்மம் என்ற பரமாணுக்கள் ஆன்மாவை நோக்கி இடையறாது வலிக்கப்பட்டு வருகின்றன என்பது அவர்களின் கொள்கை.

 

ஆன்மாவை வெல்லு

 

கர்மத்தின் கட்டைத் தகர்த்து வெளியேறுவதற்குள்ள ஒரே வழி விருப்பு - வெறுப்புக்களைக் கடந்த நிலையை எய்துதலே. அஹிம்சை, அஞ்சாமை, தியாகம், தவம், கள்ளாமை, வௌவாமை, பிரம்மசாரியம், நன்னடத்தை ஆகியவைகளின் உதவியினால் ஆன்மாவை வென்று விடலாம்; வேறுபாடுகளை விலக்கிக்கொண்டு சமநிலையை எய்தி விடலாம். அப்போது தான் சாந்தி கிட்டும். நிர்வாணம் என்பது சாந்தியே அன்றி வேறல்ல. இவையே சமண சமயத்தின் அடிப்படைத் தத்துவம் மற்றும் நெறிகள் ஆகும். 

இந்த நெறிகளை ஓர் அமைவாகவும் நிறுவனத்திற்கு உட்படுத்தியும் மக்களிடம் பரவச் செய்தவர் மகாவீரரே ஆவார். ஆகவேதான், சமண சமயத்தைத் தோற்றுவித்தவராக மகாவீரர் போற்றப்படுகிறார். சமணத்தின் தத்துவமும் நெறிகளும் இந்தியா எனும் ஒருங்கிணைக்கப்பட்ட தேசத்தின் விழுமியங்களுக்கும் நடைமுறைகளுக்கும் அளித்தகொடை அளப்பறியது.

 

பயன்கொண்ட நூல்கள்

 

1. கந்தசாமி .சோ.ந., தத்துவநோக்கில் தமிழிலக்கியம், மெய்யப்பன் பதிப்பகம், 2005.

2. கிருஷ்ணதத்தபட், சமணம், காந்திய இலக்கியச் சங்கம், 1989.

இவ்விரு நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் விரிவாக்கம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard