New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 13. பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை எஸ். கவிதா


Guru

Status: Offline
Posts: 24769
Date:
13. பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை எஸ். கவிதா
Permalink  
 


13. பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை  -எஸ். கவிதா

 

பெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாசிப்பு எனப்படும். ஆண்படைப்பில் எழுப்பப்பட்டுள்ள ஆண்சார்பு அரசியலை இனம் காட்டுவதாக இவ்வாசிப்பு அமையும்.ஆனால், எழுதப்பெற்ற ஒரு இலக்கியத்தில் ஆண் சார்பு கருத்துகளே அதிகம் இருக்கும் என்பது உறுதி. சில ஆண் படைப்பாளர்கள், தங்களுடைய ஆண் பால் சார்ந்த படைப்பு அரசியலை அப்படியே வெளிப்படுத்த முனைகின்றனர். சிலர் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர். அதாவது ஆணாதிக்க அரசியலை தெளிவாக வெளிப்படுத்திடாமல் பொதுமைப்படுத்தி வெளியிடுவதுபோல ஆண்சார்புக்கு அவர்கள் இட்டுச் சென்றுவிடக் கூடும். இன்னும் சிலர் தன் படைப்பில் பெண்பாலிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல படைத்தளிக்கலாம். ஆனாலும், இம்முக்கியத்துவத்திற்குள் ஆண்சார்புத் தன்மை ஒளிந்துக் கோலோச்சிக் கொண்டு இருக்கும்.

ஒருபடைப்பின் உண்மைத் தன்மை என்பதை நிலைநாட்ட அதனை ஒவ்வொரு கோணத்திலும் ஆராய வேண்டும். பெண்ணிய நோக்கில், பெண் மனத்தின் அடிப்படையில் ஒரு ஆண் படைப்பினை உணர்கின்ற போது பெண்ணுக்கு எதிராகப் புனைந்துள்ள பல கருத்துகள் அப்படைப்பில் இருப்பதை இனம் காண முடியும். இவ்வகையில் ஆண் படைப்புகளில் உள்ள பெண்ணுக்கு எதிரான கருத்துக்களை இனம் காட்டுவது பெண்ணிய வாசிப்பு ஆகின்றது.

கேட் மில்லட் என்ற பெண்ணிய அறிஞர் , “ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆளுமை மிக்கதாக இருக்கும் ஒரு பாலினம் தனக்குக் கீழ்ப்பட்ட பாலினத்தின் மீது தன்னுடைய வலிமையை நிலைநாட்டிக் கொள்ள, அல்லது தன் வலிமையை அதன் மீதுகாட்ட முயன்று கொண்டே இருக்கும் ” என்று ஆதிக்க அரசியலின் இயல்பை எடுத்துரைக்கிறார். இக்கருத்தின் அடிப்படையில் காணுகின்ற போது ஆண் ஆதிக்கச் சூழலில் படைக்கப்படும் படைப்பு ஆணாதிக்கத்தை வலியுறுத்துவதாகவே இருக்கும் என்பது உறுதியாகின்றது. அவ்வாதிக்கச் சூழல் பெண்பாலினை அடக்கி வைக்க முயற்சிப்பதாகவே இருக்கும்.

மணிமேகலை என்ற காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் எவ்வகைப்பட்ட ஆதிக்கம் புறச் சூழலில், படைப்புச் சூழலில் நிலவியது என்பதை முதலில் ஆராய வேண்டும். அதாவது ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்பன அனைத்தும் ஆணாலேயே எழுதப் பெற்றுள்ளன. மேலும் கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம், சீறாப்புராணம், தேம்பாவணி, பாஞ்சாலி சபதம், மனிததெய்வம் காந்தி காதை, மாங்கனி போன்ற பல காப்பிய முயற்சிகள் அனைத்தும் ஆண்களாலேயே படைக்கப் பெற்றுள்ளன. பெண் எழுதிய காப்பியம் என்ற அளவில் இனம் காணக் கூடிய ஒன்றே ஒன்று அசலாம்பிகை அம்மையார் எழுதிய காந்திபுராணம் மட்டுமே. காந்தி புராணமும், காந்தி என்ற ஆண்தலைவரையே கதைத்தலைமையாகக் கொண்டுள்ளது. எனவே இதுவும் ஆண் ஆளுமையைச் சிறப்பிக்கும் போக்கினது என்பதில் ஐயமில்லை.



இத்தகைய சூழலில் காப்பியம் என்ற வடிவம் ஆண்களுக்கு உரிய படைப்பு வடிவமாகவே பெரும்பாலும் தமிழ்ப்பகுதியில் விளங்குவது தெரியவருகின்றது. எனவே காப்பிய வெளி என்பது பெண்களுக்கு திறக்காத இருப்புக் கதவாகவே அமைந்துவிட்டதை உணரமுடிகின்றது. மணிமேகலை சிலப்பதிகார காப்பியத்தின் தொடர்வாய் படைக்கப் பெற்றது.

“தெரிவுறு வகையால் செந்தமிழி யற்கையில்
ஆடிநன்னிழலின் நீடிருங் குன்றம்
காட்டுவார்போல் கருத்து வெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்”

என்ற நூற்கட்டுரைப் பகுதி இதனைத் தெளிவு படுத்தும். சிலப்பதிகாரம் எழுவதற்குக் காரணமாக சூழலும் இங்குக் கவனிக்கத்தக்கது. குன்றக்குறவர் பத்தினிப் பெண் ஒருத்தி விண்ணகம் ஏறிச் சென்றதைக் கண்ட அதிசயக் காட்சியை இளங்கோவடிகளிடம் கூறுகின்றனர். அப்போது உடனிருந்த சாத்தனார் “யான் அறிகுவன்அது பட்டது என்று உரைப்போன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றை எடுத்துரைக்கின்றார். இதனைக் கேட்ட இளங்கோவடிகள் “நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறி சிலப்பதிகாரத்தைப் படைக்கின்றார். இது முவேந்தர்க்கு உரியது என்பதன் காரணமாக “நீங்களே படைக்கலாம்” என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார். இதன்காரணமாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் படைக்க முயலுகின்றார் என்ற படைப்புச் சூழல் இங்குக் கவனிக்கத்தக்கது. இவற்றின்முலம் ஆண் படைப்புச் சூழலில் சிலப்பதிகாரம் உருவாகியது என்பதையும் அதன் தொடர்வாக தண்டமிழ் ஆசான் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையைப் படைத்தார் என்பதும் தெரியவருகிறது.

மணிமேகலையின் பதிகப்பகுதியில் இடம்பெறும்

” இளங்கோவேந்தன் அருளிக் கேட்ப
வளம் கெழு கூலவணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறுஐம் பாட்டினுள் அறியவைத்தனன் என்”

என்ற அடிகளின் வழியாக இளங்கோவடிகள் கேட்க சாத்தனார் மணிமேகலை துறவு பெற்ற கதையினை வடித்த செய்தி தெரியவருகின்றது. இதன்வழி இரட்டைக் காப்பியங்கள் இரண்டும் ஆண் சொல்ல, ஆண் கேட்கும் தன்மையில் செய்யப் பெற்ற ஆண் வயப்பட்ட சூழலைப் பெற்றுள்ளன என்பது உறுதி.

எனவே காப்பியம் என்ற வகைமையை ஆக்குவதிலும், இரட்டைக் காப்பியங்களான சிலம்பும், மணிமேகலையும் ஆண்கள் அருகிருக்க படைக்கப்பெற்ற காப்பியம் என்பதை எண்ணும் போதும் ஆண் சூழலில்தான் மணிமேகலை படைக்கப் பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.

மணிமேகலை யாக்கப் பெற்ற காலத்தில் அரசமுறைமை என்பது ஆண் வயப்பட்டது என்பதில் கருத்து மாறுபாடு இருக்க முடியாது. ஏனெனில் தூங்கெயில் எறித்த தொடிதோட் செம்பியன் என்ற அரசன் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழாத் தொடங்க ஏற்பாடு செய்ததாக ஒரு குறிப்பு மணிமேகலையில் இடம் பெறுகின்றது. எனவே அரசாட்சியும் ஆண்பாலிடத்தில் இருந்தது என்பதும் இங்கு உணரத்தக்கது. இவ்வாறு ஆண் வயப்பட்ட அரசியல் சூழ்நிலையில் படைக்கப்படும் இலக்கியம் ஆண்வயப்பட்ட செய்திகளையே கொண்டிருக்க முடியும்.



மணிமேகலை என்ற பெண்ணைக் கதைத்தலைவியாகக் கொண்ட காப்பியம், கணிகை ஒருத்தியின் பெண்ணைத் துறவி என்ற உயர் நிலைக்கு உயர்த்திய காப்பியம், பெண்களும் துறவேற்கலாம் என்பதன் அடையாளமாக விளங்கும் காப்பியம் போன்ற கருத்துகள் மணிமேகலையைப் பற்றிக் கட்டப் பெற்றுள்ள கருத்துகள் ஆகும்.

“பேரழகுச் செல்வி மணிமேகலையை ஒரு பெண்ணைப் பேரறிவுச் செல்வியாய்ப் பிறக்க வைத்து, பேரறச் செல்வியாய் நடமாடவிட்டு, மாதவச் செல்வியாய் மிளிரச் செய்து, பொதுநலச் செல்வியாய், சேவைச் செல்வியாய், தியாகத்திலகமாய்த் திகழச் செய்து காப்பியத் தலைமகளாக்கி, அக்காப்பியத் தலைப்புக்குரியவளாகவும் உயர்த்திய பெண்மை போற்றும் பெருங்காப்பியம் ”

“அவள் (மணிமேகலை) காப்பியத்தின் கற்பனைத் தலைவியாக மட்டும் அல்லாமல், நாட்டு வரலாற்றின் பெருமைக்கு உரிய ஒரு பெண் பிறவியாகவும் பலருடைய உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டாள். அழகும், இளமையும், அறிவும், பண்பும் நிரம்பிய அவள், அரசிளங்குமாரனுடைய காதலைக் கைவிட்டுப் பௌத்தத் துறவியான சிறப்பு ஒருபுறம். அதைவிடப் பெரியது அவள் அருள்நிரம்பிய வாழ்வு நடத்திய சிறப்பு ஆகும்”

மேற்கண்ட கருத்துகள் தமிழ் இலக்கிய வரலாறுகளில் மணிமேகலை பற்றி அறிமுகப்படுத்தும் வரிகள் ஆகும். இவை மிகுத்து உரைக்கின்றன என்பது மணிமேகலையை முழுதும் கற்கப் புகுவோருக்குத் தெரியும்.

மணிமேகலைக் காப்பியம் பெண்ணை மையப்படுத்தி எழுதப் பெற்றக் காப்பியம் என்றாலும் சீத்தலைச் சாத்தனார் காலத்தில் பெண்களுக்கு இருந்த எல்லைகளை விளக்கும் காப்பியம் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும். பெண்களைப் பற்றி எழுதத் துணிந்த காப்பியம் என்று அதனை ஏற்றுக் கொண்டாலும், அது பெண் பாலினரை அடக்கும் ஆண் சார்பு காப்பியம் என்றே நோக்க வேண்டியுள்ளது. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்தே இக்கட்டுரை படைக்கப் பெறுகின்றது. இக்கட்டுரையின் எல்லை கருதி இங்கு மணிமேகலை என்ற பாத்திரம் மட்டுமே கொள்ளப்படுகின்றது. மற்ற பாத்திரங்கள் இதே நோக்கில் நோக்குகின்ற போது இன்னும் இவ்வாய்வு வலுப்பெறும். அதிக கருத்துகள் கொண்டிலங்கும்.

மணிமேகலை பிறந்த செய்தியை சிலப்பதிகாரம் அறிவிக்கின்றது. அவள் வளர்ந்து பௌத்த துறவியாக மாற்றப்படுவதற்கான ஆயத்தநிலையில் இருந்து மணிமேகலை தொடங்குகின்றது. மணிமேகலை யார் என்பதைப் படிப்பவர்க்கும், மணிமேகலைக்கும் உணர்த்தும் முறையில் ஊரலர் உற்றகாதையில் மாதவி சில செய்திகளை எடுத்துரைக்கின்றாள். அதில் தான் பெற்ற மகளைக் கண்ணகியின் மகள் என்று நிறுவ முயற்சிக்கிறாள்.

“மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்” (5557)



என்ற மாதவியின் கூற்று மணிமேகலை தன் மகளாய் இருக்கின்ற நிலை வரை கணிகையாகவே இருக்கக் கூடும். எனவே அவளை மேல்நிலைப்படுத்தும் முயற்சியில் பத்தினித் தன்மை வாய்ந்த குலமகளாய் அறிவிக்கின்ற பெருமுயற்சியை மாதவி செய்கின்றாள். இதனை இவ்வரிகள் எடுத்துரைக்கின்றன. இருப்பினும் மாதவியின் தாய் சித்திராபதி காப்பியத்தின் பல இடங்களில் மணிமேகலையை கணிகையாகவே உலகிற்கு அறிவிக்கிறாள்.

”தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலைமேல்வர” (ஊரலருற்ற காதை 35)

என்று மணிமேகலைப் பாத்திரம் சித்திராபதியின் வாயிலாக அறிமுப்படுத்தப்படும் போதே கணிகையாக காட்டப் பெறுகின்றது.

கன்னிக்காவலும், கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவுறின் காவலும்
நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டீர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்குஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
கருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்
செருக் கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண்தேர் மொழியின் பயன் பலவாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல்
கோன்முறை அன்றோ குமரற்கு” என்றலும் ( உதயகுமரன் அம்பலம் புக்ககாதை 98111)

என்ற பகுதிகள் மணிமேகலை காலத்தில் இருந்த கணிகையர் குலப் பெண்கள் இயல்பை வெளிப்படுத்துவதாக உள்ளன. 

“கொண்டிமகளிர் ” என்ற மரபினள் என மணிமேகலையை அவளின் பாட்டியே உரைக்கும் கீழ்மை அவ்வப்போது காப்பியத்தில் தலை தூக்கச் செய்யப் பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் ஊரார்களும் மணிமேகலை, மாதவி ஆகியோரின் செய்கையை கேலிபேசக் கூடிய சூழலும் காட்டப் பெற்றுள்ளது.

“விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மக்களின்
மணிமேகலை தனை வந்துப் புறம் சுற்றி
அணிஅமை தோற்றத்து அருந்தவப்படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள்” (மலர்வனம் புக்க காதை, 146150)


என்ற பகுதியில் மக்களும் மாதவி கணிகை என்ற நிலையில் திரிந்துவிட்டாள் என்பதற்காக ஏசுவதாக படைக்கப் பெற்றுள்ளது. இவ்வடிகளில் மணிமேகலையைக் காணவந்த மக்களின் இயல்பிற்கு பேடியைக் காணவந்த கூட்டம் ஒப்பு நோக்கப் பெற்றுள்ளது எனின் பேடியை ஒத்து இருந்தனளா மணிமேகலை என்ற கருத்தும் இங்கு ஏற்படுகின்றது. இவ்வகையில் மணிமேகலையை மேல்நிலைப்படுத்தும் முயற்சிக்குச் சரிசமமாக அவளை கீழ்நிலைப்படுத்தும் முயற்சியிலேயே வைத்திருப்பதற்கான முயற்சி மணிமேகலைக் காப்பியத்தில் ஆங்காங்கே நடைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

மாதவி, சித்திராபதி என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும், மாதவி, மணிமேகலை என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும் வைத்துக் கொண்டு இச்சூழலைச் சற்று விரிவாக்கிப் பார்க்க வேண்டி உள்ளது.

சித்திராபதி தன் மகளை கணிகையாக வளர்த்துத் தன்னிலையை உறுதிப்படுத்திக் கொண்டாள். அச்சித்திராபதி தன் பேத்தியையும் இதே வழியில் இட்டுச் சென்று வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிறாள். இதற்காக அரச குமாரனின் உதவியை அவள் நாடுகிறாள். மாதவி தன் மகளை கணிகையாக ஆக்கிவிடாமல் காக்கும் முறைமையில் ஈடுபடுகிறாள். அசோக குமாரன் என்ற இளவரசன் மணிமேகலை மீது மையல் கொள்ளுகின்றான். இவனின் மையல் என்பது கணிகை மீது கொண்ட காம மயக்கமாகவே உள்ளது. இந்த மயக்கத்தை உடையவனோடு மணிமேகலை கற்புடைப் பெண்ணாக வாழமுடியாது. அரசனுக்கு ஆட்பட்டவள் பின்னாளில் அனைத்துத் தரப்பினரின் இச்சைக்கும் ஆட்படவேண்டிய அபாயமும் உள்ளது. இந்நிலையில் மணிமேகலை என்ற பாத்திரத்தை பலர் காண ஆடச் செய்யவும் முடியாமல், கற்புடைப் பெண்ணாக குடும்ப நிலைக்கு இட்டுச் செல்லவும் முடியாமல் இருக்கும் சூழலில் மணிமேகலையைத் துறவியாக்குவதே சரி என்று மாதவியோ அல்லது சாத்தானரோ முடிவு கொள்ளுகின்றனர். இதன் வழி காப்பியம் வளருகின்றது. இப்போது மணிமேகலையைத் துறவியாக்கிவிடுவதற்காகவே மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள் அவள் என்ற குறிப்பு காப்பியத்தில் இடம் பெறச் செய்யப்படுகிறது.

பெண்ணிய நிலையில் சிந்திக்கையில் இங்கு ஒரு கேள்வி எழுகிறது. மாபெரும் பத்தினியின் மகள் மணிமேகலை என்றால் அவளையும் கற்பு வாழ்க்கைப் படுத்தியிருக்கலாமே? என்ற ஐயத்திற்கு விடை இல்லை. கணிகை குலத்தவள் கற்பு வாழ்வு வாழ அக்காலச் சூழலில் இடம் இல்லை. கணிகையைக் காமத்திற்கு உரியவளாகவே சமூகம் கருதியிருக்கிறது. அழகான இளம் பெண் காப்பார் அற்று இருக்கும் சூழலில் அவள் காமப்பொருளாகவே ஆக்கப்படுவாள் என்ற முறையே இன்றுவரைக்கும் நிலவி வருகின்றது. இதே சூழலே மணிமேகலைக்கும் வாய்த்திருக்கின்றது. இதிலிருந்துத் தப்பிக்க ஒரே வழி அவளைத் துறவியாக்குவதே என முடிவு கட்டி அவள் “தீத்திறம் படாஅள்” என்று அளபெடை கொடுத்துப் படைப்பாளன் தன் கருத்தையும் மாதவி கருத்தையும் உடன் படுத்துகிறான்.

மாதவியின் வாயிலாக மணிமேகலை தன் கதை, தன் பெற்றோர் கதை ஆகியனவற்றை அறிந்து கொள்வதாகக் காப்பியத்தின் முன்பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இவற்றோடு மணிமேகலை தன் முற்பிறப்புக் கதையையும் காப்பியப் போக்கில் அறிந்து கொள்ளுகிறாள். மணிமேகலா தெய்வத்தின் உதவியால் இச்செயல்பாடு மணிமேகலைக்குக் கிடைக்கின்றது.

மணிமேகலை முற்பிறவி வரலாறு ஒன்றும் இக்காப்பியத்தில் காட்டப் பெறுகின்றது. அதாவது அவள் முற்பிறவியில் இராகுலன் என்பவனின் மனைவியாக இருந்தாள் என்பது அக்கதையின் சாரமாகும்.

அசோதர நகரத்தை ஒருகாலத்தில் ஆண்ட இரவிவன்மனின் மனைவி அமுதபதி ஆவாள். இவர்கள் இருவருக்கும் பிறந்தவள் இலக்குமி என்பவள் ஆவாள். இவளே பின்னால் மணிமேகலை என்னும் பிறவி எடுக்கிறாள். இவளுடன் பிறந்தவர்கள் தாரை, வீரை ஆகியோர் ஆவர். பின்னாளில் இவர்கள் மாதவியும், சுதமதியுமாகப் பிறக்கின்றனர். அத்திபதி என்னும் அரசனுக்கும், நீலபதி என்பவளுக்கும் பிறந்தவன் இராகுலன் ஆவான். இவன் பின்பிறப்பில் அசோக குமாரன் ஆவான். இவர்கள் இருவரும் இனிது வாழ்ந்திருந்தனர். ஒரு முனிவரை இருவரும் சந்திக்கின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. மணிமேகலையில் இந்நிகழ்ச்சி இருவகைகளில் விவரிக்கப்படுகின்றது.


வகை.1.

பாத்திரம் கொடுத்த காதையில் மணிமேகலா தெய்வம் ஒரு முறையில் இச்சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறுகின்றது.

இலக்குமி தன் கணவனான இராகுலனுடன் ஒரு முறை பூஞ்சோலை ஒன்றில் மகிழ்ந்து இருந்தாள். இவர்கள் இருவருக்குள் ஊடல் தோன்றியது. அவ்வூடலில் தோற்ற இராகுலன் இவளை வீழ்ந்து வணங்கினான். அப்போது சாது சக்கரன் என்ற முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்டதும் இலக்குமி மயங்கி உடல் நடுக்கமுற்று அவரை வணங்கினாள். இவள் வணங்கியதைக் கண்ட இராகுலன் கோபமுற்று, ”ஏன் இவரை வணங்கினாய்” என்று மீளவும் கோபமுற்றான்.

இவனின் கோபத்தை அடக்கினாள் இலக்குமி. பின் இருவரும் வணங்கி அம்முனிவர் மகிழும் வண்ணம் உண்ண உணவும், பருக நீரும் கொடுத்தனர். இதனை அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வறமே இன்று உனக்குத் தொடர்கிறது. இப்பிறவிக் கதையை மணிமேகலா தெய்வம் உரைக்கின்றது.

வகை.2.

கந்திற்பாவை மணிமேகலையின் முற்பிறவியினை மற்றொரு இடத்தில் உரைக்கின்றது. கந்திற்பாவை வருவது உரைத்த காதை என்ற இந்தப் பகுதியில் விவரிக்கப்படும் நிகழ்ச்சி பின்வருமாறு;

இலக்குமி, இராகுலன் என்ற இருவரும் காயாங்கரை என்ற ஆற்றின் கரையில் இருந்த பிரம்ம தருமன் என்னும் முனிவனை வணங்கச் சென்றனர். அவரை வணங்கிய பின்னர் நாளை தங்களின் இல்லத்திற்கு அவரை உணவுண்ண அழைத்தனர். அவரும் வருவதாய் ஒப்புக் கொண்டதால் மகிழ்வுடன் இரவைக் கழித்தனர். காலையில் சமையல் தொழிலுக்கு வந்த பணியாளனின் கவனக்குறைவு காரணமாக சோற்றுப் பாத்திரம் உடைந்து அமுது அழிந்தது. இதனால் கோப்பட்ட இராகுலன் அவனை தோளும், தலையும் சிதையுமாறு வெட்டினான். இதன் காரணமாக அவனும் வினைப்பயன் கருதி அழிய வேண்டியவனாயினான்.

இவ்விரு கதைகளில் பல ஒற்றுமைகள் இருப்பதைப் போன்று பல வேற்றுகைளும் இருக்கின்றன. பின்வரும் வினாக்கள் இவ்விரு கதைகளின் மேல் கேட்கப்படுகின்றபோது இக்கதைகளின் உண்மைத்தன்மை வெளிப்படலாம்.

பிரும்மதருமன், சாதுசக்கரன் என்ற இருவரும் ஒருவரா?, அல்லது வேறு வேறு துறவிகளா? வேறு வேறானவராக இருப்பின் நிகழ்ச்சி ஒன்றா? வேறா? என்ற பல அடிப்படை கேள்விகளை இதில் எழுப்ப வேண்டி உள்ளது. வேறு வேறு நிகழ்ச்சிகள் என்று கொண்டால் முனிவர்களைச் சந்திக்கின்ற வழக்கமும், அவர்களின் கோப தாபங்களுக்கு ஆளாகின்ற சராசரி மனித வாழ்க்கையை உடையவர்களாக இப்பாத்திரங்கள் படைக்கப் பெற்றுள்ளன என்று கொள்ள வேண்டும்.

அடுத்து இலக்குமியின் மறுபிறவி மணிமேகலை. இராகுலனின் மறுபிறவி அசோக குமாரன். அசோக குமாரன், இராகுலன் ஆகியோர் முற்பிறவியிலும் இப்பிறவியிலும் அரசகுமாரர்கள். ஆனால் இலக்குமி முற்பிறவியில் அரசிமகள். இப்பிறவியில் கணிகையின் மகள். ஏன் அவள் அரசியின் மகளாக பிறப்பெடுத்திருக்கக் கூடாதா? முற்பிறவியில் கொலை செய்த ஆண் பின் பிறவியில் ஆணாக அரசகுமாரான இரக்கம் இல்லாமல் படைக்கப்படுகின்ற போது நன்மை செய்த இலக்குமி மட்டும் ஏன் அடுத்த பிறவியில் இவ்வாறு கீழிறக்கப் பெற்றுப் படைக்கப்பட வேண்டும்.

அதுபோல தரை, வீரை ஆகியோர் முற்பிறவியில் அரச குடும்பத்தில் பிறந்து, ஒரே அரசனை மணக்க பிற்பிறவியில் அவர்கள் இருவரும் ஒருத்தி கணிகையர் குலம், ஒருத்தி அந்தணர் குலம் என பிறப்பிக்கப்படச் செய்யவேண்டும். மேலும் முற்பிறவியில் குடும்ப மகளிராக இருந்த இவர்கள் இப்பிறவியில் பதியிலாளராக ஏன் மாற்றப்படவேண்டும். இக்கேள்விகளின் அடிப்படையில் கிடைக்கும் உண்மை ஒன்றுதான். ஆண் என்றும் தன் வலிமையுடன் இருக்க, பெண் என்றும் தன்னிலைக்குக் கீழே சென்று கொண்டிருக்கும் படியாகப் படைக்கப்பெறுவாள் என்பதுதான் அந்நிலையாகும்.

மணிமேகலை என்ற பாத்திரம் அவ்வப்போது உயர்நிலைகளை அடைவதாகக் காட்டப் பெற்றாலும் அவ்வப்போது அவள் அடைந்த உயரத்தை விட அடைவிக்கப் பெற்ற தாழ்வுகள் அதிக அளவில் உள்ளன. மணிமேகலை தன் பழம் பிறப்பினை மணிபல்லவத் தீவில் அறிகிறாள். அப்போது அவளைச் சுமந்து வந்த மணிமேகலா தெய்வம் முன்று மந்திரங்களை அவளுக்குக் கற்பிக்கின்றது.

“அல்லிஅம்கோதை! கேட்குறும் அந்நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்று உரு எய்தவும்
அந்தரம் திரியவும் ஆக்கும் இவ்வருந்திறல்
மந்திரம் கொள்க’ என வாய்மையின் ஓதி” ( மந்திரம் கொடுத்த காதை 7882)

“மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும் என்று
ஆங்கு அது கொடுத்து ” (மேலது 9091)

என்ற பகுதிகள் மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் அளித்த மந்திரங்களைச் சுட்டுவனவாகும். 

1. உருமாற்று மந்திரம் 

2. அந்தரத்தில் செல்வதற்கு உரிய மந்திரம் 

3. பசி களையும் மந்திரம் 

இம்முன்று மந்திரங்களில் முதல் மந்திரம் ஆணாதிக்க வயப்பட்டுள்ளது மிக்கத் தெளிவாகத் தெரிகின்றது. ஏனெனில், அக்காலத்தில் சமயத் தத்துவ அறிவு பெற்றவர்கள் ஆண்கள்தான். அவர்கள் வழியாகத்தான் யாரும் மெய்ப்பொருள் அறிய இயலும். மணிமேகலை பெண் என்பதால் அவள் தத்துவத்தை அறிய இயலாது. எனவே உருவை மாற்றிக் கொண்டுதான் அவள் தத்துவம் கேட்டாக வேண்டும். அவ்வாறே பின்பகுதியில் வஞ்சி மாநகரில் மாதவன் வடிவினை அவள் எடுத்துக் கொண்டு தத்துவம் கேட்கிறாள்.

பெண் என்பதால் தத்துவம் கேட்க இயலாது என்ற இதே கருத்தினை கண்ணகி படிமமும் வஞ்சியில் எடுத்துரைக்கின்றது.

“இளையள், வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்று உருக் கொள்க’ 
( வஞ்சி மாநகர்புக்க காதை, 6869)

என்று முன் கூறிய அதே கூற்றினை மீளவும் இக்காதையில் சாத்தனார் எடுத்துரைக்கின்றார்.

இதன் காரணமாக அவருள் உள்ள ஆண் சார்ந்த மனநிலை உணரக் கூடியதாக உள்ளது. பெண்களே பெண் உருவில் செல்லாதே என்று கூறக்கூடிய நிலையில் இவ்வாறு படைப்பது என்பது ஆண் படைப்பு மனத்தாலேயே இயலும்.

உண்மையைக் கேட்டுணரப் போகின்றபோது, உண்மையை மறைத்துப் பொய்வேடம் கொள்ளும் முறைமையால் பயன் ஏதும் விளையுமா என்று என்ணிப் பார்த்தால் இதன் வேறுபட்டதன்மை புரிபடும்.

மணிமேகலை இம்மந்திரங்களையும், அமுதசுரபிப் பாத்திரத்தையும் பெற்றுக் கொண்டு பூம்புகார் வருகிறாள். ஆதிரையிடம் முதல் பிச்சை பெற்றபின் அவள் எளியோர்க்கும், ஏழைகளுக்கும் உணவிடுகிறாள். அவ்வாறு உணவிடும் இவளை உதயகுமாரன் பின்தொடர்ந்தே வருகிறான். அவளிம் “நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது? ” என்று வினவுகின்றான்.

இதற்கு மணிமேகலை அளிக்கும் பதில் கவனிக்கத்தக்கது.

“பிறத்தலும் முத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அணையார்க்கு
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ?” ( உதய குமாரன் அம்பலம் புக்க காதை 136142)

என்ற பதிலில் பெண்டிர் ஆண்களுக்கு அறிவு கூறலாகாது என்று மணிமேகலை உரைப்பதாக படைக்கப் பெற்றுள்ளது. பெண்கள் அறிவுரை கூறக்கூடாது. அறமாவது செய்யலாமா? என்றால் அதுவும் முடியாததாகி விடுகின்றது. இது கழிந்தபின்னர் தன் உண்மை உருவத்துடன் உலவினால் உதயகுமரனால் தொல்லைகள் ஏற்படும் எனக்கருதி யானைப்பசி நோய் பெற்ற பெண்ணான காயசண்டிகையின் உருவத்தினை மணிமேகலை மந்திரத்தின் வழி பெறுகிறாள். காய சண்டிகை, வயந்தமாலை போன்றோர் விஞ்சையர்களால் கைக் கொள்ளப் பெற்றவர்கள். பின்னாளில் அவர்களால் தன் வாழ்வை இழந்தவர்கள் என்ற பகுதி ஒரு தனிக்கட்டுரையாக விரியத்தக்கது. காயசண்டிகை கணவனுடன் இணையாமலே இறப்பினைத் தழுவுகிறாள். அவளின் உருவத்தில் மணிமேகலை மறைந்து நின்று அறம் செய்கிறாள்.


அறம் செய்யவும் பெண் வரக்கூடாது. அப்படிச் செய்ய வருவதானால் வேற்றுருவில்தான் செய்யவேண்டும் என்பது போன்று இக்காப்பியத்தில் மணிமேகலைப் பாத்திரப்படைப்பு அமைக்கப் பெற்றுள்ளது. மேலும் அரசன் மணிமேகலையின் அறத்திறத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை அழைத்து நேரடியாக விசாரிக்கின்றான். அப்போதும் அவள் தன் உண்மை நிலையைக் கூறாது காயசண்டிகையின் வரலாற்றையே தன் வரலாறாக உரைக்கின்றாள். சமய உண்மைகளை நிலை நாட்டவேண்டிய பெண்ணாக வளரவேண்டிய மணிமேகலைப் பாத்திரத்தில் இவ்வளவு முரண்கள் காணப்படுகின்றன என்பதை கவனத்தில் கொண்டாக வேண்டியுள்ளது.

இதன்பின் உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் வெட்டுகின்றான். வெட்டுப்பட்டவனைப் பற்றியோ, வெட்டியவனைப் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை. ஆனால், வெட்டுவதற்குக் காரணமாக மணிமேகலை இனம் காணப்பட்டு அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய மணிமேகலைக்குக் கிடைத்த பரிசு அவள் சிறைவீடு புகுதலே ஆகும். இந்நிலையில் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய உயர் மனிதச் சிந்தனை உடனடியாக தாழ்வினைச் சந்திக்கின்றது. இவ்வாறு ஏறுமுகமும் இறங்குமுகமும் அடுத்தடுத்து மணிமேகலைப் பாத்திரத்திற்கு அமைக்கப் பெற்றுள்ளது கவலைக்குரியதாக உள்ளது.

இக்கருத்தை அரசனின் செவியல் படும்படி தெரிவிக்க சில முனிவர்கள் வருகின்றனர். இவ்விடைவெளியில் அசோக குமாரன் பிணத்துடன் மணிமேகலை மறைத்து வைக்கப்படுகிறாள். அரசனிடம் வந்த முனிவர் பல கருத்துக்களைக் கூறிக் காம வயப்படுபவனை அரசன் தண்டிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே அவன் தண்டிக்கப்பட்டுவிட்டான் என்று அவர்கள் பற்பல கருத்துக்களைக் கூறுகின்றனர்.

இதுபோன்று இரு கதைகளை எடுத்துரைக்கின்றனர். மருதி, விசாகை என்ற இரு பெண்களின் கதை இங்கு எடுத்துக்காட்டப் பெறுகின்றது. மருதி பிற ஆடவனால் விரும்பப்படுகிறாள். அவ்வளவில் பிறர் நெஞ்சு புகுந்ததே கற்பிற்குக் கேடு என்று அவள் கருதுகிறாள். இதன் காரணமாக பூதத்திடம் முறையிட ஏழு நாளில் அந்தக் காமுகன் அழிகிறான். அடுத்து, விசாகை என்பவளின் கதை கூறுப்படுகிறது. இவளுக்கும் இவளின் முறைப்படி கணவனாக வேண்டிய ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊரார் பேசிக் கொள்ள, இவளும் அவனும் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் காமத்தைத் தவிர்த்து அறமுணர்ந்து வாழ்ந்த நிலையை இக்கதை விளக்குகின்றது.

இவ்விரு கதைகளிலும் பெண்கள் குற்றம் செய்யவில்லை என்ற போதும் அதிகத் துயரத்திற்கு ஆட்படுவது பெண்கள்தான் என்பது தெளிவு. இவ்வாறு ஏற்றமும் இறக்கமும் கொண்ட பெண்கள் பாத்திரப்படைப்பினைப் பெற்றதாக மணிமேகலை விளங்குகின்றது. இதன் காரணமாக காமத்தின் விளைவினை எடுத்துரைக்க முனிவர் முனைந்தாலும், அரசன் மணிமேகலையைச் சிறைக் கோட்டத்தில் அடைக்கின்றான். இதன்பின் மணிமேகலை சிறைக் கோட்டம் சார்கிறாள். அரசமாதேவியின் யோசனையின்படி, அரசமாதேவியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறாள். அங்கு அவளுக்கு பித்தேற்றும் மருந்தினைப் புகட்டுகிறாள். மணிமேகலை அதனின்றும் தப்பிக்கிறாள். அடுத்து காமுகன் ஒருவனைக் கொண்டு மணிமேகலை அடையச் செய்வதான தவறான நிலையை எடுக்கிறாள். அப்போது மணிமேகலை ஆண் வடிவம் கொள்கிறாள். இதன் காரணமாகக் காமுகன் பயந்து ஓட்டமெடுக்கிறான். பின்பு புழுக்கம் மிக்க அறையில், உண்ண உணவும் நீரும் இன்றி அடைக்கிறாள். இதிலிருந்தும் மணிமேகலை மந்திரம் சொல்லித் தப்பிவிடுகிறாள். இதன்பின் அவ்வரசி நல்வழிப்படுகிறாள். மணிமேகலையை விடுவிக்கிறாள். இங்கும் மணிமேகலையைத் துன்புறுத்தும் சூழலுக்கு உரியவராகப் பெண் படைக்கப் பெற்றுள்ளாள். பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்ற அடிக்கருத்து இக்காப்பியத்துள் புதைந்து பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டுள்ளது.

இதன்பின் மணிமேகலை முன்பிறவியில் ஆபுத்திரனாகப் பிறந்து தற்போது புண்ணியராசனாகப் பிறந்துள்ள அரசனைக் கண்டு அவனுடன் மணிபல்லவம் அடைந்து அவனையும் முற்பிறவி பற்றி அறியச் செய்து வஞ்சி, காஞ்சி போன்ற நகரங்களுக்குச் சென்று பௌத்த நெறிபரப்பி பவத்திறம் அறுக என பாவை நோற்ற நிலையில் மணிமேகலைக் காப்பியம் நிறைவு பெறுகின்றது. அடிக்கடி திருப்புமுனைகள் இக்காப்பியத்தில் ஏற்பட்டபோதும், பெண்களை உயரத்தில் ஏற்றியும் பின் பள்ளத்தில் தள்ளியும் வீழச் செய்யும் முயற்சியே அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பதை பெண்ணிய வாசிப்பின் போது உணரமுடிகின்றது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard