சோழ மண்டலக் கடற்கரை சார்ந்த இடப்பெயர்கள்
முனைவர் அ.ஜான் பீட்டர், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை
திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, திருவாரூர் - 610 003
இடங்களுக்குப் பெயரிட்டு அழைப்பது இடங்களை அடையாளம் காண்பதற்கேயாம். பிற இடங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளப்படுத்த அந்த இடத்திற்கு என ஒரு சிறப்பான தன்மையைக் குறிப்பிட்டு பெயர்கள் வழங்கப்பட்டன.. இவ்வாறு பெயர் வைக்கும் பொழுது மனிதனுக்கு இயல்பாக அமைந்த அழகுணர்ச்சி பெரிதும் உதவிற்று எனலாம். ஒங்கி உயர்ந்த மலைகளையும் குன்றுகளையும் கொண்டு இடங்கள் பெயர் சூட்டப்பட்ட பொழுது குன்றூர், முதுகுன்றம், செங்கோடு என்றெல்லாம் பெயர்கள் சூட்டப்பட்டன. அவ்வாறே குறிப்பட்ட பகுதியில் மட்டும் அதிகமாகக் காணும் தாவரங்களின் அடிப்படையில் ஆரூர், ஆர்க்காடு, ஆலங்குடி எனப்பெயர்கள் சூட்டப்பட்டன எனலாம். வயல் ,குளம் ஆறு இவற்றின் அடிப்படையில் வளமான நிலப்பகுதிகள் ஐயாறு, அடையாறு, நெடுங்குளம், ஈரோடை எனப் பெயரிடப்பட்டன.
தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் நிலத்தின் தன்மை அடிப்படையில் இடங்கள் பெயரைப் பெறுகின்றன என்பதைத் தமது உரையில் விளக்கிச் செல்கிறார். எழுத்ததிகாரத்தின் புணரியல் நூற்பாவிற்கு (எண் 11) அவரது விளக்கம் சிறப்புடையதாகும். முல்லை நிலத்திற்குரிய ஊர்ப்பெயர்கள் பாடி, சேரி, பள்ளி என்றும் குறிஞ்சி நிலத்திற்குரிய ஊர்ப் பெயர்கள் சிறுகுடி, குறிச்சி எனவும் மருத நிலத்திற்கு உரிய இடப் பெயர்கள் ஊர் என்றும் பாலை நிலத்திற்கு உரிய இடப் பெயர்கள் பறந்தலை என்றும் நெய்தல் நிலத்திற்கு உரியவை பட்டினம் பாக்கம் என்றும் பின்னொட்டுக்களைக் கொண்டனவாக அமையும் என்பது அவரது அவ்விளக்கமாகும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் சங்க இலக்கியப் பாடல்களிலும் இடப்பெயர்கள் அமைந்திருப்பதை நாம் காண முடியும். ஏணிச்சேரி, இலவந்திகைப்பள்ளி, சிறுகுடி, குறுங்குடி, ஆலங்குடி, முனையூர், விரியூர், மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் எனச் சங்க இலக்கியங்களி்ல் பெயர்கள் அமைந்துள்ள முறைமை கண்டின்புறத் தக்கது.
கடலும் கடலைச்சார்ந்த பகுதிகளும் நெய்தல் நிலம் எனப்பட்டன. இங்குள்ள நில அமைப்பு மற்ற பகுதியினும் முற்றிலும் வேறுபாடுடையன. மணல் தேரிகள் எனப்படும் மண்மேடுகள், உப்பங்கழிகள், முகத்துவாரங்கள், உப்பளங்கள் ,அந்நிலத்திற்கே உரிய குறிப்பிட்ட தாவர வகைகள் இவற்றின் அடிப்படையில் இந்நிலப்பகுதிகளில் இடங்கள் பெயரிடப் பட்டன. கடற்கரை சார்ந்த நகரம் பட்டினம் எனப்பட்டது. பாக்கம் என்றும் நகர்ப்பகுதி அழைக்கப்படுவதுண்டு. மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் என்று சிலப்பதிகாரத்தில் ஊர்ப் பகுதிகள் குறிப்பிடப்படுவதை இவண் ஒப்பு நோக்கலாம்.
காரணப் பெயர்கள் என்றும் இடுகுறிப் பெயர்கள் என்றும் இலக்கணிகள் கூறும் குறிப்புகள் இடப்பெயர்களுக்கும் பொருந்தும். ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்னும் அடிப்படையில் இடபெயருக்கு யாதானும் ஒரு காரணத்தால் சூட்டப்படும் இடப்பெயர்களின் தொடக்க கால வடிவம் திரிபு பெற்றுப் பொருள் விளங்கா நிலையிலோ, மாறுபட்ட பொருள் தரும் வடிவிலோ மாற்றம் பெற்று விடுவதும் உண்டு. இஃது இயல்பாக மக்கள் வழக்கால் திரிபு பெறுதலும் விருப்பத்தோடு வலிந்து செய்யப் படுகின்ற மாற்றமாகவும் அமைந்து உண்மை வடிவத்தைச் சிதைப்பதும் உண்டு.
தமிழ்நாட்டின் கடற்கரை 1076 கி.மீ நீளமுடைய நெடிய கடற்கரையாகும். சோழர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாட்டுப் பகுதியின் கடற்கரை சோழ மண்டலக் கடற்கரை எனப்படுகிறது. இதுவே ஆங்கிலத்தில் கோரமண்டல் கோஸ்டல் எனப்படுகிறது. சோழமண்டலம் என்ற சொல்லைப் போர்த்துகீசியரே கோரமண்டல் என திரிபுடன் வழங்கலாயினர். பின்னர் வந்த மற்ற ஐரோப்பியரும் கோரமண்டல் எனக் கீழைக் கடற்கரைப் பகுதியை அழைக்கத் தொடங்கினர். இக்கடற்கரைப்பகுதியின் மீது கொண்டிருந்த ஈர்ப்பால் ஐரோப்பிரின் கப்பல்கள் சிலவும் கோரமண்டல் என்ற பெயரைப் பெற்றன. அதுமட்டுமின்றிப் பிற நாட்டுக் கடற்கரைப் பகுதிகளுக்கும் கோரமண்டல் என்ற பெயரைச்சூட்டினர். நியூசிலாந்தின் ஒருகடற்கரைப் பகுதி கோரமண்டல் கடற்கரை எனவும் அக்கடற்கரை சார்ந்த ஒரு நகரம் கோரமண்டல் எனவும் ஐரோப்பியர்களால் பெயரிட்டு அழைக்கப் பட்டன. அந்த அளவிற்கு இக்கடற்கரை ஐரோப்பியர்களைக் கவர்ந்திருந்தது என்றால் அது மிகையில்லை. அதனால் தான் மைலாப்பூர், புலிக்காட், நாகப்பட்டினம் ஆகியவை போர்த்துகீசியர்களாலும் சென்னை மசூலிப்பட்டினம் போன்றவை ஆங்கிலேயர்களாலும் பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகியவை பிரெஞ்சுக்காரர்களாலும் தரங்கம்பாடி டேனிஷ் காரர்களாலும் தமது விருப்பத்திற்குரிய வணிகத் துறைமுகப் பட்டினங்களாக உருவாக்கி நிருவகிக்கப்பட்டன.
பின்னாளில் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான நீண்ட கடற்கரையைக் கோரமண்டல் கடற்கரை என்றே ஐரோப்பியர் ஆவனங்களில் குறிக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டாரின் கோரமண்டல் நிலப்படம் ஒன்றில் தென்னிந்திய கடற்கரை பகுதி முழுவதும் மட்டுமின்றி இலங்கையின் தென்பகுதியும் காட்டப் பட்டுள்ளது. பண்டைய தமிழ் நாட்டின் வழக்கின் அடிப்படையில் பாண்டிய மன்னர் ஆளுகைக்குட்பட்டிருந்த கடற்கரை முத்து விளைந்ததன் அடிப்படையில் முத்துக் கடற்கரை எனப்பட்டது. சேரர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த கடற்கரைப் பகுதி மேலைக் கடற்கரை எனவும் வழங்கப்பட்டது. கோடிக்கரை முதல் காவிரிபூம்பட்டினம் வரையிலான கடற்கரை நிலப்பகுதி சோழமண்டலக் கடற்கரை எனபட்டது.
காவிரிபூம்பட்டினம்
காவரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்திருந்த எழிலார்ந்த பட்டினம் காவிரி பூம்பட்டினமாகும். இன்று அந்த பழைய நகரம் இல்லை. கடல்கோள் ஒன்றினால் கடலால் மூழ்கடிக்கப்பட்ட நகரமாகக் கடலுக்குள் இருக்கிறது என்பர். எஞ்சியிருப்பது சிற்றூரான பூம்புகார் என்று இன்றழைக்கப்படும் மீனவர் வாழும் குடியுருப்புப் பகுதியே. தமிழக அரசால் சிலப்பதிகார நகரக் காட்சிகள் அமைக்கப்பட்டு பலரும் வந்து செல்லும் இடமாக இன்று விளங்குகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் சோழர்களின் தலைநகரமாக இவ்வூர் சிறந்து விளங்கியது என்பதையும் இவ்வூரின் பிற சிறப்புகளையும் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பிளைனி போன்ற வெளிநாட்டார் குறிப்புகளிலும் இப்பட்டினம் இடம் பெறுகிறது. புத்த சாதகக் கதைகளிலும் இவ்வூரைப்பற்றிய குறிப்புகள் காணப் படுவதாகக் கூறுவர். காவிரிப் பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் ,காவிரிப் பூம்பட்டினத்து கண்ணனார், காவிரிப் பூம்பட்டினத்து சேந்தன் கண்ணனார் ஆகிய சங்கப் புலவர்கள் இவ்வூரினர் என்பது குறிக்கத் தக்கது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பட்டினப் பாலை நூலில் இப்பட்டினத்தின் சிறப்புகள் ‘முட்டாச் சிறப்பின் பட்டினம்’ என்று பல அடிகளால் விவரிக்கப்படுகிறது. சிலப்பதிகாரம் இவ்வூரின் அமைப்பினையும் அழகினையும் மிகச்சிறப்பாக விவரிக்கிறது.
கடலூர்
பெயரில் கடலைக்கொண்ட இவ்வூர் ஒருநகரமாக இன்று மாறியிருக்கிறது. கெடில நதியும் உப்பனாறும் கூடி கடலோடு கலக்கும் இடமாதலின் கூடலூர் என்பதும் பொருந்தும் என்பர். (ப.124,இலக்கியத்தில் இடப்பெயர்கள்) தேவாரப் பதிகங்களிலும் சோழர் காலக் கல்வெட்டுகளிலும் சிற்றிலக்கியங்களிலும் இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று குறிக்கப்படுகின்றது. இன்று கடலூர் நகரத்தின் ஒரு பகுதியாக திருப்பாதிரிப்புலியூர் அமைந்துள்ளது. பாதிரி என்பது ஒரு தாவர வகையாகும். இவ்வூர் சிவத்தலத்தின் தலமரமும் பாதிரியே ஆகும்.
வீராம்பட்டினம்
புதுச்சேரிக்குத் தெற்கேயமைந்த கடற்கரை ஊர் வீராம்பட்டினமாகும். அரிக்கமேடு என்ற அகழ்வாய்விடம் இவ்வூரை அடுத்து அமைந்துள்ளது. இவ்வூர் சங்க இலக்கியங்களில் வீரை எனக் குறிக்கப் படுகின்றது. வீரை என்ற சொல்லுக்குக் கடல் என்று பொருள் உண்டு. புறநானூற்றின் 320 ஆம் பாடலைப் பாடிய வீரை வெளியானார் இவ்வூரைச் சார்ந்தவர் ஆவார்.
‘அடுபோர் வேளிர் வீரை முன்றுறை
நெடுவேள் உப்பின் நிரம்பாக் குப்பை
பெரும்பெயற்கு உருகியா அங்கு’ (அகம் 206)
என இவ்வூரைக் குறித்து அகநானூறு குறிப்பிடுகிறது.
நாகப்பட்டினம், நாகூர்
நாகப்பட்டினம், நாகூர் ஆகிய இரண்டு நகரங்களும் அடுத்தடுத்து அமைந்த கடற்கரை சார்ந்த இடங்களாகும். நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்டதாக அமைந்த இந்த இரட்டைப் பேரூர்கள் தம் பெயரில் நாகர் என்ற சொல்லைக் கொண்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் நாகர் என்ற இனத்தாரும் (சிலம்பு: மங்கலவாழ்த்து காதை19-20) நாக நாடும் குறிப்பிடப்படுகின்றன. ஒரு ஊரின் இரண்டு பகுதிகள் மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என்றழைக்கப் பட்டதைப் போல் நாகூரும் நாகப்பட்டினமும் ஓர் ஊரின் இருகூறாகக் கருதத் தக்கவை என்பார் இரா.பி.சேதுப்பிள்ளை.(ப:36,தமிழகம் ஊரும்பேரும்) இரண்டு நகர்ப்பகுதிக்கும் இடைய ஏழு கிலோ மீட்டர் இடைவெளி இருந்தாலும் இரண்டும் சிறந்த வணிகத் துறைமுகமாகப் பண்டைக் காலம் முதலே விளங்கிற்று. திருவாரூர் சோழநாட்டின் தலைநகராக இருந்த காலத்திருந்தே சிறந்த துறைமுகப்பட்டினமாக இவ்வூர் விளங்கியது என்பர். இவ்வூர் திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப் பெற்ற வைணவப்பதியும் அப்பரால் தேவாரப்பதிகம் பாடப்பெற்ற சிவத்தலமும் பிற்கால சோழர் காலச் ஆனைமங்கலச் செப்பேடுகள் குறிப்பிடுகின்ற பௌத்த தலமுமாகப் பல்சமயங்களும் சிறந்து விளங்கிய சமத்துவநகராக விளங்கியது. இன்றும் பழமை மிக்க நாகூர் தர்க்காவும் தென்புறத்தே 10 கி.மீ தொலைவில் அமைந்த வேளாங்கண்ணியும் சமயப் பொறைக்குச் சான்று தந்து விளங்குகின்றன. போர்த்துகீசியர் வந்து வணிகம் செய்த சிறப்புடைய நகராகவும் இது விளங்கியது.
நாகூர், நாகப்பட்டினத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ஷாஹுல் ஹமீது வலி எனும் நாகூர் ஆண்டவர் நாகூருக்கு வந்த பிறகு நாகூரின் வரலாறு ஒளி பெறுகிறது. போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை ‘நாகூரு’ என்றும் நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன. போர்த்துக்கீசியர்கள் நாகப்பட்டினத்தை 16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிடித்துக் கொண்டதும் நாகூர் முஸ்லீம்களின் வணிக வரலாறும் தெரிய வருகிறது.
நாகூர் ஷாஹுல் ஹமீது வலி கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். இவரது காலத்தை கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா என்பவரும், முகமது சித்திக் இப்னு மசூத் என்பவரும் நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது கல்லறைகளும் நாகூரில் உள்ளன.
கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் . மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்குப் பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது. தர்காவில் உள்ள மிக உயரமான 131 அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். இக்கொடைகள் குறித்த செய்திகள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் மோடிப் பதிவேடுகளில் நிறையக் காணப்படுகின்றன
இங்கு பல கப்பல் வணிகர்கள் வாழ்ந்தனர் என்பதை மரைக்காயர் தெரு, செராங்கு தெரு, மாலுமியார் தெரு, பயலட் தெரு போன்ற நாகூரின் இன்றும் வழங்கும் தெருப்பெயர்கள் நினைவு படுத்துகின்றன
தரங்கம்பாடி
டேனிஷ்காரர் ஆட்சி புரிந்த இடம் இதுவாகும். கடலோரத்தில் அதன் அடையாளச் சின்னமாக டேனிஷ் கோட்டையும் அருங்காட்சியகமும் உள்ளன. ஒரு காலத்தில் இவ்வூர் துறைமுகமாக இருந்ததை நினைவூட்டும் வகையில் இடிபாடுகளுடைய சுவர்கள் கடலுக்குள் இருக்கின்றன என்பர். டேனிஷ் காரர்களுடைய ஓவியங்களில் மரக்கலங்கள் கடலில் நிற்கும் பின்னணியில் கோட்டை இடம்பெற்றிருப்பதைக் கொண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சிறந்த துறைமுகமாக விளங்கியது எனக்கருதலாம். குல சேகர பாண்டியன் தன் 38வது ஆட்சியாண்டில் கி.பி. 1306ல் இவ்வூரைத் தோற்றுவித்து மணிவண்ணீசுவரமுடையார் கோயிலையும் கட்டினான் என்று கல்வெட்டுக் குறிப்புகளால் அறியலாம். இவ்வூருக்குச் "சடங்கன்பாடி" என்பது முந்தைய பெயர் என்பதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கடற்கரையையொட்டிய நகரமாதலாலும், தோற்றுவித்தவன் குலசேகரபாண்டியன் என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் சில காலம்வழங்கியது என்பர். கி.பி. 1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும் இப்பெயர்களே வழங்கி வந்தன.
இசுலாமியர்களால் தென்னிந்தியா தாக்கப்பட்ட பின்னர், விஜய நகர மன்னர்கள் தென்னிந்தியாவைக் காத்து ஆண்டனர். அக்காலத்தில் தஞ்சையிலிருந்து கி.பி. 1567ல் ஆட்சி செய்த அச்சுத்தப்ப நாய்க்க மன்னர் காலத்தில் ஊர்ப்பெயர் சடங்கண்பாடி என்றிருந்த போதிலும், சுவாமி பெயர் மாசிலாமணீஸ்வரர் என்று மாறியுள்ளது.
ஆங்கிலேயர்களால் சடங்கன்பாடி என்ற பெயர்களை சரியாக உச்சரிக்க வராமற் போகவே, TRANQUEBAR என்றானது. தரங்கம்பாடி என்ற பெயர் வடிவம் செம்மொழித் திருத்தம்( Hyper corrected form) பெற்ற பெயர் வடிவமாகக் கருதத் தக்கது. (தரங்கம் - அலை. அலைகள் சூழ்ந்த நகரம் - தரங்கம்பாடி).
1682-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவரான பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு. டென்மார்க் நாட்டில் உள்ள திருச்சபை சார்பில், கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்வதற்காக 1706-ம் ஆண்டு ஜுலை 9-ந் தேதி தரங்கம்பாடி வந்தார். தரங்கம்பாடியின் புகழைப் பரப்பியதில் இவரது பங்கு முக்கியமானது. அச்சுக்கூடம் நிறுவி நாட்டிலேயே தமிழில் முதல் நூல் அச்சிட்ட பெருமைக்குரிய செயலைச் செய்தார்.