தமிழில் எதிர்மறைகள்
முனைவர் அ.பூலோகரம்பை,
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம் – 517 425.
ஆந்திர மாநிலம்.
முன்னுரை:
எதிர்மறை என்பது ஒரு தனி வகையன்று. எல்லா வினைகளுக்கும் உடன்பாடு, எதிர்மறை என இரண்டும் உண்டு. அதனால் எதிர்மறை என்பதை வினையின் ஒரு பகுதியாகக் கொள்ளாமல் அதை வினை வகையின் ஒரு அமைப்பாகக் கொள்ளலாம். உடன்பாட்டு வினைகளுக்குள்ள பொருளமைப்புகள் (ஏவல், வியங்கோள், நிபந்தனை போன்றவை) போன்றே எதிர்மறை வினைகளுக்கும் பொருளமைப்புகள் உண்டு. எதிர்மறைப் பொருள் சொல் அமைப்பிலேயே காணப்படுகின்றது. எதிர்மறைத் தொடர் அமைப்பு வினைமுற்றாக, வினையெச்சமாக, பெயரெச்சமாக, தொழிற் பெயராகத் தொடர் அமைப்பினைப் பெற்று வருகின்றன.
நோக்கம்:
இக்கட்டுரையின் நோக்கம் 1. இலக்கணங்களில் எதிர்மறைகள், 2. சங்க இலக்கியங்களில் எதிர்மறை விகுதிகளாக, வினைகளாக எவை எவை பயன்படுத்தப்பட்டன? 3. இக்காலத் தமிழில் எதிர்மறைகள் விகுதிகளாக இடம் பெற்றுள்ளனவா? அல்லது வினை சொற்கள் பயன்படுத்தப் படுகின்றனவா? துணை வினைகள் பயன்படுத்தப் படுகின்றனவா? அல்லது வேறே தொடரமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றதா? 4. எதிர்மறைத் தொடரமைப்புகள் எவை எவை? அவை உணர்த்தும் பொருள்கள் யாவை? போன்றவற்றை ஆராய்வதே ஆகும்.
இலக்கணங்களில் எதிர்மறைகள்:
தொல்காப்பியர் தமது தொல்காப்பியத்தில் சுமார் 12 சூத்திரங்களில் எதிர்மறையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த போதிலும் அவற்றின் அமைப்பு பற்றியும், பகுப்பு பற்றியும் எங்கேயும் விளக்கமாகக் குறிப்பிடவில்லை. “இன்னை, செப்பல், இல்லை, இல்”1 போன்ற எதிர்மறைகள் குறித்துக் குறிப்பிடுகின்றார்.
அவருக்குப் பின் வந்த நன்னூலாரும் “ஆ வே எதிர்மறைக் கண்ணதாகும்”2 என ‘ஆ’காரம் எதிர்மறையைக் குறிப்பதாகச் சுட்டுகின்றார். வீரமாமுனிவர் “தெரிநிலைக் குறிப்புப் பெயரெச்சங்கள் எதிர்நிலைப் பொருளை உணர்த்தும்”3 என்கிறார். மேலும் தொன்னூல் விளக்கத்தில் “எதிர்மறை இடைநிலையாக மட்டுமல்லாது ஐம்பால் மூவிட விகுதிகளாகவும், வியங்கோளிலும், வினையெச்சங்களாகவும் வரும்”4 என்கிறார்.
தொல்காப்பியக் கருத்தை அப்படியே வழி மொழிகிறது முத்துவீரியம்.5 ஜி.யூ.போப் அவர்கள் “எதிர்மறை வினை முக்காலத்திற்கும் பொதுவாக வரினும் பெரும்பாலும் எதிர்காலத்திற்குரியனவாக வழங்கப்படுகின்றன. எதிர்கால வினைச் சொற்களில் மட்டும் இவை இவ்வாறு நிற்றல் இல்லை” 6
என்கிறார்.
இலக்கண நூற்களின் வாயிலாக, “-அல், -ஆ, -ஆத், -ஆது, -ஆமை, -ஆமே, -ஆன் -இல், -இல, -உம்” போன்ற விகுதிகளும் “அரிது, அன்று, இன்று, இல்லை, இலன், மாட்டு” போன்ற சொற்களும் எதிர்மறைப் பொருளைத் தருவதாக அமைந்துள்ளன. தொடர்நிலையில் வினையோடு ‘ஓ’, ‘ஏ’ போன்ற விகுதிகள் இணைந்து எதிர்மறைப் பொருளைத் தருகின்றன.
மொழியியலார் எதிர்மறை விகுதிகளைத் துணை வினைகளாக உருபன்(Morpheme) தொடரன்கள்(Syntax) அடிப்படையில் பாகுபாடு செய்கின்றனர்.
சங்க இலக்கியங்களில் எதிர்மறைகள்:
சங்க இலக்கியத் தொடரமைப்புகளில் பெரும்பாலும் –அல்,
-இல் ஆகிய இரண்டு எதிர்மறை விகுதிகளே இடம் பெற்றுள்ளன. அவை எண், பால், இட விகுதிகளைப் பெற்று வரும். காலம் காட்டாது.
“ஈயாயாயினும் இரங்குவே அல்லேம்” (புறம் 209-1)
“மறவர் செல்லேம் அல்லேம் என்னார்” (புறம் 31-11)
“இரவலர் புரவலை நீயும் அல்லை” (புறம் 162-1)
“தானது துணிகுவான் அல்லன்” (குறுந் 230-2)
“ஈன்றதையோ வேணடல் அல்லல்” (புறம் 346-2)
“புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்” (புறம் 162-2)
“இவை நுமக்கு உரைய அல்ல” (ஐங். 110-10)
“இருவீர் வேரல் இயற்கையும் அன்று” (புறம் 45-6)
“யான் நினைவு இலேன்” (அகம் 379-16)
“பெரியோரை வியத்தலும் இலம்” (புறம் 192-12)
“அன்று அவன் ஒழிந்தன்றும் இலை- நெஞ்சே”
“நிரம்பாது கடுக்கும் செல்வமும் இலன்” (புறம் 180-1)
“நின் அளி அலது இலள்” (அகம் 118-14)
“வணங்காத் தலை...... குணம் இல” (குறள் 9)
வினா எதிர்மறை:
சங்க இலக்கியங்களில் வினா எதிர்மறை அமைப்பு இடம் பெற்றள்ளன.
அமைப்பு: உடன்பாட்டு வினைமுற்று + எதிர்மறை வினைமுற்று + வினா விகுதி
வருந்துவம் அல்லமோ? (அகம் 183-15)
நீ.... இரங்குவை அல்லையோ? (அகம் 379-27)
சூழ்நிலை சார்ந்த எதிர்மறை:
சில சொற்கள் உடன்பாட்டுப் பொருளை ஒரு இடத்திலும், எதிர்மறைப் பொருளை மற்றொரு இடத்திலும் தரும். அவற்றையே சூழ்நிலை சார்ந்த எதிர்மறை என்பர். இத்தகைய சூழ்நிலை சார்ந்த எதிர்மறைகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
“புறந்தோர் புண்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்று”
(அகம் 108-2)
மேலே உள்ள எடுத்துக்காட்டில் ‘ஒத்தன்று’ உடன்பாட்டுப் பொருளைத் தந்துள்ளது. பின் வரும் எடுத்துக்காட்டில் ‘ஒத்தன்று’ எதிர்மறைப் பொருளைச் சுட்டுகின்றது.
அமைப்பு: தொழிற்பெயர் + எதிர்மறைச் சொல்
“நீயே அருளிலையாகி இன்னை ஆகுதல் ஒத்தன்று”
(அகம் 355-14)
பெரும்பாலான இடங்களில் ‘ஒத்தன்று’ உடன்பாட்டுப் பொருளையும், சிற்சில இடங்களில் எதிர்மறைப் பொருளையும் தருகின்றன. இதே போன்று குறளில் ‘எனல்’ என்னும் சொல் ஓரே பாடலில் உடன்பாட்டுப் பொருளையும், எதிர்மறைப் பொருளையும் கொடுக்கின்றது. ‘செல்லாம்’, ‘ஓம்புமதி’ போன்ற சொற்களும் உடன்பாட்டுப் பொருளையும், எதிர்மறைப் பொருளையும் தருகின்ற மாதிரியான இடங்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
“மகன் எனல் மக்கட் பதடி எனல்” (குறள் 196)
எதிர்மறையும் உடன்பாடும் அடுக்கி வருதல்:
சங்க இலக்கியங்களில் இவ்வகையான எதிர்மறையும் உடன்பாடும் அடுக்கி வருதல் அதிலுள்ள எதிர்மறைத் தொடர்களின் வழியாக கவிஞனின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. சங்க இலக்கியக் கவிஞர்கள் இவற்றை ஒரு உத்தியாகவே பயன்படுத்தியுள்ளனர். மேலும் சங்க இலக்கியங்களில் எதிர்மறை உவமை, எதிர்மறை உருவகம் போன்றவைகளும் கவிஞர்களின் உத்தியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
அமைப்பு: எதிர்மறை வினை + எதிர்மறைச் சொல் + உடன்பாட்டு வினை
“அறியேம் அல்லேம் அறிந்தனம்” (ஐங் 240-1)
“காணேம் அல்லேம் கண்டனம்” (கலி 9-9)
“கேளேம் அல்லேம் கேட்டனம்” (குறுந் 244-3)
“ஒன்றேன் அல்லேன் ஒன்றுவம்” (குறுந் 208-1)
இக்காலத் தமிழில் எதிர்மறைகள்:
இக்காலத் தமிழில் எதிர்மறைகள் விகுதிகளாக, சொற்களாக, துணைவினைகளாக வருகின்றன. விகுதிகளாக -ஆ, -ஆத் -ஏ, -உம், -ஓ போன்றவைகளும், சொற்களாக இல்லை, அன்று, இன்றி போன்றவைகளும், துணைவினைகளாக மாட்டு, முடியாது, ஆகாது, கிட்டாது, கிடைக்காது, கூடாது, செல்லாது, தகாது, தராது, நிக்காது, பார்க்காது, போகாது, போதாது, வராது, வேண்டாம் போன்றவைகள் எதிர்மறைகளாகச் செயல்படுகின்றன.
நானா?, காணாது, காணேன், உண்டோ!, படிக்கவும் பாடவும்
இல்லை
நான் அவன் இல்லை, அதுவன்று இது, அவன் மட்டுமின்றி
நான் வர மாட்டேன், நான் வர முடியாது, அவர் நாளை வருகிறது ஆகாது, எனக்கு வேண்டாம், இன்று வந்திருக்கக் கூடாது, வராமல் போகாது, இன்று வராது, அது கிடைக்காது, காசு செல்லாது, அது தகாது, அவை தராது, அந்தப் பேச்சு நிக்காது, அது பார்க்காது, அது போதாது, அது போகாது.
துணைவினைகளில் மாட்டு தவிர வேண்டாம், முடியாது, கூடாது, வராது போன்ற பிற எதிர்மறைத் துணைவினைகள் செய்ய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்திற்குப் பின் வந்து எதிர்மறைப் பொருளைத் தரும். மாட்டு மட்டுமே எண், பால், இட விகுதிகளைப் பெற்று எதிர்காலத்தை மட்டும் உணர்த்தி வரும். அதுவும் அஃறிணைப் படர்க்கை ஒருமைப் பன்மைத் தொடர்களுக்கு இது பொருந்தாது. மற்ற எதிர்மறைத் துணை வினைகள் எண், பால், இட விகுதிகளைப் பெறாது எதிர்காலத்தை உணர்த்தி வரும்.
சொல் நிலையில் இரண்டு வழிகளில் எதிர்மறை வெளிப்படுத்தப்படுகின்றன. 1. எண், பால், இட விகுதிகளை நேரடியாக வினையுடன் சேர்ப்பது 2. எதிர்மறை விகுதிகளை வினைகளுடன் சேர்ப்பது.
நான் வாரேன்
அது வராது
இங்கே வராதே
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்கு எதிர்மறை விகுதி இல்லை. ஆனால் எண், பால், இட விகுதிகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது வாக்கியம் எதிர்மறை தொழிற்பெயர் அமைப்பு. மூன்றாவது அமைப்பு எதிர்மறை ஏவல் வினை அமைப்பு.
அமைப்பு : வினை + எதிர்மறை + எண்,பால், இட விகுதி
அமைப்பு : வினை + எதிர்மறை + ஏவல் வினை விகுதி
லெக்மன் (1993: 228) எதிர்மறை விகுதி –ஆ காலத்தை காட்டும் விகுதிகளை ஏற்காமல் அஃறிணை ஒன்றன்பால் படர்க்கை வினைமுற்றாக வரும் என்கிறார். எதிர்மறை விகுதி
-ஆத் மூன்று வினை அமைப்புகளுடன் வரும். 1. எதிர்மறை ஏவல் வினை ஒருமை பன்மைத் தொடர், 2. எதிர்மறை பெயரெச்சத் தொடர் மற்றும் 3. எதிர்மறை தொழிற் பெயர் தொடர் அமைப்பு.
இங்கே வராதே
இராணி படிக்காத பாடம்
இராணி வராதது நல்லது
குறிப்பு எதிர்மறை வினைகள் பாரேன், விடேன் எதிர்மறை விகுதி –ஆ வால் வெளிப்படுத்தப்படுகிறது. அவை காலம் காட்டாது. பால், எண், இட விகுதிகளைப் பெற்று வரும்.
அமைப்பு: வினை + எதிர்மறை + பால் எண் இடவிகுதி
மேற்குறிப்பிட்ட எதிர்மறைத் தொடரில் எதிர்மறை விகுதியின்றி எண்,பால், இட விகுதியால் உணரப்படும். –ஆ எதிர்மறை படர்க்கை அஃறிணை ஒருமை, பன்மைத் தொடரில் மட்டும் வெளிப்படையாகத் தெரியும் என்பது பின் வரும் எடுத்துக்காட்டுகளின் மூலம் தெளிவார விளங்கும்.
செல்லேன், செல்லோம், செல்லாய், செல்லீர், செல்லான், செல்லாள், செல்லாது, செல்லார் மற்றும் செல்லா.
எதிர்மறை உணர்த்தும் பொருள்கள்:
1. பொருளில் எவ்வித மாற்றமுமின்றி உடன்பாட்டு வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாக மாற்ற முடியும்.
அவன் பார்த்தான் – உடன்பாட்டு வாக்கியம்
அவன் பார்க்கவில்லை என்பது பொய் – எதிர்மறை வாக்கியம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் பொருளில் மாற்றமில்லை.
2. இரண்டு எதிர்மறை சொற்களை ஒரு வாக்கியத்தில் இணைத்தால் அது உடன்பாட்டு வாக்கியமாக மாறும்.
அவள் அழகாக இல்லை என்று சொல்ல முடியாது
அவள் அழகானவள்
மேலே சொல்லப்பட்ட இரண்டு வாக்கியங்களில் முதல் வாக்கியத்தில் இரண்டு எதிர்மறைகள், இல்லை, முடியாது சேர்ந்து இரண்டாவது வாக்கியப் பொருளை உணர்த்துகின்றது. தோற்றத்தில் மட்டும் முதல் வாக்கியம் எதிர்மறை வாக்கியம். ஆனால் அது உணர்த்தும் பொருள் உடன்பாட்டுப் பொருள்.
3. சில சொற்கள் தோற்றத்தில் உடன்பாட்டுப் பொருளைக் கொடுத்து ஆழ் நிலையில் எதிர்மறைப் பொருளைக் கொடுக்கிறது. அரிது, மட்டும், தவிர போன்ற சொற்கள் எதிர்மறைப் பொருளைக் கொடுக்கின்றது.
பிறவாழி நீந்தல் அரிது (குறள் – 8)
அவள் மட்டும் பாடினாள்
இராமனைத் தவிர எல்லோரும் தேர்வில் வெற்றி பெற்றனர்
மேற்குறிப்பிட்ட வாக்கியங்கள் ஆழ் பொருள் நிலையில் எதிர் மறைப் பொருளை உணர்த்துகின்றது. அதாவது பிறவியாகிய பெருங்கடலை நீந்த முடியாது, அவள் கூட இருந்தவர்கள் யாரும் பாடவில்லை, இராமன் தேர்வில் வெற்றி பெறவில்லை. மேலும் -தான் என்ற விகுதியை வாக்கியத்தில் கொஞ்சம் அழுத்தமாகப் பயன்படுத்தினால் அது எதிர்மறைப் பொருளைத் தருகின்றது.
இராமன்தான் திருடினான் என்ற வாக்கியத்தின் எதிர்மறை வாக்கியம் இராமனைத் தவிர வேறு யாரும் திருடவில்லை. இது எதிர்மறைப் பொருளைத் தருகின்றது.
கேள்வியும் எதிர்மறையும்:
4. சாதாரண வாக்கியங்களைப் போலவே, வினா வாக்கியங்களும் உடன்பாட்டு, எதிர்மறைப் பொருள்களை உணர்த்துகின்றன்.
அவன் சாப்பிட்டானா?
அவன் சாப்பிடவில்லையா?
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வாக்கியங்களில் வினா விகுதி -ஆ, எதிர்மறை விகுதியாகவும் செயல்படுகின்றது. இந்த விகுதி பெயர்களோடும் இணைந்து வருகின்றது. அப்படி இணைந்து வரும்போது உடன்பாட்டு வாக்கியத்திற்கு இணையான எதிர்மறை வாக்கியம் இல்லை.
நீயா போனாய்?
*நீயா போகவில்லை
மேலே சொல்லப்பட்ட வாக்கியங்களில் நீயா போனாய்? என்ற வாக்கியத்திற்கு இணையான எதிர்மறை வாக்கியமில்லை. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட எதிர்மறை வாக்கியம். பிறிதொரு உடன்பாட்டு வாக்கியத்திற்கு இணையான எதிர்மறை வாக்கியம்.
5. மாற்று வினைகளுள்ள வினா வாக்கியங்களில் எதிர்மறை வாக்கியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நீ அங்கே போனாயா? இல்லையா?
பேனாவா, பென்சிலா எது வேண்டும்?
மேலே குறிப்பிடப்பட்ட வாக்கியங்களில் இரண்டாவதாக உள்ள வாக்கியத்தில் -ஆ வினா விகுதி, பேனாவா? பென்சிலா? என்ற சொற்கள் எதிர்மறைப் பொருளைத் தருகின்றன.
முடிவுரை:
வாக்கியத்தில் எதிர்மறையாகச் செயல்படுவது ‘இல்லை’.என்னும் சொல். ‘இல்லை’ எதிர்மறை எப்பொழுதும் வாக்கியத்தின் இறுதியிலே இடம் பெறும். சொல் நிலை எதிர்மறைகள் எப்பொழுதும் முதல்வினைகளோடோ, துணைவினைகளோடோ விகுதிகளாக இணைந்து வரும்.
இரண்டு எதிர்மறைகள் இணைந்து வரும்போது உடன்பாட்டுப் பொருளைத் தருகின்றன.
இன்றைய பெச்சுத் தமிழில் வரவில்லை, வரமாட்டான் முதலிய வடிவங்களே பெரும்பாலும் எதிர்மறையை உணர்த்துகின்றன.
குறிப்புகள்:
இளம்பூரணர் உரை, தொல்காப்பியர், சொல் நூ. 107, 222
நன்னூல், சொல். நூ. 329
நன்னூல், சொல். நூ. 340
தொன்னூல் விளக்கம் – சொல். நூ.114, 121
முத்துவீரியம், சொல் நூ. 543, 631
G.U.Pope – A Grammar of the ordinary dialect of the Tamil Language
துணை நூல்கள்:
1. தொல்காப்பியம், மூலமும் இளம்பூரணர் உரையும், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி – 6. 1973.
2. நன்னூல் முலமும், க. அழகேசன் உரையும், சுதா பதிப்பகம், தூத்துக்குடி. 2002.
3. முத்துவீரியம் மூலமும் திருப்பாற்கடனாதன் கவிராயர் உரையும், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை - 1. 1972.
4. வீரமாமுனிவர், தொன்னூல் விளக்கம், கழக வெளியீடு, 1984
5. முத்து சண்முகம்பிள்ளை, மு. இக்காலத் தமிழ், திருவருள் பிரஸ், மதுரை – 2. 1973.
6. Lehmann, Thomas. 1993 A Grammar of Modern Tamil, Pondicherry Institute of Tamil, Pondicherry.