நமது நாட்டில் நிலவிய சமயங்களின் கருத்துக்களைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மணிமேகலை பதிவு செய்யவில்லை என்றால், அன்றைக்கிருந்த சமயங்கள் பற்றிய செய்திகளை இன்று அறிய முடியாது. ஏனென்றால் தமிழகத்தில் இன்றைக்கு மணிமேகலை காலச் சமயங்கள் வழங்கப் பெறவில்லை. எனவே தமிழகத்தில் ஒருகாலத்தில் விளங்கிய சமயங்கள் பற்றி மணிமேகலை கூறுவதால் தான் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே சமயத் தத்துவ உலகத்திற்குக் கிடைத்த மாபெரும் பரிசு மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெற்ற சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதையாகும். அதன்வழி மீமாம்சை மதம் பற்றிய கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.
"வேத வியாதனும் கிருத கோடியும் ஏதம் இல் சைமினி எனும்இவ் ஆசிரியர் பத்தும் எட்டும் ஆறும் பண்புறத் தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்" (பாடலடி 5 - 8)
என்ற இப்பகுதியில் தம் காலத்து ஆசிரியர்கள் கொண்ட அளவைகளைக் குறிப்பிடுகிறான். இதில் மீமாம்சைக்குரிய ஆசிரியரான சைமினி அளவைகளை ஆறு என்று குறப்பிடுகின்றார் என்று கூறுகிறான். எனவே மணிமேகலையில் மீமாம்சகரின் நூலாசிரியர் சைமினி இடம் பெற்றுள்ளமையால் மீமாம்சைக் கருத்து மணிமேகலையில் இடம் பெறுகிறது எனலாம்.
அதன்பிறகு வேதவாதி என்ற வாதியின் வாதமாக மீமாம்சையின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. மீமாம்சை என்ற பெயரில் மணிமேகலை குறிக்கவில்லை என்றாலும், வேதவாதி கருத்துக்கள் மூலம் மீமாம்சைக் கருத்துக்களைக் கூறுவது உண்மையாகும். வேதவாதி கூறும் கருத்துக்கள் கீழ்வருமாறு மணிமேகலையில் இடம் பெற்றுள்ளது.
"கற்பம் கை சந்தம் கால் எண் கண் தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு உற்ற வியாகரணம் முகம் பெற்றுச் சார்பில் தோன்றா ஆரண வேதக்கு ஆதி அந்தம் இல்லை அது நெறி எனும் வேதியன் உரையின் விதியும் கேட்டு" (பாடலடி 100 - 105)
என்பது வேதவாதி கூறும் கொள்கையாகும். இதில் வேதமே சிறப்புடையது என்ற கொள்கை இடம் பெற்றுள்ளது. மீமாம்சகர் வேதத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பர். எனவே மீமாம்சை சைமினி என்ற ஆசிரியர் பெயராலும், வேதம் சிறப்புடையது என்று கூறும் வேதவாதியின் கொள்கைச் சார்பாலும் மணிமேகலையில் மீமாம்சை மதம் இடம் பெற்றுத் திகழுகின்றது. எனவே அம்மதத்தின் கருத்துக்களை ஆய்வாளர்களின் கருத்து வழியும், பிற்காலச் சிவஞானச்சித்தியாரின் வழியும் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மீமாம்சை மதம்
வேதத்திற்குக் கொடுக்கும் இடத்தை ஒட்டி இந்திய நாட்டில் வழங்கி வந்த மதங்களை மூன்றாகப் பிரிக்கலாம். இம்மூன்றில் முதலாவதாக அமைவது வேதத்தை முழுமையாக எதிர்ப்பவை ஆகும். இப்பிரிவுக்கு எடுத்துக்காட்டாகச் சமண மதத்தைக் குறிப்பிடலாம். இம்மதங்கள் வேதங்களை எந்தவிதத்திலும் பிரமாணமாகக் கொள்வதில்லை.
இரண்டாவது பிரிவு வேதத்தை ஏற்பன. ஆனால் அதே சமயம் வேதங்கள் கூறுவன உண்மை என்பதை நமது அறிவைக் கொண்டு, நிலைநாட்ட வேண்டுமென விரும்புவன. இவ்வித சமயங்களுக்கு எடுத்துக்காட்டாக நியாய வைசேடிக மதங்களைக் குறிப்பிடலாம்.
மூன்றாவது பிரிவு அவ்வாறு ஆய்கின்ற பொழுது, வேதவாக்கை முழுமையாக ஏற்றுக் கொள்வது இன்றியமையாததாகும் எனக் கொண்டு வேதத்தைப் பிரமாணமாக ஏற்பது. இக்கொள்கைக்கு உரியதே மீமாம்சையாகும் என்று மூன்று பிரிவுகளைப் பற்றிக் கி. லெட்சுமணன் அவர்கள் குறிப்பிடுவார்கள். (1)
மீமாம்சையின் தோற்றம்
இந்திய மெய்ப்பொருளியலில் வேதத்தின் இயல்பைக் குறித்து ஆராயும் சமயமான மீமாம்சைக் கொள்கைகளைத் தந்தவர் சைமினி முனிவர். இவருடைய காலம் கி.மு. 400 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். சைமினி முனிவரின் கொள்கைகளுக்க விளக்கம் தந்தவர் சபர முனிவர் என்பவர் ஆவார். அவர் கி.மு. 200ஆம் ஆண்டைச் சார்ந்தவர். பின்னர் பல ஆண்டுகள் உருண்டோடிட கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த குமாரிலபட்டர், சபர முனிவரின் உரைக்கு விளக்கம் எழுதினார். அவரின் மாணவர் பிரபாகரர் என்பவரும், சபர முனிவரின் உரைக்கு உரை செய்தார். அதுபோல குமாரிலபட்டரின் மற்றொரு மாணவர் மண்டனவிசிரர் முனிவர் அதனை ஒட்டி, விதிவேகம் என்ற நூலை எழுதினார். இவரின் காலம் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். விதிவேகம் நூலிற்கு வாசஸ்பதி மிஸ்ரா என்பவர் நியாய கணிகை என்ற பெயரில் பேருரை எழுதினார். இதன் காலம் கி.பி. 850 என்பர். பின் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இம்மதத்திற்குரிய கொள்கைகளைத் தாம் எழுதிய உரை நூலில் தேவசுவாமி என்பார் விவரித்துக் காட்டினார் என்பர். இவ்வாறு கி.மு. நான்காம் நூற்றாண்டில் தொடங்கி மீமாம்சை மதம் படிப்படியாக வளர்நிலை பெற்றது என்று கூறப்பெறும். (2)
இந்த மீமாம்சை மதம் இருவகையாகக் கூறப்படுவதுண்டு. சபரர் எழுதிய உரைக்கு மாற்றாகக் குமாரிலபட்டர் உரை செய்தது முதல் பட்டாச்சாரியார் மதம் மீமாம்சையில் ஒரு பிரிவு தொடங்கியது. அதே நேரத்தில் இவருடைய மாணவர் பிரபாகரர் எழுதிய உரையின்வழி பிரபாகர மதம் என்ற ஒரு பிரிவு தோன்றிற்று. இவ்விருவகை மதமும் வேதத்தின் முதற் பகுதியான கருமகாண்டத்தின் செய்திகளை ஆராய்ந்ததால் பூர்வ மீமாம்சை என்றும் அழைக்கப்பட்டன. இந்த பூர்வ மீமாம்சையே தமிழகத்தில் நிலவிய சமயமாகும்.
வேதங்களின் உட்பிரிவாகிய பிரமாணங்கள் பெரும்பாலும் கிரியைகளையும் விதிகளையும் கொண்டவை. இன்ன இன்ன பயன்களைப் பெறுவதற்கு இன்ன இன்ன கிரியைகளைச் செய்ய வேண்டும் என விதிகள் வகுத்திருப்பதைக் காணலாம். நல்ல பலன்களைப் பெறுவதற்கு மட்டுமின்றி, தீயவைகள் வராமல் தடுப்பதற்கும் பலவிதக் கிரியைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மீமாம்சை தொடக்கத்தில் இந்தக் கிரியைகளை மட்டுமே வகுத்தும், தொகுத்தும் பேசும் மதமாக இருந்தது. கிரியா பலன்களைப் பற்றியே மிகுதியும் பேசுவதினால் கரும மீமாம்சை என்ற பெயரும் இதற்கு இடப் பெற்றது. உயிர்கள் சுவர்க்கம் புகுவதற்கு வேண்டிய கிரியைகளைச் செய்வதே மீமாம்சையின் இலட்சியமாக இருந்தது. காலப்போக்கில் ஏனைய தரிசனங்களைப் பின்பற்றித் தாமும் தத்துவ ஞானத்தை மீமாம்சகர் வரையறை செய்யத் தலைப்பட்டனர். அவர்களது இலட்சியம் மாற்றம் அடைந்தது. சுவர்க்கம் பெறும் இலட்சியம் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக அவர்கள் சுவர்க்கத்தை விட மேலானதாகக் கருதப்படும் மோட்சம் அதாவது வீடுபேறு பற்றிப் பேசத் தொடங்கினர்.
நூல்கள்
இம்மதத்தில் சிறந்து விளங்கிய நூல்கள் மிகப்பல என்றாலும் மிகப் பழைய நூல் கல்பசூத்திரம் ஆகும். அதன்பின் சைமினியால் இயற்றப் பெற்ற மீமாம்ச சூத்திரம் முக்கிய நூலாகும். மீமாம்சக சூத்திரத்திற்குப் பெரும் விளக்கவுரையான பாடியம் சபர முனிவரால் இயற்றப் பெற்றதாகும்.
கொள்கைகள்
மீமாம்சகரின் கொள்கைகளைப் பற்றிய செய்திகள் மெய்ப்பொருள் துறை ஆசிரிரயர்களால் குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைக் காணலாம்.
கடவுள் கொள்கை
மீமாம்சகர் நியாய மதத்தினர் கூறுவது போலப் பரமான்மா ஒன்று உண்டு என்பதை ஒப்புக் கொள்வதாகத் தோன்றவில்லை. மீமாம்சகர் ஆத்திகரா, நாத்திகரா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டு. மீமாம்சகருள் முதன்மை பெற்றவராகிய சைமினி தமது நூலிலே இறைவனைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிடாமையைக் கொண்டு மீமாம்சகர் நாத்திகர் என்று முடிவு செய்யக் கூடாது என்று டாக்டர். இராதாகிருஷ்ணன் குறிப்பிடுவார்.(3) அவரின் குறிப்பால் சைமினி கடவுளைப் பற்றிக் குறிப்பிடவில்லையே தவிர, கடவுள் இல்லை என்று அவர் குறிப்பிடவில்லை. மீமாம்சை மதத்தைச் சார்ந்த வேறு சில நூல்களில் கடவுள் ஒருவர் தேவையில்லை என்பதற்கும் பல காரணங்கள் கூறப் பெற்றிருப்பதையும் இராதாகிருஷ்ணன் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
மீமாம்சகரின் ஒருசில அறிஞர்கள் கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க என்னென்ன நுட்பமான காரணங்களைக் கூறமுடியுமோ அவை அனைத்தையம் கூறி விட்டார்கள். ஆனால் ஒரே ஒரு செய்தியை நினைவு படுத்துகிறார் இராதாகிருஷ்ணன். மீமாம்சகருக்குள்ளே காலத்தால் முற்பட்டவர்கள் கடவுள் உண்டோ இல்லையோ என்பதைப் பற்றித் தங்கள் கருத்துக்களைக் குறிப்பிடவில்லை என்றும், இடைக்கால மீமாம்சகர் சிலர் கடவுள் இல்லை என வெளிப்படையாகவே வாதித்துத் தம் கருத்தை வெளியிட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.(4)
இன்றைய நாத்திக வாதிகளுக்கும் கடவுள் இல்லை என்று கூறுகின்ற மீமாம்சகர்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. இன்று கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகவாதிகள் வேதத்தையோ, அதன்வழி வந்த விளக்கங்களையோ ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் மீமாம்சகரோ வேதத்தையும் அதன் சடங்கு முறைகளையும் தலையாயதாக ஏற்றுக் கொள்கின்றனர். இன்னும் கூறப் போனால் மீமாம்சகர் கடவுள் இல்லை என்று வாதிப்பதற்கு அவர்கள் வேதத்தை மிதமிஞ்சி மதித்தமையே முக்கியக் காரணமாகக் கொள்ளலாமோ என்று கூடத் தோன்றுகிறது என்கிறார் கி. லெட்சமணன்.(5)
வேதத்தைப் பிரமாணமாக ஏற்றக் கொள்ளும் மீமாம்சகர் வேதங்கள் வற்புறுத்தும் தெய்வ உண்மையை ஏற்றுக் கொள்ளாமை பெரும் வியப்பைத் தருகிறது. எனவேதான் மணிமேகலையில் தனி நிலையில் இடம்பெறவில்லை என்றாலும் இக்கொள்கையோடு பொருந்திய நியாய வைசேடிகரோடு ஒத்து எண்ணப்படுகின்றனர்.
கடவுள் உண்மை இல்லை என்பதற்கு அவர்கள் காட்டும் மூன்று பிரமாணங்கள் முக்கியமானவையாகும்.
1. கடவுள் உண்டு என்பதை நேரிடையாகக் காட்டுவது அறிவு.
இறைவன் உண்டு என்பதை அனுமானம் மூலம் நிரூபிக்கலாம் என்றால் அதுவும் இயலாது. ஏனென்றால் பிரத்தியட்சம் என்ற காட்சி அளவைதான் அனுமான அளவைக்கு அடிப்படையாகும். இறைவைனைக் காட்சி அளவில் காட்ட முடியாது என்றால் காட்சி அளவையை அடிப்படையாகக் கொண்டு அனுமான அளவையாலும் காட்ட இயலாது. எனவே இரண்டு அளவைகளும் கடவுள் உண்டு என்பதற்கு உதவமாட்டா.
அடுத்த அளவை உரை அளவையாகும். கடவுள் உண்டு என்று கூறுகின்றவர்கள் அனுமான அளவையோடு இந்த உரை அளவையைத் தான் அடிப்படையாகக் கொண்டு தங்கள் கருத்தை நிறுவுவர். அதாவது வேதத்தில் கடவுளைப் பற்றிக் கூறப் பெற்றிருக்கிறது. வேதத்தில் கூறப்படும் யாவும் உண்மை. கடவுள் உண்டு என்று கூறப்படுகின்ற வேதப் பகுதிகள் முக்கியமானதும், மறுக்க முடியாததுவும் ஆகும். அவர;களைப் பார்த்து மீமாம்சகர் வேதம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அதற்குக் கடவுள் உண்டு என்று கூறும் ஈசுவரவாதிகள் வேதம் கடவுளின் வாக்கு, அது கடவுளால் செய்யப் பட்டது என்று விடை கூறுவர்.
இதை ஏற்றுக்கொண்ட மீமாம்சகர் மீண்டும் அவர்களை நோக்கி, ஒரு கருத்தை வெளிப்படுத்துகின்றனர். கடவுள் தானே செய்த ஒரு நூலில் தன் உண்மையைப் பற்றி எழுதினார் என்றால் அது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? ஒருவர் தன்னைப் பற்றியே தனது நூலில் கூறுவாரேயானால் அதை எவ்வாறு ஏற்க இயலும்? என்று கூறுவர்.
2. வேதம் கடவுளால் இயற்றப் பட்ட நூல் அல்ல.
வேதம் கடவுளால் செய்யப்பட்டது என்றோ, மனிதனால் செய்யப்பட்டது என்றோ வரையறுத்துக் கூறமுடியாது. வேதம் யாராலுமே செய்யப்பட்டது அல்ல என்பது அவர்தம் கொள்கையாகும். இதனை உணர்த்தவே வேதத்தை அவர்கள், ‘‘அபௌர்ஷேயம்"" என வழங்குகின்றனர். இதற்குப் பொருள் - மனிதனால் ஆக்கப்பட்டவை அல்ல என்பதாகும். வேதம் என்பது தாமே தோன்றியதே தவிரச் செய்யப்பட்டது இல்லை. செய்யப்பட்டது என்று சொன்னால் செய்யப்பட்டவனைக் குறிக்க வேண்டும். எனவே வேதத்தைச் செய்யப்பட்டதாகக் கொள்ளாமல், தோன்றியதாகக் கொள்வர். இதன் மூலம் வேதத்தை ஏற்றுக் கொண்டாலும், வேதம் யாராலும் செய்யப்பட்டது இல்லை என்று கூறுவதால் இவர்தம் கடவுள் மறுப்புக் கொள்கையின் இரண்டாவது கருத்து பெறப்படுகிறது.
3. யாகத்திற்குக் கொடுத்த மதிப்பு
மீமாம்சகரால் மதிக்கப்படுகின்ற வேதத்தில் அவன் எல்லாம் அறிபவன், அவன் உலகை அறிவான் என்பன போன்ற தொடர்கள் உள்ளனவே அவை எல்லாம் கடவுளைக் குறிக்கவில்லையா? என்று கேட்டால் அவை, இறைவனைக் குறிக்கவில்லை, வேதத்தில் கூறப்படும் யாகங்களைச் செய்பவனையே குறிக்கின்றன என்பர். இதிலிருந்து கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, மீமாம்சகர் யாகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது பெறப்படும்.
கடவுள் உண்டு என்று கூறுகின்றவர்கள் உலகத்தைக் கடவுள் தோற்றவித்து, அழிக்கவும் வல்லமை படைத்தவன் என்று கூறுவார்கள். இவ்வாறு அழிவதற்கும் தோன்றுவதற்கும் சேதனப் பொருளாகக் கடவுள் வேண்டும் என்று கூறுவர். ஆனால் இதனை மீமாம்சகர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். உலகில் உள்ள பொருள்கள் தோன்றித் தோன்றி அழியுமே தவிர, உலகம் முழுவதும் ஒரே காலத்தில் தோன்றுவதில்லை, பின் ஒரு காலத்தில் முழுமையும் அழிவதும் இல்லை. அது என்றும் இருந்தபடியே இருக்கும். எனவே அதன் தோற்ற அழிவிற்கு ஒருவன் தேவையில்லை என்பார்கள்.
மேலும் கடவுள் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தும் பொழுது, சட சம்பந்தமான உடலை உடையவருக்குத்தான் படைத்தல் போன்ற ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும். இறைவனுக்குச் சட சம்பந்தமான உடல் உண்டு என்றால் அந்த உடலை அவனுக்குக் கொடுத்தவர் யார்? அந்த சடப்பொருள் இறைவனுக்கு இருக்கிறது என்றால் , இறைவன் உண்டாவதற்கு முன் அந்த சடப்பொருள் எங்கிருந்தது? இறைவனுக்கு முன்னே இருந்து, இறைவனுக்கு ஆகிய அந்த சடப்பொருளைத் தோற்றுவித்தவர் யார்? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி இறைவன் இல்லை என்று மறுப்பார்கள். இவ்வாறு மீமாம்சகர்கள் வேதத்தை ஏற்றுக் கொண்டு, அதைச் செய்வதற்குக் கடவுள் தேவையில்லை என்ற கருத்தை உடையவர்களாக விளங்கினர் என்று தத்துவஞானிகள் குறிப்பிடுவர்.(6)
ஆன்மாவைப் பற்றிய மீமாம்சகர் கொள்கை நியாய வைசேடிகர் கொள்கையை ஒத்ததாகும். ஆன்மாக்கள் என்றும் உள்ளவை, எங்கும் நிறைந்தவை என அவர்கள் கருதுகின்றனர். ஆன்மாவானது மனத்தால் நேராக அறியக் கூடிய ஒரு பொருள் என்பதை மீமாம்சகர் ஏற்றுக் கொள்கின்றனர். மனத்தால் அறியப்படுகின்ற ஆன்மா மனத்திலிருந்து வேறுபட்ட பொருள் அல்ல. ஆன்மாவை உணருகின்ற பொழுதே, அவ் ஆன்மாவாகிய பொருளைப் பற்றிய அறிவும் , அதனை நான் காணுகின்றேன் என்ற தன்னறிவும் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன என மீமாம்சகர் கொண்டு மனத்தால் ஆன்மா அறியப்படுகின்றது என வாதிப்பர். ஆன்மாவிற்கு அறிவு என்பது ஒரு தொழிலாகும் என்பர். தொழில் நிகழும் பொழுது செய்பவனும் பாதிக்கப்படுகிறான். தொழில் படும் பொருளும் பாதிக்கப்படுகிறது என்ற கொள்கையை அவர்கள் உடையவர்கள். அதாவது மேசையை என்று அறிய எண்ணும் பொழுது, அறிதலாகிய தொழில் ஒரு புறம் நிகழ, ஒருபுறம் அறிபவனாகிய என்னையும் , மறுபுறம் அறியப்படுகின்ற மேசையையும் பாதிக்கிறது எனக் கொண்டு, ஆன்மா மனத்தால் எண்ணுகின்ற பொழுதே, மனமும் ஆன்மாவும் ஒன்றுபட்டு உணரப்படுகின்றன என்ற கொள்கையை உடையவர்கள் மீமாம்சகர்கள்.
கன்மவினை
மீமாம்சகர் கொள்கைகளில் கன்மவினைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. இவர்கள் கன்மத்திற்கு உயர்வு கொடுப்பதால்தான் இறைவன் இல்லை என மறுக்கின்றனர். இவர்கள் சமணரைப் போன்று இக்கொள்கையில் அழுத்தம் உடையவர்களாக விளங்குகின்றனர். கன்மம், இறைவன் என்ற இரண்டையும் ஏற்கும் மதத்தினர், புண்ணியத்தின் பயனை அதிகரிப்பதும், பாவத்தின் பயனைக் குறைக்கவும் இறைவனின் அருள் உதவும் என்று கூறுவர். ஆனால் இறைவன் தேவையில்லை, கன்மமே போதும், அக்கன்மம் தான் சர்வ வல்லமை உடையது எனக் கொள்வோரின் கருத்தில், அருள் என்பதற்கு இடமில்லை. எனவே இவர்கள் கன்மத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், கன்மவினை இன்ப துன்பங்களைத் தருகின்றது எனக் கருதுவதால், வாழ்க்கையின் ஒழுக்க முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் ஆகின்றனர் மீமாம்சகர்.
உலகத்தை இறைவன் படைக்கவில்லை என்ற கொள்கை உடையதால், உலகப் பொருள்களின் தோற்றத்திற்குக் காரணம் கூற வேண்டியவர்களாக மீமாம்சகர் அமைந்து விடுகின்றனர். அவர்கள் உலகப் பொருள் தோன்றுவதற்குக் காரணம், கன்மத்தின் விளைவே என்கின்றனர். இவ்வாறு அவர்கள் குறிப்பிடுவதால், உலகப் பந்தத்திற்குக் காரணம் கன்மநிலையே என்ற கொள்கை வலிமை பெறுகிறது. உலகப் பந்தத்தை நீக்க வேண்டுமானால் கன்மத்தைத் தவிர்க்க வேண்டும். மீமாம்சகர் கன்மத்தை நீக்க வேண்டும் என்று கூறிக் கன்மத்தை மூன்று வகையாகக் காட்டுவர். அவை - காமிய கன்மம், பிரவி சித்த கன்மம், நித்திய கன்மம் எனப்படும். காமிய கன்மம் புண்ணியத்தைத் தரும். பிரவி சித்தம் பாவத்தைத் தரும், நித்திய கன்மம் இரண்டையும் தரும். இத்தகைய கன்ம நீக்கமே, முத்திநிலை என்பர்.
சிவஞான சித்தியாரும் - மீமாம்சையும்
இதுவரை கூறப்பட்ட மீமாம்சை பற்றிய கருத்துக்கள் மணிமேகலையில் வேதவாதிகளின் சார்பில் கூறப்பெற்ற மீமாம்சை நாட்டில் வழங்கி வந்த நிலை, ஆய்வாளர்களால் ஆய்ந்து கூறப்பெற்ற கருத்துக்களாகும். தமிழில் மணிமேகலை தொடங்கி வைத்த கருத்தைச் சைவ சித்தாந்த சாத்திர நூலான சிவஞான சித்தியார் என்ற நூல் மீமாம்சை பற்றிய கருத்துக்களைக் இக்காலத்தினர் அறிந்து கொள்ளும் வண்ணம் பாடல்களால் தருகின்றது. சிவஞான சித்தியாரைப் படைத்தவர் அருணந்தி சிவாசாரியார் ஆவார். அவர் பரபக்கம், சுபக்கம் என்று இரு பகுதிகளாகத் தம் சிவஞான சித்தியாரைப் படைத்துள்ளார். இதில் பரபக்கம் என்பது அருணந்தியார் காலத்தில், நாட்டில் நிலவி வந்த சைவத்தைத் தவிர்த்த, மற்ற மதங்களின் கருத்துக்களைக் கூறி, அவற்றை மறுத்துச் சைவ சித்தாந்தமே சிறந்தது என்று வாதிடுகின்ற பகுதியைக் கொண்டதாகும். சுபக்கம் என்பது சைவ சித்தாந்தக் கொள்கைகளைச் சிவஞான போதத்தின் பனிரெண்டு சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் விரிவான கருத்துக்களைத் தருவதாகும்.
சிவஞான சித்தியாரின் முதல் பகுதியான பரபக்கம் கூறுகின்ற மதங்களில் ஒன்று மீமாம்சையாகும். இம்மீமாம்சையின் பூர்வ மீமாம்சையான பட்டாச்சார்யன் மதம், பிரபாகரன் மதம் என்ற இரண்டு மதக் கொள்கைகளையும் , பதினைந்து பாடல்களில் அருணந்தி சிவாசாரியார் குறிப்பிட்டுள்ளார். எனவே இக்காலத்து மணிமேகலை மதங்களின் நிலை என்ற நிலைக்கு அருணந்தியாரின் பாடல்கள் சான்றுகளாக அமைகின்றன.
அறிமுகம்
"வேதமே ஒதிநாதன் இலை என்று விண்ணில் ஏறச் சேதமாம் கன்மம் செய்யச் செயிமினி செப்பும் நூலின் நீதியே கொண்டு பட்டாசாரியன் நிகழ்த்தும்" (பாடலடி- 181)
என்பது பட்டாசாரியன் மதத்தின் அறிமுகம் ஆகும். நான்கு வேதங்களை ஓதி வேதங்கள் இல்லாது ஒரு தனிக்கடவுள் இல்லை. வேதங்களில் கூறுகின்ற வேள்வி முதலிய சடங்குகளைச் செய்து, விண்ணுலகத்தை அடையலாம். சைமினியால் அருளப்பெற்ற நூலின் வழி பட்டாசாரியன் மதக் கொள்கைகளை அறியலாம். கடவுளைப் பற்றிச் சொல்கின்ற சித்தியார் பாடல் அடுத்து அமைகின்றது.
"உண்டுஒரு கடவுள் வேதம் உரைத்திட உயிரின் தன்மை கொண்டவன் அல்லன் என்று கூறிடின் உருவன் கூடில் பண்டைய உயிரே ஆகும் படித்தநூல் அளவுஞானம் கண்டிடும் உருவம் இன்றேல் கருதுவது இல்லை என்றான்" (பாடலடி - 183)
இதன் பொருள்: வேதங்களைக் கூறுவதற்குக் கடவுள் உண்டு என்றும், அக்கடவுள் உயிர் போன்றவன் அல்ல என்றும், யாரேனும் கூறினால் அது முரண்பாடு உடையதாகும். ஏனென்றால் வேதத்தைச் சொன்னவன் கடவுள் என்றால் அவனுக்கு உருவம் வேண்டும். உருவத்தை உடையவன் ஆயின் அவன் ஆன்மாவிற்கு உரிய தன்மை உடையவன் ஆகின்றான். அப்பொழுது அவ் ஆன்மாவிற்கு உரிய அறிவுதான் அவனுக்கு ஏற்படுமே தவிர, ஆன்ம அறிவிற்கு மேலான வேதத்தைக் கூறுகின்ற அறிவு ஏற்படாது. மேலும் அவனுக்கு வடிவில்லை. வேதத்தைச் சொல்கின்ற தன்மையும் இல்லை. ஆகவே வேதமானது தானே தோன்றியது ஆகும் என்பது பாடலின் பொருளாகும்.
"வேதங்கள் தாமே வெளிப்பட்டன. மனித நிலையிலோ தெய்வ நிலையிலோ செய்யப்படாதது. தாமே வெளிப்பட்ட நிலையினை உடையவை. ஏனென்றால் வேதங்கள் புருடர்களால் அல்லது ஆசிரியர்களால் எழுதப்பட்டிருக்குமானால், எழுதப் பெற்றோர்களது பெயர்கள் வருங்கால மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எனவேதான் வேதம் சுயம்பு என்கின்றனர் மீமாம்சகர் என்று இக்கால ஆய்வாளர்கள் குறிப்பர்" (7)என்ற இக்கருத்தும் இங்கு ஒப்பிடத் தக்கதாகும்.
என்ற பாடல் பகுதியின்படி வேதங்களில் கூறப்பட்ட முறைப்படி சடங்குகளைச் செய்தால், பாசம் நீங்கி வீடுபேறு கிடைக்கும் என்பது பொருளாகும். இங்கு கூறப்பட்ட பகுதிகளால் வேதத்தின் சிறப்பு பெறப்படுகிறது.
மீமாம்சகர் இறைவன் இல்லை என்று கூறுவதோடு உலகம் தானே தோன்றய அனாதி என்பதைச் சிவஞானசித்தியார் கீழ்வரும் பாடல் மூலம் குறிப்பிடுகிறது.
‘‘போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வது இன்றி ஆக்கவேறு ஒருவர் இன்றி அநாதியாய் அணுக்கள் ஆகி நீக்கிடா வினையில் கூடி நிலம்முத லாகநீடி ஊக்கமார் உலகம் என்றும் உரைக்க லாமே" (பாடலடி - 188)
அடுத்து ஆன்மா பற்றிக் குறிப்பிடும் பொழுது, ஆன்மாவனாது நிலைபெற்றது, அழிவில்லாதது, பரந்து நிற்பது, அறிவையே தனக்கு வடிவமாகக் கொண்டது, புத்தி முதலாகிய தத்துவங்களோடு பொருந்தி தன் இயல்பை மாறாது பெற்றிருப்பது, தத்துவங்கள் நீங்கினால் குற்றமற்று இருப்பது, அருவமானது, வினைக்கு ஏற்ப உடலைப் பெறுவது என்ற மீமாம்சகர் கொள்கையைச் சிவஞானசித்தியார் கீழ்வரும் பாடல் மூலம் குறிப்பிடுகிறது.
"நித்தமாய் எங்கும் உண்டாய் நீடுயிர் அறிவு தானாய்ப் புத்திதான் ஆதி யாய கருவியின் புறத்தது ஆகிச் சுத்தமாய் அருவம் ஆகித் தொல்லைல் வினையின் தன்மைக்கு ஒத்ததோர் உருவம் பற்றிப் புலன்வழி உணர்ந்து நிற்கும்" (பாடலடி - 189)
என்பது பாடலாகும். உயிரானது வேதங்களில் கூறப்பெற்ற கருமங்களை, அல்லது சடங்குகளைச் செய்தால் வீடுபேறு கிடைக்கும் என்ற கொள்கையைச் சிவஞானசித்தியார் கீழ்வரும் பகுதியால் குறிப்பிடுகின்றார்.
"தீதிலா இச்சாகன்மம் செந்தழல் ஒம்பிச் செய்ய ஆதிதான் ஆசை வீசி அமைத்திட வீடு அது ஆமே" (பாடலடி - 190)
என்பது பாடற் பகுதி. இவ்வாறு பட்டாசாரியார் மதக் கொள்கைகளைக் குறிப்பிட்ட சிவஞானசித்தியார், பிரபாகரன் மதம் பற்றிய கருத்துக்களையும் தருகிறது. அதில் ஒரு பாடல்.
என்பது பாடல். ஆன்மா செய்த கன்மத்தின் பயன் அபூர்வம் என்ற நிலையைத் தருகிறது. கன்மத்தைச் செய்கின்ற பொழுது ஆன்மா அறிவோடு கூடி நிற்கிறது. கன்மம் முடிந்த பொழுது அதற்குரிய பயனாகிய இந்த அபூர்வமே ஆன்மாவிற்கு வீட்டுப்பேற்றினைத் தருகிறது என்று பிரபாகரன் மதம் முத்தி பற்றிக் குறிப்பிடுகிறது. இவை போன்ற மீமாம்சகர் மதம் பற்றிய கருத்துக்கள் சிவஞானசித்தியாரில் இடம் பெற்றுள்ளன.
முடிவு
மணிமேகலையில் தனி ஒரு நிலையில் மீமாம்சை மதம் பற்றிய கருத்துக்கள் இடம் பெறவில்லை என்றாலும், வேதவாதியின் கூற்றில் மீமாம்சை பெறப்படுகிறது. அம்மதம் பற்றிய தத்துவ ஆய்வாளர்களின் கருத்தையும், பிற்காலச் சிவஞானசித்தியாரில் இடம் பெற்ற கருத்துக்களையும் இக்கட்டுரை தந்துள்ளது.
அடிக்குறிப்புகள்
1. இந்தியத் தத்துவ ஞானம், ப. 259. 2. அருணந்தி சிவாசாரியார் நூல்கள் ஓர் ஆய்வு, முனைவர்.பழ.முத்தப்பன், 2001, ப.163 3. இந்திய மெய்ப்பொருளியல் வரலாறு. அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, ப. 146 4. மேற்படிநூல், ப. 148 5. இந்தியத் தத்துவ ஞானம், 1980, ப. 275 6. கி. லெட்சுமணன், இந்தியத் தத்துவஞானம், ப. 276 - 278
7. வி. ஏ. இராமசாமி, கீழை மேலை மெய்ப்பொருள் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு, 1970, ப. 460