New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்
Permalink  
 


 

நாம் தமிழர்களே!
***********-*********
நேரம் இருந்தால் படிக்கவும் 
————————————
வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்!

பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரிய சம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த திருக்குறள் போல வேறு எம்மொழியிலும் நூல் இல்லை. இனி ஒரு காலத்திலும் இவ்வளவு அழகாக ஒரு புலவர் செய்ய முடியுமா, அப்படியே செய்தாலும் அதை வள்ளுவனை ஏற்றார் போல உலகம் ஏற்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கும்.

இப்படி வான் புகழ் பெற்று தேன் தமிழில், தென் தமிழில், தெள்ளு தமிழில் குறள் செய்த வள்ளுவன் தமிழில் ஒரு அமைதிப் புரட்சியையும் செய்தான். தமிழில் முதல் தடவையாகத் துணிந்து சம்ஸ்கிருதத்தைப் புகுத்தினான். அதனால் தமிழ் அழகு பெற்றதே அன்றி சோபை குன்றவில்லை. மொழியைக் கெடுக்காமல், அளவோடு செய்தான். நம் காலத்தில் பாரதியார் செய்ததைப் போல.

வள்ளுவப் பெருமான், பகவத் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பாற் போலத் தோன்றுகிறது. ஏனெனில் தானம்,தவம் என்ற சொற்றொடரும் குணம் என்ற சொல்லும் சமன் என்ற சொல்லும் பகவத் கீதையில் ஏராளமான ஸ்லோகங்களில் வரும். தமிழில் தைரியமாக இப்படி சம்ஸ்கிருதச் சொற்களுடன் வேறு யாரும் கவிதையையோ பாடலையோ துவக்கியதில்லை.

கீதையில் தானம்,தவம் என்ற 2 சொற்களும் சேர்ந்தே வரும் (கீதை 10-5, 16-1,17-7,17-28,18-5; கீதையில் 14ஆவது அத்யாயம் குணத்ரய விபாக யோகம். ஒவ்வொரு செய்யுளிலும் குணம் என்ற சொல் வருகிறது. அதே சொல்லுடன் தவங்கும் ஸ்லோகமும் உண்டு. சமம் என்ற சொல்லுடன் கீதையில் குறைந்தது ஆறு ஸ்லோகங்களாவது துவங்குகின்றன. இதை எல்லாம் பார்க்கையில் அவர் குறளை எட்டுக்கட்டும்போது அவரை அறியாமலே இந்தச் சொற்கள் பீறிட்டெழுந்திருக்க வேண்டும்.

வள்ளுவன் கையாண்ட பல கருத்துக்கள் வடமொழி நூல்களான பர்த்ருஹரியின் சதகங்கள், மனுதர்ம சாஸ்திரம், கீதை, தம்மபதம் ஆகியவற்றில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நிறைய கட்டுரைகள் வந்துவிட்டதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை.

‘தானம் தவம் இரண்டும்’ (குறள் 19, 295) என்றும், ‘குணம் என்னும் குன்று ஏறி’ என்றும் ‘சமன்’ செய்து என்றும் துணிவாகச் சம்ஸ்கிருதச் சொற்களுடன் குறளைத் துவக்குகிறார். முதல் குறளிலேயே அ’கரம்’, ‘ஆதி பகவன்’ என்றும் அடித்து நொறுக்குகிறார். இந்தத் துணிவு இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததால்தான் வந்தது. மனம், கருமம், காமம்,தெய்வம், முகம் போன்ற சம்ஸ்கிருதச் சொற்களுடன் இன்னும் நிறைய குறள்களைத் துவக்குகிறார். இவருக்குப் பின் வந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஏராளமான வட மொழிச் சொற்களைப் பயன்படுத்த வள்ளுவனே வழி வகுத்தான் போலும்

வள்ளுவன் உள்ளத்தால் பொய்யாதொழுகிய உத்தமன். அதனால்தான் அவன் உலகத்தாற் உள்ளத்துள் எல்லாம் உளன். அவனுக்கு வட மொழி தென் மொழி என்ற காழ்ப்புணர்ச்சி இல்லை. இரு மொழியும் இரு கண்கள் என்பதை உணர்ந்த பெரியோன் அவன். யாராவது திருக்குறளில் இருந்து வடமொழிச் சொற்களை எடுத்தால் அது செல்லரித்துப் போன ஏடு போல, வைரஸ் பாதிப்புக்குள்ளான ‘சாFட்வேர்’ போல ஆகிவிடும்.

தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் வட மொழிச் சொற்கள் இல்லாமல் இல்லை. நக்கீரர் கூட ‘உலகம்’ (லோக) என்ற வடமொழிச் சொல்லோடு திருமுருகாற்றுப் படையைத் துவக்குகிறார். சிறுபாணாற்றுப் படை, ‘மணி’மலை என்று துவங்குகிறது. ஆனால் இவ்விரு நூல்களும் பிற்காலத்தில் எழுந்தவை என்பது சில ஆராய்ச்சியாளரின் கருத்து. சிறுபாணாற்றுப்படை, கடை எழு வள்ளல்களை வரிசைப்படுத்தி உரைப்பதால், இப்படி ஏற்பட கபிலர் பரணர் காலத்திலிருந்து 200, 300 ஆண்டுகளாவது ஆயிருக்கும். ஆனால் தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோ ஆகிய மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததால்தான் “அதிகாரம்” என்ற சொல்லை மூவரும் தங்கள் நூல்களில் பயன்படுத்தினர். (காண்க என் கட்டுரை: தொல்காப்பியர் காலம் தவறு)

அதிகாரம் என்ற சொல்லைக் கருத்திற் கொண்டால் வள்ளுவன் சம்ஸ்கிருத் சொற்களைப் பயன்படுத்தாத அதிகாரமே இல்லை! ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொற்களைக் குறள்களிலும் காண்கிறோம். நான் ‘ஹைலைட்டரை’க் கொண்டு வடமொழிச் சொற்களை ‘ஹைலைட்’ செய்தபோது எல்லா பக்கங்களிலும் வடமொழிச் சொற்கள் இருப்பதைக் கண்டேன்.

வள்ளுவனுக்கு பகவத் கீதை அத்துபடி என்பதற்கு இன்னும் ஒரு சான்றும் இருக்கிறது. கீதையில்:

“ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மனாஹுதம்

ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்மகர்ம சமாதினா” (4-24)

என்று ஒரு ஸ்லோகம் வருகிறது. இதே போல உபநிஷதத்தில்

“பூர்ணமதப் பூர்ணமிதப் பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஷ்யதே” –

என்று ஒரு மந்திரம் வருகிறது. இதே ‘ஸ்டைலில்’—பாணியில்– வள்ளுவனும்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை —-(குறள் 12)

என்று பாடுகிறான். முன் எவரும் இப்படிச் செய்ததில்லை.

வடமொழிச் சொற்பட்டியல்

வள்ளுவர் பயன்படுத்திய வடமொழிச் சொற்கள் பட்டியலை தமிழ் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை அளிக்கிறார். அத்தோடு வள்ளுவர் பயன்படுத்தும் புதிய தமிழ் இலக்கண அமைப்புகளும் அவர் எக்காலத்தவர் என்பதை காட்டிவிடுகிறது.வள்ளுவர் 137 வட மொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு சொல்லையும் பலமுறை பயன்படுத்தும் போது இது பன்மடங்கு அதிகரிக்கும்.:

அகரம், அச்சு, அதி, அவி, அந்தம், அமிர்தம், அங்கணம், அரங்கு, அமர், அமரர், அமைச்சு, அரங்கு, அரண், அரசர், அவம்,அவலம், அவை, ஆசை, ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆணி, ஆயிரம், ஆயம், இசை, இந்திரன், இமை, இரா, இலக்கம்,உரு, உருவு, உலகு, உல்கு, உவமை, உறு, ஏமம், ஏர், கஃசு, கருமம், கணம், கணிச்சி, கதம்,காந்து, கலுழும், கவரி, கவுள், கழகம், களம், களன், கனம், காரிகை,கானம், காமம், காரணம், காமன், காலம், குணம், குடங்கர், குலம், குவளை, கூர், கூகை, கொக்கு, கோடி, கோட்டி, கோட்டம், சலம், சமன்,சிவிகை,சுதை,சூது,சூதர் , தகர், தண்டம், தவம், தானம், தாமரை, திண்மை, திரு, துகில், துலை,தூது, தெய்வம், தேயம், தேவர்,தொடி, தோட்டி, தோணி, தோள், நத்தம், நயம், நாகம், நாவாய், நாகரிகம், நாமம், நிச்சம், நீர், நுதுப்பேம்,பகவன், பக்கம், பகுதி, படாம், படிவத்தர், பதம், பயன், பரத்தன், பண்டம்,பளிங்கு, பள்ளி, பாக்கியம்,பாகம், பாவம்,பாவி, பூரியர்,பூசனை. புருவம், பூதம், பீழிக்கும் ,பீழை, புருவம், பூசனை, பூதங்கள் பேடி, பேய், மங்கலம், மடமை, மதலை, மயிர், மயில், மனம், மந்திரி, மணி, மதி, மா, மாடு, மாதர், மாத்திரை, மாயம், மானம், மீன், முகம், யாமம், வஞ்சம், வண்ணம்,வளை, வாணிகம், வித்தகர்

பொய்யாமொழியைச் சுற்றி ஒரே பொய் மூட்டைகள்!!!

வள்ளுவன் காலம் அவன் பயன்படுத்தும் வடமொழிச் சொற்களாலும், புதிய சொற்றொடர்களாலும், பிற்கால இலக்கணத்தாலும் நன்கு தெரிந்த பின்னரும், இதை வையாபுரியார் முதற்கொண்டு பல அறிஞர் பெருமக்கள் எடுத்துக்காட்டிய பின்னரும், சிலர் ‘கட்டைப் பஞ்சாயத்து’ முறையில் வள்ளுவனை கி.மு.31 என்று முத்திரை குத்தியது பொய்யாமொழிப் புலவனையே அவமானப் படுத்துவதாகும். இது தொடர்பான பழைய மகாநாட்டில் காரசார விவாதங்கள் நடந்து வெளிநடப்பு நடந்தபின்னர் ஒரு கோஷ்டி இப்படி வள்ளுவருக்குப் பொய்க் காலம் போட்டுக் கொடுத்தது. இதை வள்ளுவனே மன்னிக்கமாட்டான்.

வள்ளுவன் பெருமை அவன் வாழ்ந்த காலத்தால் அல்ல. அவன் எழுதிய நூலால்தான். இன்று வள்ளுவன் இப்படி ஒரு நூல் எழுதியிருந்தாலும் இந்தியாவிலேயே அவன் ஒருவன் தான் இப்படிப்பட்ட சாதனையைச் செய்தவனாக இருந்திருப்பான். ஏற்கனவே நேர்மையற்ற அரசியல்வாதிகள் எல்லாம் அவன் குறளை மேடை தோறும் முழக்கி அவனை மஹாத்மா காந்தியைப் போல மதிப்பு இல்லாமல் நகைப்புக்குரியவராகச் செய்துவிட்டார்கள். அவன் வாழ்ந்த காலம் பற்றிய மோசடியையாவது மாற்றி உண்மையைச் சொன்னால் அவனுக்கு ஆத்ம சாந்தியாவது ஏற்படுமே.

மொழியியல் ரீதியில் வள்ளுவனை கி.மு.வில் வைக்க முடியாது. அப்படி வைத்தால் சங்க இலக்கியம் முழுவதையும் கி.மு 4 அல்லது 5ஆம் நூற்றாண்டுக்குத் தள்ள வேண்டியிருக்கும். அதுவும் முடியாது. கடல் வணிகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகளும் ரோமானிய ,கிரேக்க எழுத்தர் குறிப்புகளும் சங்க இலக்கியத்தை முதல் மூன்று (கி.பி) நூற்றாண்டுகள் தான் என ஐயம் திரிபு அற முடிவு செய்துவிட்டன (காண்க கனக சபைப் பிள்ளை, டாக்டர் இரா.நாகசாமி, கமில் சுவலெபில் நூல்கள்)

வள்ளுவன் வடமொழி வாசகத்துடன் பாடலைத் துவக்கியதோடு நிற்காமல் ஆங்காங்கே சில சம்ஸ்கிருதச் சொற்றொடர்களுக்கு அருமையான மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறான். சினம் பற்றிய அதிகாரத்தில் ‘சேர்ந்தாரைக் கொல்லி ‘என்ற சொல் ‘ஆஸ்ரயாச:’ என்பதன் தமிழாக்கம். தாமரைக் கண்ணன் என்பது கமலநயன, அரவிந்தாக்ஷன் என்பதன் தமிழாக்கம். தர்ம,அர்த்த,காம (அறம், பொருள், இன்பம்) என்ற இந்து மதக் கோட்பாடுகளுடன் இந்திரன் முதலாக பல்வேறு இந்துக் கடவுளரையும் குறிப்பிடுகிறார்.

வள்ளுவனின் வேறு சில அழகான மொழிபெயர்ப்பு:சம்சார சாகரம்=பிறவிப் பெருங்கடல்,அஹங்காரம்,மமகாரம்=யான்,எனது என்னும் செருக்கு, ரிக்வேதத்தில் வரும் கவீம் கவீனாம்=நூலாருல் நூல் வல்லான், கீதை ஸ்லோகம் உத்தரேத் ஆத்மநாத்மானம்= உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல், தர்மோ ரக்ஷதி ரக்ஷித:= அல்லவை தேய அறம் பெருகும்.

வள்ளுவர் “இந் நான்கும்”, “இம்முன்றும்” என்று சொல்லுவதும் வட மொழி அணுகுமுறை. பழந்தமிழ் நூல்களில் காணப்படா.

கடவுள் வாழ்த்தில் உள்ள பத்து பாக்களில் ஏழு குறள்களில் இறைவனுக்கு பாத நமஸ்காரம் செய்கிறார் (அடி போற்றுதல், தாள் வணங்குதல்). இது சம்ஸ்கிருத நூல்களில் தடுக்கி விழுந்தால் பார்க்கக்கூடியது.

கோடி என்ற வடமொழிச் சொல்லை இவர் பயன்படுத்திய அளவு வேறு எந்த பழந்தமிழ் கவிஞனும் பயன்படுத்தியிருக்க மாட்டான். சின்னக் குழந்தை சொல்லும் வடமொழி ஸ்லோகத்தில் கூட “சூர்யகோடி சமப்ரபா” என்ற வடமொழி வாசகம் வரும்.

வேறு யாரும் சொல்லாத இன்னொரு விஷயம். வள்ளுவர் பஞ்ச தந்திரக் கதைகளையும் நன்கு படித்தவர் என்பது குறள்கள் 273, 274, 277, 481, 495, 633 முதலியவை மூலம் தெரிகிறது.

வாழ்க வள்ளுவன் புகழ். வளர்க வாய்மை, பொலிக தூய்மை!

நன்றி Santanam Swaminathan

Image may contain: 1 person, text and outdoor
 
Like
 
Like
 
Love
 
Haha
 
Wow
 
Sad
 
Angry
 
Comment


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard