3. மணிமேகலையில் புத்தமதக் கருத்துக்கள் முனைவர் இரா. குமார்
மணிமேகலையில் உள்ள 30 காதைகளில் மூன்று காதைகளில் புத்தமதக் கருத்துக்கள் போதிக்கப்படுகின்றன. அவை;
1.சமயக் கணக்கர் தந்திரம் கேட்ட காதை (காதை.27)
2. தவத்திறம்பூண்டு தருமம் கேட்ட காதை (காதை.29)
3.பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை (காதை.30)
என்பனவாகும்.
அவற்றுள் முன்னதில் பல சமயங்களின் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. பின்னைய இரண்டிலும் புத்தமதக் கருத்துக்கள் உள்ளன. அக்கருத்துக்கள் சிறுகதையாகவும், நேரடியாகவும், பாத்திரங்கள் வாயிலாகவும் உணர்த்தப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மணிமேகலையில் புத்தமதக் கருத்துக்கள்
மக்கள் பணிதான் உயர்ந்த தர்மம் என்பதை மணிமேகலை போதிக்கிறது. மற்ற மதங்கள் பொய்மதங்கள். அவைகள் கூறுவன பொய்யுரைகள், படிற்றுரைகள் என வன்மையாகக் கூறுகின்றன. புத்தரையும் புத்தமதக் கருத்துக்களையும் போற்றி உரைக்கின்றது மணிமேகலை. புத்த தர்மத்தைப் போதிக்கும் இந்நூல் மணிமேகலைத் துறவு என அழைக்கப்படுகிறது. இந்நூல் அறத்தைப் போதிக்கிறது. சிலப்பதிகாரம் இதிலிருந்து மாறுபட்டு அரசியலைப் போதிக்கிறது. மணிமேகலை எதிரிகளால் சோம்பி வீழவில்லை, துறவு நிலையில் உறுதியுடன் நின்று வெற்றி பெறுகிறாள். தான் பரத்தமைத் தொழிலுக்கு உரியவள் அல்லள் என்பதை மெய்ப்பிக்கிறாள். இவள் திறம் உரைக்கும் இந்நூலில் புத்தமதக் கருத்துக்களாக,
கள்ளுண்ணாமை
உயிர்க்கொலை நீக்கம்
ஆசை கூடாது
பொய்யுரைக்கக் கூடாது
காமம் கொள்ளுதல் கூடாது
களவாடக் கூடாது
என்பவை வலியுறுத்தப்படுகின்றன.
கள்ளுண்ணாமை
சாதுவன் நாகர் தலைவனிடம் கள்ளுண்ணுதல் கூடாது, காமம் கொள்ளுதல் கூடாது என்பதை அறிவுறுத்துகிறான். கடலில் உணவின்றி அலைந்து திரிந்த சாதுவனுக்கு நாகர் தலைவன் பணியாள்களிடம் சொல்லி அழகுள்ள நங்கையையும், கள்ளையும், மாமிசத்தையும் கொடுங்கள் என்றான். அதனை,
அருந்துதல் இன்றி அயலகடல் உலந்தோன் வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் நம்பிக்கு இளையள்ஓர் நங்கையைக் கொடுத்து வெம்கள்ளும் ஊனும் வேண்டுவ கொடும் (காதை:16:74-77)
என்ற அடிகள் புலப்படுத்தும். அது கேட்ட சாதுவன் இவை கொடிய மொழிகள், அவற்றை நான் விரும்பவில்லை என்றான். அது கேட்ட நாகர் தலைவன் பெண்டிரால் பெறும் இன்பமும், உணவால் பெறும் இன்பமும் மக்களுக்கு இல்லையெனில் அவர்கள் இவ்வுலகில் பிறந்து பயன் என்ன?
என்ற அடிகள் விளக்கும். அறிவை மயக்கும் கள்ளையும், பிற உயிரைக் கொல்வதையும் சான்றோர் வெறுத்து ஒதுக்கியுள்ளனர் என்பது கருத்து. பாவம் செய்பவர் நரகத்தை அடைவர் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயிர்க்கொலை நீக்கம்
ஒரு உடம்பை விட்டுப் பிரியும் உயிர் இன்னொரு உடம்பில் புகும் என்ற கருத்து எப்படிப் பொருந்தும்? என நாகர் தலைவன் சாதுவனிடம் வினவினான். அதற்குச் சாதுவன் உடம்பு நம்மிடம் இருக்கும்போது உயிர் பல இடமும் சென்று உலவி வருவதைப் பலரும் அறிவர். அவரவர் செய்த வினைக்கேற்ப அவ்வுயிர் மற்றொரு உடம்பில் புகும் என்றார். அது கேட்ட நாகர் தலைவன் சாதுவன் காலில் விழுந்து நான் கள்ளையும், ஊனையும் கைவிடுவேன், நான் சாகும்வரை கைகொள்ள வேண்டிய நல்லறத்தைக் கூறியருள்க என்றான். அதற்கு அவன்,
எனப் பதிலிருத்தான். உயிர்களைக் கொன்று தின்னக் கூடாது, ஆனால் மூப்பெய்தி உயிர்விடும் விலங்குகளை உண்ணலாம் என்கிறது புத்தமதம். கப்பல் உடைந்து, பிழைத்து வந்த மக்களை நாகர்கள் கொன்று உண்டுள்ளனர். அதனைக் கைவிடுமாறு நாகர் தலைவனிடம் அறிவுறுத்துகிறான் சாதுவன்.
ஆசை கூடாது
புத்தமதக் கொள்கைகளில் நால்வகை வாய்மை, ஐவகைச் சீலம் முதன்மையானவை. அவைகளைப் பௌத்தர்கள் மறவாமல் கைகொள்ள வேண்டும் என நவில்கிறது மணிமேகலை. அதனை,
உலகில் பிறந்தவர் துன்பத்தை அடைவதும் பிறவாதவர் பேரின்பத்தை அடைவதும் இயல்பே. ஆசை உடையவர்கள் பிறப்பெய்துவார்கள். ஆசை இல்லாதவர்கள் பிறப்பெய்தமாட்டார்கள் என்ற கருத்து ஈண்டு விளக்கப்பட்டுள்ளது.
பிற கருத்துக்கள்
அறிவு உள்ளவர்கள் கள்ளுண்டல், பொய்யுரைத்தல், காமம் கொள்ளுதல், கொலை செய்தல், களவாட எண்ணுதல் ஆகியவறைச் செய்யமாட்டார்கள் என்பதை,
உள்ளத்தில் ஒன்றைக் கருதிச் செய்தால் பலன் கிட்டும். இல்லையேல் பலன் கிட்டாது என்கிறது புத்தமதம். புத்தபீடிகையில் ஒரு தெய்வத்தை நினைத்துக் கொண்டு அதில் மலரை வைத்தால் அம்மலர் அத்தெய்வத்தை அடையும். எண்ணாமல் வைத்தால் அம்மலர் அங்கேயே இருக்கும் என்ற கருத்தின் வாயிலாக அதனை உணரமுடியும் (காதை.3:70-77)
பொய்சொல்லுதல், கோள் சொல்லுதல், கடுஞ்சொல் கூறுதல், வீண்பேச்சுப் பேசுதல் ஆகியனவற்றை சொல்லால் வரும் தீமைகளாகவும், கொலைசெய்தல், களவாடுதல், காமவயப்படுதல் ஆகியனவற்றை உடலால் வரும் தீமைகளாகவும், பல பொருளிடத்தும் ஆசை கொள்ளுதல், கோபப்படுதல், தீமைகளைக் காணுதல் ஆகியனவற்றை மனத்தால் வரும் தீமைகளாகவும் மணிமேகலை குறிப்பிடுகின்றது. இவை பத்தும் தீவினைகள். அவற்றைச் செய்தால் விலங்குகளாகவும், பேய்களாகவும், நரகருமாகப் பிறந்து துன்புறுவர். அவற்றைச் செய்யாதவர் தேவர்களாகவும், மக்களாகவும், பரமர்களாகவும் பிறந்து மகிழ்ச்சியுடன் நல்வினைப் பயனை நுகர்ந்து வாழ்வார்கள் (காதை24:123-140)
பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்ற 12 உண்மைகளை உணர்ந்து மனிதர்கள் வாழவேண்டும் என்கிறது மணிமேகலை. (காதை.40:45-130)
பேதமை - முயலுக்குக் கொம்பு உண்டு என்றால் நம்புவது
செய்கை - நல்வினை, தீவினை
உணர்வு - பொருள்களின் உணர்வு
அருவுரு - உயிருக்கு உருவில்லை
வாயில் - வழிமுறைகள்
ஊறு - விஷயங்களை அறிதல்
நுகர்வு - விஷயங்களை அனுபவிப்பது
வேட்கை - ஆசைப்பட்டு அலைதல்
பற்று - ஒரு பொருளை விடாமல் பிடித்துக் கொள்வது
பவம் - செய்த வினைகளின் தொகுதியாகும்
தோற்றம் - பிறப்பு
வினைப்பயன் - தாம் செய்த வினைகளின் பயனை அனுபவித்தல்
இப்பன்னிரண்டையும் அறிந்து துக்கத்திலிருந்து மீளவேண்டும் என்கிறது மணிமேகலை.
மும்மணிகள்
பௌத்த துறவிகளின் கூட்டமே சங்கம் ஆகும். புத்தர்களின் கடமையாக மூன்றை மணிமேகலை கூறுகிறது. அவை,
1. புத்த தர்மத்தைப் பின்பற்றுவது
2. புத்த சங்கத்தை வணங்குவது
3. புத்தரை வணங்குவது
என்பனவாகும்.
பௌத்த சமயத்தைச் சார்ந்த ஆண்களுக்கு பிஷுக்கள் என்றும், பெண்களுக்கு பிஷுணிகள் என்றும் பெயர். இவர்கள் வணங்கும் போது புத்தம் சரணம் கச்சாமி, தன்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என மும்முறை கூறி வணங்க வேண்டும் என்கிறது மணிமேகலை. (காதை30:3-4)இம்மூன்றையும் முத்திறமணி, தருமணி என்பர்.
தொகுப்புரை
நல்வினை, தீவினை அறிந்து மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
பலன் கருதாமல் நல்வினை செய்தால் பிறவாநெறியைப் பெறமுடியும்.
நால்வகை வாய்மை, ஐவகைச் சீலங்களைப் பின்பற்ற வேண்டும்.
பன்னிரு உண்மைகளையும் அறிந்து துக்கத்திலிருந்து மீள வேண்டும்.
புத்தரையும் தன்மத்தையும் சங்கத்தையும் வழிபட வேண்டும்.
எவருக்கும் தீமை செய்யக் கூடாது, துன்புறுவோருக்கு உதவி செய்ய வேண்டும்.
சமண மதத்தையும் இந்து மதத்தையும் பின்னுக்குத் தள்ளி புத்த சமயத்தைப் போற்றுகிறது மணிமேகலை.
செய்யும் செயலை உள்ளப்பூர்வமாகக் கருதிச் செய்தால் பலன் கிட்டும், இல்லையேல் பலன் கிட்டாது.
ஆசை உடையவர்கள் பிறப்பெய்துவார்கள், ஆசை இல்லாதவர்கள் பிறப்பெய்தமாட்டார்கள் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.