New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்
Permalink  
 


இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்

(This article is available in English as well in my blogs: INDRA FESTIVAL IN THE VEDAS AND TAMIL EPICS: swami.)

தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ஆனால் இதன் தோற்றம் வேதத்திலும் ராமாயண, மஹா பாரத இதிஹசங்களிலும் உள்ளது. இன்றும் நேபாள நாட்டில் பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

தமிழ் உலகம் செய்த தவப் பயனால் கிடைக்கப்பெற்ற பழந்தமிழ் நூல் “ஒல்காப் புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கணப் பனுவல் ஆகும். அதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. அதை எழுதியவர் த்ருணதூமாகினி என்னும் தொல்காப்பியன் ஆவார். இது “உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” தரும் தகவல். அதை ஒப்புக் கொள்ளாதோரும் “நான்மறை முற்றிய” அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக பனம்பாரனார் கூறியதை மறுக்கவில்லை. அதாவது தமிழ்நாட்டில் வேதங்களில் கரைகண்ட ஒரு பார்ப்பனன் இருந்தார், அவர்தான் தொல்காப்பியத்துக்கு நற்சான்றிதழ் வழங்கினார் என்பதை “தமிழ் கூறு நல்லுலகம்” ஒப்புக் கொள்கிறது.

வேதத்தில் இந்திர விழா

டாங்கே, மெயர் போன்ற வேத நூல் அறிஞர்கள் இந்திரவிழா பற்றிய குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும், அதர்வ வேத்திலும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திர த்வஜம் (இந்திரன் கொடி) பற்றி அதர்வ வேதம் பேசுகிறது. ரிக் வேதத்தில் மறை மொழியில் இதே விஷயம் உள்ளது. “மருத்துக்கு முன் இந்திரன் நடுங்கியதாக” ஒரு இடத்தில் வருகிறது. இதன் பொருள்—காற்றில் இந்திரன் கொடி படபடத்தது என்பதாகும். மருத் என்பது காற்றுக் கடவுள். அதிலிருந்தே அனுமனைக் குறிக்கும் மாருதி என்ற சொல் வந்தது. ரிக் வேதத்தில் இன்னும் ஒரு இடத்தில் , “ஏ இந்திரனே உன்னை புரோகிதர்கள் உயரே ஏற்றிவிட்டார்கள்” என்ற வரிகள் வருகின்றன. இது இந்திரன் கொடி ஏற்றப்பட்டுவிட்டது என்பதாகும்.

இந்திர விழா தோற்றம்

இந்திரன் விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். 28 நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும். ஆடலும் பாடலும் புத்துயிர் பெறும். அதைக் கொண்டாடாவிடில் இயற்கையின் கோபத்துக்கு நாடு உள்ளகும். இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மணி மேகலையும் சிலப்பதிகாரமும் இது பற்றி நிறைய தகவல் தருகின்றன.

இதை அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் துவக்கியதாக இரட்டைக் காப்பியங்கள் கூறும். ஆனால் உபரிசார வசு துவக்கியதாக மகா பாரதம் கூறும். செம்பியன் என்ற சொல்லே சிபிச் சக்ரவர்த்தியின் பெயரிலிருந்து வந்ததுதான். சிபியின் கதை சங்க இலக்கியத்தில், சிலப்பதிகாரத்தில் மற்றும் பல வட மொழி நூல்களில் இடம் பெற்றுள்ளது சோழ்ர்கள் கல்வெட்டுகளில் தங்கள் முன்னோர்கள் வடமேற்கு இந்தியாவை ஆண்டதாகக் கூறுவர். (சிபி= சைப்ய=செம்பிய)

உபரிசார வசு இந்திரனிடம் வாடாத் தாமரை மாலையும் ஒரு விமானத்தையும் பெற்ற பேரரசன். இந்தியாவின் பழங்கால எஞஜினீயர்களில் சிறப்பானவன். ஒரு மலையை உடைத்து புதிய நதியை உருவாக்கியவன். (வேத காலத்தின் முதல் எஞ்ஜினீயர் இந்திரன். அவன் மலையை உடைத்து விருத்திரனை, நமுசியை விழுத்தாட்டிய செய்திகளை வேதங்கள் பாடுகின்றன. இவைகள் மாபெரும் பொறி இயல் செய்திகள். என்னுடைய GREAT ENGINEERS OF ANCIENT INDIA ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க).

உபரிசார வசுவின் மனைவி பெயர் கிரிகா. அவளுடன் படுத்து சுகம் அனுபவிப்பதற்குள் அவனை அவசரமாகக் காட்டில் வேட்டை ஆட அனுப்பினர். அங்கே மனைவியை நினைக்கவே விந்து வெளியாகி, அதை  ஒரு மீன் உண்ண, மத்ச்யா (சத்யவதி) பிறந்தாள். அவனுடைய குழந்தைகள் மூலம் இந்தியாவின் பழைய வம்சாவளிகள் தோன்றின என்பது மகாபாரதம் கூறும் செய்தி. (மீன்,  மனித விந்துவை சாப்பிட மனிதர்கள் பிறக்கும் என்பது எல்லாம் மறை மொழிகள். இதனுடைய சரியான பொருளை வேறு ஒரு கட்டுரையில் தருவேன்). இந்த உபரிசார வசுதான் இந்திர விழாவைத் துவக்கினார்.

சோழன் துவக்கியதும், உபரிசார வசு துவக்கியதும் சரியான தகவல்தான். ஒருவர் வட இந்தியாவிலும் ஒருவர் தென் இந்தியாவிலும் துவக்கினர் என்பது சாலப்பொருத்தமே.

ராமாயணத்தில் வால்மீகி முனிவர் நேரடியாக எந்தத் தகவலையும் தராமல் “அவன் இந்திரன் கொடிக் கம்பம் போல வீழ்ந்தான், சாய்ந்தான்” என்ற உவமையைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.

Picture: Indra in Nepal

தமிழனும் இந்திரனும்

தமிழில் மிகப் பழைய நூல் தொல்காப்பியம் என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மை. அதில் தொல்காப்பியர், வேதங்கள் கூறும் கடவுள்களே தமிழர் கடவுள் என்று உறுதிபடக் கூறுகிறார். இந்திரன், வருணன், விஷ்ணு, ஸ்கந்தன் (முருகன்) ஆகிய நால்வரே தமிழ்க் கடவுள்கள். சிவன் அந்தப் பட்டியலில் இல்லை. உண்மையில் சிவன் என்ற சொல்லை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் நாயன்மார்கள தான். ஆனால் சிவ பெருமானைக் குறிக்கும் ஏனைய சொற்கள் சங்கத் தமிழில் உண்டு.

இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். புறநானூற்றில் உண்டு. திருக்குறளில் உண்டு. ஐங்குறு நூற்றிலும் இருக்கிறது. தேவலோக அமிழ்தம், நிறைய இடங்களில் வருகிறது.

மிகவும் வியப்பான விஷயம்! பாபிலோனிய ஜில்காமேஷ் போன்றோர் உலக மியுசியங்களில் ஒளிந்து கொண்டுவிட்டனர். ஆனால் இந்திரனையோ இன்றும் பிராமணர்கள் முக்கால சந்தியாவந்தனத்தில் தினமும் வழிபடுகின்றனர். உலகம் முழுதும் உள்ள இந்துக் கோவில்களில் தினசரி பூஜைகளில் இந்திரனும் வருணனும் வழிபடப்படுகின்றனர். இந்திரன் பெயர் இல்லாத இனம் இந்தியாவில் எங்குமே இல்லை. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் முதல் தமிழ்நாட்டின் நாகேந்திரன், கண்ணாயிரம் வரை எல்லாம் இந்திரன் பெயர்கள்தான்.

இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.

 

நேபாளத்தில் இந்திர விழா

இன்றுவரை இந்திர விழாவை  பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.

தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மாவில் ஏப்ரல் மாத புத்தாண்டு தினத்தில் நடைபெறும் நீர் விழாவும், இன்று இந்தியா முழுதும் நடை பெறும் ரக்ஷா பந்தனும் (கையில் சகோதரிகள் கட்டிவிடும் காப்பு) இந்திரன் தொடர்புடைய விழக்களே.

பொங்கலுக்கு முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை இந்திர விழாவின் ஒரு பகுதியே. போகி என்பது இந்திரனின் பெயர்களில் ஒன்று.

Elephant Dance in Indra Viza in Nepal

கண்ணன்—- இந்திரன் “மோதல்”

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சில “அதிமேதாவிகள்” உண்டு. இந்திய மக்களையும் நாட்டையும் பிளவுபடுத்த ஏதேனும் ஆரிய மாயை ,திராவிட மாயை கிடைக்காதா என்று கண்ணில் விளக்கெண்ணயை ஊற்றிக் கொண்டு தேடுவார்கள். வெறும் வாயை மெல்லும் இந்த பரிதாப கேசுகளுக்கு அவல் கிடைதது போல பாகவதத்தில் ஒரு செய்தி வருகிறது. இந்திரன் விழாவை கண்ணன் நிறுத்தி தனக்கும் பாதி பங்கு கேட்டான் என்று. இதனால் இந்திரன் கோபம் கொண்டு பேய் மழை பெய்யச் செய்யவே கண்ணன் கோவர்த்தன மலையைத்தூக்கி தனது மக்களைக் காப்பாற்றினான் என்று. பாகவதத்தையே நம்பாதப் பரிதாபக் கேசுகள், கண்ணனின் பகவத் கீதையையே நம்பாதப் பரிதாபக் கேசுகள் இதை மட்டும் பிடித்துக் கொண்டு புது தியரிகள் எழுதி பி எச். டி வாங்கவும் முயலுவர்.

உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டைப் போலவே கிருஷ்ண பூமியிலும் இந்திர விழா நடைபெற்றது. சோழ மன்னன் அதை நிறுத்தியதால் காவிரிப் பூம்பட்டிணத்தைக் கடல் கொண்டது என்று மணிமேகலை கூறுகிறது. ஆக இந்திர விழாவை நிறுத்தினால் இயற்கைச் சீற்றம் ஏற்படும் என்பதை வட ,தென் இந்தியர்கள் ஒப்புக்கொண்டனர் என்பதே உண்மை.

தொல்காப்பியர் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை,, வேதங்கள் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை இன்றுவரை தமிழ் பிராமணர்கள் மற்றும் தமிழ் நாட்டுக் கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் பின்பற்றிவருவது 3500 ஆண்டுக்கும் மேற்பட்ட பாரம்பர்யத்தின் தொடர்ச்சி என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது.

 

நிவேதிதாவும் இந்திரன் கொடியும்

 

இன்னொரு வெப்சைட்டில் படித்த ஒரு வியப்பான விஷயம் விவேகானந்தரரின் சிஷ்யைகளில் ஒருவர் உருவாக்கிய இந்திரன் கொடியாகும். அவர் பெயர் மர்கரெட் நோபிள். ஐரிஷ்காரியான அப்பெண் நிவேதிதா என்று பெயர்தாங்கி புகழ்பெற்றார். இந்துக்களுக்கான ஒரு கொடியை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டபோது அவர் இந்திரனின் வஜ்ராயுதத்தைப் பொறித்து வங்காளி மொழியில் வந்தே மாதரம் (தாயை வணங்குவோம்) என்று எழுதிய கொடியை உருவாக்கினார். தமிழர்கள், நேபாளியர்கள் போல வங்காளிகளும் இந்திர விழா கொண்டாடுவர். இன்றும் கூட தென் கிழக்காசிய நாடுகளில் இந்திரனின் ஐராவதம் ( 3 அல்லது 4 தலை யானை ) கொடியிலோ, அரசாங்க சின்னங்களிலோ இடம்பெற்றிருக்கிறது. இந்திரனின் சிலைகள் இல்லாத மியூசியமே இல்லை என்றும் சொல்லலாம்.

வாழ்க இந்திரன் புகழ். வளர்க இந்து மதம்.

குறிப்புகள் வேண்டுவோருக்கு:

Silappadikaram  (5: 141-4) and Manimekalai (1:27-72, 2:1-3, 1:1-9, 24: 62-69, 25: 175-200). (Pura Nanuru 182 and 241, Ainkuru. 62, Tirumurugu. 155-59 ) and Amruta (ambrosia of Indraloka) in a lot of places.

In the Rig Veda it is said that Indra shook in the company of his followers. His companions Maruts were the wind god. Vedas also say, “ priests have raised you up on the high, O, Satakratu like a pole” (RV 1.X.1). Vedic poets used symbolic language to convey the message that the Indra flag was hoisted and it was fluttering in the wind. Meyer gives more evidence from Atharva Veda



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard