New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 14. வைணவம் முனைவர் சபா. அருணாசலம்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
14. வைணவம் முனைவர் சபா. அருணாசலம்
Permalink  
 


14. வைணவம்  -முனைவர் சபா. அருணாசலம்

 

இரட்டைக்காப்பியங்கள் என்று போற்றப்பெறும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றுள் சிலப்பதிகாரத் தலைவன் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகன் மணிமேகலை . கோவலன் கொலையுண்டதும் மாதவி துறவு பூண்டு மணிமேகலையையும் துறவு பூணச் செய்கிறாள். சீத்தலைச்சாத்தனார் இக்காப்பியத்திற்கு வைத்த பெயர் ‘மணிமேகலை துறவு’ எனக் காப்பியப் பதிகம் சுட்டுகிறது. மணிமேகலையின் சமயவாழ்க்கை விவரிப்பதே மணிமேகலைக்காப்பியம்.

தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் 
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கடலவாணிகன் சாத்தன்
மாஙண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு
ஆறைப் பாட்டினுள் அறிய வைத்தனன்
என்பது மணிமேகலைப் பதிகம்

மணிமேகலை பௌத்த சமயம் பற்றி அறவண அடிகளிடம் அறிவதன் முன் காஞ்சி நகரில் மற்ற சமயங்களின் உண்மைகளையும் அந்தந்தச் சமயத்தார் வாயிலாக அறிவதாகச் சாத்தனார் காட்டுகிறார். முதன்முதல் தமிழகத்தில் மக்கள் தழுவிய பல்வேறு சமயம் பற்றிய செய்திகள் மணிமேகலையில் தான் தொகுத்துத் தரப்படுகின்றன. இப்பகுதியில் “ஐவகைச் சமயமும் அறிந்தனன்” எனச் சாத்தனார் கூறினார். 

அறுவகைச் சமயம் என்ற வழக்கில் பௌத்தம் தவிர ஏனைய சமய உண்மைகளை அவன் கேட்பதாகச் சாத்தனார் காட்டுகிறார்.

1. அளவை முதல் வேதம்- வைதிக வாதம்

2. ஆசிவக வாதம், நிகண்ட வாதம்

3. சாங்கியம்

4 வைசேடிகம்

5. பூதவாதம்

என ஐவகைக் கொள்கைகளை அவள் கேட்பதாக ஒரு சாரமும்,

1. உலகாயதம்- பூதவாதம்

2. சாங்கியம்

3. நையாநிகம் (அளவைவாதம், சைவவாதம், வைணவவாதம்)

4. வைசேடிகம்

5. மீமாஞ்சகம்-பிரமவாதம்

6. பௌத்தம்

இவை அறுவகைச் சமயம் என்றும், இவற்றுள் பௌத்தம் தவிர ஏனையவற்றைக் காஞ்சியில் மணிமேகலை கேட்டறிந்தாள் என்றும் பின்னர் அறவண அடிகளிடம் பௌத்தம் பற்றிக் கேட்டறிந்து அதுவே சிறப்பெனத் தவத்திறம் பூண்டு பவத்திறம் அறுகெனப் பாவை (மணிமேகலை) நோற்றாள் என்று சாத்தனார் பாடுகிறார் என்று ஒரு சாரார் கூறுவார்.



அறுவகைச் சமயம் ஆதிசங்கரர் காலத்தில் தோன்றியது என்பது. அது வைதிகவாத வழிபாட்டின் காணாபத்யம், கௌமாரம், சாக்தம் முதலியவற்றைக் குறிக்கும். ஆனால் அதற்கு முன்பே தமிழகத்தில் அறுவகைச் சமயம் என்ற பாகுபாடு இருந்த உண்மையை மணிமேகலை காட்டுகிறது. பின்னயை அறுசமயப் பாகுபாட்டில் பாஞ்சராத்ரம் என்ற பெயரால் வைணவம் குறிக்கப் பெறுகிறது. பாஞ்சராத்ர மதம் என்ற வைணவத்தைக் குறிப்பிவோர், பின்னர் பாஞ்சராத்ர ஆகமம், வைகாசன ஆகமம் என இருவகையில் வைணவ வழிபாட்டைக் குறிக்கின்றனர்.

வைணவம்-தமிழ்ச் சொல்லே. விஷ்ணு - வைஷ்ணவம் - வைணவம் என வந்ததாகப் பலர் கருதுகின்றனர். அதன்பின் பலர் விட்ணு, விட்டுணு என்று தமிழாக்கியும் எழுதுவார் உண்டு.

சிவன், திருமால் இருவருக்கும் தொடக்கத்தில் நிற அடிப்படையிலேயே பெயர்கள் அமைந்தன.

சிவப்பு நிறமுடையவன் - சிவன் - கருப்பு நிறமுடையவன், கார்மேக வண்ணன், விண் நிறமுடையவன் -விண்ணவன்.

சிவம் என்பதிலிருந்து சைவம் தோன்றியது போல், விண்ணவன் என்ற பெயரிலிருந்து வைணவம் தோன்றியது , பெருமாள் கோவிலுக்கு விண்ணகரம் என்று பெயர் வழங்குவதும் நோக்கத்தக்கது.

மணிமேகலையில் வைணவசமயம், பற்றிய செய்தி இரண்டே வரிகளில் அமைந்துள்ளது.

காதல் கொண்டு கடல் வண்ணன் புராணம் ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் என வைணவ வாதி கூறுவதாக அமைந்துள்ளது. கடல் வண்ணன்- கருநிறமுடையவன்- விண்நிறத்தவன் எனத் திருமால் பற்றியும் நாரணன் என அவனது பெயரும் அவன் காக்கும் கடவுள் என்ற குறிப்பும் காணப்படுகின்றன. கொள்கையை விடத் திருமால் பற்றிய புராணக் கதைகளே அன்ற பேசப்பட்டமையைச் சாத்தனார் விளக்குகிறார். சைவவாதி கூற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் சைவம் அளவுக்கு வைணவ தத்துவம் அன்று வளர்ச்சி அடையவில்லை என்ற உண்மை புரியும்.

இறைவன் ஈசன் என 
நின்ற சைவவாதி நேர்படுதலும்
பரசு நின் தெய்வம் எப்படித்து என்ன 
இரு சுடரோடு இயமானன் ஐம்பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்
கட்டி நிற்போனும் கலை உருகினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோறும் 
தன்னில் வேறு தான் ஒன்று இல்லோனும்
அன்னோன் இறைவன் ஆகும்.

எனச் சிவபெருமானைப் பற்றிச் சைவவாதி கூறுகின்றான். திருமாலுக்குக் காப்பு ஒன்றுமே கூற உயிர்களைப் படைத்து இயக்கிக் காத்து ஒடுக்கி நிற்பவன், தனக்குவமை இல்லாதவன் எனக் கூறப்படும் போது சைவசமயத் தத்துவக் கருத்துக்கள் நன்கு வளர்ச்சியுற்றுப் பரவியிருந்த நிலையை அறியலாம். திருமால் பற்றிப் புராணக் கதைகளை உடையவன் என்பதே முதன்மையாகக் கூறப்படுகிறது.



மணிமேகலை காலத்திற்கு முன் சங்க இலக்கியத்தில் வைணவம் பற்றித் திருமால் பற்றி இடம்பெறுள்ள கருத்துக்களை நோக்கினால் ‘புராணக் கதைகள்’ என மணிமேகலையில் கூறப்பட்டுள்ள உண்மையை அறியலாம்.

பரிபாடல் கடவுள் வாழ்த்துப்பாடலே திருமால் பற்றிய பாடலாக அமைந்துள்ளது.

கள்ளணி பசுந்துளவின் அவை
புள்ளணி பொலங்கொடி யவை
வள்ளணி வளை நாஞ்சில் அவை
சலம்புரி தண்டெந்தினவை
வலம்புரி வய நேமியவை

எனத் திருமால் துளசி மாலை, கருடக்கொடி, சங்கு சக்கரம் வில் ஏந்தியவர் என்ற வருணனை இடம் பெறுகிறது.

சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் திருமால் பற்றிய கதைகள் பேசப்படுகின்றன.

கதிர் திகிரியான் மறைத்த கடலவண்ணன் இடத்துளான்
மதிபுரையும் நறுமேனித் தம்முளோன் வலத்துளான்

இப்பகுதியில் மகாபாரதத்தில் கண்ணன் சூரியனைச் சக்கரத்தால் மறைத்த கதை கூறப்படுகிறது. 

கடல் வண்ணன் என இளங்கோ குறிப்பிடுவதையே சாத்தனாரும் கூறுகிறார். நப்பினை நடுவாகக் கண்ணன் இடப்புறமும் பலராமன் வலப்புறமும் நின்றமையும், பலராமன் வழிபாடு இருந்தமையும் கூறப்படுகிறது.

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் 
கடல்வண்ணன் பண்டொருஙன் கடல் வயிறு கலக்கினையே

இங்கும் கடல்வண்ணன் என்றே திருமால் குறிப்பிடப் பெறுகிறார். புராணக் கதையும் உண்டு.

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடிய
தாவிய சேவடி செப்பத் தம்பியுடன் கான்புகுந்து
சோவரணம் போய் மடியத் தொல்லிலங்கை கட்டடழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே 
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே 

இப்பகுதியில் இளங்கோ வாமன அவதாரம், இராம அவதாரம் புராணக் கதைகளைக் கூறுகிறார்.

மடந்தாமும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் 
படர்ந்து சூரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது 
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னாத நாவென்ன நாவே!

இப்பகுதியில் கண்ணன் அவதாரம் மகாபாரதக் கதை பேசப்படுகிறது. நாராயணா என்றும் பெயர் முதலில் இடம்பெறுகிறது. மணிமேகலையில் இப்பெயர் இடம்பெறும்.



மணிமேகலையிலும் இறைக்கோட்டம், அறக்கோட்டம் ஆக்கிய காதையில் திருமாலின் வாமன அவதாரம், திருமால் பலராமன் வழிபாடு ஆகிய செய்திகள் இடம் பெறுகின்றன.

நெடியோன் குறருளுருவாகி நிமிர்ந்துதன் 
அடியிற் படியை அடக்கிய அந்நாள்
நீரிற் பெய்த மூரிவார் சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்

எனும் பகுதியில் வாமன அவதாரச் செய்தி இடம் பெறுகிறது.

பாசியை செறிந்த பைங்காற் கழையொடு
வால் வீச் செறிந்த மராஅங் கண்டு
நெடியோன் முன்னனோடு நின்றனன் ஆமெனத்
தொடிசேர் செய்கையில் தொழுது நின்றேத்தியும் 

எனும் பகுதியில் பச்சை மூங்கில் கண்ணனாகவும் மராமரம் (வெண்நிறம்) பலராமனாகவும் தோன்றக் கண்டு மன்னன் வணங்குவதாகச் சாத்தனார் பாடுகிறார்.

மணிமேகலை காலம் வரை வைணவம் கதைகள் பேசுவதாகவே இருந்தது, தத்துவமாக வளரவில்லை என்பதை உணரலாம். ஆழ்வார்கள், ராமானுஜர் காலத்திலே தத்துவங்கள் உருவாகின.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard