தமிழுக்கென வாழ்ந்த பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பணிகளுள் ஒன்று குறள்நெறியைக் குவலயம் எங்கும் ஓங்கச் செய்ய வேண்டும் என்று பாடுபட்டது. ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்‘ எனத் தமிழ் உலகத்தவரால் அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், மாணாக்கர்களிடம் கற்பிப்பதை மட்டும் தம் கடமையாகக் கொள்ளாமல், மக்களிடையேயும் சங்க இலக்கிய மாண்புகளையும் தொல்காப்பியச் சிறப்புகளையும் திருக்குறள் நெறிகளையும் விளக்குவதையும் பரப்புவதையும் தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்; இலக்கிய உலாக்களை அமைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் சென்று திருக்குறளைப் பரப்பிய பேரறிஞர்; ‘குறள்நெறி‘ என்னும் பெயரில் திங்கள் இதழ், திங்களிருமுறை இதழ், நாளிதழ் நடத்திக் குறள்நெறி அன்பர்களை உருவாக்கிய இதழியல் அறிஞர்; ’எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ , ‘அமைச்சர் யார்?’, ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’ முதலான பல நூல்கள் மூலம் படிப்போர் வட்டத்திலும் குறள்நெறி எண்ணங்களைப் பரப்பியவர்.
பேராசிரியர் சி.இலக்குவனாரின் நூற்படைப்புகளில் ஒன்றுதான் ‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை’ என்னும் அரிய நூல். 1971ஆம் ஆண்டு சென்னையிலுள்ள மீனா புத்தக நிலையம் இந் நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலை மறுபதிப்பாக வெளியிடுவதில் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்‘ பெருமை கொள்கிறது.
இந்நூல் வெளியீட்டில் மீனா புத்தக நிலையம் பின்வருமாறு பதிப்புரை வழங்கியுள்ளது.
“திருவள்ளுவப் பெருமான் இயற்றியருளிய பொய்யா மொழியெனும் பொதுமறைச் செல்வமாகிய திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டு பால்களுக்கும் விளக்கங்கள் பல அறிஞர் பலரால் இயற்றப்பட்டு வெளி வந்திருக்கின்றன. ஆனால், காமத்துப்பால் எனப்படும் இன்பத்துப்பாலில் அடங்கியுள்ள கருத்துச் செறிவு எளிதில் புலனாகும் வண்ணம் தெளிவான விளக்கங்கள் இதுவரை வெளிவரவில்லை. பேராசிரியர் சி.இலக்குவனார், எம்.ஏ.எம்.ஓ.எல்பி.எச்.டி. அவர்கள், திருக்குறளில் அறத்துப்பாலில் இல்லறவியலில் உள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய நான்கு அதிகாரங்களையும், இன்பத்துப்பாலுக்குரிய களவியல், கற்பியல் ஆகியவற்றின் இருபத்தைந்து அதிகாரங்களுடன் இணைத்துச் சுவை செறிந்த ஒரு நாடகக் காட்சியென அமைந்திருக்கும் முறை, படிப்பவர் உள்ளத்தைக் கவர்ந்து ஈர்க்குமாறுள்ளது. இவற்றிற்கு மிகத்தெளிவான இனிய எளிய உரை கூறி, இவற்றிற் செறிந்துள்ள கருத்து எளிதிற் புலனாகுமாறு விளக்கியிருக்கும் முறை, கலைகள் பல கற்றுத் துறைபோய புலவர் பெருமக்களும், எழுதப் படிக்க மட்டுமே அறிந்துள்ள பிறமக்களும் விரும்பிப் படித்து மகிழுமாறுள்ளது.
பொதுவாக, தமிழறிந்த அனைவரும் மீண்டும் மீண்டும் பன்முறை படிக்க அவாக் கொள்ளும் வகையில் இலக்கியச் சுவை குன்றாமல், பண்டைத் தமிழ் மக்களின் காதல் வாழ்க்கைச் சிறப்பு தெள்ளிதிற் புலàகும் வண்ணம் இயற்றியளித்துள்ளார் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்”
திருக்குறள் வகுப்புகள் மூலம் எளிய முறையில் திருக்குறள் நெறியை விளக்கிய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு எளிய நடையில் திருக்குறள் விளக்கம் தருவது என்பது எளிய செயலாயிற்று. எனவே, தமிழ் மாணாக்கர் மட்டுமல்லாமல் ஓரளவு தமிழறிந்த அனைவரும் நன்கு புரிந்து கொள்ளும் முறையில் திருக்குறள் தொடர்பான நூல்களை உலகிற்கு அளித்துள்ளார் அவர். அதே வரிசையில்தான் இந்நூலையும் படைத்துள்ளார்.
வாழ்வியல் கல்வியைக் கற்க வேண்டிய அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் தலைவன், தலைவி உரையாடுவது போலவும் எண்ணுவது போலவும் நாடகப் பாங்கில் சுவையுடன் பேராசிரியர் சி.இலக்குவனார் இந் நூலைப் படைத்துள்ளார். அதே நேரம் திருக்குறள்களைத் திருவள்ளுவர் நோக்கத்தில் இருந்து மாறுபட்டுத் தம் கருத்து முலாம் பூசும் முறையைச் சிறிதும் பின்பற்றவில்லை. இடையிலே பூசப்பட்ட ஆரிய வண்ணங்களை அகற்றிய தமிழிய அறிஞர்கள் பலர், எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்டுகளாக எண்ணாமல் பகுத்தறிவு நோக்கில் புதுப்புது விளக்கங்கள் அளித்துள்ளனர். பேராசிரியர் அவ்வாறு இல்லாமல் மக்களிடையே நிலவிய புராணக் கதைகளை எடுத்துக்காட்டுவதற்காகத் திருவள்ளுவர் கையாண்டுள்ளாரே தவிர, அவரின் நோக்கம் தமிழ்நெறிக் காப்பு மட்டுமே என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். எனவே, இந்திரன் உலகம் முதலான கற்பனைகளைக் கற்பனைகளாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் விளக்கியுள்ளாரே தவிர கற்பனைகளை உண்மை என நம்பும்படியோ புதிய விளக்கங்களை ஏற்றியோ விளக்கம் அளிக்கவில்லை.
பரிமேலழகர் முதலானவர்கள் கருத்துகளை மறுக்கும் பொழுதும் அக்கால நெறியும் திருவள்ளுவர் கருத்தும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என உணரும் வகையில் விளக்கியுள்ளார். திருவள்ளுவரை ‘வையகத்தின் முதல் புரட்சியாளர்‘ எனக் கூறும் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், அதற்கேற்பவே இந்நூலையும் படைத்துள்ளார்.
இவருக்கு முன்னரும் பின்னரும் யாரும் விளக்காத வகையில் பல கருத்துகளை ஆங்காங்கே தரப் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் தவறவில்லை. எடுத்துக்காட்டாகக் கள்ளின்பத்தைவிடக் காதல் இன்பம் சிறந்தது என்பதைக் கூறும் பொழுது ”கள் தரும் துன்பம் போல் காதலாலும் துன்பம் விளையும்” என விளக்கியுள்ளதைக் கூறலாம். இலக்கணக் குறிப்புகள், நாம் அயற்சொற்களென மயங்கியுள்ள அமிழ்தம், முத்து முதலான சில தமிழ்ச் சொற்களின் விளக்கம் ஆகியவற்றைத் தேவையான இடத்தில் தந்துள்ளார்.
“சான்றோன் எனக் கேட்ட தாய்”,”தந்தை மகற்காற்றும் நன்றி”, “மகன் தந்தைக்காற்றும் உதவ”, ”கொழுநன் தொழுதெழுவாள்” முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச் சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளார். இவ்வாறு பெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின் விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும் படித்தறிந்து பின்பற்ற வேண்டியன வாகும்.
இவற்றை யெல்லாம் நூலிலேயே படித்தறிந்து கொள்ள வேண்டும் என்பதால் இங்கு விளக்கவில்லை.
“தனித்தமிழ் நூலாம் திருக்குறள் தமிழ் மரபு தழுவி முதல் நூலாகத் தமிழிலேயே இயற்றப்பட்டது” என்பதையும் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கத் தவறவில்லை.
மேலும் பேராசிரியருக்குத் திருக்குறள் அதிகார வைப்புமுறையை மாற்ற வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. அதே நேரம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கிணங்கத் தேவையான முறையில் தொகுத்துத் தருவதே எளிய முறையில் விளக்குவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை உடையவர். எனவேதான்,”திருக்குறள் எளிய பொழிப்புரை’யை நடைமுறை அதிகார வரிசைக்கு இணங்கவே அளித்துள்ளார். அதே நேரம் இல்லறப் பொருண்மையை விளக்கும் வகையில் இந்நூலில் இன்பத்துப்பால் 25 அதிகாரங்களுக்கு முன்னும் பின்னும் அறத்துப்பாலில் இரண்டிரண்டு அதிகாரங்களை இணைத்து நூற் கருத்தை முழுமையாக்கியுள்ளார். இதே போல், ஒரு சில அதிகாரங்களில் திருக்குறள் வரிசைமுறையையும் மாற்றி விளக்கியுள்ளார். இவ்வாறு சுவைபடத் தொகுத்து எளிய இனிய தமிழில் பேராசிரியர் தந்துள்ள விளக்கங்களைப் படித்துக் குறள்நெறி வழி வாழ்வோம்! குவலயம் ஓங்கச் செய்வோம்!
(வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)
இல்வாழ்க்கை
இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். ‘இல்லாள்’ என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். ‘இல்லான்’ என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே எனத் தமிழ்முன்னோர் கருதியுள்ளனர்என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப் போற்றி வாழ்வியலில் அவ்வினத் தலைமையையும் ஏற்றுள்ளனர் என்றும் தெளியலாம். இல்லறம் செம்மையுற்றால்தான் நாட்டில் நல்வாழ்வு உண்டாகும் பல இல்லறங்களால் அமைந்ததே நாடு. [For in as much as every family is part of a state (Aristotle: Politics: Page 78)] இல்லறங்கள் இன்றேல் நாடு ஏது? ஆட்சி எதற்கு?
இல்லறம், நாகரிகத்தின் உயர்நிலையைக் காட்டுவதாகும்; விலங்கு நிலையினின்றும் வேறு படுத்துவதாகும். நினைத்தவுடன் கூடி வெறுத்தவுடன் பிரிந்து போவது மாக்களுக்கு உரியதேயன்றி, உயர் மக்களுக்கு உரியது ஆகாது. ஒருவனும் ஒருத்தியும் காதலால் பிணிப்புண்டு கடிமணம் புரிந்து கொண்டு இல்லறப் பொறுப்பேற்று இனிதே வாழத் தொடங்கிய காலம்தான் மாந்தர் உயர்நிலையும் பண்பாடும் உற்ற காலமாகும் “இல்லறமல்லது நல்லறமில்லை” என்று துணிந்துரைத்ததும் அதனாலேயே யன்றோ? வாழ்வியல் அறம் கூறப் புகுந்த வள்ளுவர் பெருமான் பாயிரத்தின் பின்னர் ‘இல்வாழ்க்கை’ பற்றி எடுத்துரைத்ததும் இதன் ஏற்றத்தைப் புலப்படுத்தும்.
“பிரமச்சரிய ஒழுக்கத்தான், வனத்தில் சென்று மனையாள் வழிபடத் தவம் செய்யும் ஒழுக்கத்தான், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தான்” என்பர் பரிமேலழகர். இவ்வாறு பிரித்துக் காணுதல் தமிழ் மரபன்று. ‘பிறர் மத மேற்கொண்டு’ கூறியதாகவே பரிமேலழகரும் கூறியுள்ளார். மாணவ நிலை, மனையாளோடு வாழும் நிலை என இரண்டே தமிழர் வாழ்வியல் முறைக்குரியனவாகும்.
“தாய், தந்தை, உறவினர்” என மூவர் என்பாருமுளர். இம்மூவரும் குடும்பத்துக் குரியராதலின் இவர்க்குத் துணையாவான் என்பதில் சிறப்பின்று.
“புலவர், பாடகர், நடன மாந்தர்” என்பர் பரிதி. இவர்களும் இல்லற வாழ்வில் இருப்போர் ஆதலின், இவர்கட்கு இல்லற வாழ்வினரால் அளிக்கப்படும் துணை வேண்டற்பாலதன்று. இல்லற வாழ்வு இல்லாதோர்க்குத்தான் இல்லறத்தான் துணை வேண்டும்.
பேராசிரியர் சக்கரவர்த்தி என்பார் தம் சமண சமயக் கோட்பாட்டின்படி ஆசிரியரை அடுத்துப் பயிலும் மாணவர், தமக்கென வீடு இல்லாது உலகத்தை முற்றும் துறவாது துறவு நிலைக்கு ஆயத்தமாவோர், முற்றும் துறந்த மாமுனிவர் ஆய மூவர் என்பார்.
இல்லறத்தினை முற்றுந்துறந்து முனிவராக வாழும் நிலையும் தமிழர் நெறிக்கு ஒத்ததன்று. ஆகவே, இம்மூவருள் மாணவர்க்கு உதவுதல் ஏற்புடைத்தே. வறியராய் இருப்பினும் கற்றல் தவிர்க்க முடியாத ஒன்று. ‘பிச்சை புகினும் கற்கை நன்றே‘ என்றதூஉம் காண்க. இயல்புடைய மூவருள் மாணவர் ஒரு பிரிவினர். பின்னும் இருவர் யாவர்? பிறர்க்கென வாழும் தொண்டரும் பொருளீட்டி வாழ்தலில் கருத்துச் செலுத்தாது முக்காலத்தையும் அறிந்து உலகுக்கு நல்லன கூறி இன்புறும் அறிவரும் இல்லறத்தாரின் உதவிக்குரியராவார். ஆதலின் இயல்புடைய மூவராவார், மாணவர், தொண்டர், அறிவர் என்று கூறுதல் தகும்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (திருக்குறள் 42)
துறந்தார்க்கும்=வாழ்வின் துன்ப நிலைக்கஞ்சி வாழ்வினை வெறுத்து விட்டவர்க்கும், துவ்வா தவர்க்கும்=நுகர்தற்குரியனவற்றை நுகர இயலாத வறிய வர்க்கும், இறந்தார்க்கும்=யாவற்றையும் கடந்தவர்க்கும், இல்வாழ்வான் என்பான்=இல்லற வாழ்க்கையினன் என்று கூறப்படுபவன், துணை=துணையாவான்.
உலக வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது; பொறுப்பு மிக்கது. ஆற்றலுக்கேற்ப உழைத்துத் தேவைக் கேற்பப் பெறக் கூடிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. நெறிமுறைகளைக் கடந்து பிறரை வஞ்சித்து ஏமாற்றிப் பொருள் ஈட்டுதலே இன்ப வாழ்வுக்குத் துணை செய்கின்றது. நேர்மை வழியில் செல்வோர் பொருள் முட்டுப்பாட்டுக்காளாகிக் குடும்பத்தை நடத்த முடியாமல் அல்லல்படுகின்றனர். இவ் வல்லலினின்றும் தப்புவதற்குத் தற்கொலை புரிவோரும் வீட்டை விட்டு வெளிக் கிளம்புவோரும் உளர். வீட்டை விட்டு வெளிக்கிளம்புவோர் இங்குத் துறந்தார் எனப்படுகின்றனர்.
பரிமேலழகர், “தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை அன்பு” என்றார். இல்லறத் தலைவனும் தலைவியும் காதலால் பிணைப்புண்டு வாழ்க்கையறத்தை மேற்கொண்டுள்ளவராதலின், இருவரும் ஒருவர் மாட்டொருவர் அன்பு கொண்டிருப்பராதலின் அவ்வன்பு இல்லறப் பண்பு எனல் ஆகாது. இங்கு அன்பு என்பது தொடர்பில்லார் மாட்டுக் காட்டும் பரிவைத்தான் குறிக்கும். அதன் சிறப்புக் கருதியே தனியாக ’அன்புடைமை’ என்னும் இயலின் விளக்கப்படுகின்றது.
அறம்
“பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறம்” என்றார் பரிமேலழகர். பிறர்க்குப் பகுத்துண்டல் இல்லறக் கடமைகளுள் ஒன்று. அதனை மட்டும் பயன் எனல் பொருந்தாது.
“அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க் கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்” இல்லறக் கடமைகளாகக் கருதப்பட்டன. இல்லறக் கடமைகளாம் அவற்றை ஆற்றும் முறைகளும் அறவழிப்பட்டனவாக இருத்தல் வேண்டும். எங்ஙனமும் பொருளீட்டி மனைவியைப் போற்றி மக்களைப் புரந்து வாழ்தல் வேண்டும் என்றஉறுதிப்பாட்டுடன் அறநெறியில் செல்லுதலே இல் வாழ்க்கையின் பயனாகும்.
ஆகவே, இல்லறத்தின் பண்பு அன்பு: இல்லறத்தின் பயன் அறநெறியில் வாழ்தல்.
இல்லற வாழ்க்கையை அறநெறியில் செலுத்தினால் நல்லின்பங்களை நன்கே பெறலாம். சிலர் அங்ஙனமின்றி அறநெறியினின்றும் விலகி மறநெறியில் வாழத் தலைப்படுகின்றனர். இஃது, அறநெறியில் செல்வதினும் தீய நெறியில் செல்லுதலை எளிதாகக் கருதுவதனால் உண்டாகும் விளைவாகும். ஆனால், அறத்திற்குப் புறம்பான நெறியில் எதனையும் எய்திவிட முடியாது. எய்துவதுபோல் தோன்றினும் பின்னர் நிலைத்து நில்லாது துன்பத்திடையே கொண்டு செலுத்தும். ஆதலின், வாழ்வதே பயனுடைத்து என அறிதல் வேண்டும்.
“புறத்தாறு=இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார் போஒய்ப் பெறுவது எவன் என்றார்” இங்ஙனம் பரிமேலழகர் கூறுகின்றார். அவர் கூற்றுப்படி துறவறத்தினும் இல்லறமே பயனுடைத்து என்பதாகும்.
பரிதியாரும், கவிராச பண்டிதரும் ‘புறத்தாறு’ என்பதற்குப் ‘பாவத்தின் வழி’ என்று பொருள் கூறுகின்றனர்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை (திருக்குறள் 47)
இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கையை, இயல்பினான்=அதற்குரிய இயல்பு முறைப்படி, வாழ்பவன் என்பான்=வாழ்கின்றவன் என்று சொல்லப் படுபவன், முயல்வாருள் எல்லாம்=இன்பங்களை அடைவதற்கு முயல் கின்றவர் அனைவருள்ளும், தலை=முதன்மையாகக் கருதி மதிக்கப்படுபவன் ஆவான்.
இன்பங்களை அடைவதற்கு, இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்கின்றவர்களும் உளர். திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்களைவிட இல்லற நெறியில் வாழ்கின்றவரே உயர்ந்தவர் தமக்கும் பிறர்க்கும் பயன்படுகின்ற வகையில் இயற்கை யோடிசைந்து வாழ்ந்து இன்ப நலன்களைத் துய்ப்பவர் என்பது அறியற்பாலது.
“முயல்வார்=முற்றத் துறந்தவர் விட்டமையின் முயல்வார் என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை” என்பர் பரிமேலழகர். மூன்றாம் நிலை என்பது மனைவியுடன் காட்டுக்குச் சென்று கடுந்தவம் செய்யும் நிலையாகும். இது தமிழர் வாழ்வியல் நெறிக்குப் பொருந்தாது. தமிழர் நால்வகை நிலைகளை ஏற்றுக் கொண்டாரிலர். ‘பிரமச்சரியம், கிரகத்தம், வானப்ரத்தம், சந்நியாசம்‘ என்னும் நால்வகை நிலையும் வடவர்க்கே உரியன. ஆதலின், ‘முயல்வார்’ என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை என்பது பொருந்தாது.
ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத, இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மை யுடையத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது.
இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு வாழ்கின்றவர் பெரியவரா? இல்லறத்தை வெறுத்துத் துறவுநிலை மேற்கொண்டுள்ளவர் பெரியவரா? என்ற கேள்வி எழுமேல், இல்லற நெறியில் வாழ்கின்றவரே பெரியவர் என்பது தெற்றென விளங்கும். இல்லற நெறியில் வாழ்கின்றவர் தாமும் அறநெறியில் ஒழுகிப் பிறரையும் அங்ஙனம் அறநெறியில் ஒழுகத் துணைபுரிகின்றார். உணவு, உறைவிடம் முதலியன பெறுவதற்கு இல்லறத்தாரின் துணை துறவறத்தார்க்கு வேண்டற்பாலது. இல்லறத்தாரின்றித் துறவறத்தார் வாழ இயலாது. ஆதலின், இல்லற வாழ்வே துறவற வாழ்வினும் பொறுப்பும் கடமையும் சிறப்பும் மிக்கதாகும்.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று (திருக்குறள் 49)
அறன்=அறநெறி, எனப்பட்டதே=என்று சிறப்பித்துச் சொல்லப் பட்டதே, இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கை நெறியாகும், அஃதும்=அவ்வில்லற வாழ்க்கை நெறியும், பிறன் பழிப்பது இல்லாயின்=பிறனால் பழிக்கப்படுவது இல்லையானால், நன்று=மிகப் பெருமையுடையதாகும்.
வசையொழிய வாழ்வதே வாழ்க்கையாகும் என்பது வள்ளுவர் கருத்து (திருக்குறள் 240). ஆதலின் இல்லற வாழ்வு பிறனால் பழிக்கப்படாமலிருத்தல் வேண்டும் என்றார். ’நன்று’ என்பதன் பொருள் ’பெரிது’ என்பதாகும். ’நன்று பெரிதாகும்’ என்பது தொல்காப்பிய நூற்பா. ஆகவே, அறநெறி வாழ்வு எனப்படும் இல்லற வாழ்வு பிறனாலும் பழிக்கப்படாமல் இருக்குமாயின் மிகப் பெரிதாகும் என வள்ளுவர் பெருமான் அறிவுறுத்துகின்றார் என்று கருதுதல் வேண்டும்.
’அஃதும்’ என்பதனைத் துறவறத்தைச் சுட்டுவதாகப் பொருள் கொண்டு, “துறவறம் பிறரால் பழிக்கப் படுவதுஇல்லையாயின் இல் வாழ்க்கை யோடு ஒரு தன்மைத்தாக நன்று” எனப் பரிமேலழகர் பொருள் உரைக்கின்றார். சுட்டுச்சொல் ஒரு தொடரில் வரும் (தோன்றியும் தோன்றாமலும்) பெயரையே சுட்டி நிற்பது இயல்பு. ஆதலின் அஃதும்‘ என்னும் சுட்டு ’அறன்‘ என்பதனையே சுட்டுவதாகக் கொள்ளுதலே ஏற்புடைத்து. ’அஃதும்’ என்பதில் உள்ள உம்மை சிறப்பும்மையாகும். ’பட்டதே’ என்பதில் உள்ள
‘ஏ’ தேற்றப் பொருளில் வந்ததாகும்.
பரிமேலழகர் காலத்தில் துறவறம் மக்களால் போற்றப்பட்டு வந்திருத்தல் வேண்டும். துறவற நிலையினை மேற்கொண்டோர் பலர் கூடா ஒழுக்கம் உடையோராய் மக்களை வஞ்சித்து வாழ்ந்திருத்தல் வேண்டும். ஆதலின் இல்லறத்தினும் துறவறம் தாழ்வுடைத்து என்ற கருத்தினைப் பரிமேலழகர் நிலைநாட்ட முயன்றுள்ளார் எனத் தெரிகின்றது.
துறவறம் மேற்கொள்வது இல்லறத்தார்க்குத் தொண்டு செய்யவே. ஆதலின், உண்மைத் துறவு நிலை உயர்ந்தோரால் போற்றத்தக்கதே! இல்லறத்துக்குத் துணையாய் உள்ள துறவறத்தை இல்லறத்தோடு ஒப்பிட்டுக் காணுதல் முறையன்று. துறவறத்தார் மேற்கொண்டுள்ள தொண்டின் மேன்மையால் இல்லறத்தாரால் நன்கு மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்ததும் வருவதும் உலகம் அறிந்ததே. அதனால் இல்லறம் துறவறத்தினும் தாழ்வுடைத்து என்று கருதுதல் பொருந்தாது. துறவறத்தினும் இல்லறமே ஏற்றமுடைத்து என்ற பரிமேலழகர் நிலைநாட்ட முயன்றுள்ளது பாராட்டத்தக்கது.
மாந்தன் நிலையைவிட உயர்ந்த நிலை கடவுள் நிலையாகும். மாந்தன் நிலை குற்றம் செய்வதற்கு இடம் உடையது. கடவுள் நிலை குற்றங்கட்கு அப்பாற்பட்டது. குற்றமற்ற நிலையே கடவுள் நிலையாகும்.
மக்கள் குற்றமற்றவர்களாக வாழவேண்டும். அப்பொழுதுதான் இவ்வுலகம் துன்பங்களினின்று விடுதலை பெற இயலும். கசடறக் கற்று, கற்ற வழியில் மக்கள் ஒழுகில் குற்றங்களுக்கு இங்கு இடமில்லை. குற்றமற்று வாழ வேண்டுமென்பது, மக்கள் வாழ்க்கைக்கு இயலாது என்று சிலர் கருதிவிடுகின்றனர்; கடவுள் பிறப்பினர்க்குத்தான் குற்றமற்று வாழ முடியும் என்று கூறித் தம் குற்றங்களுக்கு அமைதி தேடுகின்றனர். வள்ளுவர் பெருமானுக்கு இக்கருத்து உடம்பாடன்று. மாந்தனும் கடவுளாகலாம். எப்பொழுது? உலகில் வாழும் அறநெறிப்படி வாழ்ந்தால். ஆகவே, ஒவ்வொருவரும் இல்லறம் ஏற்று வாழும் அறமுறைப்படி வாழுங்கள் அவ்வாறு வாழுகின்றவன் இவ்வுலகில் இருப்பவனே யாயினும் வானுலகில் உறைவதாகக் கூறப்படும் கடவுளாகவே கருதப்படுவான் இல்லற நெறியே இனிய கடவுள் நிலைக்கு மக்களை இட்டுச் செல்லும்.
இல்லற வாழ்க்கை ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாகக் கூடி வாழும் வாழ்க்கையாகும். இருவருள் ஒருவர் இல்லையானாலும் இல்லறம் சிறப்புறாது. இல்வாழ்வு அமையப் பெறுவதற்கே இருவரும் ஒன்று கூட வேண்டும். இல்லற வாழ்வில் இருவருமே தலைவர்கள்.கணவன் தலைவன்; மனைவி தலைவி. கணவன் தலைவி என்றால் மனைவி அடிமையல்லள்; மனைவி தலைவி என்றால் கணவன் அடிமையல்லன்; இருவருமே தலைமைப் பொறுப்புக்கும் பெருமைக்கும் உரியவர்கள். இல்லற வாழ்வு இனிமை பொருந்த நடை பெற வேண்டுமென்றால் இருவர் துணையும் வேண்டும். ஆயினும், இல்லறத்தில் தலைவனைவிடத் தலைவிக்கே பொறுப்பும் கடமையும் மிகுதி. அவளே இல்லில் தங்கி இல்லறம் ஓம்புதலில் இடையறாது ஈடுபடும் நிலைக்குரியவளாகிவிட்டாள். ஆகவே “இல்லாள்’ (=வீட்டிற்குரிவள்) என்றும், “மனைவி’ (=மனைக்குரியவள்) என்றும் அழைக்கப்படும் சிறப்புக்குரியவளாகி விட்டாள். “இல்லான்’ “மனைவன்’ என்று தலைவனை அழைத்தல் இல்லையன்றோ? ஆகவே, இல்லற வாழ்வு இனிது நடைபெறத் துணையாய் இருக்கும் அவள் வாழ்க்கைத் துணை என்று அழைக்கப்படும் சிறப்புக்குரியவளாகியுள்ளாள். இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புக்களைத் தொகுத்துரைப்பதே இல்லறவியல்.
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்கான் வாழ்க்கைத் துணை (51)
மனைத்தக்க=மனையறத்திற்கு ஏற்ற, மாண்புடையள் ஆகி=நல்லியல்புகள் பொருந்தியவள் ஆகி, தற் கொண்டான்=தன்னை மனைவியாகக் கொண்ட கணவனுடைய, வளத்தக்காள்=வருவாய்க்குத்தக்க வாழ்க்கை உடையவள், வாழ்க்கைத் துணை=சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள்.
மனையறத்திற்கு ஏற்ற மாண்புகள் யாவை?
தொல்காப்பியத்தில் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளன:
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிநின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
(தொல்.பொருள்.கற்பியல் நூற்பா 11)
இங்குக் காமம் என்ற சொல் காதல் என்னும் பொருளைத் தரும். இது தூய தமிழ்ச் சொல்லே. ‘காம்’ பகுதி.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் (52)
மனைமாட்சி=மனையறத்திற்கு ஏற்ற பெருமைக் குணங்கள், இல்லாள்கண்=வீட்டுக்குரிய மனைவியிடத்து, இல்லாயின்=இல்லையானால், வாழ்க்கை=இல்லற வாழ்வு, எனை மாட்சித்தாயினும்=செல்வம் முதலியவற்றால் எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தாலும், இல்=பயனில்லை.
ஒருவன் எல்லாச் செல்வங்களையும் பெற்று, அனைவரும் போற்றத்தக்க உயர்நிலையில் இருந்தாலும், இல்லறத்திற்கு ஏற்ற மனைவி வாய்க்கப் பெறாவிட்டால் இல்லற வாழ்வு இனிமை பயவாது; கருதிய பயனைத் தராது. இல்லறத்தின் ஏற்றம் இனிய மனைவியால்தான் ஏற்படும்.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (53)
இல்லவள் மாண்பானால்=வீட்டுக்குரிய மனைவி இல்லறத்திற்கு ஏற்ற பெருமைக்குணங்கள் உடையவளாய் இருந்தால், இல்லது என்=ஒருவன் பெற்றிராது என்ன? ஒன்றுமில்லை. இல்லவள்=மனைவி, மாணாக்கடை=இல்லற மாண்புகள், பெற்றிராதபோது, உள்ளது என்=பெற்றிருப்பது என்ன? ஒன்றுமில்லை.
இல்லறத்திற்கு ஏற்ற மனைவி வாய்க்கப் பெற்றால், இல்லறத்திற்குத் துணையாவனவற்றுள் எதையும் பெற்றிராதபோதும், எல்லாம் பெற்றுள்ளமை போன்றதாம். எல்லாம் பெற்றிருந்தும் இல்லத்திற்கு ஏற்ற மனைவி வாய்க்கப் பெறாவிட்டால், யாதும் பெறாத நிலைமை போன்றதாகும். இல்லறத்தின் சிறப்பு அதற்கு ஏற்ற மனைவியைப் பெறுவதே.
நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக் கூடியவள் மனைவியேயாவாள். அவள் தான் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும். தன் கணவனைவிட அழகிலோ, செல்வத்திலோ, ஆண்மையிலோ, கல்வியிலோ, இன்னும் பிற சிறப்புகளிலோ சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து, அவன்பால் மனம் செல்லுதல் கூடாது. அவ்விதம் செல்லாமல் இருக்கும் நிலைமையே திண்மை நிலை, உளங்கலங்கா நிலை. தமிழ் நாட்டில் உளங்கலங்கும் நிலை என்பது நினைக்கக் கூடாத ஒன்று. ஆனால், மேனாடுகளில் ஒருவனை மணந்த பெண் பிறிதோர் ஆடவனை ஏதேனும் ஒரு காரணத்தால் விரும்பி முன்பு மணந்தவனிடம் விலக்குப் பெற்றுப் புதியவனை மணந்து கொள்ளுதல் மன்பதை வழக்குக்கும் அறநெறிக்கும் உட்பட்டதாகவே உளது. ஆனால், இவ்வாறு உளங்கலங்கி, மறுமணம் செய்து கொள்ளுதலால் இல்லற வாழ்வில் பல இடர்ப்பாடுகள் தோன்றும். இம் முறைக்கு இடம் கொடுப்பின், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடனேயோ, முந்தையவரினும் சிறப்பு மிக்கவரைக் கண்டவுடனேயோ பிரிவது என்றால் இல்லற வாழ்வு உடைகலம்போல் உறுதி பயவாது. ஆதலின், காதலித்து மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது. அதற்கு உளத்திண்மைதான் வேண்டும். அதுதான் கற்பு எனப்படுகின்றது.
இக் கற்பு ஆடவர்க்கு வேண்டியதின்றோ எனின் வேண்டியதுதான். ஆடவனும் தன் மனைவியைவிட அழகு முதலிய சிறப்புக்களில் மிக்காள் ஒருத்தியை விரும்பி உளங்கலங்குவானேயானால் அப்பொழுதும் இடர்ப்பாடு தோன்றும். அவள் சீறியெழுதல் கூடும். செற்றமும் கலாமும் மிகுந்து இல்லற இன்பம் சிதைந்து விடும். ஆகவேதான் திருவள்ளுவர் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” எனப் பொதுப்படக் கூறியுள்ளார். இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்.
“ஆணின் அருந்தக்க யாவுள’ எனத் திருவள்ளுவர் கூறவில்லையே எனின், வாழ்வியலில் காலப்போக்கில் ஆணுக்கே தலைமை ஏற்பட்டு விட்டமையின், ஆணைத் தலைமையாக வைத்து அறநெறி கூறுவது எல்லா நாட்டிலும் இயல்பாகிவிட்டது.
கணவனிடத்தில் ஆழ்ந்த பற்று கொண்டு அவன் நினைவாகவே இருக்கின்ற மனைவியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தவே அவள் மழையைக் கூட ஏவல் கொள்வாள் என்று கூறப்பட்டுள்ளது. அங்ஙனமாயின் ஆணின் உறுதிப்பாட்டை வலியுறுத்த வேண்டாவோ எனின், அஃதும் வேண்டற் பாலதே. ஆடவனுக்கு முதன்மை என்ற நிலை ஏற்பட்ட பின்னர் ஆடவனை முதன்மையாக வைத்துக் கூறுதல் இயல்பாகிவிட்டது. அது பெண்ணுக்கும் பொருந்தும். ‘நஞ்சுண்டவன் சாவான்’ என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமலை. ‘திருடியவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ் விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்.
“பெய்யெனப் பெய்யும் மழை” என்பதற்குப் “பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள்” என்றும் பொருள் கூறுவர்.
இக் குறட்பாவால் இல்லறத்தில் மனைவியின் பொறுப்பு இதுவென நன்கு தெளிவாக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. தலைவியாவாள் தன்னையும் காத்துக் கொண்டு தலைவனையும் விரும்பிக் காத்தல் வேண்டும். உண்டியமைக்கும் பொறுப்பு தலைவியின்பாற்பட்டது. உண்டி ஒழுங்காக அமையாவிட்டால் தலைவனுடல் தளர்ச்சியடையும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.” ஆகவே, தலைவன் நெடிது நன்னலத்துடன் உயிர் வாழ்தல் தலைவியின் புரப்பைப் பொறுத்துள்ளது. தலைவனுக்குத் தன்னை உரிமையாக்கி இருந்தாலும் தலைவனுக்குத் தான் அழிய வேண்டா. தானும் நன்கு வாழ வேண்டும். அவள் இல்லையானால் அவன் இல்லையன்றோ?
இல்லறம் நடத்தும் முறையாலும், கணவனை ஓம்பும் முறையாலும், பிறருடன் நடந்து கொள்ளும் முறையாலும் மனைவிக்குப் புகழ் சான்ற உரைகள் உண்டாகும். கண்ணும் கருத்துமாக இருந்து இப் புகழுரைகளுக்கு இலக்காக இல்லையானால் இல்லறப் பெருமை இல்லயாகிவிடும். ஆடவன் தீயவழியில் சென்றாலும் அதàல் வரும் பழி மனைவியையே சாரும். ஆதலின், மனைவியின் மாண்புறு பொறுப்பு மட்டற்றதாகி விடுகின்றது.
உலகியல் வாழ்வை உவப்புறத் துய்க்க இல்லறமே இனிதெனக் கண்டோம்; இல்லறத்தை இனிதே நடத்த இனிய துணைவி இன்றியமையாதவள் என்று தேர்ந்தோம். இனிய துணைவியை எவ்வாறு அடைவது?
இன்று பெற்றோரும் உற்றோரும் துணைவனுக்குத் துணைவியையும் துணைவிக்குத் துணைவனையும் ஓடி ஆடி நாடிச் சேர்க்கின்றனர். சேர்க்கும் போது எல்லாப் பொருத்தங்களையும் இனிதே காண முயல்கின்றனர். ஆனால், உள்ளப் பொருத்தம் உளதா என உசாவுவதை ஒதுக்கி விடுகின்றனர். இதனால் துயருறுவோர் ஆண்களினும் பெண்களே பெரும்பான்மையர் ஆகிவிடுகின்றனர். தம் மகளுக்கு வேண்டும் துணிகளையும் நகைகளையும் படுக்கைகளையும் ஏன் செருப்புகளையும்கூட மகளின் கருத்தறிந்து அவள் விருப்படியே தேர்ந்தெடுக்கின்றனர். சில ஆண்டுகள், சில திங்கள்கள், சில நாட்கள் பயன்படக்கூடிய பொருள்களைப் பெறுங்கால் மகளின் கருத்தையறியும் பெற்றோர், வாழ் நாள் முழுவதும் துணையாய் இருந்து வாழ்க்கைத் தேரைச் செலுத்துதற்குரிய கடப்பாட்டுடன் உடலும் உயிருமாய் ஒன்றி இயைந்து வாழவேண்டிய ஒருவரைத் தேட வேண்டியபோது மகளைப் புறக்கணிப்பது கொடுமையினும் கொடுமையன்றோ? ஆனால், பண்டு தமிழ்நாட்டில் தம் துணைவரைத் தேர்ந்தெடுப்பதில் மகளிர்க்கு முழுஉரிமை அளிக்கப்பட்டிருந்து. இதனைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் நன்கு வெளிப்படுத்துகின்றன.
தொல்காப்பியத்தின் பொருட் படலம் இலக்கிய இலக்கணம் கூற எழுந்தது. இலக்கியம் என்பது வாழ்க்கை அடிப்படையில்தான் தோன்றும். அதனால் இலக்கியத்தை வாழ்க்கைக் கண்ணாடி என்று கூறுவர் இலக்கிய ஆராய்ச்சியாளர். பண்டைத் தமிழிலக்கியம் மக்கள் வாழ்க்கையையும் இயற்கைப் பொருள்களையும் கொழுகொம்பாகக் கொண்டே வளர்ந்துள்ளது. தொல்காப்பியமும் அதனையே சுட்டிச் செல்கின்றது. இலக்கியத்தில் வாழ்க்கையை எவ்வாறு சொல்லோவியப்படுத்த வேண்டும் என்பதனை வரையறுத்துக் கூறுகின்றது அது. திருமணத்திற்குரிய வயதினை அடைந்த தலைவனும் தலைவியும் தம்மில் தானே கண்டு விரும்பி, நட்புப் பூண்டு, காதல் கொண்டு, ஒருவர்க்கொருவர் இன்றியமையாதவர் எனும் உணர்வு கொண்டு இணைந்து வாழ்ந்து இல்லறத் தேரைச் செலுத்துவது என முடிவு செய்து, பெற்றோர்க்கறிவித்து வாழ்க்கைத் துணைவர் ஆயினர்; பெற்றோர் உடம்படாவிடின் பெற்றோரின்றியும் மண வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு மணவாழ்க்கையை மேற் கொள்வதன் முன்னர்த் தலைவனும் தலைவியும் கண்டு தெளிந்து ஒன்றுகூடும் நிலையையும், ஒன்றிவாழும் நிலையையும், அவ்வமயங்களில் இருவரிடையேயும் உண்டாகும் நிலை வேறுபாடுகளையும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் அஃதாவது புணர்ச்சி, பிரிவு, இருத்தல், ஊடல், இரங்கல் எனும் திணை வகைகளாக இலக்கியங்களில் எழில் மிகக் கூறியுள்ளனர். திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கண இலக்கிய மரபை ஒட்டி அக வாழ்வை அழகுறத் தீட்டியுள்ளார். வாழ்வைப் புலப்படுத்தும் இலட்சியமாகவும் இலக்கியம் வெளிப்படுத்தும் வாழ்வாகவும் கூறப்பட்டுள்ள இன்பத்துப்பால் தமிழர் காலதலறத்தின் நெறிமுறையேயன்றி, வடவர் முறையைப் பின்பற்றியதன்று. இது வடமொழி நூலான “காம சூத்திர’ மொழி பெயர்ப்போ தழுவிய ஒன்றோ அன்று. திருக்குறள் இன்பத்துப்பாலையும் வடமொழியின் காமசூத்திரத்தையும் ஒப்ப நோக்குவார்க்கு இவ்வுண்மை எளிதிற் புலனாகும்.
திருக்குறள் இன்பத்துப்பால் ‘பால்'(Sex)பற்றிய நூலாயினும், ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடியுள்ள அவையில் கூறுவதற்குக் கூசும் ஒரு சொல் கூட அதில் இடம் பெறவில்லை.
இன்பத்துப் பால் காதலரின் உறவு முறையை விளக்கப் போந்ததாயினும், காதலர்கள் இன்னின்ன வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று விதிமுறையில் கூறாது, அவர்களையே நம்முன் நிறுத்தி ஒழுகச் செய்து விடுகின்றது. அதனாலேயே, இப்பகுதி ஒப்புயர்வற்ற இலக்கியக் காட்சிகளாகவும் அமைந்து கற்போர் உள்ளத்தைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும் பான்மையதாய் உள்ளது.
திருவள்ளுவர், முதலில் தலைவனும் தலைவியும் காண நேரும் காட்சியை நிறுத்துகின்றார்.
தலைமகன் தலைவியைக் காணுங்கால் அவள் அழகால் உந்தப்பட்டு அதனால் உளம் வேறுபடுதல். அமைதியாக இருந்த ஆடவனின் உள்ளம் பெண்ணின் தோற்றத்தால் வருந்தத் தொடங்குதல். “தகை அணங்குறுத்தல்’ என்றால் “அழகு வருத்தத்தை அடைவித்தல்’ என்பதாகும். தலைவியைக் கண்ட தலைவன் கூறுகின்றான்:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (1081)
அணங்குகொல்=வருத்தும் அழகுத் தெய்வமோ?; ஆய்மயில் கொல்லோ= ஆராய்ந்தெடுக்கப்பட்ட அழகிய மயிலோ?; கனங்குழை மாதர்கொல்=கனத்த காதணியை அணிந்துள்ள பெண்தானோ?; என் நெஞ்சு= என் உள்ளம்; மாலும்=ஒன்றும் அறிய இயலாது மயங்கும்.
ஒரு பெண்ணை ஓர் ஆடவன் விரும்புவதற்கு முதல் துணையாக அமைவது அவள் அழகே! அழகிய பெண்ணைக் கண்ட தலைமகன் அவன் அழகு நலத்தில் மயங்கிக் கூறுகின்றான்
“கனங்குழை=கனவிய குழைய உடையாள்” எனக் கூறி ஆகுபெயர் என்பர் பரிமேழகர். “கனங்குழை மாதர் என்பது பொருத்தமுற அமைந்திருக்கும் போது “கனங்குழை என்று பிரித்துப் பொருள் கூறுவதன் சிறப்பு ஒன்றுமில்லை.
‘கொல்’ என்பது ஐயத்தையும் வினாவையும் உணர்த்தி நிற்கின்றது. பண்டைத் தழிழர் வியப்பு, வினா, ஐயம் முதலியவற்றை உணர்த்த இடைச் சொற்களையே பயன்படுத்தினர். !,?, இவ்வடையாளங்கள் பிற்காலத்தில் கொண்டனவே.
நோக்கினாள்; நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)
நோக்கினாள்=என்னைப் பார்த்தாள்; நோக்கு=என் பார்வைக்கு, எதிர்நோக்குதல்=எதிராகப் பார்த்தல், தாக்கு அணங்கு=வருத்தும் தெய்வம், தானை=படையையும் கொண்டன்னது உடைத்து=உடன் கொண்டு வந்துள்ள தன்மையை உடையது.
அவன் நோக்கினாள்; அவளும் நோக்கினாள். அவன் நோக்கும்போதே அவளும் எதிர் நோக்குதலைக் கண்டு அப் பார்வையால் கவரப்பட்ட அவன், இயல்பாகவே அழகால் வருத்தக்கூடிய அவள் கூர்ந்து நோக்கியமையான், வெல்வதற்குப் படையையும் கொண்டு வந்து விட்டாள் எனத் தான் அவளுக்கு அடிமையாகிவிட்டதை அறிவிக்கின்றான்.
பண்டறியேன் கூற்றென் பதனை; இனிஅறிந்தேன்
பெண்தகையால் பேரமர்க் கட்டு (1083)
கூற்று என்பதனை=உயிருண்ணும் ‘எமன்’ என்று சொல்லப்படுவதனை, பண்டு அறியேன்=முன்பு அறியாதவனாய் இருந்தேன். இனி அறிந்தேன்=இனிமேல் அறிந்தவனாகி விட்டேன். பெண் தகையால்=அது பெண் தன்மையுடன், பேரமர்க் கட்டு=பெரியனவாய் அமர்த்த கண்களை உடையது.
கூற்று என்பது உயிரைக் கொண்டு செல்லும் ஒன்Ùகக் கதைகளில் கூறப்படும் கற்பனையின் பாற்பட்டது.
தலைமகளைக் கண்டவுடன் வருந்தத் தொடங்கியதால் தன்னைக் கொல்ல வந்த கூற்று எனப் புனைந்து கூறுகின்றான் தலைமகன். தலைமகள் வடிவில் வந்துள்ள கூற்று பெண்ணழகுடன் பெரிய கண்களையும் கொண்டுள்ளது என்கின்றான்; கண்கள் அங்குமிங்கும் அசைந்து கொண்டேயிருப்பதனால் அமர்த்த பொருகின்ற தன்மையுள்ள கண்கள் என்கின்றான்; இவ்வாறு அவள் அழகின்பால் கவர்ச்சியுற்று வருந்துவதனை வெளிப் படுத்துகின்றான்.
கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக் கமர்த்தன கண் (1084)
பெண்தகை=பெண்ணிற்சிறந்த. பேதைக்கு=இளம் பெண்ணிற்கு, கண்=கண்கள், கண்டார் உயி ருண்ணும்=தம்மைப் பார்த்தவர் உயிரைக் கொண்டு செல்லும், தோற்றத்தால்=வடிவத்தோடு, அமர்த்தன=பொருந்தி இருந்தன. (அல்லது தம்முள் பொருதுகொண்டு இருந்தன.)
காதலியின் கண் பார்வையே காதலனை வயப்படுத்த வல்லது. அவளை அடையும்வரை அவன் தன்னைச் செயலற்றவனாகவே கருதுவான்; ஆகவே. உயிர் உளதோ இலையோ என்று ஐயுற்று வருந்துவான். அவள் கண்கள் தன் உயிரைக் கொண்டு சென்றதாகவே கருதித் தலைவன் வருந்துகின்றான்.
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து (1085)
கூற்றமோ=(என் உயிரைக் கொண்டு செல்ல உள்ளன போல் காணப்படுவதால்) எமன்தானோ? கண்ணோ=என்னைக் காண்பதனால் கண்கள்தாமோ? பிணையோ=அங்கும் இங்கம் நாணி ஓடுவதனால் பெண்மானோ? மடவரல்=அழகிய இப் பெண்ணின், நோக்கம்=கண்பார்வை, இம் மூன்றும்=இம் மூன்றன் தன்மைகளையும், உடைத்து=பெற்றுள்ளது.
தன்னை வருத்தும் தன்மையால் கூற்றம் என்றும், மான்போல் ஓரிடத்தில் நிலைத்து நில்லாது ஓடிக் கொண்டுள்ளமையின் பிணையென்றும் கண்களைச் சிறப்பித்துக் கூறுகின்ற நயம் பாராட்டத்தக்கது.