“தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் கூட்டத்தில் பேசப்படும் பேச்சுக்களில், ஆரியப் பாதுகாப்பு நூல்களான கீதையும், பாரதமும், இராமாயணமும் எடுத்துக்காட்டு நூல்களாக விளங்கினவேயன்றி, திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் இடம்பெறவில்லை. எங்கு பார்த்தாலும் இராமாயணச் சொற்பொழிவுகள், பாரதச் சொற்பொழிவுகள், புராணப்பேச்சுக்கள். திருக்குறட் பேச்சோ, சிலப்பதிகாரப் பேச்சோ இல்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்கள் தமிழ் மக்கட்குத் தெரியாப் பொருள்களாயின. தொல்காப்பியம் என்ற ஒரு சிறந்த பழந்தமிழ் நூல் உண்டு என்பது தமிழர்க்கு அறவே தெரியாது”. (புலவர் குழந்தை 10:1964)

தமிழில் உள்ள தொல் நூல்கள், தமிழ்ச்சமூக வரலாற்றில், ஒவ்வொரு காலச்சூழலிலும் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன என்பது சுவையான உரையாடல் ஆகும். தொல் ஆக்கங்கள் என்பவை பின்னர் உருவாகும் நீதிநெறிமரபுகள், சமயமரபுகள், சீர்திருத்தமரபுகள் ஆகியவை சார்ந்து வாசிக்கப்படுவது தவிர்க்க இயலாத ஒரு செயல்பாடு.

இவ்வகையில் தொல்காப்பியம், செந்நெறி சார்ந்த பனுவல்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய பிற குறித்த உரையாடல்கள் நிகழ்ந் துள்ளன. திருக்குறள் தொடர்பான உரையாடல்கள்தான் மிகுதியாக நடைபெற்றதையும் / நடைபெறுவதையும் காண முடிகிறது. இந்த வரிசையில் முனைவர். பா.குப்புசாமி அவர்களின் இந்நூல் அமைகிறது. காலந்தோறும் திருக்குறள் எதிர்கொள்ளப்பட்ட மரபில், இந்நூல் எவ்வகையில் தொழிற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டுகிறது. திருக்குறள் எதிர் கொள்ளப்பட்ட வரலாற்றைப் பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்ள முடியும்.

- கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்ப் பிரதிகளில் திருக்குறள் எவ்வகையில் இடம்பெற்றுள்ளது என்பது குறித்த உரை யாடல்

- பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருக்குறள் வாசிக்கப்பட்ட பல்வேறு பரிமாணங்கள்

- இருபதாம் நூற்றாண்டில் திருக்குறள் உள் வாங்கப்பட்ட பல்வேறு முறைமைகள் மற்றும் கருத்து நிலைப்பாடுகள்.

தொல்பழம் பிரதிகளில் இடம்பெற்றுள்ள சொற் களை அடிப்படையாகக் கொண்டு, அப்பிரதிகள் குறித்த மதிப்பீட்டை நிகழ்த்த முடியும். நமது புலமைப் பாரம்பரியத்தில் ‘சொல்லாய்வு’ என்னும் நோக்கத்தில் சொல்லின் வேர்ப் பொருள், சொல் தொடர்பான இலக்கணக் குறிப்புக்கள், புழக்கத்தில் உள்ள சொற் பொருள் மாறுபடும் தன்மைகள், காலந்தோறும் சொற் பொருள் மாறிவரும் வரலாறுகள் ஆகியவை குறித்துப் பேசியுள்ளனர். ஆனால் அந்தந்தக் காலச்சூழலில் சொற்கள் பயன்படுத்தப்படும் சூழல் சார்ந்த சமூக வரலாற்றுப் பதிவுகள் விரிந்த அளவில் நிகழ்ந்ததாகக் கூறமுடியாது.

 

திருக்குறளில் ‘தமிழ்’ எனும் சொல் இடம்பெறவில்லை. ஆனால் Ôஉலகம்’, ‘உலகு’ எனும் சொற்கள் ஐம்பத்தேழு முறையும் Ôஊர்’ எனும் சொல் பதினாறு முறையும் ‘நாடு’ எனும் சொல் பதிமூன்று முறையும் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இதன் மூலம் இச்சொற்கள் சார்ந்த பொருண்மை என்பது, பிற்காலத்தில் உருவான ‘சனநாயகம்’ அல்லது Ôகுடியரசு’ எனும் பண்பின் தொடக்ககாலப் பொருண்மையை முன்னெடுத்த நூலாகக் கருதமுடியும். இவ்வகையான பல்வேறு கூறுகளை ‘குறள்’ எனும் ஆக்கம் தம்முள் கொண்டிருப்பதால், அப்பிரதி பொதுமைப் பண்பு களைக் கொண்டிருப்பதாகப் பலராலும் உள்வாங்கப் படுகிறது. 

 

பல்வேறு நீதிமுறை மரபினர், பல்வேறு சமய மரபினர், பல்வேறு கருத்துநிலைச் சார்பினர் ஆகிய அனைவரும் இந்நூலுக்குச் சொந்தம் கொண்டாடுவது, இந்நூலில் அமைந்துள்ள பொருண்மையின் தனித் தன்மையாகக் கருதமுடியும். இம்மரபு தமிழ்ச்சமூக வரலாறு முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருப்பது திருக்குறளுக்கு மட்டும்தான் என்று கருதமுடிகிறது.

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் காப்பியங்கள் அனைத்திலும் திருக்குறள் வரிகள் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம். காப்பியங்களையும் திருக்குறளையும் ஒப்பிட்டுப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்த அதேவேளையில், நேரடி யான திருக்குறள் ஆட்சி குறித்தும் பல்வேறு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. திருக்குறள் மரபில் உருவான அறநூல்கள் மற்றும் நீதிநூல்களிலும் நேரடி யான திருக்குறள் ஆட்சியைக் காணமுடிகிறது. பக்திப் பனுவல்களிலும் திருக்குறள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இவ்வகையில் தமிழ்ப்பிரதிகளில் பெரிதும் எடுத்தாளப் பட்ட நூலாகத் திருக்குறள் அமைகிறது. இதுவே இப்பிரதியின் தனித்தன்மையாகும்.

 

தமிழ்ப்புலமைத் தளத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் புதிய போக்குகள் உருப்பெற்றன. இத் தன்மை சில நூற்றாண்டுகள் நீடித்தன. பக்திப் பனுவல்கள் தொகுக்கப்படுதல்,  அப்பனுவல்கள் சார்ந்து சாத்திரங்கள் உருவாக்குதல், அதன் தொடர்ச்சியாக ஆகமங்கள் உருவாக்கம் ஆகிய பிற இலக்கியங்களில் தான் உருவானது. வீரசோழியம், நன்னூல் உள்ளிட்ட பல்வேறு இலக்கண நூல்கள் உருவாக்கப்பட்டன. பழம் பிரதிகளுக்கு உரை எழுதும் மரபு உருவானது. தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிடத்தக்கப் புலமையாளர்களாக உரையாசிரியர்கள் செயல்பட்டனர். பிரபந்த இலக்கிய வடிவங்கள் உருவாயின.

 

பிரமாண்டமான கோயில்கள் கட்டியெழுப்பப்பட்டன. கோயில் பண்பாடு வடிவம் கொண்டது. அன்றைய சூழலில் பேரரசர்களாகப் பிற்காலச்சோழர்கள் செயல்பட்டனர். பாலி, பிராகிருதம், சமசுகிருதம் உள்ளிட்ட வடமொழிகள், தெலுங்கு போன்ற தென்னாட்டு மொழிகள் ஆகிய வற்றோடு தமிழுக்கு மிக நெருக்கமான உறவு உரு பெற்றது. இந்தச்சூழலில் திருக்குறள் பெரிதும் பேணப்பட்டது. இதனை வெளிப்படுத்தும் வகையில் பத்துக்கும் மேற்பட்டோர் திருக்குறளுக்கு உரை எழுதினர். திருவள்ளுவ மாலை எனும் தொகுப்பு உருவாக்கப்பட்டது. திருவள்ளுவர் நூலுக்கு நுண் பொருள் காணும் மரபு உருவாயின. இச்செயல்கள் திருக்குறள் வாசிப்பு மிக உச்ச நிலையில் இருந்ததைக் காட்டுகிறது.

‘தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்

பருதி பரிமேலழகர் - திருமலையார்

மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்

கெல்லையுரை செய்தா ரிவர்’

என்ற தனிச்செய்யுளும், சுமார் ஐம்பத்து மூன்று பேர்களால் எழுதப்பட்ட திருவள்ளுவமாலையும் இந்நூலுக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கைக் காட்டுகிறது.

சமயக் கணக்கர் மதிவழி கூறா

துலகியல் கூறிப் பொருளிது வென்ற

வள்ளுவர்’

என்று கல்லாடமும்,

தேவர் குறளும் திருநாண் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர்’

என்று ‘நல்வழி’ என்ற நீதி நூலும் திருக்குறளுக்கு அன்றைய சூழலில் இருந்த செல்வாக்கைப் புலப்படுத்து வதாகக் கருதலாம். இந்தச் சூழலில் கி.பி. பதிமூன்றாம்  நூற்றாண்டில் வாழ்ந்தவர் பரிமேலழகர். இவர், திருக் குறளுக்கு எழுதிய உரைதான் மிகச்சிறந்த உரை என்று பலதரப்பிலும் அங்கீகரிக்கப்பட்டது.  இவர் காலத்திலும் பின்பும் சைவ மற்றும் வைணவ வைதீக சமயங்கள், பிற தமிழ் நூல்கள் மீது காட்டாத ஈடுபாட்டைத் திருக்குறள் மீது காட்டியிருப்பதைக் காண்கிறோம். இந்நூலை வைதீகச் சமயச் சார்பு நூலாகவே அடையாளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்,

பனுவல்கதை காவ்ய மாமென ணெண்கலை

திருவள்ளுவ தேவர் வாய்மை யென்கிற

பழமொழியை யோதி யேயுணர்ந்து’

என்று பாராட்டுகிறார். ‘பத்துப்பாட்டு’, எட்டுத் தொகை’, சிலப்பதிகாரம்’ ஆகிய நூல்களைப் பயில வேண்டாம் என்று கூறிய பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கணக்கொத்தை’ எழுதிய சுவாமிநாத தேசிகர், திருக்குறளைப் பாராட்டிச் சொல்லியிருப்பதைக் காண்கிறோம்.

பல்கால் பழகினுந் தெரியா வுளவேல்

தொல்காப்பி யந்திருவள்ளுவர் கோவையார்

மூன்றினும் முழங்கும்...

என்பது அவரது பதிவாகும். இவ்வகையில் சைவ நூல்களே பெரும் செல்வாக்கோடு இருந்த காலங்களில் கூடத் திருக்குறள் பெரிதும் போற்றிப் பாராட்டப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இவ்வகையான அணுகுமுறை, குறள்வெண்பா’ வடிவத்தில் அமைந் திருப்பதும், நேரடியான சமயக்கருத்து நிலைகள் வெளிப்படாமல் இருப்பதும் காரணமாகக் கருத முடியும். தாயுமானவரின் (1706-1744) பராபரக்கண்ணி’ எனும் அவரது சிறந்த பாடல்களாகக் கருதப்படுவனவற்றில் குறளின் தாக்கம் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் திருக்குறளை பயன்படுத்துவது என்ற நிலை இருந்தது. ஆனால் கி.பி. 10-18 ஆம் நூற்றாண்டுகளில் திருக்குறள் குறித்த பல பரிமாணங்களில் பலரும் பதிவுசெய்திருப்பதைக் காண் கிறோம். சங்கப்பாடல்கள் வாசிப்பு, சிலப்பதிகார வாசிப்பு, தொல்காப்பிய வாசிப்பு ஆகியவை மிகக் குறைவாக இருந்த காலத்தில், வைணவ மரபு மிகுந்த செல்வாக்கோடு இருந்த காலத்தில் திருக்குறள் மிக விரிவாகவே வாசிக்கப்பட்டது என்று அறிகிறோம். இதன் குறியீடாகவே பரிமேலழகர் அமைகிறார்.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில், முன்னிருந்த செல்வாக்கு தொடர்ந்தது. இந்நூற்றாண்டில் திருக் குறளுக்கு ஏழு பதிப்புகள் வெளிவந்தன. இதில் ஐந்து பதிப்புகள் பரிமேலழகர் உரையுடன் கூடிய பதிப்புகள். இதன்மூலம் பரிமேலழகர் உரையின் வாசிப்புத் தொடர்ச்சியைக் காணமுடிகிறது. திருத்தணி சரவணப் பெருமாள் அய்யர் (1838), ம.ரா. இராமாநுச கவிராயர் (1840), களத்தூர் வேதகிரி முதலியார் (1850), ஆறுமுக நாவலர் (1861) ஆகியோர் பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறளைப் பதிப்பித்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய ‘மநுநெறித் திருநூல்’ மற்றும் இராமலிங்க அடிகள் எழுதிய ’மநுமுறை கண்ட வாசகம்’ ஆகிய ஆக்கங்களில் திருக்குறளின் தாக்கம் இருப்பதைக் காண்கிறோம். குறள் வெண்பா வடிவத்தில் எழுதிய தண்டபாணி சுவாமிகள், திருக்குறள் கருத்துக்களை தன் கருத்து வடிவமாக வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.

புறங்கூறல் கேட்டுவய்ப்பார் போய்த்தமக்கும் அந்தத்

திறங்கூறல் ஓராச்சிலர்’ (மநுநெறி. 15:5)

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது. (குறள். 181)

வைதீக சமய மரபினர் திருக்குறளைப் போற்றிப் பாராட்டிய அதேகாலத்தில் காலனிய மரபைச்சேர்ந்த ஆட்சியாளர்கள், பாதிரியார்கள் ஆகியோர் திருக்குறளை மொழியாக்கம் செய்யும் பணியில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் முனைப்புக் காட்டினர். வைதீக மரபு சார்ந்த கருத்துமுறைகளுக்கு எதிர்நிலையில் திருக்குறளை அணுகும் பார்வை காலனியப் புலமையாளர்களிடம் இருந்ததைக் காணலாம். சீவகசிந்தாமணி, திருக்குறள் ஆகியவை அவைதீக சமய நூல்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, காலனிய மற்றும் கிருத்துவ சமயப் பரப்புரையாளர்கள் செயல்பட்டனர்.

வைதீகச் சார்பு நூலாக ஒருபுறமும் வைதீக மறுப்பு நூலாக இன்னொரு நிலையிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருக்குறள் வாசிக்கப்பட்ட வரலாறு சுவையானது. இந்த நூற்றாண்டில் செயல்பட்ட திருக்குறள் மொழியாக்கங்களை மேற்குறித்த வாசிப்பு மரபோடு இணைத்துப்பார்க்கும் தேவையுண்டு. திருக்குறள் வாசிப்பு குறித்த காழி. சிவ. கண்ணுசாமி அவர்களின் கீழ்க்காணும் பதிவு, திருக்குறள் வாசிப்புப் போக்குகள் குறித்ததாக அமைகிறது.

வேதநெறி தானென்பர் வேத வாணர்

 விறன் மிகுந்த திருச்சைவ ராகமத்தின்

போதநெறி தானென்பர் அருகர் புத்தர்

பூம்பிடக நூலென்பர் பொழுது மோயா

தோதுநெறி தானென்பர் விவில்ய நூலார்

உயரொழுக்க விதியென்பர் உலகவாணர்

யாதுநெறி தானெனினு மஃதே யாக

இசைத்தனரால் வள்ளுவம் முப்பானூலே.

இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டில், திருக் குறள் வாசிப்பு சமூக இயங்குதளத்தில் புதிய பரி மாணத்தோடு செயல்படத் தொடங்கியது. குறிப்பாக, திராவிடக் கருத்தியல் சார்ந்த மரபினர், இதற்குமுன் இருந்த வைதீக மரபு சார்ந்த கருத்துக்களை மறுக்கும் நோக்கில் திருக்குறளை வாசித்தனர். இப்பணியை குப்பு சாமியின் நூல் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறேன்.

திராவிடக்கருத்துநிலை சார்புநிலையினரும் தமிழ்தேசியப் பார்வையுடையோரும் பரிமேலழகரின் உரையை ஏற்றுக்கொள்ளாது  மாற்று உரை எழுத முற்பட்டனர். காங்கிரஸ் அமைப்பு சார்ந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், ‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று பாடியவருமான நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, பரிமேலழகர் கருத்துக்களை மறுத்து ‘திருவள்ளுவர் திடுக்கிடுவார்’ எனும் நூலை 1954 இல் எழுதினார். அந்நூலில் அவர் பதிவு செய்யும் கருத்து வருமாறு:

 

பரிமேலழகருக்கு முன்னால் ஒன்பது பேர் திருக்குறளுக்கு உரை எழுதியிருந்தார்கள். அவை எல்லா வற்றினும் சிறந்ததாகப் பரிமேலழகர் உரை ஏற்றுக் கொள்ளப்பட்டதால் மற்ற உரைகளெல்லாம் வழக் கிழந்து மறைந்துவிட்டன. அதனால் கடந்த அறுநூறு ஆண்டுகளாகத் தமிழ்மக்கள் பரிமேலழகர் உரையைப் பின்பற்றித்தான் திருக்குறளை அனுபவித்து வரு கிறார்கள். ஆனால் போற்றற்குரிய உரையாசிரியரான பரிமேலழகர் பலவிடங்களில் திருவள்ளுவருடைய கருத்துக்குப் பொருந்தாத உரைகளையும் சில இடங் களில் திருவள்ளுவர் கருத்துக்கு முற்றிலும் விரோதமான உரைகளையும் செய்துவிட்டார்.” (மூன்றாம் பதிப்பு. 1963:7)

தேசிய இயக்கக் கருத்துமரபில் செயல்பட்ட கவிஞரே பரிமேலழகர் குறித்து இவ்வகையில் பதிவு செய்திருக்கும்போது திராவிட இயக்க மரபினர் பரிமேலழகரை எப்படி எதிர்கொள்வர் என்பது குறித்த உரையாடலை நாம் புரிந்துகொள்ள முடியும். இவ் வகையான அடிப்படை எடுகோளைக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டிருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது. இந்நூல் தரும் செய்திகளைப் பின்வரும் வகையில் வகைப்படுத்தித் தொகுத்துக்கொள்ளலாம்.

- திராவிட இயக்க மரபில் வெளிவந்தவை எனும் கண்ணோட்டத்தில் பதினெட்டுபேர் திருக்குறளுக்கு எழுதிய உரைகளைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் முறையியல்

- திருக்குறளை, தங்கள் கருத்து மரபுக்காக வலிந்து உரை எழுதியுள்ள பாங்கைப் புரிந்து கொள்ளும் முறைமை

-ஈ.வெ.ரா பெரியார் திருக்குறளுக்குக் கொடுத்த இடம் மற்றும் செயல்பாடுகள்.

திரு குப்புசாமியின் இந்நூலில் பல்வேறுசெய்திகள் பேசப்பட்டிருந்தாலும் சுருக்கம் கருதி மேற்குறித்த மூன்று கருத்துக்களை மட்டும் கவனப்படுத்த விரும்புகிறேன்.

 

காலனிய வருகை, பல்வேறு புதிய விளைவுகளுக்கு மூல காரணமாக அமைந்தது. சாதி, தேசிய இனம், மொழி ஆகிய பிற பண்பாட்டுக்கூறுகள் தொடர்பான புதிய உரையாடல்களைக் காலனியம் உருவாக்கித் தந்தது. இதன் மூலம் தமிழ் தேசியம், இந்திய தேசியம், சர்வதேசியம் எனும் கருத்துநிலைகள் உரையாடலுக்கு வந்தன. ஒவ்வொரு கருத்து நிலை சார்ந்தும், தனித் தனியான ‘தேசியம் குறித்த நிலைப்பாடுகள் உருவாயின. கால்டுவெல் காலத்துக்குப்பின் திராவிடக்கருத்தியல்  புதிய முறைகளில் அணுகும் சூழல் உருவானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனிய மரபு சார்ந்த பார்வை எனும் தன்மைகள் உருப்பெற்றன.

இத் தன்மைகள் இலக்கியம், கலை, பண்பாடு என அனைத்து நிலைகளிலும் வடிவம்பெறத் தொடங்கியது. திருக்குறள் எனும் இலக்கியம் சார்ந்து, திராவிட இயக்கப் பார்வைகள் என்பதை திராவிட  மரபு என்று வரையறை செய்யலாம். இம்மரபிற்குள் பல்வேறு உட்கூறுகள் செயல்பட்டன. மொழிசார்ந்த தனித்தமிழ் இயக்கம், கலை சார்ந்த தமிழிசை இயக்கம், சமூக சீர்திருத்தம் மற்றும் விடுதலை சார்ந்த சுயமரியாதை இயக்கம், அரசியல் அதிகாரம் சார்ந்த நீதிக்கட்சி, மொழி ஆதிக்கத்திற்கு எதிரான இந்தி மற்றும் சமசுகிருத ஆதிக்க எதிர்ப்பு இயக்கம், தேசிய இன விடுதலை சார்ந்த தமிழ் தேசிய இயக்கம், சைவ மறுமலர்ச்சி இயக்கம் எனப் பல பரிமாணங்களில் திராவிட இயக்க மரபு செயல் பட்டது. குப்புசாமி தெரிவு செய்துள்ள பதினெட்டு உரையாசிரியர்கள் மேற்குறித்த பல்வேறு நுண்அரசியல் வேறுபாடுகளைக் கொண்டவர்கள்.

அதேநேரத்தில் திருக்குறள் எனும் பிரதிமீது ஈடுபாடு உடையவர்கள். தங்களுடைய நுண் அரசியல் வேறுபாடுகளைச் சமரசம் செய்துகொள்ளாமலும் அதே நேரத்தில் ‘திராவிட இயக்கம்’ எனும் பொதுநிலையில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டவர்கள். இத்தன்மைகள் குறித்த நுண்ணியதான ஆய்வு முறையை குப்புசாமி இந்நூலில் மேற்கொண்டிருப்பது அவரது புலமைத்தளம் குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது. ஓரிறைக் கோட்பாடு, பௌத்த மரபு, தனித்தமிழ் மரபு, நாத்திக மரபு ஆகிய முரண்பட்ட கருத்துநிலைகள், ஒரு புள்ளியில் தமக்குள் இணக்கம் கொண்டுள்ள பாங்கை அறிவதற்குப் பதினெட்டு பேர் உரைகள் உதவுகின்றன.

 

இவ்வகையான தேர்வு மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தன்மையைப் பெற்றுள்ளது. இவ்வுரைகள் அனைத்தும் பரிமேலழகர் உரைக்கு எதிர் நிலையாக எழுதப் பட்டவை. பரிமேலழகர் முன்னெடுத்த வைதீக மரபு என்பது திராவிட இயக்க மரபுக்கு முரணானது எனும் கருத்து நிலையை இவ்வகையான பரிமேலழகர் ஜ் திராவிட இயக்கம் என்று கட்டமைத்துள்ள முறை தர்க்கப் பாங்கிலானது. இதற்காக குப்புசாமிக்கு எனது பாராட்டுக்கள். இந்நூலில் கீழ்வரும் பகுதி அமைந்துள்ளது. 

திராவிட இயக்க உரைகள் குறளின் உண்மைப் பொருளை வெளிப்படுத்தவில்லை ஆயினும் சமூகத்தை மேம்படுத்தும் கருத்துகளை அவ் வுரைகள் கொண்டிருப்பதால் அவை ஏற்கக் கூடியதாக அமைந்துள்ளன. யார் உரையையும் முழுமையாக ஏற்கவோ முழுமையாகத் தள்ளி விடவோ முடியாது. எல்லாக் குறளுக்கும் பொருத்தமான உரையை யாரும் இயற்றவில்லை. திராவிட இயக்க உரைகளும் பரிமேலழகர் செய்த அதே தவற்றைச் செய்துள்ளன. பகுத்தறிவுக் கருத்தினை திணித்துள்ளன. ஆனால் நடு நிலையான உரைகள் தோன்றுவதற்குத் திராவிட இயக்க உரைகள் காரணமாக அமைந்தன. (இந்நூல் ப.213)

குப்புசாமியின் மேற்குறித்த பதிவு, இயக்கங்களின் கருத்துப்பரப்புரை சார்ந்த செயல்பாடுகள் என்பவை தமக்குத் தேவையானவற்றை இலக்கியத்தில் கண்டெடுத்து அவற்றைப் பரப்புரை செய்கின்றன.  இப்பண்பு சன நாயகத்தன்மை மிக்கது. அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் அமைந்திருப்பதைக் காண் கிறோம். இதனை ஏற்றுக்கொள்ள முடிகிறது. இவ் வகையான அணுகுமுறை வளமான மரபாக உள்ளது. இத்தன்மைகள் இந்நூலில் பல இடங்களிலும் விரவியுள்ளது.

பெரியார் தமிழுக்கு எதிரானவர்’, இலக்கியத்திற்கு எதிரானவர்’ எனும் குரல்கள் பல தருணங்களில், பல காரணங்களுக்காக எழுப்பப்படுவதைக் காண்கிறோம். இந்நூல் திருக்குறளை பெரியார் இலக்கியமாகக் கருதாமல் ஓர் இயக்கச் செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல் நூல் என மதிப்பிட்டுள்ளார். இந்நூலுக்காக மாநாடுகள் நடத்தினார்.

திருக்குறளைப் பரப்புவதற்கான முயற்சி களைத் தொடர்ந்து மேற்கொண்டார். மேற்குறித்த விவரணங்கள் அனைத்தையும் குப்புசாமி விரிவான உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார். திருக்குறள் குறித்தப் பெரியாரின் அணுகுமுறை சிறப்பாக வெளிப் படுவது இந்நூலின் முதன்மையான பங்களிப்பாகக் கருதுகிறேன். இதற்காகப் பெரியார் ஆக்கங்களை குப்புசாமி வாசித்த அனுபவங்கள் பதிவாகியுள்ளன.

தனிமனிதர்கள் குறித்து விதந்து எழுதும் மரபுக்கு நான் உடன்பாடானவன் இல்லை. இருந்தாலும் குப்புசாமி பற்றி எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. அமைதியான, ஆழமான, தெளிவான அணுகுமுறைகளை அனைத்து நிலைகளிலும் செயல்படுத்தும் எனது மாணவர்களில் குப்புசாமி முதன்மையானவர் என்பது எனது மனப்பதிவு.

தோழர் ப.ஜீவானந்தம் ஆக்கங்களை நான் பதிப்பிக்கும்போது, என்னோடு குப்புசாமி செயல்பட்ட பாங்கு மேற்குறித்த மனப்பதிவை என்னுள் உருவாக்கியது.  குப்புசாமி மீது இனம்புரியாத அன்பு, மரியாதை, ஈடுபாடு ஆகியவை அவர் அறிமுகம் ஆன காலம் தொடங்கி இன்றுவரை மேலும் மேலும் கூடிக்கொண்டிருப்பதை உணர்கிறேன். இந்நூலை வாசித்த போதும் அதே மனநிலை. நிறைய எழுதா விட்டாலும் குறைவாக எழுதுவதில் அவரது நுண்ணிதான புலமைத் தனத்தைக் கண்டுகொள்கிறேன். நிறைய வாசிக்கும் குப்புசாமி நிறைய எழுதவேண்டும். இப்பதிவைச் செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

சான்றாதார நூல்கள்

1854. மநுமுறை கண்ட வாசகம், இராமலிங்க அடிகள், மறுபதிப்பு: ப.சரவணன், சந்தியா பதிப்பகம், 2005, சென்னை-83.

1864.ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் இலக்கணக்கொத்து மூலமுமுரையும். யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரவர்களால்... வித்தியானு பாலன யந்திர சாலையில் அச்சில் பதிப்பிக்கப் பட்டன. நான்காம் பதிப்பு, 1924.

1937. தாயுமான சுவாமி பாடல்கள் - மூலமும் உரையும், பதிப்பு நா.கதிரைவேற்பிள்¬ள் மறுபதிப்பு 2010, சந்தியா பதிப்பகம், சென்னை-83.

1952. திருக்குறளும் பரிமேலழகரும், புலவர் குழந்தை, இளங்கோ புத்தகசாலை, புத்தக வியாபாரிகள், ஈரோடு, இரண்டாம் பதிப்பு, 1964.

1954. திருவள்ளுவர் திடுக்கிடுவார், நாமக்கல் கவிஞர், இன்ப நிலையம், மூன்றாம் பதிப்பு, 1963, சென்னை-4.

1959. திருக்குறள் வழங்கும் செய்தி, மூலம் அ.சக்கர வர்த்தி நயினார், தமிழாக்கம் பகவதி ஜெய ராமன், பாரிநிலையம், முதற்பதிப்பு, சென்னை.

1965. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூலமும் பரிமேலழகருரையும். பதிப்பு வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்; வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் கம்பெனி, சென்னை-5, முதல் பதிப்பு.

1970. தமிழ் இலக்கிய வரலாறு, பதிமூன்றாம் நூற்றாண்டு, மு.அருணாசலம், திருத்தப்பட்ட பதிப்பு, 2005, தி பார்க்கர். சென்னை-14.

1997. திருக்குறளும் திராவிடர் இயக்கமும். க.திருநாவுக் கரசு, நக்கீரன் பதிப்பகம், சென்னை-18, முதல் பதிப்பு.

2000. திருக்குறள் நூல்கள். தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை, முதல் பதிப்பு.

2004. திருக்குறளும் மனுநெறித் திருநூலும், அ.மரிய அலெக்சாந்தர் இருதயராசு, தி.பார்க்கர், சென்னை-14, முதற்பதிப்பு.

2009. திருக்குறள் பன்முக வாசிப்பு; பதிப்பு வெ.பிரகாஷ், மாற்று, சென்னை.

(குறிப்பு: வெளிவர உள்ள முனைவர் பா.குப்பு சாமியின் ‘திராவிட இயக்கமும் திருக்குறளும்’ என்னும் நூலுக்கு எழுதியுள்ள மதிப்புரை)