New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்!


Guru

Status: Offline
Posts: 24811
Date:
தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்!
Permalink  
 


தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்!

-நைத்ருவன்

கடந்த 2017 டிச. 31-இல் ராஜபாளையத்தில் தினமணி ஏற்பாடு செய்த நிகழ்வில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை, அதன் நோக்கத்திலிருந்து வழுவிவிட்டது. அடிப்படையில் நாத்திகரான வைரமுத்துவால் ஆண்டாளின் சிறப்பை உணர முடியவில்லை என்பதை அவரது உரை காட்டியது. அதைவிட, ஆண்டாளின் பிறப்பு குறித்து அவர் தெரிவித்த விஷம் தோய்ந்த கருத்துகள்- அவர் அறியாமல் சொன்னவை ஆயினும்- ஆன்மிக அன்பர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்திவிட்டன.

அதேபோல, அரங்கனுடன் ஆண்டாள் இரண்டறக் கலந்ததையும் அதுதொடர்பான அவரது தீஞ்சுவைப் பாசுரங்களையும் மனம்போன போக்கில், பாலியல் சிந்தனையுடன் விளக்கி மாபெரும் தவறிழைத்தார் வைரமுத்து. இதனை எந்த தணிக்கையுமின்றி மறுநாள் வெளியிட்டு தினமணி நாளிதழும் பெரும்பிழை செய்தது. இது தொடர்பாக, வைரமுத்துவும், தினமணியும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோரி, தமிழகம் முழுவதும் ஆன்மிக அன்பர்களும் ஆண்டாள் பக்தர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு அசைபோடுகிறார் எழுத்தாளர் திரு. நைத்ருவன்.

 

 

      “கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்- கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்”  என்று பாடுவார் கவியரசு கண்ணதாசன். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மிகச் சிறுவயதில் கவிநயம் மிக்க அமிழ்தூறும் தமிழ்ப் பாமாலைகளை இறைவனுக்குச் சூட்டிய தமிழ்த்தாயின் ஆசைமகள் அவள்.

மிகச் சிறுவயதில் ஒரு பெண்ணால் இப்படிப் பாடல்கள் எழுத இயலுமா என்பது பெண்ணியம் பேசுபவர்களாகவும், பெண்ணின் பெருமைக்காகப் பாடுபடுபவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலரின் சந்தேகம். இன்றைக்கும் சில குழந்தைகள் உலக அளவில் பரவலாக மிக அதீதத் திறமை கொண்டவர்களாக குறிப்பிட்ட துறைகளில் ஜொலிக்கிறார்கள் என்பது உண்மைதானே? (Child Prodigy) சுவாமி விவேகானந்தராகட்டும், ஆதிசங்கரராகட்டும், ஏன் நமது ஈரோட்டு மண்ணுக்கு உண்மையான பெருமையளிக்கும் கணிதமேதை ராமானுஜனாகட்டும், இவர்களின் இளம் வயதிலேயே விவேக ஜ்வாலை கொழுந்துவிட்டு எரிந்தது என்பது வரலாறுதானே? அவர்கள் தாம் வாழ்ந்த குறுகிய காலத்தில் நூறு வயது வாழ்ந்தவர்கள் சாதித்ததைச் சமனாய் கொண்டவர்கள்தாமே? ஞானசம்பந்தர் பாலுண்ணும் வயதில் பாடியதுதான் ‘தோடுடைய செவியன்’ என்ற முதல்பாடல் என்று தமிழ்கூறும் நல்லுலகம் நம்புகிறது. ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவின் அடுத்த கட்டுரை அதனையும் கேள்விக்குறியதாக்குவதாக இருக்குமோ? தினமணி ஆசிரியர் வைத்தியநாதனே அறிவார்.

தெருவில் இறங்கிப் போராடும் ஹிந்து சமுதாயம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றான் வள்ளுவன். தமிழின் பெருமையைப் பறைசாற்றுபவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள்,  ஆண்டாளின் பிறப்பினைச் சந்தேகம் கொண்டு ஆராயப் புகுவதன் நோக்கமென்ன? ஆண்டாள் மிகத் தெளிவாக  ‘பட்டர்பிரான் கோதை சொன்ன’ என்று திருப்பாவையில் செப்பியிருக்கிறாளே- தான் பட்டர்பிரான் மகள் என்று.  “ஒரு மகள் தன்னை உடையேன்; உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்; செங்கண்மால்தான் கொண்டு போனான்” இது பெரியாழ்வாரின் வாக்கு அல்லவா?

இறைநம்பிக்கையுடையோர், வைணவர்கள் என அனைவரும் ஆண்டாளை திருமகளின் அவதாரமாகவும், பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாகவும், அரங்கனை மணந்த அரங்கநாயகியாகவும் காண்பது மட்டுமல்ல, போற்றிப் பாடுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் என்றே பெருமாளின் பெயரைப் பின்னுக்குத் தள்ளி ஆண்டாளை முன்னிறுத்திற்று வைணவம். கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாமல் ஆண்டாளை அனைவரும் ஒருங்கே ஏற்றுக் கொண்டபின்,  இறைநம்பிக்கையற்ற- ஆனால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை நம்புவததாகக் கூறுகின்ற வைரமுத்து, அவளது குலம் ஆராயப் புகுந்ததேன்? அவருள் இருக்கும் ஆணாதிக்க மனம் சொல்லாட்சி மிகுந்த பாமாலைகளை ஒரு பெண்பிள்ளை எழுதியிருப்பாள் என்பதை நம்ப மறுக்கிறதோ?

இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு, ஆறாம்- ஏழாம் நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது என்கிறார் வைரமுத்து. ஆனால், வைணவம் என்னும் திருமாலியம் தமிழருக்குப் புதியதன்று; ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என தொல்காப்பியத்தையும் அவர்தானே சுட்டுகிறார். அவர் சொல்ல வருவதுதான் என்ன? தமிழ்ச் சமுதாயம் தொல்காப்பியத்துக்கு முன்னதாகவும் இறையோடு இயைந்தும் இழைந்தும்தானே வாழ்ந்திருக்க முடியும்?

இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்களும் பாடல்களும் அதிகம் கொண்ட சினிமாவில் ஊறிப் போன வைரமுத்துவுக்கு காமத்தை தன்னில் இருந்து முழுமையாய் விலக்கி அதனை இறையோடு இணைக்கும் ஆண்டாளின் காதல் செறிந்த பாடல்கள் காமம் செறிந்தவையாகத் தெரிவது வியப்பல்ல. மெய்ப்பொருள் தேடும் இறையுணர்வூறும் பாடல்களை அவர் கீழ்த்தரமான படுக்கையறை நினைவுகளுடன் அணுகியிருக்கிறார் என்பது நன்றாய்ப் புலப்படுகிறது. திருடனுக்கு காண்போரெல்லாம் திருடனாய்த் தெரிவது போல!    ஆண்டாள் பிறப்பினை, அவள் பாடலைக் கேள்விக்குறியாக்குவதன் மூலம் வைரமுத்துவும், அவரைச் சார்ந்த இயக்கங்களும் முன்னிறுத்தும் சமூக ஏற்ற இறக்கங்கள், பெண்களை வீட்டுக்குள் பூட்டிவைத்த காலம் என்று தமிழ்ச் சமூகத்தை கீழான நிலையில் காட்டும் கொள்கைகளை நிலைநிறுத்த முற்படுவதே என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. ஆண்டாளின் பாடல்கள் அவற்றைத் தகர்த்தெறிந்து கொண்டிருக்கின்றன  என்பது அவர்களின் கண்களை உறுத்திக் கொண்டுள்ளது. முறத்தால் புலியை விரட்டிய தமிழச்சிகளின் பரம்பரையை வீட்டில் முடங்கியவர்களாகக் காட்ட தங்களுக்கே மட்டுமே உள்ளதாக அவர்கள் நம்பும் ‘பகுத்தறிவை’ப் பயன்படுத்துகிறார்கள் அறிவிலிகள். தான் சார்ந்த இனத்தை கீழ்மைப்படுத்துவதுதான் சிறப்பு என்ற எண்ணத்தையே அவர்கள் சார்ந்த இயக்கம் கொடுத்துள்ளது. அது சிறுமையா, பெருமையா என்பதனை வைரமுத்துவின் மனசாட்சியின் தீர்ப்புக்கே விட்டு விடுவோம்.

சுபாஷ் சந்திர மாலிக் என்பவர் எழுதிய புத்தகத்தில் ஆண்டாள் தேவதாசியாக குறிப்பிடப்பட்டுள்ளாள் என்றும், அதனை அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது என்பதும் வைரமுத்துவின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சேதி. அந்தப் புத்தகம் அப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படவில்லை என்பதும், அது சுபாஷ் சந்திர மாலிக்கால் எழுதப்படவில்லை என்பதும் தற்போது அம்பலமாகிவிட்டது.

அப் புத்தகம் இந்தியாவில் வெளியிடப்பட்டது என்பதும், அது பல கட்டுரைகளின் தொகுப்பு என்பதும், அக் கட்டுரையை எழுதியவர்கள் வேறு ஒருவரின் கட்டுரையை ஒட்டி எழுதியிருப்பதும் தெரிய வந்துள்ளது. அதேசமயம், அவர்கள் தரவுக்காகப் பயன்படுத்திய கட்டுரையில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த உண்மைகளை பகுத்தறிவாளர் வைரமுத்து நேர்மையாக ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். தீராவிட அறிவுஜீவியிடம் இதை எதிர்பார்க்க முடியுமா என்ன?

ஆண்டாள் பக்தர்கள் பொதுப்படையாக வைரமுத்து குறிப்பிட்ட இந்த வார்த்தைக்காகவே அவரை எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்களும் தவறவிட்ட ஒரு விஷயத்தை நாம் முன்னிறுத்த விழைகிறோம்.

வைரமுத்து

வைரமுத்து குறிப்பிட்ட கட்டுரை, எங்கோ, யாரோ எழுதிய கட்டுரையைச் சுட்டி, இந்தியாவின் வேறொரு பகுதியில் முன்னணி நாளிதழில் வெளியாகி இருக்கிறது. இதனைப் பற்றி அந்த மூலக் கட்டுரையாளருக்குத் தெரிவிக்கப்பட்டதா, அல்லது எழுதப்பட்ட இந்தக் கட்டுரையாவது அவருக்கு அனுப்பப்பட்டதா என்பது கேள்விக்குறியே. இந்த விஷயம் ஒரு நடுநிலை நாளிதழ் என்று அறியப்பட்ட தினமணியின் ஆசிரியருக்கும் விளங்காதது ஆச்சரியமல்ல. ஏனெனில் இவர்கள் அனைவரும் திணிக்கப்பட்ட சித்தாந்தங்களோடும் பொருளியல் சிந்தனை சார்ந்தும்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மெய்யியல் எங்கே புரியப்போகிறது?

நமது தேசத்தின் வரலாற்றை, பாரம்பரியத்தை, நம்பிக்கையைப் பாழ்படுத்த இப்படி ஆங்காங்கே விஷ விதைகள் தூவப்படுகின்றன. அதனை இளைய சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே வைரமுத்துவின்  கட்டுரை தெளிவுபடுத்துகிறது. இதனை இளம் தமிழ் உள்ளங்களுக்குப் புரிய வைக்கவும், மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டவும், வைரமுத்து கருவியாகச் செயல்பட்டது இறையருளே என்று நம்புகின்றோம்.

இஸ்லாமியர்களின் முன்னால், தங்களை ஹிந்து விரோதி என்றும் இஸ்லாமியர்களின் நண்பன் என்றும் காட்டுவதற்காக- ஸ்ரீராமனையும் சீதையையும் அவதூறு செய்த போது ஏற்படாத எதிர்ப்பு இன்று இந்த போலி அறிவுஜீவிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் யார் என்ன சொன்னாலும் சூடு சொரணையற்று தேமே என்று கிடந்த இந்துக்களை சற்றே நிறுத்தி திரும்ப வைத்ததற்கு வைரமுத்துவுக்கு நன்றிகள்.

இதே வைரமுத்து தினமணி சார்பில் கோவையில்  ‘வெள்ளை வெளிச்சம்’ என்ற தலைப்பில் நடத்திய நிகழ்வில், அருட்பிரகாச வள்ளலாரைப் பற்றி தேவையற்ற கருத்துகளைப் பேசியபோது, அதைப் பிடிக்காத வள்ளலார் அன்பர்கள் அரங்கைவிட்டு வெளியேறினார்களே, அப்போதே இந்த பிற்போக்காளர்களுக்கு எதிர்ப்பலை துவங்கிவிட்டது. அவர்களது குமுறலும் கூட இன்று ஆண்டாள் பக்தர்கள் மூலமாக வெளியாகிவிட்டது.

எந்தவொரு மத நம்பிக்கையையும் இழிவுபடுத்தக் கூடாது என்று நமது அரசியல் சட்டம் கூறுகிறது. எங்கோ உலகின் ஒரு மூலையில் சிறுபான்மை மதங்களை இகழ்ந்துவிட்டால் இங்குள்ள அறிவுசீவிகள் அனைவரும் பொங்கி எழுகிறார்கள். ஆனால், இந்து மத நம்பிக்கைகளை இழித்துப் பேசுவது மட்டும் வேறாகிப் போனதோ? இப்பொழுது இவர்களின் கருத்து சுதந்திரமும், முற்போக்கு முகமூடியும் விழித்தெழுந்து விடுகின்றனவோ? இந்த சனாதன தர்மம் மட்டுமே அவர்களுக்கு அந்த சுதந்திரத்தை அளித்திருக்கிறது என்பது மறந்து போனதோ? வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கி ஆண்டாள் பக்தர்களை கண்டித்துள்ள எழுத்து வியாபாரிகள் இக் கேள்விக்கு பதில் சொல்வார்களா?

தினமணி நடுநிலை நாளிதழ் என்ற ஒரு பேச்சுண்டு. குறைவான விற்பனை இருந்தாலும், நடுநிலைமை, ஊடக தர்மம் ஆகியவை குறித்து  மிகத் தெளிவாக அதன் வாசகர்களுக்கு எடுத்துரைத்த பெருமையினை தினமணி பெற்றிருக்கிறது. சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன், கஸ்தூரிரங்கன், மாலன் எனத் தொடரும் ஆசிரியர்களால் தினமணி அடைந்த புகழ் அது. ஆனால், தற்போதைய ஆசிரியர் கி.வைத்தியநாதன் அந்தப் பாரம்பரியத்தை, வைரமுத்துவை மேடையேற்றியதன்மூலம் சிதைத்துவிட்டார். இப்போதும்கூட, ஆண்டாள் பக்தர்களின் போராட்டங்களை தினமணி இருட்டடிப்பு செய்து வருகிறது. இது தான் செய்த பாவத்தை விட அதிக பாவகாரியம் என்பதை தினமணி ஆசிரியர் உணர வேண்டும்.

பிற தமிழ் ஊடகங்களும்கூட உரிய முறையில் பக்தர்களின் எதிர்ப்பை,  மக்களிடையே எழுந்து வரும் இப்படிப்பட்ட எழுச்சியை முழுமையாகப் பதிவு செய்யவில்லை. சென்னையில் மிக அதிக அளவில் சேப்பாக்கத்தில் திரண்ட மக்களின் உணர்வுகள் ஊடகங்களால் முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கினறன. தினமலர் மட்டும் போனால் போகிறதென்று சில நிகழ்வுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. தங்கள் நுகர்வோர் மக்கள் தான் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். அவர்களும் திருந்த வேண்டும்.

ஊடகங்கள் தங்களுக்கு வேண்டிய செய்திகளை மட்டுமே மக்களுக்குத் தருகின்றன. அவை அரசியல், பணம், செல்வாக்கு போன்றவற்றுக்கு விலை போனவை என்பதை இன்றைய சூழல் நன்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. நடுநிலை என்பது வெறும் வேஷம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு.

ஆண்டாள் குறித்த அவதூறுக்கு எதிராகப் பொங்கி எழுந்த ஒரு ஜீயர் ஒருவர்,  “இது 1967 அல்ல, 2017 என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பகுத்தறிவாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.  அது முற்றிலும் உண்மை. 1960-களில் சேலத்தில் ராமர் திருவுருவப் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து அட்டூழியம் செய்த திராவிடர் கழகக் காலிகளை மனம் வெதும்பியபடி ஹிந்து சமுதாயம் வேடிக்கை பார்த்தது. இன்று அப்படியல்ல.

ஹிந்து இயக்கங்களின் பல்லாண்டுகால ஒற்றுமைப் பணியால் தன்னை உணர்ந்த சமூகமாக தமிழ் ஹிந்துக்கள் விழிப்புற்றிருக்கிறார்கள். அதை வெளிப்படுத்த ஆண்டாள் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது. இதை தீரா விட மாயையில் சிக்குண்டு கிடக்கும் அறிவுசீவிகளும், முற்போக்கு என்ற பெயரில் எழுத்து வியாபாரம் செய்வோரும், காசுக்காக சோரம் போகும் ஊடகங்களும் உணர்ந்தாக வேண்டிய தருணம் இது.

    

பெட்டிச் செய்தி…

நாகரிகம் தவற வேண்டாம்!

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் சிறப்பை திரைக்கவி வைரமுத்துவால் கீழ்மைப்படுத்திவிட முடியாது; கதிரவனை பன்றிகளால் இழிவு செய்ய முடியாது. ஆயினும். ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தால் சீண்டப்பட்ட பக்தர்கள் பலர் உடனடியாக எதிவினை ஆற்றினர். அப்போது நமது பண்பாட்டை மீறி பலர் வசை பாடினர். அதை நம்மால் ஏற்க முடியவில்லை.

ஹெச்.ராஜா

பாஜக பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா, கோபத்தில் வைரமுத்துவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துவிட்டார். அது தவிர்த்திருக்கப்பட வேண்டும். வைரமுத்து செய்த தவறுக்கு, அவரது தாயையும் மனைவியையும் வசை பாடுவது ஹிந்து தர்மத்துக்கு ஏற்புடையதல்ல.

சமூக ஊடகங்களில் வைரமுத்துவையும் வைத்தியநாதனையும் கடுமையாக விமர்சித்து வெளிவந்த பல வசைகள் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை. திருப்பாவையிலேயே, “தீக்குறளைச் சென்றோதோம்” என்று ஆண்டாள் பாடுவது, கீழ்மையான வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டோம் என்பதைக் குறிப்பிட்டுத்தான். எனவே, எதிர்ப்பிலும் நாகரிகம் காப்பதே நமது இலக்கணமாக இருக்க வேண்டும்.

ஆண்டாள் சந்நிதியில் தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன்

தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் ஆண்டாள் சந்நிதிக்கு வந்து  மன்னிப்பு கோரி தனது பண்பாட்டை நிரூபித்துவிட்டார். அதேபோல, இவ்விஷயத்தில் தெரிந்தோ, தெரியாமலோ தவறிழைத்துவிட்ட வைரமுத்து மன்னிப்புக் கேட்பது ஒன்றும் அவருக்கு கௌரவக் குறைச்சல் ஆகிவிடாது. தங்கள் தவறுக்கு வருந்துவதாக ஏற்கனவே அறிவித்த இவ்விருவரும், கோதையின் ஜனனபூமியாம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்து மன்னிப்புக் கோருவதே உண்மையான நாகரிகமாக இருக்க முடியும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard