படித்துப் பாருங்களேன்...

சிலம்பு நா.செல்வராசு (2013) பதிப்பாசிரியர்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

ilango silappathikaram 400தமிழர்களின் பெருமைக்குரிய நூல்களுள் ஒன்றாக சிலப்பதிகாரம் இடம்பெற்றுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாக இக்காப்பியத்தின் கதைத் தலைவியான கண்ணகி விளங்குகிறாள். இதனால் ஆய்வடங்கல் ஒன்றை உருவாக்குமளவுக்கு இக்காப்பியம் குறித்த கட்டுரைகளும் நூல்களும் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் தரமானவை என்று கூற முடியாவிட்டாலும் இக் காப்பியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியத்திலும் சமுதாயத்திலும் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றி யுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மட்டுமன்றி வேறுபாடான ஒன்றாகவும் இந்நூல் உருவாகியுள்ளது. ‘செம்மொழித் தமிழும் சிலப்பதிகாரமும்’ என்னும் பொருளில் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பெற்ற இருபத்தியெட்டு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. கவிதையியல்; - பண்பாட்டியல் - மொழியியல் - அரசியல் என்ற நான்கு அறிவுத்துறைகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்து இந்நூலின் கட்டுரைகள் உருவாகி யுள்ளன. இக்கருத்தரங்கை நடத்தியதுடன் அதில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை நூல் வடிவமாக்கிய சிலம்பு நா.செல்வராசு நூலின் பதிப்புரையில்,

செம்மொழித் தமிழின் முதல் காப்பியமாக மட்டுமே சிலப்பதிகாரத்தை மதிப்பிட்டு விடமுடியாது. சிலப்பதிகாரப் பிரதி, கண்ணகித் தொன்மம், இளங்கோவின் வரலாறு என முத்திறம் கொண்டதாகவே சிலப்பதிகாரத்தைக் கணித்தல் வேண்டும்.

என்ற கருத்தை முன்வைத்துள்ளார். (பக்கம். VII) இக்கருத்தின் அடிப்படையிலேயே கருத்தரங்கை நடத்தியுள்ளார் என்பதை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள இருபத்தியெட்டு கட்டுரைகளின் உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதென்பது ஒரு நூலாக எழுதுவதற்கு இணையானது.

எனவே இதைத் தவிர்க்கும் முகமாக ஒன்றிரண்டு கட்டுரைகள் மட்டுமே இங்கு அறிமுகம் செய்யப் படுகின்றன. அறிமுகம் செய்யப்படாத கட்டுரைகள் ஆழமற்றவை என்பது இதன் பொருளல்ல. ஒவ்வொரு கட்டுரையும் அதனதன் போக்கில் சிறப்புடையன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாசிப்பு அனுபவம் என்பது வாசகனுக்கு வாசகன் வேறுபடும் என்ற உண்மையை இங்கு நினைவில் கொள்வதவசியம். சில புதிய போக்குகள் என்று கட்டுரையாளர் கருதுவன மட்டும் இங்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. இதுவும் கூட தற்சார்புடையது என்பதை மறுப்பதற்கில்லை.

***
கவிதை இயல் என்ற தலைப்பில் ஏழு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வியல் குறித்து நூலின் பதிப்புரையில் (பக்கம். VIII)

இலக்கியவியல் நோக்கிலும் காப்பியவியல் நோக்கிலும் சிலப்பதிகாரம் தனக்கெனத் தனித்த மரபுகளைக் கொண்டுள்ளது என்பதும் அகத் திணை, புறத்திணை மரபுகள் சிலப்பதிகாரத்தில் பெற்ற மாற்றங்களையும் கதை கூறும் உத்தி முறைகள், இலக்கிய ஆக்கத்திற்கான உத்தி முறைகள் குறிப்பாக உருவகம், சினை, எச்சம் முதலியவை காப்பிய உருவாக்கத்திற்கு எத்தகைய பங்களிப்பைச் செய்துள்ளன என்பதையும் கவிதை யியல் பகுதியில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விவரித்துள்ளன.

என்று பதிப்பாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். மூத்த பேராசிரியர்கள் க.பூரணச்சந்திரன், சு.வேங்கட ராமன் து.சீனிச்சாமி, இரா.சம்பத் ஆகியோரின் கட்டுரை களுடன், பேராசிரியர்கள் வாணி. அறிவாளன், நா.இளங்கோ, ஆ. மணி ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

உலகளாவிய காப்பியங்களை ஒப்பாய்வு செய்ததன் அடிப்படையில் காப்பியக் கூறுகளாக, 19 கூறுகளை அடையாளம் கண்டுள்ளனர் என்று கூறும் து.சீனிச்சாமி, வகைமை சார்ந்தவை, கதையியல் சார்ந்தவை உத்திகள் சார்ந்தவை என்றும் வகைப்படுத்தி அவற்றைச் சிலப்பதி காரத்தில் பொருத்திப் பார்த்துள்ளார். ‘தனித்துவக் கட்டமைப்புக் கூறுகள்’ என்ற தலைப்பில் அவர் கூறும் செய்திகள் இக்கட்டுரையின் முக்கிய பகுதியாக அமைகின்றன.

‘சிலம்பில் கதை கூறும் மரபு’ என்ற சு.வேங்கட ராமனின் கட்டுரையில், ஆசிரியர் கூற்றில் கதை சொல்லும்போது காப்பியம் முழுவதிலும் எந்த இடத்திலும் ஆசிரியர் குறுக்கீடு இல்லை. யாரேனும் மாந்தர், நிகழ்ச்சி, கருத்து பற்றிக் கதையின் நடுவே, ஆசிரியரே நேரடியாகப் படிப்பவரை விளித்துப் பேசுவது குறுக்கீடாகும். இது கதையோட்டத்தைப் பாதிப்பதுடன் தனித்து நிற்கும். இத்தகைய குறுக்கீடு இல்லாமல் இளங்கோ கதை கூறுகிறார். ஒரேயரு இடத்தில் மட்டும் கோவலனின் பண்பை விளக்கும் முறையில் உவமை மூலம் கூறுகிறார். ஊரிலுள்ள பரத்தையர், பாணர் களோடு கோவலன் சுற்றித் திரிகிறான். அவன் கலைஞன்: கலை நாட்டம் மிக்கவன். எனவே கலைஞர்களான பாணர், பரத்தையரோடு திரிகிறான். அதேநேரத்தில் வணிகம் செய்யும் கடமையில் தவறி, முன்னோர் சேர்த்த செல் வத்தை இழக்கிறான். இதை ஆசிரியர், ‘திரிதரு மரபிற் கோவலன் போலத்’ (சிலம்பு.இந்திர விழா.201) தென்றல் இருந்தது என்கிறார். காப்பியத்தில் எங்கும் யாரையும் அவர் இவ்வாறு குறுக்கிட்டு விமர்சிக்கவில்லை.

என்று குறிப்பிட்டுள்ளார் (பக்கம்.45). அத்துடன் காலமாற்றத்தை உணர்த்த பின்னோக்கு ((Flash back), வருவதுரைத்தல், தொகுப்புரை, கனவு, கடிதம், இயல்பு நிலையிலும் தெய்வ ஆவேசமுற்ற நிலையிலும் வெளிப் படும் மாந்தர் கூற்று ஆகியன இளங்கோ பயன்படுத்தும் உத்திகள் என்று விளக்குகிறார். இவ்உத்திகளால் மிக நுட்பமாக இளங்கோவடிகள் கதை கூறுகிறார் என்று கூறிவிட்டு, தமிழில் தோன்றிய முதல் காப்பியமே கலைநுட்பம் மிகுந்ததாக உள்ளது என்ற முடிவை முன்வைக்கிறார்.

க.பூரணச்சந்திரனின் ‘சிலப்பதிகாரக் கட்டமைப்பு: உருவகமும் சினையெச்சமும்’ என்ற கட்டுரை விவாதத் திற்குரிய பல செய்திகளை உள்ளடக்கியது. புனைகதை என்ற எல்லையைத் தாண்டி சினையெச்சமாக (சினையாகு பெயர்) சிலப்பதிகாரம் விளங்குகிறது என்பது கட்டுரையின் மையச் செய்தி. சிலப்பதிகாரத்தை ஓர் புனைகதையாக ‘கடவுள் உருவாக்கக் கதை’ ஆகக் கருதும் ஆசிரியர், எல்லாத் துறைகளிலும் சமஸ்கிருதம் ஆதிக்கம் பெற்று, வடக்கின் கலாச்சாரம் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் பழமைக் கானதோர் ஏக்கம் தமிழர் மனத்தில் எப்போதும் இருந்து வந்துள்ளது. அதன் வெளிப்பாடுகளாகவே தமிழ் முதன்மை, தமிழர் முதன்மை இலக்கியங்கள் அமைகின்றன. இவற்றில் மிக முதலாவது சிலப்பதிகாரம். தமிழ்த் தேசியம் பேசிய முதற்காப்பியம் அது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்று கட்டுரையின் தொடக்கத்தில் வரையறுத்துள்ளார் (பக்கம்.51).

இவ்வரையறையின் விரிவாக்கமே இக்கட்டுரை. தமிழ்க் கருத்தியலையும், ஆரியர் கருத்தியலையும் விரிவு படுத்துவதுதான் இளங்கோவடிகளின் நோக்கம் என்ற கருத்தை ஆசிரியர் முன்வைப்பதுடன், நில உடைமையாளர் - வணிகர் முரண் பற்றி ரகுநாதன் கூறும் கருத்தை பெயர் சுட்டாது மறுக்கிறார் (மேலது). ஆனால் கட்டுரையாளர் முன்வைக்கும் சான்றுகள் வலுவாக இல்லை.

***

‘பண்பாட்டியல்’ என்ற இரண்டாவது இயல் இந்நூலின் சிறப்பான பகுதி என்று கருதுமளவுக்குள்ளது.

சிலப்பதிகாரக் காவியத்தின் தலைவியான கண்ணகி, வழிபாட்டுக்குரிய பெண் தெய்வமாக மாறியவள். தமிழ் நாட்டில் இது வழக்கொழிந்து போக, அண்டை மாநில மான கேரளத்திலும், ஈழத்திலும் கண்ணகி வழிபாடு தொடர்கிறது. காலஞ்சென்ற பி.எல்.சாமி எழுதிய ‘கண்ணகியும் பகவதி வழிபாடும் என்ற கட்டுரையும், கே.கே.என். குருப் எழுதிய ‘கேரளாவின் நாட்டார் பாடலில் கண்ணகி மரபு’ என்ற கட்டுரையும், கேரளத்தில் நிலவும் கண்ணகி வழிபாட்டை அறிமுகப் படுத்திய முக்கிய கட்டுரைகளாகும். இவர்கள் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் டாக்டர். நசீம்தினின் ‘கோவலன் கண்ணகி கதை’ என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கண்ணகி: கதைகளும் வழிபாடும்’ என்ற அவரது கட்டுரை கேரளப் பழங்குடிகளிடையே வழங்கும் கதைகள், வழிபாடு ஆகியனவற்றின் துணையுடன், கேரளத்தின் கண்ணகி வழிபாட்டை அறிமுகம் செய்கிறது. அத்துடன் மேலும்; ஆய்வு செய்வதற்கான களங்களையும் சுட்டுகிறது. வைதீக சமயத்தின் தாக்கத்தால் கண்ணகி வழிபாட்டில் நிகழும் சிதைவுகளையும் நாம் அறியச் செய்கிறது.

கண்ணகியின் சிலையை நிறுவி அவளைத் தெய்வமாக்கிய நிகழ்வை இளங்கோவடிகள் குறிப்பிடு கிறார். கண்ணகி தெய்வமாக்கப்பட்ட இந்நிகழ்வில் ஈழ மன்னனான கயவாகு என்பவன் கலந்து கொண்டதை,

‘கடல்சூல் இலங்கைக் கயவாகு வேந்தனும்’

சிலப்பதிகாரம் (30:160) குறிப்பிடுகிறது. இம் மன்னனால் பத்தினி வழிபாடு இலங்கையில் பரவியதாக சிங்களவர்களிடையே பாரம்பரியச் செய்திகளுண்டு. அத்துடன் ஈழத் தமிழர்களிடையே கண்ணகை (கண்ணகி) வழிபாடும், கண்ணகியை மையமாகக் கொண்ட வாய் மொழி இலக்கியங்களும் வழக்கிலுள்ளன. எனவே சிலப்பதிகாரம் தொடர்பான ஆய்வில் ஈழத்து அறிஞர் களின் பங்களிப்பு அவசியமாகிறது.

இத்தொகுப்பில் ஈழத்து அறிஞர்கள் இருவரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. என்.சண்முகலிங்கனின் கட்டுரை, இலங்கையின் கண்ணகை வழிபாட்டினை மையமாகக் கொண்டு சிலப்பதிகாரத்தை ஆராய்கிறது. கண்ணகை வழிபாடு நிகழும் நிலப்பகுதிகளை வரை யறுத்துக்கொண்டு தென்னிலங்கைச் சிங்கள மக்களிடையே வழங்கும் பத்தினி வழிபாடு தொடர்பான தரவுகளையும், தமிழர்களிடையே வழங்கும் தரவு களையும் ஒப்பிட்டு நோக்கியுள்ளார்.

கண்ணகி வழிபாடு சார்ந்து ஈழத்தமிழர்களிடையே ‘கண்ணகையம்மன் பத்தாசிகள்’, ‘கண்ணகையம்மன் குறத்திப்பாடல்கள்’, ‘கண்ணகையம்மன் ஊர்சுற்றுக் காவியம்’, ‘கண்ணகி வழக்குரை’ ‘வற்றப்பாளை யம்மன் காவியம்’ என்ற பனுவல்கள் இருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள மொழியில் ‘பத்தினிகல,‘பலங்க கல’‘வயந்தி மாலைய,‘இராஜாவளி’என்ற பெயர்களில் கண்ணகியை மையமாகக் கொண்ட பனுவல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவுக்கு கண்ணகி தொடர்பான வாய்மொழிப் பனுவல்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பது வியப்பை அளிக்கிறது. களஆய்வுச் செய்திகளும் மேற்கூறிய பனுவல்களும் சண்முகலிங்கத்தின் கட்டுரைக்கு அடிப்படைச் சான்றுகளாக அமைந்துள்ளன. தமிழ் நாட்டைப் போன்றே ஈழத்திலும் சமஸ்கிருதமயமாக்கல் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிடும் ஆசிரியர் இது கண்ணகை வழிபாட்டில் பின்வரும் மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

• கண்ணகையம்மனை வேறு பெண் தெய்வமாக மாற்றியமைத்தல்.

• வழிபாட்டு முறைகளில் மாறுதல் செய்தல்.

• பூசாரிகளை நீக்கி பிராமணர்களையும் சைவக் குருக்களையும் நியமித்தல்.

• சிங்களவர்களிடையே நிலவிய பத்தினி வழிபாடும் மாற்றம் அடைந்துள்ளது. இதற்குக் காரணம் பௌத்தம் சார்ந்த அரசியல்தான். புத்தர் நிலையை அடைய விரும்பும் ஒருவராகச் சித்திரிக்கும் நிலையில் தொடங்கி, சிங்கள பௌத்த தெய்வமாகக் கருதும் அளவுக்குப் பத்தினி வழிபாடு சிங்களவர்களிடையே மாற்றம் பெற்றுள்ளது.

• சிங்கள தேசிய உணர்வின் உச்சகட்டமாக ‘...அழகிய பெண் தெய்வமே உன் வல்லமையால் தமிழ்க் கடவுளர்களைத் தண்டித்தவளே’ என்ற இலக்கியப் பதிவு உருவானது.

• கண்டி நகரில் முதன்மை நிலையில் சப்பரத்தில் உலாவந்த கண்ணகை பதினாறாம் நூற்றாண்டில் பின் தள்ளப்பட்டு, முதல் இடத்தைப் புத்தரின் புனித தந்தத் தாதுச்சின்னம் பிடித்துக்கொண்டது.

•வெப்பம் சார்ந்த நோய்களுடன் இணைந்து சிறப்பான கவனத்தைப் பெற்ற பத்தினியின் இடம், சுதந்திர இலங்கையின் சுகாதார வசதிகள் வாய்ப்பு களிடையே குறைந்து செல்வதும் தவிர்க்க முடியாத தாகியுள்ளது.

• தமிழ் மரபுக்குரிய தெய்வமாகக் கண்ணகை அம்மனைக் கருதிவந்த போக்கு, சிங்கள பௌத்த தெய்வமாகக் கருதுவது என்ற நிலையை அடைந் துள்ளது. மற்றொரு பக்கம் ஈழத்தின் தமிழ்ப்பனுவல்கள் தமிழ்ப் பண்பாட்டு மரபுடன் இணைந்து, தமிழர் தெய்வமாகக் கண்ணகை அம்மனை அடையாளப் படுத்துகின்றன.

• ஆறுமுக நாவலர் போன்ற கடுத்த சைவர்கள், சிறு தெய்வம் என்ற வகைப்பாட்டிற்குள் கண்ணகை அம்மனை அடக்கி, இவ்வழிபாட்டை இழிவுபடுத்தி யுள்ளனர்.

இவ்வாறு சிங்களவர்களிடமும், ஈழத்தமிழர் களிடமும் நிலவும் கண்ணகை வழிபாடு தொடர்பான செய்திகளைத் தொகுத்துரைக்கும் இக்கட்டுரையில் கண்ணகை வழிபாடு தொடர்பாக இனி மேற்கொள்ள வேண்டிய ஆய்வுமுறைகளை முன்வைக்கிறார். இக் கட்டுரையின் நினைவுக்குறிப்பாக ‘கண்ணகை வழி பாட்டுப் புலங்களில் சமூக- மானிடவியல், பண்பாட்டு அறிவியல் புலமையாளர்களின் கூட்டாய்வுகளின்’அவசியத்தைமுன்வைக்கிறார்.

கட்டுரையின் இறுதிப் பகுதியில் அவர் முன்வைக்கும் பின்வரும் கருத்துக்கள் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியவை:

இலங்கையில் கண்ணகையின் இருப்பும் அடை யாளமும் இனத்துவப் பண்பாட்டு விழுமியங்கள், மேலாண்மையான சமய நியமங்கள் என்ப வற்றினைக் கடந்து மக்கள் சமயம் என்ற தளத்தில் தொடர்ந்திடக் காணலாம். குறிப்பாகத் தமிழ்ப் புலங்களைப் பொறுத்த வரை மட்டக்களப்பில் கண்ணகையம்மன் வழிபாட்டின் முக்கியத்துவம் முதன்மையானது. சிலப்பதிகாரக் கண்ணகையின் பிறந்தகமான தமிழகத்தினை விட மட்டக் களப்புப் பிரதேசத்துக் கண்ணகையின் உயிர்ப்பும் செழுமையும் அதிகமானவை (பக்கம்.139).

தமிழ்ப்புலங்களின் கண்ணகை வழிபாட்டின் இத்தகைய தொடர்ச்சிக்கும் எழுச்சிக்கும் பின்னால் கண்ணகையின் வீரம், கற்பு என்னும் எண்ணக் கருவாக்கங்கள் ஆழ்மன உறைதல்களாக மக்களிடை உள்ளமையும் இங்குக் கவனத்திற் குரியவை. இவை அவள் வல்லமையின், இருப்பின் தேவையை அங்கீகரிக்கும் முதன்மைக் கருத்தியலாக இன்றுவரை தொடர்ந்திடக் காணலாம் (பக்கம்.140).

வேறுபாடான, இதுவரை தமிழ்நாட்டில் பரவலாக விவாதிக்கப்படாத, ஓர் ஆய்வுக்களத்தை இக்கட்டுரை அறிமுகப்படுத்தி ஆய்வு செய்துள்ளது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி போன்று ‘பௌத்த மரபில் பத்தினி தெய்யோ: கணநாத் ஒபயசேகர ஆய்வு’ என்ற தலைப்பிலான சண்முகராஜா சிறிகாந்தன் எழுதிய கட்டுரை அமைகிறது.

கணநாத் ஒபயசேகர் என்பவர் பிறப்பால் சிங்களவர். மானிடவியலில் முதுகலைப்பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். அமெரிக்காவின் ஹின்டன் பல்கலைக் கழகத்தில் தகைசார் மானிடவியல் பேராசிரியராகவும், ஹவாய்ப் பல்கலைக்கழகத்தில் பௌத்த துறைசார் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

இலங்கையிலும் இந்தியாவிலும் நீண்டகாலம் கள ஆய்வினை மேற்கொண்டு The Cult of Goddess Pattini என்ற நூலை 1984இல் வெளியிட்டுள்ளார். ‘தெய்யோ’ என்ற சிங்கள மொழிச்சொல் தெய்வத்தினைக் குறிக்கும். ‘பத்தினி தெய்யோ’ என்று பத்தினித் தெய்வம் குறிப்பிடப் படுகிறது. இலங்கையில் சிங்கள பௌத்தர்களிடையே பத்தினித் தெய்வ வழிபாடு நிலவுகிறது. மற்றொரு பக்கம் ஈழத்தமிழர்களிடையே ‘கண்ணகை அம்மன்’ வழிபாடு உள்ளது.
வளமும், உடல் நலமும் வழங்கும் தெய்வமாகவும், பௌத்த மதத்தின் பாதுகாவலியாகவும், இலங்கையின் காவல் தெய்வமாகவும் பத்தினித் தெய்வத்தைக் கருதி சிங்கள பௌத்தர்கள் வழிபடுகின்றனர். இத்தெய்வ வழிபாட்டை மையமாகக் கொண்டே ஓபசேகர் மேற்கூறிய நூலை எழுதியுள்ளார். இந்நூலின் உள்ளடக்கம் குறித்து இக்கட்டுரை ஆசிரியர் கூறும் செய்தி வருமாறு:

பத்தினித் தெய்வ வழிபாட்டு மரபு என்னும் ஆய்வு நூலானது இலங்கையின் பத்தினித் தெய்வ வழிபாட்டுக்கான சமூகப் பண்பாட்டியல் மற்றும் வரலாற்றியல் பொருண்மைகளை ஆராய்கின்றது. குறிப்பாக இந்நூல் இலங்கையின் மேல், தென், மற்றும் சப்பிரமூவா மாகாணங்களில் கிராமிய வழிபாட்டு மரபாக நிலவி வருகின்ற பத்தினித் தெய்வ வழிபாட்டினைப் பிரதானமாகக் குவிமையப்படுத்துகிறது. ஆனாலும் கிழக்கு, மத்திய மாகாணங்களில் நடை முறையிலுள்ள வழிபாட்டு மரபு தொடர்பாகவும் ஆராய்கின்றது. 1956ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப் பட்ட களஆய்வின் வழியே சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்நூலினை 1984ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக இலங்கையில் சிங்கள பௌத்தர்களின் மத்தியிலுள்ள பத்தினி தெய்யோ வழிபாட்டுடன் தொடர்புடைய முதன்மையான ஆறு சடங்கியல் மரபுகளை இவ்ஆய்விற்கான பிரதானமான மூலமாகக் கொண்டுள்ளார். ஆயினும் இலங் கையின் பிற பகுதிகளான மட்டக்களப்பு, கண்டி, யாழ்ப்பாணத்தில் நிலவும் சடங்கியல் வழி
பாட்டு மரபுகள் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கியுள்ளார். மேலும் இவற்றுக்கு அப்பால் பத்தினித் தொன்மத்துடன் இணைந்த நாடகங்கள், வழிபாட்டு இடங்கள், மூல இலக் கியங்கள் போன்ற இன்னும் பல்வேறு மூலங்களின் துணையுடனேயே இந்நூலை எழுதியுள்ளார் (பக்கம்.144).

நூலின் உள்ளடக்கம் குறித்த அறிமுகத்துடன் நின்றுவிடாமல் அவரது அணுகுமுறை குறித்தும் பின்வரும் அவதானிப்புகளை நம்முன் வைக்கிறார்.

• பத்தினியின் வழிபாட்டு மரபினை, இந்து மரபு சாராத் தோற்றத் தொன்மத்தின் அடிப்படையில் நோக்குகின்றார். (பக்கம்.145)

• பத்தினி ஓர் இந்துத் தெய்வமல்லள், அவள் பௌத்த தெய்வம் என்ற கருத்தினை வலியுறுத்துகிறார். (பக்கம்.147)

இரண்டாவது அவதானிப்பை ‘நிறுவுவதற்கான தரவுகளைச் சிலப்பதிகாரத்தில் இருந்து’அவர் எடுத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடும் கட்டுரையாசிரியர் இது தொடர்பாக ஒபயசேகராவின் கருத்தைப் பின்வருமாறு சுருக்கிக் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரத்தில் பத்தினிக்கான கோயில் ‘கோட்டம்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டம் என்பது ஜைனர்களின் புனித இடம். எனவே பத்தினி ஜைன - பௌத்த மரபு சார்ந்த ஒரு வழிபாட்டு மரபைச் சேர்ந்த தெய்வம். மேலும் இளங்கோ அடிகள் என்னும் சொல்லி லுள்ள ‘அடிகள்’ ஜைன பௌத்த மரபில் தன்னலம் மறுக்கும் - உலக இன்பங்களைத் துறந்த சந்நியாசியைச் சுட்டுவது. இதுவும் பத்தினித் தெய்வம், இந்து சமயம் சாராத வழிபாட்டு மரபினைச் சேர்ந்த தெய்வம் என்னும் கருத்திற்கு வலிமை சேர்க்கும் ஒன்றாகவே அமைகின்றது. மேலும் கோவலனுடைய பெற்றோர்களும், கவுந்தியடிகளும் முறையே பௌத்த, ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே ஜைன பௌத்த மரபில் வந்த பத்தினித் தெய்வ வழிபாட்டு மரபு பின்னர்ப் பிராமணமயமாக்கச் சிந்தனைக்கு உட்பட்டு இந்துத்துவ நிலையை அடைந் துள்ளதாகக் கணநாத் ஒபயசேகர அவர்கள் குறிப்பிடுகின்றார் (பக்கம்.147).