திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – வெ.அரங்கராசன்
திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2
1.0.நுழைவாயில்
மதிப்பு, மரியாதை, மேன்மை, மேம்பாடு, மிகுபுகழ், உயர்வு, உயரம், பெருமை, பெருமிதம், சீர்மை, சிறப்பு, செம்மை, செழிப்பு போன்ற மாண்புகளைப் பெற்று மாந்தன் மாந்தனாக வாழ்தல் வேண்டும். அதற்கு மாந்தன் சாலச்சிறந்த சமுதாய விழுமியங் களை [SOCIAL VALUES] பழுதில்லாமல் வழுவில்லாமல் இடைவிடாமல் இறுதிவரை கடைப்பிடியாகக் கொள்ளல் வேண்டும்,.
இத்தகைய சாலச்சிறந்த சமுதாய விழுமியங்களைப் சங்க இலக்கியங்களிலும் பொங்குபுகழ் வாழ்வியல் பயன்பாட்டு நூலாக விளங்கும் திருக்குறளிலும் காணலாம்.
2.0.விழுமியங்கள் — விளக்கம்
மேற்சுட்டப்பட்ட மாண்புகளைப் பெறுவதற்கும் மாந்தனை நன்னெறிப்படுத்து வதற்கும் சில வாழ்வியல் சார்ந்த பண்பியல் அடிப்படையான அறவியல் சிந்தனைகள், கருத்துகள் கொள்கைகள், கோட்பாடுகள் இன்றியமையாதவையாகின்றன.
இவ்விழுமியங்கள் 5 வகைமைப்பாடுகளுக்குள் அடங்கும்.
அவை:
2.1.தனிமனிதன் சார்ந்த விழுமியங்கள்
2.2.குடும்பம் சார்ந்த விழுமியங்கள்
2.3.சமுதாயம் சார்ந்த விழுமியங்கள்
2.4.நாடு சார்ந்த விழுமியங்கள்
2.5.உலகம் சார்ந்த விழுமியங்கள்
2.1.அவற்றுள் சில
ஒழுக்கம், கல்வி, ஈகை, ஒப்புரவு, இரக்கம், நன்றி அறிதல், வாய்மை, அன்பு, அருள், விருந்தோம்பல், நட்பு, மானம், சால்பு, பற்று, நாட்டுப் பற்று, உலக ஒருமைப்பாடு போன்றவை சமுதாய மதிப்பினை ஆக்கும் சமுதாய விழுமியங்களுள் சிலவாகும்.
3.0.ஈகைப் பண்பென்னும் ஈடிலா விழுமியம்
இரக்கம், அருள் ஆகியவற்றின் அடிப்படையில் ஈகை, ஒப்புரவு ஆகிய விழுமி யங்கள் அமைகின்றன. பசி, பட்டினி, இல்லார், உள்ளார், ஏற்ற இறக்கங்கள் போன்ற வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இல்லாமல் உலகம் உய்தல் வேண்டுமெனில், ஈகை யும் ஒப்புரவும் உலகில் வாகை சூடல் வேண்டும்.
கடியலூர் உருத்திரங்கண்ணனார், இளந்திரையனைப்பற்றிப் பாடிய பெரும்பா ணாற்றுப்படையில் மேற்சுட்டப்பட்ட ஈகைப் பண்பு என்னும் வாழ்வியல் விழுமியம் விளங்கக் காணலாம்.
அந்தப் பாடல்:
பெருவறம் கூர்ந்த கானம் கல்எனக்
கருவி வானம் துளிசொரிந்[து] ஆங்குப்
பழம்பசி கூர்ந்தஎம் இரும்பேர் ஒக்கலொடு
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி
வால்உளைப் புரவியோடு வயக்களிறு
முகந்துகொண்டு
யாம்அவ ணின்றும் வருதும்…
— பெரும்பாணாற்றுப்படை, [22–27]
3.1.பொருள் உரை விரிவாக்கம்
“கொடும்பஞ்சம் நிலவும் காட்டகத்தில் ஆராவாரம் உண்டாகும்படிக் கருமுகில்கள் ஒன்றுகூடி நன்மழை பொழிந்தால் போன்று தொன்று தொட்டுப் பழம்பசியால் பெரிதும் வருந்திய எமது பெரிய சுற்றத்தார்களோடு, பிறர்க்கும் கொடுக்கக் கொடுக்கக் குறையாத நிறைவான – அளவற்ற பெருஞ்செல்வத் தையும் ஒப்பனை செய்யப்பட்ட குதிரைகளையும் ஒப்பிலா வலிமிகு யானைகளையும் வள்ளல் இளந்திரையன் வழங்கினான்.
வழங்கிய வளங்களை வாரிக் கொண்டு அவனுடைய ஊரிலிருந்து வருகின்றோம்.”
என இளைந்திரையனிடம் பரிசில் பெற்று வரும் பாணன், தான் பெற்ற பெருஞ்செல்வ வளங்களைப் பற்றிப் பகர்கின்றான்; மற்ற பாணர்களிடமும் பகிர்கிறான்.
இதில் வளம்மிகு வள்ளல் இளந்திரையனின் ஈகை விழுமியம் இனிதுற விளங்குகின்றது.
3.2.திருக்குறளில் ஈகை என்னும் விழுமியம்
திருவள்ளுவரும் ஈகைபற்றி ஆழமாகவே சிந்தித்திருக்கிறார்; ஆய்வு செய்திருக்கின்றார். அதன் விளைவே ஈகை என்னும் 23–ஆவது அதிகாரம்.
அதில் பெரும்பாணனின் பெரும்பசியைத் தீர்த்த பெருவள்ளல் இளந்திரையனின் வள்ளன்மைக்குப் பொருத்தமாக அமைந்த குறள்மணி ஒன்று உள்ளது. அந்த ஒளிர்மணி:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃ[து]ஒருவன்
பெற்றான் பொருள்வைப்[பு] உழி. [குறள்.226]
உண்ணவும் வழியின்றி வாடுகின்ற இல்லாதவர்களது பசி நாளடைவில் அவர் களை அழித்துவிடும். அத்தகைய கொடிய பசியைத் தீர்த்தலே ஒருவன் செய்ய வேண்டிய அறச்செயலாகும். அந்த அறச் செயல்தான் அவன் திரட்டிய பொருளைச் சேமித்து வைக்கும் பாதுகாப்பான இடமாகும்.
4.0.ஒப்புரவு என்னும் ஒப்பில்லா விழுமியம்
ஈகை என்பது தனிக்கொடை. தனியர் வந்து கேட்கும் போது ஈவது. ஒப்புரவு என்பது பொதுக்கொடை. வருகின்றவர்கள் எல்லோருக்கும் கொடுப்பது. தம்மைப் போலப் பிறரும் வாழ்தல் வேண்டும் என்னும் பெருநோக்கோடு கொடுப்பது. அஃதாவது பிறரும் தமக்கு ஒப்ப வாழும்படிப் புரத்தல் ஆகும். ஒப்பப் புரத்தலே ஒப்புரவு என்பதாகும்.
வள்ளல் குமணனைப் பாடிப் பரிசில் வளங்களைக் கொண்டுவருகிறார் பெருஞ்சித்தினார். தம்மை ஒப்ப எல்லோரும் வாழ்தல் வேண்டும் என்னும் பெருநோக்கர் அவர். அதனால், தமக்குக் கிடைத்தமைபோல் வளங்கள் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். எல்லாவற்றையும் தாமே நுகர்தல் வேண்டும் என்றும் எண்ணவில்லை. எனவே, “இன்னார் என்னாது நானும் கொடுப்பேன்; நீயும் அப்படியே கொடுப்பாயாக” எனத் தம் அன்பு மனையாளிடம் மொழிந்த விழுமியப் புறநானூற்றுப் பாடலைக் கீழே காண்போம்.
திருவள்ளுவர் தெளிவுறுத்தும் ஒப்புரவு அறிதல் என்பதற்கு இந்த ஒப்பிலா ஏழைப் புலவரின் நலப்பாடல் சாலச்சிறந்த சான்றாக அமைந்து சிறக்கின்றது.
உன்னை விரும்பி வாழ்கின்றவர்களுக்கும், நீ விரும்பி வாழ்கின்றவர்களுக்கும் பல வகைகளாலும் சிறந்த கற்பு அமைந்த உன் சுற்றத்தார்க்கும் நம் சுற்றத்தார்க்கும் வருத்தம் தரும் கடும்பசி நீங்கும்படி, அன்பு உடைமையால் கைமாற்றாகக் கொடுத்தவர்க்கும், இன்னவர்க்கு என்னாமலும் என்னைக் கேட்டுக் கொடுக்க வேண்டும் என்பதும் இல்லாமல், இவற்றை வைத்துக் கொண்டு நெடுங்காலம் வாழ்க்கை நடத்தலாம் என்பதும் இல்லாமல், நீயும் எல்லோருக்கும் கொடுப்பாயாக.
மனை அறம் காக்கும் உரியவளே..! பழங்கள் பழுத்துத் தொங்கும் பழுதிலா மரங்கள் நிறைந்த முதிர மலைத் தலைவன் திருத்தமாகச் செய்யப்பட்ட வேலை உடைய குமணன் கொடுத்த கொடைப் பெருவளன் ஈதே.
4.2.திருக்குறளில் ஒப்புரவு அறிதல்
தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேள்ஆண்மை செய்தல் பொருட்டு. [குறள்.212]
4.3.பொருள் உரை விரிவாக்கம் — 1
அயராது தம் உழைப்பால் திரட்டிய பொருள்கள் எல்லாம் உதவி, ஆளுமையால் ஆராய்ந்து அறிந்து தகுதியானவர்களுக்குக் கொடுப்பதற்காகத்தான்.
4.4.பொருள் உரை விரிவாக்கம் — 2
அயராது தம் உழைப்பால் திரட்டிய பொருள்கள் உதவி ஆளுமையால் ஆராய்ந்து அறிந்து தகுதியானவர்களுக்கு வேறு யாரிடமும் சென்று கேட்டுப் வேண்டிப் பெற வேண்டிய தேவை இல்லாத வகையில் வேண்டிய எல்லாவற்றையும் கொடுப்பதற் காகத்தான்.
ஆட்சி அதிகாரங்களை எல்லாம் தம்மிடம் முழுமையாகக் கொண்டிருக்கும் ஆட்சியாளர் அறநெறி தவறாதும் ஒருபால் கோடாதும் சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் நடுவு நிலையில் நின்றும் நீதி வழங்குதல் வேண்டும்.
இதைப் புறப்பாடல் ஒன்று,
நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;
அதனால் தமர்எனக் கோல்கோடாது
பிறர் எனக் குணம் கொல்லது
எனக் கூறுகிறது.
அஃதாவது நால்வகைப் படைகளோடு வலிமை மிக்குடையவர் ஆயினும் ஆட்சி அறநெறி நிற்றல் வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.
5.1.திருக்குறள் தெரிவிக்கும் நல்லாட்சி முறைமை
இதே அறக் கருத்தியலைத் திருக்குறள்,
ஓர்ந்துகண் ணோடா[து] இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. குறள்.541]
என விரிவாகவும் விளக்கமாகவும் விளம்புகின்றது.
குற்றத்தின் தன்மைகளைச் சிந்தனை, சொல், செயல் ஆகிய வற்றால் ஆராய்ந்து, யாரிடமும் இரக்கம் காட்டாது, நடுவு நிலையில் நின்று குற்றத்தின் தன்மைக்குப் பொருத்தமான தண்டனையை வழங்குவதே செங்கோன்மை / நல்லாட்சி முறைமை யாகும்.
அருந்தமிழர்தம் தனிச்சிறப்புக்களுள் ஒன்று விருந்தோம்பல் என்னும் பெருந் திறல் விழுமியம் ஆகும். முற்காலத்தில் முன்பின் தெரியாதவர்களே விருந்தினர்கள் எனப்பட்டனர்.
இதனைத் தொல்காப்பியர்,
விருந்தே தானே புதுவது கிளந்த
யாப்பின் மேற்றே. [தொல்.செய்.540]
என்னும் நூற்பாவழி நுவல்கிறார்.
இரவானாலும் பகலானாலும் புதியவர்கள் இல்லத்திற்குப் பசியோடு வரும் போது விருந்து புறந்தருதலைப் பெருங்கடமையாகக் கொண்டனர். அதன்வழி உறவு களை உருவாக்கினர்; நட்புக்களை நாடினர். அதனால், பெருமகிழ்வு பெற்றனர்.
இதனை,
அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்.
என நற்றிணைப் பாடல் [42] தெற்றெனத் தெளிவுறுத்தும்.
6.1.வள்ளுவத்தில் விருந்தோம்பல்
திருவள்ளுவம் விருந்தோம்பல் பற்றி விருந்தோம்பல் என்னும் 9–ஆவது அதிகாரத்தில் மட்டுமல்லாமல், அதுபற்றிய கருத்தாக்கங்களைப் பல்வேறு அதிகார ங்களிலும் நுட்பமாகவும் திட்பமாகவும் பேசுகிறது. சான்றாக ஒரு குறள்மணியை இங்கு ஒலிக்கச் செய்வோம்.
இரவு நேரமானாலும், பகல் நேரமானாலும் வந்த விருந்தினர்க்கு நல்ல விருந்து படைத்து மகிழ்வித்து அனுப்பிவிட்டு, இனி யாராவது விருந்தினர் வருகின்றனரா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றவர், வானவர்கள் விரும்பி வரவேற்றுப் போற்றும் நல்ல விருந்தினர் ஆவார்.
7.0.விழுமியங்களின் தொகுப்பே வழுவில் வள்ளுவம்
உள்ளத்தாலும் வள்ளுவம் உள்ளாத உயிர்க்கொலை புலால் உண்ணல், வரைவின் மகளிர் நாட்டம், கள் உண்ணல், நாடு பிடிக்கும் பேராசையால் நடக்கும் போர்கள், போர்களால் ஏற்படும் உயிர், பொருள் இழப்புகள்போன்ற விழுமியங்கள் சாராத சில செயற்பாடுகள் சங்கக் காலத்தில் இருந்தன என்பது தெளிவு.
சான்றாகப் புலால் உண்ணல்பற்றிப் பத்துப்பாட்டில் ஒன்றான பெருங்குன்றூர் கெளசிகனாரது மலைபடுகடாத்தின் ஒரு பகுதியைக் கீழே காண்போம்.
தினை அரிசியைச் சோறு ஆக்கி, நெய்யில் புலாலைப் பொரித்துத் தாமும் உண்டு, தம்மை நாடி வருகின்றவர்களுக்கும் இனிய மொழிந்து உண்ணக் கொடுத்தனர்.
இதனை,
மான விறல்வேள் வயிரியர் எனினே
நும்இல் போல நில்லாது புக்குக்
கிழவிர் போலக் கேளாது கெழீஇச்
சேண்புலம்[பு] அகல இனிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த
நெய்க்கண் வேவையோடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர்…
என மொழிகிறது மலைபடுகடாம்.
7.1.திருக்குறளில் கொல்லாமை,
புலால் மறுத்தல் என்னும் விழுமியங்கள்
திருக்குறள் புலால் உண்ணலையும் உயிர்க்கொலையையும், ஏற்றுக்கொள்ளவே இல்லை. புலால் மறுத்தலையும் கொல்லாமையையும் திருக்குறள், தன் உயிர்க் கோட்பாடாகவே கொண்டுள்ளது. அவற்றை 26-ஆவது அதிகாரம் புலால் மறுத்தலி லும், 33-ஆவது அதிகாரம் கொல்லாமையிலும் மிகக் கடுமையாக எதிர்ப்பதைக் கண் ணுறலாம்.
சான்றாகப் புலால் மறுத்தல் குறள் ஒன்று:
உண்ணாமை வேண்டும் புலாஅல், பிறி[து]ஒன்றின்
புண்அது உணர்வார்ப் பெறின். [குறள்.257]
7.2.பொருள் உரை விரிவாக்கம்
“இறைச்சி பிறிதோர் உயிரினது புண்ணே ஆகும்” என்னும் அருவருப்புத் தன்மையை உள்ளத்தால் உணர்கின்றவர்களை உலகம் பெற்றுவிட்டால், அந்த அருவருப்பான இறைச்சியை எவருமே உண்ண மாட்டார்கள்.
7.3.வள்ளுவத்தில் கொல்லாமை
இனிக் கொல்லாமை என்னும் அதிகாரத்திலிருந்து ஒரு சான்றினைக் காண்போம்
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி[து]
இன்உயிர் நீக்கும் வினை.குறள்.327]
7.4.பொருள் உரை விரிவாக்கம்
“மற்றோர் உயிரால்தான் தம் உயிரைக் காத்துக்கொள்ளல் வேண்டும்” என்னும் ஓர் இக்கட்டான — இடர்ப்பாடான சூழ்நிலை உண்டானாலும், “தம் உயிரைக் காத்துக் கொள்ளல் வேண்டும்” என்பதற்காக, அந்த இனிய உயிரைப் போக்கும் கொடிய கொலைச் செயலைச் செய்யாதிருத்தல் வேண்டும்.
8.0.நிறைவுரை
திருக்குறளை அளவுகோலாகக் கொண்டால், சில விழுமியங்களும் விழுமியம் சாராத சில பழுதுமிகு செயற்பாடுகளும் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன.
பொய்தீர் ஒழுக்க நெறிகளை எல்லாம் ஆராய்ந்து தொகுத்த வாழ்வியலாசான் வள்ளுவனார் விழுமியம் சாராத அச் செயற்பாடுகளை எல்லாம் அறவே நீக்கிவிட்டு விழுமியங்களின் முழுத்தொகுப்பாகவே திருக்குறளை உருவாக்கி அருளியுள்ளார்.
மாசுகளையும் ஆசுகளையும் அறவே அகற்றிவிட்டுத் தூய அறவியல் நூலாக வள்ளுவத்தை ஆக்கி வழங்கியுள்ளார் அவர்.
9.0.பார்வை நூல்கள்
9.1.. திருக்குறள் தமிழ் மரபுரை — மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்