வெல்திறத் திருக்குறள் பல்வகைச்சொல், தொடர், பா நுட்பங்களைத் தன்னுள் நிரம்பக் கொண்டஅருநூல், நுண்நூல், நன்நூல் என்பதை அனைவரும் அறிவர். திருக்குறளின் ஓதுதிறன், உணர்திறன்பற்றி மாங்குடிமருதனார் பேசுவது திருவள்ளுவமாலையின் 24 – ஆவது பாடல் தொடரில் கீழ்க்காணுமாறு அமைந்துள்ளது.
ஓதுதற்[கு] எளிதாய்உண்ர்தற்[கு] அரி[து]ஆகி
பொருள்உரை
திருக்குறள்படிக்கவும், கற்கவும், ஓதவும் எளியதாகஇருக்கும். ஆனல், அதன் பொருளை உணர்வதற்கு அரியதாக இருக்கும். ஏனென்றால், அது பற்பல சொல், தொடர், பா நுட்பங்களையும், பொருள், நய நுட்பங்களையும் தன்னுள்ளே உள்ளடக்கமாகக் கொண்டு ஒள்ளியதாய் விளங்குகின்றது என்பதால்.
திருக்குறளைப்போலவே ஓரளவு திருவள்ளுவமாலையும் தன்னுள்ளே சொல், தொடர்நுட்பங்களையும், சொல், பொருள்நுட்பங்களையும் கொண்டு விளங்குகிறது. அவற்றை ஆழ்ந்து ஆய்வதே இவ்ஆய்வுக்கட்டுரையின் ஆய்வுப்பொருள்ஆம்.
இவ்ஆய்வு இறைப்பவர்க்கு ஊற்றுநீர்போல் [திருக்குறள்1161] மிகும். ஆதலின், அறுவர் பாடல்களில் அமைந்துள்ள சில சான்றுகள் வாயிலாக மட்டுமே திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் இங்குஆராயப்படுகின்றன.
4.0. சொல்நுட்பவரைவிலக்கணம்
நுட்பச்சொல் என்பது சொல்நுட்பம் என்று ஏன் ஆயிற்றோ எனின், பின்மொழிநிலையல் என்னும் பரிமேலழகர் எடுத்துக்காட்டும் விதியின்படியாம்.
ஒரு கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், கற்போரது நுண்நோக்கு ஆய்வு[MICRO STUDY] வழிப் புரிந்துகொள்ளுமாறு குறிப்பாகவும், மறைந்திருக்குமாறும் பல பொருள்களைச் சொல்லுக்குள் நுழைத்து நுணுக்கமாகச் சொல்லுதல் சொல்நுட்பம் எனலாம்.
இதனை ஆங்கிலத்தில் சட்ல்டி [SUBTLETY] எனலாம். இதற்கு ஆங்கில அகரமுதலி[LONG MAN DICTIONARY OF CONTEMPORARY ENGLISH — PAGE 1056] தரும்பொருள்: நுட்பம். விளக்கம்: இதைக் கவனிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், விளக்குவதற்கும் எளியது அன்று. [not easy to notice, understand or explain] என்பதாம். சொல்நுட்பத்தை ஆங்கிலத்தில் சட்ல்வேர்ட்[SUBTLE WORD]எனலாம்.
இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகம் மீநுண் தொழில்நுட்பம்[NANO TECHNOLOGY]பற்றிப் பெரிதும் பேசுகிறது. அதாவது, மிகமிகச் சிறிய ஒன்றிலிருந்து மிகமிகப் பெரிய பயன்கள் பலவற்றைப் பெறுதல் என்பது. இவ்விளக்கம் சொல்நுட்பத்திற்கும் செல்லும். சிறிய சொல்லிலிருந்து பல பெரிய நற்பயன்தரும் பொருண்மைகளைப் பெறுதல்தானே சொல்நுட்பமும்.
நுட்பம்அமைந்தசொல்லின்தகவு / தகைமை எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆய்தலும் இங்குத் தேவையாகின்றது. அடைப்புக்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள எண்கள் திருக்குறட் பாக்களின் எண்கள்.
ஆக்கம் தருவதாய் இருத்தல் [0642]. கேட்போரை ஈர்த்து, அவரது உள்ளத்திற்குள் சென்று பதியும் திறன்உடைத்தாதல் [0643], அறனும், பொருளும் அளிக்கும் திறன் பெற்றிருத்தல் [0644], நுட்பச்சொல்லைச் சொல்லும்பொழுது, அச்சொல்லை வெல்லும் வேறு ஒரு சொல் இல்லாதபடிச், சொல்லும் சொல்லே வெல்லும்படி அமைதல் [0645], கேட்போர் விரும்பும்படித் திறன் உடைத்தாதல் [0646], மாசு இல்லாத ஒரு சொல்லில் பல் நுண்பொருள்கள் அமைதல் [0649] போன்ற தகவுகளை உள்ளடக்கமாக நுட்பம் அமைந்த சொல் / சொல்நுட்பம் நிலைபெறல் வேண்டும். அத்தகவுகளால்தான், சொல்லுக்கும், சொல்வோர்க்கும் மதிப்பு, கற்போர்க்கும், ஆய்வோர்க்கும் மகிழ்வு. ஆய்வுக்கும்சிறப்பு.
7.0. சொல்நுட்பப்பயன்கள்
பொருள்ஆழம், பொருள்அழுத்தம், ஒரு சொல்லில் பல பொருள்அமைவு, இலக்கியஇன்பம், சொல்திறன், புலவர்களின் சொல்மேலாண்மைத் திறன்கள், பொருள் புலப்பாட்டுத்திறன், கவிதைத்திறன், சொல்நுட்பத்தைப் படித்துஉணர்ந்தோர் மனத்தில். மகிழ்வும், வியப்பும் முகிழ்த்தல், தமிழ்ச்சொல்லின் அருமையும், பெருமையும் வெளிப்படல் போன்றவை சொல்நுட்பப் பயன்கள்ஆம்.
நற்றமிழ் இலக்கணிகள் நுட்பஇயலை நுணுகி ஆய்ந்துள்ளார்கள். அவ் ஆய்வை இங்கு ஆய்வோம். விரிவு அஞ்சி எல்லாவற்றிற்கும் சான்றுகள் தர இயலவில்லை.
8.1. தற்குறிப்பேற்றஅணி:
இயற்கையாக/ இயல்பாகநடக்கும் நிகழ்வுஒன்றில், புலவர் தாம்கருதியகுறிப்பை / நுட்பத்தை ஏற்றிச் சொல்லுவது.
8.2. ஒட்டு / பிறிதுமொழிதல் / நுவலாநுவற்சிஅணி
புலவர் தாம் கருதிய பொருளை அங்ஙனமே சொல்லாது, மறைத்து, அதை விளக்குவதற்கு அதைப்போன்ற பிறிதுஒன்றினை நுட்பமாகச் சொல்லி விளக்குவது.
சொல்நுட்பம், தொடர்நுட்பம், முற்றுத்தொடர்நுட்பம் ஆகியவற்றையும் தாண்டிப் பாடல்நுட்பம் என்பதையும் இலக்கணிகள் சிந்தித்துள்ளார்கள். பாடல்நுட்பம் என்னும் வகைப்பாட்டில் ஒட்டுஅணி அமையும்.
8.3. நுட்பஅணி
ஒன்றினை வெளிப்படையாகச் சொல்லாமல் கேட்போர் புரிந்து கொள்ளுமாறு நுட்பமாகச் சொல்லித் தெரிவிப்பது. இது புறத்திணை இயலில் வருவது.
8.4. உள்ளுறைஉவமம்
புலவர் தாம் புலப்படச் சொல்லும் உவமையாலே, புலப்படச் சொல்லப்பட்டதே அன்றிப், புலப்படச் சொல்லாத / மறைந்திருக்கும் பொருளை / கருத்தை உவமையோடு ஒத்து முடிவதாக உள்ளத்தேகருதி, அதனை உள்ளுறுத்து நுட்பமாகச் சொல்வது.
8.5. இறைச்சிப்பொருள்
உள்ளுறை உவமத்தில் உவமை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். . அதிலிருந்து குறிப்பாக நுட்பமாக உள்ள பொருளை எடுத்துக்கொள்ளுவது. இத்தோடு உள்ளுறை முடிந்துவிடும். இறைச்சிப்பொருள் இத்தோடு நின்றுவிடாது. இதற்கு அப்பாலும் அத்தோடு தொடர்புடைய ஒரு பொருள் உள்தங்கி இருக்கும். அந்நுட்பப் பொருளைக் குறிப்பில் உணரும் நுண்திறத்தர் ஆய்ந்துகாண்பர். உள்ளுறை உவமையும், இறைச்சியும் அகத்திணை இயலில் முகம்காட்டும்.
8.6. குறிப்பெச்சப்பொருள்
சொல்லிய சொல்லுக்குள்ளே இருக்கும் குறிப்பினை / நுட்பத்தை ஆய்ந்து உணருமாறு எஞ்சி நிற்கும் பொருள்.
8.7. அருத்தாபத்தி
ஒன்றைச் சொல்லி அதன் வாயிலாக இன்னொன்றை விளக்குகின்ற முறையை அருத்தாபத்தி என்பர்.
சான்று:அவன்பகலில்உறங்குவதுஇல்லை
அவன் இரவில் மட்டுமே உறங்குவான் என்னும் பொருள்நுட்பம் இம் முற்றுத்தொடரில் இருக்கின்றது.
மேற்காணும் சான்றுகளால் தமிழ் இலக்கணிகள் சொல்நுட்ப இயல், தொடர்நுட்ப இயல், முற்றுத்தொடர்நுட்பஇயல் ஆகியவற்றை மிகநுட்பமாக ஆய்துள்ளார்கள் என்பது அறியப்படுகின்றது. அவ் இலக்கிய உத்திகளை இலக்கியப் புலவர்கள் தங்கள் பாடல்களிலும் இலங்குமாறு அமைத்து இலக்கிய இன்பத்தை வழங்கியுள்ளார்கள்.
9..0. திருக்குறளில்நுட்பம்
திண்மை, திட்பம்எனவும்; ஒண்மை, ஒட்பம்எனவும்; தண்மை, தட்பம் எனவும் மாறும். அவற்றைப் போலவே, நுண்மை, நுட்பம் ஆயிற்று.
நுட்பம் திருக்குறளில் ஒரே ஒரு திருக்குறட்பாவில் [0636] இருமுறை வந்துள்ளது. நுட்பம் என்னும் பொருள் சுமக்கும் நுண்மை, பல்வேறு வடிவங்களில் திருக்குறட்பாக்களில் 9 இடங்களில் அமைந்துள்ளது. அவையாவன:
நுண் –- 0407, 0424, 0726
நுணங்கிய –- 0419
நுணுக்கம் –- 0132
நுண்ணிய –- 0373
நுண்ணியம் — 0710
நுண்ணியர் — 1126 .
இதன் நுண்திறனை எண்ணியே நுண்ஆய்வாளர் திருவள்ளுவப்பேராசான், அச் சொல்லை 11 இடங்களில் அமைத்துச் சிறப்புச் செய்துள்ளார். இவ் ஆய்வுக்கட்டுரையில் இதுபற்றி ஏன் ஆராய்தல் வேண்டும் எனும் வினா எழலாம். அதற்கு விடை இதுதான்.
திருக்குறளை எழுத்து எண்ணிக் கற்று நுண்ஆய்வு மேற்கொண்ட திருவள்ளுவமாலைப் பெரும்புலவர்கள், அச் சொல்லின் அருமை, பெருமை, சிறப்பு, சீர்மை கண்டுணர்ந்தார்கள். திருவள்ளுவப் பெருந்தகை வழியில் தாங்களும் அவ் உத்தியைப் பயன்படுத்தல் வேண்டும் என்னும் நோக்கு அவர்களிடம் ஆக்கம் பெற்றது.
திருவள்ளுவமாலையில் சொல்நுட்பங்கள் நிறைந்து உறையினும், விரிவுஅஞ்சி முன்குறிப்பிட்டவாறு அறுவர்பாடல் சான்றுகளை மட்டுமே இங்கு நுண்ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன். எஞ்சியவற்றை நுண்ஆய்வு மேற்கொள்ளப் பிறரை இவ்ஆய்வுக்கட்டுரை தூண்டுமாயின், அத்தூண்டுதல் என்னை மேலும் ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டுமென நம்புகின்றேன்.,
10.1. அருவப்பாடல்— 01 [அசரீரிப்பாடல்]
[உருவம்இல்லாததெய்வஒலி]
சொல்தொடர்: தெய்வத்திருவள்ளுவர்
திருவள்ளுவமாலையின் முதற்பாடலில் வரும் தெய்வத்திருவள்ளுவர் என்னும் சொல்தொடர், நுட்பம்நிறைந்தது. தெய்வஆற்றல் மிக்கவர் திருவள்ளுவர் எனப் பொருளால் சிறந்தது.
நுட்பங்கள்.
திருக்குறள் உலகுதழீஇய நுட்பச்சிந்தனைகள், உயர்நிலைக்கொள்கைகள், உயிர்மைக்கோட்பாடுகள், என்றும் எவருக்கும் பொருந்தும் அறநிறை கொள்கைகள், பலதுறைசார்ந்த கருத்தியல்கள், மனிதனைத் தெய்வமாக உயர்த்தும் அனைத்து அடிப்படையான நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள், எண்ணற்ற அருமை, பெருமை, வலிவு, பொலிவுஅழகு, விரிவு, ஆழ்மை, ஆளுமை போன்ற அனைத்தையும் தன்னகத்தேகொண்டு, அது தனக்கு உவமை இல்லாது [0007] உயர்ந்துநிற்கின்றது.
இவற்றைப் படித்தும், கற்றும், ஓதியும், தோய்ந்தும், ஆய்ந்தும் நோக்கியும், உரைகள் ஆக்கியும் கண்டவர்கள் பற்பலர். அவர்களுள் சிலர் திருக்குறளை ஒருவர் செதுக்கியிருக்க முடியாது என்பர். வேறு சிலர், பலர் உருவாக்கிய பாடல்களின் தொகுப்பு என்பர். வேறு சிலர் மனிதனால் ஆக்கியிருக்க முடியாது; தெய்வம்தான் இதைச் செய்திருக்க முடியும் என்பர். இயல்பான மனிதனால் செய்தற்கு இயலாத ஒன்றை மாமனிதர் திருவள்ளுவர் செய்திருக்கிறார் என்னும் நம்பிக்கையால்தான், திருவள்ளுவரைத் தெய்வம் என்றே நம்பினர். அதனால்தான் தெய்வத்திருவள்ளுவர் என அப்பாடல் பதிவுசெய்து பாராட்டுகிறது.
தமிழ்விடுதூது நூலாசிரியரும் தெய்வமொழிப்பாவலர் எனவும், மாக்கவி பாரதியாரும் தெய்வவள்ளுவ எனவும் வழிமொழிந்து அக்கருத்திற்கு ஒளியூட்டிஉள்ளனர்.
அரும்பொருள் ஆய்ந்த திருவள்ளுவருக்கு அப்பாடல் வழங்கியிருக்கும் விருதுதான், தெய்வ என்னும் பொய்யில் அடைமொழி.
அது திருவள்ளுவர் மாபெரும் ஞாலப்பேராற்றலர், தெய்வச்சீராற்றலர் என்னும் நுட்பத்தைத் திட்பமுற நுவல்கிறது.
திருக்குறளும் உச்சியில் இருக்கும் உயர்அறப் பெருநூல்.
தேன் பருப்பொருள் வடிவ மருந்து.
திருக்குறள் நுண்பொருள் வடிவ மருந்து..
தேன்மனநோயைத்தீர்க்காது.
திருக்குறள்மனநோய்களையும்தீர்க்கும்.
தேன்இனிக்கும்; நல்ல வண்ணத்தது; இயற்கையாது. .
திருக்குறள் படிக்கப்படிக்க இனிக்கும்.
பல்வகை ஒலிவண்ணங்களால் நல்லிசை தருவது.
மனிதனுக்குத் தேவையான இயற்கையான / இயல்பான
வழிகளையும், நெறிமுறைகளையும் காட்டுவது.
சொல்தொடர்: நின்றுஅலர்தல்
பொருள்உரை
மலர்ந்துநிலைத்துநிற்றல். அதாவதுகூம்பல்இல்லாதது.
நுட்பம்
திருக்குறள் அன்று மலர்ந்தது; இன்றும் மலர்ந்த நிலையிலேயே உள்ளது. என்றும் மலர்ந்த நிலையிலேயே இருக்கும். திருக்குறளும் கூம்பல் இல்லாதது.
சொல்தொடர்: வள்ளுவன்வாய்ச்சொல்
நுட்பங்கள்
திருக்குறளைத் திருவள்ளுவர் ஒருவரே செய்திருக்கமுடியாது; பலர் பாடிய குறட்பாக்களைத் திருவள்ளுவர் தொகுத்தார் என்றெல்லாம் சொல்வார்க்கு வள்ளுவன் வாய்ச்சொல் [இறையனார்பாடல் — 03] என்னும் சொல் தொடரில் பதிலின் பதிவு உள்ளது. அதாவது, திருவள்ளுவரது வாயிலிருந்து வந்ததுதான் திருக்குறள் என்பதும், அது தொகுப்புநூல் அன்று என்பதும் அச் சொல்தொடர் நுட்பமாக அறிவிக்கின்றது.
தினைஅரிசியின் அளவுக்கும் ஒப்பாகாத மிகச் சிறிய புல்லின் நுனியின்மேல் உள்ள பனித்துளி நெடிது உயர்ந்த பனையின் உருவத்தைத் தன்னுள் கொண்டு காட்டும். அதுபோல் போல், திருவள்ளுவர் அருளிய ஈரடியாலான சிறிய திருக்குறட் பாவும், மிகப் பரந்து விரிந்த அறம் சார்ந்த பொருள்களைத் தன்னுள் கொண்டு காட்டும்.
உலகத்தார் எல்லார்க்கும் இன்றியமையாத எல்லா அறநெறிகளும் திருக்குறளின் முப்பாலில் இருக்கின்றன. இம் முப்பாலில் இல்லாத எப்பொருளும் இல்லை என்பதனால்,.
நுட்பம்
இவ் வெண்பாவின் இல்லையால் என எச்சத் தொடராக முடிந்திருக்கிறது. அவ் எச்சத் தொடரை முற்றுத் தொடராக மாற்றினால் ஒரு நுட்பப் பொருள் கிடைக்கும். அவ் எச்சத் தொடரின் முற்றுத்தொடர் கீழே.
இம் முப்பாலில் இல்லாத எப்பொருளும் இல்லை என்பதால், இம் முப்பாலை ஓதி அதன்படி வாழ்ந்தாலே போதும் வேறு எப்பால் நூல்களையும் எப்போதும் ஓத வேண்டிய தேவை இல்லை என்னும் நுட்பம் வெளிப்படுகிறது.
சொல்தொடர்
எல்லாப்பொருளும்இதன்பால்உள என உடன்பாட்டு முறையிலும், இதன்பால்இல்லாதஎப்பொருளும்இல்லையால் என எதிர்மறை முறையிலும் இவை அமைந்துள்ளன.
கருத்தாக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பழுத்த பெருஞானி திருவள்ளுவர், இந் நுட்பமான இலக்கிய உத்தியை இயற்றினார். இதனைத் திருவள்ளுவமாலை ஒண்புலவர்களும் தங்கள் வண்பாடல்களில் நன்முறையில் இதனைப் பயன்படுத்திக் கொண்டார்கள் எனத் தெரிகிறது.
சொல்தொடர்
சொல்லால்பரந்தபாவால்என்பயன்?
பொருள்உரை
எல்லாப் பொருளும் இல்லாமல் சொற்களால் மட்டுமே பரந்து விரிந்து கிடக்கும் நூல்களால் என்ன பயன் விளையும்?
நுட்பம்
மேற்குறிப்பிட்டவாறு திருக்குறள் சொற்களால் பரந்தும், விரிந்தும் இல்லை. சொற்களால் சுருங்கிய நிலையிலேயே இருக்கிறது. எனினும் சொல்நுட்பங்களையும், பொருள்நுட்பங்களையும் நயநுட்பங்களையும் தன்னுள் நிரப்பிக் கொண்டிருக்கிறது. அவற்றுக்குள் பரந்து விரிந்த அறம் சார்ந்த கருத்தியல் நெறிமுறைகளும், கொள்கைகளும், கோட்பாடுகளும் கொட்டிக் கிடக்கின்றன. அதனால், திருக்குறளால் ஆகும் பயன்கள் அளவற்றவை.
சொல்தொடர்
வள்ளுவனார்சுரந்தபால்வையத்துணை
பொருள்உரை
திருவள்ளுவரிடமிருந்து சுரந்து வரும் முப்பால் எனும் நற்பால் எப்பாலோர்க்கும் எப்போதும் உயிர்த்துணை ஆம்.
சொல்சுரந்தஎனும்பெயரெச்சம்
சுரந்த என்பதைச் சுரத்தல் எனும் தொழிற்பெயராக்கி அதன் நுட்பப் பொருளைக் காண்போம்.
நுட்பம் — 1
சுரத்தல் எனின் உண்டாதல், ஊறுதல், நிறைதல் எனப் பொருள்படும்.
ஓர் அறநூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் திருவள்ளுவர்க்கு உண்டானது. உடனே அறநெறிக் கருத்தாக்கங்கள் அவர் உள்ளத்தில் ஊறத் தொடங்கின. அவை ஓலைச் சுவடிகளில் வந்து நிறைந்தன.
அன்று திருக்குறளுக்கு உரைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் உரையாசிரியர்களுக்கு உண்டானது. உடனே அவர்கள் உள்ளத்தில் உரைகள் ஊறின. அவை ஓலைச் சுவடிகளில் வந்து நிறைந்தன.
இன்றும் திருக்குறளைப் பற்றிப் பேச நினைத்தாலும், கட்டுரைகள் எழுத நினைத்தாலும், உரைகள் எழுத நினைத்தாலும் சொற்கள் சுரக்கும் என்பது சுரக்கும் எனும் சொல்லுக்குள் மறைந்திருக்கும் நுட்பம் எனக் கொள்ளலாம்.
நுட்பம் — 2
திருவள்ளுவரிடமிருந்து சுரந்து வரும் பால், அறத்துப் பால், பொருள் பால், காமத்துப் பால் எனனும் முப்பால். முப்பால் என்னும் பொருள்படும் அத் தொடர், திருவள்ளுவரை மும்மார்பகம் கொண்ட திருவள்ளுவத்தாய் ஆக்குகிறது, திருவள்ளுவர் மும்முலைத் தாய் எனும் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களது கவிதை அடியும் இங்குக் கருதத் தக்கது.
பசுவின் பால் போன்ற பால்கள் குடும்பத்திற்கு மட்டும் பயன்படும். அவை விற்பனைக்கு வந்தால், குறிப்பிட்ட பகுதியார்க்கு மட்டும் பயன்படும்.
நோய் எதிர்ப்பு ஆற்றல் தருவதும்,, மூளை வளர்ச்சி, எலும்பு, வளர்ச்சி, கண் பார்வை தெளிவடைதல் போன்ற குழந்தைக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களுக்கும், வளர்ச்சிக்கும் மிகவும்
இன்றியமையாதது தாய்ப் பால். அப் பால் குறிப்பிட்ட காலத்தில் மட்மே சுரக்கும். அதைக் குடிக்கும் குழந்தைக்கு மட்டுமே பயன்படும்.
திருவள்ளுவத் தாயிடமிருந்து சுரந்து வரும் ஒப்பற்ற முப்பால் உலகிற்கும், உலகத்தார் எல்லோர்க்கும் எப்போதும் செப்பமுறப் பயன்படும்.
திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி உட்செலுத்தி, அளவில் குறுகி இருக்கும்படித், தறித்து வைத்தது போன்ற வடிவினது திருக்குறள்.
நுட்பங்கள்
சொல்: கடுகு
கடுகு = திருக்குறட்பா
ஏழ்கடல் = அப்பாவில்உள்ளஏழுசீர்கள்
கடுகு மிகவும் சிறியது.
திருக்குறளின் குறள் யாப்பும் அன்றைய இலக்கியச் சூழலில் மிகவும் சிறியது.
கடுகு சிறிதெனினும். அப் பருப்பொருளுக்குள் பல்வேறு ஆற்றல்களும் [சத்துக்களும்], மருத்துவக் குணங்களும் இருக்கின்றன,
சான்றாக நச்சுத் தன்மையை நீக்கப் பயன்படுதல், நரம்பு மண்டலத்தில் செயல்படுதல், இருமலை நீக்குதல், சிறுநீர் பிரிதலுக்குப் பயன்படல், கடுகு எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்குப் பயன்படுதல், இதய நோயை நீக்குதல் போன்ற பல்வேறு பயன்பாடுகள்.
திருக்குறளின் குறள் யாப்பு சிறிதெனினும், அதற்குள் உள்ளம் சார்ந்த நோய்களுக்கும், உடல் சார்ந்த நோய்களுக்கும், சமுதாய நோய்களுக்கும் நற்பயன்கள் தரும் உலகத் தரம் மிக்க நுண்பொருள் மருந்துகள் பல்வகைகளில் நிறைந்துள்ளன.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
திருக்குறள் குறள் யாப்பும் சிறிதெனினும், காரமாக இருக்க வேண்டிய இடத்தில் காரமாகவே இருக்கின்றது.
திருக்குறட் பாவும் அன்றைய இலக்கியச் சூழலில் மிகவும் சிறியது.
ஏழுகடல்கள் .
கடலுக்குள் மூழ்கினால் ஒளிமுத்தும், பல்வேறு கனிமங்களும் கிடைக்கும். அவை வாழ்க்கையில் வளம் படைக்கும்.
திருக்குறட் பாச் சீர்களுக்குள் நுழைந்து நுண்ஆய்வு செய்வோர்க்குஒளியூட்டும் அறக் கருத்துக்களும், வழிகாட்டும் சிந்தனைகளும் கிடைக்கும். அவை வாழ்க்கையில் உளவளமும், உடல்வளமும் அடைக்கும்.
கடல் நீர் உப்புக் கரிக்கும்.
திருக்குறட் பாச் சீர்கள்படி நடப்பார்க்கு வாழ்க்கை இனிக்கும். நடவார்க்குக் கரிக்கும்.
கடல் உப்பு உணவின் சுவையைக் கூட்டும்.
திருக்குறளின் ஒவ்வொரு சீரும் அதன்படி நடப்பார் வாழ்க்கையில் இன்பச் சுவையைக் கூட்டும்.
கடல் இக் கரையிலிருந்து அக் கரைக்குச் செல்லப் பயன்படும்.
கடல் அளவிலாத ஆழம், அகலம், நீளம் ஆகியவற்றால் பெரும்பரப்பினது.
திருக்குறளின் ஒவ்வொரு சீரும் ஆழம், அகலம், நீளம், உயரம் ஆகியவற்றால் பெரும்பொருட் பரப்பைத் தன்னுள் கொண்டுள்ளது.
கடல் என்றும் வற்றாது; நிலைத்து வாழும் நிலையினது.
திருக்குறளும் என்றும் வற்றாது; மானுட இனம் உள்ளவரை நிலைத்து நிற்கும் பெற்றியது..
கடல் தனியாள் எவருக்கும் உரிமை உடையது அன்று. அது பொதுச் சொத்து..
திருக்குறளும், அதன் ஒவ்வொரு சீரும் தனியாள் எவருக்கும் உரிமை உடையது அன்று. அது பொதுச் சொத்து.
கடலை நம்பி உலகமும் வளத்தோடு இருக்கின்றது; உயிர்களும் உவப்போடு வாழ்கின்றன.
திருக்குறளின் ஏழு சீர்களை நம்பி நடந்தால், அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழும். அவ் உயிர்களால் உலகமும் வளத்தோடு வாழும்.
கடல் உலகும், உயிர்களும் இருப்பதற்கும், வாழ்வதற்கும் மிகவும் இன்றியமையாத மழைப்பொழிவுக்கு உற்ற துணை; கடல் பருப்பொருள் [CONCRETE THING] நிலைத் துணை.
திருக்குறள் அதே பணியை 2-ஆவது அதிகாரம் வான்சிறப்புவழி மழைப் பொழிவின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது; திருக்குறள் நுண்பொருள் [ABSTRACT THING] நிலைத் துணை.
11.0. நிறைவுரை
திருக்குறளின் முழுமையான விழுமியங்களைப் பழுதறக் கற்றுத் தோய்ந்த திருவள்ளுவமாலைப் பெரும்புலவர்கள், அவற்றை நுட்பமாக ஆய்ந்தார்கள். ஒட்பமாக ஆய்ந்து, இன்புற்றவற்றை உலகும் இன்புறக் காணத் திட்பமுடன் விழைந்தார்கள். அவ் விழைவின் விளைவே,, திருவள்ளுவமாலை என்னும் நுண்திறனாய்வு நன்னூல். அன்றைய இலக்கியச் சூழலின்படி, அந் நூல் 53வெண்பாக்களோடும், 2 குறள் வெண்பாக்களோடும் மண்புக்கு மாண்பு கொண்டது. திருக்குறளை அன்றைய உலகிற்கு அடையாளப்படுத்தியது; விளக்கப்படுத்தியது. உணர்வது உடையார்க்கு உயிர்சுவை விருந்தாக உயர்ந்தது. உலகும் போற்றியது; மனத்துக்குள் ஏற்றியது. அதனால், அப் புலவப் பெருந்தகையோரும் உலகிற்கு அறிமுகம் ஆனார்கள்.
12.0. சொல்நுட்பக்கோட்பாடு
வெளிப்பட்டுத் தோன்றாமல் சொல்லுக்குள் நுட்பங்கள் குறிப்புக்களாக மறைந்தும், நிறைந்தும் இருத்தல், சுருக்கத்தில் பெருக்கப் பொருள் பல காட்டுதல், எளிமைக்குள் அருமைகள் வெளிப்படுதல், தோய்வோர், ஆய்வோர், பேசுவோரது நல்அறிவு, நுண்ஆய்வுத் திறன்களுக்கு எற்ப நுட்பப் பொருள்கள் காட்டுதல் சொல்லின் ஆற்றலை வெளிப்படுதல் போன்ற கூறுகளைக் கொண்டு விளங்குவது, சொல்நுட்பக்கோட்பாடு என ஒருவாறு வரையறுக்கலாம்.