ஐம்பூதங்களின் மயக்கமே உலகம்' என்கிறார் தொல்காப்பியர். நிலம், நீர், காற்று, தீ மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது உலகம். அதேபோல் பெண்கள் தங்கள் இல்லறவாழ்வில் நினவில் வைத்துக் கொள்ளவேண்டியவர்கள் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மற்றும் மண்டோதரி என்னும் இந்தப் 'பஞ்ச கன்னிகைகள்'.
இவர்கள் ஐவரும் தர்மபத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் போற்றப்படுகின்றனர். இவர்களில் திரெளபதி மட்டும் மகாபாரதக் காலத்தில் வாழ்ந்தவர். அவரைத் தவிர மற்ற நால்வரும் ராமாயணக் காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களின் தனிச்சிறப்புகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அகலிகை:
அகலிகை என்ற பெயருக்கு 'களங்கமற்றவள்' என்று பொருள். அகலிகை அழகில் சிறந்தவளாகப் போற்றப்படுகிறார். படைப்புக் கடவுளான பிரம்மனின் மானசீக மகளாவார். கௌதம முனிவரின் 'ரிஷிபத்தினி'. 'உலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே தன் மகள்' என்று பிரம்மதேவன் கூறினார். அதன்படி ஒரு பசுவைச் சுற்றி வந்து கௌதமர் அகலிகையை மணந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அகலிகையின் மேன்மைகளைப் பற்றி 'அகலிகை வெண்பா' குறிப்பிடுகின்றது.
சீதை:
இவள் ஜனகரின் மகளாவார். இவருக்கு 'ஜானகி', மைதிலி மற்றும் 'வைதேகி' என்ற பல பெயர்கள் உண்டு. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணமும் இருக்கிறது. ஜனகரின் புதல்வி என்பதால் ஜானகி. ஜனகரின் மற்றொரு பெயர் விதேகன் அதனால் வைதேகி. மிதிலை நாட்டு இளவரசி ஆதலால் மைதிலி. இவரை பூமியில் இருந்தே ஜனகர் கண்டெடுத்தார். அதனால் பூமாதேவியின் புதல்வியாகவும் கருதப்படுகிறார்.
மகாவிஷ்ணுவின் அவதாரமான ஶ்ரீராமபிரானின் மனைவியாவார். சுயம்வரத்தில் வில்லை உடைத்து, ராமர் இவரைத் திருமணம் செய்துகொண்டார். சீதை கற்பில் சிறந்தவராகப் போற்றப்படுகிறார். மேலும் லட்சுமியின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். ராமயணத்தின் முக்கிய கதாபாத்திரமாக இவரே இருக்கிறார்.
தாரை:
ராமயணத்தின் படி 'தாரை' வானர மருத்துவன் சுனேசனின் மகளாவார். மேலும் வானர அரசன் வாலியின் மனைவியாவார். வானர இனத்தில் பிறந்திருந்தாலும் பெண்ணுக்குரிய அத்தனை மேன்மைகளையும் பெற்றிருந்தார். இவர் தன் கணவன் வாலியின் மீது பேரன்பும், மரியாதையும் கொண்டவராக விளங்கினார். மிகுந்த புத்திகூர்மை உள்ளவர் என்றும், தன்னம்பிக்கை மற்றும் வாக்குச்சாதுர்யம் நிறைந்தவர் என்பதும் இவரின் தனிச்சிறப்புக்கள். அதனாலேயே, இவர் பஞ்சகன்னிகைகளுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
திரெளபதி:
இவர் மிகச்சிறந்த இதிகாசமான மகாபாரதத்தின் கதாநாயகி ஆவார். பாஞ்சால நாட்டு அரசன் 'துருபதன்' செய்த யாக அக்னியில் பிறந்தவர். இவர் பாண்டவர்களின் மனைவி ஆவார். இவருக்கு, 'யாகசேனி', 'கிருஷ்ணை', 'பாஞ்சாலி' என்ற பல பெயர்கள் உண்டு. பாஞ்சால நாட்டு இளவரசி என்பதாலேயே இவருக்கு 'பாஞ்சாலி' என்ற பெயர் உண்டானது. இவர் கரிய நிறத்தில் அழகில் சிறந்தவளாக விளங்கினார். இவர் கௌரவர்களால் ஆடை களையப்பட்டு அவமானப்படுத்தப் பட்டார். அதனால் அவர்களை அழித்த முடித்த பின்னர் தான் கூந்தலை முடிவேன் என்று சபதம் செய்தார். இதுதான் 'பாஞ்சாலி சபதம்' என்று அழைக்கப்படுகிறது. மகாபாரதப் போருக்கு மூல காரணமாக அமைந்ததும் இந்த நிகழ்வுதான். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியது பாஞ்சாலியின் சபதம்தான். இந்தியாவின் பல இடங்களில் திரௌபதிக்கு தனிக்கோயில்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பல இடங்களில் திரௌபதிஅம்மன் கோயில்கள் உள்ளன.
மண்டோதரி:
ராமாயணக் கதாபாத்திரத்தில் மிகமுக்கியமானவர் மண்டோதரி. இவர் ராவணின் மனைவியாவார். இவர் அசுரர்களில் சிற்பக் கலை வல்லுநரான மயனின் மகளாவார். மண்டோதரி என்ற பெயருக்கு 'மெல்லிய வியிறாள்' என்று பெயர். தெய்வீக சக்தி நிறைந்தவளாகத் திகழ்ந்தாள். ராவணனைப் போல் அதிதீவிர சிவ பக்தையாக விளங்கினாள். ஒழுக்கத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவள் மண்டோதரி. இவளின் தந்தை மயன், இவரைச் செல்வசெழிப்போடு வளர்த்தார்.
ஒருமுறை ராவணன் தனக்காக ஒரு நகரத்தை உருவாக்க மயனைச் சந்தித்தார். அப்போது அங்கே மண்டோதரியை கண்டதும், அவரின் அழகில் மயங்கி, அவளை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக மயனிடம் தெரிவித்தார்.
மயன் வீரமிக்க அரசன், மிகச்சிறந்த சிவபக்தனுக்கு என் மகளைத் திருமணம் செய்துகொடுப்பது என் பாக்கியம் என்று திருமணம் செய்துவைத்தார். மிகச்சிறந்த இல்லத்தரசியாக மண்டோதரி விளங்கினார்.
திருமணம்ஆன பின்னாலும் தர்ம பத்தினிகளாக விளங்கியதால்தாம் இவர்கள் 'கன்னிகைகள்' என்று போற்றப்படுகிறார்கள்.