13.11.1948 - குடி அரசிலிருந்து...
உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்...
உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச் சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறை களையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.
ஏன் திருக்குறள் தோன்றியது?
ராமாயணம், பாரதம், கீதை இன்னோரன்ன ஆரியநூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள்தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள் வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப் பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில், திராவிடர் களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.
வள்ளுவர் குறளும் ஆரிய நூல்களும்
மக்கள் யாவரும் ஒரே ஜாதி என்கிறது குறள். மக்கள் 4 ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திக் கூறுகிறன இராமாயணமும் கீதையும். அறிவுக்கு மாறான, இயற்கைக்கு மாறான, பல காட்டுமிராண்டித்தனமான கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்து ணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற் கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்தி ருக்கக் கூடியனவும் ஆன கருத்துக் களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.
ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடந்திருக்கக் கூடாததாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக்கின்றன. திருக் குறளில் காணப்படும் நீதிகள் அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன் தரக் கூடியதும், ஏற்கக் கூடியதாகவும், இன்றும் நம்மால் நடத் திக் காட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.
நாட்டையாளும் மந்திரிகளுக்கு ராமாயணக் காலட்சேபமா?
நாம் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டு மென்று திட்டம் போட்டால், அத்திட்டத்தை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க் கிறது ஆரியப் பார்ப்பனியம். நம்மவர்கள் ஆரியத்தின் கையாட்களாகத்தான் நமக்குத் தொல்லை கொடுக்க முன்வருவார்களே ஒழிய, தாமாக ராமாயணம் கொளுத்தப்படுவது பற்றிக் கவலைப்படமாட்டார்கள். ராமாயணப் பிரசாரமும் கம்பர் விழாவும் முதலில் துவக்கப் பட்டதே நம்மிடமிருந்து. சுயநலத்துக்காக ஆரியருக்கு அடிமையான திரு.டி.எம் நாரா யணசாமி பிள்ளையால் ராமாயணப் பிரசாரம் செய்யப் பார்ப்பனர்கள் முன்வந்தார்கள்.
பிறகு இப்போது மந்திரிகளே முன் வந்து விட்டார்கள். இதில் ரெட்டியார் முதன்மை யானவர். ரெட்டியார் ராமாயணத்தைப் பற்றி பிரசாரம் செய்யட்டும், மற்றொரு ஆழ்வாராக ஆக இஷ்டமிருந்தால். ஆனால், மந்திரியாக இருந்து கொண்டு அவ்வேலையைச் செய்வது தவறு என்றுதான் நான் சொல்கிறேன். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள், இது தவறல்லவா என்று.
என்னே ஆரிய சூழ்ச்சி!
கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங்களின் வாயிலாக சினிமாக்களில் படக்காட்சிகளின், பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகத்தின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுவிட்டதன் பயனாய், இன்றும் வலியுறுத்தப்பட்டு வருவதன் பயனாய், நாடாளும் அரசன் முதற்கொண்டு, காட்டி லேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட்டுக்காரப் பையன் வரையும், எல்லோ ருக்கும் ராமனையும் சீதையையும் தெரிந்தி ருக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.
காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டியாருக்குக்கூட குறள் தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்படியாக உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரைகளும் அடங்கிய நூல் பொது மக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப்பட்டு, ராமாயணமும் பாரதமும் எல்லோருக்கும், கக்கூஸ்காரி வரைக்கும் கூடத் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டு விட்டது. திராவிடர்களை இழிமக்களென்று வலியுறுத்தும் நூல்கள் போற்றத்தக்க தன்மை யைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும் படி செய்யப்பட்டு விட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி! என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!
ஆரியத்தின் முதல் நூல்
ராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக்கொண்டால் இவற்றுள் பாரதந்தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். சிலர் ராமாயணந்தான் முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். பாரதத்திற்கு முந்திய நூல் தான் கந்தபுராணம். கந்தபுராணத்தையொட்டிச் சற்று சிறியதாக தொகுக்கப்பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன்.
கந்த புராணந்தான் ஆரியத்திற்கு ஏற்பட்ட முதல் நூல். கந்தபுராணத்தில் காணப்படும் இழி தன்மைகளை சற்று அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைச் சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டதுதான் பாரதம். கந்தபுராணம் சைவ முறையின்பாற் பட்டது. பாரதம் வைணவ முறையின்பாற் பட்டது. கந்தபுராணத்தில் பாரதத்திலுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சில காலம் பொறுத்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம். எனவே, தான் மேல் இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படு கின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபுராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.