தமிழ்ச் செவ்வியல் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படும் சிறப்பு மிக்க ‘முத்தொள்ளாயிரம்’, சேர சோழ பாண்டியர் என்ற தமிழ் மூவேந்தர்களின் சிறப்பினைப் பாடும் பொருண்மையுடையது. 2700 பாடல்களுடன் தோன்றியதாகக் கருதப்படும் இந்நூலில் தற்பொழுது எஞ்சியிருப்பவை 129 பாடல்களே.
முழுவதும் வெண்பா யாப்பில் அமைந்த பாடல்களால் இயன்ற நூல் இதுவாகும். பதிணெண் கீழ்க்கணக்கு தொகுப்பில் அமைந்த களவழி நாற்பதுக்குப் பின்னர் வெண்பா யாப்பில் புறம் பாடிக் கிடைத்துள்ள நூலும் இதுவேயாகும்.
இந்நூலில் சேரமன்னர்கள் பற்றி 23 பாடல்களும் சோழமன்னர்கள் பற்றி 46 பாடல்களும் பாண்டிய மன்னர் பற்றி 60 பாடல்களும் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றுள் உலா வரும் மன்னர் மீது ஒருதலையாய்க் காதல்கொண்ட பெண்களின் கைக்கிளை பொருள் குறித்த பாடல்களே அதிகம் காணப்படுகின்றன; 75 பாடல்கள் கைக்கிளைப் பொருள் பற்றியன. நாடு, நகர், புகழ், திறை, எயில்கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைபுலம்பழித்தல், வென்றி, கொடை குறித்த பாடல்கள் மற்றயவை ஆகும்.
கவிதை என்பது யாப்பு வடிவில் அமைவது. அது அறிவையும் கற்பனையையும் சேர்த்து இன்பத்தை உண்மையோடு இணைத்து வைக்கும் கலை வடிவம் என்பர். கருத்து கற்பனை உணர்ச்சி, இவற்றை உணர்த்தும் முறை, நடை ஆகியன கவிதையின் கூறுகள் ஆகும். கவிஞன் ஒருவன் தாம் பாட நினைத்த கருத்தைச் சுவைபட நயத்தோடு உவமை, உருவகம் உள்ளுறை, இறைச்சி, படிமம், அங்கதம், சிலேடை போன்ற உத்திகளின் மூலம் சொல்வது கூடுதல் இன்பத்தை வழங்கவே ஆகும்.
இந்நூலில், மூவேந்தரது புகழ், வெற்றிச் சிறப்பு, அவர்தம் படைகளின் பெருமை ஆகியன இலக்கியச் சுவை தோன்றப் பாடப் பெற்றுள்ளன. படிப்போர் இன்புற்றுக் கருத்துகளை மனங் கொள்ளத்தக்க வகையில் சுவை தோன்றப் பாடுதற்கு இந்நூலின்கண் புலவர் பயன்படுத்திய பொருள்கோள் அணி உத்திகள் பலவற்றை எடுத்தியம்புதல் இவண் நோக்கமாகும்.
வேலும் விழாவும்…
பகையரசர்களின் மீது சேரன் விடுத்த வேல்களின் மணம் இருவகையுடையது என்கிறது ஒரு பாடல். பகையரசர்களின் சந்தனம் பூசிய மார்புகளைத் துளைத்தமையால் சந்தனம் மணக்கும் வேலில் சுரும்புகளும் வண்டினங்களும் மொய்க்கின்றன. பகையரசர்களின் உயிரை மாய்த்த அவ்வேல்களில் தோய்ந்துள்ள மாமிச நாற்றத்திற்கு அவ்வேலை குறுநரிகளும் சூழ்ந்திருக்கின்றன. ஒரு வேலின் இரு நாற்றத்திற்கு இருவேறுவகை உயிரினங்கள் அவ்வேலைக் கொண்டாடுகின்றன.
அரசெறிந்த வேல்……
பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறி
சுரும்பொடு வண்டாடும் பக்கமும் உண்டு….
குறுநரி கொண்டாடும் பக்கமும் உண்டு
வில்லெழுதி வானோர் வாழ்வர்
பகையரசர்களே! சேர மன்னனின் வில்லினைத் உம் மதில்களில் பறக்கவிடுங்கள் திறைகளைச் செலுத்தியும் விற்கொடிகளைப் பறக்க விட்டும் உய்யும் வழி அறிந்து உய்யுங்கள். வானோர்கள் கூட இவ்வாறு வானில் வானவில் எனும் வில்லெழுதியே சேரனிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்கிறார்கள் என்ற சேதி உங்களுக்குத் தெரியுமா? என்று வினவுகிறது ஒருபாடல்..
வானோரும் வில்லெழுதி வாழ்வர்
வாங்குவில் பூட்டுமின்
யானைகளின் போர்த்திறம்
பகைவர்களிடமிருந்து காத்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட பகையரசர்களின் ஈட்டிகளால் ஆன அயில் கதவினைப் பாய்ந்து பாழாக்கி மரத்தால் ஆன எயில் கதவையும் தம் கோட்டால் தூக்கி ஓடும் சோழமன்னனது யானை, கடலுள் செல்லும் பாய்மரக்கப்பல் போல் தோன்றும் என்ற உவமை சிறப்புடையதாகும்.
அயில்கதவம் பாய்த்து உழக்கி எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால்
சேரமன்னனது யானையோ அடிக்கடிப் போரிலே பகையரசர்களின் முத்துக்கள் பதிக்கப் பெற்ற வெண்கொற்றக் குடைகளைத் தம் கரத்தால் பற்றித் தகர்த்தெறிவதையே வழக்கமாகக் கொண்டு இருந்தது. அப்போர்த் தாகத்தால் போரில்லா நேரங்களில் கூட வெள்ளொளி பரப்பி இலங்கும் நிலவினை முத்துக்கள் பதிக்கப்பெற்ற குடை என மயங்கி நிலவினை நோக்கி தன் கரத்தை நீட்டும் தன்மையுடையதாக அக்களிறு காணப்பட்டது.
விரிதாம வெண்குடையைப் பாற எறிந்த பரிசயத்தால்
சின வெங்களி யானை
தேறாது திங்கள் மேல் நீட்டும் தன் கை
ஓலை எழுதும் யானை
பகை அரசர்களை வெல்லும் மன்னர் அந்நாட்டின் மீதான தம் உரிமையை எழுதுதல் அக்கால வழக்கம். இதனை பட்டோலை எழுதுதல் என்பர். பட்டோலை எழுதும் இப்பணியை யானையே செய்கிறது என்கிறது ஒரு பாடல்.
யானையின் தந்தம் எழுத்தாணியாக, பகையரசரது மார்பு ஓலையாக அமைந்து அந்நாட்டின் உரிமை இவ்வாறு எழுதப்படும் தன்மையுடைய போர்க்களம் என்று பாண்டியனின் போர்க்களம் புகழப்படுகிறது.
மருப்பு ஊசியாக
மன்னர் மார்பு ஓலையாக
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மாறன் களிறு
உள்ளத்தில் இருந்தது இன்று ஊரே அறிந்தது.
பாண்டிய மன்னன் மீது தலைவி ஒருத்தி கொண்டிருந்த காதல் குளத்துக்குள் இட்ட விளக்காய் மற்றவர் யாருக்கும் தெரியாது இருந்தது. அவன் பவனியாய் நகர்வலம் புறப்பட்டு விட்டாலோ காட்டுத்தீ அனைவருக்கும் தெரிய பெரிதாய் எரிவது போல் ஊரார் அனைவருக்கும் அக்காதல் வெளிப்பட்டு விடும் என ஒருபாடலில் காண்கிறோம்.
குடத்து விளக்கேபோல் காமம்
வழுதி புறப்படில்
ஆபுகு மாலை அணிமலையில் தீயே போல்
நாடறி கௌவை தரும்
தெங்கு உண்ட தேரை
ஒரு பாடலில் ஒரு அருமையான உவமை கையாளப்பட்டிருப்பது வியப்பான ஒன்றாகும். உள்ளே பூஞ்சை பூத்து மணியின்றி வெற்றுக்காயாய்த் தேங்காய் இருப்பதை ‘தேரோடி விட்ட காய்’ என்று சொல்வர். அதாவது, அக்காயைத் தேரை தின்று விட்டது என்ற பொருளில் கூறுவர். ஆனால் தேரைக்கும் தேங்காய்க்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதே உண்மை. தேரையின் மீது விழுந்த வீண்பழி என்றும் இதனை விளக்கலாம். இதனை நுட்பமாக ஒரு பாடலில் உவமையாகக் குறித்திருப்பது கண்டு இன்புறத்தக்கதாகும்.
தலைவன் மீது கைக்கிளையாய்க் காதல் கொண்டு செயல் மாறுபட்ட தலைவியைக் கண்டு அன்னையும் கோல் கொண்டு அடிக்கிறாள்; ஊராரும் சொல்லால் அடிக்கின்றனர். சோழனுடன் எனக்கு எந்த நெருக்கமும் இல்லாத நிலையில் தேங்காயைத் தேரை உண்டதாக ஏற்பட்ட பழி போல் நானும் வீண்பழிக்கு ஆளானேன் என்று வருந்துகிறாள் தலைவி.
அன்னையும் கோல் கொண்டு அலைக்கும்
அயலாரும் என்னை அழியும் சொல் சொல்லுவர்
உள்நிலைய தெங்கு உண்ட தேரை
படுவழிபட்டேன் யான்
இவ்வாறான அரிய உவமையை முத்தொள்ளாயிர ஆசிரியர் மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.
பாண்டிய மன்னனை அவன் வீதியுலா வரும் போது பார்க்கத் துடிக்கிறாள் தலைவி. மகளை இற்செறித்து வாயிலடைத்துச் சென்றாள் அன்னை. ஆனால் மனது பாண்டியனோடு சென்று விட வெறுங்கூடான நம் உடல் மட்டும்தான் வீட்டில் இருக்கிறது என உணர்கிறாள் தலைவி இதனை உணராமல் அறியாமல் இருக்கிறாளே அன்னை என்பதைக் காடையை வேட்டையாடும் வேடனின் தன்மைக்கு உவமிக்கிறாள் தலைவி. காடையை வேட்டையாடி ஒரு கூடையால் கவிழ்த்து வேடன் மற்றொரு கண்ணி நோக்கிச் சென்றுவிட மணலைத் தோண்டியவாறு கூடைக்கு வெளியே வந்து காடை தப்பித்து விட்டது போல என் மனது தாயின் இல்லக் காவலைத் தாண்டி பாண்டியனோடு சென்றுவிட்டது என்பதனை,
கோமானைக் கூட என வேட்டு அங்குச்சென்ற என் நெஞ்சறியாள்
கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல்
வெறுங்கூடு காவல் கொண்டாள்.
இந்த உவமை தமிழ் இலக்கியத்தில் மிகப்புதியது ஆகும்.
கூடல் இழைத்தல் என்பது குறி கேட்கும் ஒரு விளையாட்டு. மண்ணில் விரலால் வளையம் வளையமாக ஒரு வட்டமாக கண்ணை மூடிக்கொண்டு வரைந்து தொடக்கப் புள்ளியில் வட்டத்தை நிறைவு செய்ய முடியுமானால் நினைத்தது நடக்கும் என்றும் வட்டத்தை தொடக்கப் புள்ளியில் நிறைவு செய்ய இயலாவிடில் நினைத்தது நடக்காது என்றும் கருதிக்கொள்வது இக்குறி கேட்கும் விளையாட்டின் இயல்பு.
பாண்டியன் மீது காதல் கொண்ட ஒரு தலைவி தம் காதல் கைக்கூடுமா என்று அறிய இக்கூடல் இழைத்தல் விளையாட்டிற்குத் துணிகிறாள் . ஆனால் ஒருவேளை இனணக்க முடியமால் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்து வரையாமல் இருந்து விடுகிறாள்.
கூடல் பெருமானைக்
கூடலார் கோமானைக்
கூடப் பெறுவேனல்
கூடு என்று
கூடல் இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும்
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து.
வளையே சொல்லும் செங்கோண்மைத் திறம்
இளம்பெண்களுக்குக் காதல் நோயைத்தருவதாலும் இளம்பெண்களின் அழகினைக் கவர்வதாலும் பழிக்குள்ளாகின்றனர் மூவேந்தர்கள்
தோழி! மன்னன் சிறப்பாக செங்கோண்மை செலுத்துகிறான் என்று ஊரார் அனைவரும் கூறுகின்றனர். இதோ அவன் மீது காதல் கொண்ட என் வளையல்கள் அவன் அருளின்மையால் நெகிழ்கின்றன. அவன் அரசாட்சியின் லட்சணத்தை என் வளையல்களே சொல்லுகின்றன, பிற சாட்சிகளும் வேண்டுமோ?
முறைசெயும் என்பரால் தோழி
அங்கோல் அணிவளையே சொல்லாதோ
மற்றவன்
செங்கோண்மை செல்கின்ற ஆறு
இத்தன்மையுடைய மற்றொரு பாடலில், மண்ணகத்தைச் சிறப்பாகக் காவல் புரியும் மன்னர் என்றால் மாலை நேரத்தில் மகளிர்க்கு நோய் செய்யும் கோவலர் குழலைப் பறிமுதல் செய்து அக்கோவலரைத் தண்டித்திருக்க வேண்டாமோ மன்னர்? என்று மன்னர் மேல் காதல் கொண்ட மகளிர் கூறுவதாக அமைந்த பாடல் இன்புறத்தக்கது.
மண்ணகம் காவலனே ஆனக்கால்
காவானோ மாலைக்கண் கோவலர் வாய்வைத்த குழல்
இவன் என்நலம் கவர்ந்த கள்வன்
இவன் எனது நெஞ்சம் நிறையழித்த கள்வன் என்று
செல்லும் நெறியெல்லாம்
சொல்லும் பழியோ பெரிது
என்று தலைவன் மீது ஏற்பட்டுள்ள பழியை ஒருபாடலிலும்
நிரைவளையார் தம் கோலம் வவ்வதல் ஆமோ
அவர் தாய்மார் செங்கோலன் அல்லன் என
இளம்பெண்களின் தாயர் மன்னனைக் கொடுங்கோலன் என்று மதிப்பிடுவதையும் முத்தொள்ளாயிரம் குறிப்பிடுகிறது.
நின்கால் மேல் கை வைப்பேன்
காதல் மிக்க தலைவி ஒருத்தி தன் காதல் நோய் உரைப்பதற்குத் தூதாக நாரை ஒன்றை அனுப்புகிறாள். அவள் உற்ற காதலின் அளவை அவள் கூறும் ஒரு கூற்றால் நாம் அறியலாம். உன் காலிரண்டில் என் கையிரண்டை வைத்து மன்றாடுகிறேன். என்பொருட்டு என்தலைவனிடம் தூதாகச்செல் என்று மன்றாடுகிறாள் தலைவி. தண்ணீரில் இருந்து தரைக்கு உடல் நெளித்து ஏறிச் செல்லும் மீன் மீண்டும் தண்ணீரில் தாவும் நுடபமான காட்சியைத்தரும் இப்பாடல் உள்ளுறையாகக் கருத்தினை உணர்த்தி நிற்கிறது.
செங்கால் மடநாராய் தென் உறந்தை சேறியேல்
நின்கால் மேல் வைப்பன்என் கையிரண்டும் வன்பால்
கரை உறிஞ்சி மீன்பிறழும் காவிரீநீர் நாடாற்கு
உரையாயோ யான் உற்ற நோய்
விழியில் வழியாய் இதயம் நுழைந்து
இரக்கமில்லாத தலைவன் என் வளை நெகிழ்த்து அதனைக் கவர்ந்து போனவன். நேற்றிரவு யானையிலே வலம் வரும்போது என் கண்கள் வழியாக என்னுள் புகுந்து வசமாக மாட்டிக் கொண்டு விட்டான். என் உயிரே போனாலும் என் கண்களை மூடிய கையைத் திறந்து காட்டேன்.அவனைத் தப்பிக்க விடேன் என்று தன் தாயரிடம் வெகுளியாய் உரைக்கும் தலைவி பற்றிய பாடல் இன்புறத்தக்கது.
ஆவி களையினும் என் கண்திறந்து காட்டேன்
வளைகொடுபோம் வன்கண்ணன்
மால்யானை தன்னுடன் வந்து
என் கண் புகுந்தான் இரா
அடிப்பொடியை என்ன செய்ய?
பாண்டியன் குதிரையில் ஏறிப் பவனி வருகிறான். அவன் மீது காதல் கொண்ட தலைவி பாண்டியனைத் தழுவுவது ஒருபுறம் இருக்கட்டும். பாண்டியன் ஏறிச்சென்ற குதிரையின் காலடி பட்ட தூசு இருக்கிறதே. அதுவே தமக்குப் பெரிதும் இன்பம் தரும் பொருளன்றோ? அதனை மேலெல்லாம் பூசிக்கொள்ளலாம்.. தலையில் சூடிக்கொள்ளலாம்.. அதனை நீரில் கலந்து சந்தனம் போல் வரைந்துகொள்ளலாம்.. என்று பலவாறு எண்ணுகிறாள் தலைவி.. இது காதல் படுத்தும் பாடன்றி வேறென்ன?
ஆடுகோ சூடுகோ
ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோடாக எழுதுகோ
வழுதி கனவட்டம் கால் குடைந்த நீறு..
திறை கொடுத்து உய்யாத பகையரசர் நாடு என்ன ஆகும் என்று பல பாடல்களில் முத்தொள்ளாயிரம் குறிப்பிடுகிறது. இஃது அவற்றுள் ஒன்று
ஆன் போய்
அரிவையர் போய்
ஆடவர் போய்
பேய் ஈன்ற ஈன் பேய் உறையும் இடம்
வெள்ளம் தீப் பட்டதோ?
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇப் புள்ளினம் தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலை வேல் கோக்கோதை நாடு
என்ற பாடல் அழகான இயற்கைக் காட்சியை நம் கண்முன் காட்டுகிறது. இந்தப் பறவைகளின் ஆரவாரம் தவிர வேறு பூசல் இல்லா நாடாக சேரன் நாடு விளங்குவதாக இப்பாடல் குறிப்பிடுகிறது.
பல்வேறு அணிகள், பல்வேறு நயமிக்க சொல்லாட்சிகள், சுவையான கற்பனைகள், புதுமையான உவமைகள் இவை யாவும் முத்தொள்ளாயிரத்தைச் செவ்வியல் இலக்கிய வரிசையில் சேர்க்கின்றன. இவ்விலக்கியம் படித்து வியந்துரைத்தப் பாராட்டும் தன்மை உடையது என்பதில் ஐயமில்லை.