New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 09. மணிமேகலையில் அளவையியலும், இந்தியத் தத்துவ தரிசனப் பதிவுகளும் முனைவர் எம். தேவகி


Guru

Status: Offline
Posts: 24765
Date:
09. மணிமேகலையில் அளவையியலும், இந்தியத் தத்துவ தரிசனப் பதிவுகளும் முனைவர் எம். தேவகி
Permalink  
 


9. மணிமேகலையில் அளவையியலும், இந்தியத் தத்துவ தரிசனப் பதிவுகளும்  -முனைவர் எம். தேவகி

முன்னுரை

மணிமேகலையில் சொல்லப்படாத பொருளில்லை எனுமளவுக்கு வாழ்வியலின் எல்லா நுணுக்கங்களையும் நுணுகி ஆராய்ந்து கூறும் சாத்தனார், துறவறத்தின் தூய்மையைச் சுட்டி, மேலும், இந்தியத் தத்துவ தரிசனங்களை விளக்கி, அவற்றுக்கு அடிப்படை ஆதாரமாயுள்ள பிரமாணவியலையும் ஆராய்கிறார்.

பிரமாணவியல் (அளவையியல்)

இந்தியத் தத்துவக் கொள்கைகள் தாம் கொள்ளும் முடிபுகளை மட்டும் தராமல், எம்முறைகளில் அவை விளைந்தன என்பதையும் காட்டுகின்றன. இவை தாம் எடுத்துக்கொண்ட பொருளை ஆராய்வதற்கு முன் அறிவு ஆய்வு இயல் என்று கருதக் கூடியதைத் தருகின்றன. வேறு வகையாகச் சொன்னால் இந்த நிலையில் இந்திய தத்துவ ஞானம் தன்னையே ஆராயத் தொடங்குகிறது. அதன் முக்கியப் பிரிவாக அளவையியல் எழுகிறது என்கிறார் டாக்டா; ஹரியண்ணா. (Outlines of Indian Philosophy)

 

அளவையின் இன்றியமையாமை

 

தத்துவ உலகில் முப்பொருள்களாகிய பதி, பசு, பாசத்தை அளந்து அறியப் பயன்படுவது அளவையாகும். உலகத்துப் பொருள்களை எண்ணல், எடுத்தல், நீட்டல் முதலிய அளவுகளினால் அளந்து அறிகிறோம். தத்துவ உலகில் இறைவன், உலகம், உயிர்கள் முதலிய பொருள்களை அளந்தறிய அளவைப் பிரமாணங்களைப் பயன்படுத்துகிறோம்.

பாரத நாட்டின் வளமும் செழுமையும் எண்ணற்கரியது. உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படை வாழ்வாதாரங்களில் தன்னிறைவு பெற்று விளங்கிய இந்தியன், அதற்கு மேலும் சமயம் குறித்தும், இறைவன் குறித்தும் சிந்திக்கத் தொடங்கினான். அதன் விளைவே இந்தியத் தத்துவ ஞானம்.



ஞானபூமியாகிய பாரதத்தின் தத்துவஞானத்திற்கும், சமய ஞானத்திற்கும் மூலநூலாகத் திகழ்வது வேதம்.

அத்தகைய வேதங்களை மறுத்தும், ஆதரித்தும் தத்துவ விசாரங்கள் உருவாயின.

 

m91.jpg

 

m92.jpg

 

அளவைகளின் வகைகள்

 

சைவசந்தானாச்சாரியரான அருள்நந்திதேவநாயனார், தமது சிவஞானசித்தியார் நூலில் (சுபக்கம்) பத்துவகை அளவைகளை விளக்குகிறார்.

அளவை காண்டல் கருதல் உரை அபாவம் பொருள் ஒப்பு ஆறு என்பர். 
அளவை மேலும் ஒழிபு உண்மை ஐதீகத்தோடு இயல்பு என நான்கு அளவை 
காண்பர்; அவையிற்றின்மேலும் அறைவா; அவைஎல்லாம் 
அளவை காண்டல் கருதல் உரை என்ற இம்மூன்றில் அடங்கிடுமே 

என்பதாக அந்த விளக்கப்பாடல் அமையும்.

தாயுமானவர்,

சொல்லாலும் பொருளாலும் அளவையாலும்
தொடரவொண்ணா அருள்நெறியைத் தொடர்ந்து நாடி
நல்லார்கள் அவையகத்தே இருக்க வைத்தாய் … (ஆசையெனும், 24)

என்று அளவையால் தொடரவொண்ணாத பரம்பொருள் இறை என்பதனை உணரவைக்கிறார்.

1. காட்சியளவை 

உலகப் பொருள்களைக் கண் முதலிய ஐம்பொறிகளால் கண்டுணர்தல்.

2. கருதல் அளவை

ஐம்பொறிகளால் உய்த்துணர்தல் - மறைந்துள்ள பொருள்களை அதனைவிட்டு நீங்காத ஏதுவைக் கொண்டு அறிதல். புகை கண்டவிடத்து, தீ உண்டு என அறிவு.

3. உரை 

இறைவன், அவன் வழிவந்த அருளாளர்களால் கூறப்பட்ட அருள் மொழிகள்.

4. இன்மை (அபாவம்)

இதற்கு முன்பு இவ்வாறு நடக்கவில்லை. எனவே இப்போதும் எவ்வாறு நடக்கக் காரணமில்லை எனக் கூறுதல்

5. பொருள் (அருந்தாபத்தி)

இங்ஙனம் அன்றாயின் இது கூடாது எனறு உணர்வது; பகல் உண்ணான் பருத்திருப்பான் எனில் இரவு உண்பான் என உணர்தல்.

6. உவமை 

காட்டுப் பசுவைக் காணாதவர்க்கு, அது வீட்டுப் பசுவைப் போலிருக்கும் என்று கூறி விளக்குதல்.

7. ஒழிவு (எஞ்சியது - பாரிசேடம்)

ஆயிரம் யானைகளின் பலமுடையவர்கள் சல்லியன், சராசந்தன், கீசகன், பீமசேனன் போன்றோர். இவர்களால் கீசகன் இறக்கும் போது, அங்கு சல்லியனும் சராசந்தனும் இல்லை. அப்படியானால் கீசகனை வதைத்தவன் பீமசேனன் தான் என்று அறிதல்.

8. ஐதிகம் 

வழிவழியாகக் கூறப்படும் உண்மை கொண்டு அறிவது.

9. இயல்பு 

வழக்கு, செய்யுள் என்ற இருவகையிலும் வரும் சொற்களுக்கு அந்தந்த காலமும் இடமும் அறிந்து பொருள் கொள்வது.

10. சம்பவம் (உண்மை)

முழுமையிலிருந்து அதன் பகுதியைப் பெறுதல். இவ்வாறு பத்துவகை அளவைகளைக் கூறினாலும், அவற்றையெல்லாம் ‘காட்சி, கருதல் உரை’ என்ற மூன்றில் அடக்கலாம்; எனினும் இம்மூன்றும் ஆன்ம சிற்சத்திக்கு உதவுபவை; எனவே ஆன்ம சிற்சத்தியே முடிவான பிரமாணம்; பிரமாணத்திற்குப் பிரமாணமாகும். எனவே, ஆன்மசிற்சத்தியே, பிரமாணம் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள்; பொருள்களைக் கண் அளக்கிறது. அந்த கண்ணையளப்பது ஆன்ம சிற்சத்தியாகிய உயிரறிவாகும்.

 



நையாயிகர் கூறும் பிரமாணம்

 

நையாயிகர் உயிரின் சிற்சத்தியை ஏற்காமல், ஐம்பொறிகளையும், புகை போன்ற அடையாளங்களையும் பிரமாணமாகக் கொள்கின்றனர். ஆனால் இவற்றை அளந்தறிகின்ற கருவியாகிய உயிரின் அறிவாற்றல் செயல்படவில்லையெனில் ஐம்பொறிகளும் செயல்படா! உயிருக்குக் கருவியாகச் செயல்படுவது அதன் அறிவாற்றலாகும். எனவே நையாயிகர் கூறுவது முடிவான பிரமாணமாகாது. ஆனால் ஆன்ம அறிவாற்றலுக்கு நூல், ஐம்பொறிகள் முதலியன பயன்படுவதால் இவற்றையும் பிரமாணமென்று கூறலாம்.

 

சைவசித்தாந்தம் கூறும் பிரமாணம்

 

மற்ற எல்லாவற்றையும் அளந்து பிறவற்றால் அளக்கப்படாததாய் உள்ள உயிரறிவே முடிவான பிரமாணமாகும். ‘உயிரின் ஓடு உணர்வு’ என்று அருள் நந்திசிவம் இதனைக் கூறுவர்.

தன்னை நோக்கி நிற்கும் அறிவாகிய ஆன்மாவினின்றும் 
விடயங்களை நோக்கி ஓடும் அறிவாகிய சிற்சத்தி

என்பர் சிவஞானமுனிவர்.

 

மணிமேகலை கூறும் அளவையியல்

 

மெய் வாய் கண் மூக்கு முதலிய ஐம்பொறிகளால் உணர்கின்ற உலகச் செய்திகளைக் காட்சியளவையால் பெறலாம்.

காட்சி அளவையை வாயிற் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி என நான்காக அருள் நந்தி உரைப்பர்.

சாத்தனார், காட்சியளவையை விளக்கி, அதன் வகைகளையும் தருவார்.

நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன
இவைஇவை கண்டுகேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து (சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை, 16-19)

என்றும், மேலும்,

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சுட்டல், திரிதல், கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும் (மேலது, 21-24)

என்று கூறி, காட்சியளவையின் வகைகளை விவரிப்பர்.

 



கருதலளவை

 

அனுமானத்தால், அனுமேயத்தின் உண்மைத் தன்மையை உணர்த்தும் தன்மை உடையது. பொது, எச்சம், முதல் என மூவகையைக் குறிப்பர் சாத்தனார். 

காட்டில் யானையின் பிளிற்றொலியைக் கேட்டு, அங்கு யானை உள்ளதென அறிதல் - பொது.

ஆற்றில் வெள்ளம் வந்ததைக் கொண்டு, ஆற்றின் மேற்பகுதியில் மழை பெய்திருப்பதை உறுதிப்படுத்துதல் - எச்சம்.

வானத்தே கருக்கொள்ளும் கருமேகத்தைக் கண்டு இம்மேகம் மழைபொழியும் என உணர்தல்.

குறிக்கொள் அனுமானத்து அனுமேயக்
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூவகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம்
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்
கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்
உடங்கு ‘எழில் யானை அங்கு உண்டு’ என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அத்தலை மழை நிகழ்வுரைத்தல்
முதல் என மொழிவது கருக்கொள் முகில்கண்டு 
இது மழை பெய்யும் என இயம்பிடுதல் (மேலது, 25-36)

 

உவமை அளவை

 

காணப்படும் ஒன்றை ஒப்புமைப்படுத்திக் காணப்படாத ஒன்றை உணர்த்துவது. கவய மாவினைக் கண்ட ஒருவன், அதனைக் காணாத ஒருவனுக்கு ‘அது பசு போன்றது’ எனக் கூறி விளக்குவது.

உவமம் ஆவது ஒப்புமை அளவை
கவயமா ஆப்போலும் எனக்கருதல் (மேலது, 41-42)

உரை அளவை (ஆகம அளவை)

வேதங்கள், ஆகமங்கள் போன்ற புனித நூல்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று நடத்தல், அம்மொழிகளின்படி ‘சொர்க்க உலகம்’ உண்டு என்று கூறுதலை நம்புதல்.

ஆகம அளவை அறிவின் நூலால்
போக புவனம் உண்டு எனப்புலங்கொளல் (மேலது, 43-44)

 

அருத்தாபத்தி அளவை

 

ஒரு பொருளைக் கொண்டு, அதனுடன் தொடர்புடைய பிறிதொன்றினை உணர்தல்
ஆயர்குடி கங்கை இருக்கும் என்றால்,
‘ஆயர் குடியிருப்புக் கங்கையின் கரையில் அமைந்திருக்கும் என்று உணர்தல்.
அருத்தாபத்தி ‘ஆய்க்குடி கங்கை
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல்’ (மேலது, 45-46)

 

இயல்பு அளவை

 

யானையின் மீது இருக்கும் ஒருவன் கேட்டதற்கு, வேறொன்றை தாராது யானையை அடக்க உதவும் அங்குசத்தைத் தருதல்.

இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிற்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் (மேலது, 47-48)

ஐதிக அளவையைக் குறிக்கும் போது,
‘ஐதிகம் என்பது உலகு உறை, இம்மரத்து
எய்தியது ஓர் பேய் உண்டு’ எனத் தெளிதல் (மேலது, 49-50)

என்பர் சாத்தனார்.

அபாவ - அளவையைப் பற்றிக் கூறும் பொழுது, ஒரு பொருளின் இன்மையைக் குறித்தலாக,

அபாவம் என்பது இன்மை ஓர் பொருளைத்
தவாது அவ்விடத்துத்தான் இலை என்றல் (மேலது, 51-52)

ஒழியாகிய பார்சேட அளவையை மீட்சி அளவை என்று சாத்தனார் குறிக்கிறார். இவர் தரும் எடுத்துக்காட்டாவது,

மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சிஇல் இராவணன் தோற்றமை மதித்தல் (மேலது, 53-54)

என்பதாகும்.

சம்பவ அளவையை (உண்மை) உள்ளநெறி அளவையாவது, ‘இரும்புத் துண்டின் சுழற்சியால் கொள்ளக்கூடியது காந்தம்’ எனக் கூறுவது என்பர் சாத்தனார்.

உள்ள நெறி என்பது ‘நாராசத்திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம் எனக் கூறல் (மேலது, 55-56)

இவ்வாறு இந்தியத் தத்துவவியலின் அடிப்படை ஆதாரமாய் விளங்கும் அளவையியலையும் அதன் உட்பிரிவுகளையும் விவரிப்பர் சாத்தனார்.

 

 

இந்திய தத்துவவாதிகள் கொண்ட அளவைகள்

 

மேலும் இந்தியத் தத்துவவாதிகள் ஏற்றுக் கொண்ட அளவைகளையும் விவரிக்கிறார். உலகாயதத்தைச் சொன்ன வியாழபகவான் (பிரகஸ்பதி) காட்சி அளவை ஒன்றையே அளவையாகக் கொண்டார். புத்தர் காட்சியும் அனுமானமும் ஆகிய இரண்டை ஏற்றுக்கொண்டார். சாங்கியத்தைச் சொன்ன கபிலர் அவற்றோடு உரையளவையையும் சேர்த்துக் கொண்டார். நியாய சாத்திரம் சொன்ன அக்கபாதர் அவற்றுடன் உவமானத்தைச் சேர்த்து நான்கு அளவைகளைக் கொண்டார். வைசேடிகம் சொன்ன கணாதர் அவற்றோடு அருத்தாபத்தியைச் சேர்த்து ஐந்து கொண்டார். மீமாம்ச சாத்திரத்தை விளக்கிய ஜைமினி காட்சி முதல் அபாவம் வரை உள்ள ஆறு அளவைகளைக் கொண்டார்.

. . . . . . . . . இப்பெற்றிய அளவைகள்
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாம்சகம் ஆம் சமய ஆசிரியர்
தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
உவமானம் அருத்தாபத்தி அபாவம்
இவையே இப்போது இயன்று உள அளவைகள் (மேலது, 77-85)

 

சாங்கியக் கருத்துக்கள்

 

வைதிக தத்துவமாகிய சாங்கியம் இருபொருள் கொள்கையை உடையது. அவை, புருடன் ஆகிய உயிர், உலகமாகிய பிரகிருதி ஆகிய இரு பொருள்களாகும். சடப்பொருளாகிய பிரகிருதி, உலகப் பொருள்கள் தோன்றுதற்கிடமாய் உள்ளது. முக்குணவடிவாய் உள்ளது. நுண்மையாய் உள்ளது. பிரகிருதியிலிருந்து ஐம்பூதங்கள், தன்மாத்திரை, 5 கன்மேந்திரியங்கள், 5 ஞானேந்திரியங்கள், நான்கு அகக்கருவிகளாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கருவிகள் தோன்றும்.

இது சாங்கிய மதம் என்று எடுத்துரைப்போன்
தனை அறிவரிதாய்த்தான் முக்குணமாய்
மனநிகழ்வின்றி மாண்பமை பொதுவாய்
எல்லாப்பொருளும் தோன்றுதற்கு இடமெனச் 
சொல்லுதல் மூலப்பகுதி சித்தத்து’ (மேலது, 202-206)

என்பர் சாத்தனார்.

பல்வேறு பொருள்களின் தொகுதியாய் அமைந்த படுக்கையினைக் கொண்டு (bed as an assemblage of various parts) அதில் படுத்து உறங்குவோன் உண்டு என்று உய்த்துணர்வதுபோல, இந்தீரியங்கள் முதலியவற்றின் தொகுதியாக உள்ள உடம்பினைப் பார்த்து அதில் பயன் கொள்வான் ஒருவன் வேண்டும் என்று உய்த்துணரப்படும் என்று சாங்கிய காரிகையின் உரையாசிரியரான கௌபாதர் உரைப்பார். (சாங்கிய காரிகை, 17)

கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்

எண்ணிற் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்

சயனாசனங்கள் போல … (29: 291-293)

 

புருட தத்துவம்

 

புருடன் எனப்படும் ஆன்மா, பிரகிருதியின் முக்குணங்கள் இல்லாத சித்துப்பொருள். அழியாத நித்தியப் பொருள், பிரகிருதியின் வேறாகிய ஆன்மா.

அறிதற்கு எளிதாய் முக்குண மன்றிப்
பொறியுணர்விக்கும் பொதுவுமன்றி
எப்பொருளும் தோன்றுதற்கு இடமின்றி
அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடன் (27: 227-232)

என்று இக்கருத்தைச் சாங்கிய காரிகையின் 3, 17, 18, 19, 21, 37 ஆகிய பாடல்களின் சாரமாய் தந்துள்ளார் சாத்தனார்.

இந்திய தத்துவங்கள் தாம் சாதிக்கும் உண்மைப் பொருளை உறுதிசெய்ய அளவைகளையே கருவியாகக் கொள்கின்றன.

 

நையாயிகர் தத்துவம்

 

பொருள்களின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து காண்பதற்குரிய கருவிகளாகிய (Sources of knowledge) பிரமாணங்களைப் பற்றி விளக்கிய முதன்மை நையாயிகரைச் சாரும். எனவே நியாய சாத்திரம் என்ற பெயர் இத்தத்துவத்திற்கு ஏற்பட்டது.

சாத்தனார் தம்முடைய நூலில், நையாயிகரின் அளவையியல் கருத்துக்களை மட்டும் ஆராய்கிறார். (27:14-14)

நையாயிகனை ‘வைதிக மார்க்கத்து அளவைவாதி’ என்று குறிப்பிடுகிறார் அவர் (27-3)

சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் மணிமேகலை பல்வேறு தத்துவ உரைகளைச் செவிமடுக்கப் போகிறாள் என்பதை முன்னரே, மந்திரம் கொடுத்த காதையில், 

பல்வேறு சமயப்படிற்றுரையெல்லாம்
அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள் (10:77-78)

என்று சாத்தனார் அறிவிப்பதை அறியலாம்.

 

 

வைசேடிக தத்துவம்

 

ஒவ்வொரு பொருளும் ஒரு விசேடப் பண்பை உடையது என்னும் கொள்கையை உடையது வைசேடிகம். வைசேடிகரின் அறுவகைப் பதார்த்தங்களைப் பரிமேலழகர் தம்முடைய திருக்குறள் உரை, வெகுளாமை அதிகாரத்தில், ‘சினத்தைப் பொருள் எனக் கொண்டவன்’ என்ற திருக்குறளில், சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கட் கொண்டவன்’ என்று உரை எழுதினார். பின், பொருள் என்ற சொல்லுக்குக் குணம் என்று கொண்டு, வைசேடிகர் கூறும் அறுவகைப் பதார்த்தங்களில் குணமும் ஒன்று. எனவே, பொருள் - குணம் எனத் தெளிவுபடுத்தி, வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பனவற்றை அறுவகைப் பொருள் என்றாற் போல, ஈண்டுக்குணம் பொருள் எனப்பட்டது என்று தனது வைசேடிகத் தத்துவப் புலமையை வெளிப்படுத்துவார், சாத்தனார்.

பொய்தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறாம் (27:242-244)

என்று சைசேடிகவாதியின் கொள்கையைக் குறிப்பர்.

 

மீமாம்சை தத்துவம்

 

வைதிக தத்துவமாகிய மீமாம்சை, வேதம் யாராலும் செய்யப்படவில்லை; அது நித்தியம்; அபௌருஷேயம்; தோற்றமும் முடிவும் அதற்கில்லை; சிட்சை, வியாகரணம், சந்தம், கற்பம், நிருத்தம், சோதிடமாகிய ஆறு அங்கங்கள் வேதமாகிய புருடனுக்கு உள்ளது என வேதியன் உரைப்பதாகச் சாத்தனார் உரைப்பர்.

நான்மறைகளுக்குரிய ஆறு உறுப்புக்களைத் தமிழ், வடமொழி நூல்கள் குறிக்கின்றன.

கற்பம் கை; சந்தம் கால்; எண்கண்;
தெற்றென் நிருத்தம் செவி; சிக்கை மூக்கு உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
சார்பில் தோன்றா ஆரண வேதக் (கு)
ஆதி அந்தம் இல்லை; அது நெறி எனும்
வேதியன் உரையின் விதியும் கேட்டு (27:100-106)

என்பதாகச் சாத்தனார் உரை அமையும்.

 

நான்கு வேதங்களும் ஆறங்கங்களும்

 

விண்டர் நீட்ஸ் என்ற வடமொழி இலக்கிய வரலாற்று அறிஞர் இது குறித்துக் கூறுதல் வருமாறு: 

உபநிடதத்தில் பரவித்தை, அபரவித்தை என்று இருவகை அறிவுகள் கூறப்பட்டுள்ளன. அழிவின்றி என்றும் நிலைபெறறிருக்கும் நித்தியமாகிய பிரமத்தைப் பற்றிய ஞானத்தைப் போதிப்பது பரவித்தையாகும். இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் ஒலியியல், சடங்கியல், இலக்கம், வேர்ச் சொல்லியல், யாப்பியல், வானியல் பற்றிய அறிவைத் தருவது அபரவித்தை எனப்படும். இதுவே வேதாங்கங்கள் எனச் சொல்லப்படுவனவற்றின் மிகப் பழைய தொகுத்துரைத்தல் ஆகும் (vide, History of Indian Literature, Vol.1, p.268).

இவர் கூறும் கருத்து முண்டக உபநிடதக் கருத்து ஆகும். வேத ஆறு அங்கங்களையும் இவர் phonetics (சிக்கை), ritual (கல்பம்), Grammar (வியாகரணம்), etymology (நிருத்தம்), metrics (சந்தம்), astronomy (எண்) என்று மொழி பெயர்க்கிறார்.

சங்கப்பாடல்கள் நான்மறைகளைக் குறித்து பலவிடங்களில் பேசினாலும், வேத ஆறு அங்கம் பற்றிய குறிப்பு இருபாடல்களில் மட்டுமே வருகின்றது.

நன்றாய்ந்த நீள் நிமிர்சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல் (புறம். 166:1-4)


பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினை உடைய முதிய இறைவனது (சிவபெருமானது) வாக்கைவிட்டு நீங்காது, அறம் ஒன்றையே மேவிய நான்கு கூற்றையுடைத்தாய் ஆறங்கத்தாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதம் என்பது இதனுடைய விளக்கம்.

திருஞானசம்பந்தர் வேதநாவர் என்பர். 

கலித்தொகை கடவுள் வாழ்த்தில், ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து என்று தொடங்கும் பகுதி ஆறு அங்கங்களையும் அந்தணர்க்கு அரிவாகிய வேதங்கள் பலவற்றையும் அருளிச் செய்த சிவபிரானின் கருணைத் திறத்தைக் காட்டுகின்றது. உயிர்கள் உய்யும் பொருட்டு, இறைவனே வேதங்களை அருளிச் செய்தான் என்பதால், வேதம் தானே தோன்றவில்லை (சுயம்பு அல்ல) சிவபரம்பொருளே அருளிச் செய்தான் என்பது தெளிவு.

 

ஆசீவக மத தத்துவம்

 

இந்தியாவில் தோன்றிய தத்துவஞானிகளுள் முதன்முதல் அணுக் கொள்கையைத் தந்தவர்கள் ஆசீவகர்களாவர். இக்கொள்கை மற்கலியால் உருவாக்கப்பட்டது. நில அணு, நீரணு, தீயணு, காற்றணு இவை சேர்ந்து அவ்வப் பொருட்களாய் உருவாகும். பின், வெவ்வேறாய் பிரிந்து போகும். ஆசீவகர்களின் சுபாவக் கொள்கையைச் சாத்தனார் பூதங்களின் இயல்பினையும், பொருள் சேர்க்கையின் இயல்பையும் கூறும் வகையில் விளக்கம் தருகிறார்.

பரமாணுக்களின் அனாதித் தன்மையை,

ஆதியில்லாப் பரமாணுக்கள் (27: 126)

என்று குறிக்கின்றார் அவர். அணுக்கள் என்றும் அழிவதில்லை; எவராலும் அவை படைக்கப்படவில்லை.

நிலம், நீர், தீ, காற்று என நால்வகையின
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் (27: 116-118)

மற்கலி நூலின் வகை இது (27:165) என்பார், ஆசீவகரின் உயிர்க் கோட்பாட்டையும் விளக்குகிறார். அணுக்களின் சேர்க்கையையும், நால்வகைப் பூதம், பல்வகைப் பொருள்களையும் அறிவது உயிர். இதனால் உயிருண்மையும் பெறப்படும். உயிரையும் அணு எனவே கொண்டவர் ஆசீவகர்.

அவ்வகை அறிவது உயிர் (27:119)

உயிரின் பல்வகை இன்பதுன்ப அனுபவங்களைக் கூறுபவர், நற்பேணு அடைதலும், உள்ளதை இழத்தலும், இடையூறு உறுதலும், பொருந்துமிடத்தில் இருத்தலும், இடம், பொருள், ஏவல், உறவு முதலியவற்றைப் பிரிதலும், துன்பம், இன்பம் உறுதலும், பிறப்பும் இறப்பும் அடைதலும் கருவில் தோன்றிய பொழுதே உயிர்களைச் சார்ந்துவிடும். உயிர்கள் அனுபவிக்கும் இன்பதுன்பமும் அணு உருவினதாகும் என்பது உயிர் பற்றிய ஆசீவக தத்துவக் கொள்கை.

பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத்தகும்
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது (27:119-164)

என்றபடி சாத்தனார் ஆசீவகமதக் கொள்கையை விளக்குகிறார்.

உயிரின் முற்செய்வினைகளுக்கேற்ப இப்பிறப்பு அமையும் என்ற மேற்கூறிய ஆசீவகக் கொள்கைக்கேற்ப, அருள் நந்திசிவனார் கூறுவது இங்கு பொருத்தமாக அமையும்.

பேறு இழவு இன்பமும் பிணி மூப்பு சாக்காடு
ஆறுமுன் கருவுள் பட்டது (சிவஞானசித்தியார், சுபக்கம்)

என்று, தாயின் கருவில் உயிர் இருக்கும்போதே இந்த ஆறு அனுபங்களும் அதன் மீது எழுதப்பட்டுவிடும் என்பது இதன்பொருள்.

 

நிகண்டவாதியின் கொள்கை

 

சமணருள் ஒரு பிரிவினர். இவர்களை ஆடையில்லாச் சமணர் என்பர். அருகப் பெருமான் சமணர் வணங்கும் இறைவன். நல்வினை, தீவினை, பரமாணுக்கள், கட்டுநிலை வீட்டு நிலை, தர்மாத்திகாயம், அதர்மாத்திகாயம், காலம், ஆகாயம், மாசற்ற உயிர் ஆகியவை உள்ள பொருள்கள் என மணிமேகலையின் வினாவிற்கு விடையிறுக்கிறான் நிகண்டவாதி.

இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்
தந்த நூற்பொருள் தன்மாத்தி காயமும்
அதன்மாத்தி காயமும் கால ஆகாயமும்
தீது இல் சீவனும் பரமாணுக்களும்
நல்வினையும் தீவினையும் அவ்வினையால்
செய்வுறு பந்தமும் வீடும் இத்திறத்த (27:171-176)

என்றுரைக்கிறான் நிகண்டவாதி.

தர்மாத்திகாயம் - பொருளின் அசைவுக்கு உதவுவது.

அதர்மாத்திகாயம் - பொருள், ஓரிடத்தில் நிலைபெற்று நிற்க உதவுவது.

உயிர் - உடம்புடன் கூடி, அதனளவும் பரந்திருப்பது.

 

பூதவாதியின் கொள்கை

 

காட்சியளவையை மட்டுமே ஏற்கும் உலகாயதர், ஐம்பூதங்களின் கூட்டத்தால் உடலும் உணர்வும் தோன்றும்; பூதங்கள் கலையும் போது அவையும் கலையும் என்று கூறுவர். உயிரின் இருப்பையும் கடவுளின் இருப்பையும் உலகாயதர் ஏற்பதில்லை.

அவ் அப்பூதவழி அவை பிறக்கும்
மெய் வகை இதுவே .....
இம்மையும் இம்மைப்பயனும் இப்பிறப்பே
பொய்ம்மை… (27: 263-276)

இவ்வாறு ஆண் வேடத்தில் இருந்த மணிமேகலை, இந்திய தத்துவ தரிசனக் கொள்கைகளை அவரவர் வாய்மொழியாக அறிந்து கொள்கிறாள்.

 

முடிவுரை

 

இந்தியாவில் தோன்றிய தத்துவ தரிசனங்கள், ஓர் எல்லையில் நில்லாது நிலம் கடந்தும், மொழி கடந்தும் மக்களால் பயிலப்பட்டன என்பதைத் தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. தத்துவவாதிகள், தம் கருத்துக்களை விளக்குவதற்கு அளவைகளைப் பயன்படுத்தினர் என்பதும், பண்டைத் தமிழர், தருக்கவியலில் சிறந்து விளங்கினர் என்பதும், தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மூலமாக அறியலாகும் செய்திகளாகும்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard