New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 16. சமய நோக்கில் கற்பு நெறி முனைவர் சே. கணேசன்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
16. சமய நோக்கில் கற்பு நெறி முனைவர் சே. கணேசன்
Permalink  
 


16. சமய நோக்கில் கற்பு நெறி

 

முனைவர் சே. கணேசன்

 

மணிமேகலை பௌத்த சமயத்தின் உயரிய கோட்பாடுகளை எல்லாம் தெளிவாக விளக்கும் ஒப்பற்ற இலக்கியமாகும். அன்பு, அறம், கற்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு காப்பியம் அமைகிறது. வன்முறைகளை நீக்கி மென்முறைகளினால் உலகம் வாழ வேண்டும் என்ற புத்த சமயக் கொள்கைகளை வலியுறுத்துகிறது. காப்பியத்தில் சமயத்தின் தாக்கம் தலை தூக்கினாலும் அறச்செயல்களையும் கற்பு நெறியையும் மேம்படுத்துகிறது. மணிமேகலை, ஆதிரை, விசாகை, காருக மடந்தை, பீலிவளை போன்ற மகளிர் கற்பின் மேன்மையால் இயற்கையையும் வென்றனர். சிலப்பதிகாரத்தில் கண்ணகியைக் கற்புத் தெய்வமாகப் படைத்து உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் எனப் பேச வைத்தவர் இளங்கோ. அதன் தொடர்ச்சியான மணிமேகலையிலும் கற்பே மேம்பட்டதாகக் கொண்டு காப்பியத்தைப் படைத்தார் சாத்தனார். இவ்வகையில் அமையும் மணிமேகலையில் சமய நோக்கில் கற்பு நெறி என்னும் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது.

 

பத்தினிப் பெண்டிர்

 

மணிமேகலையில் பத்தினிப் பெண்டிர் இலக்கணம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. காதலன் இறந்தவுடன் பத்தினிப் பெண் இறந்து விடுகிறாள். தானே உயிர் போய் விட்டால் அவளுக்குக் கவலையில்லை. பாண்டியன் கண்ணகியின் உரை கோட்டு அதிர்ச்சியில் இறந்ததும் பாண்டிமாதேவியும் அக்கணமே உயிர் நீத்தாளே, அது ஒரு கற்பு நெறி. நெருப்பு பத்தினிப் பெண்டிருக்கு நீர்ப் பொய்கையாயிற்று. அதனால் தான் ஆதிரை தன் கணவன் கடலுள் மூழ்கினான் எனக் கேட்டதும் தீ மூட்டி அதில் குதித்தாள்.

தன் கற்பை வெளிப்படுத்த கண்ணகி மதுரைக்குத் தீ மூட்டினாள். சமய நோக்கிலும் பொது நோக்கிலும் எழுந்த இலக்கியங்களில் வரும் பத்தினிப் பெண்டிர்கள் எல்லாரும் இவ்வாறே இறுதி முடிவைத் தேடிக் கொண்டனர்.

 

கற்பு நெறி

 

மகளிர் தம் கற்பு என்னும் உயரிய நெறியினால் சமுதாயத்தில் மாண்புடையவராகக் கருதப்பட்டனர். அதுவே கணவனது பெருமைக்கும் உற்ற துணையாகக் கருதப்பட்டது. இளங்கோவடிகள் கற்பைக் கொழுந்து என்கிறார். வள்ளுவர் கற்பைத் திண்மை என்கிறார். அக இலக்கியங்கள் கற்பை நெருப்பு என்கிறது.

பெண் தன்மையின் தலைமைப் பண்பு அவரவர்க்கு ஏற்ற நிலையில் அமையும். பெண்ணாகப் பிறந்தவள் ஆணின் துணையைப் பெற்றவள் ஆவாள். மணிமேகலை இல்லறத்தைத் துறந்த கற்பரசி. ஆதிரை இல்லறத்தில் மேம்பட்ட கற்பரசி. இங்கு துணை மாந்தராக ஆதிரை படைக்கப்பட்டாலும் குணத்தில் அவள் தலைமைப் பண்புடையவள். அவள் கணவன் கணிகையரிடத்தில் பெரும் பொருள் இழந்தும் அவனை வெறுக்கவில்லை.

சாதுவன் என்போன் தகவலன் ஆகி
அணியுரை தன்னை யகன்றனன் போயிக்
கணிகை யொருத்திக் கைத்தூண் நல்க
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டிக்
காண மிலி யெனக் கையுதிh;க் கோடலும் (மணி. ஆதிரை 310)

சாதுவன் கணிகையரிடத்தில் பெரும் பொருளை இழந்தான். அவனைப் பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி அனுப்பினாள். மீண்டும் கப்பலில் வணிகருடன் திரவியம் தேடச் செல்கிறான். கடலில் மரக்கலம் உடைந்துவிடுகிறது. மரக்கலப் பலகை ஒன்றில் மிதந்து நாகர்கள் வாழ்கின்ற பகுதியில் சேர்ந்தான்.



மரக்கலத்தில் தப்பித்த சிலர் ஆதிரையிடம் சாதுவன் இறந்து விட்டான் எனக் கூறினர். ஆதிரை மனம் ஒடிந்து விடுகிறாள். தன் கணவன் சென்ற உலகத்திற்கே தானும் செல்லத் துடிக்கிறாள். ஊர் மக்களை அழைத்தாள்.

ஊரீரேயோ ஒள்ளழல் ஈமம்
தாரீரோ எனச் சாற்றினள் (மணி. ஆதிரை 2223)

விறகுகளை அடுக்கித் தீக்குள் புகுந்தாள். தானே குழி தோண்டி அதில் படுத்தாள்.

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்

என்ற சிலம்பு வரி ஆதிரைக்குப் பொருந்துகிறது. அவள் நெருப்புக்குள் புகுந்ததும் அவள் பூசிய சந்தனம், சூடிய மாலை, அசைந்த கூந்தல் எரியவில்லை.

திருவின் செய்யோள் போன்றினிதிருப்ப

திருமகள் செந்தாமரை மலரில் வீற்றிருப்பது போன்று காட்சி தந்தாள். ஈமத்தீச் சுடவில்லை. ‘தீயும் கொல்லாத தீவினை யாட்டியேன்‘ எனப் புலம்புகின்றாள் அப்போது அசரீரி ஒன்று, ஆதிரை கேளாய்! உன் கணவன்

நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கம் சார்ந்தனன் பல்லாண்டிரான் (மணி. ஆதிரை 1516)

எனக் கூறக் கேட்கிறாள். பொய்கையில் நீராடியவள் போலப் புதுப் பொலிவுடன் திகழ்ந்தாள். தன் கணவன் வந்ததும் விருந்தோம்பலை மேற்கொண்டாள்.

ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்
பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென (மணி. ஆதிரை 128129)

என்று காயசண்டிகை ஆதிரையின் விருந்தோம்பல் பண்பினைக் கூறி முதல் பிச்சையை ஆதிரையின் கையில் எடுப்பாயாக என்று மணிமேகலையிடம் கூறியதும் மாசற்ற கற்புத் தெய்வமான ஆதிரையின் வீட்டில் சென்று மணிமேகலை ‘புனையா ஓவியம்’ போல் நின்றாள். பத்தினி ஆதிரையும் அவளை வலம் வந்து முறைப்படி வணங்கி அமுத சுரபி நிரம்ப அன்னமிட்டாள்.

அமுத சுரபியின் அகன் சுரை நிறைதரப்
பாரகம் அடங்கலும் பசிப் பிணி அறுகென
ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென (மணி. ஆதிரை 133136)

இவ்வுலக உயிர்கள் எல்லாவற்றின் பசியும் இவ்வுணவிலிருந்து நீங்குக என்று கூறி உணவிட்டாள். இக்கற்புக்கரசியின் மேலான பண்பினை ஆராய்ந்தால் வியக்கும். யாசித்து வந்தவர்களுக்குப் பசிப்பிணி போக்கியவர்கட்கு வீடுபேறு உறுதி. மேலும் பெண்மைக்கே உரிய அடக்கம், பொறுமை, இரக்க குணம், தன் கணவனைத் தவிர வேறு ஒருவரை நினைத்துக் கூடப் பார்க்காத தூய உள்ளம் ஆதிரையிடம் நிறைந்திருந்தன.

சாதுவன் தீய ஒழுக்கத்தில் கணிகையரிடம் பெரும் பொருளை இழந்து மீண்டும் திரும்ப வந்த போது கணவன் மேல் இரக்கம் கொண்டாள். கணவனோடு புண்ணியங்கள் செய்தாள்.

சைவ அடியாரான காரைக்கால் அம்மையார் தன் கணவனுக்குப் பயன்படாத அழகு வீண் எனக் கருதி இறைவனிடம் தனக்குப் பேயுருவம் கேட்டுப் பெற்றார். இது சைவ சமயக் கற்பு நெறிக்குச் சான்று.

சிலம்பில் வரும் கண்ணகி தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்திருந்தாலும் அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கருதினாள். அவன் இறப்பின் செய்தி கேட்டுப் புயல் போன்று சென்றாள். தன் கணவனின் பிரிவை நினைத்து உள்ளம் உருகினாள். பதினான்கு நாட்கள் கழித்துத் தன் கணவனோடு மேலுலகம் சென்றாள்.

மாதவியும் கோவலனின் பிரிவைத் தாங்க முடியாதவளானாள். இல்லறம் துறந்தாள் துறவு பூண்டாள். 

உணவில் பகுத்துணவு, பாத்தூண் மிகச் சிறப்புடையதாகும். பிச்சையிட்டாள் பத்தினிப் பெண் ஆதிரை. பெற்றவள் மாபத்தினி மேகலை. அவள் இட்ட உணவு அமுத சுரபியில் விழுந்ததும் அது பெருந்திரளாகப் பெருகியது. புத்த சமயம் பசிப்பிணி போக்க விழையும் ஒப்பற்ற அறநெறிச் சமயமாகும்.



மணிமேகலை விசும்பின் வழியே சென்று வஞ்சி நன்புறத்தே இறங்கிக் கண்ணகி கோட்டம் புகுந்தாள். அங்கே கற்புக் கடன் பூண்ட அன்புத் தாய் கண்ணகி, கொடை வள்ளல் கோவலன் இருவரும் தெய்வச் சிலையாக நின்றனர். அவர்களை வணங்கிக் குணம் பல ஏத்தி நின்றாள் மணிமேகலை. 

‘தாயே தாங்கள் உடன் இறத்தலும் கைம்மை நோன்பும் விடுத்தீர். முத்திக்குரிய தவ நெறியும் பேணாது கற்புக் கடமை ஒன்றையே பேணிய தென்னே! என்று அழுது நின்றாள் மேகலை.

ஒப்பற்ற பத்தினிக் கடவுளான கண்ணகி பேசினாள். எனது கணவனுக்கு உற்ற இடுக்கண் பொறாது மதுரையை எரித்துப் பாழ்படுத்தினேன். என்றாள் கண்ணகி. கணவனுக்குத் துன்பம் இழைத்தவர்களைக் கற்புடைய மாதர் விட்டு வைக்கவில்லை.

நறுமணக் குழவியே இந்தக் கயிலை மூதூரில் பல சமயவாதிகள் உள்ளனர். அவரவர் சமயப் பொருள்களைக் கேட்டு உணர்ந்து அவற்றை விலக்கிப் புத்த ஆகம வழியே பின்பற்றக் கடவாய். நீ வேற்றுருக் கொண்டு செல்க‘ என ஏவினாள் கண்ணகி தெய்வம்.

மணிமேகலையும் ஒரு மாதவன் வடிவில் தாங்கி வழியே தேவாலயம், வேதிகை, சாலை, முனிவர் ஆகியோர்களைச் சந்தித்தாள். பின்பு மாதவக் கோலத்துடன் புத்தர் தவப்பள்ளியை அடைந்து அறவண அடிகளை வணங்கினாள். அடிகள் புத்த தத்துவத்தை விளக்கினார்.

 

புத்த நெறி

 

ஆசையே துன்பத்திற்கு அடிப்படை. அவாவை அறுத்தால் வீடு பேறு கிடைக்கும் என்றார். அவ்வாறே மணிமேகலையும் ஆசையை நீக்கி, தவத்திறம் பூண்டு புத்தரை வணங்கி வீடு பெற்றாள்.

 

சமய நோக்கில் கற்பு நெறி

 

நல்ல குடியில் பிறந்தவர்களுக்குக் கன்னிப் பருவத்திலேயே கற்பு காவலாக அமைந்துவிடும். இல்லறத்தில் நல்லறம் செய்து கற்புக்கு வேலி அமைத்துக் கொண்டாள் ஆதிரை. அவள் தன்னைக் கொண்டவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என வாழ்ந்தாள்.

தெய்வம் தொழாள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்ற குறள் ஆதிரைக்குப் பொருந்திற்று. கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர் என்பது சமயங்களின் கொள்கை.



காவிரிக் கரையில் பார்ப்பினி மாருதியைச் சுகந்தன் என்ற சிறுவன் ‘நீ வா‘ என்று காமக் குறிப்புடன் அழைத்தான். அவள் கலங்கினாள்.

மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகார்
புக்கேன் பிறன் உளம் புரிநூல் மார்பன்
முத்தீப் பேணும் முறை எனக்கு இல் 

என்று கலங்கினாள். நான் கற்புடையவளாக இருந்திருந்தால் என்னைப் பார்த்தவனுக்குக் காமக்குறிப்பே தோன்றியிருக்கக் கூடாது என உள்ளம் பதைத்தாள். கற்பின் மேன்மையை இங்கு நினைத்தாலே தமிழன் என்ற பெருமை நமக்குக் கிடைக்கும்.

கற்புக்கரசி கண்ணகி மதுரை மாநகர மக்களைப் பார்த்து நீதி கேட்டு அழுதாள். இயற்கையும் அழுது மறைந்தது.

 

விசாகை

 

விசாகை என்ற கற்பரசி தன் மாமன் மகனோடு இல்லற வாழ்க்கை வாழாமலே இருவரும் சேர்ந்து அறம் செய்தனர்.

 

காருக மடந்தை

 

நாட்டிலே பஞ்சம் இருந்தது. காருக மடந்தை என்பாளைக் காப்பாற்ற இயலாமல் கணவன் கைவிட்டான். அப்போது அவள் கர்ப்பிணி. கணவன் சென்ற பின் அவளுக்குக் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை ஒரு அந்தணாளன் எடுத்து வளர்த்தான். பின்னர்க் காருக மடந்தை உடலை வளர்க்க உடலை விற்கும் இழி தொழிலை மேற்கொண்டாள். அந்தணாளன் இல்லறத்தில் வளர்த்த அவளின் மகனும் இவள் தன் தாய் என்று அறியாமல் அவளைக் கூடினான். பின்னர்ச் செய்தியறிந்து மாளாத் துயரில் இருவரும் மாண்டனர்.

 

பீலிவளை

 

மணிமேகலையில் வரும் பீலிவளை நாகலோகத்து மன்னன் மகள். அவள் சோழ மன்னனை மணந்து கற்பு நெறியோடு புத்த பீடிகையைக் கண்டு தொழுது கற்பு நெறியோடு வாழ்ந்தாள். 

மணிமேகலைக் காப்பியம் சமயச் செய்திகளைக் கொட்டி வைத்த காப்பியம் அன்று. மனித வாழ்வுக்குச் சிந்திக்கத்தக்க உயர்ந்த ஒழுகலாறுகள் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. தம் கொள்கையில் எவ்வளவு இடர் வரினும் விட்டுக் கொடுக்காத தன்மையுடன் வாழ வேண்டும். மணிமேகலையை இல்லறம் இழுத்தது. ஆனால் அதற்கு அவள் உடன்படவில்லை. ஆடற் கணிகையர் குலத்திலே பிறந்தவள் என்றாலும் அவள் குலத்தொழிலைத் தீத்தொழில் என உணர்ந்தாள். அதனால் தான் கணிகை மரபில் பிறந்த பெண்ணின் பெயரில் ஓர் இலக்கியம் தோன்றியதே அக்காலத்தில் எழுந்த ஒரு புரட்சி எனலாம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard