New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலப்பதிகாரத்தில் சிவகிருஷ்ணர்


Guru

Status: Offline
Posts: 24788
Date:
சிலப்பதிகாரத்தில் சிவகிருஷ்ணர்
Permalink  
 


சிலப்பதிகாரத்தில் சிவகிருஷ்ணர் -பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன்-சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்

 

சிலப்பதிகாரம் செந்தமிழில் தோன்றிய முதல் காப்பியம்.  இளங்கோவடிகளால் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற நூல்.  ஐம்பெருங்காப்பியங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிறப்புடையது. பூம்புகாரில் தோன்றிய கோவலன்கண்ணகி வாழ்க்கை வரலாற்றைப் பாடுபொருளாகக் கொண்டது.  அறத்தின் வலிமைஊழின் ஆற்றல்கற்பின் பெருமை ஆகியவற்றை வலியுறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும். குடிமக்கள் காப்பியம்தமிழ்நாட்டின் தேசிய காப்பியம்வரலாற்றுக் காப்பியம்முத்தமிழ்க் காப்பியம்,பெண்ணின் பெருமை பேசும் காப்பியம்சமயப் பொறையைக் கூறும் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படும் இந்நூலைப் பாரதியார் "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் மணியாரம் படைத்த தமிழ்நாடு" என்று பாராட்டிப் பாடுகிறார்.  இந்நூலில் இடம்பெறும் சிவகிருஷ்ணரைப் பற்றிச் சிறிது விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

 

 

பெரியோனும் நெடியோனும்

 

 

 

சிவன்/சிவம் என்பது தமிழர் கண்ட இருபெருஞ் சமய நெறிகளில் ஒன்றாகிய சைவ சமயம் போற்றும் முழுமுதற் கடவுளின் பெயர்.  "சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்" என்று சைவ அடியார் திருநாவுக்கரசர் இதனைக் கூறுவார்.  கிருஷ்ணர் என்பதோ தமிழரின் மற்றொரு சமய நெறியாகிய வைஷ்ணவ சமயம் போற்றும் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகும்.  சிலப்பதிகாரம்பூம்புகார் நகரக் கோயில்களை இந்திரவிழாக் கொண்டாடும் சூழ்நிலையில் பட்டியலிடுகிறது.  அப்போது

 

      "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்

 

      வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

 

      நீலமேனி நெடியோன் கோயிலும்

 

      மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்" (இந்திரவிழா 169-17)

 

எனக் கூறுகிறது.  இங்கு பிறவா யாக்கைப் பெரியோன் என்பது உயிரியல்பாகியபிறப்பு இறப்பு இல்லாத சிவனை - தாய் வயிற்றிற் பிறவாத உடலை உடைய சிவனைக் குறிப்பிடுகிறது.  இது சைவநெறி கூறும் சிவனின் சிறப்புத் தன்மையை - அதாவது "தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன்" என்று திருவாசகம் கூறும் கூற்றை - பிறவா இறவாத் தன்மையைப் புலப்படுத்துகிறது.  அறுமுகச் செவ்வேள் கோயில் முருகன் கோயில்.  அடுத்து வால்வளை மேனி வாலியோன் என்பது வெண்சங்கு போன்ற நிறத்தை உடைய பலதேவன் கோயிலைக் குறிக்கிறது.  பலதேவன் என்பவர் கிருஷ்ணனின் தமையனான பலராமன்.  இதுவும் திருமால் அவதாரங்களில் ஒன்று.  அடுத்து வரும் "நீலமேனி நெடியோன் கோயில்" என்பது நீலமணி போலும் நிறத்தையுடைய நெடியமால் கோயில் என்பதைக் குறிக்கும்.  எனினும் இங்கு பலராமன் கோயிலை அடுத்துக் குறிப்பிடுவதால் இந்தக் கோயிலைக் கிருஷ்ணன் / கண்ணன் கோயில் எனவும் கருதலாம்.  எனவே சிலப்பதிகார காலத்தில் பலராமன்,கண்ணன் போன்ற அவதார மூர்த்திகளுக்கும் கோயில்கள் இருந்ததை அறிய முடிகிறது.  மேலும் திருமால்,அறம் தாழ்ந்து மறம் ஓங்கி நிற்கும்போது அவ்வப்போது அறம் தழைக்க அவதாரம் எடுக்கும் எளிவந்த இயல்பினையும் இது காட்டுகிறது எனக் கூறலாம்.

 

 

 

ஆடலில்

 

 

 

இந்திரவிழாவின் இறுதியில் கோவலன் காதற்கிழத்தியாகிய மாதவி என்னும் நாட்டிய நங்கை ஆடிய பதினோராடல்களில் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டிபாண்டரங்கம் ஆகிய இரண்டும்கிருஷ்ணன் ஆடிய ஓராடலும் சிலப்பதிகாரத்தில் கடலாடுகாதையில் குறிக்கப்பெற்றுள்ளன.  இந்த ஆடல்களை ஆடுமுன் மாதவி மாயோன் பாணியாகிய திருமால் பாடல் ஒன்றினைப் பாடியதாகவும் கூறப்படுகிறது.  சிவபெருமான் ஆடிய ஆடல் குறிப்பு இதோ!

 

      "பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்

 

      திரிபுரம் எரியத் தேவர் வேண்ட

 

      எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப

 

      இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடல்" (கடலாடு காதை 39-43).

 

பைரவி ஆடிய சுடுகாட்டில் திரிபுரமாகிய மூன்று கோட்டைகளை எரித்திடுமாறு தேவர்கள் சிவபெருமானை வேண்டவடவைப் பெருந்தீயாகிய அம்பு அவன் கட்டளையை நிறைவேற்றஉமை அம்மை ஒருபக்கமாக நிற்க,தேவர் யாவரிலும் உயர்ந்த சிவபெருமான் ஆடிய கொடுமை மிகு நடனமே கொடுகொட்டியாகும்.  இங்கு மூன்று கோட்டை என்பது உயிர் (ஆன்மா)வீடு பெறத் தடையாக உள்ள ஆணவம்கன்மம்மாயை என்பனவற்றைக் குறிப்பிடுவதாகத் திருமூலர் கூறுவார்.  சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையே சிவபெருமான் தேர் ஊர்வலமாகும்.  சிவபெருமான் தேரில் வரும்போது நான்கு வேதங்களாகிய குதிரைகளை ஓட்டும் ஓட்டுநராகப் பிரமன் - நான்முகன் காணும்படி சிவபெருமான் ஆடிய ஆடலே பாண்டரங்கமாகும்.  இதனைச் சிலப்பதிகாரம்

 

      "தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

 

      பாரதி ஆடிய வியன் பாண்டரங்கம்" (கடலாடு காதை 44-45)

 

எனக் குறிப்பிடுகிறது.  பாரதி என்பது பாரதி வடிவாய - சக்தி வடிவாய சிவனைக் குறிப்பிடுகிறது.

 

 

 

கிருஷ்ணன் ஆடிய கூத்து அல்லியம் என்பது.  இதனைக்

 

      "கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக

 

      அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்

 

      அல்லியத் தொகுதியும்"     (கடலாடு காதை 47-49).

 

எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.  தன் மாமனாகிய கம்சனின் வஞ்சகத்தை வெல்வதற்காக மை நிறத்தானாகிய கண்ணன் ஆடிய ஆடலே அல்லியம் ஆகும்.  கிருஷ்ணாவதார நோக்கமே கம்சனைக் கொல்வதுதானே! எனவே இந்தக் கூத்து கிருஷ்ணன் கம்சன் செய்த பல சூழ்ச்சிகளைப் பற்றிய ஒன்றாக அமைந்திருக்கும்.  எனவே சிலப்பதிகாரம் கிருஷ்ணனின் வெற்றிகளைப் பற்றிப் பேசும் ஆடலைப் போற்றிய மக்கள் இருந்ததைக் கூறுகிறது அல்லவா?

 

 

 

மந்திரத்தில்

 

 

 

மதுரைக்குச் செல்லும் கோவலன்கண்ணகிகவுந்தி அடிகள் மூவரையும் சந்திக்கும் மாங்காட்டு மறையோன் என்பவன் திருவரங்கத்தில் திருமால் கிடந்த வண்ணத்தையும்திருப்பதியில் நின்ற வண்ணத்தையும் பாரட்டிப் பேசும் பேச்சினையும் சிலப்பதிகாரத்தில் கேட்க முடிகிறது.  அவனே சிவபெருமானின் சூலத்தைப் "பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலம்" எனக் கூறுவதாகச் சிலப்பதிகாரம் செப்புதலையும் அறிய முடிகிறது.  பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானை இங்கே காண முடிகிறது.  மேலும் அவன் பேச்சில் "அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்" எனச் சைவ சமயத்தினர் போற்றும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம் பற்றிய செய்தியும்வைணவ சமயத்தினர் போற்றும் நாராயணாய நம என்னும் எட்டெழுத்து மந்திரம் பற்றிய செய்தியும் இடம் பெறக் காணலாம். 

 

 

 

கொற்றவை வடிவில்

 

 

 

கோவலன்கண்ணகிகவுந்தி அடிகள் செல்லும் காட்டு வழியில் வேடர்கள் பாடிய வேட்டுவ வரிப்பாடலில் கொற்றவையைத் தொழுது பாடும்போது சிவன் பற்றிய குறிப்புகள் சில சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. கொற்றவையைக் "கண்ணுதல் பாகம் ஆளுடையாள்" (சிவபெருமானின் இடப்பாகத்தினள்) என்றும், "திருமாற்கிளையோள்" (திருமாலின் தங்கை) என்றும்சங்கு சக்கரம் திருமால் ஆயுதம் எனவும்கங்கையை முடிமேல் அணிந்த சிவன் என்றும் குறிப்புகள் உள்ளன.

 

 

 

கோயிலில்

 

 

 

மதுரை வந்தடைந்த கோவலன் காலைப் பொழுதில் நெற்றிக்கண் கொண்ட சிவபெருமான் கோயிலையும்,கருடச் சேவலைக் கொடியாகக் கொண்ட திருமால் கோயிலையும்கலப்பைப் படை ஏந்திய பலதேவன் கோயிலையும்முருகன் கோயிலையும் கண்டு சென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

 

 

 

கோவலன் கண்ணகி கோலத்தில்

 

 

 

கோவலன் மாதரி என்னும் இடைக்குல மடந்தையின் அடைக்கலமாகக் கண்ணகியுடன் இருந்தபோது கண்ணகி சமைத்த உணவைக் கோவலன் உண்ணும் காட்சியைக் கண்ட மாதரியும் அவள் மகள் ஐயை என்பவளும் அவர்களை முறையே அதாவது கோவலனைக் கண்ணனாகவும் கண்ணகியை நப்பின்னையாகவும் கண்டதாக இளங்கோ பாடும்போது கிருஷ்ண நப்பின்னையைப் பார்க்க முடிகிறது.

 

      "ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த

 

      பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ

 

      நல்லமுது உண்ணும் நம்பி ஈங்கும்

 

      பல்வளைத் தோளியும் பண்டு நம்குலத்துத்

 

      தொழுனையாற்றினுள் தூமணி வண்ணனை

 

      விழுமம் தீர்த்த விளக்குக் கொல்லென

 

      ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி"      (கொலைக்களக் காதை 46 - 52).

 

ஆயர்களாகிய இடையர்களின் சேரியில் அசோதை என்பாள் பெற்றெடுத்த காயாம்பூ மலர் போன்ற நிறத்தை உடைய கிருஷ்ணன் (கண்ணன்) போன்று கோவலன் காட்சி அளிக்கிறான்.  கண்ணகியோ கிருஷ்ணாவதாரத்தில் காளிந்தியாற்றில் துயரம் நீக்கிய நப்பின்னையைப் போலக் காட்சி அளிக்கிறாள்.  இங்கு கிருஷ்ணன் பற்றிய குறிப்பு நன்கு சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பெறுவதைக் காணலாம்.

 

 

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

ஆய்ச்சியர் குரவையில்

 

 

 

கோவலன் கொலையுண்டதால் விளைந்த தீநிமித்தங்களைக் கண்ட ஆய்ச்சியர் திருமாலை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர்.  இப்பகுதியில் கிருஷ்ணனைப் பற்றிய பல செய்திகள் (சிலப்பதிகாரத்தில்) இடம் பெற்றுள்ளன.  ஆய்ச்சியர் குரவை என்பது ஆயர்பாடியில் எருமன்றத்தில் கிருஷ்ணன் தன் தமையன் பலராமனுடன் விளையாடிய பாலசரித நாடகம் ஆகும். 

 

"கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்" என வஞ்சத்தால் வந்து நின்ற பசுவின் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு வஞ்சக விளவின் பழத்தை உதிர்த்த கண்ணனின் செயல் இங்கு பேசப்படுகிறது.  குருந்த மரத்தை ஒடித்த கண்ணனின் பெருஞ்செயலும் இங்கு பேசப் படுகிறது. 

 

      "இறுமென் சாயல் நுடங்க நுடங்கி

 

      அறுவை ஒளித்தான் வடிவு என்கோயாம்

 

      அறுவை ஒளித்தான் அயர அயரும்

 

      நறுமென் சாயல் முகம் என்கோயாம்"

 

என்று வரும் பாடலில் கோபிகாஸ்திரிகளின் - கன்னியரின் ஆடையை மறைத்து விளையாடிய கண்ணனின் அழகைப் பாடி மகிழும் பெண்களைப் பார்க்க முடிகிறது.

 

பின்னர் வரும் இரண்டு பாடல்களில் "சூரியனைச் சக்கரத்தால் மறைத்த கடல் நிறத்தவனாகிய கண்ணன் - மயில் கழுத்து போன்ற நிறத்தனாகிய கண்ணன் - தன் அன்ணனாகிய பலதேவனோடும்காதலியாகிய நப்பின்னையோடும் காட்சி அளிப்பதையும்அங்கு நாரதர் வீணை இசைப்பதையும் அசோதை தொழுதேத்துவதையும் குறிப்பிடக் காண்கிறோம்.  பின்னர் மூவேந்தரையும் வாழ்த்திப் பாடும் பாடலில் பாண்டியனைப் பற்றிப் பேசும் பகுதியில் "செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால்" எனப்படுகிறது.  இங்கு வளமிக்க துவாரகை நகரில் பசுக்கூட்டத்தை மேய்த்துக் குருந்த மரத்தை முறித்த கிருஷ்ணனைப் பார்க்க முடிகிறது.

 

 

 

அடுத்து வரும் மூன்று பாடல்களிலும் (முன்னிலைத் துதியாக உல்ளன) கிருஷ்ணாவதாரக் குறிப்புகள் உள்ளன.

 

      வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

 

      கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

 

      கலக்கியகை யசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை

 

      மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

 

     

 

      அறுபொருள் இவனென்றே அமரர்களும் தொழுதேத்த

 

      உறுபசிஒன்றின்றியே உலகடைய உண்டனையே

 

      உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்

 

      வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

 

 

 

      திரண்டமரர் தொழுதேத்த திருமால் நின் செங்கமல

 

      இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே

 

      நடந்த அடி பஞ்சவர்க்கு தூதாக நடந்த அடி

 

      மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே (ஆய்ச்சியர் குரவை).

 

முதற்பாடலில் மந்தரமலையை மத்தாகவும்வாசுகி என்னும் பாம்பினை கயிற்றாகவும்கொண்டு பாற்கடலின் நடுவிடத்தைக் கலக்கியவன் கடல் நிறத்தவனாகிய கண்ணன் என்றும்அவன் கை அசோதையார் கயிற்றால் கட்டுண்ட கை என்றும்தாமரை மலர் போலும் உந்தியை உடையவன் கண்ணன் என்றும் கூறப்படும் செய்திகள் கண்ணனின் அருமையையும் பெருமையையும் ஒருங்கே உணர்த்துகின்றன.

 

 

 

இரண்டாவது பாடலில் வளமிக்க துளசி மாலையணிந்த கண்ணனை விளித்து அறுவகைச் சமயத்தாலும் அறுதியிட்டுத் துணிந்த பொருள் கண்ணனே என்று தேவர்கள் போற்றுவதாகக் கூறிபசி ஒன்றுமில்லாத சூழலில் ஏழுலகையும் கண்ணன் உண்டதாகவும் பேசிஅவ்வாறு உண்டவாய் உறியிலுள்ள வெண்ணெய் திருடி உண்ட வாயன்றோ என்று வியக்கும் நிலையைக் காண்கிறோம்.

 

 

 

மூன்றாம் பாடலில் திருமால் வாமனாவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தி கொடுத்த மூவுலகையும் இரண்டு அடிகளால் அளந்த திருவடிகள் மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் தூது சென்றபோது நடந்த திருவடிகள் அல்லவாஎனக் கூறுகிறது.

 

இம்மூன்று பாடல்களிலும்கண்ணனின் கைவாய்அடி ஆகியன செய்த அருமையான செயல்களின் பெருமையும் அதே நேரத்தில் கிருஷ்ணாவதாரத்தில் அவற்றின் எளிவந்த நிலையும் (சௌலப்பியம்) பேசப்படக் காணலாம்.

 

 

 

ஆய்ச்சியர் குரவையின் இறுதிப்பகுதியாகிய படர்க்கைப் பரவலில் அதாவது சேய்மை நிலையில் வைத்துப் போற்றும் பாடலின் இறுதிப்பாடலில் கிருஷ்ணாவதாரத்தை இளங்கோவடிகள் மிக உயர்ந்த நிலையில் போற்றுகின்றார்.  அப்பாடல் வருமாறு:

 

      மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

 

      கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்

 

      படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது

 

      நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே

 

      நாரயணா என்னா நாவென்ன நாவே

 

"அறியாமை மிக்க உள்ளம் கொண்ட கம்சனின் வஞ்சகச் செயல்களை வென்றவன் கண்ணன்நான்கு திசைகளும் போற்றவும் வேதங்கள் முழங்கி வழிபடவும் பாண்டவர்களுக்காகத் துரியோதனன் முதலிய நூறு பேரிடம் தூது சென்றவன் கண்ணன்இவனைப் போற்றிப் பாடாத நாக்கு பயனற்ற நாக்காகும்.  நாராயணா என்று கூறாத நாக்கு என்ன நாக்கு?" என்று இப்பாடல் கேட்கிறது.  இங்கே கண்ணனின் மறச்செயல் கம்சனை வென்றது.  அறச்செயல் பாரதத்தில் தூது சென்றது.  இவ்விரண்டையும் போற்றிப் புகழும் வண்ணம் "நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?" என்று இளங்கோவடிகள் முடித்திருக்கும் திறன் நீள நினைந்து போற்றுதற்குரிய ஒன்றாகும். திருவாய்மொழியில் நம்மாழ்வார்

 

      "கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!

 

      எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!"

 

என்று கூறுவதையும் இங்கு ஒப்பு நோக்கி மகிழலாம்.

 

 

 

குன்றக் குரவையில்

 

 

 

கொலயுண்ட கோவலன் திருச்செங்கோடு என்னும் குன்றத்தில் தேவனாய் மீண்டும் வந்து அங்கு நின்ற கண்ணகியை விமானத்தில் ஏற்றிச் சென்ற காட்சியைக் கண்ட குன்றக்குறவர்கள் குரவை பாடி முருகனை வழிபடுகின்றனர்.  அப்போது முருகனை ஆலமரத்தில் அமர்ந்த சிவபெருமான் மகன் என்றும் கயிலை மலைவாழ் கடவுள் ஆகிய சிவபெருமான் என்றும் கூறுகின்றனர்.  இங்கே சிவபெருமான் "ஆலமர்செல்வன்" என்றும் "கயிலை நன்மலை இறை" என்றும் புகழப்படுகிறான்.  முன்னது தட்சிணாமூர்த்திக் கோலம் பற்றியது.

 

 

 

சமரச நோக்கில்

 

 

 

இறுதியாகக் கண்ணகிக்கு கல்லெடுக்க இமயம் நோக்கிச் செல்லும் சேரன் செங்குட்டுவன் தமிழரைப் பழித்த கனகவிசயர் மீது படைகொண்டு புறப்படுகிறான்.  அப்போது திருவனந்தபுரமாகிய ஆடகமாடத்தில் பள்ளிகொண்ட திருமாலின் பிரசாதம் (மலர்மாலை முதலியன) கொணர்ந்து சேரன் செங்குட்டுவன் முன் சிலர் நிற்கின்றனர்.  கங்கையைச் சடையில் அணிந்த செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானின் சேவடிப்பிரசாதத்தைச் செங்குட்டுவன் தன் தலையில் வைத்திருந்ததால் திருமாலின் மாலையை வாங்கித் தன் மார்பில் தாங்கிக் கொண்டான்.  இவ்வாறு இளங்கோவடிகள் கால்கோட்காதையில் குறிப்பிடுகிறார். சிவபெருமானின் மாலை சேரன் செங்குட்டுவன் தலையிலும்திருமாலின் மாலை அவன் மார்பிலும் அணியப்பட்ட காட்சி நாம் கடைப்பிடிக்க வேண்டிய சைவ வைணவ சமரச நோக்கினைப் புலப்படுத்துகிறது அல்லவா?  தலையில் மூளை இருந்து அறிவாட்சி செய்கிறது.  மார்பில் இதயம் இருந்து உணர்வாட்சி செலுத்துகிறது.  மூளையும் இதயமும் போன்றவை அன்றோ சைவமும் வைணவமும்!

 

 

 

முடிவுரை

 

இவ்வாறு சிலப்பதிகாரம் சிவனையும் கிருஷ்ணனாகிய கண்ணனையும் தனித்தும் இணைத்தும் பேசும் செய்திகளை இக்கட்டுரையில் கண்டோம்.  சிவன் பிறவாயாக்கைப் பெரியோன். எனவே கடவுளின் அருமை - அனைத்தும் கடந்த நிலை உணர்த்தப்படுகிறது.  கிருஷ்ணன் திருமாலின் அவதார நிலை.  எல்லார்க்கும் இறங்கி வந்து எளிவந்த நிலை.  உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாக இருக்கும் இறைவன் பக்தர்களுக்காகத் தூது செல்வதும் திருவிளையாடல்கள் புரிவதும் அவனது எளிமையைக் காட்டுகின்றன.  அருமையில் எளிமையும் எளிமையில் அருமையும் கொண்டதே சிவகிருஷ்ணர் வழிபாடு என்பதைச் சிலப்பதிகாரம் நமக்கு உணர்த்தும் செய்தியாகக் கொல்ளலாம்..


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard