New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்


Guru

Status: Offline
Posts: 23786
Date:
திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்
Permalink  
 


திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் 

திருவள்ளுவர்: 1

 

சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்தபாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப்படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில், திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து துணிதல் எளிதன்று. எனினும், சங்க நூல்களிலும் பழைய பாட்டுக்களிலும் கிடைக்கும் சில குறிப்புக்கள் வள்ளுவர் சரித முழுதையும் திரட்டித் தராவேனும், தற்காலத் தமிழுலகில் வழங்கிவரும் அவர் கதையின் உண்மையை ஆராய்வதற்கு ஒருவாறு உதவுகின்றன. அவையிற்றை உற்றுநோக்குங்கால். பிரஸ்தாபக் கதைகளில் நம்பிக்கை நலிவடையக் காண்போம்.

வள்ளுவரின் காலம், ஊர், குடியிருப்பு, சமயம் முதலியவற்றைப் பலரும் பலபடியாகப் பேசிவருகின்றனர். இவை பற்றிய தற்காலச் செய்திகளுக்கு உள்ள ஆதரவுகளைச் சிறிது விசாரிப்போம்

 கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கப் புலவர் இறுமாப்பை யடக்கின அவதார புருடர் வள்ளுவர் என்பார் பலர். இறவாப் புகழுடைய தம் குறணூலைக் கடைச் சங்கத்தில் அரங்கேற்றவந்த வள்ளுவரைப் புறக்கணித்து, அவர் தம் அரிய நூலையும் அவமதித்த சங்கத்தாரை வள்ளுவர், தம் தெய்விகத்தன்மையாற் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்தி அலமரச் செய்ததாயும். புலவர்கள் வள்ளுவரையும் அவர்தம் குறணூலையும் புனைந்துபாடித் தம்முயிரை இரந்து பெற்றதாயும் குறட்புகழின் பிறப்பே சங்கப் புகழின் இறப்பாக முடிந்ததென்றும் கதைப்பார் பலர் கதைக்கின்றனர். சில தலைமுறையாகப் புலைமை இரத்தக் கலப்புடைய பார்ப்பான் ஒருவனுக்கும், புலைப்பிறப்பும் பார்ப்பன வளர்ப்புமுள்ள கீழ்மகள் ஒருத்திக்கும் பிறந்த சிறார் எழுவருள், கடைமகவே வள்ளுவரென்றும், குறிசொல்லுபவரும் பறையருக்குப் புரோகிதருமான் வள்ளுவ வகுப்பினரால் வளர்க்கப்பெற்றமையின் வள்ளுவரென்பது இவருக்குக் காரணப் பெயராயிற்றென்றும். இவர் மயிலாப்பூர் வணிகனான ஏலேலசிங்கனால் வறுமை வருத்தங்கள் நீக்கப்பெற்று வாசுகியென்னும் வேளாண் மகளை மணந்து வாழ்ந்து மதுரைச் சங்க வீறழித்துப் பேறுபெற்றாரென்றும் தற்காலக் கதைகள் கேட்கின்றோம். இவற்றுள் ஒன்றுக்கேனும் பழநூலாதரவு இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்குஞ் சில பண்டைக் குறிப்புக்களும் இக்கதைகளின் பொய்ம்மைகுறிக்கக் காண்கின்றோம்.

முதலில், வள்ளுவர் மூன்றாஞ் சங்கத்தை முற்றுவித்த வரலாற்றின் உண்மையைச் சிறிது துருவியாராய்வோம். குறட்சுவடிகளிற் காணப்படும் திருவள்ளுவமாலை எனும் புனைந்துரைப் பாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை நடக்கின்றது. வள்ளுவமாலை உள்ளபடி கடைச்சங்கப் புலவராற் பாடப்பட்டதுதானா? என்ற வினா நிற்க; அப்புலவர் பாக்களே வள்ளுவமாலையெனக் கொள்ளினும், சங்கப் புலவர் வள்ளுவரை அவமதித்து அவரால் வீறடக்கப்பட்டதற்கேனும், அவர் தம் இறவாக் குறணூல் அப்புலவர்முன் அரங்கேற்றப்பட்டதற் கேனும் ஆன்ற சான்று ஏதும் அவ்வள்ளுவமாலைப் பாக்கள் சுட்டக் காண்கின்றிலம். கடைச்சங்கப் புலவராற் பாராட்டிச் சேமித்துவைக்கப்பட்ட நூற்றிரட்டுக்களுள் அப்புலவர் சிலர் புனைந்துரைத்த பாக்கள் காணப்படுகின்றன. கடைச்சங்கத்தார் நூற்றிரட்டுக்களில் திருக்குறளும் ஒன்றென்பது தமிழர் யாவருக்கும் ஒப்பமுடிவதாகும். அத்திரட்டு நூல்களுள்ளும் வள்ளுவர் நூல் தலை சிறந்ததென்பதற்கு இடை நெடுங்காலம் பிற பல நூலும் வழக்கிழந்தொழியவும், என்றும் பிரபல நூலாகக் குறள் நின்று நிலவியதே போதிய சான்றாம்.

நாம் அறிந்த சங்கத்திரட்டு நூல்களாவன: பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியன ஆம். இவையனைத்தும் கடைச்சங்கப் புலவரியற்றியனவும் அவர்க்கு முற்பட்ட புலவர் இயற்றியவற்றுள், சேமித்து வைக்கத்தக்க சிறப்புடையனவாகக் கடைச் சங்கத்தாரும், பிறரும் கண்டு திரட்டியனவுமாக முடியும். இத்திரட்டு நூல்களுள், தகவுமிகவுடைய திருக்குறளின் பெருமை நோக்கிச் சங்கப் புலவரனைவரும் இதனைப் புனைந்து பாடியிருக்கலாம். அன்றி, வேறு சில நூல்களுக்கும் இவ்வாறே அவரனைவரும் சிறப்புக் கவிகள் தந்திருப்பின் அந்நூல்கள் வழக் கிழந்த காலத்தே சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் இறப்பின் வாய்ப்பட்டும் இருக்கலாம். குன்றாவழக்குடைக்குறளொடு அதன் புகழ்மாலைப் பாக்களும் நின்று நிலவி வந்திருக்கலாம். இதனுண்மை எப்படியாயினும், திருவள்ளுவ மாலையில் வள்ளுவர் கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கத்தை வீறழித்த கதை சுட்டுங்குறிப்பு ஒன்றேனும் இல்லை. 

கடைச்சங்கக் கடைநாளிற் றோன்றித் தம் குறணூல் அரங்கேற்றுதலினிடையே வள்ளுவர் மதுரைச் சங்கத்தை அழித்த கதை மெய்யாமேல், புலவர் சங்கமிருந்து இயற்றிய பழம்பனுவல்களிற் குறளடிகள் குறிக்கப்படக் காரணமில்லை. மூன்றாஞ் சங்கப்புலவர் நூல்களிலேயே சுட்டப்படமுடியாத பின்வந்த திருக்குறளருந்தொடர்கள், அச்சங்கத்தாருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்து அவராற் பாராட்டிச் சேமித்துப் பாதுகாக்கப்பட்ட பழந்தொகைப் பனுவல்களிற் சுட்டப்படுமாறில்லை யென்பது ஒருதலை. ஆனால் மதுரைச் சங்கச் சதுரர் நூல்கள் பலவற்றுள்ளும், அவர் போற்றுதற்கான அவருக்கு முற்பட்ட மிகப்பழைய தமிழ்த் திரட்டு நூல்களுள்ளும் வள்ளுவரும் அவரற நூலும் பலவேறிடங்களிலும் பாராட்டப்பட நாம் காணுங்கால், வள்ளுவரை அப்படிப்பாராட்டியெடுத்தாளும், பாவலருக்கு அவர் சம காலத்தவராதல் வேண்டுவதொன்று; அன்றேல் முன்னோராதல் வேண்டுவதொன்று; இஃதன்றிக் காலத்தாற் பிந்தியவராகக் கருதற் கிடமில்லையன்றோ!

தமக்கு முற்பட்ட இடைச்சங்கச் செய்யுளும் பிறவுஞ் சேர்த்துக் கடைச்சங்கத்தார் திரட்டிய கலித்தொகை, புறநானூறு முதலிய பழைய நூல்களிலும் குறளை மதிப்புடன் எடுத்தாளக் காண்கின்றோம். குறளடிகள் இவ்வாறு கடைச்சங்கப் புலவராலும் அவர்க்கு முற்பட்ட புலவராலும் எடுத்தாளப்பட்டதுமட்டுமில்லை: குறள் வாக்கியங்கள் அறத்தெய்வக்கூற்றாயும் வள்ளுவர் மெய்த்தெய்வப் புலவராயும் அவர் பலராலும் வாயார வாழ்த்தப்படவும் காணும் நாம், வள்ளுவர் அவர்க்குச் சமகாலத்தவரென்று கொள்ளுதலினும் அவர்க்கு முற்பட்டவராகக் கருதலே சால்புடைத்தாம். புலவரெவரும் தம் காலத்தவரால் தலைநின்ற தேவநாவலராய் மதிக்கப்படும் வழக்கம் யாண்டும் இல்லை. பெரும்பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும் தாமியற்றிய நூலின் மெய்ப் பெருமைவலியாற் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவதே புலவருலகியல்பு.__________________


Guru

Status: Offline
Posts: 23786
Date:
Permalink  
 

திருவள்ளுவர்  2.

 

தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால். அவர் தமக்கு வள்ளுவர் நீண்டகாலத்துக்கு முற்பட்டவராகவும். அவரறநூலின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப்பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம் :-

 1. இடுக்கண்கால் கொன்றிட விழு மடுத்தூன்றும்

நல்லா ளிலாத குடி. (1030)

தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன

ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்

தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல்

நீங்கல்மட வார்கட னென்றெழுந்து போந்தான்.

(சிந்தா – காந்தருவ-6)

 

2.வேட்ட பொழுதி னவையவை போலுமே

தோட்டார் கதுப்பினா டோள். (1105)

 

வேட்டார்க்கு வேட்டனவே போன்றினி வேய்மென்றோட்

பூட்டார் சிலை நுதலாட் புல்லா தொழியேனே.

(சிந்தா-குண-192)

 

3. கடலன்ன காம முழந்து மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்க தில். (1137)

 

எண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப்

பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே.

(சிந்தா – குண – 148)

 

4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்

காற்றாதா ரின்னா செயல். (894)

 

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர். (895)

 

வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழிலதாகும்.

(சிந்தா – குண – 239)

 

5. ஆக்கங் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கா ரறிவுடை யார். (463)

 

வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தால்

ஊணிகந் தூட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத்

தேணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்

சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார்.

(சிந்தா – காந்தரு – 278)

 

6. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று

நல்லார்க்கு நல்ல செயல். (905)

 

இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற்

புல்லாளனாக.

(சிந்தா – மண்மகளிலம்பகம், செய் – 217)

 

7. உலகந் தழீஇய தொட்ப மலர்தலும்

கூம்பலு மில்ல தறிவு. (425)

 

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது

வேட்டதே வேட்டதா நட்பாட்சி-தோட்ட

கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாரு நட்பாரு மில்.

(நாலடி – நட்பாராய்தல் – 5)

8. ஒருநா ளெழுநாள்போற் செல்லும் சேட் சென்றார்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (1269)

 

பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னாம்

உள்ள முடைந்துக்கக் கால். (1270)

 

ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து

கூடற்கட் சென்றதென் னெஞ்சு. (1284)

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

புலப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்

கலப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே.

 

ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்

கூடுவேன் என்னுமிக் கொள்கையி னெஞ்சே.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

துனிப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணில்

தனித்தே தாழும் இத்தனி நெஞ்சே.

எனவாங்கு

 

பிறைபுரை யேர்நுதால் தாமெண்ணி யவையெல்லாம்

துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே

அறைபோகு நெஞ்சுடை யார்க்கு.

(கலி – 67)

 

9. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்

நெஞ்சத்த ராவர் விரைந்து. (1218)

 

ஒ ஒ கடலே,

தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்துப்

பற்றுவென் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென்

நெஞ்சத்துள் ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய்

செய்யு மறனி லவன்.

(கலி-144)

 

10. காமமும் நாணு முயிர்காவாத் தூங்குமென்

நோனா உடம்பி னகத்து. (1163)

 

11. காம முழந்து வருந்தினார்க் கேம

மடலல்ல தில்லை வலி. (1131)

 

நலிதருங் காமமுங் கெளவையு மென்றிவ்

வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை

நலியும் விழுமம் இரண்டு.

(கலி-142)

 

காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம

மெழினுத வீத்தவிம் மா.

(கலி-139)

 

12. அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்

தந்நோய்போற் போற்றாக் கடை. (315)

 

சான்றவர் வாழியோ சான்றவிர் என்னும்

பிறர்நோயும் தந்நோய்போற் போற்றி அறனறிதல்

சான்றவர்க் கெல்லாம் கடனா லிவ்விருந்த

சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென்.

(கலி-139)

 

13. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்

வடுவன்று வேந்தன் றொழில். (549)

 

குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை

விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர்

தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே.

(கலி – 130)__________________


Guru

Status: Offline
Posts: 23786
Date:
Permalink  
 

திருவள்ளுவர்  : 3

 

 1. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும். (263)

 

நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவா

நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின்.

(கலி. நெய்தல்-8)

 

 1. களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்

தொளித்ததூஉ மாங்கே மிகும். (928)

 

. . . . . . . . . காமம்

மறையிறந்து மன்று படும். (1138)

 

தோழிநாங்,

காணாமை யுண்ட கருங்கள்ளை மெய்கூர

நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக்

கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாங் கண்டாய்.

(கலி. முல்லை செய்-15)

 

 1. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு. (791)

 

நாடி நட்பி னல்லது

நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே. (நற்றிணை-32)

 

 1. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர். (580)

 

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சு முண்பர் நனிநா கரிகர் (நற்றிணை)

 

 1. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு. (20)

 

நீரின் றமையா உலகம் போலத்

தம்மின் றமையா நந்நயந் தருளி. (நற்றிணை-1)

 

 1. சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங்

காக்க மெவனோ உயிர்க்கு. (31)

 

அறத்தான் வருவதே யின்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில. (39)

 

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல. (புறம்-31)

 

 1. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர். (528)

 

வரிசை யறிதலோ வரிதே பெரிதும்

ஈத லெளிதே மாவண் டோன்றல்

அதுநற் கறிந்தனை யாயிற்

பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே. (புறம்-121)

 

 1. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல். (679)

 

நட்டார்க்கு நல்ல செயலினிது எத்துணையும்

ஒட்டாரை யொட்டிக் கொளலதனின் முன்னினிதே.

(இனியவை நாற்பது-18)

 

 1. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று

நிலையாமை காணப் படும். (349)

 

அற்றது பற்றெனி லுற்றது வீடு. (திருவாய்மொழி1-2-5)

 

 1. ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே

பேரா வியற்கை தரும். (370)

 

சென்றாங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசை யற்றால்

அன்றே அப்போதேவீ டதுவே வீடு வீடாமே.

(திருவாய்மொழி-8-8-6)

 

 1. அங்கணத்து ளுக்க வமிழ்தற்று (720)

 

ஊத்தைக் குழியி லமுதம் பாய்வதுபோல்

(பெரியாழ்வார் திருமொழி-4-6-9)__________________


Guru

Status: Offline
Posts: 23786
Date:
Permalink  
 

திருவள்ளுவர் –  4

 

 1. ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் (126)

 

ஒருமையு ளாமைபோ லுள்ளைந் தடக்கி

(திருமந்திரம்-முதற்றந்திரம்-21)

 

 1. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறு நாடு கெடும் (553)

 

நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி

நாடொறு நாடி யவனெறி நாடானேல்

நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால்

நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே

(திரு மந்திரம்-இராசதோடம்-2)

 

 1. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய் ( 359)

 

சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால்

சார்புணர்வு தானே தியானமுமாம்-சார்பு

கெடஒழ்கி னல்ல சமாதியுமாங் கேதப்

படவருவ தில்லைவினைப் பற்று

(திருக்களிற்றுப்படியார்)

 

 1. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றையவர் (348)

 

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றையவ ரென்று-நிலைத்தமிழின்

தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த

மெய்வைத்த சொல்லை விரும்பாமல்

(உமாபதிசிவாசாரியார்- நெஞ்சுவிடுதூது)

 

 1. . . . . . . . . . அவர் சென்ற

நாளெண்ணித் தேய்ந்த விரல் (1261)

 

நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பி

னோவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்

செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூ

லணங்கெழி லரிவையர்

(பதிற்றுப்பத்து-68)

 

 1. பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா

பிற்பகற் றாமே வரும் (319)

 

முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகற் காண்குறூஉம் பெற்றிகாண்.

(சிலப். வஞ்சினமாலை. வரி-3, 4)

 

 1. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (55)

 

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்

தெய்வம் தொழுதகைமை திண்ணமால்-தெய்வமாய்

மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி

விண்ணகமா தர்க்கு விருந்து

(சிலப். கட்டுரைகாதை)

 

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழையென்றவப்

பொய்யில் புலவன் பொருளை தேராய்

(மணிமேகலை:காதை 22-வரி59-61)

 

 1. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110)

 

நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென

அறம்பா டிற்றே யாயிழை கணவ (புறம்-34)

 

இன்னும் இத்தகைய மேற்கோள்வாக்கியங்கள் பல எடுத்துக் காட்டலாமாயினும் ஈங்கு இவை போதியவாம். இவ்வாறு உரையொடு பொருளும் உறழும் பலவிடங்களை யும் காட்டுமிடத்துக் குறளாசிரியரே அவற்றைப் பிறநூல்கனினின்றும் இரவல்கொண்டிருக்கலாகாதோ எனின். இவ்வாக்கியங்களின் பொருணோக்கும் நடைப்போக்கும் உற்று நோக்குவார்க்குக் குறளே பிறநூலுடையாருக்கு மேற்கோளாதல் வெள்ளிடைமலையாம். அன்றியும், சாத்தனார் மணிமேகலையிலும், ஆலத்தூர்கிழார் புறப்பாட்டிலும் குறளைப் பாராட்டிப்பாடக் கண்டுவைத்தும். குறளாசிரியர் பிறநூலினின்று இரவல்கொண்டாரெனக் கூறுதல் சிறிதும் பொருந்தாக்கூற்றாம். எனவே சங்கப்புலவர் பலராலும் எடுத்தாளப்படும் குறள் அவர் தமக்குக் காலத்தான் முந்தியதாதல் ஒருதலை. அன்றியும், கடைச் சங்கப் புலவரான சாத்தனார் ‘ பொய்யில் புலவன் பொருளுரை’ யெனவும் ஆலந்தூர்கிழார் ‘அறம்பாடிற்றே’ எனவும் குறளையும் அதனாசிரியரையும் போற்றிப் பேணக்காணும் நாம், இப்பழம்புலவராற் குறள் மெய்ம்மறை யெனவும், அதனாசிரியர் பொய்யா அறக்கடவுளெனவும் பாராட்டப்படுதற்கு வள்ளுவரின் மெய்ப்பெருமை அப்புலவருக்கு வெகுநீண்ட காலத்துக்கு முன்னே நிலைபேறடைந்திருக்க வேண்டுமென்பதை எளிதிற் றெளியலாகும். நமக்குக் கிடைக்கும் சங்கநூல்களெல்லாம் கடைச்சங்கப் புலவராலேயே இயற்றப்பட்டன எனக்கொள்வதற்கும் இல்லை. சில புறப்பாட்டுக்களும் கலிகளும் இடைச்சங்கப் புலவராலேனும் எனைத்தானும் கடைச்சங்கத்துக்கு முற்பட்ட புலவராலேனும் ஆக்கப்பட்டிருக்கவேண்டுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவர் நூல்களிலும் குறள் எடுத்தாளப்படுதலால் வள்ளுவர் கடைச்சங்கக் கடைக்காலத்தவருமில்லை; முதலிடைக் காலத்தவருமில்லை; அச்சங்கத்துக்கு நெடும்பல்லாண்டுகட்கு முன்பிருந்தவ ராவரென்பது இனிது போதரும்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard