முனைவர். ப.பாண்டியராஜா
(மதுரை, உலகத்தமிழ்ச் சங்கம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு – 18-05-2015 மற்றும் 19-05-2015 – இல் வாசிக்கப்பட்டது)
கொடுக்கப்பட்ட ஒரு பாடல் பகுதியில் சீர், தளை ஆகியவற்றைக் காண ஒரு கணினிநிரல் (Computer Program) இந்த ஆசிரியரால் எழுதப்பட்டது. வெண்பாவுக்குரிய சீர், தளை ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் இருப்பதனால், அந்த நிரல் வெண்பாவுக்கெனத் தனியாக மாற்றியமைக்கப்பட்டது. பலவிதத் தொடக்க நிலைச் சரிபார்ப்புச் சோதனைகளுக்குப் பின்னர், அந்த நிரல் திருக்குறளை ஆய்வதற்காக இயக்கப்பட்டபோது, பல இடங்களில் தவறான சீர் எனவும், தவறான தளை எனவும் திடுக்கிடும் செய்திகள் வந்தன. மீண்டும் பலவித சோதனைகள் செய்துபார்த்தபோது, நிரல் சரியாகவே வேலைசெய்வதாக உறுதிசெய்யப்பட்டது. எனவே தவறான சீர், தவறான தளை ஆகியவை காணப்படும் இடங்களைத் தனியே அச்சிட்டு, அவ்விடங்களை ஆய்ந்ததில், குறிப்பிட்ட இருவகையான இடங்களில் ‘தவறு’ இருப்பதாக அறியப்பட்டது. அவை, 1. குற்றியலிகரம் வருமிடங்கள், 2. ஆய்த எழுத்து வரும் சில இடங்கள்.
இவற்றுக்குரிய காரணங்கள் யாவை என்பதையும், அவற்றைக் கணினி நிரல் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அவை எவ்வாறு சரியாக்கப்பட்டன என்பதையும் கூறுவதே இக் கட்டுரையின் நோக்கம்.
- குற்றியலிகரம் வருமிடங்கள்
முதலில் குற்றியலிகரங்கள் வருமிடங்களைப் பார்ப்போம். அவை:
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் – குறள் 18:8
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல் – குறள் 26:4
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல் – குறள் 30:1
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி – குறள் 33:4
கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று – குறள் 59:5
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற – குறள் 119:1
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி – குறள் 130:9
இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது – குறள் 105:1
குற்றியலிகரம் அலகுபெற்று வராது என்பது நமக்குத் தெரியுமாதலால் பாடலில் அவை வருமிடங்களில் நாம் சரியாகவே அலகிட்டுக்கொள்வோம். காட்டாக, செல்வத்திற் கியாதெனின்என்ற இடத்தில் இதனைத் தேமாங்காய் + நேர் நிரை எனக்கொள்வோம். அதாவது கியாஎன்பதை நேர் எனவே கொள்வோம். ஆனால் கணினி, கியா என்பதைக் குறில்+நெடில் எனக் கொண்டு, இதனை நிரை எனக் கொள்கிறது. காட்டாக,
வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன் – குறள் 18:7
உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர் – குறள் 33:10
யாதனின் யாதனி னீங்கியா னோத
னதனி னதனி னிலன் – குறள் 35:1
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல் – குறள் 16:8
ஆகிய இடங்களில் கியா, தியா ஆகியவை நிரை என்றே கொள்ளப்படுகின்றன. எனவே, மேற்கண்ட எட்டுக் குறள்களிலும் கியா, தியா, பியா ஆகியவை குற்றியலிகரங்கள் என்றும் ஏனைய இடங்களில் அவை குற்றியலிகரங்கள் அல்ல என்றும் கணினிக்குத் தெரிவிப்பது எப்படி?
இவ்வாறு சிந்திக்கும்போது இதனைத் தீர்ப்பதற்குத் தொல்காப்பியரே துணைநிற்கிறார் எனக் காணப்பட்டது.
ஒற்றெழுத்து இயற்றே குற்றியலிகரம் – பொருள். செய்யு:8/1
என்கிறது தொல்காப்பியம். எனவேதான் செய்யுளில் கு.இ. அலகு பெறாது என்கிறோம். இதனைக் கணினிக்கும் தெரிவித்துவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடும் அல்லவா? எனவே திருக்குறள் பாடப்பகுதியில், கு.இ. வரும் இடங்களிலெல்லாம் அவற்றை அடுத்து ஒரு புள்ளி இடப்பட்டது. மேலும் புள்ளியுடன் வரும் இகரம் அலகுபெறாது என்றும் நிரலின் கட்டளைகள் மாற்றியமைக்கப்பட்டன. காட்டாக,
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பி.யார்க் குரைக்கோ பிற – குறள் 119:1
துன்பத்திற் கி.யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி – குறள் 130:9
இப்போது சிக்கல் தீர்ந்து, கணினிநிரல் சரியாக வேலை செய்தது.
சார்பெழுத்துகளைச் சொல்லவந்த தொல்காப்பியர்,
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன – தொல். எழுத். 2
என்று கூறுகிறார். முப்பாற்புள்ளியும் என்பது ஆய்தத்தின் உருவம் அல்ல என்றும். இந்த மூன்றுமே புள்ளிபெறும் என்றே தொல். கூறுகிறார் என்றும் வேங்கடராசுலு ரெட்டியார் போன்ற சில அறிஞர்கள் கூறுவர்1. அவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இத் தீர்வு அமைந்துள்ளது எனலாம்.
குற்றியலிகரத்தை வெளிப்படையாகத் தெரியும்படிசெய்ய, அதற்குப் புள்ளி இடவேண்டும் என்ற தொல்காப்பிய விதி எத்துணை நுட்பம் வாய்ந்தது என்றும் இதன்மூலம் தெரியவந்தது.
- ஆய்த எழுத்து வரும் சில இடங்கள்
அடுத்து, ஆய்தம் வரும் சில இடங்களில் ஏற்படும் சிக்கல்களைப் பார்ப்போம். திருக்குறளில் ஆய்தம் 48 பாக்களில் 52 இடங்களில் வருகிறது.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல் – குறள் 4:8
அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று – குறள் 5:9
அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை – குறள் 8:6
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோ டக்க துடைத்து – குறள் 22:10
போன்ற பாக்களில் வரும் ஆய்தத்தால் சிக்கல் இல்லை. ஆனால் கீழ்க்கண்ட ஆறு பாக்களில்தான் தளைதட்டுவதாகச் செய்தி வருகிறது. அவை:
அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி – குறள் 23:6
வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில் – குறள் 37:3
கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை – குறள் 42:4
இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னஃதொப்ப தில் – குறள் 54:6
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு – குறள் 95:3
இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்
றுன்ப மதனிற் பெரிது – குறள் 117:6