New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் “உண்டு


Guru

Status: Offline
Posts: 24800
Date:
திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் “உண்டு
Permalink  
 


திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் “உண்டு

திருக்குறள்,தைத்திரீயஉபநிடதம்ஒப்பீடு என்ற என் முந்தைய வலைப்பதிவின் பின்னூட்டில்,திரு.அஷ்ரஃப், முக்கிய வினாவை/ஐயமொன்றை எழுப்பியிருந்தார்.நன்றி திரு.அஷ்ரஃப்  திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய பல செய்திகளை உள்ளடக்கியுள்ள அகன்ற வலைதளம் இவருடையது.( http://kural-of-valluvar.blogspot.in/ ) திரு.அஷ்ரஃப் திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவில்லை என்பதற்கு அவர்தம் வலைதளத்திலுள்ள பல கூற்றுக்களுள் “He talks about worship, but nothing about the way of worship-திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டைப் பற்றிப் பேசுகிறார்,ஆனால் வழிபடும் முறைகளைப் பற்றி எதுவும் பேசவில்லை“. எனப்பொருள்படும் ஒற்றைக்கூற்றே சான்று.திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டைப் பேசும் முறை பற்றிய என்  வலைப்பதிவு- https://thiruvalluvarkadavulvazhthu.wordpress.com/

திரு.அஷ்ரஃபின் வினா,திருக்குறள் மெய்யுணர்தல் மற்றும் புல்லறிவாண்மை அதிகாரக் குறள்களை மேற்கோள் காட்டி விளக்கத் தூண்டியது. ஆதலின், அவ்வினாவிற்கான என் பதிலுரை நீண்டமையால்,“திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் உண்டு“,என்ற தலைப்புடன் இவ்வலைப்பதிவைத் துவங்குகிறேன்.

திரு.அஷ்ரஃப் அவர்களின் பின்னூட்டு அவர் தட்டச்சு செய்த வண்ணமே தமிழும்,ஆங்கிலமும் கலந்து,இதோ கீழே:

“பின்னூட்டின் துவக்கம்:

 

//குறளில் உள்ள “உண்டு “என்ற சொல் பரமனெனும் மெய்ப்பொருள் அல்லாது வேறு எதைக் குறிக்க முடியும்? //

 

என்று ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள்….. இந்த குறள் ஒரு வேளை கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வந்திருந்தால், நீங்கள் சொல்லுவது 133% சரிதான். ஆனால் இது வரும் அதிகாரம் ‘புல்லறிவாண்மை’. All the 10 couplets in the chapter are generic and it can refer any knowledge. Since Valluvar has devoted few chapters for spiritual knowledge or enquiries elsewhere in Arathuppaal and it comes just after chapter பேதமை, I do not think this word உண்டு has anything to do with மெய்ப்பொருள்.

 

One more point. There is not evidence in Kural to show that மெய்ப்பொருள் is creator God.

 

ஆங்கிலத்திலுள்ள பின்னூட்டின் மொழிபெயர்ப்பு :

 

 ‘புல்லறிவாண்மை’ அதிகாரத்தின் 10 குறள்களுமே பொதுப்படையானவை, அவை,ஆன்மீகம்என்றல்ல,எந்த அறிவுத்துறையையும் சுட்டலாம்.ஆன்மீக அறிவு அல்லது தேடல்கள் குறித்து அறத்துப்பாலின் மற்ற சில அதிகாரங்களில் வள்ளுவர் தெளிவுபடுத்தியமையாலும்,இந்த குறள் உள்ள (எண் ) புல்லறிவாண்மை அதிகாரம் ,பேதைமை அதிகாரத்திற்கு அடுத்து வந்துள்ளமையாலும் இக்குறளிலுள்ள உண்டு என்ற சொல், மெய்ப்பொருளைக் குறிக்காது என்பது என் ( திரு.அஷ்ரஃப்) கருத்து.

 

மற்றுமோர் ஐயப்பாடு : திருக்குறள் முழுவதிலும், மெய்ப்பொருள் என்பது படைத்த ஆண்டவன் என உணர்த்தும் சான்று ஏதுமில்லை.

 

பின்னூட்டின் முடிவு.”

என் விரிவான பதிலுரை:

குறள்களைப் பற்றிய என்னுடைய மொத்தக் கருத்தாக்கமும் பரிமேலழகரின் விளக்கத்தை ஒட்டியும்,குரு.ஸ்வாமி ஓம்காரானந்தா அவர்களிள் குறளும், கீதையும் சொற்பொழிவுகளை ஒட்டியும் மற்றும் இதுவரை மறைமுடிவு நூல்களை செவிமடுத்ததன் அடிப்படையிலும் தான் அமைத்துள்ளேன்.

அதன்படி வள்ளுவனார் மெய்ப்பொருளைத் தான் ‘உண்டு‘ என்ற சொல்லில் பொருளாக்கியுள்ளார் என உறுதியாகக் கூறமுடியும்.இது 133%  என்றவாறு சதவீதம் பற்றியது அல்ல,வெறும் உறுதியுமல்ல, ”மறைவாக்குறுதி” ஆகும், சதம்,வீதம் இரண்டனுக்கும் அப்பாற்பட்டதால்.

உலகத்தார் உண்டென்பார் என்ற குறள் ( குறள் எண் 850 ) கடவுள்வாழ்த்து அதிகாரத்தில் இடம் பெறாமல் புல்லறிவாண்மை அதிகாரத்தில் வந்துள்ளது. ஆகவே மெய்ப்பொருளை, ‘உண்டு‘ என்ற சொல்லுக்குப் பொருளாகச் சொல்லியிருக்கமாட்டார் வள்ளுவர் என்பது முதல்ஐயம். இந்த ஐயத்தை நீக்க மூன்று படிகளில் முயலலாம்.

முதற்படியாக, குறள் எண் 850 ,புல்லறிவாண்மை அதிகாரத்தில் இடம் பெறுவது எங்ஙனம் பொருந்தும் என ஆராய்வது தேவை.அவ்வாறு ஆராயவே தான் இக்குறளிலுள்ள ஆழ்ந்த மறைமொழிக் கூற்று புலனாகும்.

புல்லறிவாண்மை குறள்களின் கருத்துக்களை எண்வாரியாக எடுத்தாய்வோம்.

  1. இல்லாமையில் கொடிய இல்லாமை நல்லறிவு இல்லாமை
  2. புல்லறிவுடையவர் நல்வினை ஆற்றியறியாதவர்
  3. அறிவிலார் தனக்கும் மிக்க தீயன செய்து கொள்வர்
  4. புல்லறிவுடையோரின் இலக்கணம் தன்னைத்தானே அறிவுடையவன் என்ற செருக்கு கொள்வதாகும்
  5. புல்லறிவுடையோரின் மற்றுமோர் இலக்கணம் தான் கல்லாததையும் கற்றது போல் காட்டிக்கொள்வதாகும்
  6. புல்லறிவுடையவர் தன் குற்றத்தை நீக்காதிருப்பர்
  7. புல்லறிவினன் மறையறிவுரை பெற்றும்,ஏற்காது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்திக் கொள்வான்
  8. புல்லறிவினன் அறிவுடையார் சொல்லையும் கேட்கிலன், சொந்த அறிவும் இல்லாதவன்
  9. புல்லறிவினனுக்கு நல்லது புகட்ட முயலும் அறிவுள்ளவன்,தான் அறிவற்றவற்றவனாகக் கருதப்படுவதோடன்றியும், புல்லறிவினன் அறிவுள்ளவனாகக் காட்டப்பட்டு விடுவான்.
  10. உயர்ந்தவர் பலரும் உண்டு என்பதை இல்லை என்பான் புல்லறிவினன்.

இதை நோக்குங்கால்,இந்த அதிகாரம் generic  அதாவது பொதுவானது என எண்ணுவதற்கில்லை.வள்ளுவர் அவர்தம் காலத்து மறைமுடிவு தத்துவ ஆய்வுகளின் போது,மறை ஆசானின் சொற்களை புறந்தள்ளி,தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்பது போல,விதண்டாவாதம் எனச் சொல்லப்படும் வறட்டாக தர்க்கம் ( ஏரணம்) புரிவோரை அடையாளங்கண்டு சாடியிருப்பதாக,மேற்கண்ட குறள்களின் கருத்துகளிலிருந்து ஊகித்தறியலாம்.

முதல் ஐயத்தை நீக்கும் இரண்டாவது படியாக,குறள் எண் 850 கடவுள் வாழ்த்துக் குறளாய் அமையாமல், புல்லறிவாண்மைக் குறளாய் அமைந்தது தகுமா என ஆராய்வோம்.கடவுளின் இலக்கணங்களாக,முதற் குறளில் ஆதிபகவன் எனத் துவங்கி,பத்தாமதில் இறைவன் என நிறைவு செய்து,கடவுளை வாழ்த்திப் பாடும் ஒரே நோக்கில் மட்டும் திருவள்ளுவர், கடவுள் வாழ்த்துக் குறள்களை வடிவமைத்துள்ளார்.

ஆனால் குறள் எண் 850 ல் உள்ள “உண்டு“ என்ற சொல்லோ, கடவுள் உண்டு என மட்டும் அறிவுறுத்தி நிற்காமல்,கடவுளை உணர வழிவகை செய்யும் கருத்துக்களான மறுபிறப்பு, இருவினைப் பயன் ஆகியனவும் உண்டு என மெய்யுணர்ந்தோர் இயம்பும் மெய்ப்பொருள் தத்துவத்தை பொதுவில் அறிவுறுத்துகிறது.ஆதலின் இக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இடம் பெறாததால் தவறேதுமன்று.

குறள் எண் 850,மெய்யுணர்தல் அதிகாரத்திலும் இடம் பெறாததற்கும் கூட மேற்சொன்ன அதே காரணமே பொருந்தும்.

இறுதிப்படியாக இக்குறள் எண் 850 ல்,புல்லறிவினனான இல்லென்பான் அடையும் பேய் என்னும் இழிநிலையைச் சுட்டியே,உண்டு என்பது மெய்ப்பொருளையே சுட்டும் எனக் கொளவியலும்.

மெய்யுணர்தல் அதிகாரத்தின் துவக்கத்திலேயே,பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்தலை மயக்கமென எடுத்துரைத்ததால்,இல்லென்பானே அத்தகைய முழுமயக்கநிலையில் இருக்க உத்தேசிப்பவனாகிறான்.எனவே உண்டு என்பது மெய்ப்பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஏனெனில்,மெய்யுணர்ந்தோர் உண்டெனக் கூறும் இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுளையும்,மறுபிறப்பின் விளைவுகளான சுவர்க்கம்,நரகம் இவற்றினையும்,மறுபிறப்புக்குக் காரணங்களான இருவினைப்பயன் யாவற்றையும் இல்லையென மறுப்பவனுக்கு புகலிடம் எனவொன்று என்பதேது?

இரண்டாவதுஐயம் எந்தவொரு குறளிலும், ”மெய்ப்பொருள்” படைத்த ஆண்டவன் (creator god ) என்பதாகப் பொருள் சொல்லப்படவில்லையே என்பது.

”மெய்ப்பொருள்” என்பதற்கு பொருள் சொல்லப்படவில்லை என்ற அளவில் மட்டும் இதற்கு நான் உடன்படுகிறேன். ஏனெனில் மெய்ப்பொருள் இன்னது என பொருள் சொல்லி அறிவதன்று. உணர்தல் பற்றியதாகையால் , எல்லா மறைமுடிவு நூலிலும்,மெய்ப்பொருள் குறிபபாக மட்டுமே உணர்த்தப்பட்டுள்ளது.

அதையே தான் வள்ளுவனாரும் கடைப்பிடித்துள்ளார்,முக்கியமாக மெய்யுணர்தல் அதிகாரத்தில்.மெய்யுணர்தலில் வரும் 10 குறள்களின் கருத்துச் செறிவை நோக்குவோம்.

  1. மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என உணர்தல் மருளென்னும் மயக்கத்தால் நிகழ்வதால்,மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடுகிறது.(மெய்ப்பொருள் இன்னது என பொருள் சொல்லப்படவில்லை)
  2. அத்தகைய மயக்கம் நீங்கப்பெறும் மெய்யுணர்ந்தோர் வீடுபேற்றை எய்துவர்.(மெய்யுணர்ந்தோரின் தன்மையும்,அவர் அடையும் பயனும் கூறப்பட்டதேயன்றி,மெய்ப்பொருள் இன்னது என சொல்லப்படவில்லை)
  3. மெய்யுணர்ந்தோர் ஐயம் நீங்கப் பெற்று,வையத்தைக் காட்டிலும், வானுலகம் தெளிவு என்பர் (இதிலும் மெய்யுணர்ந்தோரின் தன்மையும், அவர் அடையும் பயனும் மட்டுமே கூறப்பட்டது )
  4. மெய்யுணர்வு இல்லாதாருக்கு ஐம்புலன்களால் உண்டாகும் பயன் ஏதுமன்று.(இக்குறள் மூலம் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டது மெய்யுணர்தல் என எதிர்மறைக் குறிப்பால் உணர்த்துகிறார். )
  5. யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், யாவற்றுக்கும் மெய்யாகவுள்ள மெய்ப்பொருளை உணர்தல் அறிவு. ( மெய்யுணர்தலின் இலக்கணம் சொல்லப்பட்டது )
  6. மெய்ப்பொருள் கண்ட ஆசானை அணுகி,கற்ற மெய்யுணர்ந்தோர் மீண்டும் பிறப்பதில்லை. ( மெய்யுணர்தலை எய்தும் மூன்று படிகளுள் முதலாவதும்,அதன் பயனும் சொல்லப்பட்டது )
  7. மெய்ப்பொருள் கண்ட ஆசானை அணுகி,கற்று, மறு ஆய்வு செய்து மெய்யுணர்ந்தோர் மீண்டும் பிறப்பதில்லை. ( மெய்யுணர்தலை எய்தும் இரண்டாவது படியும்,பயனும் சொல்லப்பட்டது )
  8. மெய்ப்பொருள் கண்ட ஆசானை அணுகி,கற்று, மறு ஆய்வு செய்து,அறிவுச்செறிவுப் பயிற்சி மேற்கொண்டு மெய்யுணர்ந்தோர் மீண்டும் பிறப்பதில்லை. ( மெய்யுணர்தலை எய்தும் முறையின் இறுதிப்படியும்,பயனும் சொல்லப்பட்டது )
  9. மற்றவெல்லாப் பொருட்களுக்கும் சார்பாகவுள்ள மெய்ப்பொருளை   உணர்ந்து, விருப்பு,வெறுப்பு நீக்கினால்,முன்னுள்ள இருவினைப் பயன்கள் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. ( மற்றவெல்லாப் பொருட்களுக்கும் சார்பாகவுள்ளது மெய்ப்பொருள் என்ற குறிப்பு இலக்கணம் கூறப்பட்டுள்ளது )
  10. காமம்,வெகுளி,மயக்கம் இவை மூன்றினையும் பெயருக்குக் கூட இல்லாமல் செய்வோருக்கு,அந்த மூன்றினால் வரும் வினைப்பயன்கள் உளவாகா. ( மெய்யுணர்தலை எய்தும் முறையும்,பயனும் சொல்லப்பட்டது )

இவ்வாறாக,மெய்ப்பொருளை,மற்றவெல்லாப் பொருட்களுக்கும் சார்பாகவுள்ளது எனவும்,படைத்த இறைவனை முதற்குறளில் ஆதிபகவன் எனவும்,தனித்தனி அதிகாரங்களினூடே மிகவும் பொருந்தியே கூறி, வள்ளுவன் தன்னை, அறிவுடைய சான்றோரில் தலையாயவர் என நம் யாவர்க்கும் உறுதிப்படுத்தியுள்ளார் அன்றோ!

சொற்பொருளை உணர்த்தும் தெளிவில், மெய்ப்பொருள் என்ற சொல்லே எத்துனை அழகு! தன்னுள் எக்கணமும்,யாவற்றிற்கும் அடிப்படையாய் உணரப்படுவதால்,மெய்யுணர்தல் என்பது இருமை நிலை கடந்த உணர்வு.

மேலும் விளக்கவேண்டின்,கடவுள் வாழ்த்து என்பது பகவன்,பத்தன் என இருமை நிலைப்பட்டது.ஆகவே தான் கடவுள் வாழ்த்துக் குறள்கள் அடி/தாள் சேர்தல்/தொழுதல்,புகழ் புரிதல்,ஒழுக்கநெறி நிற்றல்,வணங்குதல் ஆகிய செய்கைகள் உள்ளடங்கியதாகக் கூறப்பட்டது.

மெய்யுணர்தல் என்பதோ இருமை கடந்து, மெய்ப்பொருள் கண்ட நிலை அல்லது மெய்ப்பொருள் உணர்ந்த நிலையைக் குறிக்கும்.மெய்ப்பொருளின் தன்மை,மெய்யுணர்ந்தோரிடம் மட்டுமே புலனாகும். மருள் எனும் மாயையை நீக்கப் புலனாவது,புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மெய்யான இப் பரம்பொருளே.

மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு,இருள்நீங்கி இன்பம் பயக்கும் என்றுரைத்த முறையே,மாசறு காட்சியவர்களுள் ஒருவராகவன்றோ வள்ளுவனார்  ஒளிர்கிறார்!!

”கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி” எனவுரைத்ததனால்,வள்ளுவனாரும் மெய்ப்பொருள் கண்டார் ஆவார் அன்றோ!

அத்தகைய மெய்ப்பொருள் கண்ட வள்ளுவனாரின் திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் உண்டு எனச் சிறப்பாக எடுத்துரைப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24800
Date:
RE: திருக்குறள் முழுமையிலுமே மெய்ப்பொருள் “உண்டு
Permalink  
 


 

குறள் வழியில் ஒரு குரு

சான்றோர்களின் அறிவுரைகளை நாம் ஆழ்ந்த ஈடு பாட்டுடன் கடைப்பிடிக்கும்போது அந்த அறிவுரையின் சாதாரண பொருள் மறைந்து மேலான பொருள் விரிகிறது. கீழ்க்கண்ட குறளை எடுத்துக் கொள்வோம்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். 

thiruvalluvar
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி ஆற்றுவார் என்பதை ஆராய்ந்து, அதன் பின் அக்காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இதன் பொதுவான பொருள்.

ஒரு தலைவன் தன் தொண்டர்களிடமும் ஊழியர்களிடமும் எப்படி வேலை வாங்க வேண்டும் என நிர்வாகத் திறமையைக் கூறுவதாய் இக்குறளின் பொருள் விரிகிறது.

இந்தக் குறளின் அறிவுரைப்படி வாழ்பவர்களுக்கு ஒரு சிறப்புப் பொருள் புரியும். குறளைச் சிறிது ஆழ்ந்து நோக்கினால், ஒரு பெரிய, பிரபஞ்சம் தழுவிய ஒரு நிர்வாகத் திறன் இங்கு கூறப்பட்டிருப்பது விளங்கும்.

இந்தக் குறளில் உள்ள ‘இவன்’ என்பவன் யார்? ‘அவன்’ என்பவன் யார்? இரண்டு பேரும் ஒரே நபரா? சிந்திக்க வேண்டிய விஷயம்.
இயற்கையே எல்லாக் காரியங்களையும் நடத்துகிறது. அதோடு நடைபெறும் ஒவ்வொரு காரியத்திலும் மனிதனைக் கருவியாக இருக்குமாறு கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். மனிதன் இதனை உணர்ந்து செயல்பட்டால் அவன் செய்வதெல்லாம் இனிதாகவே இருக்கும்.
ஒரு செயலில் வெற்றி பெறத் தங்களது திறமையை மட்டும் நம்பி மயங்கித் திரிபவர் கோடி. அதிகமான அவர்களது உழைப்பு முடிவில் அவசியமில்லாமல் போகிறது.

‘காற்றடிக்கும் திசையில் படகைச் செலுத்தி உன் பாய் மரத்தை விரித்துக் கட்டு. துடுப்பு போட வேண்டிய அவசியம் உனக்கு இல்லை’ என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

‘சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்குச் சஞ்சலமென்?’ என்பார் பாரதியார்.
இயற்கை அல்லது இறைவனே எல்லாச் செயல்களையும் செய்யும்போது நாம் சோம்பி இருக்கலாம் என்றா இதற்குப் பொருள்? இல்லை, நிச்சயமாக இல்லை.

ஓர் உதாரணம் உண்மையை உணர வைக்கும். அறியாமையை உறைய வைக்கும்.
இறைவனை மக்களிடம் கண்டு அவர்களுக்குத் தொண்டு செய்து வந்தது ஓர் ஆசிரமம். அங்கே ஒரு மூத்த துறவி. அவருடன் ஐந்து இளம் துறவிகள். எல்லோரும் அந்தப் பகுதி ஏழைகளுக்குச் சேவை புரிந்து வந்தனர்.
ஆறு சுவாமிகளும் மாதம் ஒரு முறை கூடிப் பேசுவார்கள். அப்போது தலைவர் சுவாமிஜி அவர்களுள் ஒருவரிடம், நேற்றுவரை நீ பூஜை செய்தாய். இன்று முதல் மடத்துத் தோட்டத்தைக் கவனித்துக் கொள்” என்பார்.

அடுத்தவரிடம், இன்று முதல் சமயப் பிரச்சாரம் செய்” என்பார்.
மற்றொருவரிடம், நீ நேற்றுவரை தோட்டத்தைக் கவனித்து வந்தாய். இன்று மருத்துவமனையில் சேவை செய்” என்று ஒவ்வொருவருக்கும் பணிகளைப் பிரித்துக் கொடுப்பார்.
ஒவ்வொரு பணியை வழங்கும் போதும் அக்காரியத்தைச் செய்பவர்கள் அதற்கான தகுதி பெற்றிருக்கிறார்களா என்று தலைமைத் துறவி ஆராய்ந்தே செய்வார்.

ஆசிரமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வரும் ஆசிரமப் பணிகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். பிறரது கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் சுவாமிகள் விரும்பினார்.
பணிகளை எல்லோருக்கும் பிரித்துத் தந்துவிட்டு தலைமைத் துறவி நேராகப் பூஜை அறைக்குச் செல்வார். அங்கு தெய் வத்தின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பின்வருமாறு பிரார்த்திப்பார்:
இறைவா, நீ எல்லோரின் இதயங்களிலும் இருக்கிறாய். அவர்களுக்குச் செய்யும் சேவை உனக்குச் செய்யும் சேவையே. மடத்துத் துறவிகள் மக்களுக்கு நன்கு சேவையாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில், எனக்குத் தெரிந்தவரை பணிகளைப் பிரித்துத் தந்துள்ளேன்.
ஆண்டவா, நீதான் உண்மையில் எல்லாப் பணிகளையும் நடத்தி வைக்கிறாய். நாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே. நீ எங் களை எப்படி இயக்குகிறாயோ, அப்படியே நாங்கள் செயல்படுவோம்” என்று அவர் அடிக்கடி பிரார்த்திப்பார்.

அந்த ஆசிரமம் இறைசேவையிலும் சமூக சேவையிலும் சிறந்து விளங்குகிறது. அதற்குக் காரணம் கேட்டதற்கு சுவாமிகள், எல்லாப் பொறுப்புகளையும் துறவிகளிடம் தந்துவிடுவேன். அவைகளை நிறைவேற்றும் பொறுப்பைத் தெய்வத்திடம் விட்டுவிடுவேன்” என்று கூறி மேற்கூறிய குறளை மேற்கோள் காட்டினார்.

எந்தவொரு செயலையும் செய்து முடிக்க மனிதனுக்கு முயற்சியும் இறையருளும் அவசியம். இந்தக் குறளில் ‘இவன்’ என்பது மனிதனையும் ‘அவன்’ என்பது ஆண்டவனையும் குறிக்கும்.
இது இக்குறள் காட்டும் மேலான பொருள்.

– சுவாமி விமூர்த்தானந்தர்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard